இதம் தரும் இனிய வங்கக்கதைகள்

This entry is part 26 of 53 in the series 6 நவம்பர் 2011

1940களில் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு திடீரென்று ஒரு மவுசு ஏற்பட்டது. ஆனந்தவிகடன், கல்கி போன்றவை இந்தி, வங்காளி, மராத்தி மொழிக் கதைகளை போட்டி போட்டுக் கொண்டு மொழி பெயர்த்து வெளியிட்டன. அம்மொழி நாவல்களும் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றன. அதற்கு முன்பே க.நா.சு ஜர்மனி, ஸ்வீடிஷ் போன்ற மேலை நாட்டு மொழி நாவல்களை, அநேகமாக அனைத்து உலக நாவல்களையும் அசுர வேகத்தில் மொழி பெயர்த்துத் தள்ளினார். 60களில் தீபம், கலைமகள் போன்ற இலக்கிய இதழ்களில் நம் சகோதர மொழிகளான மலையாளம, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் படைப்புகள் வெளியாயின.

நாற்பதுகளின் எழுச்சி, ‘மொழிபெயர்ப்பின் பொற்கால’மாக அமைந்தது எனலாம். த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, ஆர்.சண்முகசுந்தரம், அ.கி.கோபாலன், அ.கி.ஜயராமன் ஆகியோரது மொழிபெயர்ப்பில் வங்க நாவலாசிரியர்களான கவிஞர் தாகூர், பக்கிங்சந்திரர், சரத்சந்திரர் ஆகியோரது புகழ் பெற்ற நாவல்களான புயல், தேவதாஸ், ஆனந்தமடம் போன்றவை மக்களை மகிழ்வித்தன. பின்னர் ‘தீபம்’ இலக்கிய இதழ் மூலம் வங்கச் சிறுகதைகளையும் நாவல்களையும் திரு.சு.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுப் பிரபலமானார். தன் வங்க மொழிபெயர்ப்பு முன்னோடிகளினும் இன்று வங்கப் படைப்புகளை நினைத்ததும் வாசகரது நெஞ்சில் பசுமையாக இருப்பவர் அவரே. அவர் ‘அண்மைகால வங்காளச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் 15 இனிய கதைகளை ‘அம்ருதா’ மூலம் வெளிட்டுள்ளார்.

வங்கப் படைப்புகளில் அழகுணர்ச்சியும் ரசனையும் மென்மையான மன உணர்வுகளுமே மிகுந்திருக்கும். வன்முறை, கொலை, கொள்ளை, பரபரப்பு, திடீர்த்திருப்பம் போன்றவை வெகு அபூர்வம். ஆரவாரமின்றி மென்மையாய் சிலுசிலுத்து ஓடும் சிற்றோடையின் நளினமும் அழகும் வங்கக்கதைகளின் பொதுத்தன்மை. அப்படிப் பட்ட வாசிப்புக்கு இதமான கதைகள் இத்தொகுப்பில் உள்ளவை. படைப்பாளில் அனைவருமே புதியவர்கள். 1961க்குப் பிறகு பிறந்தவர்கள். நடைமுறை வங்காள வாழ்வை, அதன் பெருமை சிறுமைகளை அசலாகப் பதிவு
செய்திருப்பவர்கள்.

உஜ்வல் சக்கரவர்த்தி என்பவரின் ‘மண்’ என்கிற சிறுகதை அரசியல் காரணங்களால் சொந்த மண்ணி லிருந்து விரட்டப்படுவோரின் சோகத்தை உருக்கமாகச் சித்தரிக்கிறது. இத்தொகுப்பில் உள்ள சிறப்பான கதை களில் ஒன்று இது. வங்கப் பிரிவினையின் போது பிரிந்த குடும்பங்கள் பின்னாட்களில் திருமணம் போன்ற உற்றார் வீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள எதிர் கொள்ளும் சங்கடங்களை, மனவெழுச்சிகளை, கொல்கத்தாவிலிருந்து பங்களாதேஷுக்குச் சென்று திரும்பும் ஒரு பாத்திரத்ததின் அனுபவமாகச் சித்தரித்துள்ளார்.

சுகந்த கங்கோபாத்தயாய் என்பவரது கதையான ‘மண்ணுக்கு ராஜா’ என்கிற கதை கொல்கத்தாவின் நடைபாதைக் குடும்பம் ஒன்றின் பிரச்சினையைப் பேசுகிறது. இரவானதும் ஷட்டர்கள் மூடப்பட்ட போட்டோக்கடை வாசலில் படுத்து அங்கேயே தாம்பத்யம் நடத்தும் ஜூகியாவுக்கு மூன்று குழந்தைகள். இப்போது அவன் மனைவி பிரசவிக்க இருக்கிறாள். மேலும் குழந்தை பெற்றால், பாவம் கார்ப்பரேஷன் கட்டடத்துக்கு முன்னே ஷூ பாலீஷ் போட்டு பிழைக்கும் அவன் எப்படி சமாளிப்பான் என்கிற நல்லெண்ணத்தில் கடைக்காரர்கள் நூறு ரூபாய் சேர்த்துக் கொடுத்து அவனை குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள அனுப்புகிறார்கள். ஆனால் குடிகாரனான ஜூகியா வாங்கிய பணத்தில் குடித்து விட்டு, அவனுக்கு அடுத்துப் பிறக்கும் ஆண்குழந்தை ராஜா ஆகப் போகிறான் என்று கிளி ஜோஸ்யன் ஒருவன் சொன்னதை நம்பி கடைக்காரர்கள் யோசனையை ஏற்காமல் குடித்துச் சீரழிகிறான் என்பதை அவன் வாழும் நடைபாதையும், சாட்சியாக இருக்கும் நிலவும், கிளி ஜோஸ்யக்காரனின் கிளியும் சொல்வதாக அமைந்த கதை. போட்டோப் பிடித்தது போன்ற நேரடிக் காட்சித் தன்மையில் அழகாகக்
கதை சொல்லப்பட்டுள்ளது.

‘உறக்கத்தைக் கெடுப்பவள்’ எனும் அமிதாப் தேவ் சௌதுரியின் கதை இத்தொகுப்பின் சிறந்த கதை எனலாம். இதுவும் நாட்டுப் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களின் கதைதான். புலம் பெயர்ந்ததால் சித்தம் பேதலித்த ‘சித்தி’ என்று அழைக்கப்படுகிற ஒருத்தி, தான் இரு தேசங்களாலும் ‘ரத்து செய்யப்பட்ட மனுஷி’ என்பதை உணராமல் மீண்டும் பிறந்த மண்ணுக்குப் போகத் துடிக்கிறவள், திருட்டுத்தனமாய்ப் போகப் பல தடவை முயன்று திருப்பி அனுப்படுகிறவள் – தன்னைப்பொலவே புலம்பெயர்ந்த ஆனால் திரும்பும் நம்பிக்கையற்றுப் போன கதை சொல்லியைத் தினமும் அதிகாலை எழுப்பித் தன்னை அக்கரைக்கு அனுப்பக் கேட்டு உறக்கத்தைக் கெடுப்பவளின் தவிப்பு உருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. கதையைப் படிப்பவரின் உறக்கத்தையும் கெடுக்கும் படைப்பு.

மலைப்பிரதேசங்களை, பழங்குடியினரின் வாழ்விடங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு மேற்குவங்க அரசு தத்தம் செய்வதால் இடம் பெயர நேர்கிற, மக்களின் சமகாலப் பிரச்சினையைப் பேசுகிற ‘பிந்த்திக்கிழவி, மரஞ்செடிகள், சன்காடிமலை மற்றும்……’ என்னும் கதையிள் முடிவு வித்தியாசமானது. பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களின் எதிர்ப்பை வேறோரு கோணத்தில் கதாசிரியர் ஜாமுர் பாண்டே காட்டுகிறார். சன்காடி மலையை லீஸுக்கு எடுத்துள்ள கம்பனி டைனமைட் வைத்துத் தகர்க்கப்போவதாகவும் அதனால் உடனே மூட்டை கட்டிக் கொண்டு எல்லோரும் கிளம்ப வேண்டும் என்று கேள்விப்படுகிற பிந்த்தி என்கிற கிழவி வெடிக்கிறாள்; ”அப்போ இந்த மலையிலே இருக்கிற மனுசங்க எங்கே போவாங்க? இவ்வளவு மரஞ்செடிகள், புலி, மான், முள்ளம்பன்றி இதெல்லாம் என்ன ஆகும்” என்று மனிதர்களோடு மரஞ்செடிகளுக்காகவும், மலையில் வாழும் பிற உயிரினங்களுக்காகவும் கவலைப்பட்டு, ”நான் எங்கேயும் போகமாட்டென்” என்று தீர்மானமாக மறுத்து தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விடுகிறாள்.

புஷ்பல் முகோபாத்யாய் எழுதியுள்ள ‘சிறு பிராயத்து நண்பன்’ வாசிப்பு சுகமளிக்கும் ஒரு நல்ல கதை.ஓட்டமான நடை. மொழிபெயர்ப்பு என நினைவு படுத்தாத மொழியாக்கம்.

‘ரசிக் சாரின் குதிரை’ எனும் ஜயந்த தே யின் கதையும் நெஞ்சைத் தொடும் கதை. வகுப்பில் ஏழை மாணவன் என்பதால் ஆசிரியரால் மிகவு அவமானப் படுத்தப்படும் ஒரு மாணவன் பின்னாளில் பெரிய எழுத்தாளன் ஆகிறான். முதுமையில் அநாதரவான நிலையில் உள்ள அதே ஆசிரியரை ஒரு நாள் சந்திக்கும் போது அவர் மனதளவில் அவமானமுறும் வகையில் அடக்கமாக தன் வளர்ச்சியை உணர வைக்கிறான்.

‘ஐயோமனுஷா’ ஒரு அற்புதமான மனித நேயக்கதை. இந்திரா காந்தி கொலையை ஒட்டி தில்லியில் அப்பாவி சீக்கியர்கள் வேட்டையாடப்பட்ட சூழ்நிலையில் இன, மத வேறுபாடின்றி – ரயிலில் பிரசவித்த ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த ஒரு சீக்கிய மருத்துவ மாணவனின் மனித நேயச்செயலை சிலிர்ப்பாகச் சித்தரித்துள்ளார் சியாமல் பட்டாச்சார்யா என்கிற எழுத்தாளர். இதில் பிரதிபலனை எதிர் பாராமல் உதவும் நிகில் என்கிற ஆட்டோ ஓட்டி மறக்க முடியாத பாத்திரம். வாசிப்பை ஓட்டமாய் நடத்திச் செல்கிற பரபரப்பான கதை நிகழ்வுகள், படித்தே முழுமையாய் ரசிக்க முடிபவை.

விற்பனைப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை ரசமாகச் சொல்லுகிறது சத்யஜித் தத்தா எழுதிஇருக்கும் ‘மனிதன் மனிதன் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை’ என்கிற கதை. வருமானத்தைப் பெருக்கவோ, பொழுது போக்குக்காகவோ, நானும் சம்பாதிக்க முடியும் என்கிற வீம்பிற்காகாவோ வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்யும் பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றிய சாதாரணமான நமக்குப் பரிச்சயமான பிரச்சினைதான். ஆனால் அலுப்புத் தட்டாமல் வாசிக்கவும் ரசிக்கவும் முடிகிற கதை.

இத்தொகுப்பின் மூலம் மாறிக்கொண்டே இருக்கும் நவீன வங்கத்து சமகால வாழ்க்கையையும், அம்மக்களின் சுக துக்கங்களையும், அவர்களது மனிதநேயப் பண்பு மற்றும் ரசனை உணர்வினையும், அம் மண்சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வங்காளம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர் ஆனதால் திரு.கிருஷ்ணமூர்த்தி வங்க மரபிற்கேற்றபடி தமிழ்ப்படுத்தி இருக்கும் நேர்த்தி தடையற்ற வாசிப்புக்கு உதவுகிறது. 0

நூல்: அண்மைக்கால வங்காளச் சிறுகதைகள்.

தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி.

வெளியீடு: அம்ருதா.

Series Navigationபுலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .பழமொழிப் பதிகம்
author

வே.சபாநாயகம்

Similar Posts

Comments

Leave a Reply to தங்கமணி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *