இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் மூன்று

author
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 11 in the series 18 ஆகஸ்ட் 2019

அழகர்சாமி சக்திவேல்

  1. மொழிக்கொள்கை

வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்தியாவின் சிறப்பு. ஆனால் “அந்த வேற்றுமையின் அளவு, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த அதே அளவில் இப்போதும் இருக்கவேண்டுமா, அந்த வேற்றுமையின் அளவு நாளாக நாளாகச் சுருங்கி, ஒருங்கிணைந்த இந்தியா என்ற வடிவம் பெறவேண்டாமா” என்பது இந்தியக் கல்வியாளர்கள் சிலரின் எதிர்பார்ப்பு. இந்தக் கேள்வியில் ஓரளவு நியாயம் இருந்தாலும், இந்தியாவின் மொழிக்கொள்கைக்கு இந்த எதிர்பார்ப்பு பொருந்தாது என்பதே எனது பதில் ஆகும். சிங்கப்பூரை உதாரணமாய் எடுத்துக்கொள்வோம். சிங்கப்பூரின் பெரும்பான்மையான மக்கள் சீனர்களே. அரசாங்கம் நினைத்து இருந்தால், சிங்கப்பூர் பள்ளிகளில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் சீனம் என்ற மும்மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கலாம். ஆனால், சிங்கப்பூர் பள்ளிகளில் அறிமுகப்படுத்தி உள்ள திட்டம் இருமொழித் திட்டமே. அதாவது அவரவர் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழித் திட்டத்தையே சிங்கப்பூர் அறிமுகப்படுத்தி வெற்றிகண்டு இருக்கிறது. இருமொழிக்கொள்கை கொண்ட சிங்கப்பூர் கல்வித்திட்டம், உலகஅரங்கில் முதன்மை இடங்களில் ஒன்றைப் பிடித்து இருக்கிறது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை அன்றோ? இந்தியாவிலும் இருமொழித் திட்டமே போதுமானது. ஹிந்தி படிக்க விரும்புவோர் தனியே படித்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அதை அரசே கட்டாயப்பாடம் ஆக்க நினைப்பது, வேற்றுமைகளை இன்னும் வளர்க்குமே தவிர குறைக்காது.

பண்பாடு வளர ஒரு தாய்மொழி(தமிழ்), பரஸ்பரம் பேசிக்கொள்ள ஒரு வணிகமொழி(ஆங்கிலம்). இது போதும் எனக்கு என்ற மாநில அரசின் கொள்கையை, மத்தியஅரசு சார்ந்த கல்வியாளர்கள், மட்டம்தட்ட வேண்டியதில்லை. தமிழ்நாட்டைத் தாண்டிப் போக நினைப்பவன், நிச்சயம் ஹிந்தி கற்றுக் கொள்வான். அப்படிப்பட்டவன், தனியே எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு ஒரு கொள்கை வடிவம் தேவை இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, ஹிந்தித்தேவை ஓரளவிற்கு உதவுகிறது என்றாலும், உலகஅரங்கில் வணிகரீதியாக கருத்துப் பரிமாற்றம் செய்யும் போது, நாம் இன்றளவும் ஆங்கிலத்தையே நாடுகிறோம். எனவே ஹிந்தியோடு கூடிய மும்மொழிக்கொள்கை தேவை இல்லை.

இன்னொரு எதிர்ப்பு சமஸ்கிருதம் மூலம் வருகிறது. சமஸ்கிருதம் ஒரு முழுமையான அறிவியல் மொழி இல்லை. அது ஒரு மதம் சார்ந்த ஆன்மீக மொழி. மதச்சார்பின்மையைக் கொள்கையாய்க் கொண்ட இந்தியா, மதச்ச்சார்புள்ள சமஸ்கிருதத்தை கல்விக்கொள்கைக்குள் புகுத்துவது நிச்சயம் எதிர்க்கக் கூடிய ஒன்று.

  • மதச்சார்பின்மை

என்னைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சினைதான், புதுக்கல்விக் கொள்கை குறித்து, கல்வியாளர்கள் கடுமையாய் விவாதிக்கும், தலையாயப் பிரச்சினை என்று சொல்லுவேன். முதலில் சிங்கப்பூர், அதன் மதச்சார்பின்மையை, அதன் பாடத்திட்டங்களில் எப்படி வெளிப்படுத்துகிறது எனப் பார்ப்போம். சிங்கப்பூரில் வாழும் பெரும்பான்மையானோர், புத்தமதம் மற்றும் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். அதன் பிறகு, ஒரு குறிப்பிட்ட சதவிகித்தில் இசுலாமிய மக்களும், ஹிந்து மக்களும் இருக்கிறார்கள். சீக்கிய மதமும், யூத மதமும் கூட சிங்கப்பூருக்குள் இருக்கிறது. ஆக, இத்தனை மத மாணவர்களை சிங்கப்பூர் கையாண்டு ஆக வேண்டும். சிங்கப்பூர் செய்யும் முதற்காரியம், பாடத்திட்டங்களில் மதம் சார்ந்த இலக்கியங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மொழிப்பாட நூல்களில், மொழியை வளர்க்க பல இலக்கிய உத்திகளைக் கையாளும் சிங்கப்பூர், மதத்தின் ஆழத்துக்குள் செல்லும் இலக்கியங்களை, அதன் பாடநூலில் எங்கேயும் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால், அதே நேரத்தில், மதம் சார்ந்த அறிவை, அதன் சமூக அறிவியல் பாடங்களில் ஓரளவிற்கு சிங்கப்பூர் வளர்த்து விடுகிறது என்பது உண்மை. கூடவே, மத சகிப்புத்தன்மையை வளர்க்கவும், சிங்கப்பூர் சில பாடத்திட்டங்களை புகுத்தி மதச்சார்பின்மையில் வெற்றி காண்கிறது.

ஆனால், பாரம்பரியம் மிக்க இந்தியாவில் இது சாத்தியம் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். ஏன் என்றால், புகழ்பெற்ற, மிகுந்த இலக்கியச் செறிவுடைய, இந்திய பாரம்பரிய இலக்கியங்கள் எல்லாமே மதம் சார்ந்தவைதான் என்பதால், இலக்கிய அறிவையும், இந்தியப் பண்பாட்டையும் வளர்க்க, பாடநூலில் மதத்தைப் பற்றிப் பேசாமல் எப்படி இருக்க முடியும்? உதராணத்திற்கு தமிழ்ப்பாட நூல்களை எடுத்துக்கொள்வோம். கம்பன் எழுதிய கம்பராமாயணம் ஹிந்து மதம் சார்ந்தவையே. வில்லிபுத்துரார் எழுதிய மகாபாரதம் ஹிந்து மதம் சார்ந்தவையே. ஐம்பெரும் காப்பியங்களுள் சீவக சிந்தாமணி மற்றும் வளையாபதி இரண்டும் சமணமதம் சார்ந்தவை. குண்டலகேசியும் மணிமேகலையும் பௌத்த மதம் சார்ந்தவை. உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணம் இஸ்லாமிய மதம் சேர்ந்தது. வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணி கிறித்துவமதம் சார்ந்தது. இத்தனையும் நாம் தமிழ் மொழிப் பாடங்களில் படிக்கிறோம். இதையெல்லாம் படித்ததால்தான், ஒருவன் மதம் மாறுகிறான் என்பதற்கு எந்த சாட்சியும் இல்லை. இப்படி இருக்க, இந்தியாவின் புதிய கல்விக்கொள்கை, பாரம்பரியம் என்ற பெயரில் எங்கே ஹிந்து மதம் சார்ந்த இலக்கியங்களை மட்டும் அனுமதிக்குமோ என்பது கல்வியாளர்களின் பெருங்கவலை.

என்னைப் பொறுத்தவரை, மதம் சார்ந்து இருந்தாலும், இந்திய இலக்கியங்கள் நிச்சயம் பாடப்புத்தகங்களில் இருக்க வேண்டும். வடமாநிலப் பாடநூல்கள், துளசிதாசரின் ஹிந்து இலக்கியத்தைச் சேர்த்துக்கொள்ளட்டும். ஆனால், கூடவே, தமிழில் இருப்பதுபோல எல்லா மத இலக்கியங்களும் அதில் இடம் பெறட்டும். அதுவே இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு அழகு ஆகும்.

  • உயர்கல்வியும், அரசு வேலைவாய்ப்பும்

இந்தியாவின் எல்லா ஜாதிகளும் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக்கொள்வது, அரசு வேலைவாய்ப்பிலும், வேலை வாய்ப்புக்குத் தேவையான உயர்கல்வியிலும்தான். இட ஒதுக்கீடு இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி, பொதுப்பிரிவு ஒதுக்கீட்டிலும், எல்லா ஜாதியினரும் போட்டி போடுகையில், அங்கே பிரச்சினை வந்துவிடுகிறது. இதுவரை மதிப்பெண்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்ட உயர்கல்வி ஒதுக்கீடு, நீட் தேர்வு போன்ற தேர்வின் அடிப்படையில் கொடுக்க முற்படும்போது, எதிர்ப்புக்குரல் அதிகமாக ஒலிக்கிறது. நீட் தேர்வால், கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் பறிபோகிறது. சண்டையின் சாராம்சத்தை கவனித்துப் பார்த்தால், இட ஒதுக்கீட்டை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், பொதுப் பிரிவில் கொடுக்கப்படும் உயர்கல்வி இடங்கள், திறமையின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதே முக்கியமான வாதமாய் இருக்கிறது. புதியகல்விக் கொள்கையின் அடிப்படை நோக்கமே, திறமையை வளர்ப்பதுதான். புதிய கல்விக்கொள்கை கிராமப்புறங்களில் முறையாக செயல்படுத்தப்படும் தருணத்தில், கிராமப்புற மாணவர்களும் தத்தம் திறமையின் அடிப்படையில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். ஆனால் அதற்கு தடைக்கல் ஆக இருப்பது எது? கிராமப்புறங்களில் உள்ள பெருவாரியான திறம்குறைந்த ஆசிரியர்கள்தான், தடைக்கல்லின் முதல் காரணிகள். புதுக்கல்விக்கொள்கையின் வெற்றி, திறமையான ஆசிரியர்களின் கையில்தான் இருக்கிறது. எனவே ஆசிரியர் தேர்வு சரியாய் அமைதல் வெற்றிக்கு மிக மிக அவசியம். இட ஒதுக்கீடும் தொடரட்டும். சரி இடஒதுக்கீட்டிற்கும் பிறகு என்ன பிரச்சினை என்றால் இன்னும் ஒரு பிரச்சினையாய் மாநிலப் பிரச்சினை வருகிறது. அந்தந்த மாநில மக்கள், அந்தந்த மாநிலத்தில் தேர்வு பெற, நீட் தேர்வு உதவுவதில்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டு. திறமையான புதுக்கல்விமுறை மூலம், தமிழ்நாடு மாணவர்கள், தங்கள் மாநிலத்தின் உயர்கல்வி இடங்களைத் தக்கவைத்துக் கொள்வதோடு, அண்டை மாநில இடங்களையும் கைப்பற்ற முடியுமே என்பது ஒரு சில கல்வியாளர்களின் வாதம்.

சரி, உலகத்தரம் என்ன எதிர்பார்க்கிறது? திறமையைத் தவிர, உயர்கல்வித் தகுதியாய், அது எதுவும் பேசுவதில்லை. என்னைப் பொறுத்தவரை, இந்தியாவின் இட ஒதுக்கீடு தொடரட்டும். ஆனால், அந்த சலுகைகள், ஒரு முறை படித்து பட்டம் பெற்று, வேலைவாய்ப்பும் பெற்ற குடும்பத்திற்கே. மறுபடியும் போய்ச் சேர்வதை அரசாங்கம் முடிந்தவரை தடுக்கவேண்டும். ஏழை எளியவரின் குடும்பப்பிள்ளைகளுக்கே, இடஒதுக்கீட்டிலும் சலுகைகள் போய்ச்சேர அரசு ஆவண செய்ய வேண்டும். இப்படிச் செய்யச் செய்ய, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஜாதியின் தாக்கம் நிச்சயம் குறையும்.

  • உள்கட்டமைப்பு

இறுதியாய் ஒன்று. ஒருங்கிணைந்த புதுக்கல்வியை செயல்படுத்த, இந்தியாவிடம் எந்த வித முறையான கட்டமைப்பும் இதுவரை இல்லை. தனியார்துறையின் ஆதிக்கம் இன்றி, ஒரு மாபெரும் கல்விக் கட்டமைப்பை உருவாக்க, இந்தியா பெரும்பொருள் செலவிட வேண்டி இருக்கும். இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு சாத்தியமா என்று தெரியவில்லை. அப்படியே தனியார்துறை அனுமதிக்கப்பட்டாலும், தனியார்துறையின் போட்டித்தன்மைக்கு ஈடாக, கிராமப்புற புதுக்கல்வியின் கட்டமைப்பை அமைப்பதில், அரசு பெரும் சவாலை சந்திக்க நேரிடும்.  இன்னொருபுறம் இந்தியா சமாளிக்க வேண்டிய விஷயம், இந்தியாவின் ஊழல். சரி.. முதலில் கல்விக் கட்டமைப்பு என்றால் என்ன? கட்டமைப்பின் ஒரு பகுதி திறமையான ஆசிரியர்கள். திறமையான ஆசிரியரின் முக்கியத்துவத்தை நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். கட்டமைப்பின் இன்னொரு பகுதியாய், கல்வி மேலாண்மை, ஏழை மாணவர்களுக்கான உணவு உடை, ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகை, மடிக்கணினிகள், APP என்று சொல்லக்கூடிய கல்விபோதிக்கும் செயலிகள், தேர்வு நடத்தும் செயலிகள், நாடு தழுவிய வளைத்தளக் கட்டமைப்புக்கள், வலைத்தளங்களை, புறவிஷமிகளிடம் இருந்து பாதுகாக்கும் காப்பு நடவடிக்கைச் செயலிகள், புள்ளிவிபரங்களைச் சேமித்து வைக்கும் சேமிப்புக் கணினிகள் இத்யாதி, இத்யாதி என்று கட்டமைப்பின் இன்னொரு பகுதி நீண்டுகொண்டே போகிறது. தங்க நாற்கரம் போன்ற, தனியார்துறையுடன் கூடிய கட்டமைப்பு உருவாக்கத் திட்டத்திற்கு, இந்தியா, நிறைய ஐந்தாண்டுத் திட்டங்களோ அல்லது பத்தாண்டுத் திட்டங்களோ தீட்டவேண்டி வரும்.

மாநில அரசு கட்டுப்படுத்தும் கல்விக்கூடங்களை, நாடு தழுவிய ஒருங்கிணைந்த இணைப்புக்குக் கொண்டுபோகும் போது, எழும் அத்தனை சிக்கல்களையும், மத்திய அரசு சமாளிக்கவேண்டி வரும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஊழல் இல்லாத ஒரு கல்விக் கட்டமைப்புக்கு இந்தியா தயாராக இருந்தால்தான், இந்தியா, அதன் புதுக்கல்விக் கொள்கையை, உலகத் தரத்துக்கு எடுத்துக்கொண்டு போக முடியும் என்பது அனைவரும் ஒத்துக்கொள்ளும் ஒரு உண்மை.

இந்திய புதுக்கல்விக் கொள்கைக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அழகர்சாமி சக்திவேல்

Series Navigationபரிசோதனைக் கூடம்பாரதம் பேசுதல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *