இந்த நிலை மாறுமோ ?

This entry is part 1 of 27 in the series 21 செப்டம்பர் 2014
 stolen-phone-header2

சுதந்திரம் கிடைத்தது ‘இந்தியா’ என்ற இந்த நாட்டிற்கு மட்டும் தானா? அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு இல்லையா?  தற்போது நடைமுறையில் நடக்கும் செயல்களைப் பார்த்தால் திருடர்களுக்குத் தான் ‘ஏகபோக சுதந்திரம்’ கிடைத்து விட்டதை அனுபவ பூர்வமாக உணர முடிகிறது. சொல்லப் போனால், ஒரு விஷயம் என்றில்லாமல் அனைத்து தீய செயல்களிலும் சுதந்திர மனப்பான்மையோடு செயல்படும் கும்பலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிக்க நேரிடும் நாள் இன்னும் தூரத்தில் இல்லை.  திருட்டும், குற்றங்களும் புரையோடிக் கொண்டிருக்கும் வேளையிது . வகை வகையாக யோசித்து வைத்துக் கொண்டு திருடுகிறார்கள். இதில் படித்த இளைஞர்களும், பெண்களும் கூட உண்டு என்பதை அறியும் போது ஏனோ மனது சமாதானம் அடைய மறுக்கிறது. ஒரு செலவில்லாமல், நொந்து நூடுல்ஸ் ஆகாமல் தனது சில நிமிட முயற்சியால்..!! மட்டும் பல ஆயிரன்களைப் பார்த்துப் பழகி விடுவதாலோ என்னவோ, அதுவே அவர்களுக்கு பணம் சம்பாதிக்க இலகுவான வழியாகிப் போகிறதோ  என்று தான் எண்ணத் தோன்றுகிறது.கடந்த பதினைந்து நாட்களில் மட்டும் நான் கேள்விப்பட்ட, பார்த்த, என் சொந்த அனுபவத்தில் தொலைத்த, என்று சில மணித்துகளில் பணத்தை,பொருளைத் தொலைத்து விட்டு மன உளைச்சலில் ஆளாகி, அதனால் எழுந்த எண்ணங்கள் தான் எழுத்து வடிவமாகி தற்போது பயணம் செய்கிறது.

‘வேலையில்லாப் பட்டதாரிகள்’  வேலை தேடி அலுத்துப் போய், விளையாட்டாக தங்களின் பேராசைகளுக்கு தீனி போட சின்னத் திருட்டுக்களில் விளையாடி பின்பு அதுவே பழக்கமாகி பெரிய அளவில் விளையாடிப் பார்த்தால்..! என்ன? என்ற எண்ணம்  தோன்றியதாம்…அதற்கு ‘சூது கவ்வும்’ என்ற திரைப்படம் நிறைய வழி சொல்லிக் கொடுத்தது என்றும் பெருமையோடு சொல்லிக் கொள்ளும் குற்றவாளிகளைக் காணும் போது, யாரு பெத்த பிள்ளையோ…இப்படி இந்தச் சின்ன வயதில் இப்படி தலையெழுத்து மாறிப் போகிறதே என்று மனம்  வெம்புகிறது. நாளைய ‘இந்தியா’ இப்படிப்பட்டவர்களின் கையிலா சிறைபடப் போகிறது …? (இப்பொழுது மட்டும் என்ன வாழ்கிறதாம் ?)  என்ற எண்ணம் தோன்றாமலில்லை.

பதினைந்து நாட்கள் முன்பு, எங்கள் வீட்டின் அடுத்த சந்தில், ஐம்பது வயதுப் பெண்மணி காலை பத்து மணியளவில் அருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தாராம். திடீரென்று இரண்டு இளைஞர்கள் பைக்கில் வந்தவர்கள். திடீரென அந்தப் பெண்மணி எதிர்பாராத நிமிடத்தில் அவள் அருகே வந்து முகத்தருகே பலத்த சத்தத்துடன் ‘பே……பே..’ என்று கத்தியதும் அவர் அப்படியே அதிர்ச்சியில் பயந்துபோய் அப்படியே மயக்கமடைந்து நிலை தடுமாறி விழுந்துவிட்டார். அந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட திருடர்கள் இருவரும் கழுத்தில், கையில் கிடந்ததை சாவகாசமாக கழட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். மயக்கம் கலைந்து விழித்துப் பார்த்த அந்தப் பெண்மணி நகை திருட்டுப் போனதை அறிந்து அந்த அதிர்ச்சியில் மீண்டும் மயக்கமடைய, தங்கம் விற்கும் விலையில், கிட்டத்தட்ட இரண்டு லட்சங்களைப் பறிகொடுத்துப் பரிதவித்தவர் யாரைப் பார்த்தாலும் பயத்துடன் அலறிக் கொண்டிருக்கிறாராம். எத்தனை நூதனமான முறையில் ரூம் போட்டு யோசித்து இந்த வகையில் திருட்டை செயல் படுத்தி இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.

அடிக்கடி, குழந்தைகளுக்காக டெலிபோன் செய்து பீட்ஸா , பர்கர் வரவழைக்கும் ஒரு குடும்பம். அன்றும் அப்படித்தான்,யாரும் சொல்லாமலேயே பீட்ஸா அட்டைப்பெட்டியை எடுத்துக் கொண்டு வந்த ஒருவர், அந்த வீட்டின் கதவைத் தட்டி, இந்தாங்க வழக்கம் போல நீங்கள் கேட்ட பீட்ஸா என்று அந்தப் பெட்டியை நீட்டியதும், யார் சொன்னார்கள்….? என்ற யோசனையோடு அதை வாங்கிக்கொண்டு சென்றவர், பில் எவ்ளோ என்று கேட்டபடியே….வேண்டாம் என்று கூட சொல்லத் தோன்றாமல், ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுக்கவும், இந்தாங்க…பில் என்று அவரது கையில் ஒரு வெள்ளை நீள பேப்பரை நீட்டியவன், சார், ஒரு நிமிஷம் வண்டில சேஞ் வெச்சுருக்கேன்…எடுத்துட்டு வரேன்…என்று சொல்லிவிட்டு விரைந்தவன் , பின்பு வரவேயில்லையாம். அவன் கொடுத்த பில், ஏதோ சூப்பர் மார்கெட்டின் பழைய பில் என்றும், அவன் கொடுத்த அட்டை பெட்டியில் ‘பீட்ஸா வடிவில் தெர்மாகோல் அட்டை’ யைக் கண்டதும் தான் அவர் ஏமாற்றப் பட்டதை உணர்ந்து கொண்டாராம்.வந்தவன் யாரென்றே தெரியாது? என்றும் சொல்லிக்கொண்டார். ஆயிரம் ரூபாய் அவருக்கு அம்பேல்.

காலை ஆபீஸ் அவசரம். போற வழியில இறங்கிக்கறேன்….கூடவே நானும் தொற்றிக் கொண்டேன். பைக்கில் ஏறியதும் தான் அவருக்குப்  பெட்ரோலின் நினைவு. மாதக் கடைசி. இன்னும் ஒரு வாரம் ஓட்டியாகணும்.சட்டைப் பையில் ஐநூறு ருபாய் நோட்டு ஒன்றே ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது. மனக்கணக்குப் போட்டு, துட்டு இருக்கும் போதே ஒரு இருநூறு ரூபாய்க்கு பெட்ரோலை வாங்கி ஊத்து என்று காலி டாங்க் உத்தரவு போட்டது. வேறு எங்கும் சக்கரம் சுழலாமல் நேராக பெட்ரோல் பங்குக்குச் சென்று அழுத்தமாக நின்று உறுமியது.

‘இருநூறு ரூபாய்க்குப் போடுப்பா ‘  சட்டைப் பை காலியானது. பெட்ரோலை எங்கியாச்சும் குறைச்சுப் போட்டுடப் போறானுங்க, திருட்டுப் பசங்க…கண்களும், மனமும் ஓடும் மீட்டர் மேலேயே ஒட்டிக் கொண்டிருந்தது.

ம்ம்ம்…போட்டாச்சு……எடுங்க….இருநூறு….! என்றவன், பெட்ரோல் ட்யூபை எடுத்து, அடுத்து வாங்க…என்று அவரை விரட்டினான்.

சார்..துட்டு கொடுத்துட்டு அப்பால நகருங்க…அதட்டினான்.

அதான் கொடுத்தாச்சேப்பா….சந்தேகத்துக்கு ரசம்ன்னு சொல்லுவது போல…சட்டையை மீண்டும் ஒருமுறை தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டவர் நீ தான் பாக்கி முன்னூறு தரணும் …அதைத்தா என்றார் அவர்.

எங்கே….? யார்கிட்டே…? எப்போ..என்று வெகுண்டவன்….எத்தனை பேருய்யா….இப்படிக் கிளம்பிருக்கீங்க….சாவுக்கிறாக்கி…கால வேளையில, உங்க அவசரத்துக்கு நாங்க ஊறுகாயா? நான் பாக்கி தரணுமாம்ல….இந்த பங்குல இளிச்சவாயன் இவன்…ன்னு எழுதியிருக்கா…  என்று அவன் எகிறி முன் வர,

அவருக்கு நெஞ்சுகுள் பகீர்…..! முகம் முழுதும் அவசர அவசரமாக அவமான ரேகை கோலம் போட்டது.

அந்த சமயத்தில் என்னிடமிருந்து  இரு நூறு ரூபாயை வாங்கி அவனிடம் கொடுத்துவிட்டு….’பாடம் கற்றுக் கொண்டு’  வெளிறிப் போன முகங்களுடன் வெளியேறினோம்.

நான்  என் அம்மாவுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன். அது ஒரு மாலைப் பொழுது,  சிக்னல் தாண்டி அவசரமாக அத்தனை வண்டிகளும் வேகேடுத்தது. திடீரென கீழே ஓர் மொபைல் கைபேசி ஒரு பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்தது. உடனே, நான் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை அதனருகில் கொண்டுசென்று  ‘லபக்’ கென்று கழுகு கோழிக்குஞ்சை கவ்வி எடுத்துச் செல்வது போல ஒரு நிமிடத்தில் எடுத்து தனது கைப்பையில் போட்டுக் கொண்டான். அதைக் கண்ட எனக்கு அவனிடம் அதைக் கேட்டகாமல் இருக்க முடியவில்லை.

“ஏன்பா…..அந்த மொபைலை அந்த பைக்கைத் துரத்திச் சென்று கொடுத்து விடேன் ..அவர்கள் கவலைப் படுவார்கள்’ அது ரொம்ப விலை உயர்ந்த கைபேசி. நீ பாட்டுக்கு இந்தப் பக்கம் திரும்பிட்டியே….அந்த மொபைலை என்னிடம் கொடு, நான் அவர்களுக்கு தகவல் தெரிவித்து கொடுத்து விடுகிறேன். அல்லது போலீஸிடம்  ஒப்படைத்து விடேன்.

அவனுக்கு வந்த கோபத்தில், நீ இங்கியே இறங்கிக்கம்மா…வண்டி ஓடாது…என்று சொல்லி வண்டியை நிறுத்தி எங்களை இறங்கச் சொன்னான்..

நான் சற்று உரத்த குரலில் அந்த மொபைல் பற்றி கேட்டதும்…

எந்த மொபைல்.?….யார் எடுத்தது? என்று  அவன் அதற்கு பதிலாக இன்னும் சத்தமாகக் கத்தியவன், எங்களிடம் ஆட்டோ சார்ஜை வாங்கிக்கொண்டு அடுத்த நொடி நிற்காமல் கிளம்பிச் சென்றான்.

நாங்கள்  இருவரும் நடுவழியில் திகைத்தபடி நின்றோம்.

இதைப் போன்றே,  எனது தோழி , வீட்டிற்குத் தேவையான மளிகைச் சாமான்களை சூப்பர் மார்க்கெட்டில்’ க்ரெடிட் கார்டில் வாங்கிவிட்டு, வீட்டிற்கு வந்து விட்டார். அன்று இரவு அவரது கைபேசியில் குறுந்தகவல் அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்ததாம். கடலூரிலிருந்து ‘யுனிவர்சல்’ மொபைல் ஸ்டோரில் இரண்டு மொபைல்கள்  கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய்க்கு க்ரெடிட் கார்ட் ஸ்வைப் செய்து வாங்கியிருக்கும் செய்து. அந்த குறுஞ்செய்தி அறிந்து திடுக்கிட்ட என் தோழி,  உடனே தனது க்ரெடிட் கார்ட் அந்த சூப்பர் மார்க்கெட்டில் தான் தொலைந்திருக்க வேண்டும் என்று அறிந்து கொண்டு. உடனே அங்கு தொடர்பு கொண்டார்.  அங்கிருந்த ‘ஃப்ளோர் மேனேஜர்’ தான் விசாரிப்பதாகச் சொன்னவர், பிறகு அப்படி எந்த  கார்டும் இங்கு கண்டெடுக்கப் படவில்லை என்றும்  தகவல் கொடுத்தார்.

விடாமல் எனது தோழி கடலூரில் இருக்கும் அந்தக் கடைக்குச் சென்று விசாரித்ததில், அவர்களது கண்காணிக்கும் காமெரா மூலமாக யார் வந்து தனது கிரெடிட் கார்டால் இரண்டு மொபைல்கள் வாங்கினார்கள்? என்று தெரிந்து கொண்டார்.  அந்தக் படக்காட்சியில்  கிடைத்த உருவத்தை அப்படியே தனது கைபேசியில் படம் பிடித்துக் கொண்டு, நேராக மீண்டும் அந்த சூப்பர் மார்க்கெட் சென்று, விசாரித்ததில் அந்தக் போட்டோவில் இருப்பது அந்த மேனஜேர் தான் என்பது உர்ஜிதமானது.  இந்த விஷயம் அறிந்ததும், அவர் தனியே வந்து தன் தவறை ஏற்றுக் கொண்டு, தன்னை மன்னித்து விடும்படி கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டார். “நான் பிள்ளைகுட்டிக் காரன்மா. மனைவிக்குத் தெரிந்தால் அந்த அவமானம் தாளாமல், தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை, தயவு செய்து போலீசுக்கு தகவல் கொடுத்து விடாதீர்கள், இன்னும் 24 மணி நேரத்தில் எப்படியாவது அந்த பணத்தை வங்கியில் கட்டி விடுகிறேன் என்று சத்தியம் செய்தார்.  அதே போல மனைவின் நகைகளை விற்று  நேரத்திற்கு முன்பே பணத்தைக் கட்டிவிட்டார். மனிதாபிமான அடிப்படையில் தோழியின் மனது இறங்கியதால் அவர் செய்த தவறிலிருந்து தப்பினார்.

பொறுப்பான பணியில் இருப்பவரே இது போன்ற சபலத்தில்  பின்விளைவுகள் அறியாது களவாடினால்,  எவ்வளவு அவஸ்தையில் கொண்டு செல்லும் என்பதை உணர வேண்டாமா?
சமீபத்தில் காலை அவசரமான பணிகளில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு அலுவலகத்தில், நாகரிகமாக உடையணிந்து மிகவும் பணிவுடன் உத்தரவு கேட்டு உள்ளே நுழைந்த ஒருவர், “சார்..நான் இந்தக் கம்பெனியிலிருந்து வந்திருக்கேன்.இதெல்லாம் ஒன் டே ஆஃபர் ,  லீடிங் மொபைல் ஸ்டோர்லேர்ந்து வரோம்..என்றெல்லாம் பேசிக் கொண்டே வேகவேகமாக சில படங்களை எடுத்து வெளியே மேஜை மீது வைத்தவர், ‘ சாரி…..ப்ளீஸ்..இதெல்லாம் வேண்டாம்..” என்று சொல்லி வந்த அவரை வெளியே அனுப்பி விட்டு, நிம்மதியோடு அடுத்த வேலையில் இறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் தான் தெரிந்தது தனது காஸ்ட்லியான மொபைல் திருட்டுப் போன விஷயமும்.
அன்று வந்தவன் செக்யூரிட்டி புத்தகத்தில் பதிந்து வைத்திருந்த தகவல்களும் பொய்யானது என்றும் தெரிந்தது.

சென்னையிலிருந்து பாண்டிக்குப் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். பாண்டியில் இறங்கி வீட்டுக்குச் சென்று  கைப்பையைப் பார்க்கிறேன். அதனுள் இருந்த பணத்தைக் காணோம். பர்சோடு கத்தைப் பணத்தைத் தொலைத்த மனம்

மிகவும் நொந்து போனது. பத்திரமா வந்து சேர்ந்தோம் என்ற நிலை இல்லாமல் பயத்தோடு பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தைத் தருகிறது  இந்த சமுதாயம்.

இதில் தவறு  பறிகொடுத்தவரின் அஜாக்கிரதையும்  தான் அதிகம் நடைபெறுகிறது என்னும் உண்மை இருந்தாலும் கூட, எப்போதும்  எப்போ திருட்டுப் போகுமோ என்று திருடர்களின் நினைவுடனேவா இருக்க முடியும்?

சென்ற வாரம் சென்னையிலிருந்து ஹைதராபாத் வரும் விரைவு வண்டியில், ஏ.சி.கோச் தான் ஏதோ ஒரு பாதுகாப்பு தரும் என்ற நிம்மதியோடு பயணம் செய்வார்கள். திடீரென அடுத்த இருக்கையிலிருந்து ஒரு பெண்மணியின் அலறல் குரல். தனது கைப்பை காணவில்லை என்று. அதில் தான் அவள் கழுத்துச் சங்கிலி, இரண்டு மொபைல், கிரெடிட் கார்ட்,பணம் என்று நிறைய போட்டு வைத்திருந்தாளாம். அவர்களின் அலறல் இன்னும் காதில் ஒலித்தபடியே இருக்கிறது.
அதே ரயிலில் வண்டி கிளம்புமுன்னே ‘வழவழ நோட்டிஸ்’ ஒவ்வொரு இருக்கையிலும் கண்களைப் பறிக்க, எடுத்துப் பார்த்ததும்,அதில் ‘உங்களுக்குத் தேவையான உணவை தரம் மிகுந்த ரெஸ்டாரென்ட் மூலமாக வரவழைத்துத் தருகிறோம்.  உங்களுக்கு ரயிலில் பேன்ட்ரி உணவு வேண்டாம் என்று தோன்றினால் எங்களுக்கு ஒரு ‘கால்’ செய்யுங்கள் போதும். எட்டு மணிக்கு நீங்கள் கேட்ட உணவு உங்கள் இருக்கைக்கு வந்து சேரும் என்று அற்புதமான வண்ணப் படங்களுடன் கண்ணைக் கவரும் வண்ணம் எழுதப் பட்டிருந்தது. சிலர் மிக்க ஆவலோடு ஃ போன் செய்து, சிக்கன் பிரியாணி, மஞ்சூரியா, ரோட்டி ,தால் என்று வித விதமாக ஆர்டர் செய்து விட்டு பசியோடு அமர்ந்திருந்தனர்.
ஏழு மணிக்கே அவர்கள் கேட்ட உணவும் ‘பேக்’ செய்து அவர்கள் இருக்கைக்கு வந்தது. ‘பில்’லாக ஆயிரம் ருபாய் வாங்கிக் கொண்டு சென்றான் உணவு கொண்டு வந்தவன்.
சூடாகச் சாப்பிடலாம் என்றெண்ணி அவர்களும், ருசி பார்க்க..ஒவ்வொருவர் முகம் போன கோணத்தைப் பார்க்க வேண்டுமே….”டேய்…மச்சி…பிரியாணி எப்படிடா புளிசாதமாச்சு..?” என்றும்…
இது ரொட்டியா இல்ல குப்பைத்தொட்டில ஓட்டுற போஸ்டரா..? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே…போச்சு….எல்லாம் போச்சு என்று தூக்கி எரிந்து விட்டு, கூடூரில் ரயில் நின்றதும், தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டுப் படுத்தார்கள்.
எல்லோரும் ஏகோபித்த மனதோடு சொல்லிக் கொள்ளும் ஒரே வார்த்தை….’எத்தனை சினிமா எடுத்துட்டாங்க, விதவிதமாக சினிமாவில்  எடுத்துச் சொல்லிச் சென்றாலும் , இன்னும் வித விதமாத் தான் திருட்டுத்தனங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கிறதே தவிர, யார் திருந்தி இருக்கிறார்கள் ? எத்தனை ஷங்கர்கள் வந்து எத்தனை ‘அந்நியன்’ எடுத்தாலும் ‘உள்ளூர் திருடன்’ மாற மாட்டான் என்பது போலத் தானே நடக்கிறது.’
விசாகப்பட்டினத்தில் ஒரு பத்து வயது சிறுவன் தாமோதரனைப் பள்ளியிலிருந்து கடத்திச் சென்று , தொலைபேசியில், மைக்ரோ சிம்மில் பதிவு செய்து கோவிலில் பல முறைகளில் கடத்தல் காரர்கள் அந்தச் சிறுவனுக்கு முப்பது லட்சம் விலை வைத்து அவனது பெற்றோர்களை பயமுறுத்தி வருவதும், , இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் காவல்துறை முழி பிதுங்கும் அவலத்தை என்ன சொல்வது.?
கல்யாண வீட்டில் இரண்டு “காஸ் சிலிண்டரை ‘ வெடிக்க வைத்து அனைவரும் பயந்து அலறி அடித்து ஓட, அறைக்குள் சென்று நகைகள், பட்டுப் புடவைகள் என்று கொள்ளையடித்த நூதனத் திருட்டுக் கும்பல்.
ஒரு சிறுவர் பள்ளியில் தோட்டக் காரனாக வேலை செய்யும் கிழவன், சின்னஞ்சிறு பெண்குழந்தைகளை அவ்வபோது பயமுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்த கொடுமையல்லவா மனதைப் பிழிகிறது.
மொத்தத்தில் ஆந்திராவும் சரியில்லை, தமிழ்நாடும் சரியில்லை. இந்தியாவின் ஏனைய பகுதிகள் மட்டும் இதற்கெல்லாம் விதிவிலக்காக இருக்குமா? இதைப் போல இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
சின்னக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், வயதுப் பெண்களை கல்லூரிக்கு அனுப்பவும்   பயப்படும் நிலையை எங்காவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?  யாருக்கு வேண்டும் சுதந்திரம்…? என்ற கேள்வி மனதில் எழாமலில்லை. இந்த அராஜகங்கள்  மாறும் நாளும் இனி வருமா? இன்றைய குழந்தைகளின் நாளைய நிலவரம் என்னவாயிருக்குமோ என்று நினைக்கும் போது  இன்றே பயமாக இருக்கிறது. நிறைய மனங்களில்  நித்தம் எழும் கேள்விகள்  தான் என்னையும் எழுதச் செய்தது.நான் இதன் மூலம் சொன்னது அனைத்துமே சாமானியர்கள் நித்தம் நடைமுறையில் அனுபவித்து அதிர்ந்தது. பெரிய அளவில், கோடிகளை அனாசாயமாக நிமிர்த்தியவர்களைத் தான் அடிக்கடி கேமரா ‘கிளிக்’ செய்கிறதே.

ஜெயஸ்ரீ ஷங்கர்.
ஹைதராபாத்.
Series Navigationவாக்குமூலம்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *