இந்த வாரம் அப்படி: அல்லது ராமதேவின் போராட்டமும் காங்கிரஸின் சர்க்கசும்

This entry is part 1 of 33 in the series 12 ஜூன் 2011

முதுகுக்குப் பின்னே கத்தி

திமுக என்ற கட்சியையே குழிதோண்டி புதைக்கும் வேலையில் காங்கிரஸ் ஈடுபட்டிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. முதலில் ராஜா, பிறகு கனிமொழி, இப்போது மாறன் சகோதரர்கள். அடுத்து என்ன முக அழகிரியா ஸ்டாலினா என்றுதான் கேட்க வேண்டும்.

ஆனால், திமுகவினர் ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் அல்ல. அவர்கள் கடந்த 7 வருடங்களாக காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசில் பங்கு வகித்துவருகிறார்கள். அதற்கு முன்னால் பாஜக ஆட்சியிலும் பங்கு வகித்திருக்கிறார்கள். 1999இலிருந்து 2011 வரைக்கும் சுமார் 12 வருடங்கள் ஆட்சியில் தொடர்ந்து இருந்தவர்களுக்கு உள்ளே நடந்திருக்கும் ஊழல்கள் தெரியாமல் இருக்குமா?

காங்கிரசும் திமுகவும் மரண நடனத்தை நடத்திகொண்டிருக்கின்றன. திமுக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறினால், காங்கிரஸின் வண்டவாளங்களை வெளியிட நேரம் எடுக்காது. இது இருவருக்குமே ஆபத்து. ஆனால் இப்போதைக்கு காங்கிரஸ் கூட்டணியை விட்டு திமுக வெளியேறுவதுதான் திமுகவுக்கு மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கும்.

திமுகவினர் ஊழல்வாதிகளாக இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் மந்திரிகள் சத்திய சந்தர்கள் கிடையாது. சிடபிள்யூஜியில் ஊழல் செய்து மாட்டிக்கொண்டு சிறையில் இருக்கும் கல்மாடி காங்கிரஸ் காரர்தான். டாடாவிடம் பணம் கேட்ட பிரபுல் காங்கிரஸ் மந்திரிதான்.

ஒரு விசயத்தை டெஹெல்கா பத்திரிக்கை ஆதாரத்துடன் வெளியிடுகிறது என்றால் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ஆதரவு அந்த விஷயத்துக்கு இருக்கிறது என்று நான் வைத்துகொண்டிருக்கிறேன். அது இதுவரைக்கும் தப்பியதில்லை. இப்போது தெஹெல்காவில் மற்ற பத்திரிக்கைகளுக்கு கிடைக்காத மாறனின் ஊழல் ஆதாரங்கள் மத்திய அரசு கோப்புகளிலிருந்து கிடைத்து வெளியிடப்பட்டிருக்கின்றன. அப்படியென்றால், காங்கிரஸ் மாறனுக்கும் முடிவு கட்ட தயாராகிவிட்டது என்றுதான் பொருள்.

காங்கிரஸ் தன் கத்தியை வெளியே எடுத்துவிட்டது. திமுகவின் முதுகுக்குப் பின்னே கத்தி வைத்துகொண்டிருக்கிறது. எடுக்குமா என்று தெரியாது.

இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலே மாறன் சகோதரர்களுக்கும் ராஜாவுக்கு நடந்த அதிகாரப்போட்டி காரணமாக வெளியே வந்த ஊழல் விவகாரம் என்று பத்திரிக்கையாள நண்பர் ஒருவர் சொன்னார். எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. வெளியே வந்தது வந்துவிட்டது, அதனை வைத்து திமுகவை ஒழித்துவிடுவோம் என்று காங்கிரஸ் தலைகள் திட்டம் போட்டுவிட்டன என்றும் அவர் சொன்னார். ஆனால் இது இரண்டு புறமுக் கூர்மையான கத்தி வீசுவது போன்றது. திமுக தன் முதுகின் பின் வைத்திருக்கும் கத்தி உருவப்படலாம். அப்போது காங்கிரஸின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறலாம்.

ஊழல்வாதி அரசியல்வாதிகள் கொள்கை புண்ணாக்கு என்பதையெல்லாம் தாண்டி, கண்டுகொள்ளாமல் இருப்பது என்பதை கடந்த 60 வருடங்களாக செய்துவருகிறார்கள். நீ இப்போ அடிச்சிக்க. நான் ஆட்சிக்கு வந்தா நான் அடிச்சிக்கிறேன் என்பதுதான் எழுதப்படாத கொள்கையாக இருந்துவருகிறது. கத்துக்குட்டி அரசியல்வாதிகளான மாறன் சகோதரர்கள் அந்த எழுதாத சட்டத்தை உடைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. அது இப்போது எல்லா ஊழ்ல் அரசியல்வாதிகளுக்கும் வினையாக வந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

ராமதேவின் சர்க்கசும் காங்கிரஸின் போராட்டமும்
(அல்லது ராமதேவின் போராட்டமும் காங்கிரஸின் சர்க்கசும் )

இந்தியாவில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பேசப்பட்ட பணம் இந்திய மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அடுத்த வேளை சாப்பாட்டுக்காக தினமும் வண்டியேறி நகரத்துக்கு சென்று உழைத்து செலவு போக மிச்சமெடுத்து பிள்ளைகளை படிக்க வைக்க தான் பசியோடு இருந்துகொண்டிருக்கும் ஒரு சராசரி ஒரு தாய் தந்தைக்கு இந்த கோடி கோடிகள் என்ன அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். ஒருவன் உழைத்து பணம் சம்பாதித்து முதலீடு செய்து அதில் முன்னேறி பணக்காரனாக ஆனவரை பார்த்து ஒரு சராசரி மனிதன் பொறாமைப்படுவதே இல்லை. அவன் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும். பொருட்களை தயாரித்து விற்கும் டிவிஎஸ் குடும்பத்தினர் மீதும்,  லயன் டேட்ஸ் விற்கும் தொழிலதிபர் மீதும் இன்னும் பல நூற்றுக்கணக்கான தொழிலதிபர்கள் மீது மரியாதையும் அவர்களை ஒரு முன்மாதிரியாக வைத்துகொண்டு முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும்தான் வரும்.

ஆனால், அரசாங்கத்தில் இருக்கும் மந்திரி மூலமாகவும், போலீஸை வைத்து அடாவடி செய்து அடுத்தவன் பிழைப்பை பிடுங்கி அவனது வயிற்றில் அடித்து பணம் சேர்த்து இன்னொருத்தன் நியாயமாக தொழில் செய்து நமக்கு போட்டியாக வரக்கூடாது என்று அரசாங்க உதவியுடன் அராஜகம் செய்தால், மக்களுக்கு வெறுப்புதான் வரும். அதுதான் இன்று கலைஞர் குடும்பத்தினர் மீது தமிழர்களுக்கு வந்திருக்கிறது.

இரண்டு லட்சம் கோடி பெறுமானமுள்ள அலைக்கற்றைகளை நான் இந்தியாவின் தொலைத்தொடர்பு மந்திரி என்ற வகையில் உனக்கு தருகிறேன். நீ அரசாங்கத்துக்கு இருபதாயிரம் கோடி மட்டும் தந்தால் போதும். எனக்கு பத்தாயிரம் கோடி வெட்டு. உனக்கு செலவு மொத்தம் முப்பதாயிரம் கோடிதான். நீ இந்த இரண்டு லட்சம் பெறுமானமுள்ள அலைக்கற்றையை இன்னொரு பார்ட்டிக்கு இரண்டு லட்சத்துக்கு விற்றுவிடு உனக்கு லாபம் ஒரு லட்சத்தி எழுபதுஆயிரம் கோடி.

ஆக அலைக்கற்றை விற்கப்பட்டது இரண்டு லட்சம் கோடிக்குத்தான். அரசாங்கத்துக்கு கிடைத்தது என்னவோ இருபதாயிரம் கோடிதான். எனக்கு பத்தாயிரம்கோடி என்று ஊழல் செய்திருக்கிறார்கள். *(எண்ணிக்கை விளக்கத்துக்கு மட்டுமே)

இதுவெல்லாம்தான் சாதாரண மக்களை கொதிக்க வைத்திருக்கிறது. அடிவயிறு எரிய வைத்திருக்கிறது. இந்த பணம் இந்திய அரசாங்க கஜானாவில் இருந்தால், எவ்வளவு ரோடுகளை போட்டிருக்கலாம். எவ்வளவு பள்ளிக்கூடங்களை திறந்திருக்கலாம். மாணவர்களுக்கு எவ்வளவு வசதிகள் செய்திருக்கலாம். விவசாயத்துக்கு எவ்வளவு உதவியிருக்கலாம்.இன்னும் எவ்வளவு மின்சார நிலையங்களை திறந்திருக்கலாம். பாலங்கள் கட்டியிருக்கலாம். எல்லாம் எவனோ மொரீசியஸில் கள்ளப்பணம் வைத்திருப்பவனின் வங்கி கணக்கிலோ அல்லது சுவிட்சர்லாந்தின் வங்கிக்கணக்கிலோ சுவிட்சர்லாந்தின் மக்களுக்கு வசதி செய்துதர போடப்பட்டுவிட்டது.

சாதாரண  மக்களின் இந்த உள்ளக்கொதிப்புக்குத்தான் அன்னா ஹசாரேயும் ராமதேவும் உருவகம் கொடுக்கிறார்கள்.

ஆனால் ஊடகங்கள் என்ன செய்கின்றன? அன்னா ஹசாரே பத்தாயிரம் ரூபாய் வாங்கிவிட்டு திருப்பி தரவிலலை என்று ஒரு ஊடகம் செய்தி வெளியிடுகிறது. மற்றொரு ஊடகம் ராம்தேவுக்கு ஒரு தம்பதியினர் ஒரு தீவை பரிசளிப்பாக அளித்திருக்கிறார்கள் என்று செய்தி வெளியிடுகிறது. ராமதேவ் பல ஆயிரம் கோடிக்கு சொந்தமானவர் என்று இன்னொரு செய்தி ஊடகம் வெளியிடுகிறது. ஏன்? ஆயிரம் கோடிக்கு சொந்தமானவர் ஊழலுக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கக்கூடாதா? அல்லது அவரிடம் இருக்கும் பணம் ஊழலால் கிடைத்ததா?  2ஜி ஸ்பெக்ட்ரம் போன்ற அரசாங்கத்துக்கு சொந்தமான விஷயத்தை மலேசிய முதலாளிகளிடம் விற்று பணம் பண்ணினாரா? மக்கள் கொடுத்த பணத்தைத்தானே அவர் மருத்துவமனை போன்றவைகளை தனது சேவை அமைப்பு மூலமாக நடத்திகொண்டிருக்கிறார்? அவற்றைத்தானே அவரது சொத்தாக காட்டிகொண்டிருக்கிறார்?

ஐபிஎன், என் டி டிவி போன்ற ஊடகங்கள் தெளிவாகவே காங்கிரஸ் சார்பு நிலைப்பாட்டை எடுப்பதை எந்த ஒரு பார்வையாளரும் பார்க்கலாம். ஊழலுக்கு எதிராக பேசிக்கொண்டே ஊழலுக்கு எதிராக பேசுபவர்களையும் கறுப்புப்பணத்துக்கு எதிராக பேசுபவர்களையும் கட்டம் கட்டி அடிக்கும் வேலையை இந்த ஊடகங்கள் செய்கின்றன. தந்தை-மகன் பூஷன்கள் இதே போல சமாஜ்வாதி கட்சி முலயாம் சிங் ஊழல் பேரம் பேசியதாக சிடி வெளியிட்டு அதனை வைத்து ஒரு நாள் முழுவதும் பர்க்காதத் என்ற என் டி டிவி ஊடகவியலாளர் பூஷன்கள் லோக்பால் மசோதா குழுவிலிருந்து விலக வேண்டும். அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் பொய்யானது என்று நீரூபிக்கும் வரைக்கும் அவர்கள் வெளியேற வேண்டும் என்று அடாவடி அடித்துகொண்டிருந்தார். (இவர்தான் நீரா ராடியாவிடம் ராஜாவுக்கு மந்திரி பதவி பற்றி பேசியவர். இவர் இன்னமும் ஊடகவியலாளராகத்தான் இருக்கிறார். ராஜிநாமா செய்யவில்லை)

நான் கூடத்தான் ஒரு முறை லஞ்சம் கொடுத்திருக்கிறேன். வேறு வழி இருக்கவில்லை. அதுவும் நூறு ரூபாய். அதற்காக நான் லஞ்சம் பற்றி பேசவே கூடாதா? காங்கிரஸ் உருவாக்கி வைத்திருக்கும் இந்த அமைப்பு எல்லோரையும் இப்படித்தான் பண்ணி வைத்திருக்கிறது. கடன் வாங்கியாவது லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு வந்திருக்கும் சாதாரணர்கள் கோபப்படுவதில் என்ன தவறு இருக்கிறது?

கடந்த தேர்தலில் ஒரு கோடியே 45 லட்சம் மக்கள் திமுக கூட்டணிக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் லஞ்சத்துக்கு ஆதரவானவர்களா? அல்லது அதிமுக அணிக்கு  வாக்களித்த ஒரு கோடியே 62 லட்சம் பேர்களும் ஊழலுக்கு எதிரானவர்களா? நிச்சயம் இல்லை. ஊழலை விட முக்கிய பிரச்னை விலைவாசி. ஆனால் விலைவாசிக்கு காரணம், இந்தியாவில் தலைவிரித்தாடும் ஏழ்மையின்  முக்கிய காரணம், இந்த அரசியல்வாதிகளின் ஊழல் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்ட இந்திய பணம். அதனால்தான் இந்த அரசியல்வாதிகள் அரசாங்க கஜானாவிலிருந்து (சொந்த பணத்திலிருந்து அல்ல) எடுத்து ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்குகிறார்கள். அதுவும் இல்லையென்றால் இங்கே பெரும் கலவரம் நடக்கும் என்று தெரியாதவர்கள் அல்ல அவர்கள்.

வெளிநாடுகள் வளமாக வாழ இந்தியாவிலிருந்து சென்ற கறுப்பு பணமே உதவுகிறது. அந்த கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று 2009இல் பாஜக தனது முக்கிய கோரிக்கையாக வைத்தது. அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது ஏன் செய்யவில்லை என்று மேதாவியாக கேட்கும் மக்கள் அவர்களுக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லாததால் அவர்களது பல கொள்கைகள் கிடப்பில் போடப்பட்டன என்பதையும் நினைவில் கொள்வது நல்லது. அப்போது திமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ஆனால் 2009இல் பாஜக படுதோல்வி அடைந்தது. மக்களுக்கு கறுப்பு பணம் முக்கியமான விஷயம் இல்லையா? அப்போது ஏன் முக்கியமான விஷயம் இல்லை என்றால், 2ஜி ஸ்பெக்ட்ரமில் இவர்கள் அடித்த பல லட்சம் கோடி கொள்ளையை பற்றிய உணர்வு இல்லை. அந்த விஷயம் வெளிவந்ததும்தான் எவ்வளவு பணம் இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்ற உணர்வே மக்களிடம் பரவியிருக்கிறது.

இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தவும், இவர்களை தனிமைப்படுத்தவும் காங்கிரஸ் தலைகீழாக நிற்கிறது. அன்னா ஹசாரே ஒரு ஆர்.எஸ்.எஸ் ஆள், ராம்தேவ் ஆர்.எஸ்.எஸின் முகமூடி என்றெல்லாம் சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்கள். காங்கிரசுக்கு எதிராக பேசினால் தெருவில் பூந்து அடிப்பேன் என்று திக்விஜய் சிங் என்ற முன்னாள் மத்தியபிரதேச முதல்வர், இப்போதைய காங்கிரஸ் பொதுக்காரியதரிசி பேசுகிறார்.

திமுகவினர் இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டம் இட ஒதுக்கீட்டு எதிரான போராட்டம் என்று காட்ட பிரயத்தனப்படுகிறார்கள். சுப வீரபாண்டியன், திராவிட கழக வீரமணி ஆகியோர் ஊழல் எதிர்ப்பு போராட்டம் பார்ப்பன ஆர்.எஸ்.எஸின் சதிவேலை என்று சொல்லுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் இது போன்ற ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் சிக்கிவிடக்கூடாது என்று கவலைப்படுகிறார்கள் திமுகவினர். அவர்களைச் சொல்லி குற்றமில்லை.

இந்த பொழுதில் நாம் என்ன செய்யவேண்டும்? ஊழலை எதிர்த்து யார் பேசினாலும் ஆதரவு அளிக்க வேண்டும். அது பாபாவாக இருந்தாலும் சரி, அன்னா ஹசாரேயாக இருந்தாலும் சரி. ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கொச்ச்சைப்படுத்தும் ஊடகங்களை கடுமையாக கண்டிக்க வேண்டும்.

இன்றைக்கு பாஜக நேர்மையாக ஒரு விஷயத்தை ஒப்புகொண்டுள்ளது. அன்னா ஹசாரே, ராம்தேவ் ஆகியோரின் வளர்ச்சிக்கும், அவர்களுக்கு கிடைத்திருக்கும் ஆதரவுக்கும் காரணம் அரசியல் கட்சிகளின் தோல்விதான் என்று சொல்லியிருக்கிறார்கள். இது உண்மை. தமிழ்நாடே ஒரு நல்ல உதாரணம். திமுக அதிமுக இரண்டுமே ஊழல் பெருச்சாளிகள் என்றால், யார் ஊழலுக்கு எதிராக கண்டிப்பான சட்டத்தை போடுவார்கள்? அப்படியே உப்புக்குசப்பாணி சட்டம் போட்டாலும், அதில் தான் தப்பிக்க வழி வகை செய்துதானே வைப்பார்கள்? இந்த நிலையில் அரசியல்வாதிகளுக்கு வெளியே இருக்கும் ஒரு மக்கள் சக்திதான் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்ள முடியும்.

ஆகவே நீங்கள் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், தனிமனிதராக, இந்தியாவின் குடிமகன் என்ற பெயரில், ஊழலுக்கு எதிராக உங்கள் குரல் எழுப்பப்பட வேண்டும்.

Series Navigationஜெயகாந்தன் என்றொரு மனிதர்
author

சின்னக்கருப்பன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *