இன்னொரு தூக்கும் இந்திய ஜனநாயகமும்

This entry is part 5 of 30 in the series 17 பிப்ரவரி 2013

afsal

43-வயதான முகம்மது அப்ஜல் குரு(Mohammad Afzal Guru) தூக்கிலிடப்பட்டுள்ளான். 2001-ல் பாராளுமன்றத்தின் மேல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் சதிப் பின்ணணியில் முக்கிய பங்கு வகித்த குற்றத்திற்காக  உச்ச நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட பின் அப்ஜல் குருவின் தூக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. முகம்மது அஜ்மல் அமீர் கசாப் (Mohammad Ajmal Amir Kasab) தூக்கிலிடப்பட்டு மூன்று மாதங்களுக்குள் இன்னொரு தூக்கும் நிறைவேற்றப்பட்டுள்ளது.       மரணதண்டனைக்கெதிரான வலுவான வாதங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தான். திண்ணையில் வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரையாளரின் ‘மரண தண்டனை- நீதியின் கருநிழல்’ என்ற கட்டுரையில் அவை விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அப்ஜல்குருவின் தூக்கு நிறைவேற்றப்பட்ட விதத்திலிருந்து, மரணதண்டனையை ஒழித்து விட வேண்டியதின் ஜனநாயக அவசியம் அமைப்பின் செயல்பாட்டு  ரீதியான காரணங்களால் மேலும் வலுப்பெறுகிறது.

முதலில் எழும் கேள்வி அரசு என்ற அமைப்புக்கு மனிதத்துவமில்லாமல் தன்னிச்சையாய் நடந்து கொள்ள முடியுமா? கசாப்பின் தூக்கு போலவே, அப்ஜல்குருவின்  தூக்கும் இரகசியமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தூக்கிலிடப்படுவதற்கு முன்னாலான உரிய மனிதாபிமான நடைமுறைகள்  அப்ஜல் குரு விஷயத்தில்  கடைப்பிடிக்கப்படவில்லை. அதற்கான சிரத்தையும் உண்மையுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. தூக்கிலிடப்படுவதைப் பற்றி அனுப்பப்பட்ட தகவல் , அப்ஜல்குருவின் குடும்பத்திற்கு அவன் தூக்கிலிடப்படுவதற்கு முன் சேர்ப்பிக்கப்படவில்லை. அவனது குடும்பத்தினரையும், உறவினரையும் நேரில் கண்டு கடைசியாய்ப் பிரியாவிடை சொல்லவும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இதற்கு அரசு சொல்லும் நியாயங்கள் சொல்லப்படாமல் இருந்தால் கூட ஒருவகையில் அரசின் புரிந்துணர்வுக்குச் (sensitivity) சான்றாக  இருந்திருக்கும். அப்ஜல் குரு போன்ற பயங்கரவாதிக்கு அப்படி என்ன மனிதாபிமான அக்கறைகள்  வேண்டிக் கிடக்கிறது என்று அலட்சியப்படுத்திவிட முடியாது. எந்தப் பயங்கரவாதியும் தூக்கில் சாகும் போது மனிதன் தான். அவனுடைய சாவிலும் குறைந்த பட்ச மரபும், மரியாதையும் கடைப்பிடிக்கப்படுவது அவசியம். அவன் தனது பயங்கரவாதச் செயல்களில் விளைவித்த உயிரிழப்புக்களில் மரியாதையையும் நாகரிகத்தையும் காண்பிக்கவில்லையென்பதால் ஜனநாயக அரசு அவன் உயிரை வாங்கும் சமயத்தில் அவற்றில் தவறி விடக் கூடாது. மேலும் ஜனநாயக அரசு என்பது குடிமக்களால், குடிமக்களுக்கான, குடிமக்களுடைய அமைப்பு . அதனால் ஜனநாயக அரசுக்கு தூக்கைச் செயல்படுத்தும் மனிதாபிமான நடைமுறைகளில் கூடுதலான பொறுப்பு இருக்கிறது. இந்த நடைமுறைகள் மற்றும் மரபுகள் மீதான அக்கறையிலும் செயலாக்கத்திலும் தான், தனிப்பட்ட மனிதத்துவம் போன்று எளிதில் அடையாளப்படுவதாய் இல்லாவிட்டாலும், அரசு போன்ற அமைப்பு மனிதத்துவம் மேலான  தனது புரிந்துணர்வை  அடையாளப்படுத்துகிறது. தனிமனிதனை விட அமைப்புக்கு இதில் சமூக அறம் உண்டு. ஏனென்றால், அமைப்பின் சமூக அறம்  சார்ந்த செயலாக்கங்களில் தான் சமூகத்தின் கட்டுக்கோப்பே கட்டமைக்கப்படுகிறது என்றால் மிகையில்லை.

அடுத்து எழும் கேள்வி, அரசு தனது மரண தண்டனைச் செயலாக்கத்தில் ஒத்தியல்போடு(consistency) நடந்து கொள்கிறதா என்பது. இந்திரா காந்தி கொலையில் தூக்குக்கெதிரான கடைசி நிமிட மனுவும் அனுமதிக்கப்பட்டது; உச்சநீதி மன்றத்தால் பின் நிராகரிக்கப்பட்டு, தூக்கிலிடப்படுவதற்கான நாளும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது;, தூக்கிலிடப்பட்டோரை அவர்களின் உறவினர், அவர்களைக் கடைசியாய் நேரில் காணவும் அனுமதிக்கப்பட்டனர்.( Hindu editorial,12th Feb,2013). இப்படியெல்லாம் எந்த வகையிலும் கொடூரத்தில் குறைவுபடாத நாட்டின் அன்றைய தலைமை அமைச்சர் கொலைக்காக விதிக்கப்பட  தூக்கில், வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொண்ட அரசு, கசாப், அப்ஜல் குரு தூக்குகளில் ஏன் வெளிப்படைத் தன்மையாக நடந்து கொள்ளவில்லை?  ஒரு கட்டத்தில்,- இங்கு தூக்கு நிறைவேற்றப்படும் கட்டத்தில்- ஜனநாயக நியாயம் முக்கியம் என்பதை விட, அரசு என்ற அமைப்பு ஜனநாயகத்திடமிருந்து அந்நியப்பட்டு  தனது செயல் நடைமுறை செளகரியத்தை முன்னிறுத்தும் போக்கில் அல்லது தூக்கின் அமலாக்கச் செயலாக்க நெறிகளில் தனது உள்ளுறுதியின்(conviction) அவநம்பிக்கையிலும், தளர்விலும் தான் (அரசு அதை நியாயப்படுத்தாமல் இருந்தால்) இந்த இரட்டை நிலைகள் காரணமாகின்றன.  அரசு விரும்பினால் வெளிப்படையாக இருக்கும்; விரும்பாவிட்டால் வெளிப்படையாக இருக்காது என்பது  தான் இந்த இரட்டை நிலைகளில் தொனிக்கிறது. சட்டம், ஒழுங்கு ,உள்நாட்டுப் பாதுகாப்பு கருதித் தான் பின் இரண்டு தூக்குகளும் இரகசியமாக நிறைவேற்றப்பட்டன என்றால் அரசு என்ற அமைப்பு தன்னையே குறைத்து மதிப்பிட்டுக் கொள்வது போல் இருக்கிறது.  சாதாரண கருத்து , மனித உரிமைகளுக்கெதிராகக் கூட சட்ட ஒழுங்கைக் காரணம் காட்டித் தடை விதிக்கும் இன்றைய கவலையான அரசியல், பண்பாட்டுச் சூழலில், இந்த வாதத்தில் உண்மையான சட்ட ஒழுங்கு அக்கறை இருக்கும் என்று எடுத்துக் கொண்டாலும் கூட அதன் நம்பகத் தன்மை தேவையில்லாமல் கேள்விக்குள்ளாக்கப்படும் சங்கடமிருக்கிறது. அல்லது அப்ஜல்குருவின் தரப்பில், கடைசி வேளையில் ராஜீவ் காந்திகொலை வழக்கில் மரணதண்டனைக் குற்றவாளிகள் போல் கடைசி வேளையில் நீதிமன்றத் தடை வாங்கி விடும் சாத்தியம் உருவாகி விடக்கூடாது என்று தான் இரகசியமாய்த் தூக்கிலிடப்பட முடிவு செய்யப்பட்டதென்றால், அது இன்னும் கவலைக்குரியது. ஒரு மரண தண்டனைக் குற்றவாளிக்கு கடைசியாய் இருக்கக் கூடிய இன்னுமோர் சட்ட உரிமையைக் கிடைக்க விடாமல் செய்யப்பட்டது என்று தான் அதற்குப் பொருள். எந்தச் சூழலிலும் ஒரு ஜனநாயக அரசு யாருடைய-  பயங்கரவாதிகள் விஷயத்திலும் கூட- மரணதண்டனை விஷயங்களில் செயல்படும் போது கடைசி வரை வெளிப்படைத் தன்மையாக இருக்கும் என்பதில் தான் ஜனநாயகம் வலுப்படுமேயன்றி, இரகசியமான செயல்களில் அல்ல.

மரணதண்டனையில் இருக்கும் மேற்சொன்ன  ’திட்டவட்டமின்மை’ (arbirariness) அல்லது ஒத்தியல்பின்மை(inconsistency) என்ற குறைபாடு, இப்போது இந்திய ஜனநாயகத்தில் இரண்டு தளங்களில் செயல்படும் அபாயம் கவலைக்குரியது. முதலில் மரண தண்டனை வழங்கும் கட்டத்தில் இருக்கும் வேறுபாடுகள். இவை, அரிதினும் அரிதான குற்றங்கள்(rarest of the rare cases) என்பதை நிர்ணயிப்பதில் இருக்கும் திட்டவட்டமின்மையில் வேர்கொள்கின்றன. அடுத்து மரணதண்டனையை நிறைவேற்றுவதில் முன்னை வெளிப்படைத் தன்மைக்கு மாறாய், இப்போது கால்கொண்டிருக்கும் வெளிப்படைத்தன்மையின்மை. முன்னதில் எக்குற்றம் அரிதினும் அரிது என்ற நீதிக் கருத்தாக்க நிர்ணயிப்பில் இருக்கும் சிக்கல் அடிப்படையாகிறது; பின்னதில் அரசு அமைப்பின் – அதாவது நிர்வாகத்தின்- கள உண்மைகளின்(ground realties) மேலான கணிப்பு அடிப்படையாகிறது; ஆனால் முன்னது போலன்றிப்  பின்னது தன்னிச்சையானது என்றால் மிகையல்ல. மீண்டும் உயிர் மீட்சிக்கான வாய்ப்பு(irreversible process) இல்லாத மரண தண்டனையில் இப்படி அமைப்பு சார்ந்த நிச்சயமின்மைகள்(infirmities) இருக்கும் போது எப்படி மரணதண்டனையை நியாயப்படுத்த முடியும்? அதுவும் ஆயுள் தண்டனை  போலல்லாமல், ஒரு  குற்றவாளி திருந்துவதற்கு (தூக்கிலிடப்பட்ட அப்ஜல் குரு 43 வயது; கசாப் 25 வயது தான்) அல்லது திருந்தாவிட்டாலும் குறைந்த பட்சம் மீதி வாழ்நாள் முழுவதும் வெறுமையான வாழ்வில் குமைவதற்கான, வருந்துவதற்கான  ஏதில்லாமல், மிச்ச வாழ்க்கையை (rest of the life) அணைத்து விடும் மரண தண்டனையை எப்படி நியாயப்படுத்த முடியும்? ஒருவகையில் சொல்ல வேண்டுமானால், மீதி வாழ்க்கையில் வெறுமையாய்க் குமைவது, தூக்கு தண்டனையை விடப் பெரிய தண்டனை.

ஆக, அமைப்பு சார்ந்த நிச்சயமின்மைகளுக்கு, அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்ளாது, குடிமக்களில் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் மேல்- என்ன கொடுமையான குற்றம் இழைத்திருந்தலும்- அவற்றின் விளைவுகளைக்கு உட்படுத்துவது எப்படி நியாயமாகும்? இன்னொரு வகையில் கூற வேண்டுமானால், ஜனநாயக அரசு என்ற அமைப்பின் தோற்றுவாய் குடிமக்கள் என்றாலும், முன்னர் சொன்னது போல் மரண தண்டனை நிறைவேற்றத்தில் அமைப்பு தனது எண்ணப்படி ஜனநாயகத்திடமிருந்து அந்நியப்பட்டு சுயேச்சையாகி சுழலத் தொடங்கி விடுவது போல் இருக்கிறது. அதாவது அமைப்பு தனக்கயலின்றி தானேயாகி – இறை போன்றாகி- விடுகிறது. அதனால் இறை போன்று செயல்படுவது உட்கிடையாகிறது. இறைக்கு உயிர்களின் தோற்றத்திற்கும்/ மறு தோற்றத்திற்கும் (அற்புதத்திலாவது) அழிவுக்குமான(அதர்மத்தை அழிக்கவாவது) வல்லமை உள்ளது என்று நம்பப்படுகிறது.(பெளத்தம் தவிர்த்து பல மதங்களில்). அரசு மரண தண்டனையில், தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் உயிர் பறிக்கும் விஷயத்தில் – உரிய நீதிமன்ற விசாரணைக்குப் பின்னென்றாலும்- இறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உறுதியான அடிப்படையில்லாது சூழ்நிலைக்காரணங்களால் நிறைவேற்றப்பட்ட தூக்கு, தூக்கிற்குப் பின்  சூழ்நிலைக் காரணங்கள் மாறி அல்லது புதிய சூழ்நிலைக்காரணங்களில் தூக்கு தவறு என்றால் அமைப்பால் உயிர் மீட்சி தந்து விட முடியுமா? முடியாதென்றால், அரசு இறையின் தனது பிரதிநிதித்துவத்தில் ஒரு தலைப்பட்சமா? அப்படியென்றால், நம்பப்படும் அல்லது வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும் இறை போன்று உயிர் பிழைப்பிக்கும் ஆற்றல் அரசுக்கு இல்லையென்றால், அரசு உயிர் பறிப்பதும் தவறாக, மரணதண்டனைக்கு தர்க்க நியாயமில்லை.  ஆக ஜனநாயகத்தின் பின்னடைவு ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதற்கான சட்டத்தில் இருக்கும் மரண  தண்டனை அதிகாரம் என்ற முரண்பாட்டில்  தான் அடங்கியுள்ளது.,  முன்  சொன்ன ஒத்தியில்பின்மை அல்லது நிச்சயமின்மை என்ற குறைபாடுகள், சட்ட மற்றும் நிர்வாக வழிமுறைகளில்(processes) அவற்றின் போக்கில் யாரும் விரும்பாமல், எதிர்பார்க்காமல் கூட விளையும் பின்விளைவுகள். இந்தப் பின்விளைவுகளைக் கையாளாமல், அடிப்படை முரண்பாட்டைக் கையாள்வது தான் முக்கியம். அதற்கு வேண்டிய ஒரே செயல்பாடு மரண தண்டனையை ஒழித்துக் கட்டுவது தான் என்பது வெள்ளிடை மலை.

மிகக் குறுகிய மூன்று மாதங்களுக்குள் இரு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பது ஜனநாயக, மனித உரிமைக் கண்ணோட்டத்தில்  ஜனநாயகத்திற்குப் பின்னடைவான செயல்பாடு. இதை நியாயப்படுத்துவதில் இந்திய ஜனநாயகம் வலுப்பெறும் என்பதை விட, மரணதண்டனையை ஒழித்துக் கட்டுவதில் தான்   வலுப்பெறும் என்பது தான் நிதர்சனமாயிருக்க முடியும். உலகிலேயே பெரிய இந்திய ஜனநாயக நாயகத்திற்கு தன்னை மட்டும் வலுப்படுத்தும் பொறுப்போடு மற்ற ஜனநாயகங்களையும் வலுப்படுத்தும் தலைமையும் (leadership)  மரணதண்டனையை ஒழித்துக் கட்டும் நாளில் காத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பகைமையைப் பகைமையால்

தீர்க்க முடியாது.

அன்பாலே தான் முடியும்.

இது மாற்ற முடியாத ஒரு விதி.

(தம்மபதம்(செய்யுள் 1.5))

(For hatred can never put an end to hatred;

Love alone can.

This is an unalterable law)

(The Dhammapada(verse1.5) English,translation of Eknath Easwaran(Penguin))

கு.அழகர்சாமி

Series Navigationஅய்யா ஜகனாநாதன் மறைந்தார் …உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013
author

கு.அழகர்சாமி

Similar Posts

9 Comments

  1. Avatar
    punaipeyaril says:

    பகைமையைப் பகைமையால் தீர்க்க முடியாது.–> வாஸ்தவம்… ஆனால், “திருந்தாத ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்…” என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே…

  2. Avatar
    paandiyan says:

    //தூக்கும் இரகசியமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. //
    அராபிய மாத்ரி பப்ளிக் place இல் தூக்கு போட வேண்டுமா என்ன? ஒரு அரசாங்கம் என்றால் சாதக பாதகம் பார்த்துதான் பண்ணவேண்டும். தூக்கு வேண்டுமா இல்லையா என்பதை தாலி அருந்தவர்கள், குழந்தையை பரிகொடுதவர்களிடம் கேளுங்கள்.. a/c ரூம் இல் இருந்து எழுதுபவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதாலாம் — பாதிக்கபட்டவன் ஊரான் தான நமக்கு என்ன வந்தது

  3. Avatar
    sathyanandhan says:

    ஒருவர் செய்த கொலை குரூரமானது, குற்றமானது, மனித நேயம் அற்றது என்றால் அதற்காக அவரை ஊரே சேர்ந்து கொல்வது மட்டும் நியாயமாகி விடாது.

    தூக்கில் போடும் வேட்கையில் அரசாங்கத்தை விட மனித நேயம் மரத்துப் போன சமூகம் கொலைவெறியில் அலைகிறது. இது மாற வேண்டும்.

    திரு அழகர்சாமி அவர்களின் கட்டுரை சரியான நேரத்தில் ஆணித்தரமான மனிதநேய கருத்துக்களை முன் வைக்கிறது. அவருக்கும் திண்ணைக்கும் நன்றி அன்பு சத்யானந்தன்

  4. Avatar
    poovannan says:

    தூக்கு தண்டனை ஆதரவு எனபது நரபலி ஆதரவு போல

    நரபலி கொடுத்தால் பல நன்மைகள் நடக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்ததற்கும் இப்போது மரண தண்டனை தந்தால் குற்றங்கள் அழிந்து விடும்,குறைந்து விடும் என்ற நம்பிக்கைக்கும் துளி கூட வித்தியாசம் கிடையாது
    நரபலி தருவதை பார்ப்பவர்கள்,கேட்டவர்கள் சாமி வந்து ஆடுவது போல இங்கு சிலர் மரண தண்டனைக்கு ஆதரவாக குதிப்பது வேதனையான ஒன்று.
    தன உறவினரை கடித்து உயிரிழக்க வைத்த பாம்பை,சிறுத்தையை பிடித்த பிறகு அதை வெட்டி கொன்றால் தான் மனம் ஆறும் என்று சொல்வதற்கும் ,பிடிபட்ட குற்றவாளியை கொல்வதற்கும் வித்தியாசம் எதுவும் கிடையாது

    வருடத்திற்கு பல ஆயிரம் பேர் நம் நாட்டில் வெறி நாய் கடியால் ஏற்படும் நோய்க்கு பலி ஆகிறார்கள்.அதை தடுக்க தெரு நாய்களை ஒழிப்பதை ,அப்படி செய்வது பாவம் என்று எதிர்க்கிறவர்களை கூட இப்படி யாரும் திட்டுவது கிடையாது,நக்கல் செய்வது கிடையாது.மாறாக மேனகா காந்திகளின் தாளங்களுக்கு தான் பெரும்பான்மை அரசுகள் ஆட்டம் போடுகின்றன.ஆனால் பிடிபட்ட குற்றவாளியை கொல்லாதே என்று கூறினால் கூறுபவனை வெட்ட வேண்டும்,தேச துரோஹி என்று கூறுவது சாடிசம் மன நோயின் கீழ் வருமா

    நான் மார்க்கெட்டிற்கு ,ரயில் நிலையத்திற்கு செல்லும் போது வழியில் குடித்து விட்டு வண்டி ஒட்டி ஒருவன் ஏற்றி இறந்து விட்டால்,அல்லது மெட்ரோ பாலத்தை கட்டும் பணியில் தவறான பொருட்களின்/தவறான அணுகுமுறையின் காரணமாக பாலம் சரிந்து அதனடியில் மாட்டி கொண்டால்,சிக்னலை மதிக்காமல் ஒரு வாகனம் ஏற்றி கொன்று விட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கோவம் வராதா,கொலைக்கு காரணமானவனை தூக்கில் போட வேண்டும் என்று சொல்ல உரிமை கிடையாதா
    அந்த உரிமை யாராவது அதே மார்கெட்டில் குண்டு வைத்தாலோ,இல்லை துப்பாகியால் சுட்டு கொல்லப்பட்டால் மட்டும் தான் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வருமா
    குறிப்பிட்ட வகையில் இறந்தால் மட்டும் தான் பாதிக்கப்பட்ட குடும்பம் நம் கண் முன் வருமா,உன் குடும்பம் பாதிக்கபட்டால் இப்படி பேச மாட்டாய் என்ற நக்கல் வருமா
    விபத்துகளில் நெருங்கிய உறவினர்களை இழக்காதவர்கள் இல்லாத குடும்பங்களே இருக்காது. அதனால் அதனை குறைக்க சாலை விபத்துக்கு காரணமாக இருப்பவர்களை தூக்கில் போட வேண்டும் என்று யாரும் குதிக்கவில்லையே .தீவிரவாதம் காரணமாக இறப்பவர்களை விட விபத்துக்கள் காரணமாக இறப்பவர்கள் ஆயிரம் மடங்கு .ஆனால் யாரும் குற்றங்கள் குறைய தூக்கில் போடுங்கள் என்று பொங்குவது இல்லையே .பாதிக்கப்பட்ட பல லட்சம் குடும்பங்கள் கண்ணுக்கு முன் வருவதில்லையே

    1. Avatar
      paandiyan says:

      நாக்கை புடுங்குவது போல கேட்டு இருகீன்ரீர்கள். நாயை பற்றி எழுதினால் ஒரு நாயும் மதிக்காது இதே பயங்கரவாதம் என்றால் publicity கிடைக்கும் . நாலு மேடை ஏறி வெட்டி பேச்சு பேசி ஓசியில் ஒக்காந்து சாபிடலாம் . அடுத்தவன் தாலி அறுந்தாலும் நமக்கு என்ன ஆதாயம் என்று பார்க்க வேண்டாமா !!

  5. Avatar
    paandiyan says:

    இன்னொரு குண்டுவெடிப்பும் காங்கிரஸ் கட்சியின் போலி மதசார்பின்மையும்…..நேற்று 12பேர்கள் செத்துவிட்டார்கள் . நல்ல பாம்பு வகையறா சேர்ந்த மனித உரிமை வியாபாரிகள் ,
    இப்பொழுது பாம்பு மாதரி தலையை உள்ள வைத்து கொலுவார்கள், குண்டுவைதவனுக்கு தூக்கு என்றவுடன் வெளியில் வந்து படம் எடுப்பார்கள்

  6. Avatar
    Mohamed says:

    gandiyai konra godse thanadhu kaiyil ismail endru pachai kuthikondu, gandiyai suttan, adhepol hinduthuva bayangaravadhigal kundu vathuvittu muslimgal meedhu palipodatheergal (Ex:Malekan gundu vedippu karanam pensamiyar pragyasing, hyderabad makkah masjid kundu vedippu sanparivar, innum velivaradha thahaval marakkapatta thagaval ethanaiyo?, Hinduthuva madha verikku appavi muslimgalthan paliyahirargal…..

  7. Avatar
    ரவீந்திரன் says:

    இது இன்னொரு வழக்கமான பொய்.
    கோட்ஸே தன் கையில் பச்சை குத்தியிருந்ததை நிரூபியுங்கள்.
    இதே வரிகளை எல்லா வஹாபிகளும் பேசுவது திட்டமிட்ட செயல் மாதிரி தோன்றுகிறது.

Leave a Reply to pachai thamilzan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *