இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கேரள அரசு சாதித்ததும், தமிழக அரசு சாதிக்காததும்

author
4
0 minutes, 6 seconds Read
This entry is part 1 of 4 in the series 5 ஜனவரி 2020


என். எஸ்.வெங்கட்ராமன்

கேரளாவில் இயற்கை எரிவாயு இறக்குமதி அமைப்பு

கேரளா மாநிலம், கொச்சியில்,சுமார் ரூபாய்.4000 கோடி முதலீட்டில், இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் (LNG terminal) அமைக்கப்பட்டது. 

தற்போது, இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிறது. இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவை தமிழ்நாடு,கர்நாடாகா மாநிலங்களுக்கு கொண்டு செல்லும், இயற்கை எரிவாயு குழாய் திட்டம் முழுவதும் அமல்படுத்தப்படாமலுள்ள நிலையில், இந்த இயற்கை எரிவாயு இறக்குமதி மையம்,திறனில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவே செயல்பட்டு வருகிறது. இதனால், இந்த நிறுவனத்திற்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுவருகின்றது. 

கேரளா, கர்நாடகா, தமிழ் நாடு எரிவாயு குழாய் திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசை சார்ந்த கெய்ல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், எரிவாயு குழாய் அமல்படுத்த, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் விவசாயிகள் அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் பலத்த எதிர்ப்பு போராட்டம் நடத்தியதால், கெய்ல் நிறுவனத்தால் எரிவாயு குழாய் திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை. இது வரை,கேரளா மாநிலத்தில் சுமார் 60 கிலோ மீட்டர் நீள அளவிலேயே அமல்படுத்தப்பட்டு, தற்போது உபயோகத்தில் உள்ளது. 

இந்த எரிவாயுவை கொண்டு, கேரளா,கர்நாடகா, தமிழ்நாட்டில் சுமார் ரூபாய் 20,000 கோடி அளவு முதலீட்டில் உரம், எரிவாயு, மின் உற்பத்தி நிலையம், ரசாயன தொழிற்சாலைகள் தொடங்கவுள்ள வாய்ப்பை இந்த மூன்று மாநிலங்களும் இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த திட்டங்களால், இந்த மூன்று மாநிலங்களிலும் பெருமளவு தொழில் வளர்ச்சி கூடும் வாய்ப்புள்ளது, ஏராளமான அளவில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ள போதிலும், இத்தகைய வாய்ப்புகள் இதுவரை நடைமுறையில் வரவில்லை.

கேரளா அரசின் சாதனை

இத்தகைய நிச்சயமற்ற நிலையில், கேரளாவின் முதல் மந்திரி, துணிச்சலுடன், 2018ம் ஆண்டு ஜனவரி மாதம், கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு செல்லும் எரிவாயு குழாய் திட்டம் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முடிவடைந்து உபயோகத்திற்கு வருமென்று அறிவித்தார். 
இருப்பினும், கேராளவில், 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தாலும், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் நில உரிமையாளர்களின்  எதிர்ப்பினால் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் திட்டம் நிறைவேறவில்லை. 

எனினும், கேரளா அரசின் விடாமுயற்சியாலும், சாதுர்யமான அனுகுமுறையாலும் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. இயற்கை எரிவாயு குழாய் பதிக்க கையகப்படுத்த நிலத்திற்கு நஷ்ட ஈடு அளிக்கப்பட்டு, குழாய் அமைப்பு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் பெறப்பட்டது.

இதனால் ஏற்பட்ட, சுமுகமான நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் வேகமாக அமல்படுத்தப்பட்டு 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடினமான பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு கண்டு ஆக்கபூர்வமான திட்டத்திற்கு வழி வகுக்க கேரள அரசு முன்னுதாரணமாக உள்ளது.

கேரளா – கர்நாடகா இயற்கை எரிவாயு குழாய் அமைப்பு முடிவடைந்த பின் இரு மாநிலங்களிலும் பல கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு ஏற்படுவதற்கு சாதகமாகும். வேலை வாய்ப்பு பெருகி, பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழிவகுக்கும்.

தமிழக அரசு சாதிக்காதது

சில விவசாய அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் எதிர்ப்பினால் கொச்சியிலிருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் சுமார் 310 கிலோ மீட்டம் நீளத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கைவிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கெயில் நிறுவனம், தமிழ் நாட்டில் குழாய் அமைக்கும் திட்டத்திற்கு ரூபாய் 685 கோடி செலவில் குழாய்களையும், மற்றும் தேவையான உபகரணங்களையும் வாங்கி, தமிழகத்தில் திட்டம் அமைக்க ஏற்பாடு செய்தது. திட்டத்திற்கு எதிர்ப்பினால் நடைமுறைபடுத்த முடியாத நிலையில் கெய்ல் நிறுவனம் தமிழ்நாட்டில் எரிவாயு குழாய் திட்டம் அமைப்பதை கைவிட்டு விட்டதாக அறிவித்தது. இதனை குறித்து தமிழக அரசோ அல்லது தமிழ்நாடு அரசியல் கட்சிகளோ கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகின்றது. 

தமிழ் நாட்டில் திட்டத்தை எதிர்த்த விவசாய அமைப்புகள் தாங்கள் இந்த குழாய் திட்டத்தினால் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய நன்மைகளை அறிந்துள்ளதாகவும், விவசாயிகளின் நிலம் கையகப்படுத்துவதற்கு தகுந்த அளவில் நஷ்ட ஈடு அறிவிக்கப்படவில்லை என்பதும்,தங்களது எதிர்கால வாழ்வாதாரங்கள் பாதிக்காமலிருக்கவுள்ள திட்டங்கள் தெரிவிக்கப்படாததும் தான் தங்களது எதிர்ப்பிற்கு காரணம் என்று கூறுகின்றன.  
இந்த நிலையில், தமிழக அரசு பாராமுகத்துடன் நடந்து கொண்டதா என்று சந்தேகப்படும் வகையில், தமிழக அரசு இந்த திட்டத்தை பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை சரிவர நடத்தி தீர்வு காணவில்லையோ என்று தோன்றுகிறது.

தமிழ் நாட்டில் கொச்சி  இயற்கை எரிவாயு இறக்குமதி மையத்திலிருந்து இயற்கை எரிவாயுகை கொண்டு வருவது தமிழ் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இந்த நிலையில்  கேரளா அரசின் அனுகுமுறையை நினைவில் கொண்டு, கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு தகுந்த அளவில் நஷ்ட ஈடு கொடுத்து கெய்ல் நிறுவனம் தமிழ்நாட்டில் எரிவாயு குழாயை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்போவது தமிழக அரசு அல்ல. மத்திய அரசை சார்ந்த கெய்ல் நிறுவனம் தான். இந்த ஆக்கப்பூர்வமான திட்டத்திற்கு மத்திய அரசின் உதவியும், ஒத்துழைப்பும்  கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 

தமிழகத்தின் தொழில் முன்னேற்றத்தின் அவசியத்தை மனதில் கொண்டு துணிவுடன் தமிழக அரசு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

எண்ணூர் எரிவாயு இறக்குமதி மைய அமைப்பின் நிலை என்ன? 

தமிழகத்தில் எண்ணூரில் 5 மில்லியன் டன் அளவில் 5000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து மத்திய அரசின் நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் அமைத்துள்ளது. செயற்பட தொடங்கியுள்ளது. 

இந்த மையத்தினால், தமிழ் நாட்டிற்கு முழு அளவில் பயன் கிடைக்க வேண்டுமென்றால், தமிழ் நாட்டின் பல இடங்களுக்கு  எரிவாயு குழாய் அமைத்து, எரிவாயுவை கொண்டு செல்ல வழி வகுப்பது மிகவும் அவசியம். எரிவாயுவை கொண்டு மின்சார உற்பத்தி நிலையம், உரத்தொழிற்சாலை, ரசாயன தொழிற்சாலைகள் அமைப்பது மட்டுமல்லாமல் வீட்டு உபயோகத்திற்கு எரி பொருள் கொடுப்பதும் சாத்தியமாகும். 

தற்போது எண்ணூரிலிருந்து சுமார் 1170 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 2800 கோடி முதலீட்டில், தமிழகத்தில் பல இடங்களுக்கு இயற்கை எரிவாயுவை கொண்டு செல்ல குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொச்சியிலிருந்து, தமிழகத்திற்கு சுமார் 310 கிலோ மீட்டர் நீளத்திற்கு எரிவாயு குழாய் அமைப்பதில் ஏற்பட்டுள்ள  சிக்கலை காணும் போது, எண்ணூரிலிருந்து 1170 கிலோ மீட்டர் நீளத்திற்கு தமிழகத்தில் எரிவாயு குழாய் அமைத்து எரிவாயுவை கொண்டு செல்ல முடியுமா என்று ஐயம் கொள்வது இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாதது.

தமிழக அரசு எண்ணூர் இயற்கை எரிவாயு இறக்குமதி மையத்திலிருந்து எரிவாயுவை கொண்டு செல்ல குழாய் அமைப்பதற்கான திட்டத்தை, மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் ஆலோசனை செய்து, தகுந்த முறையில் செயலாற்ற வேண்டியது இன்றியமையாதது. 

நன்றி

என். எஸ்.வெங்கட்ராமன்

Series Navigationஅருளிச்செயல்களில் மச்சாவதாரம்
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    Yogarajan says:

    இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கேரளாவிலிருந்து தமிழ்நாடு வழியாக கர்நாடகம் செல்லும்போது தமிழ்நாட்டில் ஏராளமான இரசாயன மற்றும் உர தொழிற்சாலை உருவாகும் என்றும் எராளமான வேலைவாய்புகள் உருவாகும் என்றும் கதை விடுகிறீர்கள் இதனால் எத்தனை தமிழக விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழப்பார்கள் என்றோ வேலைவாய்பில் பெரும்பான்மை ஹிந்தி பேசும் மக்குளுக்கே செல்லும் என்பதையோ தமிழக மக்களுக்கு வேலைவாய்பில் பெரிதாக ஒன்றும் கிடைக்காது என்பதையும் மறைத்து விட்டீர்கள், இத்தகைய திட்டங்கலின் மூலம் குடியேறும் வட இந்தியர்கள் குடும்பங்கள் நிரந்தமாக இங்கு தங்குவதன் மூலம் ஹிந்தி பேசும் மக்களின் மக்கள்தொகை அதிகரித்து நாளடைவில் தமிழர்கள் சொந்தமண்ணிலேயே அகதியாவார்கள் என்பதையும் மறைத்துவிட்டீர்கள், தமிழர்கள் நாங்கள் விழித்து கொண்டுவிட்டோம்! இனி எங்கள் மண்ணையும் மக்களையும் பாதிக்கும் எந்த திட்டமும் எங்களுக்கு வேண்டாம். நன்றி

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    இயல்வழி எரிவாயு தமிழ்நாட்டு தொழில்வளத்துக்குத் தேவை இல்லை என்று வேலை செய்து வீட்டில் சோறு சமைக்கும் ஆடவரோ, பெண்டிரோ சொல்ல மாட்டார். இதனால் பேரளவு எந்த நிலமும் பறிபோகாது. பிற மாநிலத்தி லிருந்து, ஆற்று நீரோ, மின்சாரமோ, இரயில் போக்குவரத்தோ, வர்த்தக வீதிகளோ இல்லாமல், தற்கால, எதிர்காலத் தமிழ்நாடு தனியே பிழைக்க முடியாது. இந்தியர் இணைந்து வாழ ஒவ்வோர் மாநிலத் தாரும் சிறிது விட்டுக் கொடுத்து, எரிவாயு பயன் பாடுக்கு நில இழப்புகளைத் தமிழர் சகித்துக் கொள்ள வேண்டும்.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      Yogarajan says:

      ஜெயபாரதன் அய்யாவுக்கு வணக்கம்,
      தமிழர்கள் சகித்துக்கொண்டு வந்தோரையெல்லாம் வாழவைத்து பார்த்து மகிழ்ந்ததால் தான் இலங்கையில் இன்று சிறுபான்மையாகி சொந்தமண்ணிலேயே அகதியாகிய வரலாறு தங்களுக்கு தெரியாததல்ல இந்த நிலை தமிழகத்திற்கும் வரவேண்டுமா?
      மேலும் தாங்கள் எழுதிய “பல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தருக்கு ஏற்படும் பேரிடர்கள், பெருஞ் செலவுகள்” என்ற கட்டுரைக்கு தங்களின் கருத்து முரண்பாடாக தெரியவில்லையா?

  3. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் யோகராஜன்,

    தினமும் கோடிக் கணக்கான கார்கள், சுமார் 25,000 ஆகாய விமானங்கள் பெட்ரோல் வாயு இல்லாமல் ஓடவோ, பறக்கவோ முடியாது. இந்த வாகனங்கள் இயங்க பசுமை எரிவாயு இப்போது இல்லை.

    வீட்டில் சோறு பொங்க பல நகரங்களில் இயல் எரிவாயு சிலிண்டர்கள் இல்லாவிட்டால் பலர் பரிதவிப்பர்.

    இவை ஒருபுறம்.

    “பல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தருக்கு ஏற்படும் பேரிடர்கள், பெருஞ் செலவுகள்” இவை மறுபுறம்.

    வாழ்க்கையே முரணாக இருப்பதைக் காட்டுவதும் எழுத்தாளர் கடமையே.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply to Yogarajan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *