இறுதிப் படியிலிருந்து – சார்வாகன்

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 21 in the series 8 ஆகஸ்ட் 2021

 

                                                                         ப.ஜீவகாருண்யன்

குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு அசுவமேத யாகம் முடித்து பாண்டவர்களின் நலனில் எப்போதும் மாறாத அக்கறை கொண்ட கிருஷ்ணனும் அவனது நண்பன் சாத்யகியும் முக்கியமானவர்களாக முன் நிற்க, முதிர்ந்த கிருஷ்ண துவைபாயனரின் –வியாசரின்- ஆலோசனையின் வழியில் பிராமணர்கள் தெளமியரும் உலூகரும் தலைமையேற்க, சடங்கு சம்பிரதாயங்களில் எந்தக் குறையுமில்லாமல் பேரரசராக முடிசூட்டப் பெற்ற யுதிஷ்டிரனின் இடமும் வலமுமாக இருக்கை கொண்ட திரெளபதி, பீமன் இருவரும் முறையே பட்டத்தரசியாக, இளவரசராக கெளரவம் பெற பட்டாபிஷேக விழா இனிதே முடிந்தது.

அடுத்ததாக நடை பெற இருக்கும் மஹா தான விழாவுக்காக மேடையை அலங்கரித்திருந்த யுதிஷ்டிரரின் இரு புறத்திலும் அரை ஆள் உயரத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்ட இரண்டு தாமிர அண்டாக்களில் உரு சிறுத்த முழு நிலாக்கள் போல் மஞ்சள் மேவியொளிர்ந்த பொற்காசுகள் கோபுரங்களாகியிருந்தன. தானம் பெற இரு வரிசைகளாகியிருந்த பிராமணர்கள், பொது ஜனங்களிடையே தங்க நாணயம் பெறும் ஆவலில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பொது ஜனங்களின் வரிசையினும்       பிராமணர்கள் வரிசை அதிகம் அல்லோலப் பட்டது.

திடீரென்று கூட்டத்திலிருந்து வித்தியாசமானதொரு கூச்சல் உயர்ந்தது. ‘அய்யோ! சார்வாகன்! அரண்மனைக்குள்ளே சார்வாகன்!’ என்னவோ ஏதோவென்று பதறியவர்களாக எல்லோரும் குரல் வந்த திசையில் கூர்மையுடன் பார்வையை ஓட்டினார்கள். தூரத்துப் பார்வையில் பார்க்கும் கண்களுக்குப் பீதியூட்டுவதாக வித்தியாசமான மெலிந்த உருவம் ஒன்று காற்றில் மிதக்கும் சிறு சருகென யாக சாலை நோக்கி வருவது மங்கிய நிழல் ஒளி போலத் தெரிந்தது.

‘அடடா! யார் இந்த சார்வாகனை உள்ளே விட்டது? எப்படி வந்தான் இவன், அரண்மனைக்குள்?’ என்று பதறிய தலைமைப் புரோகிதர் தெளமியரை வியாசர் அமைதிப் படுத்தினார். ‘பட்டாபிஷேகத்தையடுத்த மஹா தான நேரத்தில் அரசனிடம் தானம் பெற யாரும் வரலாம். யாருக்கும் யாரும் கட்டுப்பாடு விதிக்க முடியாது; விதிக்கக் கூடாது. தானம் பெற வந்தவன் வெளியேறும் வரை அமைதி காப்பது நல்லது!’ என்றார்.

சார்வாகன் தனது தோற்றத்திலேயே அனைவரையும் அச்சுறுத்துபவனாக இருந்தான்.

கரடி போன்று மயிரடர்ந்திருந்த ஒற்றை நாடி திரேகம் முழுவதும் நீக்கமற சாம்பலைப் பூசியிருந்தவனுக்குப் பெருச்சாளித் தோலால் ஆன சிறிய கோவணம் மட்டுமே ஆடையாகியிருந்தது. கன்னப்பரப்பை முழுதாக ஆக்ரமித்துக் கறுத்தடர்ந்திருந்த தாடிப் புதருக்கு மேலாக சிக்கேறிக் கிடந்த தலைக் கேசம் வானோக்கிக் கூர் கொண்டையாகக் கட்டப் பட்டிருந்தது. இரத்தக் கோளங்களாகச் சிவந்திருந்த உருண்டைக் கண்களில் ஞான தீட்சண்யம் மிகுந்துத் தெறித்தது. கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் கண்டபடி திரிந்தலைந்ததற்குச் சான்றாகக் கரடு தட்டி வெடிப்புற்றிருந்த அவனது நீண்ட பாதங்களில், நேரற்ற கணுக்கால்களில் சிறிதும் பெரிதுமாகக் குழிப் புண்கள் நிறைந்திருந்தன. நரம்புகள் புடைக்க முறுக்கேறி விறைத்திருந்த கரங்களில் விரல்கள் காய்ப்பேறிக் கரகரத்திருந்தன. கால்களிலும் கைகளிலும் நகங்கள் யாவும் ரத்தச் சீர்மையற்று வெளிறியிருந்தன. சீரற்ற மீசைச் சங்கிலியின் கீழே தடித்திருந்த உதடுகளின் ஆதிக்கத்தில் அடங்க மறுத்து முன் துருத்தி நின்ற நீண்ட பற்களில் மஞ்சள் பாசி அடர்ந்துப் படர்ந்திருந்தது.

‘அய்யோ! என்ன மனிதன் இவன்? என்ன காரணத்திற்காக வாழ வேண்டிய வாலிப வயதில் இந்த இளையவன் இப்படியொரு அலங்கோலத்தை மேற்கொண்டான்?’ என்பதே சார்வாகன் குறித்து பொது ஜனங்களின் பார்வை வெளிப்பாடாகத் தெரிந்தது.

ஆளுயர நாவல் மரக் கிளையாலான தடித்த தண்டத்தை வலது கையில் உயர்த்திப் பிடித்து இடது கையில் மண்டையோடு ஒன்றைப் பிச்சைப் பாத்திரமாக நிலை நிறுத்தியிருந்த சார்வாகன், திடீரென்று தண்டத்தைத் தலைக்கு மேலாக உயர்த்தினான். சிதறியும் சேர்ந்தும் பட்டாபிஷேக விழாவில் நிறைந்துத் தெரிந்த பிராமணர்களனைவரையும் தன்னை நோக்கி ஒருமுகப் படுத்துபவனாக உரக்கக் கூவினான்.

‘பேரரசன் யுதிஷ்டிரனிடம் பிச்சை பெற மந்தையெனத் திரண்டிருக்கும் பிசுக்குப் பிராமணர்களே! மஹா குரு மிரகஸ்பதியின் முதன்மைச் சீடர் சார்வாக மகரிஷியின் வழி வந்த, அஜித கேச கம்பளனால் ஆசீர்வதிக்கப் பட்ட இந்த இளைய சார்வாகன் இன்று உங்கள் முன்னால் சில கேள்விகளை வைக்கிறேன். யாருக்காக இன்று நீங்கள் இந்த யாகங்களைச் செய்கிறீர்கள்? ‘யாகம்’ என்னும் பெயரில் அளவில்லாத அளவில் அநியாயமாக விலங்குகளை ஏன் பலியிடுகிறீர்கள்? யாக குண்ட அக்னியில் யாருக்காகக் குடம் குடமாக நெய்யைக் கொட்டுகிறீர்கள்? பற்றியுயரும் அக்னியில் யாருக்காகப் பட்டாடைகளை எரிக்கிறீர்கள்? இந்த ‘அவிஸ்’ சொரிதல் ஆர்ப்பாட்டம் யாருக்காக? இந்திரனுக்காகவா? எங்கே இருக்கிறான் – எந்த வடிவத்திலிருக்கிறான் உங்கள் இந்திரன்? அடர்ந்துயரும் அக்னிக்குள்ளா? அக்னிக்குள் யாராவது அடங்கி உயிர்க்க முடியுமா? இந்திரன் அக்னிக்குள் இருக்கிறானென்றால் அவனால் நீங்கள் சொரியும் நெய்யை ருசிக்க முடியுமா? அக்னியில் நீங்கள் எரிக்கின்ற அழகிய பட்டாடைகளை அவனால் அணிந்து கொள்ள முடியுமா? யாகப் பலி விலங்குகளின் இறைச்சியை எச்சிலொழுக நீங்கள் ருசித்து உண்பது போல் அவனால் உண்ண முடியுமா? அல்லது உங்களது அபத்தப் பொய்ச் சிருஷ்டிகள் பிரம்மா, சிவன், விஷ்ணு இவர்களால்தான் முடியுமா? சொல்லுங்கள்! என் கேள்விகளுக்கு என்ன பதில்?’

வானோக்கி உயர்ந்த தண்டத்தை வலிந்துத் தரையில் ஊன்றிய சார்வாகன்  ‘தனது வரைமுறையான கேள்விகளுக்குத் தக்க பதில் யார் தருவார்கள்?’ என்பது போல் பட்டாபிஷேக விழாவில் நிறைந்துத் தெரிந்த பல வயதுப் பிராமணர்களை, பொது ஜனங்களை பொலிவுப் புன்னகையுடன் நோக்கினான். யாக குண்டங்களினருகே தெளமியரும் உலூகரும் கலிங்கத்துப் பட்டு வஸ்திரங்கள் கண்கவர்ந்துப் பளபளக்க ஊமைகள் போல உடலொடுங்கிக் கிடந்தார்கள். திரண்டிருந்த பிராமணர்களும் பொது ஜனங்களும், ‘என்ன இந்தச் சார்வாகன் அரசரிடம் தானம் பெறுகின்ற நேரத்தில் பிராமணர்களைத் தகாத வார்த்தைகளால் மிரட்டுகின்றானே! ஒரு வேளை தானம் கிடைக்காமல் செய்து விடுவானோ?’ என்பது போல் அங்கலாய்த்து விழித்தனர். வரிசை மீறிய பிராமணர்களின் கூட்டத்திலிருந்து யாரோ ஒருவன் உரக்கக் கத்தினான்.

‘சுடுகாட்டிலிருந்து பிணங்களின் வாய்க்கரிசியைப் பொங்கிச் சாப்பிடும் சொறி நாயின் கேள்விக்கெல்லாம் பிராமணர்கள் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.’

அனைவரையும் ஒருங்கே அச்சுறுத்துவதாக சார்வாகனிடமிருந்து ஆங்காரமானதோர் கேலிச் சிரிப்பு உயர்ந்தது.

‘கவனியுங்கள்! பெரியோர்களே! கவனியுங்கள்! ‘சுடுகாட்டிலுறையும் சொறி நாயின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை’ என்று வேதங்களில் ஆழ்ந்ததாகக் கூறும் இந்தப் பிராமணனைக் கவனியுங்கள். உந்தி விருத்திக்காக – உயிர்ப் பிழைப்புக்காக நான்கு வேதங்களை, ஆறு சாஸ்திரங்களை, மீமாம்சங்களை, உபநிஷதங்களை உபதேசித்துச் சொர்க்கத்திற்கு வழிகாட்டுவதாகச் சொல்லும் இந்த மூடர்களால் சொர்க்கத்திற்கு வழிகாட்ட முடியுமா? இருப்பதற்குத்தானே யாராலும் வழிகாட்ட முடியும்? சொர்க்கம், நரகம் இரண்டுமே இல்லையெனும் நிச்சயத்தில் இல்லாத சொர்க்கத்திற்கு எத்தர்கள் இவர்களால் எப்படி வழிகாட்ட முடியும்? ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்ட இந்தச் சுரண்டல் எலிகள் உடல் வருத்தி உழைக்கும் ஏழை எளிய தஸ்யுக்கள், சூத்திரர்கள் உங்களின் உழைப்பு ரத்தத்தை உறிஞ்சிக் கொழுப்பவர்கள்! ஏய்ப்பவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்!’

‘கொல்லுங்கள்! பிராமணர்களை, வேதங்களை இழித்துப் பேசும் இந்தப் பித்தன் சார்வாகனைக் கொல்லுங்கள்!

உயர்ந்தோங்கிய ஒரு முரட்டுக் குரலுக்கு ஆட்பட்ட பிராமணர்கள் அனைவரும் வரிசை குலைந்து சார்வாகனை நோக்கித் தாவினார்கள். முக்கியஸ்தர்களுக்காக யுதிஷ்டிரனின் வலது புறம் ஆசனங்களில் வரிசையிட்டிருந்த திருதராஷ்டிரன், கிருஷ்ணன், சாத்யகி மூவருக்கும் முன்னால் யோசனையில் ஆழ்ந்திருந்த கிருஷ்ண துவைபாயனர் பதறியடித்து எழுந்தார்.

‘பிராமணர்களே! தயவு செய்து எல்லோரும் அமைதி கொள்ளுங்கள்! நடக்க இருப்பது மகத்துவம் மிகுந்த மஹா தான விழா! அரண்மனைக்குள் வருவதற்கு முன்பே நகரம் முழுவதும் வீதிகள் தோறும் இந்த சார்வாக மகரிஷி மக்களிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டிருக்கிறார். இப்போது நம்மிடமும் கேள்விகளை முன் வைத்திருக்கிறார், ஞானமெனும் பெருங்கடலில் தங்களின் நம்பிக்கை நீருடன் கலக்கும் பல நதிகளில் ஒரு நதி இந்த சார்வாக மகரிஷி! கோபத்தைத் தள்ளுங்கள்! சார்வாகரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல விருப்பமிருந்தால் சொல்லுங்கள்! இல்லையேல் வரிசையில் நில்லுங்கள்! அரசன் வழங்கும் தானத்தை அமைதியுடன் பெற்றுக் கொள்ளுங்கள்!’

தீட்சண்யம் நிறைந்த கிருஷ்ண துவைபாயனரின் வார்த்தைகளுக்கு மறுப்பெதுவும் சொல்ல முடியாத சங்கடத்துடன் சக்கரம் போலச் சார்வாகனைச் சுற்றிச் சூழ்ந்திருந்த பிராமணர்கள் மென்மை முணுமுணுப்புகளுடன் மீண்டும் யுதிஷ்டிரரின் எதிரே வரிசையிட்டு நின்றனர்.    ‘ ‘அரசராக பட்டமேற்பவர் தன்னை அண்டி வந்து தானம் கேட்பவர்களுக்குத் தமது விருப்பம் போல தானம் வழங்கலாம்.’ என்னும் முறையில் இன்று அரசரிடமிருந்து அதிகம் பொற்காசுகளைப் பெறப்போகும் பாக்கியசாலி ஒரு வேளை இந்த சார்வாகனோ?’ என்னும் எதிர்பார்ப்பு எல்லோரிடையேயும் ஓங்கியிருந்தது.

எதிர் எதிர் திசைகளில் வரிசையிட்டுத் தன்னை நெருங்கியவர்களில் பிராமணர்களுக்கு இரட்டைக் காசுகளையும் பொது ஜனங்களுக்கு ஒற்றைக் காசையும் அளவிட்டுக் கொடுத்து வந்த யுதிஷ்டிரர், பொது ஜனங்களின் வரிசையில் முன்னேறி, இடது உள்ளங்கையில் மண்டையோட்டை இருத்தித் தன் முன் நீட்டும் சார்வாகனின் அடாத காரியத்தில் உடல் நடுங்கி ஸ்தம்பித்தார்.

‘அடேய்! மூடனே! மஹா சக்கரவர்த்தியிடமிருந்து இடது கையால் அதுவும் மண்டையோட்டிலா பிச்சை வாங்குவது?’ என்று பிராமண வரிசையிலிருந்து சார்வாகனின் மரியாதையற்ற செயலுக்கு ஒரு இளைய பிராமணன் எதிர்ப்பு தெரிவித்தான்.

அப்போது, ‘சார்வாகா! அரசர் தானம் செய்வதைத் தடை செய்யும் வகையில் ஏனடா இங்கே சச்சரவு ஏற்படுத்துகிறாய்? விலகு! தானம் பெறுபவர்களுக்கு வழி விடு!’ என்ற பொறுமை மீறிய கிருஷ்ணனின் குரல் சார்வாகனை உலுக்கி உசுப்பிற்று! கூடவே, ‘அடேய்! துவாரகை கிருஷ்ணன் சொல்வது உனது காதுகளில் விழவில்லையா?’ என்றொரு பிராமணக்குரல் கிருஷ்ணனுக்கு வக்காலத்து வாங்கிற்று.

சிறிது நேரம் கிருஷ்ணனை கூர்ந்து நோக்கிய சார்வாகன் அவனை வார்த்தைகளால் வளைத்தான்.

‘அடடே! யார் துவாரகை கிருஷ்ணனா? இப்போது உயர்ந்து ஒலித்த உனது குரல் யாருக்கு ஆதரவாக? கூடியிருக்கும் பிராமணர்களுக்காகவா? பொது ஜனங்களுக்காகவா? வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் நன்கு அறிந்தவர்களாக, உயர்ந்தவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் சில பிராமணர்கள் பிழைப்புக் குறிக்கோளில் ஏற்படுத்திய சூழ்ச்சியின் வசப்பட்டு யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்தில் தலைமைத் தகுதியுடன் இருபத்தெட்டு பிராமணர்களின் கால்களை ஒடி ஓடிக் கழுவிய கிருஷ்ணன் உன்னிடமிருந்து பிராமணர்களுக்காக ஆதரவுக் குரல் உயர்வதில் அதிசயப் படுவதற்கு ஒன்றுமில்லை.

‘பிராமணர்கள் மீது கொண்ட பக்தியின் காரணத்தில் அவர்களுக்காகப் பரிந்து பேசும் கிருஷ்ணன் உன்னால் கூடியிருக்கும் இந்தப் பிராமணக் கூட்டத்தில் – என்னிலும் உன்னிலும் உயர்ந்தவன் – என்று யாராவது ஒருவனை அடையாளம் காட்ட முடியுமா? உயர்ந்தவன் என்றால் எந்த வகையில் உயர்ந்தவன் என்று விளக்க முடியுமா?’

சார்வாகனின் சிக்கலான கேள்வியிலிருந்து கிருஷ்ணனை மீட்டெடுக்கும் வகையில் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த கூட்டத்தை நெறிப்படுத்துவதாக சகாதேவனின் குரல் உயர்ந்தது.

‘பெரியோர்களே! மகத்துவம் மிகுந்த இந்த மஹா தான விழாவில் கேள்விகள் பதில்களுக்கு இடமில்லை. விழா நிறைவுற்று முடிய நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆகவே, தானம் பெற விரும்புபவர்கள்                              அரசரை நோக்கி முன்னேறுங்கள்!’

ஒற்றை, இரட்டைப் பொற்காசுகளைப் பெற்று விடும் இலக்குடன் இருதரப்பு வரிசை யுதிஷ்டிரரை நோக்கி மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தது. சார்வாகன், யுதிஷ்டிரரை நெருங்கிய க்ஷணத்தில் அங்கே கூடியிருந்த அனைவரின் கண்களும் மாறுபாடில்லாமல் சார்வாகனை கூர்மையுற்று நோக்கின. ‘தானம் பெறும் சார்வாகன் இனிமேல் அமைதியாகத் தன் போக்கில் வெளியேறுவான்!’ என்றுதான் எல்லோரும் எண்ணங் கொண்டிருந்தார்கள். ஆனால், அங்கே நினைவு வேறு நிகழ்வு வேறு ஆகிவிட்டது.

சார்வாகன், யுதிஷ்டிரருக்கு அப்படியொரு அவமானத்தை ஏற்படுத்துவான் என்று யாரும் எதிர் பார்த்திருக்க முடியாது. ‘அடுத்துத் தானம் பெறுபவர் யார்?’ என்பதை அறியும் வகையில் யுதிஷ்டிரரை நோக்கிப் பார்வையை நிலை நிறுத்தியிருந்த அனைவரும் அதிர்ந்து போகும் வகையில், ‘துறவிக்கு வேந்தனும் துரும்பு!’ என்பதை சார்வாகன் அங்கே நடை முறையாக்கினான். யுதிஷ்டிரரின் கையிலிருந்துத் தனது மண்டையோட்டுக் கப்பரையில் கலகலத்து விழுந்த பொற்காசுகளைச் சார்வாகன் ஆற முகர்ந்து, ‘அத்தனைப் பொற்காசுகளிலும் அழியாமல் உதிர வாடை!’ என்று கீழே கொட்டிய அந்தக் கணத்தில், ‘பாவி, கீழே ஏனடா கொட்டினாய் பொற்காசுகளை?’ என்று அம்பறாத்தூணியில் கை வைத்த அர்ச்சுனனை கிருஷ்ண துவைபாயனர் அவசரம் அவசரமாகக் குறுக்கிட்டார்.

‘அர்ச்சுனா, அவர் மகரிஷி! ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு! கோபத்தை அடக்கு!’ மூத்தவரின் சொல்லில் முகம் சுளித்து அமைதி காத்த அர்ச்சுனன், ‘என்ன செய்யலாம் கிருஷ்ணா?’ என்பது போல் அருகிலிருந்த கிருஷ்ணனை குறு குறுத்துப் பார்த்தான். கிருஷ்ணன் திகைத்துப் போய்த் தெரிந்தான்.

இரண்டாவது முறை தன்னை நோக்கி நீண்ட சார்வாகனின் மண்டையோட்டில், ‘பொற்காசுகளைப் போடலாமா? வேண்டாமா?’ என்னும் குழப்பத்துடன் யோசித்த யுதிஷ்டிரரை, ‘யுதிஷ்டிரா, யோசிக்காதே! கையிலெடுத்த காசுகளை மகரிஷியின் மண்டையோட்டில் போடு!’ என்று கிருஷ்ண துவைபாயனர் துரிதப்படுத்தினார். யுதிஷ்டிரர் பொற்காசுகளை சார்வாகனின் மண்டையோட்டிலிட்டார்.

‘யுதிஷ்டிரா! ஏன் உதிர வாடை வீசாத பொற்காசுகளே உனது கஜானாவில் இல்லையா?’ என்னும் ஏளனத்துடன் இரண்டாவது முறையும் வாங்கிய காசுகளைத் தரையில் கொட்டிய சார்வாகனின் செயலில் சபை, ‘ஆ! அய்யோ!’ என்று அதிர்ந்து மிரண்டது.

கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு ஏதோ சைகை செய்தான். அர்ச்சுனன் கூவினான். ‘கொல்லுங்கள்! மரியாதையற்ற இந்த சார்வாகனை இனிமேலும் மன்னிக்க முடியாது! கொடியவனைக் கொல்லுங்கள்! கொல்லுங்கள்!’ ‘எப்பொழுது இப்படி ஒரு ஆணை கிடைக்கும்?’ என எதிர்பார்த்துக் காத்திருந்த பிராமணக் கூட்டம் கொந்தளித்தது. ‘இந்தக் கொடூர சார்வாகன் நாஸ்தீக அரக்கன்! துரியோதனனின் நண்பனான இவன் யுதிஷ்டிரரின் நல்லாட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த இங்கே புறப்பட்டு வந்திருக்கிறான். நேரிய வேதங்களுக்கு, நிகரில்லாச் சாஸ்திரங்களுக்கு நேர் எதிரியான இந்த சார்வாகன் கொல்லப்பட வேண்டியவன். ஆமாம், இவன் கொல்லப்பட வேண்டியவன்!’

‘அய்யோ! நிறுத்துங்கள்! அநியாயம் செய்யாதீர்கள்!’ என்றுயர்ந்த கிருஷ்ண துவைபாயனரின் கூக்குரலைப் புறந்தள்ளிப் பல நாட்கள் பசித்திருந்த காட்டு மிருகங்கள் போல் வயது பேதமில்லாமல் அனைத்துப் பிராமணர்களும் சார்வாகன் மேல் ஒன்றாகப் பாய்ந்தார்கள். அழகுற அமைத்திருந்த கல்தளத்தின் வழியே செத்த நாயை இழுத்துச் செல்வதைப் போல் அவனை அவர்கள் மரங்கள் மண்டியிருந்த தரை வெளிக்கு இழுத்துச் சென்றார்கள்.

‘ஒழிந்தான் பிராமணர்களின் பெரும் எதிரி! கொண்டு வாருங்கள் நெய்க் குடத்தை! கொண்டு வாருங்கள்!’ என்று யாரோ ஒரு பிராமணனின் குரல் உரத்துக் கேட்டது. பிரதான யாகக் குண்டத்தினருகிலிருந்த இரண்டு நெய்க்குடங்களை இளைய பிராமணர்கள் இருவர் தலைக்கு மேல் உயர்த்திச் செல்வதை எல்லோரும் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப் பட்டவர்கள் போல வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நின்றுயர்ந்த நெய்த் தழலில் சார்வாகன் நிணம் உருக எரிந்துழலும் நம்பவியலாத காட்சி பிராமணர்களல்லாத மற்றவர்களை ஒருங்கே அதிர்ந்துறைய வைத்தது. ‘படக்கூடாத சிரமங்களெல்லாம் பட்டு, பதினெட்டு நாட்கள் நீண்ட பெரும் போரை முடித்துப் பட்டாபிஷேகம் கொண்ட சபையில் நடக்கக் கூடாதது நடந்து விட்டதே!’ என்று யுதிஷ்டிரர் அளவில்லா வேதனையுற்றார். பீமன் கண்கலங்கிப் போயிருந்தான். அர்ச்சுனனும் சார்வாகனின் மரணத்திற்காக நெஞ்சுருக வேதனைப் பட்டான்.

அவன் கிருஷ்ணனிடம் சொன்னான்.

‘கிருஷ்ணா, உனது குறிப்பின்படி சார்வாகனை அரண்மனையை விட்டு அப்புறப்படுத்துங்கள்!’ என்று சொல்லத்தான் வாயெடுத்தேன். கோபத்தில் வாய் தவறி விட்டது. ‘கொல்லுங்கள்!’ என்ற எனது வார்த்தையைக் கட்டளை போல ஏற்றுக் கொண்ட பாழும் பிராமணர்கள், ‘நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!’ என்றுயர்ந்த கிருஷ்ண துவைபாயனரின் கூச்சலுக்குச் செவிடர்களாகி விட்டார்கள். ஆக, சார்வாகனுக்கு எதிரான பிராமண வன்மம் வென்று விட்டது!’

‘ஆமாம், அர்ச்சுனா! நீ சொல்வது உண்மை. சார்வாகன் விஷயத்தில்  பிராமண வன்மம் வென்று விட்டது! சார்வாகனின் சாவில் நானும் பங்கு பெற்ற பாவியாகி விட்டேன்!’ என்ற கிருஷ்ணன், சார்வாகன் எரியூட்டப்பட்ட இடம் நோக்கிக் கண்களையோட்டினான். சார்வாகனின் மிச்ச சொச்சத்தை, பிராமணர்கள் மேலும் மேலுமாக குவளை வழியே ஊற்றிய நெய் குறையில்லாமல் எரித்துக் கொண்டிருந்தது.

தூரத்தில் சார்வாகன் தரையில் ஊன்றிய நாவற் கிளையாலான தண்டம் ‘யாராவது என்னுடன் வாதிட வருகிறீர்களா?’ என்பது போல் விறைத்து நின்றிருந்தது.

                                       *** 

       

  

           .                              

Series Navigationபயங்கரவாதி – மொழிபெயர்ப்புக் கவிதைசொல்வனம் இணையப் பத்திரிகையின் 252 ஆம் இதழ்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    jananesan says:

    அருமை. சார்வாகனைப் பற்றிய விவரிப்பும், வருணிப்பும் எடுத்துரைப்பும் அருமை. வாழ்த்துகள் ஜீவகாருண்யன். ஏனோ மகாத்மா காந்தியின் படுகொலை நினைவுக்குவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *