இறுதிப் படியிலிருந்து   –  பீமன் 

author
0 minutes, 12 seconds Read
This entry is part 5 of 13 in the series 15 ஆகஸ்ட் 2021

 

                                        ப.ஜீவகாருண்யன்                                                                                                                     .

சில பல மாதங்களாகப் பகல் நேரத் தூக்கம் பழக்கமாகிவிட்டது; அவசியமாகிவிட்டது. தூங்காமலிருக்க முடியவில்லை. வயதாகி விட்டதுதான் காரணமோ? சாளரத்தின் வழியே கண்களை ஓட்டினேன். மாலை மயங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் இருட்டிவிடும். சூதனின் பாடல் கேட்டுப் படுத்தவன் நிம்மதியான தூக்கத்தில் ஆழ்ந்து விட்டேன் போலிருக்கிறது. ஒரு வேளை சூதனின், கேட்பவர்கள் கிறங்கிப் போகும் வகையிலான – புலன் மயக்கும் – புகழ்ச்சிப் பாடல்தான் என்னை நீண்ட நித்திரையில் ஆழ்த்தி விட்டதா? நானறிந்த வரையில் போர்ப் பாசறைகளிலும் பொது வெளியிலும் தனியிடங்களில் தனி நபர் முன்னிலையிலும் இசைக் கருவிகளுடனும் இசைக் கருவிகள் இல்லாமலும் பாடுகின்ற சூதர்கள், மாகதர்கள், வந்திதர்கள் அனைவருமே தங்கள் பாடலுக்குரிய நாயகர்கள், நாயகிகள் இயல்பில் சோடையானவர்களாக இருந்தாலும் அவர்களைச் சோபை மிகுந்தவர்களாக இந்திரன்–சந்திரனாக, ரம்பை- ஊர்வசியாக தங்கள் கற்பனைத் திறனுக்கேற்ப இட்டுக்கட்டிப் புகழ்ந்து பாடுவதுதான் வழக்கம். இன்று மதிய உணவுக்குப் பிறகு அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த என்னைத் தேடி ஒற்றையாக வந்த நடுவயதுச் சூதனும்,  ‘பாண்டவர்களின் புகழ் பாடுகிறேன்!’ என்னும் முகமனுடன் அண்ணன் யுதிஷ்டிரரைப் பாடியதை அடுத்து என்னை, நான் எண்ணியும் பார்க்க முடியாத வகையில் எவ்வாறெல்லாமோ புகழ்ந்துப் பாடினான்.  ‘பாண்டவர்களின் வரிசை’ என்று வருகின்ற போது சூதர் வகையினருக்கு மட்டுமென்றில்லாமல் மற்றவர்களுக்கும் முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ச்சுனனை எதிர்த்து வீர மரணம் அடைந்து விட்ட கர்ணனின் பெயர் எந்த நிலையிலும் யாருக்கும் நினைவுக்கு வருவதில்லை. கர்ணன் பாண்டவச் சகோதரர்கள் எங்கள் அய்வரிடமிருந்து தனது இறப்புக்குப் பிறகும் ஒட்டாதவனாக-விலக்கப்பட்ட கனியாக-எட்டியே நின்று விட்டான்.

பாடலுக்கான முறைமையில் இறை வணக்கம் பாடி, பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரரை நியாயவான், நீதிமான், தர்மசீலர் என்றெல்லாம் புகழ்ந்துப் பாடிய சூதன், இரண்டாவது பாண்டவனாக என்னைப் பாட ஆரம்பித்த போதே மிரட்சி ஏற்படுத்தினான். ‘சகோதரர்கள் யாரும் இல்லாத தனிமையில் இவனைப் பாட அனுமதித்தது தவறோ?’ என்று யோசித்தேன்.  ‘பாவம்  ஏழைச் சூதன்.  ‘நாயக, நாயகியரைப் புகழ்ந்து பாடினால் பொன்–பொருள் கிடைக்கும்!’ என வந்திருக்கிறான். இருப்பவர்களை அண்டிப் பிழைப்பவன். தேடி வந்த கடமைக்கு தனக்குத் தெரிந்ததைப் பாடட்டும்!’ என்று அனுமதித்தேன். பாண்டவச் சகோதரர்கள் அய்வரை,  திரெளபதியைப் பாட வந்தவனுக்கு, ‘எதிரிலிருப்பவன் பீமன் ஒருவன்!’ என்னும் உண்மை என்னைக் குறித்த புகழ்ச்சிக்குக் காரணம் என்பது புரிந்தது. ‘புகழ்ச்சியில் மயங்காத புனிதர்-மனிதர் ஆயிரம், லட்சங்களைக் கடந்து கோடியில் ஒருவராக இருக்கலாம்!’ என்னும் யதார்த்தத்தில் சூதனின் புகழ்ச்சிப் போதையில் குளிர்மை மேவிய நாவல் மர நிழலில் நான் சாதாரண மனிதனாக மயக்கமுற்றவனாகியிருந்தேன்.

என்னைக் குறித்து சூதன் பாடிய பாடலின் கருப் பொருள் இதோ இப்பொழுது நான் பின்னுரைக்கும் வகையில்தான் அமைந்திருந்தது.

குந்தி, மாத்ரி இரு தாய் வழியில் குவலயம் கண்ட அய்ந்து பேரில் குந்தியின் மகனாகப் பிறந்த மகாராஜர் பீமசேனர் மத்த கஜத்தைப் போல உடல் பலம் கொண்டவர். பிள்ளைப் பிராயத்திலேயே துரியோதனன், துச்சாதனன் உட்பட்ட கெளரவச் சகோதரர்கள் கதிகலங்கும் வகையில் பலவானாக விளங்கியவர். கெளரவச் சகோதரர்களைப் பஞ்சுப் பொதிகளைப் போலப் பந்தாடியவர். பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் ஆமலீஹ மரத்திலிருந்து பழங்களை உதிர்த்ததைப் போல மரத்தில் தொற்றிய கெளரவர்களை இலவம் பஞ்சுக் காய்களாகக் கீழே உதிர்த்தவர். நீரில் அவர்களை அக்குளில் அடக்கி நிலை தடுமாறச் செய்தவர்; தனக்கெதிராய் நின்ற கெளரவச் சகோதரர்களைத் தரையில் தரதரவென இழுத்தெறிந்தவர்.

வனவாச காலத்தில் பத்தினி பாஞ்சாலி தேவியாரின் விருப்பத்திற்காக குபேரனின் நகர் தாண்டி காடு மேடுகள் கடந்து நெடுந்தூரம் சென்று பூங்காக் காவலன் மாவீரன் மணிமாலன் போன்றவர்களை எதிர்த்து-தோல்வியுற வைத்து- செளகந்தி மலர் கொண்டு வந்த பீம சேனரின் சாதனைகளை எளிதில் என்னால் சொல்லிவிட முடியுமா?

மகாராஜர் பீம சேனரின் தீரச்செயல்கள் எண்ணில் அடங்காதவை.

அரக்கு மாளிகையில் அகப்பட்டுக் கொண்ட  தாயை, சகோதரர்களை அஞ்சாமல் காப்பாற்றிக் காட்டுக்குக் கொண்டு வந்த பீமசேனர் இடியோசை என முழங்கி தன்னை எதிர்த்த இடும்பனை, இடும்பனின் நண்பன் கிர்மீரனை, வண்டிச் சோறு உண்ட பகாசுரனை, விராடனின் மைத்துனன் பெண்ணாசை வீணன் கீசகனை, ஜெயிக்க இயலாத மகத  அரசன் ஜராசந்தனை மற்றும் பலரை ஜெயித்த விந்தையை ஒற்றைச் சூதன் நான் தனியே பாடிவிட முடியுமா? பீமசேனர் பனைமரம் பிடுங்கி பகாசுரனை அடித்ததை என்னால் பாடத்தான் முடியுமா? மாலைத் தென்றல் போல இளகிய மனங் கொண்ட பீமசேனர் எதிரிகளைச் சூறாவளியைப் போலச் சுழன்றடிப்பவர். இன்றும் நாளையும் என்றும் நினைவிலிருக்கக் கூடியதான குருக்ஷேத்திரப் போரில் யாரும் நம்ப முடியாத வகையில் கெளரவச் சகோதரர்கள் அனைவரையும் காலனிடம் ஒப்படைத்த கம்பீரப் புருஷர் பீமசேனருக்கு இணையாக இன்னொருவர் யாரையேனும் சொல்ல முடியுமா? யாரேனும் சொல்ல முடியுமா? பதினெட்டு நாட்கள் நடந்த பெரும் போரில் பாண்டவ அணியின் வெற்றிக்கு முதல்வராக-மூலப் புருஷராக நின்ற பீமசேனரைப் பாடுவதில் சூதன் நான் பெருமையடைகிறேன்.

இப்படியெல்லாம் எனைக் குறித்துப் பாடிய சூதன் சகோதரர்கள் அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரெளபதி ஆகியோரையும் தன் மனம் போன போக்கில் புகழ்ந்துப் பாடினான். பரிசிலாக நான் கொடுத்த கழுத்து முத்து மாலையைக் காணாததைக் கண்டவனாகக் கண்களில் ஒற்றி வணங்கி விடை பெற்றுச் சென்றான்.

பாடிப் பரிசில் பெற்றுச் சென்ற சூதன் என்னளவில் இரண்டு விஷயங்களை இயல்புக்கு மாறாக-நம்பமுடியாததாக மிகைப்படுத்திப் பாடிவிட்டான். ‘பனைமரம் பிடுங்கி பகாசுரனை அடித்தவர்!’ என்று என்னைப் புகழ்ந்தவன் அதுவரையிலும், ‘பனைமரத்தில் பல் துலக்கியவர்!’ என்று பாடாதது ஆறுதலான விஷயந்தான். ‘பனைமரம் பிடுங்கி பகாசுரனைஅடித்தவர்!’ என்னும் சொல்லாடலின் வழியில் அவனது, ‘வண்டிச் சோறு உண்ட பகாசுரன்!’ என்பதும் மிகையானதுதான்.  ‘விருகோதரன் (ஓநாய் வயிற்றுக்காரன்), பெருந்தீனிக்காரன்’ என்றெல்லாம் பலராலும் ஏளனமாகப் பேசப்படும் என்னால் கூட வண்டிச்சோறை உண்டுவிட முடியுமா? மனிதனாய்ப் பிறந்தவன் யாரேனும் வண்டிச் சோறு உண்ண முடியுமா? பகன்-பகாசுரனும் மனிதன்தானே? பகன், இடும்பன் போன்ற மனிதர்களுக்கு ‘அசுரன்-அரக்கன்’ என்று பட்டம் புனைந்தவர்கள் யாரென்பதுதான் தெரியவில்லை.  ‘கவிஞர்களின் கற்பனை கட்டற்றது!’ என்னும் அளவில் மேற்குறிப்பிட சங்கதிகளைக் கருத்தில் கொள்ள வேண்டியதுதான். மற்றபடி என்னைக் குறித்துப் புகழுரையாகச் சூதன் சொன்ன பல சங்கதிகளில் குருக்ஷேத்திரக் களத்தில் துரியோதனன் முதற்கொண்டு கெளரவச் சகோதரர்கள் அனைவரும் என் கைப்பிடியில் சிக்கிக் களப்பலியானது இன்றும் நான் நம்பமுடியாத உண்மையாகத்தான் இருக்கிறது.

பதினெட்டு நாட்கள் நீடித்த போருக்குப் பிறகு நடந்து முடிந்த வெற்றி- தோல்வி குறித்த பரிசீலனையின் போது நம்பிக்கைக்குரிய எனது தேர்ச் சாரதி விசோகனிடம் கிருஷ்ணன், ‘பிருந்தாவனத்தில் ஆமலீஹ மரங்களிலிருந்து நான் பழங்களை உதிர்த்தது போல் நம்பமுடியாத அதிசயமாக கெளரவச் சகோதரர்கள் அனைவரையும் உன்னவர்–பீமன்– பொல பொலவென உதிர்த்து விட்டார்!’ என்று நான் கேட்கும் வகையில் சொன்னதை இன்று சூதனின் புகழுரையில் செவி மடுக்கையில் நான் சிந்தையிழந்தவனாகத் திக்கு முக்காடி விட்டேன்; ‘எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் என்னைப் புகழ்ந்துரைத்த வார்த்தைக் கோர்வை இம்மியும் பிசகாமல் இப்பொழுது எப்படி இந்தச் சூதனிடம்?’ என்று வியப்புற்றேன்.

கொடும் போர்க்களத்தில் கெளரவச் சகோதரர்கள் அனைவரும் என்னால் கொல்லப்பட்டது உண்மையே ஆயினும் உணவுக்காக சில பட்சிகள்-விலங்குகளை உணவாகக் கொள்வதைக் கடந்து உயிர்ப்பலி-குறிப்பாக மதிப்பு மிகுந்த மனித உயிர்ப்பலி-எப்போதும் எனக்கு உவக்காத ஒன்று. போர்க்களத்தில் அர்ச்சுனன் தேர்த் தட்டில் நின்று,  ‘அய்யோ! எப்படி நான் பாட்டனை, உறவினரை, குருவை எதிர்த்துப் போரிடுவேன்?’ என்று எதிரணியை எதிர்க்கத் தயங்கி கிருஷ்ணனிடம் உபதேசம் கேட்டதும் நான் கேட்காததும் மட்டுமே எங்கள் இருவரிடையிலான வித்தியாசம்.

தாயாதிகள் எங்களுக்கிடையிலான ராஜ்ஜியப் பங்கீட்டுப் பிரச்சனையில்–ஆடவர் நிறைந்த சபையில் திரெளபதி அடைந்த அநியாயத்தின் கொதிப்பில்-பாண்டவர்கள் அய்வரில் நான் உட்பட யாரேனும் ஓரிருவர் ஏதேனும் ஓரிரு சந்தர்ப்பங்களில், ‘போர் வேண்டும்!’ என்று சொல்லியிருக்கலாமே தவிர உண்மையில் சகோதரர்கள் எங்கள் அனைவருக்கும் சமாதானமே–போரில்லாத ராஜ்ஜியப் பங்கீடே- நோக்கமாக இருந்தது; ராஜ்ஜியப் பங்கீடு குறித்து கேட்பதற்காக கிருஷ்ணனை தூது அனுப்பும் நேரத்தில் சகோதரர்கள் அய்வருமே இறுதி இறுதியாக அய்ந்து கிராமங்கள் அளவில் சமாதானம் அடைபவர்களாகத்தான் இருந்தோம். பல ஆயிரக் கணக்கான உயிர்கள் பலியான போரில் வலையில் வந்து விழுந்தவர்களாகத்தான் எதிரிகள் என்னிடம் தாங்களாகவே சிக்கிக் கொண்டார்கள். வலிய வந்து மோதுபவர்களைக் கைகள் கட்டி நின்று வேடிக்கை பார்க்க முடியாத நெருக்கடியில்தான் கெளரவச் சகோதரர்களில் துரியோதனன், துச்சாதனன் இருவரைத் தவிர மற்றவர்களை நான் கொல்லும் சூழ்நிலை நேர்ந்தது. கூடி என்னைக் கொல்லும் வெறியில் எதிர்த்த சகோதரர்களுடன் சேர்ந்து விகர்ணன் என் முன் நின்ற போது, அநியாயம் மண்டிய துரியோதனன் சபையில் திரெளபதிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அந்த நல்ல மனிதனை நான் ஒதுக்கி விடத்தான்– அவனிடமிருந்து ஒதுங்கி விடத்தான் நினைத்தேன். ஆனாலும் என்னையும் மீறிய காரியமாய் பத்துடன் சேர்ந்த பதினொன்றாக அவன் எனது கதாயுத அடியை ஏற்று இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. விகர்ணன் இறந்து போன நாளின் இரவில் பாசறையில் அவனது சாவு குறித்த சிந்தனையில் எனது மனம் பட்ட பாடு நான் மட்டுமே அறிந்த ஒன்று.

போர்க்களத்தில் வலிய என்னுடன் மோதி வாழ்விழந்து போனவர்கள் போக மற்றொரு கணக்கில் என்னுடன் மோதி இறந்த இடும்பன், கிர்மீரன், பகன், கீசகன், ஜராசந்தன் அய்வரில் இடும்பன், கிர்மீரன் இருவரைத் தவிர மற்ற மூவரும் முறையே எனது தாய், திரெளபதி, கிருஷ்ணன் இந்த மூவரின் தூண்டுதல் வழியில் கொல்லப்பட்டவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்னும் ஒரு வகையில் சொல்லப் போனால் காசி அரசனின் மகளும் எனது மனைவியும் ஆன பலந்தரை- போரில் இறந்து போன சார்வகனின் தாய்-துரியோதனனின் மனைவி பானுமதியின் தங்கை என்னும் உறவு முறையில், ‘மனைவியின் சகோதரி என்னால் விதவையாகி விடக்கூடாதே!’ என்னும் எண்ணத்துடன் நான் துரியோதனன் மீது – கோபங்களைக் கடந்து- கொஞ்சம் கருணை கொண்டவனாகத்தான் இருந்தேன்.

ஆனால்,  துரியோதனனும் அவனது சகோதரர்களும் –சகோதரர்களில் குறிப்பாக துச்சாதனனும் – தமது இளமையிலிருந்தே எப்போதும் என்னைத் தமது சிற்றப்பனின் மகனாக எண்ணியவர்களில்லை. பரந்துபட்ட குரு ராஜ்ஜியத்தின் பங்கீட்டில் சரிபாதி உரிமை உடையவர்களான பாண்டவச் சகோதரர்கள் அய்வரில் நான் கெளரவர்களினும் கூடுதல் பலமும் உடல் வளமும் கொண்டவனாக இருந்து விட்ட காரணத்தில் என்னைக் கொன்று முடிக்க சகுனி, கர்ணன் கூட்டுறவுடன் சகோதரர்கள் அவர்கள் நிகழ்த்திய சதிச் செயல்களை நினைக்கையில் இப்போதும் எனது நெஞ்சம் நடுங்குகிறது.

சுழித்தோடும் (கங்கை) நதிக்கரையில் பிராமணக்கோடி என்னுமிடத்தில்  நடந்த-கெளரவச் சகோதரர்கள் சிலரும் பாண்டவர்கள் நாங்கள் அய்வரும் அடங்கிய- விருந்து வைபவத்தில் சகோதரர்களிடமிருந்து தனியே என்னை நகர்த்திய துரியோதனன், ‘நீ நல்லவன்! வல்லவன்!’ என்று குளிர் வார்த்தைகளால் குளிப்பாட்டி அதுவரை மதுப் பழக்கம் அறியாதிருந்த என்னை, ‘பீமா! சாதாரணமானவர்கள் குடிக்கின்ற வால் கோதுமையில் வடித்தெடுத்த மதுவல்ல இது! இது பூக்களில் வடிதெடுத்த மது! நம்மைப் போன்றவர்கள் மட்டுமே குடிப்பது!  காட்டில் நேற்று ஒற்றை ஈட்டி வீச்சில் மூர்க்கக் காட்டுப் பன்றியைக் கொன்ற உனது திறமையைக் கொண்டாட உனக்கென பிரத்யேகமாகக் கொண்டு வந்தது! உடலுக்கு நல்லது! எதிரிலிருக்கும் இந்தக் காட்டாட்டு இறைச்சியின் உதவியுடன்  விருப்பம் போலக் குடி!’ என்று வசீகர வார்த்தைகள் கூறி மேலும் மேலுமாக என்னைக் குடிக்க வைத்தான்.  போதையில் நிதானமிழந்து போன எனது கால்கள், கைகளை கர்ணன், துச்சாதனன் உதவியுடன் கயிற்றினால் கட்டி சுழித்தோடும் நதியில் வீசியெறிந்தான். உயிர் போகும் அவதியுடன் கடும் முயற்சியில் கால் கட்டினைக் களைந்தெறிந்தவன்-கைகளை மார்பில் சேர்த்தபடி மிதந்து நீந்திப் பழகிய அனுபவத்தில்- முதுகுப் பரப்பில் கைகள் பிணைந்த நிலையில் மரங்கள் அடர்ந்த நதிக்கரையில் சேறு சகதியில் ஒதுங்கினேன். பிறகு நதிக்கரை வாழ் பழங்குடி நாகர்களால் காப்பாற்றப்பட்டு எட்டு தினங்களுக்குப் பிறகு அரண்மனை திரும்பினேன்.

பிராமணக்கோடி கொடுமை நடந்து முடிந்த சில மாதங்கள் கழித்து யானைக் கொட்டகையில் ஆயுதம் எதுவுமில்லாமல் தனியே இருந்தவனை ஆயுதங்களுடன் துரியோதனனும் துச்சாதனனும் சேர்ந்து கொல்ல முயன்றதில் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு இருவரையும் அடக்கி உயிர் பிழைத்தேன்.

துரியோதனனின் இத்தனைக் கொடுமைகளுக்குப் பிறகும் நான் கெளரவர்களைக் குறிப்பாக துரியோதனனை மன்னிக்கக் கூடியவனாகத்தான் இருந்தேன். அரக்கு மாளிகை சம்பவத்துக்குப் பிறகுதான் அவன் என்னால் என்றென்றுமான எதிரியாகத் தீர்மானிக்கப்பட்டான். அரக்கு மாளிகை சம்பவத்தை அடுத்து சழக்கன் சகுனியை வைத்து பாண்டவர்கள் எங்களுக்கெதிராக அவன் நடத்திய சூது, அன்றைய தினமே ஆண்கள் மட்டுமே நிறைந்திருந்த சபையில்  கர்ணனின் தூண்டுதலில் துஷ்டன் துச்சாதனன் மூலம் திரெளபதியின் ஆடை களைய மேற்கொண்ட முயற்சி ஆகியவற்றின் பின்னணியில் அவன் என்னளவில் என்றும் மன்னிக்க முடியாத எதிரியாகிப் போனான்.

திரெளபதியின் சுயம்வர காலத்திலிருந்து பாண்டவர்கள் எங்கள் வாழ்வின் முக்கியத் தருணங்களிலெல்லாம் தன்னை முன்னிறுத்தி எங்கள் நலனில் பெரிதும் அக்கறை காட்டிய-பாண்டவர்கள் எங்களை வழி நடத்திய -ஆறு மாதங்களுக்கு முன் இறந்து விட்ட-கிருஷ்ணன் மீது கூட நான் வெகுவாகக் கோபம் கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தது. ஆனால், அப்பொழுதும் நான் அமைதிக் கடலாகத்தான் அடங்கி நின்றிருந்தேன்.

பதின்மூன்றாம்  நாள் போரில்  துரோணரின் சக்கரவியூகத்தில் சிக்கி அடலேறு அபிமன்யு மூர்க்கர்களால்  கொடூரமாகக் கொல்லப்பட்ட  இரவில், பாசறையில் தங்கை-சுபத்திரை-மகன் இறந்து போனதைத் தாங்க முடியாது அழுதுப் புலம்பிய கிருஷ்ணன் அதே பாசறையில், அடுத்த நாள் துரோணரின் தலைமையில் நடந்த இரவுப் போரில் கர்ணனை எதிர்த்து கடோத்கஜன் இறந்ததைக் கேள்வியுற்று மகிழ்ந்து பண் பாடினான். ‘பிராமணர்களின் எதிரி காட்டரக்கன் இறந்து போனதற்காக யாராவது கவலைப் படுவார்களா? அதுவுமில்லாமல்  மார்பில் கர்ணனின் வைஜயந்தி வேல்-அர்ச்சுனனைக் கொல்வதற்காக கர்ணன் பிரத்தியேகமாக வைத்திருந்த ஆயுதம்- தாங்கி இறந்த அளவில் அந்தக் காட்டரக்கனின் இறப்பு ஒரு வகையில் நமக்கு உதவக் கூடியதுதான்.’ என்று அண்ணன் யுதிஷ்டிரர், அர்ச்சுனன், நகுலன், சகாதேவனை ஆறுதல்படுத்தி மதுவருந்திக் களித்தான். பாசறையே பதற்றமுறும் வகையில் அர்ச்சுனன் அன்று கிருஷ்ணனை கடுமையான வார்த்தைகளால் எதிர் கொண்டது எப்போதும்  மறக்க முடியாததாக எனது நெஞ்சில் நிலைத்துக் கிடக்கிறது.

‘கிருஷ்ணா, என்ன பேச்சுப் பேசுகிறாய்? இதே களத்தில் உன் தங்கை மகன் அபிமன்யு இறந்த நாளில் இதே பாசறையில், ‘அய்யோ! அன்பிற்குரிய அபிமன்யு போய்விட்டாயே!’ என்று ‘ஓ’வென்று ஒப்பாரியிட்டழுதாயே! பிறகு இன்று கடோத்கஜன் இறப்பு குறித்து ஏன் எக்களிக்கிறாய்? ஒரே போர்க்களத்தில் நாட்டு மனிதனுக்கு ஒரு நீதி – காட்டு மனிதனுக்கு ஒரு நீதியா? வாயை மூடு!’

அர்ச்சுனனின் கடும் கண்டனத்தில் அதிர்ந்து தலைகவிழ்ந்த கிருஷ்ணனின் நிலையில் ஆறுதலடைந்து, கேட்பாரற்றுக் களத்தில் கிடந்த கடோத்கஜனை பார்க்க பாசறையிலிருந்து நான் வெளியேறியது நேற்று நிகழ்ந்தது போல இன்று எனது நினைவில் மேலோங்குகிறது.

எல்லா நாணயங்களுக்கும் இரண்டு பக்கம் இருக்கும் உண்மையில் எனது இரண்டாவது பக்கம்-மறுபக்கம் எப்போதும் மேலானவர்களைப் புகழ்ந்துரைக்கும் சூதர்கள் உட்பட அனைவராலும் மறுக்கப்பட்ட-மறைக்கப்பட்ட பக்கமாக இன்று வரை இருந்து வருகிறது.

  வன வாச காலத்தில் ஆற்றில் மிதந்து வந்த அழகும் மணமும் நிறைந்த செளகந்தி மலர் பார்த்து, ‘அந்த அழகிய மலர் எங்கிருந்தாலும் வேண்டும்!’ என்னும் விருப்பத்துடன்,  ‘மலர்  பறித்துவர சகோதரர்கள் அய்வரில் சரியான ஆள்!’ என்று  என்னை நயமாக அணுகிய திரெளபதி பிற்காலத்தில்,  ‘ஆட்சி-அதிகார அங்கீகாரம் தன்னை விட்டுப் போய் விடக்கூடாது!’ என்னும் தவிப்பில் என்னை அணுகிய விதம் எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று.

போர் முடித்து,  இறந்தவர்களுக்கான சிராத்தக் கடமைகளையும் செய்து முடித்த பிறகு பட்டாபிஷேகம் குறித்து யோசிக்கும் வேளையில் அண்ணன் யுதிஷ்டிரர், ‘நடந்து முடிந்த கொடும் போரினால் ரத்த வாடை போகாத இந்த விதவைகளின் ராஜ்ஜியத்திற்கு அரசனாவதில் எனக்கு விருப்பமில்லை! அதுவுமில்லாமல் நடந்து முடிந்த போரில் கெளரவர்கள் நூற்றுவரையும் களைந்த வகையில் பாண்டவர்கள் நாம் வெற்றி பெறுவதற்கு பெருங்காரணமாக இருந்தவன் பீமன் என்னும் உண்மையில் பீமனே அரசாளத் தகுந்தவன்! ஆகவே பீமன் அரசனாக முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்!’ என்றுரைத்து சகோதரர்கள் எங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

‘அண்ணா, அரச பதவிக்கு என்னைப் பரிந்துரைப்பது தவறு. வனவாச காலத்தில் காட்டிலும் நீங்கள் தான் எங்களுக்கு அரசனாக இருந்தீர்கள்.  நாட்டிலும் நீங்களே அரசர் என்னும் நிலை தொடர வேண்டும்.’ என்ற எனது வேண்டுதலை யுதிஷ்டிரர் மறுத்தார். தனது நிலைப்பாட்டில் மாறாதவராக ‘தான் அரச பதவியை ஏற்கப் போவதில்லை’ எனத் தெரிவித்தார்.

சகாதேவன், ‘யுதிஷ்டிரர் தான் அரசராக வேண்டும்!’ என்று முன் மொழிந்த சூழலில் அர்ச்சுனன், ‘அண்ணன் யுதிஷ்டிரர்,  ‘அரச பதவியில் எனக்கு விருப்பமில்லை!’ எனச் சொன்ன பிறகு அண்ணன் பீமன் அரசராவதில் தவறில்லை; எனக்கு ஆட்சேபமில்லை!’ என்று தனது மன நிலையை விளக்கினான்.   

‘இந்த விஷயத்தில் கிருஷ்ணனின் எண்ணம் என்ன என்பது தெரிந்தால் நல்லது. அதுவுமில்லாமல் அரச பதவி ஏற்பது – மறுப்பது எது குறித்தும் தெரிவிக்க எனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும்’ என்ற நான் சகோதரர்களிடமிருந்து விலகி அறைக்கு வெளியே வந்தேன். அங்கே எனக்காகவே காத்திருந்தவள் போல் என்னை எதிர்கொண்ட திரௌபதி, அய்ந்து கணவர்களில் யுதிஷ்டிரரை மட்டுமே வணங்கும் வழக்கத்தில் மாறி அன்று என்னை வந்தனம் செய்தாள்; வசீகரமாக சிரித்தாள்.

‘பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்தாயிற்றா? யார் பட்டாபிஷேகம் ஏற்பது என்பதும் முடிவாயிற்றா?’ என்றாள். நான் சகோதரர்கள் எங்களுக்கிடையில் நிகழ்ந்த உரையாடலை அவளிடம் தெரிவித்தேன்.

‘அண்ணன் சொல்கிறாறென்று நீங்கள் பட்டாபிஷேகம் சூட்டிக் கொண்டால் பலந்தரையின் ஏவல் பெண்ணாக காலம் முழுவதும் நான் அரண்மனையின் ஏதாவது ஒரு மூலையில் அடங்கிக் கிடக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்ற திரௌபதியின் வார்த்தைகள் எனது நெஞ்சக்குலையை அறுத்தெறிவது போன்ற உணர்ச்சியில் உடல் அதிர்ந்து அடங்கிற்று.

‘என்ன சொல்கிறாய் திரௌபதி?’ என்ற நான் அவளைக் கூர்மையுடன் பார்த்தேன்.

‘சொல்ல வேண்டியதைத் தான் சொல்கிறேன். வனவாச காலத்தில் பதின்மூன்று ஆண்டுகள் ஐவருக்கும் தாதிப் பெண்ணாக அல்லல் பட்ட தொடர்ச்சியில் அரண்மனையில் பலந்தரையின் தாதிப் பெண்ணாக இருக்கப் போவதைப் பற்றித்தான் சொல்கிறேன்.’ என்ற திரௌபதியிடம் பேச வார்த்தைகள் ஏதும் இல்லாதவனாக எனது அறை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.

எதிரே, எதிர்பாராத விதமாக விதுரரும் அவர் பின்னால் முக்காடிட்ட நிலையில் அம்மா குந்தியும் என்னை வரவேற்றார்கள்.

திரௌபதியிடமிருந்து எழுந்த இரண்டு கேள்விகள் வார்த்தை பிசகாத அதிசயமாக அம்மாவிடமிருந்து வெளிப்பட்டதை யோசித்துத் திடுக்கிட்டேன். அம்மா தனது கேள்விக்கு என்னிடம் பதிலை எதிர்பார்க்கவில்லை.

‘பலவான், வீரன், சூரன் என்பதெல்லாம் உன்னளவில் உண்மைதானென்றாலும் ஆட்சி–அதிகாரம் செய்வதற்கு அருகதை இல்லாதவன் நீ, மந்தா!  சகோதரர்கள் அய்வரில் யுதிஷ்டிரன் தான் ஆட்சி – அதிகாரத்திற்குத் தகுதி உடையவன் என்பது எனது எண்ணம். இந்த விஷயத்தில் சித்தப்பா விதுரரின் கருத்தும் என்னுடைய கருத்துதான்.  ஆட்சி –அதிகார விஷயத்தில் இதற்கு மேல், ‘யோசிக்கிறேன்’ என்று எதுவும் குழப்பம் செய்யாதே!’ என்ற அம்மாவின் உறுதி மிகுந்த குரலைப் புரிந்து கொள்ளும் முயற்சியினிடையில், ‘அம்மாவின் கருத்துதான் எனது கருத்தும்!’ என்பவர் போல் எனை நோக்கி இயல்பு மீறிச் சிரித்த விதுரரின் முக பாவத்தில் வெகுவாகக் குழம்பிப் போனேன்.

இருவரிடமும் விடைபெற்று அறைக்குத் திரும்பியவன் எந்த நிலையிலும்  எந்நாளும் இரண்டாமிடத்தில் இருப்பவனாகவே விதிக்கப் பட்ட எனது வாழ்க்கை குறித்த சிந்தனையையும் கடந்து, ‘அண்ணன் யுதிஷ்டிரர்தான் அரசாள வேண்டும்!’ என்னும் உறுதிப்பாட்டுடன் மதுவருந்தி உறக்கத்திலாழ்ந்தேன்.

சூதர்களும் அறியாத சூட்சுமச் சங்கதிகளாக இத்தனைக் காலம் அஸ்தினாபுர அரண்மனையின் அரசியல் பெட்டிக்குள் அழுந்தி அழுந்திக் கிடந்த விருகோதரன்-பெருந்தீனிக்காரன்-மந்தன் பீமன் எனது இரண்டாம் பக்க வாழ்க்கைச் சித்திரங்கள் என்றேனும் ஒருநாள் வெளிப்பட வேண்டிய நியதியுடன் இன்று என் வழியில் வெளிச்சப் பட்டு விட்டன.

‘சொல்லத்தான் நினைக்கிறேன்!’ என்றில்லாமல் என்னளவில் சொல்லித் தீர வேண்டிய சங்கதிகளை ஏதோ ஒரு வேகத்தில் சொல்லி முடித்ததும் மனதுக்கு நிம்மதியை அளிப்பதாகத்தான் இருக்கிறது.

                                                  *** 

         

 

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]கூடங்குள ரஷ்ய அணுமின் உலைகள் 3 & 4 கட்டுமான மாகி வருகின்றன.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *