இற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்

This entry is part 40 of 42 in the series 22 மே 2011

தேர்தலுக்கு முன்னால் ராஜா கைது தேர்தல் முடிந்ததும் கனிமொழி கைது, இருவர் தவிர சரத்குமார் கைது – வேறு யாரும் இன்னமும் கைது செய்யப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்குமானால், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று வீரவுரை பேசி மக்கள் மன்றத்திற்கு முன்னால் நீதி மன்றங்கள் தலை பணிய வேண்டும் என்றெல்லாம் வசனங்கள் எழுதப் பட்டிருக்கும். அதற்கு வழியில்லாத படிக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து தீர்ப்பும் வழங்கி விட்டார்கள். ஆனால் இது போதாது. இன்னமும் கூட்டுக் களவாணிகள் கைது செய்யப்ப்டவில்லை. காங்கிரஸ் கட்சியின் பங்கேற்பும், ஆசீர்வாதமும் இல்லாமல் ஒரு அமைச்சர் மட்டும் இந்த அளவிற்கு ஊழல் செய்திருக்க முடியும் என்பதை, இந்திய அரசியல் மற்றும் அதிகாரவர்க்கம் மேற்கொள்ளும் நடைமுறைகள் பற்றிய துளி அறிவு இருப்பவர்கள் கூட நம்புவதற்கில்லை. பிரதமருக்குக் கூட போதிய அதிகாரம் இல்லாத அளவிற்கு கட்சித் தலைமையின் இடையீடும், “சமையலறை கேபினெட்டின்” மூக்கு நுழைத்தலும் விரவிப் பரவியுள்ளது என்பது ஊர் அறிந்த ரகசியம். சுதந்திரமாக இயங்க வேண்டிய விசாரணைத் துறை அப்படி இல்லை என்பதும் கனிமொழி கைதுக்கு தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது என்ற செய்தியை வைத்தே ஊகிக்க முடிகிறது.

 

சுரேஷ் கல்மாடி தனியாளாக நின்று ஊழல் செய்தார் என்று ஒப்புக் கொள்வது எவ்வளவு கடினமோ அதே அளவு கடினம் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெறும் மூன்று பேருக்குள் முடிந்திருக்கும் என்று எண்ணுவதும்.

 

அதில்லாமல், ஊழலுக்குத் துணை போன தொழிலதிபர்கள் இன்னமும் விசாரணைக்குக் கொண்டு வரவில்லை. அரசியல் வாதிகளும், பெரும் தொழில் அதிபர்களும் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக ஊழலில் ஈடுபடுவது தடைப் படவேண்டுமானால் விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படவேண்டும். ஜனாதிபதிக்குத் தான் அவர்கள் தம் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி பதவியும், ஆளும் கட்சியின் கிளை போலச் செயல்படுவது இன்னொரு அவலம்.

 

”டைம்” பத்திரிகையின் உலகின் மிகப் பெரியா ஊழல் பேர்வழிகளில் ஒருவராக, ராஜாவும் இடம் பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பித்திருக்கிறார். லிப்யாவின் கடாஃபி, இதாலியின் பிரதமர் பெருல்ஸ்க்கொனி போன்ற ஊழல் மன்னர்களில் வரிசையில் இவரும் இடம் பெற்றிருக்கிறார்.

 

ஆனால் ஊழலுக்கு தண்டனை வழங்குவது இந்தியாவில் எப்போது நடந்திருக்கிறது? சர்க்காரியா ஊழல் முதல் போஃபர்ஸ் ஊழல் வரையில் எந்த ஊழலும் அரசியல் அதிகார வர்க்கங்கலை தண்டிக்க முடியவில்லை. அரசியல் காய் நகர்த்தலுக்கும், கூட்டணி நிர்ப்பந்தக்களுக்கும், மிரட்டலுக்கும், பின்னணி பேரங்களுக்கும் பயன் படும் ஓர் ஆயுதமாகத் தான் ஊழல் பற்றிய விசாரணைகள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கலாசாரம் என்ற வியாதி இன்று நீக்கமற எல்லாக் கட்சிகளாலும் மேற்கொள்ளப் பட்டுவிட்டது. இதில் விதி விலக்குகள் எதுவும் இல்லை.

 

ஊழலைக் கட்டுப்படுத்த அல்லது சுதந்திர அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற அண்னா ஹஸாரேயின் கோரிக்கையை ஏற்று லோக்பால் மசோதா என்ற ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறது காங்கிரஸ் அரசு. குற்றச் சாட்டு கொண்டு வருபவர்களை தண்டிப்பதில் உள்ள அவசரம், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை விசாரிப்பதிலும், அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதிலும் இல்லை என்று தோன்றும் படி உப்புப் பெறாத ஒரு மசோதாவைக் கொண்டு வந்து முன் நிறுத்தியிருக்கிறார்கள்.

——

 

nava.manjula@gmail.com

 

Series Navigationஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37
author

மஞ்சுளா நவநீதன்

Similar Posts

Comments

  1. Avatar
    sivaprakasam says:

    vanakkam .france kamban kajagam will be engaged in reading kamban ramayanam with explications each last sunday at paris france thanks sivaprakasam life member france kamban kajagam

Leave a Reply to sivaprakasam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *