இலக்கண அமைப்பு முறைக் கோட்பாட்டில் தொல்காப்பிய நூன்மரபு

author
0 minutes, 2 seconds Read
This entry is part 4 of 14 in the series 7 மே 2017

 

பி.லெனின்

முனைவர் பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும்

ஓப்பிலக்கியப் பள்ளி

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்-10

நுழைவு

இலக்கணம் என்பது ஒரு மொழியின் கட்டமைப்பை விவரிப்பது. திராவிட மொழிக்குடும்பம் உலக மொழிக்குடும்பங்களின் வரலாற்றுப் பார்வையில் தொன்மையும் சிறப்பும் மிக்கதாய் விளங்குகிறது. ஏனெனில் இம்மொழிக்குடும்பம் தாம் செம்மையான இலக்கிய வளமும் வளமிக்க தொன்மையான இலக்கணங்களையும் கொண்டுள்ளது. எழுத்ததிகாரத்தைப் பொறுத்த வரையில் மொழியின் அமைப்புடன் தனியெழுத்துக்கள் சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்தமைதி என்பவற்றுடன் எழுத்துக்கள் இவை இவ்வெண்ணிக்கையுடன் என்று நூன்மரபைத் தொடங்கிக் குறில், நெடில் மற்றும் மாத்திரை, உயிர், மெய் அவற்றின் வடிவம் உயிர்மெய்யின் ஒலிநிலைப் பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு, வினா எழுத்துக்கள் என்பவற்றுடன் நூன் மரபினுள் இலக்கணம் வடித்துள்ளார். இவ்வாறாக அமைந்துள்ள நூன்மரபு கருத்தாக்கத்தினை இலக்கண அமைப்பு முறைக் கோட்பாட்டின்வழி ஆய்வதாக இக்கட்டுரை அமையப் பெறுகிறது.

கோட்பாடு-பொருள் விளக்கம்

கோட்பாடு என்ற சொல்லுக்குக் கொள்கை, நிலைமை, கொண்டிருக்கும் தன்மை, அனுசரிப்பு என்று கழகத் தமிழ் அகராதி பொருள் விளக்கம் தருகிறது (கழகத் தமிழ் அகராதி, ப.406). மேலும் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கோட்பாடு எனும் சொல்லுக்கு “ஒரு துறையில் ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்றுக்களின் தொகுப்பு (கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, 381). இதன்வழிக் கோட்பாடு என்பது அமைப்பு முறையை அடிப்படையாகக் கொண்ட கூற்றுகளின் தொகுப்பு என்ற கருத்தாக்கம் பெறப்படுகிறது.

இலக்கண அமைப்பு முறைக் கோட்பாடு

இலக்கண அமைப்பு முறைக் கோட்பாடு என்பது ஒவ்வொரு மொழிக்குரிய இலக்கணத்தினையும் அதன் உள் கட்டமைப்பு ஒழுங்காக்கத்தினை அதன் அக அமைப்பு முறையின் அடிப்படையில் ஆய்வதே இவ்விலக்கண அமைப்பு முறைக் கோட்பாடாகும்.

வகைபாடு

  1. பொருண்மை அமைப்புக் கோட்பாடு
  • ஒற்றைப் பொருண்மை
  • இரட்டைப் பொருண்மை
  • பன்முகப் பொருண்மை
  1. நூற்பா அமைப்புக் கோட்பாடு
  • விதிமுறை அமைப்பு
  • விளக்க முறை அமைப்பு
  • விதியும் விளக்கமும்
  1. வாய்பாடு-கோட்பாடு
  2. தொடர்பு அமைப்புக் கோட்பாடு
  • தொடர்த் தொடர்பு
  • மாட்டேற்றுத் தொடர்பு
  • மாற்றியல்-மாற்றதிகாரத் தொடர்பு
  • புறனடைக் கோட்பாடு
  • இயலுக்குப் புறனடை
  • அதிகாரப் புறனடை

பொருண்மை அமைப்புக் கோட்பாடு

பொருண்மை அமைப்புக் கோட்பாடு என்பது ஓர் இலக்கணி தம் படைப்பினுள் அமையப் பெற்ற நூற்பாக்களைப் பொருள்படும்படி தாம் படைத்திருப்பார். அவ்வாறு அமையப் பெற்ற பொருண்மைகளின் அடிப்படையில் இப்பொருண்மைக் கோட்பாடானது உருவாக்கம் பெறுகிறது.

ஒற்றைப் பொருண்மை

ஒற்றைப் பொருண்மை உத்தி என்பது தாம் படைக்க விரும்பும் படைப்பினில் இலக்கணி நூற்பாவினுள் ஒற்றைக் கருத்தினை மட்டும் பதிவு செய்து விளக்கப்படும் இலக்கணப் பொருண்மை ஒற்றைப் பொருண்மை எனப்படும்.

சான்று,

மெய்யின் அளபே அரையென மொழிப (தொல் : 1:11)

பொருள்

மெய்யெழுத்தின் அளவு அரை மாத்திரை அளபு ஒலிக்கும் என்பது இதன் பொருள்.

சான்று விளக்கம்

மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவு ஒலிக்கும் என்று இலக்கணி சுட்டும்போது இங்கே ஒற்றைப் பொருண்மையில் கருத்து பதிவாகியுள்ளமையை அறிந்து கொள்ள முடிகிறது.

இரட்டைப் பொருண்மை

இரட்டைப் பொருண்மைக் கோட்பாடு என்பது இலக்கணி தாம் படைக்க விரும்பும் இலக்கணத்தில் நூற்பாவினுள் இரண்டிற்கு மேற்பட்ட இலக்கண விதிகளையோ விளக்கத்தினையோ சுட்டுவதாகும்.

சான்று

புள்ளி யில்லா எல்லா மெய்யும்

உருவுறு வாகி அகரமோ டுயிர்த்தலும்

ஏனை உயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும்

ஆயீ ரியல உயிர்த்த லாறே.               (1:1:17)

பொருள்

புள்ளி இல்லா எல்லா மெய்யும் தத்தம் முன்னே வடிவாகவும் உருவாகவும் அகரத்தோடு கூடி ஒலித்தலும் ஏனை உயிர் உருவு திரிந்து ஒலித்தலும் வடிவு வேறுபட்டு ஒலித்தலுமாகிய என உயிர்த்தல் ஆறு வகையான் ஒலிக்கும் முறையைக் காப்பியர் மேற்கண்ட நூற்பாவினுள் சுட்டியுள்ளார்.

சான்று விளக்கம்

மெய்யெழுத்துக்கள் அனைத்தும் உரு உருவாகி அகரமோடு உயிர்த்தலும்

  • ஏனை உயிரோடு தன்னுருபு திரிந்து உயிர்த்தல்

என்ற இரண்டு வகையான பொருண்மையைக் காப்பியர் மேற்கண்ட நூற்பாவில் சுட்டியுள்ளார். இதன்வழி இரட்டைப் பொருண்மைக் கோட்பாடானது பயின்று வந்துள்ளமையை அறிந்துகொள்ள முடிகிறது.

பன்முகப் பொருண்மை

பன்முகப் பொருண்மைக் கோட்பாடு என்பது இலக்கணி தம் இலக்கணத்தினுள் ஒன்று அல்லது இரண்டிற்கு மேற்பட்ட விதிகளையோ விளகத்தினையோ சுட்டுவது இக்கோட்பாட்டின் மையப்பொருண்மையாம்.

தொல்காப்பிய நூன்மர்பினைப் பொறுத்தவரையில் பன்முகப் பொருண்மைக் கோட்பாடானது இடம்பெறவில்லை எனலாம்.

அவ்வாறு இடம்பெறாமைக்குக் காரணம் தனிநின்ற எழுத்துக்களின் இலக்கணத்தினைச் சுட்டும்போது தொல்காப்பியர் ஒன்று இரண்டு பொருண்மைக்குமேல் ஒரு நூற்பாவில் பதிவு செய்யவில்லை என்பதும் நூன்மரபினில் தொல்காப்பியர் முன்னோர் கருத்தையே ஈண்டுப் பதிவு செய்துள்ளமையால் பன்முகப் பொருண்மையில் நூற்பாவினை அமைக்கவில்லை என்னும் கருத்துருவாக்கம் பெறப்படுகிறது.

நூற்பா அமைப்பு முறைக்கோட்பாடு

நூற்பா அமைப்பு முறைக் கோட்பாடு என்பது படைப்பாளன் தான் கூற விரும்பும் கருத்தினை நூற்பாவினுள் பொதிந்து கூற விழையும்போது விதிமுறையினையும் விளக்க முறையினையும் மற்றும் சில இடங்களில் விதியையும் விளக்கத்தினையும் சேர்த்து விளக்கப்பெறுவதாக நூற்பா அமைவது இக்கோட்பாட்டின் உருவாக்கத்தளமாகும்.

விதிமுறை

விதிமுறைக் கோட்பாடு என்பது நூற்பாவினில் இலக்கணி விதியினைச் சுட்டுவது இதன் விளக்கமாக அமைகிறது.

நூற்பா

எழுத்தெனப் படுப

அகரமுதல் னகர இறுவாய்

முப்பஃதென்ப

சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.                              (1:1:1)

பொருள்

அகரம் முதல் னகரத்தினை இறுதியாகவுடைய எழுத்துக்கள் முப்பது என்றும் சார்பு எழுதுக்களையும் சேர்த்துக்கூறின் முப்பத்து மூன்று என்றும் எழுத்தினது வகையினைச் சுட்டுவதாக அமைந்துள்ளது மேற்கண்ட நூற்பாவின் பொருண்மை.

சான்று விளக்கம்

எழுத்தினது வகையினைச் சுட்டும்போது காப்பியர் உயிர் மற்றும் மெய்யெழுத்துக்கள் முப்பது என்றும் சார்பெழுத்துக்கள் மூன்று என்றும் அவற்றினை விளக்காது விதியைச் சுட்டுவதாக நூற்பா அமைந்துள்ளது.

விளக்கமுறை

விளக்கமுறைக் கோட்பாடு என்பது நூற்பாவின் விதியினைச் சுட்டாது விளக்கத்தினை மட்டுமே சுட்டுவது இதன் பொருளாகும்.

நூற்பா

ஆ ஈ ஊ ஏ ஐ

ஓ ஔ என்னும் அப்பால் ஏழும்

ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப.                        (1:1:4)

பொருள்

நெட்டெழுத்துக்கள் ஏழும் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் என்பது இதன் பொருள்.

சான்று விளக்கம்

நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் என்று சுட்டியுள்ள காப்பியர் அவற்றினது வகையினையும் விளக்குவதாக மேற்கண்ட நூற்பா அமைந்துள்ளது. இதன்வழி நூற்பா அமைப்பு முறைக்கோட்பாட்டினில் விளக்க முறைக் கோட்பாடு பயின்று வந்துள்ளமையை அறிய முடிகின்றது.

விதியும் விளக்கமும்

தமிழ் இலக்கணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பொருண்மையில் அமைந்திருப்பவை. அதன்வழிப் படைப்பாளர் தம் படைப்பினுள் நூற்பாவின் பொருண்மையைச் சுட்ட விதிமுறையினையும் விளக்க முறையினையும் ஒரே நூற்பாவில் இடம்பெறச் செய்வது இக்கோட்பாட்டின் பொருண்மையாக அமையப்பெறுகிறது.

நூற்பா

நீட்டம் வேண்டின் அவ்வள புடைய

கூட்டி யெழூஉதல் என்மனார் புலவர்.                        (1:1:6)

பொருள்

நீண்ட மாத்திரையுடைய அளபெடை எழுத்து பெறவேண்டின் அவ்வளபுடைய எழுத்தினைக் கூட்டி எழுதிக் கொள்ளுதல் வேண்டுமென்று சுட்டுவதாக மேற்கண்ட நூற்பாவின் அமைந்துள்ளது.

சான்று விளக்கம்

மூன்று மாத்திரை அளவு எழுத்துக்கள் நீண்டு ஒலிக்க வேண்டுமாயின் நீட்டி எழுதல் வேண்டும் என்று விதியினைச் சுட்டியுள்ளார்.

எழூஉதல் என்று சுட்டும்பொழுது அஃது எவ்வாறு எழுதப்பெற வேண்டும் என்ற விளக்கத்தினையும் அந்நூற்பாவில் சுட்டியுள்ளதால் இங்கு விளக்க முறைக் கோட்பாடு பயின்று வந்துள்ளது.

இவ்வாறு விதியையும் விளக்கத்தையும் நூன்மரபினுள் ஒருசேரச் சுட்டியுள்ளது தொல்காப்பியரின் இலக்கணப் படைப்பிற்கு மகுடமாகத் திகழ்கிறது.

தொடர்பு முறைக் கோட்பாடு

தொடர்புமுறைக் கோட்பாடு என்பது இலக்கணி தாம் கூற விரும்பும் பொருண்மையை ஒரே நூற்பாவில் கூற இயலாதபோது அதனை அடுத்தடுத்த நூற்வினுள் விளக்கத்தினையோ அதற்கான விதியினையோ அடுத்த இயலிலோ அதிகாரத்திலோ விளக்கப்பெறுவது இயல்பு. அவ்வாறு விளக்கப்பெறும் இலக்கண முறைமைக்குத் தொடர்புமுறைக் கோட்பாடு என்று பொருள்.

தொடர்த்தொடர்பு

இக்கோட்பாடானது ஒரே பொருண்மையை விளக்கத் தொடர்ச்சியாகப் பல நூற்பாக்களைக் கையாண்டு விளக்கப்படுவது தொடர்த் தொடர்புமுறைக் கோட்பாடு எனப்படும்.

மாத்திரை – நூற்பா எண் மூன்று முதல் ஏழாவது நூற்பா வரை அமைந்த நூற்பாக்கள் மாத்திரையின் இலக்கணத்தைச் சுட்டுவதாக அமைந்துள்ளன.

எழுத்து – பதினேழாவது நூற்பா முதல் இருபத்தொன்றாவது நூற்பா வரை உயிர்மெய்யெழுத்தின் இயல்பு பற்றி விளக்குவதாக நூற்பாக்கள் அமைந்துள்ளன.

எழுத்துக்களின் பிற மரபுகள் – எழுத்துக்களின் பிற மரபுகள் என்ற பகுதியில் வினா, சுட்டு, இசைநூல் முறையில் எழுத்தொலிகள் எனும் பொருண்மையில் நூற்பாக்கள் அமைந்துள்ளன.

  • மேற்கண்ட விளக்கங்களின்வழித் தொல்காப்பிய நூன்மரபில் தனிநின்ற எழுத்துக்களின் இலக்கணத்தினை விளக்க முற்படும்போது பல்வேறு இடங்களில் தொல்காப்பியர் தொடர்த் தொடர்பு முறைக் கோட்பாட்டினைக் கையாண்டு உள்ளமையை இதன்வழி அறிந்துகொள்ள முடிகிறது.

வாய்பாடு

வாய்பாட்டுக் கோட்பாட்டு முறை என்பது நூற்பாவின்வழி விதியினைச் சுட்டும் குறியீட்டு மரபுச்சொல் வன்மையை அட்டவணைப்படுத்துதல் என்பது வாய்பாடு எனப்படும்.

  • தொல்காப்பிய நூன்மரபில் வாய்பாட்டுக் கோட்பாட்டு முறையானது இடம்பெறவில்லை.

புறனடைக் கோட்பாடு

ஓர் இலக்கணி தான் கூற விரும்பும் கருத்தினைத் தொடர்ச்சியாகக் கூறவியலாதவிடத்து இதற்கு மேலும் ஒரு முடிபு அல்லது விதி என்ற செய்தல் என்ற விதியின்வழிப் புறனடைக் கோட்பாடு எனும் இலக்கணக் கோட்பாட்டினை இலக்கணத்தினில் பயன்படுத்துகின்றனர்.

  • தொல்காப்பிய நூன்மரபினைப் பொறுத்தவரை புறனடைக் கோட்பாடானது இடம்பெறவில்லை.
  • அவ்வாறு இடம்பெறாமைக்குக் காரணம் தனிநின்ற எழுத்துக்களின் தொகை வகையினைச் சுட்டும்போது இலக்கணங்கள் மாறுபடுவதில்லை என்ற கருத்தாக்கம் பெறப்படுகிறது. மேலும் காலச்சூழல் மாறுபாட்டிற்கேற்ப எழுத்துக்களின் வகையில் மாற்றம் ஏற்படுவது இயல்பின்மை எனும் கருத்துருவும் பெறப்படுகிறது.

முடிவு

தொல்காப்பிய நூன்மரபு நுட்பமான மொழிக்கூறுகளைக் கையாள்வதில் எழுத்தின் நிலைத்தன்மை என்ன, தனிநின்ற எழுத்துக்களின் இலக்கணத்தினை விளக்க முற்படுகையில் அவற்றினூடே இடம்பெற்றுள்ள இலக்கண அமைப்புமுறைக் கோட்பாட்டின்வழித் தொல்காப்பிய நூன்மரபு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனைக் கீழ்க்கண்ட அட்டவணை மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

இலக்கண அமைப்புமுறைக் கோட்பாட்டில் நூன்மரபு,

    மொத்த நூற்பாக்கள் = 33

வ.எண் கோட்பாட்டின் பெயர் நூற்பா எண்ணிக்கை
1. ஒற்றைப் பொருண்மை 30
2. இரட்டைப் பொருண்மை 3
3. பன்முகப் பொருண்மை 0
4. விதிமுறை 5
5. விளக்கமுறை 27
6. விளக்கமும் விதியும் 1
7. தொடர்த்தொடர்பு முறை 3
8. புறனடை 0

துணை நின்றவை

  1. தொல்காப்பிய எழுத்ததிகாரம், கழக வெளியீடு
  2. கழகத் தமிழகராதி, கழக வெளியீடு
  3. கிரியாவின் தற்காலத் தமிழகராதி
  4. தமிழ் தெலுங்கு இலக்கணப் போக்குகள், இந்தியமொழிகள் பள்ளி துறை வெளியீடு சி.சாவித்ரி
  5. இலக்கண அமைப்பு முறைக் கோட்பாட்டில் மாத்திரை திண்ணை இனைய இதழ் (கட்டுரை).
Series Navigationதிடீர் மழைதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *