இலக்கிய வட்டம் வானொலி ஒலிபரப்பின் இரண்டாம் பகுதி

This entry is part 3 of 16 in the series 17 ஜனவரி 2016

 

Collage_2
 
photo caption: கடிகாரச் சுற்றுப்படி: நரசிம்மன், வித்யா ரமணி, எம். ஸ்ரீதரன், விக்ரம் சதீஷ். நடுவில்: மு. இராமனாதன்
 
,



வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம்தொகுப்பு: மு இராமனாதன்

பகுதி-2 இலக்கிய வட்டத்தைப் பற்றி…- நேர்காணல்கள்

[ரேடியோ டெலிவிஷன் ஹாங்காங்(RTHK) சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திய தொடர் ஒலிபரப்பில் 19.9.15 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டத்தைக் குறித்த உரையாடல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் எழுத்து வடிவம் இங்கே இடம் பெறுகிறது. இது இரண்டாம் பகுதி]

இலக்கிய வட்டத்தைப் பற்றி…- நேர்காணல்கள்

மு.இராமனாதன்:

நேயர்களே! ஹாங்காங் இலக்கிய வட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அடுத்து இலக்கிய வட்டத்தில் பங்கெடுத்த நண்பர்களில் சிலர், தற்சமயம் ஹாங்காங்கிலும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலுமாக வாழ்பவர்கள், தங்களது அனுபவத்தை, நேரிலும் தொலைபேசி வாயிலாகவும், இப்போது நம்மோடு பகிர்ந்து கொள்வார்கள்.

முதலாவதாக நண்பர் நரசிம்மன். 2001ம் ஆண்டு இந்த இலக்கிய வட்டத்தை நிறுவியவர்; அதன் ஆரம்ப கால ஒருங்கிணைப்பாளர். பொதுத்துறை வங்கி ஒன்றில் மேலாளராகச் சென்னையில் பணியாற்றுகிறார். தொலைபேசியில் நமக்காகக் காத்திருக்கிரார். நரசிம்மன் அவர்களே, வணக்கம்.

நீங்கள் ஏன் ஹாங்காங்கில் இலக்கிய வட்டம் ஆரம்பித்தீர்கள்? அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு ஏன் வந்தது?

நரசிம்மன்:

புலம் பெயர்ந்த வாழ்பவர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை,இடம், தொழில்- இவற்றத் தாண்டி தங்களுக்கான ஒரு அடை யாளம் அவசியமாக இருக்கிறது. அதனால் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு இவற்றின் மூலமாகத் தங்களை ஒரு சமூகமாக நிறுவிக்கொள்கிறார்கள். எனவேதான் தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் தமிழ்ச் சங்கங்கள் தோன்றுகின்றன.

ஹாங்காங்கிலும் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. கலை, இசை, நாடகம்,திரைப்படம் என பல நிகழ்வுகளை அரங்கேற்றி வருகிறது. ஆனால் பெரும்பான்மையினரின் தேவைகளைக் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் அதற்கு இருக்கிறது. தீவிர இலக்கியத்திற்கு அங்கே இடம் குறைவாக இருந்தது. எனவேதான் இலக்கியம் என்ற ஒரே குறிக்கோளுடன் புதியதோர் அமைப்புக்கான தேவை உருவானது. வட்டம் வந்தது.

மு.இராமனாதன்

இந்த இலக்கிய வட்டத்தினால், அதைக் கேட்டவர்கள், பேசியவர்கள் பயனடைந்தார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

நரசிம்மன்:

நிச்சயமாகப் பயன் அடைந்தார்கள். நானும் அதில் ஒருவன். உதாரணமாக தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் யூனுஸ் பாய் பர்மாவில் பிறந்தவர்; ஹாங்காங்கில் வாழ்பவர். தமிழின்பால் பற்று மிக்கவர். அவர் ஒரு களஞ்சியம். அற்புதமான பல விஷயங்களை தன்னிடம் வைத்திருந்தார். அதில் சிலவற்றையேனும் எடுத்துப் பரிமாறுவதற்கு இலக்கிய வட்டம் அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்தது என்று சொல்லலாம்.

இலக்கிய வட்டக் கூட்டங்களில் பேசியவர்களில் ஸ்ரீதரன், இராமனாதன், குருநாதன் போன்றவர்கள் ஏற்கனவே நிறைய வாசித்தவர்கள்; எழுத்தாளர்களுங்கூட. பிரசாத், ராம், ராஜேஷ் முதலானவர்கள் ஹாங்காங்கில் இப்போதும் வசிக்கும் நண்பர்கள்; நான், சம்பத், செந்தில் போன்ற சிலர், சில காலம் ஹாங்காங்கில் பணியாற்றியவர்கள். எல்லோரும் இலக்கிய வட்டம் என்ற இந்தச் சிறிய அமைப்பின் மூலமாக பலன் பெற்றவர்கள் என்று சொல்லலாம். இப்போது எங்களுக்கு என்ன பலன் கிடைத்துவிட்டது? எங்களுடைய வாழ்க்கையிலே பிடித்துக்கொள்ள இன்னொரு கொம்பு கிடைத்துள்ளது. புளியங்கொம்பு கிடைத்துள்ளது. ஏனென்றால் நல்ல சிந்தனைகளையும் தெளிவான எண்ணங்களையும் உருவாக்குவதற்கு நல்ல கலை இலக்கியம் நிச்சயம் தேவை.

மு.இராமனாதன்:

இலக்கிய வட்டம் ஹாங்காங் தமிழர்களிடம் என்னென்ன விதமான தாக்கங்களை ஏற்படுத்தியது?

நரசிம்மன்:

இலக்கிய வட்டத்தினால் பல்வேறு புதிய வாசல்கள் திறந்தன. கலையிலும் , இலக்கியத்திலும், நாடகத்திலும் திரைப்படங்களிலும் நிகழும் புதிய முயற்சிகளைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ஹாங்காங்கில் வாழும் தமிழர்களுக்கு, அவர்களில் ஒரு சிறுபான்மையினருக்கு, அதிகபட்சம் ஒரு 25 பேருக்கு, இலக்கிய வட்டம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மு.இராமனாதன்:

நன்றி திரு.நரசிம்மன் அவர்களே . தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதற்கும், எங்களோடு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.

நண்பர்களே, அடுத்து நாம் திருமதி. வித்யா ரமணி அவர்களுடன் பேசப்போகிறோம். திருமதி. வித்யா ரமணி ஹாங்காங்கில் இருபது ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்தார். அவர் ஹாங்காங் ஷுயொன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயிற்றுவித்தார். ஹாங்காங்கில் தனியார்துறையில் கலைத்துறைக்காகத் துவங்கப்பட்ட முதல் தனியார் பல்கலைகழகம் அது. திருமதி வித்யா ரமணி ஆங்கில இலக்கிய ஆர்வலர். கர்னாடக இசையிலும் கலைப்படங்களிலும் ஈடுபாடு மிக்கவர்.

வணக்கம் திருமதி. வித்யா ரமணி அவர்களே, இலக்கிய வட்டத்திற்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள் ?

வித்யா ரமணி:

ஒரு நாள் திரு.இராமனாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். இலக்கிய வட்டத்தில் பேசவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எனக்குத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஆனால் அதைப் பற்றி பேசுவதற்குத் திறன் இல்லை என்று பதில் சொன்னேன். அதற்கு அவர் அந்த மேடை தமிழ் இலக்கியத்திற்கானது மட்டுமில்லை. எல்லா இலக்கியங்களுக்குமான மேடை. இலக்கியம் மட்டுமில்லை, வாழ்க்கை, கலாச்சாரம் என்று சமூகம் சார்ந்த எல்லா விஷயங்களுக்குமான மேடை. அந்த மேடையில் தமிழில் பேச வேண்டும், அவ்வளவுதான் என்று சொன்னார். அது எனக்கு தைரியத்தையும் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் அளித்தது. அப்போதிலிருந்து நான் இலக்கிய வட்டக் கூட்டங்களில் கலந்து கொண்டேன். இரண்டு மூன்று முறை பேசவும் செய்தேன். அந்த அனுபவங்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தன; மனதுக்கு நிறைவளிப்பவையாகவும் அமைந்தன.

மு.இராமனாதன்:

நன்றி வித்யா ரமணி அவர்களே!

நேயர்களே அடுத்து நாம் திரு. எம். ஸ்ரீதரன் அவர்களோடு பேசப் போகிறோம். பயணி என்னும் புனைபெயர்கொண்ட எம். ஸ்ரீதரன் இந்திய அரசின் வெளியுறவுத்துறையில் பணியாற்றுகிறார். தமிழ், ஆங்கிலம், சீன மொழிகளில் புலமையுடைவர். ஹாங்காங்கில் பணியாற்றியபோது சீன மொழியை நேரடியாகத் தமிழில் கற்றுக்கொள்வதற்காக ‘சீன மொழி ஓர் அறிமுகம்’ என்கிற நூலை எழுதி 2002ல் வெளியிட்டார். அதற்குப் பிற்பாடு சீனாவின் சங்க இலக்கியமான ‘ஷிழ் சிங்’ (Shi Jing) என்கிற நூலிலிருந்து சில தேர்ந்தெடுத்த பாடல்களை நேரடியாகத் தமிழிலே மொழி பெயர்த்து ‘வாரிச் சூடினும் பார்ப்பவர் இல்லை’ (காலச்சுவடு, 2012) என்கிற பெயரிலே வெளியிட்டார். தற்போது வாஷிங்டனில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். நோபல் விருது பெற்ற சீன எழுத்தாளர் மோ-யான் எழுதிய புகழ்பெற்ற குறுநாவல் ‘மாற்றம்’. அதை நேரடியாகச் சீனத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். ‘மாற்றம்’.(காலச்சுவடு, 2015)

வணக்கம் ஸ்ரீதரன், ஹாங்காங் இலக்கிய வட்டத்தைப் பற்றிய உங்களுடைய அனுபவங்களைச் சொல்லுங்கள்.

 

எம். ஸ்ரீதரன் :

அனைவருக்கும் வணக்கம். ஒரு மாங்கொட்டையை உள்ளங்கையில் வைத்து உற்று கவனித்திருக்கிறீர்களா? சப்பலாக, தக்கையாக பசுமையின்றி வற்றிப் போயிருக்கும். ஆனால் உங்களுக்கு மாம்பழம் தெரியுமென்றால் மாமரத்தின் கீழே நின்றிருக்கிறீர்கள் என்றால், மாவிலைத் தோரணம் கண்ணில் பட்டாலே காதில் நாதஸ்வர இசை கேட்பதை அனுபவித்திருக்கிறீர்கள் என்றால், அந்த மாங்கொட்டை உங்கள் உள்ளங்கையில் உயிர்ப்பு கொண்டுவிடுகிறது. நாங்கள் பெய்ஜிங்கிலிருந்து ஹாங்காங் வந்த நேரம், நண்பர் நரசிம்மன், இலக்கிய வட்டம் துவங்கலாமே என்றார். என் காதில் நாதஸ்வர இசை கேட்டது. மாதம் ஒரு முறை வாரக் கடைசிகளின் தாழ் மதியங்களில் 200 பேர் உட்காரக்கூடிய அழகான சாம்பல் வண்ண அரங்கத்தில் , பொன் வைத்த இடத்தில் பூ வைத்த மாதிரி, ஒரு இருபது பேர் போலக் கூடுவோம். தெரிந்ததைச் சொல்லுவதற்கு, தெரிந்ததைச் சொல்லுபவர்கள் கேட்பதற்கு, இயந்திரங்களின் கோரைப் பற்களின் பதிவிலிருந்து தப்புவதற்கு, பழைய நண்பர்களின் புது அழகுகளும் ரசனைகளும், புதிய நண்பர்களின் புத்தம் புது அழகுகளும் ரசனைகளும் மனதைத் தாலாட்டின. அப்பளத்துக்கும் பபுள்கம்முக்கும் அப்பால் கூட சில விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்து, உறுதிப் படுத்திக்கொண்டு, அனுபவித்தோம். மாஞ்சுவையிலும் இலக்கிய அனுபவங்களிலும் கூட குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லைதானே. தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

மு:இராமனாதன்:

அடுத்து நம்மோடு உரையாடுவதற்காக ஸ்டுடியோவில் காத்திருப்பவர் திரு.விக்ரம் சதீஷ். இளைஞர். 2011 முதல் ஹாங்காங்கில் வசித்து வருகிறார். புத்தகங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். விக்ரம், நீங்கள் எதற்காக இலக்கிய வட்டக் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தீர்கள்?

விக்ரம் சதீஷ்:

என்னைப்போல புலம் பெயர்ந்து , தாய்நாட்டை விட்டு வெளியே வாழ்பவர்களுக்கு மொழிதான் ஒரு பெரிய பற்றுதல். ஹாங்காங் வந்ததும் தமிழ் சார்ந்த இயக்கங்களுடன் என்னைத் தொடர்புபடுத்திக்கொள்ள ஆசைப்பட்டேன். தேடினேன். அதில் எனக்கு இரண்டு நல்ல இயக்கங்கள் கிடைத்தன. ஒன்று, தமிழ் பண்பாட்டுக் கழகம், இன்னொன்று இலக்கிய வட்டம்.

நம்முடைய வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணம் என்று நான் நினைப்பது , இலக்கியத்தை சரியாகப் படிக்காததும், அடுத்த தலைமுறைக்கு அதை முறையாக சொல்லித் தராததும்தான். அதனால் இலக்கியவட்டக் கூட்டங்களில் பங்கு கொண்டேன். இலக்கியத்தைப் பற்றிய எனது அறிவும் ஆர்வமும் அதிகமானது..

மு:இராமனாதன்:

நீங்கள் கலந்து கொண்ட கூட்டங்களைப் பற்றிச் சொல்ல முடியுமா ?

விக்ரம் சதீஷ்:

இரண்டு கூட்டங்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. ஒரு முறை சிலப்பதிகாரத்தைப் பற்றியும் , ஒரு முறை கம்பராமயணத்தைப் பற்றியும் நடந்த கூட்டங்கள். ஒரு முறை நம் தமிழ் தாத்தா யூனுஸ் ஐயா அவர்களுடைய புத்தகத்தைப் பற்றிய வாசிப்பும் அதைப்பற்றிய கலந்தாய்வும் நடைபெற்றது.

நமக்கிருக்கும் பல்வேறு பணிகளுக்கிடையே ஹாங்காங் போன்ற ஊர்களில் இந்தக் கூட்டங்களை நடத்துவதே மிகவும் சிரமமான காரியம். அதற்காக நான் அமைப்பாளர்களைப் பாராட்டுகிறேன்.

மு:இராமனாதன்:

நல்லது விக்ரம். கடைசியாக ஒரு கேள்வி. உங்களுடைய பார்வையில் இலக்கிய வட்டம் எப்படிச் செயல்படவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

விக்ரம் சதீஷ்:

நமக்கு இலக்கிய வட்டத்தில் ஒரு மின்னஞ்சல் குழு இருக்கிறது. அதை இன்னும் சிறப்பாகப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும். இன்னும் அதிகமான கூட்டங்கள் நடத்தலாம். இன்னுமொன்றைச் சொல்ல வேண்டும். யாரும் வருத்தப்படக்கூடாது. சிலர் கூட்டங்களுக்கு நன்றாகத் தயார்படுத்திக்கொண்டு வருகிறார்கள். சிலர் முன் தயாரிப்பு இல்லாமல் வந்து பேசுவதும் நடக்கிறது. கற்றல் கேட்டல் – இதற்காகத்தான் நாம் இந்தக் கூட்டங்களுக்கு வருகிறோம். அதனால், இந்தக் கூட்டங்களுக்கு வரும்போது, பேச்சாளர்கள் போதிய தயாரிப்புடன் வந்தால் நன்றாக இருக்கும்.

மு:இராமனாதன்:

நேயர்களே! இதுவரை இலக்கிய வட்டத்தில் பங்கெடுத்த நண்பர்களில்சிலர் தங்களது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள். தொடர்ந்து நான்கு நண்பர்கள் தாங்கள் இலக்கிய வட்டத்தில் நிகழ்த்திய உரைகளில் தங்களுக்குப் பிடித்தமான உரையைப் பற்றிக் குறிப்பிட்டு, அதிலிருந்து சில பகுதிகளை நம்மோடு பகிர்ந்து கொள்வார்கள்.

photo caption: கடிகாரச் சுற்றுப்படி: நரசிம்மன், வித்யா ரமணி, எம். ஸ்ரீதரன், விக்ரம் சதீஷ். நடுவில்: மு. இராமனாதன்

தொடரும்

[ஒலியிலிருந்து எழுத்து: கவிதா குமார்]

[வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம், தொகுப்பு:மு.இராமனாதன், தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com]

Series Navigationஇதோ ஒரு “ஸெல்ஃபி”சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது
author

மு. இராமனாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *