ஈரத்தில் ஒரு நடைபயணம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 27 in the series 21 செப்டம்பர் 2014

SURY5194

இரா.மேகலாராணி
எங்கும் பசுமை எப்பொழுதும் குளுமை பூக்களின் ஊர்வலம் மரங்களின் ஏர்நடை கொம்பினை சுற்றும் கொடிகள் இக்குழுக்கள் இடையே மனித தடம் பதிய ஒரு பயணம்.
மலைச்சாரலுக்கு புறப்படும் தருணம் என கேட்ட உடனே செவியில் ஒரு சிலிர்ப்பு. அதனைத் தொடர்ந்து மலையில் ஏறுகையில் ஏற்பட்ட அனுபவங்கள் ஒன்றல்ல பல. தார் சாலையிலே வண்டி பயணம். இரு பக்கங்களிலும் வரவேற்பு பலகையென மரங்கள். இதற்கிடையில் கட்டப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தின் உச்சி இயற்கையின் அழகினை இமைக்காமல் காண வைத்தது.
தொடந்த பயணத்தில் மனித வாசமோடு தொடர்பில்லாத வாழ்க்கை நெருங்கிக் கொண்டிருந்தது.
பகலவன் தன்னுடைய கடமையை முடித்ததும் பனி இரவுகள் தங்களின் செயல்களை செய்யத் தொடங்கின. வெளியில் உள்ள குளிர் உள்ளே வெப்பத்தை தேட சூடாக டீ அருந்தினோம். அதோடவே சுவையான உரையாடலையும் ரசித்தோம்.
மனிதர்கள் உறங்கும் நேரம் காடு என்ன செய்கிறது என்ற ஆவல் எங்களை உள்ளே இழுத்தது. மின்மினியை கண்களாகக் கொண்ட காட்டின் நடுவே பயணித்தோம். அறிவியல் முயற்சிகள் யாவும் அறவே அற்ற இடத்தில் நடைபாதையைத் தொடர்ந்தோம். விண்மீன்கள் விளக்காக பாதங்களின் ஓசை மட்டுமே செவிக்கு புலனாகின்றது.
அருகில் உள்ளவர்களை காண இயலாத இருட்டில் அமைந்த அவர் உள்ளாரா இவர் உள்ளாரா என்ற தேடல் மனங்களை இணக்கமாக்கியது. இரவின் சிறு பயணம் அறிவியல் துணையையும் அது இன்றி வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும் எங்கள் முன் விரித்தது.
வித்தியாசமான கோணங்களில் இருளில் புகைப்படம் எடுக்க அவ்வெளிச்சம் மின்னல் ஒளியாய் வெட்டியது. புதுவித சத்தங்கள் எழ இதயத்துடிப்பு பேசியது கிளம்பு என்று குடியிருப்புக்குள் சரணடைந்தோம்.
மூலிகை வாசம் மூச்சினில் கலக்க இரவு உணவு நாக்கிற்கு உணர்ச்சியைக் கொடுத்தது. ஒலியின் விவரம் அறியா தேடல்கள் சிரிப்புடன் பதில் கூறும் மண்ணின் மைந்தனின் பதில்கள் நேரம் ஓடின. காட்டின் விசாரிப்புடன் அருகிலிருந்தவர்களின் சுவையான பகிர்தல்கள் நடந்தேறின.
சஞ்செய் ஜெய்ஸ்வால், அவரது மனைவி, கவிஞர் திலகபாமா, அமிர்தம் சூர்யா, டிராக்டர் முருகன், செல்வம் அண்ணா, இளங்கோ அண்ணா, நாவலாசிரியர் தமிழ்மகன், மதுரை சரவணன் சித்தப்பா, பாலகணேஷ் மற்றும் பல நண்பர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சியைத் தந்தது. நீண்ட நேர அறிமுகத்திற்குப் பின்னர் இரவு மெல்ல சுதாரிக்க எங்கள் கண்கள் மெல்ல சொருகின.
விடியற்காலை காட்டிற்குள் சிறிது தூரம் வசிக்கச் சென்றோம். மிளகுகொடி, காப்பி, ஆரஞ்சு, கொய்யா என பல வகையான செடி, கொடி, மரங்கள், பெயர் அறிய முடியாத பூச்சியினங்கள் உடன் நாங்கள்.
50 கிலோ மனித மிருகங்களைக் கண்டு 3000டன் காட்டு மிருகம் (எருமை) குதித்து ஓடியது வியப்பையும் மிரட்சியையும் தந்தது. பல வண்ணங்களாக விளங்கும் காட்டினை ஒரு புகைப்பட பெட்டிக்குள் அடைக்க முயன்று கொண்டிருந்தோம்.
எங்களுடன் வழிகாட்டியாக வந்தவர் வாழ்க்கை அனுபவங்களுடன் காட்டின் செழிப்பையும், பயிர் விளைச்சலையும், மனித வாழ்க்கை சிக்கல்களையும் கூறிக் கொண்டே வந்தார்.
முன் பின் இருப்பவரை அறிய முடியாத அடர்ந்த காட்டினை மண்சரிவினைத் தடுக்கும் கற்கள் உதவியுடன் கடந்து நடைபாதையை அடைந்தோம்.
வரிசையாக இருந்த வெள்ளையான ஊமத்தம் பூ விஷமானது விஷத்தினை உண்ட சிவனுக்குரியது என்ற தகவலை கொடுத்தார் சஞ்செய். ஆறு நபர்கள் இருந்தாலும் சுற்றி வளைக்க முடியாத இளவம்பஞ்சு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இவை காப்பி வளர நிழலைக் கொடுக்கின்றன என்றார் அம்மண்வாசி.
காட்டின் உலக அழகியாக தோன்றிய அந்திமாந்தாரை பல வண்ணங்களில் கண்களைப் பறித்தன. கல்வாழையினுள் இருந்த அவற்றின் விதைகள் பழங்கால டைனசர் முட்டைகளை நினைவுக்குக் கொண்டு வந்தன.
காட்டினை ஆச்சரியத்துடன் வாசித்த எங்களை அவ்வூர் வாசிகள் விசித்திரத்துடன் கண்டு களித்தனர். அன்றாடம் உழைக்க காரணமான இடம் கலவரம் செய்ய உணவைத் தேடிச் சென்றோம். எங்களைப் பிரிய மனமின்றி எங்களுடன் வந்த அட்டைப்பூச்சியை வரவேற்க அது எங்களுக்கு புகைப்படமெடுக்க கதநாயகனாக மாறியது.
உணவு உள்ளே செல்லும் வேளையிலும் மற்ற உறுப்புகள் காட்டை நோக்கியே விரிந்து கொண்டிருந்தன. மீண்டும் புதுவாசம் தேடச் சென்றோம். வழியெங்கிலும் இருந்த உபயோகமில்லா அரசு அலுவலகங்கள் நாட்டையும், அரசியலையும் குறித்த சிந்தனையை தோற்றுவிக்காமல் இல்லை. சூரியன் உச்சிக்குவர படைத்தவனைக் காணச் சென்றோம்.
அங்கிருந்து  எஸ்டேட் பயணமானோம். அவ்விடம் அனைவரின் மனதினுள்  புதைந்திருந்த சிறு பிள்ளைதனத்தை வெளிக்கொண்டு வந்தது. சிறிது சிறிதாக உயிர் பெற்ற செல்லிடை பேசியில் அவசர அவசரமாக வீடு, அலுவலகத்திடம் நலம் விசாரித்து விட்டு ஊஞ்சலில் உற்சாகமானோம்.
மெல்ல மெல்ல மனித வாழ்க்கை அழைக்க முடியாத பயணத்தின் முடிவினை எட்டினோம். காடு செல்ல செல்ல கனவுலகம் மறைந்து நடைமுறை வாழ்வு கண் முன் மிளிர்ந்தது. 14.9.14 – 15.9.14 ஆகிய இரு நாள் பயணம் காட்டை பற்றிய புரிதலோடு மனித எந்திர வாழ்வின் சலிப்பிற்கு மருந்தாகவும் அமைந்தது.
மழைக்காட்டின் மண்ணோடு எங்களின் உணர்வினை விதைக்க இத்தகைய சிறந்த ஏற்பாட்டினை செய்த கவிஞர் திலகபாமா அவர்களுக்கு நன்றி. என்னுடன் பயணம் மேற்கொண்ட அன்பான நண்பர்களுக்கு அன்புடனான வாழ்த்துக்கள்.
முடிந்த பயணத்தின் தொடர்ச்சியை இரவுக் கனவில் தொடரும் நினைவுகளுடன்…
இரா.மேகலாராணி M.A.
எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி

Series Navigationவாக்குமூலம்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *