உண்மையான உண்மையும் உண்மைபோலும் உண்மையும்…….

This entry is part 3 of 9 in the series 18 டிசம்பர் 2022

உண்மையான உண்மையும் உண்மைபோலும் உண்மையும்…….

_ லதா ராமகிருஷ்ணன்

பல வருடங்களுக்கு முன் – 80களில் என்று நினைக்கி றேன் – என் உறவினர் ஒருவருடைய மனைவி அந்தக் காலத்திலேயே டைட் பாண்ட், டைட் ஷர்ட் எல்லாம் போட்டுக் கொள்வார். “இப்படி உடையணிந்து கொள்வது தான் என் கணவருக்குப் பிடிக்கும்”, என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். ஆனால், நான் அறிந்தவரையில் அந்த உறவினர் அப்படியெல்லாம் ‘அல்ட்ரா மாடர்ன்’ பேர்வழியல்ல. ’ஆனால் மிக நெருக்கமான மனிதர்க ளைக் கூட நாம் முழுமையாக அறிந்துகொண்டு விட்டோம் என்று சொல்லி விட முடியாதல்லவா’ என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்.

ஒருநாள் அவர்கள் வீட்டில் இருந்தபோது உள்ளறையில் அந்த உறவினருக்கும் அவருடைய மனைவிக்கும் நடந்த உரையாடலைக் கேட்க நேர்ந்தது. அந்த மனிதர் கெஞ்சிக் கொண்டிருந்தார் – ”வேண்டாம், டாக்டர் வீட்டுக்குப் போகும்போது இந்தமாதிரி உடையணிந்து கொண்டு வராதே, ப்ளீஸ்” என்று. அதற்கு அவருடைய மனைவி ஆங்காரமாக ”இப்படித்தான் வருவேன்” என்று எதிர் வாதம் செய்துகொண்டிருந்தார்.

பெண்கள் நாகரீக உடையணியக் கூடாது என்பதல்ல நான் சுட்டிக்காட்டுவது. திருமணம் என்றால் அதில் ஆணா திக்கம் எவ்வளவு ஆகாததோ அதேபோல்தான் பெண்ணாதிக் கமும்.

தாய்-தந்தையரைப் பிரிந்து தனிக்குடித்தனம் வர மாட்டேன் என்று சொன்னதற்காக கணவனும் கணவன் வீட்டாரும் கொடுமைப்படுத்தினார்கள் என்று சொல்லி அவர்களை சிறை யில் தள்ளிய பெண்கள் உண்டு.

சமீபத்தில் காதலித்து மணந்த பெண்ணைத் துண்டுதுண் டாக வெட்டிப்போட்ட ஆணைப் பற்றி அதிகம் படித்தோம். பெற்றோர்களின் கட்டாயத்துக்காக ஒரு கல்யாணம் செய்து கொண்டு கள்ளக் காதலன் அல்லது நல்ல காதல னோடு சேர்ந்து அந்த அப்பாவிக் கணவனைக் கொலை செய்துவிட்ட பெண்களைப் பற்றியும் செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன.

இவை விதிவிலக்குகள் என்று சொல்வோர் உண்டு. எண் ணிக்கையை, விழுக்காடு களைத்தான் பார்க்க வேண்டும் என்று சொல்வோர் உண்டு. ஒருவகையில் அது சரியே என்றாலும் எல்லாவகையிலும் அதுவே சரியாகிவிடாது.

பாலியல்ரீதியான தொந்தரவுகளுக்கும் துன்புறுத்தல்க ளுக்கும் ஆளாகும் பெண்கள் நிறையவே உண்டு. அதே சமயம், கவனம்கோரலாய், தன் நற்பெயரைப் பாது காத்துக் கொள்ளும் உத்தியாய் இத்தகைய குற்றச்சாட்டு களை முன்வைக்கும் பெண்களும் உண்டு.

எதற்கெடுத்தாலும் பெண்ணை ‘Victim’ என்றே காட்டுவது அவளுக்குத் தன்னுடைய செயல்கள் தொடர்பான ஒரு பொறுப்புத்துறப்பையும், self justificationஐயும் சுலபமாக வழங்கிவிடுகிறது. இந்தப் போக்கு – மனப்போக்கும் சரி, வாழ்வியல்போக்கும் சரி – பெண்ணுக்கும் நன்மை பயக்காது.

மெடில்டா என்ற சிறுமியின் கதையைப் பாடலாகப் படித் திருக்கிறேன். எதற்கெடுத் தாலும் விளையாட்டாகப் பொய் சொல்லி மற்றவர்களை ஏமாற்றி மகிழும் சிறுமி உண்மை யாகவே நெருப்பில் மாட்டிக்கொண்டு உதவிக் குப் பிறரை அழைத்துக் கதறும்போது அவள் வழக்கம் போல் பொய் சொல்லுகிறாள் என்று கருதி யாருமே வர மாட்டார்கள்.

இப்படித்தான், காரியம் சாதித்துக்கொள்ளவோ, தன்னு டைய தவறை மூடி மறைக்கவோ ‘பெண்ணுரிமை’ பேசும் பெண்கள் உண்மையாகவே அல்லல்படும் பெண்களின் உரிமைகளுக்கு எதிராகவே செயல்படுவதாகத்தான் சொல்லமுடியும்.

‘NO MEANS NO’ – இதை இரு பாலரும் புரிந்துகொண்டு விலகிவிடுவது நல்லது.

தனக்குக் கிடைக்காத பெண்ணை, தன்னைக் காதலிக்க மறுத்தவளை, அல்லது தன்னோடு சில காலம் பழகி பின்பு வேண்டாமென்று ஒதுங்கிவிட்டவளை ரயில் தண்டவாளத்தில் தள்ளி உயிரிழக்கவைத்தவன் சிறை யில் தானே வாழ்நாளைக் கழிக்கவேண்டும். ஒருவேளை தான் செய்த தவறுக்காக வருந்துவானேயானால் அது சிறைத்தண்டனையை விடக் கொடுமையான தண்டனையல்லவா?

காதலர்களோ, நட்பினரோ – எந்த உறவுநிலையாயினும் தன்மதிப்புடன் நடந்துகொள்வது நல்லது. ‘என் மேல் அன்பு செய், அன்பு செய் என்று அச்சுறுத்திக்கொண்டே, கட்டாயப் படுத்திக்கொண்டே இருப்பதால் ஆவதென்ன? ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்ற பாடல் இன்றைக்கும் உயிர்ப்புள்ளது!

சில காலம் ஒன்றாகப் பழகிய ஆண் – பெண் இருவரில் திடீரென்று ஒருநாள் அந்தப் பெண் அந்த ஆண் தன்னிடம் அத்துமீறினான் என்று ‘வதந்தி பரவும் இடங்களாகப் பார்த்து சொல்லத் தொடங்கினார். அந்த இளைஞனை எனக்குத் தெரியும். கேட்ட போது ‘இல்லை லதா – நாங்கள் பழகியது உண்மைதான். இப்போது எங்களுக்கு ஒத்து வரவில்லை. அதனால் நான் விலகிக்கொண்டு விட்டேன். அதிலிருந்து என்னை இப்படி கேவலமாகப் பேசுகிறாள்” என்று வருத்தத்தோடு சிரித்துக்கொண்டே கூறினார் அந்த இளைஞர்.

இன்னொரு இளைஞர் கீழ்க்கண்ட உரையாடலை reference ஆகத் தந்தார்:

ஒரு பெண், ’எனக்குக் கல்யாணத்தில் எல்லாம் சுத்தமாக நம்பிக்கையேயில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் சுத்தப் பேத்தல். வாழ்நாளில் ஒருவரோடு மட்டும் தான் உடலுறவு கொள்ளுதல் என்பது என்ன அநியாயம்’ என்ற ரீதியில் பேசிக்கொண்டே போனார். அதையெல் லாம் கேட்ட தாக்கத்தில் அந்தப் பெண்ணுக்கு ’நாம் சந்திக் கலாமா?’ என்று நான் குறுஞ்செய்தி அனுப்பியவுடன் குய்யோ முறையோவென்று ‘ஐயோ, எனக்குக் குறுஞ் செய்தி அனுப்பிவிட்டான் , என்னைக் கேவலமாக எண்ணிவிட்டான், என்னிடம் பாலியல்ரீதியாக அத்துமீற முயற்சிக்கிறான்’ என்று பார்த்தவர் கேட்டவரிட மெல்லாம் முறையிட ஆரம்பித்துவிட்டாள் அந்தப்பெண்”.

நாம் பேசுவதை எல்லோரும் ஒரே அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள்வார்கள், எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நினைப்பது சரியல்ல.

சில வருடங்களுக்கு முன்பு ‘கால்-டாக்ஸி ஓட்டுநர் தன்னிடம் நடந்துகொண்ட முறை குறித்து ஒரு பெண் பத்திரிகைகளிலெல்லாம் முறையிட ,பத்திரிகைகளும் ஒரு பக்க சார்பாகவே அந்த செய்தியை வெளியிட, எழுத் தாளர் விமலாதித்த மாமல்லன் முயன்று அந்தத் தகவல் உண்மையல்ல என்று நிரூபித்ததோடு நன்கொடைகள் திரட்டி, வேலையிழந்த அந்த ஓட்டுனருக்கு கார் வாங்க உதவி செய்ததை நாமெல்லோரும் அறிவோம்.

ஓர் அந்நிய ஆணிடம் தன் கணவரைப் பற்றி ஒரு பெண் குறை சொல்வது தவறு என்பார்கள். அதேபோல்தான் ஒரு அந்நியப் பெண்ணிடம் தன் குடும்பத்தைப் பற்றி, குறிப்பாக மனைவியைப் பற்றி ஓர் ஆண் குறை சொல் வதும். இது அவர் எதிர்பார்க்கும் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை!

சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பொன்று காதல் சார்ந்து வரும் வழக்குகளில் உடனடியாக போக்சோ சட்டத்தின் கீழ் சிறைவாசம் என்றெல்லாம் செய்துவிடலாகாது என்று குறிப்பிட்டிருக்கிறது. காரணம், பெண்ணின் காதல் கல்யாணம் பிடிக்காத பெற்றோர்கள் பெண்ணைக் கடத்தி விட்டதாக அந்தக் காதலன் மேல் சுலபமாகப் புகார் அளித்து அவனை சிறையில் தள்ளிவிட முடிகிறது.

இது வளரிளம்பருவத்தினர் விஷயத்தில் இன்னும் எளி தான விஷயம். திரைப்படங்களின் தாக்கத்தாலோ அல் லது சுயமான தன் விருப்பத்தாலோ காதலிக்கும் வளரி ளம் பருவத்தினர் பலருக்கு அந்த வயதில் இருவரும் மனமொத்துத் திருமணம் செய்துகொண்டாலும் அது சட்டப் படி தப்பு என்பதே தெரியாத நிலை.

வளரிளம்பருவத்தினருக்கு பள்ளிக்காலத்திலேயே உடல் ரீதியாய் ஏற்படும் மாற்றங்கள், அவற்றின் தாக்கங்கள், பாலுறவு சார்ந்த அடிப்படை விவரங்கள், இந்தப் பருவத்தினர் தெரிந்துகொள்ளவேண்டிய சட்டஞ்சார் விவரங்கள் முதலியன பற்றிய அறிவும், விழிப்புணர்வும் கிடைக்கச் செய்யவேண்டியது மிக அவசியம்.

அதுவும் இன்று அலைபேசியிலேயே பச்சைபச்சையான நீலப்படங்களைப் பார்க்கமுடிகிற சமயத்தில் பாலியல் வன் கொடுமை என்பதையே தாம் பெண்களுக்குச் செய்யும் நன்மையாகக் விடலைப்பருவத்தினர் கருதவும் வழியிருக்கிறது. இந்த நீலப்படங்களைப் பார்க்கும் விடலைப் பருவத்தினர் அவர்களுடைய வயதுக்கேயுரிய ஆர்வக் குறுகுறுப்பில் அதை நிகழ்த்திப்பார்க்க முனையக்கூடும். அதற்கு ஒப்பாத பெண்களை அவர்கள் உண்மை யில் அதை விரும்புகிறவர்கள் என்றும் போலியாக அதற்கு உடன்பட மறுப்பதாகவும் கருதிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

பெண்ணைப் பெற்றவர்கள், பிள்ளையைப் பெற்ற வர்கள் உடனடியாக பிள்ளைகளின் காதலை ஏற்றுக்கொள்வார்கள், அவர்கள் மனதுக் குப் பிடித்தவரைத் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டுவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், உடனடியாக இன்னொரு அந்நிய ஆணோடு மகளின் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்வதுதான் சம்பந்தப்பட்ட வளரிளம்பருவத்தினரை (திருமணத்திற் கேற்ற வயதினரையும்)த் தற்கொலைக்குத் தூண்டுகிறது எனலாம்.

கல்லூரி நாட்களில் வார இதழ் ஒன்றில் ஒரு சிறுகதை குடும்பத்திற்காக உழைத்துத் தன் வாழ்வைத் தியாகம் செய்யும் இளம்பெண்ணொருத்தி அலுவலகம் விட்டு வீடு திரும்பும் வழியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப் படுவதாகவும், அதை அவள் அடிமனதில் விரும்புவதாகவும் பேசியிருந்ததைப் படித்து ‘அப்படி அவளுக்கு உடல் தேவையிருந் திருந்தால் அவள் அலுவலகத்திலேயே யாருடனாவது அதைத் தீர்த்துக்கொண்டிருக் கலாமே – ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்காளாக்கப்பட்டதை இப்படியா ஆதரித்து எழுதுவது – வெட்கமாயில்லை’ என்று திட்டி ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். ’இது கற்ப னைக் கதை – அது உங்கள் கற்பனை – இது என் கற்பனை’ என்று ஏதோ சாக்குபோக்கு சொல்லி பதிலெழுதியிருந் தார். ‘உன் கற்பனையில் இடி விழ’ என்று மனதுக்குள் கறுவிக் கொண்டேன்!

அதே போல்தான் ’சீதை ராவண னால் கடத்தப்பட்டபோது அவள் நடுத்தரவயதுப்பெண்’ என்று பெண்கள் கல்லூரி யொன் றில் பெண் கடத்தப்படு வதை நகைச்சுவையாகப் பேசி கைத்தட்டல் வாங்கிய தனது அனுபவம் பற்றி ஒரு படைப்பாளி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததைப் படித்து வருத்தமாயிருந்தது. அப்படியானால் நடுத்தர வயதுப் பெண் கடத்தப்படலாமா? இது என்னவிதமான மனப்போக்கு – ஒருவேளை சீதையென்பதால் அவள் கடத்தப்படுவதை நியாயப்படுத்துவது சிலருக்கு சுலபமாக இருக்கிறதோ, அவசியமாகப் படுகிறதோ என்றெல்லாம் எண்ணமோடியது.

பாலியல்ரீதியான சர்ச்சை என்றால் சிலருக்குக் கூடுதல் ஆர்வம். ஆளாளுக்கு அறிவுரை சொல்லவும் தீர்ப்புரை வழங்கவும் கிளம்பிவிடுவார்கள். முன்பு க்ளிண்ட்டன் – மோனிக்கா லெவின்ஸ்கியின் தொடர்பு குறித்து பக்கம் பக்கமாகப் பேசப்பட்டது. அது குறித்து திரு.வாஜ்பாயிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது ‘க்ளிண்ட்டன் ஒரு நல்ல அரசியல் வாதி’ என்று மட்டுமே பதிலளித்தார் வாஜ்பாய்.

இரண்டு மனைவியர் இருப்பவரைத் திரும்பத்திரும்ப மட்டம்தட்டிக்கொண்டிருந்த ஓர் எழுத்தாளரை, ‘இருக்கும் ஒரே மனைவியைக் கொடுமைப்படுத்திக் கொண்டே யிருப்ப வரைவிட இருக்கும் இரண்டு மனைவிகளை முடிந்தவரை நல்லபடி பார்த்துக்கொள்ள முயற்சிப்பவன் மேலல்லவா என்று இன்னொரு எழுத்தாளர் எதிர்க் கேள்வி கேட்டது நினைவுக்கு வருகிறது.

IMPULSE என்ற தலைப்பில் படித்த சிறுகதை மறக்கமுடியாதது. நல்லவன் ஒருவன் கணநேர உந்துதலால் ’என்னதான் நடக்கிறது பார்ப்போமே’ என்று ஒரு கடையில் திருடிவிட, மாட்டிக்கொண்டு அவன் வாழ்வே முற்றிலுமாக மாறிப்போகும்.

ஒரே துறையில் இருப்பவர்களுக்கு அதில் உள்ள சபலபுத்திக்காரர்களை, ஒருதலை யாய் பெண்களைப் பின் தொடர்பவர்களை சுலபமாகத் தெரிந்துகொண்டுவிட முடியும். அப்படி யில்லாதவர்கள் ஏதோவொரு தருணத்தில் ஏதோவொரு சூழலில் அத்தகைய அவப் பெயருக்கு ஆளாகும்போது கண்டிப்பாக வருத்தம் ஏற்படும்.

பாலியல்ரீதியான குற்றச்சாட்டுகள் மிகப் பல உண்மையானவையாக இருந்தாலும் இதைத் தவறாகப் பயன் படுத்தும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதும் அவலமான உண்மை.

முன்பு ஒரு முறை நடிகர் விசு நடத்திக்கொண்டிருந்த ஏதோவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவேண்டாம் என்று அந்தப் பெண்ணின் கணவர் அல்லது கணவர் வீட்டார் தடுத்தார்கள் என்று ஆணாதிக் கம், வெட்கக்கேடு என்றெல்லாம் அவர்களைப் பொது வெளியில் சாடினார் நிகழ்ச்சியை நடத்தும் நடிகர். அவர் நடத்திக்கொண்டிருந்த நிகழ்ச்சிக்கு அதுவொரு விளம்பரம். மற்றபடி, இப்படி மேடையில் முழங்குவோர் தங்கள் படைப்புகளில் கருத்துரீதியாக பெண்களை எப்படி காலங்காலமாகக் காண்பிக்கிறார்கள் என்பது தெரிந்த கதைதான்.

இந்த மேம்போக்கு முழக்கங்கள் பெண்களிடமிருந்தும் பீறிட்டுக் கிளம்புவதுண்டு. பொதுவாகவே இருபாலரி லும் சக உயிர்களுக்காகப் பேசுவதான பாவனையில் ஒரே SWEEPING STATEMENTSஆக, உளவியலாய்வாளர் பாவனையில் மிக மிக மேம்போக்காகக் கருத்துகளை அள்ளியிறைப்பது இயல்பாகவே ஆகிப்போனவர்கள் உண்டு.

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் படிக்கக் கிடைத்த ஒரு கட்டுரையில் ’பெண்ணை நிர்வாணமாகப் படமெடுத்து பயமுறுத்துவது போல் ஆணை யாரும் செய்வதில்லையே – ஏன் என்று கேட்டிருப்பதைப் பார்த்ததும் எரிச்சல் ஏற்பட்டது. இது உண்மையில்லை என்பதே உண்மை. செய்தித்தாளில் அன்றாடம் சமூக ஊடகங்களின் வழியாக ஆண்களை ஏமாற்றும் பெண்களைப் பற்றிய செய்திகள் படிக்கக் கிடைக்கின்றன. அவமானத்திற்கு பயந்து சில ஆண்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதையெல் லாம் அறியாமல் அல்லது பொருட்படுத்தாமல் மேற்படி கட்டுரையாளர் பேசிக்கொண்டே போகிறார். இவரொத்த வர்களெல்லாம் பெண்ணியம் பேசுவதால் பெண்ணியத் திற்குப் பின்னடைவுதானே தவிர ஒரு பயனும் இருக்க வழியில்லை. இத்தகைய ‘போலி பெண்ணியவாதிகள் தங்களை அழகிகளாகக் காட்டும் ஆடையணிகளும் முகபாவங் களுமாய் விதவிதமாய் தங்கள் புகைப்படங்களை சளைக்காமல் பதிவேற்றிக்கொண்டே யிருக்கிறார்கள்.

பாலியல்ரீதியான அவதூறுகள் ஒரு பெண்ணை அகவயமாகவும் புறவயமாகவும் பாதிப்ப தைப் போன்றே ஆண்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் பாதிக்கவே செய்கின் றன. காரணம், எல்லோருமே இந்த சமூகத்தில் வாழ்பவர்கள். நாலுபேரின் நரம் பில்லா நாக்குகளால் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சுழற்றியெறியப்படுபவர்கள். நாலுபேர் என்பது நாமும்தான்.

  •  
Series Navigationஇன்று புதிதாய்ப் பிறந்தோம்!
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *