ஊமைக் காயங்கள்…..!

This entry is part 10 of 41 in the series 10 ஜூன் 2012

பாட்டி….பாட்டி..முழிஞ்சிண்டு இருக்கியா பாட்டி…அம்மா…பார்த்துட்டு வரச் சொன்னா…அறைக் கதவை மெல்லத்
திறந்து எட்டிப் பார்த்து கேட்ட ஏழு வயதாகும் பூரணி கட்டிலில் படுத்திருக்கும் தனது பாட்டியின் அருகில் வந்து பார்க்கவும்,
தன் பேத்தி பூரணியின் குரல் கேட்டு விழித்த அகிலா…

அட…..பூரணிக் குட்டியா….வா..வா…..வா….என்று ஆசையோடு அழைக்க…

அப்போ….நீ முழிச்சிண்டு தானே இருக்க….அம்மா…என்னைப் பார்த்துட்டு வரச்சொன்னா….என்று பேத்தி தனது இளம்குரலில் சொல்ல…

ஆமாம்டி தங்கம்….பாட்டி முழிச்சுண்டு தான் இருக்கேன்னு அம்மா கிட்ட போய் சொல்லிட்டு வா….எங்கே….இங்கே பாட்டி பக்கத்துல…வா… உன்னைப் பாட்டி கண்குளிரப் பார்க்கட்டும் என்று ஆசையாக அழைக்கவும்…..

பாட்டி…இன்னைக்கு நேக்கு ஹாப்பி பர்த்டே…..தெரியுமா? என்று ஆவலோடு கேட்க..

அடடா…..அப்படியா…..நோக்கு இன்னைக்குப் பொறந்தநாளா….என் .தங்கமே…!

லொக்…லொக்….லொக்…லொக்….! இதைக் கேட்பதற்குள் இருமல் பூகம்பமாக வந்து முந்திக் கொண்டது. ராத்திரி பூரா ஒரே இருமல்…விலா எலும்பெல்லாம் முறிந்தது போல் ஒரே வலி….என்ன செய்ய….? குழந்தையை அருகில் அழைக்க கையை உயர்த்தக் கூட இயலாமல் வலித்தது….

அகிலாவின் இருமல் சத்தம் ஆரம்பமானதும் பூரணி அறையை விட்டு ஓடியது புரிந்தது.

சிறிது நேரத்தில்…..அகிலாவுக்கு காலை காபியை ஆற்றியபடியே ஜானகி உள்ளே வர….இந்தாங்கோ காபி ஸ்டூல் மேல வெச்சுருக்கேன்….கொட்டாம எடுத்து சாபிடுங்கோ..ரொம்பச் சூடா இருக்கு…..நித்தம் சொல்வது போலவே இன்றும் சொல்லி விட்டு “டக்” கென்று சப்தம் மட்டும் அவள் டம்ளர் வைத்த அடையாளமாக வர…

டீ….ஜானா…..ராத்திரியெல்லாம் தூங்கலை…..ஒரே இருமல்…உடம்பெல்லாம் ஒரே வலி..அந்த ஆயின்மெண்ட கொஞ்சம் எடுத்து கொடுத்துட்டு போயேன்….
ஆமா…இன்னைக்குப் பூரணிக்குட்டிக்கு பொறந்த நாளா..? ஈனமான குரலில் கேட்க…

எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவோ, மாமியார் சொன்னதை ஒரு பொருட்டாக மதித்து ஆயின்மென்ட் எடுத்துக் கொடுக்கவோ அங்கு ஜானகி நிற்கவில்லை சென்று விட்டாள் என்று …அறைக்கதவு சார்த்திய சப்தம் காதோடு சொன்னது….இது அகிலாவுக்கும் ஒன்றும் புதிதல்லவே…அகிலா மாமியாராக நடக்காமல் அன்போடு எவ்வளவு நெருங்கி வந்தாலும் ஜானா விலகி விலகித் தான் போனாள். ஆரம்பத்திலிருந்த இடைவெளி இன்னும் ஜாஸ்தியானதே தவிர இத்தனை வருடங்களில் கொஞ்சம் கூட நெருங்கி வரவில்லை அவள். ஜானாவை மகளாக நினைத்துப் பார்த்தாலும் ஜானா அகிலாவை வேண்டாத மாமியாராகத் தான் தள்ளி வைத்திருந்தாள். என்ன செய்ய..தன்னைப் போலவே அவளும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தன்னோட முட்டாள்தனமான எதிர்பார்ப்பு தானே…! அகிலாவைப் பொறுத்தவரை…ஜானா இன்னும் அடம் பிடிக்கும் குழந்தையாகவே தெரிந்தாள்.

சரி….போயிட்டாள் போலிருக்கு…காலையில் அவளுக்கும் ஆயிரம் வேலைகள் இருக்கும்…ஒரு நாள் போல என் புலம்பலைக் கேட்கவா இங்கு வந்து நிற்பாள்…பாவம்….அந்தக் காலத்தை தானும் கடந்து வந்தவள் தானே . ஆனால் என்ன…தன் மாமியார், மாமனார், அத்தை என்று அத்தனை பேருக்கும் கூட்டுக் குடும்பத்தில் ஒவ்வொண்ணாப் பார்த்துப் பார்த்து செய்யலையா….? என்ன பிரமாதம்….இன்னொரு எண்ணமும் கூடவே வர டக்கென வந்த அந்த எண்ணத்தை அடக்கினாள்….அந்தக் காலமும்…இப்போவும் ஒண்ணா என்ன..? பாவம் ஜானா….இந்த ஒரு குழந்தைய சமாளிக்கவே அவளுக்கு நேரம் பத்தாது…..இன்னைக்குப் பொறந்த நாள் வேற…..ரமணன் வரட்டும் கேட்டுக்கலாம் …என்று சமாதானம் ஆனாள்….அகிலா…இதுவரையில் ஜானாவின் எந்த செய்கையும் ரமணன் காதுவரை சென்று விடாமல் பார்த்துக் கொண்டாள். ரமணனை ஜானா…நன்னா கவனித்துக் கொள்கிறாள் அது ஒண்ணே போதுமே. அவர்கள் ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்…அது தானே அம்மா ஸ்தானத்தில் தனக்கு வேண்டியதெல்லாம்….ஜானாவும் கணவன் முன்னே மாமியாரிடம் எந்த வம்புக்கும் வர மாட்டாள்.

ஜானகி வைத்து விட்டுப் போன காபி….அப்படியே ஆறித் தணுத்து பச்சைத் தண்ணியாய் இருந்தது….எடுத்துக் குடிக்க மனசில்லாமல் படுக்கையில் படுத்த படியே…அந்த காபி டம்ளரையே வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். ஒருவேளை ரமணன் வந்து பார்த்தால்…..வீணாக ஜானாவை கோவித்துக் கொள்வானோ…எதற்கு வேண்டாத வம்பு என்று எண்ணியவளாக கஷ்டப் பட்டு எழுந்து மெல்ல பாத்ரூமுக்குள் சென்று பல்லைத் தேய்த்து முகத்தை சுத்தம் செய்து கொண்டு வந்து காபியை குடித்தாள்.

போன வருஷம் பூரணியோட பிறந்த நாளுக்குக் கூட நான் ஓடியாடி வேலை செய்து கொண்டு தானே இருந்தேன்…..அதற்குள் உடம்பு தள்ளாமல் போயிடுத்தே இப்படி…..என்று மனதுக்குள் எண்ணியவள்…”யாருக்கும் எந்தக் கஷ்டமும் தராமல்….படுக்கையில் விழாமல் போய் சேரணும்…இன்னும் எனக்கு இங்க என்ன இருக்கு…? எல்லாம்… பார்த்தாச்சு….பார்த்தவரைக்கும் போதும்….நாராயணா….! என்று அமர்ந்தவளை….

குழந்தை பூரணி ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்டு..பாட்டி….எனக்கு இந்தப் பட்டுப் பாவாடை நன்னா இருக்கா? இன்னும் ரெண்டு நியூ பிராக் கூட இருக்கே….ஈவினிங் கேக் வெட்டுவேனே…அப்போ தரேன்னு அம்மா சொன்னா..அப்போ தானே எல்லாரும் வருவா….அம்முலு பாட்டி..,லட்டு தாத்தா, ரம்யா சித்தி, கெளதம் மாமா, எல்லாரும்…..வருவா….நீயும் வா….ஹாலுக்கு…பலூன் எல்லாம் கட்டுவா….எனக்கு “சோட்டா பீம்” டிரஸ் கூட வாங்கிருக்கேன்…அப்பறம்….இன்னும்…இன்னும்..எனக்கு அப்பா ஊரில் இருந்து கொண்டு வந்த கிப்ட் எல்லாம் கூட சாயந்தரம் பிரிக்கலாம்னு அம்மா சொல்லிருக்கா….. என்று நினைவுகளில் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தவள்… இது எனக்கு செவன்த் பர்த்டே யா..பாட்டி .? என்று கேக் வெட்டும் கனவில் மிதந்த படியே சந்தோஷத்தின் எல்லையில் சஞ்சரித்தபடி இருந்தாள் பேத்தி பூரணி.

என் தங்கக் குட்டி பூரணி…செல்லக் குட்டிம்மா…..இந்தப் பட்டுப் பாவாடையில் நீ “பாலாம்பிகா” மாதிரி அழகா இருக்கியே….. இப்போ நோக்கு ஏழு வயசாச்சா? அடேங்கப்பா…..பெரிய பொண்ணாயிட்டியே……என்று சொல்லிக் தனது பேத்தியை இழுத்து அணைத்துக் கட்டிக் கொண்டு உச்சந்தலையில் முத்தமிடப் போகையில்….

ஏய்…பூரணி…..நீ இங்கேயா இருக்கே….உன்னை எங்கெல்லாம் தேடறேன்…அப்பாவை எழுப்பிண்டு வான்னு சொல்லி அனுப்பினா…அதை விட்டுட்டு இங்கே என்ன வேலை இப்போ…பாட்டிக்கு உடம்பு சரியில்லை….தொந்தரவு செய்யக் கூடாதுன்னு சொல்லிருக்கேன் இல்லையா…..என்றபடியே அகிலாவின் பிடியில் இருந்த பூரணியை இழுத்து அதுக்குத்தான் பட்டுப் பாவாடையை கோவிலுக்குப் போகும்போது கட்டிக்கோ அழுக்குப் பண்ணிடுவேன்னு சொன்னேன்…..இப்போ பாரு எப்படி அழுக்காயிடுத்துன்னு …..அம்மா…சொன்னால் கேட்கணும்….என்றபடியே போகிற போக்கில் காபி டம்ளரை எடுத்துக் கொண்டு போனாள் ஜானா..!அகிலாப் பாட்டியின் அறைக் கதவு ஜானாவுக்கு பயந்து தானே மூடிக் கொண்டது.

மோட்டுவளைப் பல்லி ” ஐயோ பாவம்…. நான் இருக்கேன் உனக்கு” என்பது போல ” த்…த்…த்….த்…த்…த்….” கௌலித்தது…!

அகிலாவின் மனது ஊஞ்சல் போல முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தது..எப்பவும் போல… தனிமையில் பழைய நினைவுகள் தான் பலம். உடல் தன் வலுவை இழந்து விட்டதே தவிர உள்ளம் அப்படியே இன்னும் எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்யும் தெம்புடன் தானிருந்தது. அறுபத்தி ஐந்து வயசெல்லாம் ஒரு வயசா….. தான் அதுக்குள்ளே இப்படி ஒடிஞ்சு போனா எப்படி. ? தனக்குத் தானே எப்பவும் கேட்டுக் கொள்வாள். அன்பும் அனுசரணையும் கிடைத்தால் எத்தனை ஆண்டுகள் வேணுமானாலும் துள்ளலோடு வாழலாம்…..தனிமை, வேதனை, விரக்தி, இதெல்லாம் தன்னை சூழ்ந்து கொண்டு ஆளும்போது….பலம் குறையத் தானே செய்யும்.

ரமணனுக்கு ஊர் ஊராகப் போகும் வேலை தான்…மாசத்துக்கு பத்து நாட்கள் வீட்டில் இருந்தால் அதுவே அதிகம். ரெண்டு நாள் முன்னாடி தான் வேலை விஷயமா பெங்களூர் போறேன்னு சொல்லிட்டு போனான்….இன்னைக்கு வந்துட்டான் போல இருக்கே. பாவம் அசதியில் தூங்கறானாயிருக்கும்…..இல்லாட்டா இங்க வந்து என்னைப் பார்த்திருப்பானே….சந்தேகத்தோடு படுக்கையில் சாய்ந்தாள். ஜுரம் அடிப்பது போல உடல் கண…கண….வென்று கனன்றது. நினைவு வளையங்கள்….பாதுகாப்பு வளையங்களாக அவளைச் சூழ்ந்து கொண்டது…இதமாக…!

தனக்கும்….விஸ்வத்துக்கும் கல்யாணம் ஆகி ஆறு வருடங்கள் கழிந்தும் பேர் சொல்லப் பிள்ளை இல்லாது..அந்தக் குறையைத் தீர்க்க கோவில் கோவிலாக சென்று பரிகாரம் செய்ததன் பலனாகப் பிறந்த சீமந்தப் புத்திரன் தான் ரமணன். குழந்தைப் பிறந்த நிமிஷத்திலிருந்து அவனை தனது நெஞ்சத்தில் கோசலையின் மைந்தன் ராமனாகத் தாங்கி வளர்த்தவர்கள் அவன் வளர்ந்து காலேஜுக்கு செல்ல ஆரம்பித்ததும் தன் கடமை முடிந்ததென அகிலாவையும் ரமணனையும் தனியே தவிக்க விட்டு திடீரென மாரடைப்பில் கண் மூடினார் விஸ்வம்.

எதிர்பாராமல் இருண்டு போன வாழ்வில் ரமணன் தான் நம்பிக்கை ஒளியாகத் தெரிந்தான் அகிலாவுக்கு..மற்றபடி தனது கணவன் விட்டுச சென்ற ஒரே சொத்தாக சொந்த வீடு மட்டும் இருந்ததால்…..மானத்தோடு வாழ முடிந்தது. வீட்டுச் செலவுக்கும் படிப்புச் செலவுக்கும் அகிலாவும் ஓரிடத்தில் நிம்மதியாக உட்காராமல் ஓடாக உழைத்தாள்.

ரமணனும்….படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்த வேலை என்று இல்லாமல் எந்த வேலைகள் கிடைத்தாலும் செய்து உழைத்து தானும் சம்பாதிக்க ஆரம்பித்து ஒரு நிலைமைக்கு வந்து நிமிர்ந்து நிற்பதற்குள் வயதும், வருடமும் கடந்து சென்றது. அதன் பலனாக படிப்பும் முடிந்து நல்ல வேலையும் கிடைத்து கை நிறைய சம்பாத்தியமும் வாங்க ஆரம்பித்தான் ரமணன்.

” அம்மா..இதுவரை நீ எனக்காக உழைத்து ஓடாய்ப் போனது போதும்…இனி உன்னை கண்ணாக பார்த்துக்க வேண்டியது எனது கடமை…..இனியாவது நீ நிம்மதியாக கோயில் குளம்னு சந்தோஷமாக இருக்கணம் சரியா….என்றான் ரமணன்.

அக்கம் பக்கத்தினரின் ” பிள்ளைன்னா ரமணனைப் போல இருக்கணும்” னு இவள் காதுபடவே கூறும் போது ” சொல்லடி பட்டாலும்..படலாம்….கண்ணடி படக் கூடாது” னு சொல்லி அவர்களின் கண்ணுக்கு பயந்து… பயந்து தினமும் ரமணனை உட்கார வைத்து உப்பு மிளகாய் எடுத்து திருஷ்டி சுற்றிப் போடுவாள் அகிலா. தன் ஒரே மகனை பார்த்துப் பார்த்து வளர்ப்பதில் தான் அவளுக்கு நாள் பூரா போகும்.

“ரமணனுக்கு எப்போ கல்யாணம்…பண்ணப் போறேள்…னு அடுத்தவர் கேட்கும் முன்பே….”ரமணா….நோக்கு நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்…உன்னோட அபிப்ராயத்தையும் சொல்லேன்…..தெரிஞ்சுண்டால் பொண்ணப் பார்க்க தரகர் கிட்ட சொல்ல ஏதுவாக இருக்கும்….இல்லையா…நீ என்ன சொல்றே….? அகிலாவின் எண்ணத்தை சொன்னதும் …

” அம்மா…நானே சொல்லணும்னு தான் இருந்தேன்….என் கூடவே ஆபீஸ்ல வேலை பார்க்கிறாள்….ஜானகின்னு பேரு..எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சிருக்கு…..இன்னைக்கு சாயந்தரமா ஆத்துக்கு அழைச்சிண்டு வரட்டுமா…?..உனக்கும் பிடிக்கணமே….” என்று ரமணன் தனது விருப்பத்தை சொன்னதும்..

அட….அப்படியா…ஆச்சரியமா இருக்கே…..இத்தனை நாளா இதைப் பற்றி என்கிட்டே ஒரு வார்த்தை கூட நீ சொல்லவே இல்லையே….கடைசீல என்கிட்டயே மறைசுட்டேப் பார்த்தியா….? என்று விஷமமாக சிரித்தபடியே…..

” உன்னை ஒருத்திக்குப் பிடிச்சால்…..உனக்கு ஒருத்தியப் பிடித்தால் அவளை நேக்குப் பிடிக்காதா என்ன..? .தாராளமா நீ ஜானகியோட அப்பா அம்மாவை சீக்கிரமா என்னை வந்து பார்க்கசொல்லு…மேற்கொண்டு பேசி முடிக்கலாம்….” என்றதும்.

என்னம்மா…நீ…மேற்கொண்டு பேசறதுன்னா….? எதாவது வரதட்சணை லிஸ்ட் பெருசா வெச்சுருக்கியா என்ன….? என்று ரமணன் பயத்துடன் கேட்க…

நீ வேற….நன்னா அம்மாவைப் புரிஞ்சுண்டு இருக்கே…..சபாஷ்…! என்று பொய் கோபத்துடன் சொன்னவள்….ஜாதகம், நிச்சயதார்த்தத்துக்கு நல்ல நாள், முகூர்த்த நேரம் எல்லாம் பார்க்க வேண்டாமா…? அதைப் பத்திப் பேசத்தான்…
நீ வேற என்னத்தையோ நினைச்சுண்டு….
நம்பாத்துக்கு உன்னோட சேர்ந்து வாழப் போகும் பெண்ணுக்கு சீர் கொண்டுவா, செனத்தி கொண்டுவா என்றெல்லாம் கேட்க மாட்டேன்…ஆனா உன்கிட்ட கண்டிப்பா ஒண்ணு கேட்பேன்..என்று நிறுத்த..

என்கிட்டயா…..என்னம்மா அது….?

.நீ அவளோட சௌக்கியமா சந்தோஷமா புரிஞ்சுண்டு கடைசி வரைக்கும் எந்தப் பிரச்சனையும் வராமல் அனுசரணையா வாழணும் …அது ஒண்ணே…போதும் நேக்கு…சரியா..

அம்மா……அம்மா…!.என்று சொல்லி அம்மாவை அன்பாகப் பார்த்தான்..”.நீ தான் இந்த உலகத்தில் எனக்கு எல்லாம்” என்று சொல்லியது அந்தப் பார்வை..!

ரமணன்… ஜானகி கல்யாணம் சிறப்பாக முடிந்து….ஜானகியின் அம்மா….அகிலாவிடம்….”சம்பந்தி மாமி…என் பெண் குழந்தை மாதிரி..அவளுக்கு ஒண்ணும் தெரியாது….நீங்க தான் அவளை கண் கலங்காமல் அனுசரணையாப் பார்த்துக்கணும்” என்று கையைப் பிடித்து விடை பெற்றது நேற்று நடந்தது மாதிரி இருந்தது….
எல்லாம் நல்லபடியாக முடிந்து ஜானகி வற்புறுத்தியதால் பழைய வீட்டை விற்று புது வீடு வாங்கி க்ரஹப்ரவேசம் பண்ணி, பேத்தி பிறந்து, காரும் பங்களாவுமாக ரமணன் வாழ்வதைப் பார்த்து பெருமை பட்டு….எல்லாம் ஜானா வந்த நேரம் நல்ல நேரம் என்று ரமணனிடம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி தான் ஓரமாக ஒதுங்கிக் கொண்டாள் அகிலா.

நினைவு சங்கிலி கழன்றது போல அறைக்குள் ரமணன் “அம்மா…அம்மா..” என்று அழைத்தபடியே உள்ளே நுழையும் சப்தம் கேட்கவும்….

ரமணனா….வந்தியாப்பா…என்று எழ முயன்றவளை…கைத் தாங்கலாக எழுப்பி உட்கார வைத்தவன்…..”ஏன்மா…உனக்கு இப்படி .உடம்பு அனலா கொதிக்கிறது ..ஜுரமா….என்னாச்சு….ஜானா..இங்க வா….என்றழைத்தவனை முந்திக் கொண்டு ..

“நேக்கொண்ணு மில்லை…சும்மா கத்தி ஊரைக் கூட்டாதே…..”.இந்த வெய்யிலுக்கு அப்படித்தான் வேற ஒண்ணுமில்லை…கவலைப் படாதே…கார்த்தால ஜானாவே ஆஸ்பத்திரிக்குப் போகலாம்னு தான் சொன்னா..இன்னிக்குப் பூரணிக்கு பொறந்த நாளாச்சே முடியட்டும்னு சொல்லிருக்கேன்….நீ தான் இத்தனை லேட்டா வந்து பார்க்கறே. குழந்தைக்குப் பொறந்த நாளும் அதுவுமா இத்தனை நேரமா தூங்குவே….என்று உரிமையோடு அதட்ட….பாவம்…ஜானா தனியா எத்தனை வேலை தான் செய்வாள்….கூட மாட இன்னைக்காவது அவளுக்கு உதவியா இரேன்….அதை விட்டுட்டு….என்று அன்பாக அலுத்துக் கொள்ள..

அம்மா நான் பெங்களூர்லேர்ந்து இன்னைக்கு கார்த்தால மூணு மணிக்குத் தான் வந்தேன்.வந்து படுத்தது தான் தெரியும்….ஒரே அசதி,,,,…பூரணிக்கு இன்னைக்கு பொறந்த நாள்…நாளையிலேர்ந்து ஸ்கூல் வேற இருக்கு…அதான் இன்னைக்கு வந்தேன் ஆமா நீ பாயசம் சாப்பிடறயா…இரு எடுத்துண்டு வரேன்….சொல்லிவிட்டு ஜானா…ஜானா… என்றபடியே சமையலறை பக்கம் நகர….

அங்கே….ஜானாவின் கைவண்ணம் ஏலக்காய் வாசத்தில் சேமியாப் பாயசமாக மணத்துக் கொண்டிருந்தது….அருகில் நின்றிருந்த பூரணியை அப்படியே கட்டாக தூக்கி…முத்தமிட்டபடியே…”குட்டிம்மா… பொறந்தநாளுக்கு உன் அம்மா கம கம பாயசம்…பண்ணிருக்கா உனக்கு .” என்று குதூகலமாக சொல்லி ஒரு டம்ளர்ல கொஞ்சமாப் பாயசம் விட்டுக் கொடேன் அம்மாக்கு ரொம்பப் பிடிக்கும் …என்று சொல்லவும்…

“நன்னாருக்கு…..உங்க ஆசை….உங்கம்மாக்கு ஏற்கனவே உடம்புல சக்கரை.வண்டி ஓடறது………இந்த லட்சணத்தில்
அது போதாதுன்னு இது வேறயா…..? பாயசம் தான் இப்போ அவாளுக்கு விஷம் அது தெரியாமல் வந்து கேட்கறேள்….நான் என்னத்த செய்ய….என்று தலையில் அடித்துக் கொள்கிறாள்…அம்மாக்கு இதோ…கோதுமை கஞ்சி மோர் விட்டு வெச்சுருக்கேன்…இதை எடுத்துண்டு போய் கொடுங்கோ என்று பாத்திரத்தை நீட்ட…

பூரணியைத் தூக்கி கொண்டே…அம்மாவிடம் செல்லும் ரமணன் பாவம் அம்மா…பாயசம்னா ரொம்பப் பிடிக்கும்..
என்ன செய்ய…ஜானா சொல்றதும் சரி தானே….நினைத்துக் கொண்டே அம்மாவுக்கு கஞ்சியை கொடுக்க செல்லுகிறான்….அப்படியே பூரணியிடம்…குட்டிம்மா….இன்னைக்கு உன் பர்த்டே க்கு பாட்டிக்கு நமஸ்காரம் பண்ணணும்….சரியா…என்றபடியே அவளை இறக்கிவிட…..

குழந்தையை ஏண்டா கஷ்டப் படுத்தறே,……நன்னாருக்கணும்…தீர்க்காயுசோட…எழுந்திரும்மா செல்லம்..! பூரணியை அன்பாகக் கட்டிக் கொள்கிறாள் அகிலா…குழந்தையும் இறுக்கமாக பாட்டியோட ஒட்டிக் கொள்கிறது.

இந்தா…இது என்னோட பிறந்த நாள் பரிசு..உனக்கு என்று சொல்லியபடியே….தலையணை அடியில் கையைத்து துழாவிய படி இங்க தானே வெச்சேன்…..இப்போ கைக்கு அம்பட மாட்டேங்கறதே என்றபடி அங்கங்கே தட்டி..தடவி இதோ…என்று தனது தங்கச் சங்கிலியை எடுத்து பூரணியின் கழுத்தில் போடப் போகும் நேரம் பார்த்து…..ஜானா உள்ளே நுழைகிறாள்….

“இப்போ எதுக்கும்மா…..இவளுக்கு இதெல்லாம்…..” என்று ரமணன் சொல்ல…

“நாளும்…நேரமும்…போனால் வராதுடா…….நினைச்சதை கையோட செஞ்சுடணும்….” என்று அகிலா சொல்லும்போது
ஜானா…உள்ளே வந்தவள் ..”இங்க தாங்கோ…..என்றபடியே அந்த சங்கிலியை வாங்கி….பக்கத்து ஸ்டூலில் இருக்கும் மாத்திரைக் கவரை எடுத்து அதில் இருந்த மாத்திரைகளை ஸ்டூல் மேல் கொட்டி விட்டு….கவருக்குள் சங்கிலியை வேண்டா வெறுப்பா போட்டபடியே “பாலிஷ் போட்டதுக்கப்பறம் பூரணிக்கு கழுத்தில் போடறேன்” என்று சொல்லியபடியே….பூரணி வா…கோயிலுக்குப் போகணும் என்று சொல்லியபடியே……கணவனைத் திரும்பிப் பார்க்கிறாள்….அந்தப் பார்வையில்…”உடனே வரணும் ” என்று எழுதி இருந்தது.

ஜானா… சங்கிலியை கவரில் போடும்போது அவள் முகம் போன போக்கைப் பார்த்த அகிலாவுக்கு இதயத்தை யாரோ கத்தியால் குத்தியது போல உணர்ந்தாள்…அதே சமயம்….என்னமோ…குழந்தைத் தனமா பண்ணிட்டுப் போறா ..விடு என்று ரமணனைப் பார்த்து சமாதானமாக சொல்ல….ரமணனும் தனக்குள் வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டான்.

“நீ…போ..நான்… வரேன்….என்றபடியே…ஏன் ஜானா இப்படி நடந்து கொள்கிறாள் என்று ….மனதுக்குள் நினைத்துக் கொண்டே …..அம்மாவின் அருகில் அமர்ந்தவன்…அம்மா….நீ வா…முதல்ல .உன்னை ஹாஸ்பிடல் அழைச்சுண்டு போறேன்….உனக்கு உடம்பு ரொம்ப சரியில்லை….என்றவன் பிடிவாதமான குரலில் சொல்ல….

“போடா…நோக்கு வேற வேலை இல்லை…அவளோட சேர்ந்து கோயிலுக்கு போய்ட்டு வா…கிளம்பு…..” என்கிறாள்.

“அம்மா…உன்னை இப்படி விட்டுட்டு எங்களை எந்தக் கோயிலுக்குப் போகச் சொல்றே நீ….நீ தான் என்னோட ஆதாரம்மா…. ரெண்டே நாள்ல எப்படி வாடிப் போயிட்ட தெரியுமா…?..அதான்…என்றபடியே அந்த அறையை நோட்டம் விடுகிறான்…நல்ல பராமரிப்பு இல்லாத நிலையில் தரையில் குப்பை, மாத்திரை எடுத்த பிளாஸ்டிக் கவர்கள் தாறுமாறாகக் கிடந்து, அங்கங்கே ஒட்டடையும்…கொடியில் துணிகள் தொங்கிக் கொண்டிருக்க…ஒவ்வொரு இடமும் கோள் சொல்லியது…”ஜானா எங்களை கவனிக்கவே மாட்டாள் என்று,,,,”

இருக்கட்டும்….கையோட போய்ச் சொல்லி ஜானாவை அழைத்துக் கொண்டு வந்து காண்பித்து அப்படியே அம்மாவை முதலில் டாக்டர்ட கூட்டிண்டு போகலாம்னு சொல்லணும் என்று சென்ற ரமணனை….ஜானா சமையலறை அடுத்த பால்கனியில் திரும்பி நின்றபடியே தனது கைபேசியில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதும்…அப்படியே “சப்த நாடியும் அடங்க அமைதியானான்…” மேற்கொண்டு என்ன தான் சொல்கிறாள் பார்க்கலாம் என்று நிற்பது தெரியாமல் காதைத் தீட்டினான். பழுக்கக் காய்ச்சின ஈயமாக காதில் நுழைந்த வார்த்தைகள்……இதயத்தை ரணமாக்கி கொண்டிருந்தது.

அவள் ரமணன் வந்தது தெரியாமல் அவளது அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்…..

” ஆமாமா…..எப்பப் பாரு அம்மா…..அம்மா… அம்மா தான்…நான் ஒருத்தி உயிரோட இருப்பதே கண்ணுக்குத் தெரியாது…..சரியான அம்மாக் கோண்டு…..எனக்குப் பத்திண்டு வரது….அதைப் பார்க்க…குழந்தைக்கு பொறந்த நாளும் அதுவுமா வீட்டில் எத்தனை வேலை கிடக்கு……இது பாட்டுக்கு அங்க போய் உட்கார்ந்துருக்கு….கொஞ்சம் கூட குடும்பப் பொறுப்பே கிடையாது….அப்படி என்ன தான் இருக்கோ அந்த மூஞ்சில …..அது ஒழிஞ்சாத் தான் இங்க குடும்பம் உருப்படும்….எப்பப் பாரு இருமல், ஜுரம், உடம்பு வலி…கால் வலி, மேல் வலி, இது தான்… இந்தப் பூரணி வேற சொன்னாக் கேட்காமல் அங்கேயே….அவகிட்டயே போயி உரசிண்டு நிற்கறா…. நோய் தொத்து நோயாக இருந்தால் என்ன செய்யறது..? பூரணி சின்னப் பெண். நேக்கு இங்க ஒண்ணுமே பிடிக்கலைம்மா….

இப்போ கூட அவர் அங்கே தான்…..உட்கார்ந்துண்டு இருக்கார்… அது என்ன நோயோ….யார் கண்டா..? எங்க யாருக்கும் வந்துடாமல் இருக்கணும்……. என்னத்தை சொல்ல..எல்லாம் என் தலையெழுத்து ஆ…ஊன்னா…எங்கம்மா அவ்ளோ கஷ்டப் பட்டு என்னை வளர்த்தா…இவ்ளோ கஷ்டப் பட்டு என்னை வளர்த்து ஆளாக்கினாள் …ன்னு அம்மாப் புராணம் பாட ஆரம்பிப்பார்……இனிமேல் என்னாலும் தாங்காது…இந்த முறை..எங்காவது முதியோர் காப்பகத்தில் கொண்டு போய் விடுங்கள்ன்னு சொல்லிடப் போறேன்…என்னால் இந்தக் கிழத்துக்கேல்லாம் பாடுபாக்க முடியாதுன்னு தீர்மானமா சொல்லிடப் போறேன்.

சரி….என் ஆற்றாமையை நான் யார்ட்ட போய சொல்வேன்…அதான் உனக்கு போன் பண்ணி கொட்டினேன் …வெச்சுடறேன்…..என்று கைபேசியை அணைத்து விட்டுத் திரும்பியவள்….ரமணன் அங்கே நின்று கேட்டுக் கொண்டிருப்பதை எதிர்பார்க்காததால்…இன்று…இப்படி ..வசமாக மாட்டிக் கொண்டேனே என்று மனதுக்குள் குற்ற உணர்வில் குறுகிப் போனாள்…ஜானா…! இத்தனை வருடம் கட்டிக் காத்த நம்பிக்கையின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு கட்டி வைத்த கோபுரம் தகர்ந்து தனது தலை மேல் விழுந்தது போல……மனசுக்குள் தரை மட்டமானாள் ஜானா..

ரமணன்…ஒன்றும் சொல்லாமல்…திரும்பி நடந்தான்….அவன் கால்கள் அம்மாவின் அறைக்குள் நுழையத் தயங்கியது……மனசு ஆட்டம் கண்டது…என்னோட ..ஜானாவா…இது…நம்பவே முடியலையே…உடம்பெல்லாம் ரத்தம் கொதித்தது……இத்தனை வருஷம் கழித்து இப்போதானா… இப்படி…இல்லை ஆரம்பத்தில் இருந்தே இவள் இப்படித் தானா…? நான் எப்படி இதெல்லாம் தெரியாமல் இருந்து விட்டேன்… ஒரு நாள் கூட அம்மாவோ, ஜானாவோ ஒருவரைப் பற்றி ஒருவர் குறையாக ஒன்றுமே தன்னிடம் சொன்னதில்லையே…

ஒரு வேளை அம்மா இவளுக்காக,,,,எனக்காக,,,,எனக்குத் தெரியக் கூடாதுன்னு நிறைய விட்டுக் கொடுத்திருக்காளோ……அம்மா…ரொம்ப நல்லவளாகவும் இருக்கக் கூடாதும்மா…..நீ தான் தப்பு பண்ணிட்டே….! என்னோட நிம்மதிக்காக,,,,,நீ உன்னோட நிம்மதியை இப்படி மௌனமாய் மறைத்து விட்டாயே… அம்மா நீ பட்ட ஊமைக் காயங்களை இப்படி எத்தனை வருடங்கள் என்னிடமிருந்து மறைத்து வந்திருக்கிறாயோ ?என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே…..ஏன்மா சொல்லலை…? ரமணன் மனசுக்குள் மருகியபடியே……

நீ அடிக்கடி சொல்லுவியே….நான் நினைப்பது போலவே….நீயும் நினைக்கணும்னு எதிர்பார்ப்பது சரியில்லை என்று….
அதுக்கு அர்த்தம் இதுவா……நீ என் மேலயும் ஜானா மேலயும் பாசமா இருப்பது போல அவளும் இருக்கணும்னு எதிர்பார்ப்பது தப்புன்னு தான் சொல்ல வந்தாயா…..? உன்கூட அவள் அனுசரணையா இருந்திருந்தால் உன்கிட்ட இருந்து அவள் எவ்வளவு நல்ல குணங்களை படிச்சுண்டு இருந்திருப்பா..இப்படி கோட்டை விட்டுட்டாளே…!
நான் இப்போ உன்னிடம் இதை சொன்னால் நீ மனசுக்குள் உடைந்து போயிடுவியே,,,,நான் எப்படி சொல்வேன்…? வீட்டுக்குள் இந்த பூகம்பம் வெடிக்காமல் இருக்க வேண்டுமே…தீர்மானத்துடன் “ஜானா இங்க வா ” என்று அழைத்தபடியே தனது அறைக்குள் புகுந்து கொண்டான்…

தயக்கத்துடன் உள்ளே நுழைந்த ஜானகி…..ரமணனை நேருக்கு நேர் பார்க்க தயங்கியபடியே…..” என்ன…..என்று கேட்க….அங்கே கனத்த மௌனம்…நிலவியது.,

“நீ போனில் உன் அம்மாவிடம் பேசியதெல்லாம் நானும் கேட்கும்படியாகி விட்டது,,,,உன் மனசு என்னன்னு இப்போ நேக்கும் புரிஞ்சு போச்சு,,,,”ஏண்டி..உனக்கு நான் எதில் குறை வைத்தேன்…நீயே உன் மனசைத் தொட்டு சொல்லு…..இப்படி ஒரு எண்ணம் உனக்குள்ளே..எப்போ எப்படி வந்தது..?…அப்படி என்ன என் அம்மா….மாமியார் கொடுமை பண்ணிட்டா உனக்கு…..இவ்ளோ அலுத்துக்கும்படியா……எனக்கு நீயும் பூரணியும் ரெண்டு கண்கள் மாதிரிடி….உங்களாலத் தான் நான் இந்த உலகத்தையே பார்க்க முடியும்….நீங்க இல்லாட்டா எனக்கு இந்த ஜீவிதமே இருண்டு போயிடும் புரிஞ்சுக்கோ…! இத்தனை காலத்தில் உனக்கு இது கூடப் புரியலையா?

அதே சமயம்…என் அம்மா தான் எனக்கு உயிர்….உங்களை நேக்கு தெரியறதுக்கு முன்னால அவள் தான் எனக்கு இந்த உலகத்தையே பரிச்சயம் செய்து வைத்தவள்…..! நாம மூணு பெரும் சந்தோஷமா இருக்கணும்ங்கற ஒரே எண்ணத்தோட வாழற அன்புக்கு ஏங்கற வயசான ஜீவன்டீ…..அவளைப் போயி கன்னாப் பின்னான்னு வாய்க்கு வந்தபடி பேச உனக்கு எப்படி மனசு வந்தது…..? யார் தந்தா இந்த தைரியம்….சொல்லு…..வாயைத் திற….

நான் தெரியாமல் தான் கேட்கறேன்….நமக்கு பிறந்தவள் பெண் குழந்தை….உன்னைப் பார்த்து தான் அவள் பலதும் கத்துக்கணும்…நீயே…இப்படி இருந்தால்…?

எவ்ளோ தைரியம் இருந்தா..நீ அம்மாவை முதியோர் இல்லத்தில் விடச் சொல்லுவேன்னு சொல்லுவே….நீ இப்படி சொன்னா….நான் கேட்டுடுவேன்னு எண்ணமா..? எங்கம்மாவை எங்கேயோ கொண்டு விடறதுக்கு பதில் உன்னைக் கொண்டு போயி உன் அம்மா வீட்டில் விட்டுட்டு வந்துடுவேன்…தெரிஞ்சுக்கோ…இங்க வலிக்கிறதுடி …..என்று நெஞ்சைத் தட்டிக் காட்டிக் கொண்டே……

எப்படி ஜானா..உன்னால்… இப்படி ..வாயைத் திறந்து பதில் சொல்லு….? வார்த்தை அம்புகள் பட்ட ஊமைக் காயம் அதிகமாக வலிக்க….உள்ளம் துடிப்பது ரமணன்…வார்த்தைகளில் அழுத்தமாய்த் தெரிந்தது ! இருந்தும் அவளுக்குப் புரிய வேண்டுமே என்ற ஆதங்கத்தில் பக்குவமாக எடுத்துச் சொன்னான்..

என்னை மன்னிச்சுக்கோங்கோ…. என்று தடுமாறினாள் ஜானா . நான் செய்தது, சொன்னது எல்லாம் தப்பு தான்…..தெரியாமல்…புரியாமல்…நீங்க எப்பப் பாரு அம்மா அம்மா ன்னு ஓடும் போது…எனக்குள் ஒரு ஆளுமை…உங்க மேல்…..நீங்க என்னோட மட்டும் தான் எனக்காக மட்டும் தான் இருக்கணும்னு.,…அப்போ நான் அவங்களை உங்களைப் பெத்த தாயாய் கூட பார்க்க தோணலை….உங்கம்மாவை இன்னொரு பெண்ணாக மட்டும் தான் என் மனசு ஏற்றுக் கொண்டது….நான் என்ன செய்யட்டும்…எனக்குள் பாசமோ, அன்போ இல்லாமல்…போட்டியும்…பொறாமையும்..தான் அதிகமாச்சு..

இப்போ நீங்க சொன்னது போல நான் எதையும் நினைத்துப் பார்க்கலை…..நீங்க எனக்கு மட்டும் சொந்தம்…..அந்த அன்பை உங்கம்மா கூட பங்கு போட்டு விடக் கூடாதுன்னு தான் நினைத்தேனே தவிர….வேறெதையும் புரிஞ்சுக்கற மனப் பக்குவம் இல்லையே….நான் என்ன செய்வேன்….என்னை மன்னிச்சுக்கோங்கோ…ப்ளீஸ்…..முப்பது வயதைக் கடந்த குழந்தையாக கலங்கிய கண்களுடன் அப்படியே ரமணனின் காலடியில் கேவியபடி விழுந்தாள்…ஜானா…!

இனிமேல்…. பூரணி என் மேல ரொம்பப் பாசமா இருந்தால் கூட நீ இப்படித் தான் அவளையும் வெறுப்பியா…? உன் தப்பைப் இப்போவாவது புரிஞ்சுக்கோ….அந்தந்த உறவுகளுக்கும், மனசுக்கும் மரியாதை கொடு….இதெல்லாம் உனக்கு நான் சொல்லணுமா என்ன….?

சரி…சரி …எழுந்திரு…..ஜானா…எனக்கு உன்மேல கோபம் ஒண்ணும் இல்லை…வருத்தம் தான்….இப்போவாவது நீ புரிஞ்சுண்டியே….அது போதும்…எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்கலாம்…வா…அம்மாக்கு ரொம்ப உடம்பு சரியில்லை..டாக்டர்ட அழைச்சுண்டு போகலாம்…அதை சொல்லத் தான் நான் அங்கே வந்தேன்….என்ற ரமணன்…ஜானாவை எழுப்பி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்களை துடைத்து விட்டபடியே…..எனக்கு நீயும் ரொம்ப முக்கியம்….புரிஞ்சுக்கோடி தங்கம்….அணைப்பை இறுக்கி நெற்றியில் அவளின் நெற்றியில் உதடு பதிக்க…
உண்மைக் காயங்களுக்கு மருந்திட்டது போலிருந்தது அது.

ஜானகி அதிர்ச்சி அடைந்து சிலைபோல் நின்றாள். ரமணன் பக்குவமாக எடுத்து சொன்னதெல்லாம் எல்லாம் ஜானாவின் தலைக்குள் விறு விறுவென்று ஏறி அன்புக் கதவைத் திறந்து விட அங்கே…. ஞானம் பிறந்தது.

பூரணி பூனைபோல் பதுங்கிப் பதுங்கி மெதுவாக பாட்டி அருகில் வந்தாள். அவள் கையில் குட்டி டம்பளர் நிறைய சேமியா பாயசம்….! இந்தாப் பாட்டி..பாயசம்….அம்மா எனக்குத் தந்தா….நீ குடி.பாட்டி உனக்கும் பிடிக்குமாமே…….என்று நீட்ட….நீண்ட வருடங்கள் கழித்து தன் தாயை நினைக்க வைத்த பூரணியை….பாசத்தோடு பார்க்கிறாள் அகிலா. பூரணியின் முகம் அந்த அறையின் மங்கிய விளக்கொளியில் பௌர்ணமி நிலவாக ஒளிர்ந்தது.அவளது கண்கள் இந்த வீட்டில் யார் குழந்தை ? யார் அன்னை ?

பாட்டி…பாட்டி…..ஒரு கதை சொல்லேன்….என்று கேட்க….

குட்டிம்மா நீ முதல்ல ஒரு கதை சொல்லுவியாம் பாட்டி ம்….ம்…கொட்டிண்டே.. கேட்பேனாம்…சரியா…. என்று சொல்லியபடியே…..படுக்கையில் ஆயாசத்தோடு சாய்கிறாள் அகிலா.

அம்மா அப்பா இருவருக்குள்ளும் அறையில் என்ன நடக்கிறது என்று எதையும் அறியாமல் பாட்டியுடன் தனக்குத் தெரிந்ததை ஏதேதோ சொல்லிக் கொண்டே அமர்ந்திருந்தாள

ஹாலில் ஊதுவதற்காக கலர் கலராக பலூன்கள், வண்ண ரிப்பன்கள் அலங்காரம் செய்யத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தன….அதை எல்லாம் அப்படியே தள்ளி ஒதுக்கி விட்டு நேராக மாமியாரின் அறைக்குள் சென்று….
அங்கே கிழிந்த நாறாகக் கிடந்த மாமியாரையும் அருகில் அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்த பூரணியையும் பார்த்ததும்….நெஞ்சம் கரைந்தது.

“பூரணி….பாட்டிக்கு உடம்பு சரியில்லை…..டாக்டர்ட இன்னைக்கே அழைச்சுண்டு போகலாமா….இல்லைன்னா… உன் பொறந்த நாள் முடிஞ்சதும் அழைச்சுண்டு போகலாமா…எது முக்கியம்னு .நீயே சொல்லு….என்றபடியே பூரணியின் கழுத்தில் பாட்டி அளித்த தங்கச் சங்கிலியை மாட்டிய படியே குழந்தையின் பிறந்த நாள் கனவை கலைக்க விரும்பாமல் ஜானா மெல்ல கேட்கவும்..

முதலில் பாட்டி ! பிறகு பெர்த் டே பார்ட்டி ! சரியாப்பா….என்றாள் பூரணி பெரிய மனிஷி போல.!

மெதுவாக ” அம்மா….எழுந்திருங்கோ டாக்டர்ட போயிட்டு வந்துடலாம்….” என்றபடியே மாமியாரை எழுப்ப கைத்தாங்கலாக பிடித்துத் தூக்க………ஜானாவின் அன்பான ஸ்பரிசம் தன் உடலில் பட்டதும் பாசத்துடன் உடல் சிலிர்க்க…ஜானாவைப் பார்க்க…. அந்தப் பார்வையில் ஆச்சரியமும்….அன்பும்…பரஸ்பரமாக நிறைந்திருந்தது…!

ரமணன் தங்க மகளைத் தாவித் தூக்கி கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டான். ரமணனின் கண்களில் ஆனந்த வெள்ளம் குளம் கட்டியது.

பூரணி கழுத்தில் பாட்டியின் தங்கச் சங்கிலி கொஞ்சி ஆடிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட அகிலா பாட்டிக்கு மனதின் ஊமைக் காயங்கள் நொடியில் மாயமாகப் போனது போல இருந்தது. கூடவே தனிமை, வேதனை,விரக்தி,
எல்லாம் வெளியேறியது போலிருந்தது.

பூரணி பாட்டி கையைப் பிடிச்சுண்டே மெதுவா… காருக்கு அழைத்துச் செல்கிறாள்.

===============================================================================================

Series Navigationமகிழ்திருமேனியின் “ தடையறத் தாக்க “தங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

14 Comments

  1. Avatar
    jayashree shankar says:

    அன்பின் அமைதி…!

    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்

  2. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் ஜெயஸ்ரீ,

    மெல்லிய உணர்வுகளை அழகாகப் பின்னி எடுத்திருக்கிறீர்கள். கணகளில் கண்ணீர் கசியச் செய்த நிதர்சனமான எழுத்துகள். நொடியில் ஜனாவிற்கு ஏற்ப்ட்ட மனமாற்றம் சற்று நெருடுகிறது.. கதையின் ஊடே ஊர்ந்து செல்ல வைக்கும் உணர்வுக் கோலம்…அருமை தோழி.. வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

  3. Avatar
    jayashree shankar says:

    அன்பின் பவள சங்கரி,
    தங்களின் பாராட்டிய பின்னூடத்திற்கு நெகிழ்வான நன்றிகள்.
    மாறுவது மனம்…. வேண்டுமென்றே தவறு செய்பவர்க்கு திருந்தவும் மாட்டார்கள்..திருந்தவும் தாமதமாகும்…அறியாமல் பேதமையில் உணர்வுகளின் ஆளுமையில் செய்யும் தவறைச் சுட்டிக் காண்பித்ததும்
    இதயம் அதிர்வோடு புரிந்து கொண்ட பின் அங்கே அந்த பேதைமை சட்டென மறைந்து விடும். அடுத்து அவளால் அந்த பழைய நிலைக்கு வருவது கடினம். மறந்து விடும் மனம். மாறுவதும் மனம். ஜானாவின் நிலைமையும் இந்த விதம் தான். குழந்தை மனம்.
    /////ஜானகி அதிர்ச்சி அடைந்து சிலைபோல் நின்றாள். ரமணன் பக்குவமாக எடுத்து சொன்னதெல்லாம் எல்லாம் ஜானாவின் தலைக்குள் விறு விறுவென்று ஏறி அன்புக் கதவைத் திறந்து விட அங்கே…. ஞானம் பிறந்தது.////
    தோழி, உங்கள் உண்மையான கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி.
    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  4. Avatar
    ramani says:

    ஏதோ நமக்குத் தெரிந்த வழியில் யாரோ அழைத்துச் செல்லும் உணர்வு வந்தாலும், நம்மை அழைத்துச் சென்றவர் ஒரு புதிய பாதையில் பயணிக்க வைத்தது போன்ற எண்ணம் கதையைப் படிக்கும்போது ஏற்படுகிறது. அது உங்கள் எழுத்தின் பலம் ஜெயஸ்ரீ.

    1. Avatar
      jayashree says:

      அன்பின் ரமணி அவர்களுக்கு,

      தங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி.

      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்.,

  5. Avatar
    லறீனா அப்துல் ஹக் says:

    அவசரகதியான/ இயந்திரமயப்பட்ட வாழ்க்கையே இன்று பெரும்பாலானோரின் தலைவிதியாகிவிட்ட நிலையில், மருமகள் என்ன, மகள்களே தம் தாயை சம்பளமற்ற வேலைக்காரியாய் நடத்தும் கொடுமையும் அனேகம் நிகழ்கின்றது.

    கலையின் பயன் சமூகத்தைச் செவ்வைப்படுத்துவதே என்பதை உ’றுதியாய் நம்புபவள், நான். அந்த வகையில், குடும்ப உறவுகளிடையேயான நுண்ணிய உணர்ச்சிப் போராட்டங்களை மிக அழகாக வெளிக்காட்டி கதையைப் பின்னியுள்ளீர்கள். உறவுகளிடையே விரிசல்கள் விசாலமாகிக்கொண்டு வரும் கால சூழலில், எல்லோரும் தம்மைத்தாமே அது குறித்துத் திரும்பிப் பார்த்துக்கொள்ளவும், உறவுகளின் உன்னதம் உணரவும் ஒரு உந்துதலை உங்கள் கதை மூலம் வழங்கி இருக்கிறீர்கள்.

    உங்கள் பணி தொடரட்டும் இனிதே! வாழ்த்துக்கள்!

  6. Avatar
    s.ganesan says:

    After a long gap jaishree delivered her story…much awaited…she emotionally narrates humanrelaton of a small family in her own style…janakis sudden u turn may not be practical but it shows authors good intention to correct the character for good cause….keep it up….

    1. Avatar
      jayashree says:

      அன்பின் கணேசன்,
      மனமாற்றம் ஏற்படும் நேரத்தை சரியாகச் சொல்ல முடியாது…
      அவளின் மனமும் அப்படித்தான்…அஞ்ஞானம் விலகி,..தவறுகளை உணர்ந்தவள்…தானே மாறிப் போனாள்.
      தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்.

  7. Avatar
    jayashree says:

    அன்பின் லறீனா அப்துல் ஹக் ,
    தங்களது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..
    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  8. Avatar
    தி.தா.நாராயணன் says:

    நன்றி ஜெயஸ்ரீ சங்கர் அவர்களே.கண்ணில் நீரை வரவழித்துவிட்டீர்கள்.அருமையாய் சொல்லப்பட்ட ஒரு சிறுகதையை தந்திருக்கிறீர்கள்.

  9. Avatar
    jayashree says:

    அன்பின் தி.தா.நாராயணன் அவர்களுக்கு,

    இந்தக் கதையைப் படித்துவிட்டு நெகிழ்ந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  10. Avatar
    charusthri says:

    Re ally a good story.Exact photograph of the feelings of an old lady so insecured yet so dignified.bond with her grand daughter

Leave a Reply to jayashree Cancel reply

Your email address will not be published. Required fields are marked *