எங்கள் உளம் நிற்றி நீ – ஞானக்கூத்தனுக்கு அஞ்சலிகள்

This entry is part 12 of 12 in the series 31 ஜூலை 2016

gnanakoothanஎழுபதுகளின் இறுதியாண்டுகளில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் என் மனம் மரபுக்கவிதைகளில் திளைத்திருந்தது. அதே சமயத்தில் புதுக்கவிதை சார்ந்த ஓர் ஈர்ப்பும் இருந்தது. சி.சு.செல்லப்பா தொகுத்திருந்த புதுக்குரல்கள் என்னும் தொகுப்பின் வழியாக புதுக்கவிதை எழுதும் பல கவிஞர்களின் பெயர்களையும் அவர்களுடைய கவிதைகளையும் பற்றித் தெரிந்துவைத்திருந்தேன். அந்தத் தொகுப்பைத்தான் புதுக்கவிதைக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கிய தொகுப்பு என்று சொல்வார்கள். அந்தக் கவிதைகளைப் படிப்பதும் அவற்றைப்பற்றி யோசிப்பதுமாக பல நாட்கள் கழிந்ததுண்டு.
ஒருநாள் முடிவெட்டிக்கொள்வதற்காக ராஜா திரையரங்கத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நிலையத்துக்குச் சென்றிருந்தேன். எனக்கு அது பழக்கமில்லாத இடம். நான் பொதுவாக எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த மாரிமுத்து கடையிலேயே வெட்டிக்கொள்வதுதான் வழக்கம். முடி வெட்டுவது என்றால் எல்லாப் பக்கங்களிலும் சீராக முடியின் அளவைக் குறைத்துவிடும் கலை என்னும் செயல்முறையில் நம்பிக்கை உடையவராக இருந்தார் அவர். ஒவ்வொரு முறையும் நாற்காலியிலிருந்து இறங்கும்போது மேலே போர்த்தப்பட்டிருந்த துண்டை எடுத்து உதறியபடி ”இன்னும் மூணு மாசம் தாங்கும் தம்பி” என்று புன்னகையோடு அவர் நிற்கும் தோற்றம் இன்னும்கூட என் கண்ணிலேயே இருக்கிறது. அவர் பிடியிலிருந்து என்னை மீட்டெடுப்பதற்காக என் நண்பன் சுட்டிக் காட்டிய இடம்தான் அந்தப் புதிய நிலையம்.
உள்ளே மூன்று பேருக்கு முடி திருத்தும் வேலை நடந்துகொண்டிருந்தது. கூடத்தில் ஆறு பேர் காத்திருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் உட்கார்ந்து ஸ்டூல் மீது வைக்கப்பட்டிருந்த தினத்தந்தியை எடுத்துப் படித்து முடித்தேன். அதற்குப் பிறகு என்ன செய்வது என்று அக்கம்பக்கம் பார்த்தபோது எனக்குப் பக்கத்தில் நாலைந்து புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். உள்ளே முடி திருத்திக்கொள்ளச் சென்ற யாரோ ஒருவருடைய புத்தகங்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆவலோடு அவற்றை எடுத்துப் புரட்டினேன். தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் நாவல்கள். அவற்றுக்கு நடுவில் ஒரு அகலாமன புத்தகம் நீட்டிக்கொண்டிருந்தது. இருபது முப்பது பக்கங்களைச் சேர்த்துத் தைத்ததுபோன்ற தோற்றம். மெதுவாக புத்தக அடுக்கிலிருந்து அதை விலக்கியெடுத்துப் பார்த்தேன். கல்வெட்டில் காணப்படும் எழுத்துபோல அந்தப் புத்தகத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அது கசடதபற இதழ். வெறும் எழுத்துகளை மட்டுமே சேர்த்து ஒரு பெயராக வைத்திருப்பதைப் பார்க்க புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அந்த எழுத்துகளைப்போலவே அதன் அட்டையில் இருந்த கோட்டோவியமும் வசீகரமாக இருந்தது. தாவியோடும் ஒரு குதிரையின் தோற்றம். அதில் உட்கார்ந்திருந்தவன் எந்த நேரமும் விழுந்துவிடுபவன்போல நிலைகுலைந்து காணப்பட்டான். அதன் உச்சியில் வாலும் வில்லும் ஏந்திய சூரன் வேடமிட்ட ஒரு கூத்தாடியைப்போன்ற ஒரு சின்னச் சித்திரம். வேகமாக அந்த இதழைப் புரட்டினேன். எல்லாமே புதுக்கவிதைகள். கட்டுரைகள். எழுதியவர்களின் பெயர்களெல்லாம் புதுமையாக இருந்தன. அவற்றில் ஒன்று ஞானக்கூத்தனின் பெயர். ஒட்டக்கூத்தரின் பெயரை நினைவுபடுத்தும் அந்தப் பெயரைப் படித்ததுமே நெஞ்சில் படிந்துவிட்டது.
அவருடைய கவிதை பதினைந்து இருபது வரிகள்தான் இருக்கும். வேகமாகப் படித்துவிட்டேன். மரபு வடிவத்தில் புதிய கவிதை. அந்த இணைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மனப்பாடம் செய்கிறவனைப்போல அதை மீண்டும் மீண்டும் படித்தபடி இருந்ததில் எனக்கு அருகில் வந்து நின்றவரை நான் கவனிக்கவில்லை. அவர் என் தோளைத் தொட்ட பிறகுதான் அதை உணர்ந்தேன். “சாரி சார், சும்மாதான் பார்த்துட்டிருந்தேன்” என்றபடி சற்றே நாணத்துடன் அந்த இதழை மூடி அவரிடம் கொடுத்தேன். அவர் அதை வாங்காமல் “கவிதைன்னா புடிக்குமா?” என்று கேட்டார். நான் உடனே ஆர்வத்தோடு தலையசைத்தேன். தொடர்ந்து அவரைக் கவரும் விதமாக “புதுக்குரல்கள் தொகுதி என்கிட்ட இருக்குது சார். அதுல நிறைய புதுக்கவிதைகள் இதுமாதிரி உண்டு” என்று சொன்னேன். அவர் புருவத்தை உயர்த்திச் சிரித்தார். “அப்படியா? அப்படின்னா இது உனக்குப் பொருத்தமான பத்திரிகைதான்” என்று சிரித்தார். பிறகு “நீயே வச்சிக்க” என்று சொன்னபடி மற்ற புத்தகங்களை எடுத்துக்கொண்டு நகர்ந்தார். ஒருகணம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அச்சத்தில் “ஐயோ, வேணாம் சார், நீங்க வச்சிக்குங்க” என்று அவரிடம் புத்தகத்தை நீட்டினேன். அவர் புன்னகைத்தபடியே “நான் படிச்சிட்டேன், நீ படி” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். என்னால் அதை நம்பவே முடியவில்லை. என் கையிலிருந்த இதழை மறுபடியும் பார்த்தேன். அதன் விலை ஐம்பது காசு. அன்று, ஒரு சாதாரண கடையில் அந்தப் பணத்துக்கு ஒருவர் அளவு சாப்பாடு சாப்பிடலாம்.
அன்றுமுதல் ஞானக்கூத்தனின் பெயர் என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவருடைய தொகுப்பு வீட்டுக்கு அருகில் இருந்த பொதுநூலகத்தில் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. தற்செயலாக எங்கள் தமிழ்த்துறை நூலகத்தில் அந்தத் தொகுதியை ஒருநாள் கண்டுபிடித்தேன். அன்று வேறு கிழமை. அதை எனக்காக எங்கள் ஆசிரியர் சாயபு மரைக்காயர் தன் பெயரில் எடுத்துக் கொடுத்தார். புத்தகம் முழுக்க ஏராளமான கோட்டோவியங்கள். அருகருகில் கவிதைகள். ஒவ்வொன்றிலும் சின்னச்சின்ன காட்சிகள். ஒரே நொடியில் நிகழ்ந்துமுடியும் சம்பவங்கள். கதை போன்ற விவரணைகள். அழகான சொற்கட்டு. மரபுக்கவிதைக்கே உரிய தாளக்கட்டு எங்கும் பிசகவே இல்லை. கச்சிதமான சித்தரிப்புகள். மீண்டும் மீண்டும் அவற்றைப் படித்தபடியே இருந்தேன்.
அந்தத் தொகுப்பில் எல்லாக் கவிதைகளுமே ரசிக்கத்தக்கதாக இருந்தன. பள்ளிக்கூடத்தில் எலும்புக்கூடு பற்றி எடுக்கப்படும் பாடத்தைப்பற்றி ஒரு கவிதையை நான் மிகவும் ரசித்தேன். அந்தக் கவிதையில் வரும் ஆசிரியர் பாடத்தை பிள்ளைகள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக உண்மையான எலும்புக்கூட்டையே வகுப்புக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு சொல்லிக் கொடுப்பார். தலை,கை,கால்,இடுப்பு என எல்லாவற்றையும் ஆச்சரியம் ததும்பப் பார்ப்பார்கள் சிறுவர்கள். தொட்டுப் பார்த்து தமக்குள் சிரித்துக்கொள்வார்கள். அந்த ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு பிறக்கும். புதிய மாணவர்கள் வருவார்கள். அவர்களுக்கும் அதே எலும்புக்கூடு காட்டப்படும். அவர்களும் தொட்டுப் பார்த்து தமக்குள் சிரித்துக்கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதியபுதிய மாணவர்கள் வருவார்கள். அதே எலும்புக்கூடு அவர்கள் முன்னால் வந்து நிற்கும். நகைச்சுவையாக அந்தச் சம்பவத்தை அசைபோட்ட கணத்திலேயே, அதற்குள் வைக்கப்பட்டிருந்த ஊசி மனத்தைத் தைத்துவிட்டது. அது எலும்புக்கூடு அல்ல, இந்தக் கல்வித்திட்டம், இந்த அமைப்பு என்னும் வெளிச்சம் பிறந்துவிட்டது. இனி கவிதை செல்லவேண்டிய பாதையை அந்தக் கவிதை உணர்த்திவிட்டதாக நான் நினைத்துக்கொண்டேன்.
ஒவ்வொரு கவிதையையும் எண்ணற்ற முறைகள் படித்தபடியே இருந்தேன். அன்றாடக் காட்சிகள் வழியாக அவர் வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஆற்றல் உள்ளவர் என ஞானக்கூத்தனைப்பற்றிய எண்ணம் உதித்தது. அன்றுமுதல் நான் விரும்பிப் படிக்கும் கவிஞர்களில் ஒருவராக அவர் மாறிவிட்டார்.
கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு கர்நாடகத்தில் வேலை கிடைத்து இடம்மாறிச் சென்றேன். அது எண்பதுகளின் தொடக்கக் கட்டம். ஒரு தருணத்தில் என் கவனம் கவிதையிலிருந்து சிறுகதையை நோக்கித் திரும்பியது. ஒரு புள்ளியில் தொடர்ச்சியாக எழுதவும் தொடங்கினேன். வாசிப்புக்கும் குறைவில்லை. சென்னைக்கு வரும்போதெல்லாம் ஏராளமாகப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு செல்வேன். அடுத்த பயணம் வரும் வரைக்கும் அவை என் உலகத்தின் உற்ற துணையாக விளங்கும்.
ஒரு முறை சென்னைக்கு வந்தபோது திருவல்லிக்கேணியில் முருகேச நாயக்கர் மேன்ஷனில் வசித்த பாலச்சந்திரன் என்னும் நண்பருடைய அறையில் தங்கியிருந்தேன். அவர் ‘இந்து’ நாளிதழில் வேலை செய்து வந்தார். நல்ல வாசகர். ஒருநாள் இரவு உணவை முடித்துக்கொண்டு திரும்பியபோது எங்கள் உரையாடல் கவிதையைநோக்கித் திரும்பியது. அவருக்கு ஞானக்கூத்தனின் ஸ்ரீலஸ்ரீ கவிதை மிகவும் பிடித்திருந்தது.
“நாம் கேட்டுப் பெறக்கூடிய வரங்கள் எல்லாமே நமக்கு அழிவைத்தான் தருதுன்னு சொன்னா, அந்த வரங்களால் என்ன பயன்? புராண காலத்திலிருந்து கடவுள் மூலமாக வரம் வாங்கனவங்க எல்லோருமே அதே வரத்தால அழிஞ்சி போனவங்கதான். அப்படின்னா அதை வரம்னு சொல்றதா, சாபம்னு சொல்றதா? ரெண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமலேயே போய்டுது, இல்லையா?” என்றார் பாலச்சந்திரன்.
“நமக்கு முதலில் எதுக்காக வரம் வேணும்? வரமில்லாம இயற்கையான மகிழ்ச்சியோடு வாழறதில எந்தத் தடையும் இல்லையே. சந்தோஷமோ துயரமோ எது வருதோ, அதை அதை அந்தந்த வழியில ஏற்றுக்கொண்டு போகலாம் அல்லவா?” என்றேன் நான்.
“போகலாம்தான். ஆனால் மனிதர்களுக்கு அது போதலையே” என்று சிரித்தார். தொடர்ந்து ”சிறப்பான ஒன்னு, அதைவிட சிறப்பான ஒன்னு வேணும்ன்னு எதிர்பார்க்கிறாங்க. மற்றவர்களைவிட ஒரு படி நான் தூக்கலானவன்னு காட்டி மினுக்கிக்கணும்ன்னு விரும்புகிறாங்க. அந்த மினுக்கலுக்குத்தான் இந்தத் தவம், இந்தப் பிரயாசை, இந்த வரம். கடைசியில் அதற்குக் கொடுக்கிற விலை ரொம்ப பெரிசாக இருக்குது” என்றார்.
நான் மெதுவாக, “எல்லாருமே ஏதோ ஒரு வகையில் தன்னை மாண்புமிகு ஆளாகக் காட்டிக்கறதுக்கு ஆசைப்படுறாங்க. சாதாரண தொண்டனா இருக்கறதுல கூச்சமுள்ளவங்களா இருக்கிறாங்க. அதுதான் பிரச்சினை” என்றேன்.
பாலச்சந்திரன் சட்டென்று நின்றுவிட்டார். அவர் முகத்தில் சட்டென ஒரு பரவசம் மின்னியது. “அட, இந்தக் கோணம் நல்லா இருக்குதே, நான் இத்தனை நாளும் இதை வரம்- சாபம்ங்கற கோணத்திலேயே பார்த்துட்டிருந்தேன். நீங்கள் சொல்ற கோணம் தலைப்போடு அழகா இணைஞ்சி போவுது” என்றார்.
அந்தக் கவிதையை அடுத்து கீழ்வெண்மணி, அதையடுத்து அம்மாவின் பொய்கள் என பல கவிதைகளைப் பேசிக்கொண்டே அறைக்குத் திரும்பினோம். அன்றைய உரையாடல்கள் ஒருவருக்கொருவர் வெளிச்சத்தைப் பகிர்ந்துகொண்டதுபோல இருந்தது.
படுக்கப் போகும் முன்பாக திடீரென “இங்க பக்கத்துலதான் ஞானக்கூத்தன் சார் வீடு, நாளைக்கு காலையில பார்க்கலாமா?” என்று கேட்டார் பாலச்சந்திரன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “உங்களுக்கு தெரியுமா? பழக்கம் இருக்குதா?” என்று ஆவலுடன் கேட்டேன். அவர் சிரித்தார். “பழக்கம் உண்டு. வாங்க, பார்த்துக்கலாம்” என்றார்.
அடுத்த நாள் காலையில் குளித்து முடித்து தேநீர் அருந்திவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றோம். அவர் அலுவலகத்துக்குக் கிளம்பும் நேரமாக இருக்கலாம். ஐந்து பத்து நிமிடங்களுக்கும் மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டு சென்றோம். மேன்ஷனிலிருந்து மிக அருகில் இருந்தது அவர் வீடு. நாலைந்து சந்துகள் திரும்பியதுமே அவர் வீடு வந்துவிட்டது. அவர் வாசலிலேயே நின்றிருந்தார். பாலச்சந்திரனைப் பார்த்ததுமே அவர் “வாங்க வாங்க” என்றபடி புன்னகைத்தார். பாலச்சந்திரன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். நான் கைகுவித்து வணங்கினேன்.
“உங்க எழுத்த நான் படிச்சிருக்கேன் பாவண்ணன். நல்லா தெரியும். கணையாழியில ரெண்டு மூணு கதை படிச்சிருக்கேன். நல்லா ஞாபகம் இருக்குது. உங்க எழுத்து நல்லா இருக்குது” என்றார் ஞானக்கூத்தன். அவருடைய குறைவான சொற்களே எனக்குப் பெரிய அளவில் மனஎழுச்சி தரக்கூடியதாக இருந்தது. “சோர்வில்லாம எழுதுங்க” என்று அவர் உற்சாகப்படுத்தினார்.
பாலச்சந்திரன் முதல்நாள் இரவு நாங்கள் அவருடைய கவிதைகளைப்பற்றி உரையாடியதையெல்லாம் சொன்னார். இறுதியில் “நீங்க எழுதும்போது உங்களுக்கு அப்படி தோணியதுண்டா சார்?” என்று கேட்டார். அதைக் கேட்டு ஞானக்கூத்தன் புன்னகைத்தார். பிறகு “கவிதையோ, கதையோ, அதை எழுதுகிறவனுடைய பங்களிப்புங்கறது எழுதனதோடு முடிஞ்சி போயிடுது. ஒவ்வொரு காலகட்டத்திலயும் அதைப் படிக்கிற ஆட்களுக்கு என்ன மாதிரி பொருள்படுதுங்கறதுதான் முக்கியம். உங்களுக்கு தெரியாத கோணத்தை அவர் காட்டுவார், அவருக்குத் தெரியாத கோணத்தை இன்னொருவர் காட்டுவார். அவருக்கு இன்னொரு கோணத்தை மற்றொரு புது ஆள் காட்டுவார். அதுதான் கவிதையுடைய அழகு. புதிர். ரகசியம். எல்லாம்” என்று சொன்னார். “அர்த்தம் சுருங்கிட்டா அது பொன்மொழியாயிடும். அர்த்தம் வளர்ந்துட்டே போகும்போதுதான் கவிதையா நிற்கும்”
அது அவர் அலுவலகம் கிளம்பும் நேரம் என்பதால் அவரிடமிருந்து விரைவிலேயே விடைபெற்றுக்கொண்டோம். முப்பதாண்டுகளுக்கு முந்தைய அந்தக் காலை நேரச் சந்திப்பு இன்னும் என் மனத்தில் பசுமையாக நினைவில் உள்ளது.
அதற்குப் பிறகு சென்னைக்குச் சென்றிருந்த சமயங்களில் நான்கைந்து முறைகள் சந்தித்துப் பேசியிருக்கிறேன். கவிதையைப்பற்றி உரையாடத் தொடங்கினாலேயே அவர் மிகுந்த உற்சாகம் கொண்டுவிடுவார். திருக்குறள், சங்கப்பாடல்கள் எல்லாவற்றிலும் அவருக்கு நல்ல புலமை இருந்தது. பல வரிகளை அவர் மனப்பாடமாகவே சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
மறைந்த மொழிபெயர்ப்பாளர் திருமதி. சரஸ்வதி ராம்னாத் அவர்களுடைய நினைவைப் போற்றும் விதமாக பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஞானக்கூத்தன் வந்திருந்தார். எங்களோடு ஒரு நாள் முழுதும் தங்கியிருந்தார். அரட்டைப் பேச்சு கூட கவிதைகளை ஒட்டியதாகவே அன்று அமைந்திருந்தன. திடீரென வள்ளலார் பாடலொன்றைச் சொன்னார். அதன் அனுபவத்தைப் பேசும்போது, அதற்கு இசைவான ஒரு வரியை சமஸ்கிருதத்திலிருந்து சொன்னார். அது விரிவுபெற்றுச் செல்லும்போது எப்படியோ புறநானூறு வந்துவிட்டது. ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கென அழகாக மாறிமாறி நின்று களைப்பில்லாமல் பேசியபடி இருந்தார்.
“கவிதைகளில் படிமங்களின் செயல்பாடு” என்பது அன்று அவர் நிகழ்த்திய உரையின் தலைப்பு. அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை என சங்கப்பாடல்களை ஒட்டியே அவருடைய உரை தொடங்கினாலும் மிக இயல்பான வகையில் நவீன கவிதைகளை ஒட்டி வந்தடைந்தார். ஆத்மாநாம், சி.மணி, பிரமிள், பிச்சமூர்த்தி என பலருடைய கவிதைகளில் படிமங்கள் இயங்கும் விதத்தை விளக்கிவிட்டு முடித்தார். ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம். அது ஒரு மறக்கமுடியாத பேரனுபவம். அந்த நிகழ்ச்சியில் சரஸ்வதி ராம்னாத் அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். அவருடைய மகனும் மருத்துவருமான ரகுராமன், ஞானக்கூத்தனின் கவிதைகள்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஞானக்கூத்தனுடைய முதல் கவிதைத்தொகுதி வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பழைய கல்லூரிக்கால நினைவை அவர் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். அந்த விழா வளாகத்தில் தொகுதியில் இடம்பெற்றிருந்த ஓவியங்களின் சுவரொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த அனுபவத்தையும் விவரித்தார்.
எனக்குப் பிடித்த கவிஞர்களில் ஞானக்கூத்தனும் ஒருவர். பத்துக்கும் மேற்பட்ட அவருடைய கவிதைகளை என்னுடைய குறிப்பேட்டில் எழுதி வைத்திருக்கிறேன். தொகுப்பைத் தேடும் அவசியம் இல்லாமல், அந்தக் குறிப்பேட்டை எடுத்து சட்டென ஒரு பக்கத்தைப் புரட்டி படிக்கத் தொடங்குவேன். கவிதை வாசிப்பு எப்போதும் என் நெஞ்சை நிறைப்பதோடு மட்டுமின்றி, எனக்குத் தேவையான மனஎழுச்சியையும் வழங்கும்.
2014 ஆம் ஆண்டில் கோவையில் விஷ்ணுபுரம் இலக்கியப் பேரவை ஞானக்கூத்தனுக்கு விருதளித்து கெளரவித்தது. அச்சமயத்தில் நண்பர் கெ.பி.வினோத் அவரைப்பற்றி எடுத்திருந்த குறும்படமும் வெளியிடப்பட்டது. அச்சமயத்தில் அவருடைய கவிதைகளைக் குறித்து நான் சிறப்புரையாற்றினேன். அவருடைய கவிதைகளை முன்வைத்து ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள எனக்கும் அது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சில மாதங்களுக்குப் பிறகு ”என் உளம் நிற்றி நீ” என்னும் தொகுதியைப் படித்தேன். அது முற்றிலும் புதியதொரு பாணியில் இருந்தது. அத்தொகுதியில் பல கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ஓய்விருக்கும்போது அதைப்பற்றி எழுதவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். அது நடக்கவில்லை.
28.07.2016 அன்று இணையத்தைத் திறந்தபோது அவர் மறைவுச்செய்தியைப் படித்துவிட்டு ஒரு கணம் திகைத்துக் குழம்பிவிட்டேன். நம் மூத்தவர்கள் எப்போதும் நம்மிடையே இருப்பார்கள் என ஏதோ ஒரு நம்பிக்கை எப்படியோ ஆழ்மனத்தில் பதிந்திருக்கிறது. அதுதான் திகைப்புக்குக் காரணம். உண்மையிலேயே அவர்கள் மரணத்தின் பிடியில் விழுந்த பிறகுதான் அந்த இழப்பை மனம் அதிர்ச்சியோடு உள்வாங்கிக்கொள்கிறது. ஞானக்கூத்தனைப் பார்த்து “எப்போதும் எங்கள் உளம் நிற்றி நீ” என்று சொல்லவேண்டும் போல உள்ளது.
முன்னோடி எனச் சொல்லத்தக்கவராக யாருமே இல்லாத வகையில் தனக்கே உரிய ஒரு கவிதைமொழியையும் நடையையும் கண்டடைந்து, அதை நிலைபெறச் செய்த கவிஞர் அவர். பகடி மிக்க சின்னச்சின்ன காட்சிகளால் நிறைந்தது அவர் கவிதை உலகம். இந்த வாழ்க்கையை, இதன் மதிப்பீடுகளை, இதன் பொய்மையை, வேடத்தை, வேட்கையை, தந்திரத்தை, செருக்கை, சினத்தை, வெற்றியை, தோல்வியை என அனைத்தையும் அந்த உலகம் பகடி செய்தபடி இருக்கிறது. ஒளிரும் அந்தப் புன்னகைக்கிடையே ஞானக்கூத்தன் என்றும் வாழ்வார். அவர் நினைவுகள் எப்போதும் நம்முடன் வாழும். அவருக்கு அஞ்சலிகள்.

Series Navigationயானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 5
author

பாவண்ணன்

Similar Posts

6 Comments

  1. Avatar
    BSV says:

    ஞானக்கூத்தனின் கவிதைகளை இப்படியெல்லாம் வியந்தோதும் கட்டுரையாளர், அக்கவிஞரின் ஒரு பாட்டையாவது போட்டிருந்தால் ஞானக்கூத்தன் என்பவர் யார் என்று தெரியாத என்னைப்போன்றோருக்கு நன்மை. ஓரிரு வரிகளைக்கூடவா போட பாவண்ணனுக்கு உந்துதல் வரவில்லை? இணையத்தில் கிடைக்குமா?

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      நீங்கள் ஒன்றும் பாவண்ணனையோ ஞானக்கூத்தனையோ நக்கலடிக்கவில்லைதானே ?

      1. Avatar
        BSV says:

        உண்மையிலேயே நான் புதிய எழுத்தாளர்களைப்படித்தது இல்லை. இன்னும் இல்லை. எவரேனும் இறந்துபோக, அவரின் விசிறிகள் அவரை உச்சிமீது வைத்து மெச்சும்போது எனக்குள் ஓர் ஆர்வம் துள்ளி எழும் இப்படி இவர்கள் விழுந்துவிழுந்து மாய்ந்து போகுமளவுக்கு அவர் என்னதான் எழுதியிருப்பார் என்று. எனவேதான் ஓரிரு பாக்களை இங்கு போட்டிருந்தால் எனக்கும் படிக்க சுவையாக இருந்திருக்கும்.

        திண்ணையில் முன்பு ஓர் அஞ்சலி யாரோ ஓர் எழுத்தாளருக்கு இவ்வாறே அவரின் எழுத்துக்களில் சிலதைக்கூட போடாமல் இருந்த போது இதையே சுட்டிக்காட்டினேன்.

        ஆங்கிலத்தில் ஒரு பிரபலம் இறந்தவுடன் ப்லவகையான அவரைப்பற்றிய செய்திகளோ, கட்டுரைகளோ வெளியாகும்.

        ஒருவகை: 1 அன்னாரைப்பற்றி நற்செய்திகள் மட்டுமே. It is called Tribute. இதனடிப்படை ஓர் இலத்தீன் பழமொழி. De mortius mil nisi bonum. இறந்தவரைப் பற்றி ந‌ல்லதே பேசப்படவேண்டும்.

        அடுத்தவகை: 2 அன்னாரைப்பற்றி பொல்லாத செய்திகள் மட்டுமே பேசப்படுவது. இதனடைப்படி செகப்பரியரின் கூற்று: ஒருவர் இறக்கும்போது அவரின் சடலத்தோடு அவர் தன் வாழ்வின் செய்த அனைத்து நற்செய்ல்களும் சேர்த்து புதைக்கப்படும். அவர் செய்த தீச்செயல்களை மட்டுமே இவ்வுலகம் பின்னர் பேசத்தொடங்கும்.

        The evil that men do lives after them,
        The good is oft interred with their bones

        (எ.கா, ஆஸ்கர் வைல்ட் இறந்த பின் அவரின் இலக்கியத்தொண்டு பேசப்படவில்லை; அவரின் செக்சுவல் ப்ரிஃப்ரன்ஸும் செயல்களுமே பேசப்பட்டன.)

        மற்றொரு வகை: 3 அன்னாரின் நிறை, குறைகள் இரண்டுமே அலசப்படும். அன்னாரின் நண்பர் எழுதவேண்டுமெபதில்லை. எழுத்துத்துறையில் உள்ள விமர்சகர் ஒருவர் எழுதுவார். This is obituary proper. The writer should be more intelligent to possess insights in personalities; and has a good command of the language.

        கடைசிவகை: 4 நண்பர்கள், அல்லது அவருடன் நன்கு பழகியோர் எழுதுவது. இதில் எல்லாமே அடங்கும். இருப்பினும். அன்னாரைப்பற்றி உலகம் உவக்கும் அல்லது வியக்கும் படியே எழுதப்படும். இது நினைவலைகள் வகையில் வரும்.

        திண்ணையில் வருவன அஞ்சலி வகை. ஒரே புகழ்ச்சிமட்டுமன்று; அமானுஷயனாக இறந்த்வரை நம் முன் வைக்கும் செயலிது. நடிகரின் கட் அவுட்டுக்கு பால்குடமுழுக்கு செய்வது போன்று. தவறோ சரியோ தெரியாது. ஆனால், ஒரு விரக்தியை உருவாக்கும். இப்பாவண்ணனின் அஞ்சலியையே தூக்கிசாப்பிட்டுவிடும்படி இன்னொருவருமெழுதியிருக்கிறார் திண்ணையில்: அவருக்கு ஆகாயமே எல்லை. படித்துப்பாருங்கள்.

        ஒரு நல்ல ஆபிட்சுவரி எழுதுவதற்குத் தமிழகத்தில் ஒருவருமே இல்லையா? அல்லது பயப்படுகிறார்களா? அவர்களுள் ஒருவர் கூட திண்ணையில் எழுதமுன் வர‌மாட்டார்களா என்ற ஏக்கமே வருகிறது.

        எனக்கென்னவோ இப்படிப்பட்ட இலத்தீன் பழமொழி அடிப்படை வகை அஞ்சலிகள் தமிழரின் அடிப்படைக்குணத்திலிருந்தே வருகிறதோ என்ற ஐயம். அதாவது. கட் அவுட் குடமுழுக்கு. Emperor has no clothes என்று சொல்லும் கலாசார நமக்கு ஆண்டவன் கொடுக்கவில்லை.

        நான் எழுதியதில் எள்ளலோ, ஏளனமோ இல்லை. விரக்தியே. உங்களுக்கு?

        I am waiting to read a good and wholesome obituary for the personality who is going to die next. Hopefully after a long time :-)

  2. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    இவ்வளவு சொல்லும் நீங்கள் ஞானக்கூத்தன் என்றோ ஞானக்கூத்தன் கவிதைகள் என்றோ கூகுளிட்டிருந்தால் போதுமே.

  3. Avatar
    BSV says:

    இங்கே போடப்பட்டிருக்கும் கட்டுரை அஞ்சலி. அவரின் கவிதைகளுக்கு கரணியங்களை எடுத்தியம்பி இறும்பூதெய்கிறது அஞ்சலி. அக்கரணிய‌ங்கள் – அக்கொள்கைகள் – இவையே என்னால் விமர்சிக்கப்படுகின்றன. கவிதைகளை மட்டுமே இலக்கிய நயத்துக்காக, அல்லது இலக்கியத்தின் ஓரணிகலனாக பார்த்து பேசினால், அங்கு நான் ஞானக்கூத்தனின் கவிதைக்கொத்தொன்றை நன்கு படித்து விட்டு நுழைவேன் அக்கவிதைகளைப்பற்றிப் பேச.

  4. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    // ….. அக்கவிஞரின் ஒரு பாட்டையாவது போட்டிருந்தால் ஞானக்கூத்தன் என்பவர் யார் என்று தெரியாத என்னைப்போன்றோருக்கு நன்மை. ஓரிரு வரிகளைக்கூடவா போட பாவண்ணனுக்கு உந்துதல் வரவில்லை? இணையத்தில் கிடைக்குமா? //

    இந்த பின்னூட்டத்திற்குத்தான் “கூகுளிட்டிருந்தால் கிடைத்திருக்கும்” என்று குறிப்பிட்டேன்.

Leave a Reply to BSV Cancel reply

Your email address will not be published. Required fields are marked *