எனது கதைகளின் கதை – 1.எங்கள் வாத்தியார்

This entry is part 14 of 23 in the series 30 நவம்பர் 2014

 

கதைகள் அனைத்துமே கற்பனையால் மட்டுமே எழுதப்படுவதில்லை. கதைக்கான உந்துதல் ஏதாவது ஒரு நிகழ்வின் பாதிப்பாகவே இருக்கும். எனது கதைகள் எதுவுமே கற்பனை இல்லை. நான் கண்ட, கேட்ட, பரவசப்பட்ட சம்பவங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டவை. தங்கத்துக்கு செம்பு சேர்ப்பது போல கதையின் முழுமைக்கு கற்பனை துணையாகும்.

எனது முதல் கதை ‘எங்கள் வாத்தியார்’ கதையா நடைச்சித்திரமா என்று புரியாத நிலையில் எழுதப்பட்டது. பின்னாளில் பல ஆண்டுகளுக்குப்பின் ‘வ.ரா’ வின் நடைச்சித்திரங்களை ‘மணிக்கொடி’ படித்த பின்தான் நான் எழுதியது நடைச்சித்திரம்தான் என்று புரிந்தது. ஆனலும் அதில் சிறுகதையின் சுவாரஸ்யம் இருந்தது.

1950ல் நான் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது வித்துவான் சாம்பசிவ ரெட்டியார் என்றொரு தமிழாசிரியர் எங்களுக்குத் தமிழ் உணர்வை தனது போதனையின் ஊடே ஊட்டியவர். அவர் பிற தமிழாசிரியர்களிமிருந்து மாறுபட்டவராய் பத்திரிகைகளிலும் எழுதி வந்தவர். நான் அப்போதே நிறைய கல்கி. விகடன், கதிர் போன்ற பதிரிகைகளையும், நாவல்கள். சிறுகதைத் தொகுப்புகள் என்று கிடைத்தவற்றை எல்லாம் வாசிக்கும் ரசனை உள்ளவன் என்பதை அறிந்த அவர் அவ்வப்போது ‘ஆனந்த போதினி’யில் வெளி வந்த அவரது படைப்புகளை என்னிடம் காட்டுவார். அந்த காலகட்டத்தில் புதிய முயற்சியாக ‘கலைப்பயிர்’ என்றொரு கையெழுத்துப் பத்திரிகையை பள்ளியில் தொடங்கி வைத்தார். அந்தப் பத்திரிகையின் ஒவியன் நான்தான். அதோடு நிறுத்தாமல் கதை ஒன்றையும் எழுதும்படியும் அவர் என்னைத் தூண்டினார். மற்ற மாணவர்களையும் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதத் தூண்டினார். கல்கியின் முதல் படைப்பான ’ஏட்டிக்குப் போட்டி’ கட்டுரைத் தொகுப்பைப் படித்த பாதிப்பில், என்னை மிகவும் ஈர்த்த வித்தியாசமான எனது தொடக்கக் கல்வி ஆசான் பற்றி எழுத எண்ணி, ‘எங்கள் வாத்தியார்’ என்ற தலைப்பில் எழுதினேன். தொடக்கமே வாசிப்பவரை ஈர்க்குமாறு இருக்க வேண்டும் என்று கல்கி, துமிலன் பாணியில் இப்படி ஆரம்பித்தேன்: ‘சிம்ம சொப்பனம் சிங்காரவேலு’ வாத்தியரை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ….. ‘ என்று தொடங்கி எங்கள் ஆசிரியரது குணாதிசயங்கள, கல்வி போதிப்பில் அவர் காட்டிய அக்கறை, கண்டிப்பு எல்லாவற்றையும் நகைச்சுவையுடன் எழுதினேன். அதுதான் என் முதல் படைப்பு. அதை ‘கலைப்பயிர்’ பத்திரிகையில் வெளியிட தமிழாசிரியரிடம் கொடுத்தேன். அதைப் படித்த ஆசிரியர், ‘நன்றாக இருக்கிறது. இதைப் பத்திரிகைக்கு அனுப்பலாம். பிரசுரமாகும்.” என்றார்.

எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. “அய்யா, சிறுவர்களது எழுத்தையும் பிரசுரிப்பார்களா?” என்று வியப்புடன் கேட்டேன்.

“நான் எழுதும் ‘ஆனந்தபோதினி’ ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் வித்தியாசமானவர். பெரியவர் – சிறியவர், புதியவர் – பிரபலமானவர் என்றெல்லாம் அவர் பார்ப்பதில்லை. தரமான எழுத்து என்றால் அவர் விருப்புடன் ஏற்று வெளியிடுவார் அதிலும் மாணவர் என்றால் திறமை இருந்தால் ஊக்குவிக்கும் உயர்ந்த பண்பாளர். நிச்சயம் உனது இந்த படைப்பை வெளியிடுவார்” என்று உற்சாகமூட்டி உடனே ‘ஆனந்தபோதினி’க்கு அனுப்பும் வழிமுறையைச் சொன்னார். அதன்படி அன்றே என் கதையை வெள்ளை முழுத்தாளில் ஒரு பக்கம் மட்டும் படி எடுத்து அஞ்சல் மூலம் அப்பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன்.

அடுத்த மாதமே அக்டோபர் 1950 ‘ஆனந்தபோதினி’ இதழில் என் கதை பிரசுரமானது. எனக்கு பிரதி ஏதும் வரவில்லை. ஆனால் எங்கள் தமிழாசிரியர் அப்பத்திரிகையின் சந்தாதாரர் எனபதால் அவருக்கு பிரதி வந்திருந்தது. அவர்தான் பார்த்துவிட்டு என்னிடம் காட்டி பாராட்டினார். அப்போதிருந்த மனநிலையை இப்போது நினத்தாலும் உடலெங்கும் பரவச உணர்ச்சி பரவுகிறது. பின்னாளில் காண்டேகர் எழுத்தில் நான் படித்த ‘முதல் காதல், முதல் குழந்தை, முதல் படைப்பு எல்லாமே பரவசமானதுதான்’ என்றபடியான பரவசநிலையில்தான் அப்போது நான் இருந்தேன். ஆசிரியரிடம் பிரதியை வாங்கி வந்து திரும்பத் திரும்ப வாசித்தேன். இரவு படுக்கும் போது தலைமாட்டில் பல நாட்கள் வைத்திருந்தேன். இந்த பிரசுரத்தால் ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் என் மதிப்பு உயர்ந்தது.

இந்த முதல் பிரசுரம் தந்த நம்பிக்கையில தொடர்ந்து எழுதி நானும் எழுத்தாளனாக அங்கீகரிக்கப்பட்டேன். அதற்காக என் ஆசிரியருக்கும் என் முதல் படைப்பையே பிரசுரித்த ‘ஆனந்தபோதினி ஆசிரியர் திரு. நாரண துரைக்கண்ணன் அவர்களுக்கும் என்றும் நன்றி மிக்கவனாக இருப்பேன். பள்ளி மாணவன் என்று அலட்சியப்படுத்தாமல் ஊக்குவித்த அவர்கள் இருவரது பெருந்தன்மையால்தான் இன்று நான் ஒரு படைப்பாளியாகத் திகழ முடிகிறது என்பது சத்தியம். நா.பார்த்தசாரதி, அசோகமித்திரன போன்ற போன்ற புகழ் பெற்ற படைப்பாளிகளின் தொடக்கமும் ‘ஆனந்தபோதினி’ தான் என்று அறியும்போது என் மனம் பூரிக்கிறது. பின்னாளில் நான் பல பரிசுகளும் விருதுகளும் பெற்ற போது அதைக் கேட்டு மகிழவும் ஆசீர்வதிக்கவும் என் தமிழாசிரியர் வித்துவான் சாம்பசிவ ரெட்டியார் இல்லையே என்று மனம் ஏங்குகிறது. அந்த ஏக்கத்தை என் குறுநாவல் தொகுதி ஒன்றை அவருக்குச் சமர்ப்பித்து சமாதானம் அடைகிறேன். 0

Series Navigationஒரு செய்தியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *