என் பால்யநண்பன் சுந்தரராமன்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

வாழ்க்கையில் சந்தித்த முதல் போட்டி, வெற்றிபெறவேண்டுமென்ற முதல் வெறி, முதலில் அணிந்த செருப்பு இதெல்லாம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? எனக்கு ஞாபகமிருக்கிறது. அத்தனையிலும் என் நண்பன் சுந்தரராமன் சம்பந்தப்பட்டிருந்தான். தயவுசெய்து முகம் சுளிக்காமல் பின்னோக்கி 1950 களுக்கு பயணியுங்கள். அதுதான் என் தொடக்கப்பள்ளி காலங்கள். செல்லிப்பாட்டி பள்ளி கேட்டைத் திறக்கும்போது முதலில் நுழைவது நானும் சுந்தரராமனும்தான். சுற்றுச்சுவரின் மூலையில் இருக்கும் பூவரச மரத்துக்குக் கீழே எங்களின் குச்சி விளையாட்டு தொடங்கும். உங்களுக்கு பல்பம் என்றால் புரியலாம். ஆளுக்கு மூன்று மூன்று குச்சியை போட்டு சொல்கிற குச்சியை ஒரு சிமிண்டுச்சில்லால் அடித்து கோட்டுக்கு வெளியே தள்ளவேண்டும். சில்லோ குச்சியோ அடுத்த குச்சியில் பட்டுவிட்டாலோ கோட்டைத் தாண்டாவிட்டாலோ தண்டம் ஒரு குச்சி. அதற்கு பெயர் ‘வல்லா’ அப்படியே சரியாக அடித்தாலும் குச்சிகளை எடுத்துக்கொள்ளமுடியாது. இடதுகாலால் தரையில் ஒரு கோடு கிழித்து பிறகு ஒரு அடி பின்னால் சென்று அதற்குப்பிறகுதான் எடுக்கவேண்டும். அதற்குப் பெயர் ‘வாச்சா’ இத்தனை இபிகோ விதிகளுக்கு உட்பட்டு ஆடும் அந்த ஆட்டத்தில் அன்றுமட்டும் 50 குச்சிகள் சம்பாதித்துவிட்டேன். மணியடித்தது. ஓடிவந்தபோது முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. பின்னாலேயே ஓடிவந்த சுந்தரராமன் என் சட்டையைப் பிடித்து இழுத்து 25 குச்சியைத் திரும்பக் கேட்டான். சண்டை முற்றியது. என் சட்டை கிழிந்தது. செல்லிப்பாட்டி சமாதானப்படுத்தினார். எங்கள் ஆசிரியர் லட்சுமிநாராயணன். சுவர்கள்கூட அவருக்கு பயப்படும். அவரிடம் சட்டையைக் காட்டுவேன் என்றேன். அப்போதெல்லாம் வகுப்பில் ஒருவர் இருவர்தான் செருப்புப் போட்டிருப்பார்கள். எங்கள் வீட்டிலேகூட அத்தாவுக்கு மட்டும்தான் செருப்பு. கும்பகோணத்திலிருந்து மாமா வாங்கிவந்தாரென்று சுந்தரராமனும் ஓர் அழகான செருப்புப் போட்டிருப்பான். அந்த செருப்பை எனக்கு தருவதாகவும் அதற்குப் பதிலாக சட்டை கிழிந்ததை ஆசிரியரிடன் சொல்லக்கூடாது என்றும் சொன்னான். ஒப்புக்கொண்டேன். அதுதான் என் முதலும் கடைசியுமான லஞ்சம்.
செருப்பைப் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். அப்போதுதான் அத்தாவும் வீட்டுக்கு வந்திருந்தார். செருப்பைப் பார்த்தார். பிறகு என் முகத்தைப் பார்த்தார். நடந்ததைச் சொன்னேன். என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சுந்தரராமன் கடைக்கு விரைந்தார். அக்ரஹாரத்தில் ராஜாமணிஐயர் பிராமணாள் ஹோட்டல் என்றால் சுற்றுவட்டார ஊர்களுக்கெல்லாம்கூட அத்துபடி. அங்கு சென்றோம். கல்லாவில் ராஜாமணி ஐயர் இருந்தார். நடந்ததைச் சொல்லி மன்னிப்பு கேட்டார் அத்தா. ‘பரவாயில்லை. பிள்ளையாண்டான் இங்கேயே இருக்கட்டும். நீங்க போங்கோ. பசங்களுக்கு இதெல்லாம் சகஜம்’ என்றார். அத்தா சென்றதும் சாப்பாட்டு மேசையில் என்னை உட்காரச்சொல்லி இலைபோட்டு நீர்விட்டுக் கழுவி சோறு சாம்பார் ரசம் தயிர் ஒரு கூட்டு ஒரு பொரியல் அப்பளம் ஒரு சிட்டிகை நெய் என்று சுந்தரராமனின் தாயார் சீதாலட்சுமி அம்மாள் பரிமாறினார். ஒரு சாப்பாட்டுக்கு இத்தனை வகைகள் என்பது அப்போதுதான் தெரியும். சுந்தரராமன் வந்தான். ‘செருப்பை நீயே போட்டுக்கோ. அப்பாவிடம் சொல்லிவிட்டேன்’ என்றான்.
வெள்ளிக்கிழமைகளில் பள்ளிக்கூடத்தில் எல்லாரும் ஏதாவது செய்யவேண்டும். அவன் எப்போதும் ‘கோமதியின் காதலன்’ படத்தில் திருச்சி லோகநாதன் பாடும் ‘வானவீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே’ பாட்டைப் பாடுவான். நான் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் வரும் ‘மாசிலா உண்மைக் காதலே’ பாட்டை அப்படியே திருப்பிப்போட்டுப் பாடுவேன். ‘லாசிமா மைண்உ லேதகா’ என்று. திருப்பிப்போட்டு பாடுவதை பைத்தியம்போல் அப்போது பழகிக்கொண்டிருந்தேன். இன்னொரு பாட்டு அப்படி நான் அடிக்கடி பாடுவது ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்ற நான் பெற்ற செல்வம்’ பாடல். ‘தாமா தாபி ருகு ம்வய்தெ’ என்று.
உயர்நிலை சென்றபின் அவன் வேறு வகுப்பு. நான் வேறு வகுப்பு. அதிக தொடர்பு இல்லை. நான் பொறியியல் பிரிவில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறினேன். சுந்தரத்திற்கு படிப்பைவிட நடிப்பில்தான் நாட்டம் அதிகம் இருந்தது. எங்களோடு படித்த ராஜுவின் அப்பா ஒரு ஸ்டுடியோ நடத்திக்கொண்டிருந்தார். அங்குபோய் நவரசங்களைக் காட்டுகிறேன் என்று சொல்லி 9 விதமான போட்டோக்களை எடுத்துக்கொண்டான். ஸ்ரீதரையோ கிருஷ்ணன்பஞ்சுவையோ பார்க்கப்போகிறேன் என்று சொல்லி சென்னையிலிருக்கும் அவன் அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டான்.
நாலைந்து ஆண்டுகள் தொடர்பே இல்லை. ஒருநாள் அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. மேஜர் சுந்தர்ராஜன் இன்ஸ்பெக்டராகவும் அவருக்குப் பின்னால் இவன் ஒரு கான்ஸ்டபிளாகவும் இருப்பதுபோல் ஒரு புகைப்படம் இருந்தது. அதற்குக் கீழே எழுதியிருந்தான். ‘இண்டஸ்ட்ரியில் புகுந்துவிட்டேன். நாளை என்னைப்பற்றி ஊரே பேசும் பார்’ என்று. அவனுக்கு நான் பதில் எழுதினேன். ‘மிக்க மகிழ்ச்சி. இந்த மேமாதம் நான் அறந்தாங்கி போகிறேன். நீயும் வருவாயா? உன்னைப்பார்க்க ஆவலாய் இருக்கிறது’ என்று.
ஒரு மேமாதம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவனைச் சந்திக்கிறேன். ராஜாமணிஐயர் கடை நிறுத்தப்பட்டுவிட்டது. ‘அப்பாவைப் பார்க்கவேண்டும்’ என்றேன். இருவரும் வீட்டுக்குப் போனோம். 9 நாட்கள் சேற்றில் சிக்கிக் கிடக்கும் ஒரு யானைக்குட்டிபோல் ராஜாமணிஐயர் ஒரு சோபாவில் படுத்திருந்தார். பக்கத்தில் காலை நீட்டிக்கொண்டு வடைசுடும் பாட்டி போல் சீதாலட்சுமி அம்மாள் அமர்ந்திருந்தார். டபராசெட்டில் காபி வந்தது. அடடா! என்ன ருசி. அவன் அப்பாதான் பேச்சைத் தொடங்கினார். ‘இவன்மட்டும் கடையை ஒப்புக்கொண்டிருந்தால் முன்னுக்கு வந்திருப்பான். தலையெழுத்து. எவன்எவனையோ தொங்கிட்டு கிடக்கிறான். எனக்கும் உடம்பு சரியில்லை. எல்லாரும் திருடுரானுங்க. அதான் கடையை மூடிட்டேன்’ என்றார் ‘முடிஞ்சா நடத்துஃங்க முடியாட்டி மூடுங்கோ. அது உங்க இஷ்டம். என்னால் டேபிள் துடைத்து எச்சிஇலை எடுக்கமுடியாது’ என்றான் சுந்தரம். ‘அந்த எச்சி இலையை எடுத்துத்தாண்டா உங்க அப்பன் உன்னை ஆளாக்கினான்.’ ‘ அது உங்க காலம் இப்ப ஒரே படத்தில் நடித்து நீங்கள் ஆயுள்பூரா சம்பாதிச்சதை என்னால சம்பாதிக்க முடியும்’ பேச்சு முற்றியது. சுந்தரம் கத்தினான். ‘ஒன்னுமட்டும் சொல்றேண்டா என்று என்னிடம் திரும்பினான். நான் ஒரு பெரிய ஆளா வந்தால் அதுக்கு நான் மட்டும்தாண்டா காரணம். நான் வீணாப்போயிட்டா அதுக்கு இவர்தாண்டா காரணம்’ அத்தோடு பேச்சு நின்றுவிட்டது. ஒரு ஆழமான அமைதி. யார் முதலில் பேசப்போகிறார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன். யாருமே பேசவில்லை. நானே பேசினேன். ‘நான் போய்வருகிறேன்’ என்றேன். சரி என்பதற்கு அடையாளமாய் தலையை மட்டும் ஆட்டினார் அப்பா. முட்டிக்கொண்டிருந்த ஒரு சொட்டு கண்ணீர் அவர் மேல்துண்டில் உதிர்ந்தது. சீதாலட்சுமி அம்மாளும் விடைகொடுக்க அங்கிருந்த வெளியேறினேன். வெளியே வந்ததும் சுந்தரத்தை சத்தம்போட்டேன். ‘இப்படி நீ பேசுவாய் என்று தெரிந்திருந்தால் நான் மட்டும் தனியே வந்திருப்பேன். நீ அப்பாவுக்கு செஞ்சது மிகப்பெரிய அவமானம்டா’ என்றேன். ‘தவறுதான். மன்னித்துவிடு. சில சமயங்களில் நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரிவதில்லை. என்னால் யாருக்குக் கீழும் வேலை பார்க்கமுடியாது. என்னை யாரும் திருத்தக்கூடாது. இந்த ஜென்மம் அப்படியே பழகிடுத்து’ என்றான்.
இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன.அவனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘நான் சென்னை வருகிறேன். ஒரு உறவினர் திருமணத்திற்காக. இந்த முகவரியில்தான் இருப்பேன். முடிந்தால் சந்திக்கவும்’ என்று. பதில் வரவில்லை. ஆனால் என்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டான். எல்லாரும் கல்யாணத்திற்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தோம். அவனையும் அழைத்துக்கொண்டேன். கல்யாணமண்டபத்தில் இறைச்சிபிரியாணியையும் வறுத்த கோழியையும் சக்கை போடுபோட்டான். ‘நீ சைவமாச்சே. எப்ப இதெல்லாம் பழகினே’ என்றேன். சாப்பிட எப்போதும் அக்கா கையை எதிர்பார்க்க முடியாத சூழ்நிலை. என் இன்சூரன்ஸ் வேலையில் எப்போவாவதுதான் காசு வரும். பட்டிணி கிடக்கும்போது கிடைப்பதை சாப்பிடுவதை பழகிக்கொண்டேன்.’ என்று சிரித்தான். எனக்கு அழுகை முட்டியது. ‘எச்சி இலை எடுப்பதை கேவலமாக நினைத்தாய். இது கேவலமில்லையா?’ என்றேன். ‘கேவலம்தான். கேவலம்தான் என்று அன்னாந்து பார்த்தான். எனக்கு ஒன்னும் தெரியலடா. அப்பா சொன்னதைக் கேட்டிருந்தா நான் பெரியஆளா ஆகியிருக்கலாம். இப்ப சொல்றேன்டா. என் நிலைக்கு நான்மட்டும்தான்டா காரணம்’ என்றான் இருநூறு ரூபாயை அவன் சட்டைப்பையில் வைத்தேன். முதலில் வேண்டாம் என்றான். பிறகு எடுத்துக்கொண்டான். உனக்கிட்டே வாங்கினா ஏதோ உரிமையுள்ளவன்ட்டே வாங்குறதுமாறி இருக்குடா’ என்றான்.
சில ஆண்டுகள் ஓடின. ஒருநான் அவனிடமிருந்து ஒரு திருமணப் பத்திரிகை வந்தது. ஒரு சாதாரணத்தாளில் மிகச்சாதாரணமாக இருந்தது. அவனுடைய திருமணம்தான். புதுக்கோட்டை கீழராஜவீதியில் ஏதோ ஒரு சத்திரத்தில் நடக்கவிருக்கிறது. காலை 11 மணிக்குத் திருமணம். நான் 2 மணிக்குத்தான் சென்றேன். அங்கு திருமணம் நடந்த ஒரு அடையாளமே இல்லை. நாலைந்து பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். என்னை அவன் யாருக்கும் அறிமுகப்படுத்தவில்லை. ஒரு பாய்விரித்து சாப்பாடு பரிமாறச் சொன்னான். ஒரு அம்மா வந்து பரிமாறினார். அன்று சீதாலட்சுமி அம்மாள் பரிமாறியது ஞாபகம் வருகிறது என்றேன். ரொம்பச் சிரமப்பட்டு அழுதுவிடாமல் பார்த்துக்கொண்டான். மெதுவாக அவனிடம் கேட்டேன். இந்த அம்மா யார்? உன் மாமியாரா?’ ‘இல்லை. அதுதான் என் மனைவி.’ என்ன விளையாடுகிறானா? சரி. பிறகு பேசிக்கொள்வோம். விடுவிடுவென்று சாப்பிட்டேன். முதல் சோற்றையே ஒதுக்கி அதிலேயே ரசம் மோர் எல்லாம் முடித்துக்கொண்டேன். இரண்டு மூன்று வெற்றிலையை வைத்து அசோகா பாக்குத்தூளை சேர்த்து அளவாக சுண்ணாம்பு வைத்து என்னிடம் நீட்டினான். நான் தாம்பூலப்பிரியன் என்பதை அவன் மறக்கவில்லை. இருவரும் வெற்றிலையைப் போட்டுக்கொண்டு கீழராஜவீதியில் இறங்கி நடந்தோம். யார் முதலில் பேசுவது என்று தெரியவில்லை. அவனே ஆரம்பித்தான். ‘என்னை நம்பி ஒரு பெண் வந்தால் என்னோடு ஒரு மாதம்கூட வாழமுடியாது. அப்பா அம்மாவை உயிரோடிருக்கும்போதே கொள்ளிவைத்த……’ பேச்சை முடிக்கமுடியாமல் எச்சில் விழுங்கினான். முதுகைத் தட்டி சமாதானப்படுத்தினேன். ‘என் மனைவி ஒரு ஆசிரியை. என்னைவிட8 ஆண்டுகள் மூப்பு. முதிர்கன்னி. நீங்கள் சம்பாதிக்கவேண்டாம். உங்களிடம் நாங்கள் எதையும் எதிர்பார்க்கமாட்டோம். ஒரு கணவனாக இருந்தால் போதும். எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்வோம்’ என்றார்கள். ‘எனக்கும் ஒரு துணை தேவைப்பட்டது. ஒப்புக்கொண்டேன்’ என்றான். 300 ரூபாயைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
நான் பிறகு சிங்கப்பூர் வந்துவிட்டேன். எப்போவாவது என் தொலைபேசி இரண்டு முறை அடித்து நின்றுவிட்டால் அது சுந்தரராமன்தான்.உடனே திரும்ப அழைப்பேன். ‘ஒரு வாரத்தில் அறந்தாங்கி செல்வேன்.’ என்பான். அவன் என்னிடம் சொல்வதற்கு காரணம் எனக்குத் தெரியும். ‘சுந்தரராமன் வருவான் ஆயிரம் ரூபாய் கொடுக்கவும்’ என்று தம்பிக்கு உடனே தெரிவிப்பேன். இந்த பரிமாற்றங்கள் பல ஆண்டுகள் தொடர்ந்தது. ஆனால் ஒரு தடவைகூட எனக்கு இந்த உதவிவேண்டும் என்று அவன் வாய்விட்டுக் கேட்டதே இல்லை. நானாகத்தான் தருவேன். அதை அவன் மறுத்ததும் இல்லை. அவன் மகள் பெங்களூரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதாகச் சொன்னான். இடையில் சன் டிவியில் ஏதோ ஒரு சீரியலில் தலை காட்டினான். இன்சூரன்ஸ் செய்கிறான். அடிக்கடி வீட்டுக்குக்கூட செல்வதில்லையாம்.
ஒருநாள் ஒரு குறுஞ்செய்தி வந்தது. என் மின்னஞ்சலைக் கேட்டிருந்தான். உடனே அனுப்பினேன். அடுத்தநாள் ஒரு பத்திரிகை மின்னஞ்சலில் வந்தது. அவன் மகளுக்குக் கல்யாணமாம். ‘உடனே அழைத்தேன். உன் மகளின் அல்லது உன் மனைவி உஷாவின் வங்கி கணக்கு எண்ணை அனுப்பு’ என்றேன். ‘வேண்டாம். அவர்களுக்கு எதுவும் தெரியவேண்டாம் அடுத்தவாரம் நான் அறந்தாங்கி போகிறேன். எனக்கு 10000 கொடு’ என்றான். முதல்முறையாக அவன் வாய்திறந்து கேட்ட உதவி. ‘சரி பார்க்கிறேன்.’ என்றேன். தம்பியை அழைத்து 2000 மட்டும் கொடுக்கச் சொன்னேன். இது நானாக எடுத்த முடிவுதான். அவன் அந்த 10000 ஐ எந்த அளவுக்கு நம்பிக்கொண்டு அறந்தாங்கி செல்வான் என்றுகூட நான் சிந்திக்கவில்லை. தம்பியிடம் சொல்லிவிட்டு ஒரு முக்கியமான வேலையாக என் இருசக்கரவாகனத்தை எடுத்துக்கொண்டு பஃபலோ சாலையைத் தாண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் திரும்பினேன். பாதசாரிகள் கடக்க புதிதாக ஒரு தடம் அமைத்து ஒரு போக்குவரத்து விளக்கும் வேலைசெய்யத் தொடங்கியிருந்தது. அந்த புதியவிளக்கு சிவப்பைக் காட்டியது. அதை வெள்ளோட்டம் பார்க்கிறார்கள் என்று நானாக கற்பனைசெய்துகொண்டு கடந்துவிட்டேன். ஒரு காவலர் இருசக்கர வாகனத்தில் என்னைப் பின்தொடர்ந்தார். அடுத்த நிறுத்தத்தில் சொன்னார் ‘அடுத்த இடதில் திரும்பி நிற்கவும்’ என்று. திரும்பி நின்றேன். அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம் கைமாறியது. கழுத்தில் தொங்கிய ஒரு அழைப்பானில் தலைமை நிலையத்தைத் தொடர்புகொண்டு என் வண்டியின் உண்மையான உரிமையாளரை விசாரித்து சரிபார்த்தார். பின் சொன்னார் ‘இரண்டு நாளில் ஒரு கடிதம் வரும் அபராதம் 200 வெள்ளி குற்றப்புள்ளிகள் 12’ என்று’ நான் திகைத்தேன். ‘அந்தப் போக்குவரத்து விளக்கு புதிதாக அமைக்கப்பட்டது. நான் அதற்குப் பக்கத்து அடுக்கத்தில்தான் குடியிருக்கிறேன். அந்த விளக்கு சோதனையிடப்படுவதாக எண்ணி கடந்துவிட்டேன்’ என்றேன். ‘அதையெல்லாம் மேல்முறையீட்டில் சொல்லிக்கொள்ளுங்கள். இப்போது கவனமாகச் செல்லுங்கள்’ என்றார்.
சுந்தரத்திற்கு 10000 தர எனக்கு யோசனையாக இருந்தது. இந்த 10000ஐ எந்தக் கணக்கில் சேர்ப்பது?. அதுவும் இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்சினை ஏன் வந்தது? எதிலுமே ஒட்டமுடியாமல் மனமும் செயலும் பாதரசம்போல் வழுக்கிக்கொண்டு ஓடியது. ஆனால் ஒன்றுமட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது. நான் சுந்தரராமனுக்கு தரக்கூடாது என்று நினைத்தது தவறு. அது தவறு என்பதைத்தான் இப்படி எனக்கு காட்டப்படுகிறது. என்னால் நிரூபிக்கமுடியாது நிரூபிக்கவேண்டிய அவசியமும் இல்லை. இது எனக்குமட்டுமே தெரியவேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நீதி. உடனே தம்பியை அழைத்தேன். இன்று இரவுக்குள் 11000 அனுப்பிவிடுகிறேன். சுந்தரராமனுக்கு 10000 கொடுத்துவிடவும். என் சார்பாக திருமணத்தில் கலந்துகொள்ளவும். பிறகு பேசுகிறேன்.’ என்றேன். அன்று இரவே மேல்முறையீட்டு மனுவையும் தட்டிவிட்டேன்.
15 நாட்கள் கடந்துவிட்டது. மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடைவதாக அந்த அதிகாரி சொல்லியிருந்தார். அபராதமும் செலுத்தவேண்டியதில்லை. குற்றப்புள்ளிகள் விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டன. ஆனாலும் அடுத்த தவறு நடக்காமல் கவனமாக இருக்கவும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றுதான் சுந்தரராமனின் மகள் திருமணம். சென்னையிலிருந்து தம்பி அழைத்தான். இப்போதுதான் கல்யாணவீட்டிலிருந்து வெளியேறினேன். அங்கு சுந்தரராமனை யாருமே கண்டுகொள்ளவில்லை. வெளியேதான் நின்றுகொண்டிருந்தார். சட்டைக்காலரில் சாயம் போயிருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் தைத்த பேண்ட் என்று நினைக்கிறேன். கணுக்காலைக் காட்டிக்கொண்டிருந்தது. கடைசியில் அவராக மகளிடம் சென்று 10000ஐ கொடுத்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டு அழுதார். சொல்லி அழக்கூட பாவம் அவருக்கு யாருமில்லை. நான் தொட்டதும் என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தேம்பினார். இந்த ஒரு அவமானத்தை எந்த மனிதானாலும் தாங்கிக்கொள்ளமுடியாது என்றார். ‘அண்ணன் உங்களுக்கு எல்லாமுமாக இருப்பார்’ என்றுமட்டும் சொன்னேன் என்றான். இப்போது நான் அவனிடம் பேசக்கூடாது என்றுமட்டும் முடிவு செய்துகொண்டேன். இப்போது அவனால் எதையும் சிந்திக்கமுடியாது.
ஒருமாதம் கழித்து அவனை அழைத்தேன். அவன் தொலைபேசி சங்கூதியது. தம்பியிடம் கேட்டேன் ஒரு தகவலும் இல்லை என்றான். இன்னொரு மாதமும் ஓடியது. தம்பிதான் அழைத்தான். சுந்தரராமன் மனைவி உஷா பேசினார்களாம். அவர் இங்கு காணோம். அங்கு வந்தாரா? இன்ஷூரன்ஸிலிருந்தும் தேடிவந்தார்கள் என்று சொன்னதாகச் சொன்னான்.
இரண்டுமூன்று மாதங்கள் ஓடிவிட்டன. சுந்தரராமனைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை. காணவில்லை என்றும் கண்டுபிடித்துத்தரவேண்டுமென்றும் காவல்துறையிடம் தெரிவித்துவிட்டார்கள்.
சென்னையில் கிடைக்கும் அமாதைப் பிணங்களை ஒன்றுவிடாமல் உஷாவிடமும் அவர் மகளிடமும் காட்டி அடையாளம் கேட்டது காவல்துறை. இவர்கள் மறுத்தும்கூட அவர்கள் விடுவதாக இல்லை. நாங்கள் கேஸை முடிக்கவேண்டும். ஒத்துழைக்கவும் என்று கேட்டிருக்கிறார்கள். பல பிணங்களைப் பார்த்ததில் மனநோய் ஆழமாகத் தாக்கிவிட்டது. உஷாவும் அவர் மகளும் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனநோயால் துரத்தப்பட்டுவிட்டார்கள். மனநோய் பிரிவில் இப்போது தீவிர கண்காணிப்பில் அவர்கள் இருவரும் இருக்கிறார்கள். ஓராண்டு ஓடிவிட்டது. இதோ இந்தக் கதையை எழுதும் இந்த நிமிடம்வரை அவனைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை. என் தொலைபேசி அடிக்கும்போதெல்லாம் பதறிக்கொண்டு எடுக்கிறேன். ‘அது சுந்தரராமனாக இருக்கக்கூடாதா?’
யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *