ஏன் என்னை வென்றாய் அத்தியாயம்- 2

author
0 minutes, 27 seconds Read
This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

ஏன் என்னை வென்றாய்
அத்தியாயம்- 2

சிவக்குமார் அசோகன்


மேனேஜர் அறையில் வசந்தி சீரியஸான முகத்துடன் பேசிக் கொண்டிருப்பதையும், மேனேஜர் ரெங்கராஜன் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்த போது குருவுக்கு சற்று கோபம் வந்தது.

‘இவள் என்ன லூஸா? ஸ்கூல் பிள்ளை மாதிரி புகார் சொல்லிக் கொண்டிருக்கிறாள்? சரி அல்லது வேண்டாம் அவ்வளவு தான். விஷயம் முடிந்தது. இதைப் போய் மேனேஜரிடம் சொல்ல வேண்டுமா? பைத்தியம் தான் இவள். இருந்தால் என்ன? இவள் எனக்குத் தான். என் சொத்து. என் காதலி. எப்படியாவது இவளைக் கரம் பிடிக்க வேண்டும். என் மேல் அவளுக்கு ஒரு இது வராமலா போகும்?

எனக்கு என்ன ஆயிற்று? காலேஜில் எத்தனையோ அழகான பெண்கள் இருந்தார்களே? மைதா மாவில் பிசைந்து வைத்தது போல் இருப்பாளே? அவள் பேரென்ன… யெஸ் இந்து! அவளை விடவா இவள் அழகு? கம்பைன் ஸ்டடி என்று என் வீட்டிற்கு வந்துவிடுவாள். எப்படியெல்லாம் ஈஷினாள்? ஒரு நாள் எதேச்சையாக(?) அவள் கை என் தொடையில் இருப்பதைப் பார்த்து அப்பா கத்தினாரே? ஏன் எனக்கு அவள் விஷயத்தில் எதுவும் பூரான் ஊறவில்லை? ‘அம் இன்டரஸ்டட் இன் யூ!’ என்று அவள் அனுப்பிய மெசேஜிற்கு ‘அம் ஸாரி இந்து!’ என்று தானே அனுப்பத் தோன்றியது?

வசந்தியிடம் என்னை இப்படிக் கேட்க வைத்தது எது? பைத்தியம் அவளா? இல்லையில்லை நான் தான்.

பங்கு வர்த்தகம் ஆரம்பிப்பதற்கு சற்று நேரம் முன்பு மேனேஜர் அறையிலிருந்து வசந்தி வெளிப்பட்டாள். கிராமத்துப் பெண் போல ஆரஞ்சு நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். லூஸான அவசர கதியிலான ஒற்றைப் பின்னலில் மல்லிகைச் சரம்! சின்னதாக கோபுரப் பொட்டு!

‘இந்த எடக்கு நாட்டான் லுக்ல தான் சாவடிக்கிறா… என்று குரு மனசுக்குள் புலம்பிக் கொண்டிருந்த போது டீலிங் ரூமிற்குள் நுழைந்தாள் வசந்தி. ”குட் மார்னிங்” என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னவள், குருவைப் பார்ப்பதைத் தவிர்த்து அவள் சீட்டில் போய் உட்கார்ந்தாள்.

ஒரே வரிசையில் அவள் சீட்டிலிருந்து இரண்டு சீட் தள்ளியிருந்த குரு, அந்த ரிவால்விங் சேரிலிருந்து திரும்பி,

”வசந்தி மேம்?- என்று அழைத்தான். வசந்தி அவஸ்தையாகத் திரும்பிப் பார்க்க ”குட் மார்னிங்!” என்றான் குறும்பான முகத்துடன்.

எந்த மாதிரியான உணர்ச்சியுமின்றி ”மார்னிங்!” என்றாள் வசந்தி.

”நேத்து மழைல நனைஞ்சுட்டீங்களா?” என்று குரு கேட்டதற்கு ஒரு ‘வேலையைப் பார்றா!’ லுக்கை விட்டுவிட்டுத் திரும்பினாள்.

சென்செக்ஸ் களை கட்டி, கம்பெனி கல்லா கட்ட ஆரம்பித்தது.

சரியாக நாலு மணியிருக்கும். லன்ச் ஹாலில் சாம்பார் சாதத்தை வெறும் வதங்கிப் போன அப்பளத்தை வைத்துக் கொண்டு மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாள் வசந்தி.

”மேம் என்ன இப்ப சாப்பிடுறீங்க? லன்ச்சுக்கு யாரும் மாத்தி விடலையா? என்னைக் கூப்பிட்டிருக்கலாமே?” என்று அவள் எதிரில் அமர்ந்தான் குரு. ஒரு முறை அவனை எரிப்பது போலப் பார்த்துவிட்டு

”எப்படி உன்னால என்கிட்ட பேச முடியுது?”

”ஏன்? உங்களால ஏன் பேச முடியல?”

”ஃப்ரெண்ட்லியா பழகினா அட்வான்டேஜ் எடுத்துக்குவியா? நீயும் மத்த ஆளுங்க மாதிரி தான்.”

”ஓ கமான் மேம். யாராவது ஒரு ஃப்ரெண்ட் மேல லவ் வரலாம். தப்பில்லை. நீங்க பண்ணதை விடவா நான் மோசம்?”

வசந்தி புருவம் சுருக்கினாள். ”என்ன நான் பண்ணிட்டேன்?”

”மேனேஜர்கிட்ட மாட்டி விட்டுட்டீங்க போல?”

”சொல்ற மாதிரியான காரியம் தான் நீ பண்ணியிருக்கியா? இதையெல்லாம் வெளில சொல்றதையே கேவலமா நினைக்கிறவ நான். ஓடிப் போயிடு! உன் கூட பேசுறதையே குறைச்சுக்கலாம்னு இருக்கேன்!”

”ஹய்யோ.. சொல்லலையா? நான் ஒளிஞ்சுட்டிருக்கேன்!”

”பயம் இருக்குல்ல? அப்புறம் ஏன் இந்த பைத்தியக்காரத்தனம்?”

”பயமெல்லாம் இல்லை… இது நம்ம பர்சனல்னு நினைச்சேன்”

”மண்ணாங்கட்டி… இதப் பாரு குரு, நான் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிறதா இல்லை. அப்படியே பண்ணிகிட்டாலும் என் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சு, என் தம்பிக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சதுக்கு அப்புறம் தான். என் குடும்ப சூழ்நிலை அப்படி!” – குரு பேசாமல், அவள் கண்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

”இன்னொரு விஷயமும் இருக்கு” என்றாள் வசந்தி.

”என்ன?”

”உனக்கும் எனக்கும் சுத்தமாப் பொருத்தமே கிடையாது. நீ இருபத்தி ஆறு. நான் முப்பது. நீ பணக்காரன். நான் ஏழை. உன் லைஃப்ஸ்டைல் வேற, எங்களுது வேற!”

”இவ்ளோ தானே? சரி விட்ருவோம். இதை நேத்தே சொல்லியிருக்கலாம். போன் பண்றேன் எடுக்கலை. மெசேஜ் பண்றேன் நோ ரிப்ளை! எதுக்கு இத்தனை பில்டப்? நாம ஃப்ரெண்ட்ஸ் ஆகவே இருக்கலாம். ஓகே?”

குரு எளிமையாக இப்படி விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் போது வசந்தியின் கண்களின் கடைக் கோடியில் மிக மெலிதானதொரு ஏமாற்றம் படர்ந்ததை கவனிக்கவே செய்தான்.

”ஓகே!” என்றாள் சன்னமாக.

”பட் இன்னொரு விஷயம் இருக்கு!”

”மறுபடி என்ன?” என்றாள் வசந்தி ஒரு வித சலிப்புடன்.

”உங்க தங்கச்சிக்கு என்ன வயசு?”

”பதினெட்டு! ஏன்?”

”எப்படியும் அவளுக்குக் கல்யாணம் பண்ண மூணு வருஷமாவது வெயிட் பண்ணனும். அதுக்கப்புறம் தம்பிக்கு வேலை.. நீங்க சாமியார் தான். கன்ஃபெர்ம்!”

”நான்சென்ஸ்!” என்றாள் வசந்தி நிஜமான கோபத்துடன். குருவை மேனேஜர் செல்லில் அழைத்தார். விழுந்தடித்து ஓடினான்.

வசந்தி வீடு.

டிவி முன்பு உட்கார்ந்து கொண்டு ”அம்மா சூடா ஒரு காபி!” என்றாள் வசந்தி அடுக்களையை நோக்கி. வசுமதியும், கெளதமும் ரூமில் படித்துக் கொண்டிருந்தனர். பாட்டுச் சேனல்கள் தான் வசந்தியின் விருப்பம். சதா மாற்றி மாற்றி ஏதாவது பாட்டு தான் கேட்டுக் கொண்டிருப்பாள்.

காபி எடுத்துக் கொண்டு ஆண்டாள் வரும்போது கூடவே ஒரு கவரையும் எடுத்து வந்தாள்.

”என்னம்மா அது?” என்றாள் வசந்தி.

”பிரிச்சுப் பாரு! ஏகாம்பரம் மாமா கொடுக்கச் சொன்னதா தரகர் வந்து கொடுத்துட்டுப் போனார்!”

வசந்தி கவரைப் பிரித்தாள்- மாப்பிள்ளைப் போட்டோ!

”நாங்க எல்லாரும் பார்த்தாச்சு! எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. உன் ஜாதகமும் நல்லாப் பொருந்தும் போல இருக்கு”

”இப்ப என்னம்மா அவசரம்?”

”வேற ஏதாவது சொல்லும்மா.. அவசரம்னு மட்டும் சொல்லாதே! முப்பத்தஞ்சு வயசு. சொந்தமா பிஸினஸ்! ஆள் நல்லாத் தானே இருக்கார்?

”அம்மா லைட்டா வழுக்கை..” வசந்தி ஆரம்பிக்கும் போதே மறித்தாள் ஆண்டாள்.

”நீ ஒண்ணும் ரதியில்லைடி! இந்தக் காலத்துல இருபத்தஞ்சு வயசுலேயே வழுக்கை விழுந்திடுது. கல்யாணத்துக்கு அப்புறம் விழுந்தா என்ன பண்ணுவே?”

வசந்தி மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அம்மா மேல் அவளுக்குக் கோபம் வரவில்லை. அவள் கவலை வசந்திக்குப் புரிந்தே இருந்தது. மறுபடி ஆண்டாளே ஆரம்பித்தாள்.

”வேற எதுவும் காரணம் இருக்கா வசந்தி?”

”என்னம்மா?”

”மனசுல யாரையாவது?”

”சேச்சே!” – என்றாள் வசந்தி, துளிர்க்க எத்தனித்த கண்ணீரை மறைத்தபடி.

சிவக்குமார் அசோகன்

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *