ஒப்பிலா அப்பன் உறையும் திருவிண்ணகர்

This entry is part 3 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

         

                  

                      திருமங்கையாழ்வாருக்கு இவ்வுலக வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டதால் திருவிண்ணகரில் கோயில் கொண்டிருக்கும் பெருமானிடம் தன் கருத்தைச் சொல்கிறார்.

விண்ணகர் மேயவனே! எனக்கு உன்னைக்காண வேண்டும் என்ற ஆவல் மிகுந்ததால் மனை  வாழ்க்கையை வேண்டாம் என்று வெறுத்து உன்னிடம் வந்திருக்கிறேன்

             ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருள் எனக்கு

                                               அருளிதியேல்

             வேண்டேன் மனை வாழ்க்கை

             [பெரியதிருமொழி] (6ம்பத்து 1ம்திருமொழி1) 1462

என்கிறார்.

                              நீலமேகவண்ணா! சிவபெருமான் முப் புரத்தை எரிக்கச் சென்றபோது அம்பாக இருந்து உதவியவனே!  உன்னைக் காணும் பேறு எனக்கருளினால் மனை வாழ்க்கையை உதறித்தள்ளி விடுவேன்.

                                   அழல் நிற அம்பது ஆனவனே

     ஆண்டாய் உனைக்காண்பதோர் அருள் எனக்கு

அருளிதியேல்

     வேண்டேன் மனை வாழ்க்கை

                               [6ம்பத்து.1ம்திருமொழி] 1450

என்று தெரிவிக்கிறார். அவசரப்பட்டு மனைவாழ்க்கையைத் துறக்கத் தீர்மானித்து விட்டதாகப் பெருமான் நினைத்து விட் டாரோ என்று ஆழ்வாருக்குத் தோன்றியதும், தான் அவ சரப்பட்டு முடிவெடுக்கவில்லை, நிதானமாக யோசித்த பின்னரே  முடி

வெடுத் ததாகவும் அம்முடிவில் உறுதியாக  நிற்பதைத் தெரிவிக் கும் முகமாக,

                பொறுத்தேன் புன்சொல்; நெஞ்சில் பொருள்

                                    இன்பமென இரண்டும்

                 இறுத்தேன்; ஐம்புலன்கட்கு இடனாயின

                                           வாயிலொட்டி

                  அறுத்தேன்; ஆர்வச்செற்றம் அவை தன்னை

                                              மனத்தகற்றி

            வெறுத்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகர்

                    மேயவனே!

                          [6ம்பத்து,2ம்திருமொழி1] 1458

என்று தன் நிலையை விளக்குகிறார்.

                                          திருவிண்ணகர் மேவிய என் அப்பனே உன்னை கொஞ்சம் மறந்துவிட்டேன் மறந்ததோடு அமையாமல் அதைப் பற்றிய உணர்வும் இல்லாமல் இருந்ததால் அறிவிழந்து மறுபடியும் கருவடையும் குழியில் விழுந்து, பிறந்து இறந்து, மீண்டும் பிறந்து, இறந்து என்று சுழன்று சுழன்று துன்ப மடைந்தேன். இப்போது அறிவு வந்ததால் உன்னையடைந்தேன்

            மறந்தேன் உன்னை, முன்னம் மறந்த மதியில்

                                                     மனத்தால்

            இறந்தேன் எத்தனையும், அதனால் இடும்பைக்

                                                      குழியில்

            பிறந்தே எய்த்தொழிந்தேன் பெருமான்! திருமார்பா!

            சிறந்தேன் நின்னடிக்கே திருவிண்ணகர் மேயவனே!

                        [6ம்பத்து,2ம்திருமொழி 2]  1459

என்று தான் மனம் திருந்தித் திரும்பி வந்ததைத் தெரிவிக்கிறார்.

உடல் பிறவியின் இழிவை உணர்ந்து கொண்டதால், பெண்டு பிள்ளைகள் உறவினர் முதலானோர் அந்திம காலத்தில் உதவ மாட்டார்கள், ஆனால் பொருளிலேயே நாட்டம் உடையவர்களாக இருப்பதையும் தெரிந்து கொண்டார். ஐம்புலன்களால் உண்டாகும்

கேடுகளையும் அறிந்து அவற்றையும் விட்டொழித்தார். எவ்வித ஆசைகளும் இல்லாமல் அவர்களைப் பிரிந்து அவனே சரண் என்று அவனை அடைந்தார்.

            பிறிந்தேன், பெற்ற மக்கள் பெண்டிர் என்றிவர்

                                                பின்னுதவாது

            அறிந்தேன், ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து

            செறிந்தேன் நின்னடிக்கே, திருவிண்ணகர்

                    மேவியவனே

                               [6ம்பத்து,2ம்திருமொழி 4] 1461

என்று வணங்குகிறார்.

                                         பாராண்ட மன்னரெல்லாம் மாண்டு கடைசியில் ஒர் பிடி சாம்பலாவதைக் கண்ட ஔவை

            ஆற்றங்கரையின் மரமும் அரசறிய

            வீற்றிருந்த வாழ்வும் விழும்

என்று பாடியதை ஆழ்வாரும் உணர்ந்ததால்

                                                  பல்லாண்டிசைப்ப

     ஆண்டார் வையமெல்லாம் அரசாகி முன்னாண்டவரே

     மாண்டாரென்று வந்தார் அந்தோ! மனைவாழ்க்கை தன்னை

     வேண்டேன் நின்னடைந்தேன்

                             [6ம்பத்து,2ம்திருமொழி5] 1462

என்று திருவிண்ணகர் உறையும் ஒப்பிலா அப்பனைச் சென்றடை

கிறார்.

                                    ஒப்பில் அப்பனே! ஐம்பொறிகளும் என்னைப் படாதபாடு படுத்துகின்றன!. அவை என்னை மீளா நரகத்தில் ஆழ்த்திவிடுமோ என்று அஞ்சுகிறேன். கொடிய தீவினைகள் நல்லவர் போல் நடித்துக் கூடவே யிருந்து குழிபறிப்பார் போல என்னைப் பாவக்குழியில் தள்ளிவிடுமோ? புலன்கள், வினைகளிலிருந்து என்னைக் காக்கும் பொருட்டு தேவா உன்னையடைந் தேன்

            ஆறா வெந்நரகத்து அடியேனை இடக்கருதி

            கூறா ஐவர் வந்து குமைக்க,குடிவிட்டவரை தேறாது

                  உன்னடைந்தேன்

                                [2ம்திருமொழி 7] 1464

      தீவாய் வல்வினையார் உடன் நின்று சிறந்தவர் போல்

      மேவா வெந்நரகத்து இடவுற்று விரைந்து வந்தார்

      தேவா! நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே!

                                    [2ம்திருமொழி,8] 1465

என்னைக்காக்க வேண்டுமென்று இறைஞ்சுகிறார்.

                                     என் அப்பனே1 அறமே உருவாகி வந்தவனே! இந்த உலகத்தவருடன் உள்ள உறவு அன்பு, பகைமை,

இவற்றை நீக்கினேன். உனக்கே தொண்டு செய்யும் எண்ணம் கொண்டேன்.உன்னை என் நெஞ்சினுள் வைத்துக் கொண்டேன்.

            துறந்தேன் ஆர்வச் செற்றச் சுற்றம் துறந்தமையால்

            சிறந்தேன் நின்னடிக்கே அடிமை திருமாலே!

            அறந்தானாய்த் திரிவாய்! உன்னை என் மனத்தகத்தே

            திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே!

                              [6ம்பத்து,3ம்திருமொழி 2] 1469

என்று பெருமானுக்கே அடிமை பூண்டதைச் சொல்கிறார்.

                                    பெருமானே! இன்ப வெள்ளத்தில்

ஆழ்ந்து உன்னை மறந்ததால் அருநரகத்தில் அழுந்தும் பயனைப் பெற்றேன். உன்னை அடைந்ததால் என் தீவினைகள் நீங்கப் பெற்றேன். அதோடு பிறவாமையும் பெற்றேன். உய்யும் வகையும் உணர்ந்தேன்.அதனால் மற்றோர் தெய்வம் வணங்கேன் என்று உறுதிபடக் கூறுகிறார்.

                                             இன்பவெள்ளத்து

          ஆழ்ந்தேன் அருநரகதழுந்தும் பயன் அடைந்தேன்

          போந்தேன் புண்ணிய்னே! உன்னை எய்தி என்

                                              தீவினைகள்

          தீர்ந்தேன் நின்னடைந்தேன் விண்ணகரானே!

                        6ம்பத்து,3ம்திருமொழி 4] 1471

           உய்யும் வகை உணர்ந்தேன் உன்மையால்

                                 இனியாதும் மற்றோர்

            தெய்வம் பிறிதறியேன் பிறிதறியேன்

                   விண்ணகரானே!

                           [6ம்பத்து 3ம்திருமொழி,6] 1473

                                  உனக்காகித் தொண்டு பட்ட

             நல்லேனை நலியாமை நம்பு நம்பீ

                      [6ம்பத்து,3ம்திருமொழி,9] 1476

என்று ஒப்பில்லா அப்பனைச் சரணடைகிறார் திருமங்கை யாழ்வார்.

                                  செல்வம் மல்கும் திருவிண்ணகர் பெருமானைச் சேவிக்க வரும் நம்மாழ்வார்,. சிகர மாடங்களும்

திண்ண மாடங்களும் சூழ்ந்த திருவிண்ணகரில் தேவர்கள் மகிழ் வுடன் பெருமானைத் தோத்திரம் செய்வதைக் காண்கிறார்.

            என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப்

                                            பெற்றவளாய்ப்

            பொன்னப்பன், பொன்மதிள் சூழ்விண்ணகர் அப்பன்

            தன்னொப்பன் இல்லப்பன்,

               [6ம்பத்து 3ம்திருவாய்மொழி9]  3257

           காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்து

              தாளிணைகள் காட்டினான்

                                   விண்ணோர்கள் சிரம் தாழ்ந்து வணங்கும் பெருமான் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பொருட்களி லும் விரிந்து பரந்துள்ளதை உணர்ந்த நம்மாழ்வார்

            நல்குரவும் செல்வும் நரகமும் சுவர்க்கமுமாய்

            வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்

                        [6ம்பத்து,3ம்திருவாய்மொழி,1] 3249

            கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்

            தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்

                        [6ம்பத்து,3ம்திருவாய்மொழி,2] 3250

            நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்

            நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலமாய் விசும்பாய்

                                    3251

            புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்

            எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மை

                        [3ம்திருவாய்மொழி 4] 3252

விளங்குவதைக் காண்கிறார். திருவிண்ணகர்

            சேர்ந்தபிரான் பாதமல்லால் இல்லை யாவர்க்கும்

            வன் சரணே ]3ம்திருவாய்மொழி 7] 3255

என்று சரணடைகிறார். தன்னைச் சரணடைந்தவருக்குத் தன்னொப்பன் இல்லொப்பன் தனதாள் நிழலே தந்தனன்.

======================================================================

Series Navigationஎல்லாம் பத்மனாபன் செயல்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

எஸ். ஜயலக்ஷ்மி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *