ஒரு புதையலைத் தேடி

This entry is part 3 of 35 in the series 29 ஜூலை 2012

 

 

பிரபஞ்சனின் முதல் சிறுகதைத் தொகுதி “ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்” என்னும் தலைப்பில் வெளிவந்தது. அதன் முக்கியமான கதைகளில் ஒன்று “அழகி”. தனது இளம்பருவத்தில் அப்பா அழகான ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பழகிய செய்தியை அறிந்துகொள்கிறான் மகனான இளைஞன். யாரும் தடுத்துக் கட்டுப்படுத்தமுடியாத இளம்வயதுத் துடிப்பில் இருப்பவன் அவன். தன் அப்பாவைக் கட்டிப் போட்ட அழகு எப்படிப்பட்டது என்று பார்ப்பதற்காக ஒருநாள் புறப்பட்டுச் செல்கிறான். அந்தப் பெண்ணின் இருப்பிடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். கதவைத் தட்டிவிட்டுக் காத்திருப்பவன் முன்னால் அரைகுறைப் பார்வையோடு, முடிநரைத்து, உடல்சுருங்கி, தோல்வற்றிய ஒரு மூதாட்டி வந்து நிற்கிறாள். தேடி வந்த விவரம் சொன்னதும் இளைஞனின் கையைப் பற்றி மெல்ல அழுத்தி “அவரு புள்ளயா நீ?” என்று தாய்மை சுடர்விடும் கண்கள் பனிக்கக் கேட்கிறாள். அழகு என்பது உடலில் இல்லை, கண்களின் தாய்மையில் இருக்கக்கூடிய ஓர் அம்சம் என நாம் உணர்ந்துகொள்ளும் தருணம் அது. அந்த உணர்வை அவன் பெறுவதற்கு கால் நூற்றாண்டு காத்திருக்கவேண்டியிருந்தது.

அந்த இளைஞனைப்போலவே நானும் காத்திருந்தேன். ஆனால் என் காத்திருப்பு பெண்ணுக்கானதல்ல. ஒரு புத்தகத்துக்காக.

க.நா.சு. எழுதிய புத்தகங்களில் ஒன்று “படித்திருக்கிறீர்களா?”. என் பதின்ம வயதில் அந்தப் புத்தகத்தை எங்கள் கிராமத்து நூலகத்தில் படித்தேன். புத்தகவாசிப்பில் என் மனம் முழு அளவில் திரும்பியதற்கு இந்தப் புத்தகமும் ஒரு காரணம். தமிழ் வாசகன் படித்திருக்கவேண்டிய முக்கியமான புத்தகங்கள் என்றொரு பட்டியல் அந்தப் புத்தகத்தில் இருந்தது. ஒவ்வொரு புத்தகத்தின் சிறப்பம்சங்களையும் சின்னச்சின்ன கட்டுரைகளாக எழுதியிருந்தார். அவர் குறிப்பிட்ட பட்டியலை எழுதிவைத்துக்கொண்டு நான் ஒவ்வொரு புத்தகமாகத் தேடி அலையத் தொடங்கினேன். அதை ஒரு சாகசப்பயணம் என்றே சொல்லவேண்டும். அவர் பரிந்துரைத்த ஒவ்வொரு புத்தகமும் ஏதாவது ஒரு விதத்தில் முக்கியமானதாகவும் மனத்தைக் கவர்வதாகவும் இருந்தது. ஏறத்தாழ ஒன்றிரண்டு ஆண்டு இடைவெளியில் அவர் குறிப்பிட்டிருந்த எல்லாப் புத்தகங்களையும் தேடிப் படித்துவிட்ட சூழலில் ”நினைவு அலைகள்” என்றொரு புத்தகம் மட்டும் கைக்குக் கிட்டாமல் இருந்தது. நூலகரிடம் கெஞ்சிக்கெஞ்சிக் கேட்டு நூலகத்தில் இருந்த மொத்த நூல்களின் பட்டியல் அடங்கிய பதிவேட்டை ஒருமுறை வாங்கிவைத்துக்கொண்டு நாள்முழுக்கத் தேடினேன். அந்தப் பெயர் அந்தப் பதிவேட்டிலேயே இல்லை. அன்று அடைந்த ஏமாற்றத்துக்கு அளவே இல்லை.

நூலின் பெயரை ஒரு சீட்டில் எழுதி வாங்கிக்கொண்ட நூலகர் மாவட்ட நூலகத்துக்குச் செல்கிற தருணத்தில் தேடிப் பார்த்து கிடைத்தால் எடுத்துக்கொண்டு வருவதாகச் சொன்னார். நானும் அவர் வார்த்தையை நம்பி எழுதிக் கொடுத்தேன். தொடர்ந்து நினைவூட்டியபடியும் இருந்தேன். ”ஞாபகம் இருக்கு,, ஞாபகம் இருக்கு” என்று பார்க்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார். மாவட்ட நூலகத்துக்குச் செல்கிற தினத்தில்மட்டும் மறந்துவிடுவார். என்னைப் பார்த்த மறுகணமே “ஐயையோ, மறந்துபோச்சிப்பா, அடுத்த தரம் கட்டாயம் எடுத்தாரேன்” என்று சிரித்துக்கொண்டே சொல்வார். நானும் அதை நம்பி அமைதியாகக் காத்திருப்பேன். ஆனால் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு பட்டப்படிப்புக்காக நான் புதுச்சேரிக்குக் கிளம்பிச் செல்கிறவரை எனக்கு அவர் அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு வந்து தரவே இல்லை.

இந்த ஏக்கமே என்னை அந்தப் புத்தகத்தைப் பற்றிய நினைவை அதிகரிக்கவைத்தது. புதுச்சேரி ரோமண்ட் நூலகத்தில் இல்லாத புத்தகமே இல்லை என்பது பொதுவான ஒரு நம்பிக்கை. எப்படியாவது அங்கே சென்று தேடிக் கண்டுபிடித்துவிடலாம் என்று வாரம் தோறும் சென்று தேடினேன். அங்கேயும் என் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டவில்லை. புத்தகம் படிக்கிற பல நண்பர்களிடமும் விசாரித்துப் பார்த்தேன். எல்லோரும் உதட்டைப் பிதுக்கினார்கள். எங்கள் கல்லூரி நூலகத்திலும் அந்தப் புத்தகம் இல்லை. அந்த நூலகரை அதிக நெருக்குதல் கொடுத்து வற்புறுத்தவும் என்னால் முடியவில்லை. “நீ சைன்ஸ் ஸ்டூடண்ட்தான? ஒனக்கு எதுக்கு இந்த புஸ்தகம்? மொதல்ல ஒன் டோக்கன புடுங்கணும்” என்று அவர் போடுகிற சத்தத்தில், நான் சத்தமே காட்டாமல் வெளியேறிவிடுவேன். புத்தகத்தைப் பார்க்கமுடியவில்லை என்கிற ஏமாற்றத்தை மெல்லமெல்ல விழுங்கி மெதுவாக நான் அதை மறக்கத் தொடங்கினேன்.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே சமயத்தில் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்கள் மீண்டும் அந்தப் புத்தகத்தை நினைக்கவைத்தன. அதை ஒரு தற்செயல் என்றே சொல்லவேண்டும். தமிழ்நாட்டில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தைப்பற்றிய தகவல்களைத் தேடிப் படித்துக்கொண்டிருந்த நேரம் அது. வேதாரண்யத்தைச் சேர்ந்த கஸ்தூரிபாய் குருகுலம் வெளியிட்ட உப்புசத்தியாக்கிரகம் பற்றிய புத்தகமொன்று படிக்கக் கிடைத்தது. போராட்டத்தைப்பற்றிய விரிவான தகவல்கள் அந்தப் புத்தகத்தில் இருந்தன. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சத்தியாகிரகிகள் திருச்சியில் ராஜன் வீட்டிலிருந்துதான் கிளம்பினார்கள் என்னும் குறிப்பு என் ஆர்வத்தைத் தூண்டியது. நான் தேடும் “நினைவு அலைகள்” ராஜன் இவர்தானா என்னும் கேள்வி என்னைக் குடைந்தது. தற்செயலாக படிக்கக் கிடைத்த அசோகமித்திரன் எழுதிய கட்டுரைத் தொகுப்பொன்றில் இதே புத்தகத்தைப்பற்றிய எழுதப்பட்டிருந்த அறிமுகக்கட்டுரை ஒன்றைப் படித்தேன். அதன் பிறகுதான் இரண்டு ராஜன்களும் ஒருவரே என்பதைப் புரிந்துகொண்டேன். எதிர்பாராதவிதமாக, தன் பர்மா வாழ்க்கையைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் முகம்மது யூனூஸ் எழுதிய புத்தகத்தையும் அப்போதுதான் படித்தேன். அந்தப் புத்தகத்திலும் ராஜன் என்னும் டாக்டரைப்பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட ராஜன். நோய்களைக் குணப்படுத்துவதில் ஆற்றல் உள்ள ராஜன். அரசு மருத்துவர்களால் சரியான முறையில் நடத்தப்படாததால் மனம் நொந்திருந்த ராஜன். ஏமாற்றத்தோடு பர்மாவைவிட்டு வெளியேறிய ராஜன். முகம்மது யூனூஸ் அளித்த குறிப்புகள் இவ்விதமாக இருந்தன. எல்லாத் தகவல்களும் அந்தப் புத்தகத்தைக் காணும் வேகத்தையும் ஆர்வத்தையும் எனக்குள் அதிகரித்தபடி இருந்தன.

ஒருநாள் பெங்களூர் தமிழ்ச்சங்க நூலகத்தில் புத்தகங்களை மாற்றிக்கொண்ட பிறகு, புது வண்ணமடிப்பதற்காக இரும்புத் தாங்கிகளைப் பிரித்து ஒரு குவியலாக மூலையில் கிடக்க, அவற்றில் வைக்கப்பட்டிருந்த நூல்கள் இன்னொரு குவியலாக வேறொரு பக்கத்தில் கிடப்பதைப் பார்த்தேன். அவற்றின்மீது படிந்திருந்த அழுக்குக்கோலம் சற்றே மூக்கடைப்பதாகவும் உடனடியாக இருமலை வரவழைப்பதாக இருந்தபோதிலும், ஆர்வம் காரணமாக இன்னும் சற்றே நெருங்கி நின்று குவியலைக் கிண்டிக் கலைத்து தலைப்புகளைப் பார்த்தேன். சட்டென்று என் பார்வையில் செந்நிறத்தில் கெட்டி அட்டைபோடப்பட்ட புத்தகமொன்றில் ”நினைவு அலைகள்” என்ற எழுத்துகளைக் கண்டதும் தங்கப்புதையலையே பார்த்த மகிழ்ச்சியை அடைந்தேன். அதன்மீது படிந்திருந்த அழுக்கைக்கூடப் பொருட்படுத்தாமல், வேகமாக அதை எடுத்துக்கொண்டு நூலகரிடம் வந்தேன். ஏற்கனவே எடுத்துவைத்திருந்த புத்தகத்துக்குப் பதிலாக அதை எடுத்துக்கொள்வதாகச் சொன்னேன். நூலகர் என்னைப் பார்த்த பார்வையில் கொஞ்சம்கூட நட்பே இல்லை. ”அப்படிலாம் தரமுடியாது சார், அத எடுத்த எடத்துலயே வச்சிட்டு போங்க” என்று முறைத்தார். “இது முக்கியமான ஒரு புத்தகம். ரொம்ப காலமா இத தேடிட்டிருக்கேன். அதான் கேக்கறேன்” என்று மீண்டும் என் கோரிக்கையை முன்வைத்தேன். நான் சொல்வதை காதிலேயே வாங்காதவராக, “எல்லாத்தயும் சுத்தப்படுத்தி மறுபடியும் நெம்பர் போட்டு அடுக்கணும் சார், அதுக்காகத்தான் ஒதுக்கி வச்சிருக்குது. கொஞ்சநாள் கழிச்சி வந்து எடுத்துக்குங்க” என்றபடி என் கையில் இருந்த புத்தகத்தைப் பிடுங்கிக்கொண்டார். அவமானப்படுத்தப்பட்டதுபோல உணர்ந்தேன் நான். அமைதியாக திரும்பி நடப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

அடுத்தமுறை சென்றபோது புதுவண்ணத்தோடு தாங்கிகள் நின்றிருந்தன. நூல்களும் அடுக்கப்பட்டிருந்தன. ஆனால், எந்தத் தாங்கியிலும் நினைவு அலைகள் புத்தகம் இல்லை. நூலகரிடம் சென்று நான் தேடும் விஷயத்தைப்பற்றிச் சொன்னேன். “அங்கதான் இருக்கும், சரியா பாருங்க சார்” என்று சலிப்பான ஒரு பதிலால் என்னை மனம் குன்றவைத்துவிட்டார் அவர். தாங்கிகள்பக்கம் திரும்பி மீண்டும் ஒருமுறை தேடிப் பார்த்தேன். என் முயற்சி தோல்வியிலேயே முடிவடைந்தது.

கால்நூற்றாண்டுக்கும் மேற்பட்ட இந்தத் தோல்விப்படலத்தை, ஒருநாள் மாலையில் தேநீர் அருந்தும் வேளையில் நண்பர் நடராஜனிடம் விவரமாகச் சொல்லி ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தேன். அவர் புன்னகை மாறாத முகத்தோடு, ”கவலயே படாதீங்க. புது ப்ரிண்ட் தயாராய்ட்டிருக்குது. கண்காட்சிக்கு வந்துரும். மொதல் காப்பி ஒங்களுக்குத்தான்” என்றார். அக்கணம் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தப் புத்தகத்தை அச்சிட அனுமதி தேடி அலைந்த அனுபவத்தை அவரும் ஒரு கதையாகச் சொன்னார். அதற்குப் பிறகு ஒருநாள் மாலையில் புயல்போல வந்து புத்தம்புது பிரதியைக் கொடுத்துவிட்டு வேகமாகத் திரும்பிச் சென்றுவிட்டார்.

இரவு உணவுக்குப் பிறகு, புத்தகத்தைப் படிக்கத் தொடங்கி அதிகாலைக்குள் படித்துமுடித்தேன். 44 அத்தியாயங்கள். சங்கிலிக்கண்ணிகள்போல ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு, கீழே வைக்கவே மனமில்லாமல் படிக்கத் தூண்டிக்கொண்டே இருந்தன. தான் படித்த முதல் பள்ளிக்கூடத்தில் தொடங்கி, ராஜாஜியின் அமைச்சரவையில் பங்கேற்பது வரையிலான வாழ்க்கைச் சம்பவங்களை நினைவிலிருந்து அவர் அடுக்கிச் சொல்லும் விதம், ராஜன் எங்கோ நமக்குப் பின்னால் நின்றுகொண்டு பேசுவதைப்போல இருந்தது. புத்தகத்தைப் படித்துமுடித்த பிறகுதான், இதன் முதற்பதிப்புக்காக கல்கி எழுதியிருந்த முன்னுரையைப் படித்தேன். எழுத்தின் ஈர்ப்புக்கு வசப்பட்டு, அவரும் தூக்கத்தை மறந்து இரவு முழுக்க உட்கார்ந்து ஆர்வத்தோடு இப்புத்தகத்தைப் படித்துமுடித்ததாக அம்முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார் கல்கி. ஒரு நல்ல வாசகனுக்கு இப்படி கிடைக்கக்கூடிய அனுபவம் மிக அபூர்வமானது. ராஜன் அபூர்வமான எழுத்தாளர். அபூர்வமான அரசியல்வாதி. அபூர்வமான மனிதர். அதனாலேயே அவருடைய சுயசரிதையும் அபூர்வத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.

பிள்ளைப்பருவ நிகழ்ச்சிகளால் நிறைந்திருக்கும் முதல் ஐந்து அத்தியாயங்கள் அக்காலச் சூழலையும் அவருடைய குறும்புகளையும் விவரிப்பவை. மேல்சட்டை அணியாத ஆசிரியரைக் கொண்ட திண்ணைப் பள்ளிக்கூடத்தில் குறும்பு செய்யும் பிள்ளைகளைத் தண்டிப்பதற்காக தலைகீழாகக் கட்டித் தொங்கவிடுவதற்காகவே பனைவிட்டத்திலிருந்து தொங்கும் முறுக்கேறிய கயிறு, நல்ல கையெழுத்து இருந்தால்தான் நல்ல குமாஸ்தா வேலை கிடைக்கும் என்கிற எண்ணத்தால், கையெழுத்துப் பயிற்சிக்காக பிள்ளைகளின் கைம்மணிக்கட்டில் ரூல்தடியால் அடித்துப் பக்குவப்படுத்தும் ஆசிரியர், அடிதாங்கமுடியாத பிள்ளைகள் ”வாத்தியார் சாகானா, வயிற்றெரிச்சல் தீராதா?” என்று பாடி கிண்டல் செய்து ஆத்திரத்தைத் தணித்துக்கொள்ளும் பிள்ளைகள், பட்டாணிக்கடலைக்காக பிஞ்சுமனத்தில் உருவாகும் ஏக்கம், ஏகாதசித் திருவிழாவில் ஏலச்சீட்டுக் கடைக்காரனுக்கு உதவி செய்து கிடைத்த அரையணா பணத்தில் கால்படி கடலை வாங்கித் தின்ற ஆனந்தம் என ஏராளமான சுவாரசியமான சம்பவங்கள் சுயசரிதையின் ஆரம்பப் பகுதியில் உள்ளன.

குறும்பும் மகிழ்ச்சியும் நிறைந்த பிள்ளைப்பிராயத்தைத் தொடர்ந்து, வாழ்க்கையின் திசையைத் தீர்மானிக்கவேண்டிய புள்ளியைத் தொட்ட கணத்திலிருந்து ராஜன் ஓய்வே இல்லாத ஒரு பறவையாக பறந்துகொண்டே இருந்தார். குமாஸ்தாவாக ஏதேனும், சின்னதொரு வேலையில் சேர்ந்து படிப்படியாக முன்னேற வழிசொன்ன தந்தையின் சொற்களை மீறி, அதிகாரமும் பலவிதமான வருவாயும் கொண்ட தன் கிராமத்து மருத்துவரைப்போல தானும் ஒரு மருத்துவராக வேண்டும் என்கிற கனவில் சாதிக்கட்டுப்பாடுகளையெல்லாம் பொருட்படுத்தாமல் மருத்துவ நுழைவுத் தேர்வெழுதி வென்று சென்னைக்கு மருத்துவம் படிக்கச் சென்றுவிடுகிறார். உதவித்தொகை கொடுத்த அரசின் கட்டளைக்குப் பணிந்து பர்மாவுக்குச் சென்று மருத்துவச் சேவை செய்கிறார். பொருட்படுத்தக்கூடிய ஒரு மருத்துவராக அவர்கள் அங்கே தன்னை நடத்தவில்லை என்பதால், மருத்துவத்திலேயே மேற்படிப்பு படிப்பதற்காக லண்டன் செல்கிறார்.

லண்டனிலிருந்து திரும்பும்போது அவர் கட்டிவைத்திருந்த மனக்கோட்டைகள் மெல்லமெல்ல சரிந்துவிழுகின்றன. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சாதிவிலக்கம், அவர் நேரிடையான பார்வை வளையத்துக்குள் வந்ததும் இன்னும் அழுத்தமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சொந்த அப்பாவே அவரைப் பார்ப்பதைத் தவிர்க்கிறார். வசிக்க சரியான முறையில் வீடு கிடைக்கவில்லை. இருந்து மருத்துவத்தொழில் புரிய பொருத்தமான இடமும் கிடைக்கவில்லை. வைதிகக்கோட்டையான சொந்த ஊரில் அவரால் வெற்றிகரமான முறையில் வைத்தியத்தொழில் நடத்த முடியவில்லை. இதனால் மனம் கசந்து தவிர்க்கமுடியாமல் மீண்டும் பர்மாவுக்கே செல்ல நேரிடுகிறது. சிறிது காலத்திலேயே மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற அளவுக்கு தொழிலில் மேன்மையடைகிறார். ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவி பன்னிரண்டே வயதான தன் மூத்த பெண்ணுக்கு மணம் முடிக்கவேண்டும் என முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்கி, அவர் உடனடியாக சொந்த ஊருக்குத் திரும்பி வரும்படி நேர்கிறது. மீண்டும் வைதிகர்களின் பிடியில் அவர் அகப்பட்டு நொந்துபோகிறார். வைதிகர்களின் தந்திரங்களையும் ஏமாற்றுகளையும் போலிவார்த்தைகளையும் பார்த்துப்பார்த்து, கசப்பும் வெறுப்புமுற்று வைதிகப்பற்றையே துறந்துவிடுகிறார். தன் மருத்துவமனையில் சாதிவித்தியாசம் பாராமல் எல்லோருக்கும் மருத்துவம் பார்க்கும் சேவையில் இறங்கிவிடுகிறார்.

உயர்வுக்கான நாட்டமும் சேவைசெய்யும் விருப்பமும் ஒருங்கே கொண்ட அபூர்வமனிதராக விளங்குகிறார் ராஜன். லண்டனில் படிக்கப்போன சமயத்தில் காந்தியைச் சந்தித்து, அவருடைய நட்பைப் பெற்றிருக்கிறார். வ.வெ.சு.ஐயருடைய பழக்கமும் கிடைத்திருக்கிறது. ஆனால் அவருடைய மனம் படிப்பின்மீது குவிந்திருந்ததால், வேறெதைப்பற்றியும் சிந்திக்க நேரமற்றவராக இருந்திருக்கிறார். ஊருக்குத் திரும்பி, தன்னையும் ஒரு முக்கியப் புள்ளியாக நிறுவிக்கொண்ட பிறகு, ஊர்ப் பிரதிநிதியாக காங்கிரஸ் மாநாட்டுக்குக் கலந்துகொள்ளச் செல்வதுதான் பொதுவாழ்க்கையின் தொடக்கப்புள்ளி. ஆங்கிலேயருக்குப் பிடித்தமான வகையில் ஆடையணிந்து, மேடையிலும் ஆங்கிலத்திலேயே உரையாற்றி, ஆங்கிலத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி முடிந்துபோகும் மாநாட்டுக் கூட்டங்களில் அவர் மனம் சிறிதும் ஒட்டவே இல்லை. விலகியே இருக்கிறார்.

1919 ஆம் ஆண்டில் ஜாலியன் வாலாபாக் என்னும் இடத்தில் ஆங்கிலேய ஜெனரல் டயரால் நிகழ்த்தப்பட்ட படுகொலை மருத்துவர் ராஜனுடைய மனத்தில் ஒரு பெரிய மாறுதலை நிகழ்த்தியது. இந்தக் கோர நிகழ்ச்சியைப்பற்றி விசாரித்த இந்தியக் கமிஷன் அறிக்கை ஜெனரல் டயரின் நடவடிக்கை யோசனைக்குறைவான ஒரு செய்கைதானே தவிர குற்றமல்ல என்று சொன்னது. இங்கிலாந்து பாராளுமன்றம் கல்வைத்து இழைத்த பட்டாக்கத்தியொன்றை டயருக்கு அன்பளிப்பாக அளித்துக் கெளரவித்தது. அதனால் அமைதியிழந்து, “அடிமை வாழ்வில் ஆனந்தமுற்று இருக்கும் கூட்டத்தாருக்கு இந்தக் கதி ஏற்படுவதுதான் உலக இயல்பா, அநீதியை அடக்க உலகத்தில் வேறு முறையே இல்லையா?” என்று எண்ணி மனம் குமைந்தார். அப்போது காந்திஜி செல்லுமிடங்களிலெல்லாம் சத்தியாக்கிரக இயக்கத்தின் நெறியையும் தத்துவத்தையும் சக்தியையும் விளக்கிவந்தார். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு இம்முறை வழிவகுக்கும் என்று பறைசாற்றினார். அந்தச் சொற்களால் ஆறுதலடைந்த ராஜன் ஆத்மார்த்தமாக காந்தியின் இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டார். நாட்டின் விடுதலைக்கு தியாகம் அவசியம் என்னும் உண்மையை அவர் மனம் புரிந்துகொண்டது. காங்கிரஸ் இயக்கம் என்பது உல்லாசப்பிரயாணம் அல்ல, புண்ணிய நதிகளில் புண்ணிய ஸ்நானம் செய்யும் சந்தர்ப்பமும் அல்ல, உண்மையிலேயே அது ஒரு வேள்வி என்னும் தெளிவும் பிறந்தது. குடும்பத்துக்காக உழைத்த நேரம் போக, மற்ற நேரத்தை நாட்டுப்பணிக்குச் செலவிடவேண்டும் என்னும் முடிவையும் அவர் மனம் எடுத்தது. கல்கத்தா காங்கிரஸ், நாகபுரி காங்கிரஸ், கிலாபத் கிளர்ச்சி, சுயராஜ்ஜியத் தீர்மானம், ஒத்துழையாமை எல்லாம் ஒன்றன்பின்னால் ஒன்றாக வந்துகொண்டே இருந்தன. அனைத்திலும் தன்னை முழுமனத்தோடு ஈடுபடுத்திக்கொண்டார் ராஜன். களைப்பு என்பதே தெரியாமல் சுற்றியலைந்துகொண்டே இருந்தார். அக்காலகட்டத்தில் இயக்கத்தின் பல தளங்களில் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருந்தவர்களாக ராஜாஜி, ஈ.வெ.ரா. வரதராஜலு நாயுடு, மெளல்வி சையத் முர்த்துசா ஸாஹேப் முதலியோரைக் குறிப்பிடலாம்.

பொதுக்கூட்டம் நடத்துவதில் அக்காலத்தில் இருந்த சங்கடங்களை ராஜன் விரிவாகவே குறிப்பிடுகிறார். கூட்டம் நிகழ்த்த அனுமதிக்காக அலைவதே பெரிய சங்கடம். முனிசீப் அனுமதி கிடைத்தால் ஜமீன்தார் அனுமதி இருப்பதில்லை. ஜமீன்தார் அனுமதி கிடைத்தால் முனிசீப் அனுமதி இருப்பதில்லை. இரண்டு அனுமதிகளையும் பெற்றுக்கொண்டு சென்றால், மணியக்காரர் அவற்றை நிராகரித்துவிடுவார். மூவரின் அனுமதிகளையும் ஒருங்கே பெற்று, கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யும்போது, அச்சத்தின் காரணமாக மக்கள் ஒதுங்கிச் செல்வார்கள். இத்தனை தடைகளையும் தன் மன ஆற்றலால் வென்று, கூட்டங்களை நடத்தி மக்களிடையே சுதந்திர தாகத்தை ஊட்டிய காங்கிரஸ் தியாகிகள் போற்றுதலுக்கு உரியவர்கள்.

செளரிசெளரா என்னும் இடத்தில் காவல்நிலையம் தீவைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவத்தையும் அதையொட்டி ஒத்துழையாமை இயக்க நடவடிக்கைகளைத் தற்காலிகமாக காந்தியடிகள் நிறுத்திவைப்பதாக அறிவித்ததையும் நாம் அறிவோம். அதற்கு நிகரான சம்பவமொன்று சென்னையிலும் திருச்சியிலும் நடைபெற்றிருக்கின்றன. அவற்றை ஆவணப்படுத்துகிறது ராஜனின் எழுத்து. இளவரசர் வருகையை ஒட்டி, நிகழ்த்தப்படுகிற வரவேற்பு நிகழ்ச்சிகளில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என்று காங்கிரஸ் தீர்மானம் இயற்றியிருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி பெருமளவில் கூட்டத்தைத் திரட்டிவிடவேண்டும் என அதிகாரிகள் முயற்சி செய்தனர். அதற்கு வசதியாக துறைமுகத் தொழிலாளர்களுக்கும் ஆலைத் தொழிலாளர்களுக்கும் அன்றைய தினம் விடுப்பளித்தது. ஆனால் அந்தத் திட்டம் நடைபெறவில்லை. நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்கு மாறாக, தெருவோரங்களில் நின்று போகிற வருகிறவர்களை வேடிக்கை பார்ப்பதிலும் கேலி செய்வதிலும் ஈடுபட்டார்கள். கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவரால் தெருவில் ஓடிக்கொண்டிருந்த டிராம் வண்டி நிறுத்தப்பட்டது. அதே கணத்தில் தெருவோரத்திலிருந்து சரமாரியாக அவ்வண்டியை நோக்கிக் கற்கள் வீசப்பட்டன. வண்டியின் கண்ணாடிகள் உடைந்து தூள்தூளாகிவிட்டன. பயணிகள் அச்சத்தில் இறங்கி ஓடிவந்து விட்டார்கள். அதே நேரத்தில் வெலிங்க்டன் திரையரங்கமும் தாக்கப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. திருச்சியில் ஒரு கள்ளுக்கடை தீவைத்துக் கொளுத்தப்பட்டது. காந்திஜியின் சத்தியாக்கிரகக் கொள்கையின் அடிப்படைக்கே எதிரான விஷயங்கள் இவை. காந்தியைப் பொறுத்தவரையில், எந்த இடத்தில் சத்தியாக்கிரகம் நடைபெற்றாலும் அங்கே பொதுமக்களிடம் ஒழுங்கு, நியாய உணர்ச்சி, அமைதி, சகிக்கும் தன்மை கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பதும் அக்குணங்கள் இல்லாதவர்கள் இயக்கத்தில் ஈடுபடக் கூடாது என்பதும் அதைமீறி நடக்கும் சம்பவங்களுக்கு சத்தியாக்கிரகிகளே பொறுப்பானவர்கள் என்பதும் முக்கியமான விஷயங்கள். ஆகவே, நிகழ்ந்தவற்றுக்குப் பொறுப்பேற்கும் வகையில் காந்திக்கு நீண்ட குறிப்பொன்றை எழுதி அனுப்பிவைக்கிறார் ராஜன். ஆனாலும் பொதுமக்கள் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர் என்று குற்றம் சாட்டப்பட்டு ராஜன் முதல்முறையாக காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார். ராஜன் தன் முதல் சிறை அனுபவங்களை மூன்று அத்தியாயங்களாக எழுதியுள்ளார்.

உப்பு சத்தியாக்கிரகத்தையொட்டி, ஐம்பது பேர்கள் அடங்கிய குழு திருச்சியிலிருந்து வேதாரண்யத்தில் உள்ள கடற்கரையை நோக்கிச் சென்ற நடைபயணத்தைப்பற்றிய பகுதி இந்த நூலின் முக்கியமான பகுதியாகும். தன்னிச்சையாக பொதுமக்களிடமிருந்து இயக்கத்தினருக்குக் கிடைத்த வரவேற்பையும் தஞ்சையைச் சேர்ந்த தார்ன் என்னும் ஆங்கிலேய அதிகாரியால் திட்டமிடப்பட்டு விளைவிக்கப்பட்ட ஊறுகளையும் ஒன்றையடுத்து ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார் ராஜன். ராஜாஜி தொடங்கி, ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதுவரை விரிவான குறிப்புகள் இப்பகுதியில் உள்ளன. சிறிது காலத்துக்குப் பிறகு, காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்படி அனைவரும் விடுதலை அடைந்தார்கள். உப்பளங்களில் ஏழைகள் ஆளுக்கொரு தலைச்சுமை அள்ளி எடுத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றார்கள். இறுதிப் பகுதியில் விடுதலைக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான ஏழைகள் இலவசமாக உப்பு அள்ளும் காட்சியைக் கண்ணாரக் கண்டு களித்தபடி திரும்பியதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் ராஜன்.

ஹரிஜன சேவா சங்கத்தை நிறுவி நடத்தியதில் பெற்ற அனுபவங்கள், காங்கிரஸ் தேர்தல் கால அனுபவங்கள், ராஜாஜியின் அழைப்புக்கிணங்கி அமைச்சராகப் பொறுப்பேற்றுத் தொண்டாற்றிய அனுபவங்கள், கடன்பெற்ற ஒருவன் பணத்தைத் திருப்பித் தரமுடியாமல், பணத்துக்கு ஈடாக நிலத்தைக் கொடுத்துவிட்டுப் போக, அதைப் பண்படுத்தி பயிர்த்தொழில் செய்து பார்த்த அனுபவங்கள் என ஒவ்வொன்றைப்பற்றியும் படிக்கும்போது, தமிழக வரலாற்றையே ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்ப்பதுபோன்ற அனுபவம் கிடைக்கிறது.

ஒரு பெரிய மருத்துவமனையையே தனிப்பட்ட வகையில் உருவாக்கும் அளவுக்கு தொழில் அனுபவமும் தொழில்ஞானமும் அவருக்கு இருந்தன. ஆனால் தன் தனிப்பட்ட உயர்வையே பெரிதென்று நினைக்கிற எண்ணம் அவரிடம் ஒருபோதும் இயங்கியதில்லை என்பதால் அந்த உயர்வான வாழ்வை நினைத்த நேரத்தில் சட்டென்று உதறி பொதுவாழ்க்கைக்கு வந்துவிட முடிகிறது. பொதுவாழ்வில் சலிப்பு தோன்றும் தருணத்தில் பழக்கத்தின் காரணமாக அத்தோடு ஒட்டிக்கொண்டிருக்காமல், அதைவிட்டு விலகி நிற்கவும் அவரால் முடிகிறது. அடிப்படையில் அவர் அன்பும் ஆற்றலும் விவேகமும் பொறுமையும் சத்தியநாட்டமும் நிறைந்த அபூர்வ மனிதர். தன்னுடைய நினைவிலிருந்து, தனிப்பட்ட வாழ்வின் அனுபவச் சாயலோடு அவர் இக்கட்டுரைகளை எழுதியிருந்தாலும், காங்கிரஸ் இயக்கத்தின் செயல்பாடுகளையும் தமிழக வரலாற்றின் முக்கியத் தடங்களையும் ராஜனின் எழுத்து ஆவணப்படுத்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

சுயசரிதையின் முதல்பகுதியான “முதல் பள்ளிக்கூடம்” அத்தியாயத்தில் ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார் ராஜன். பள்ளிக்கூடத்தில் அடிகொடுக்கிற ஆசிரியரை அவருக்குக் கட்டோடு பிடிக்கவே இல்லை. அடிக்கு அஞ்சி, தினந்தோறும் பள்ளிக்கூடம் செல்வது சிறைக்கூடத்துக்குச் செல்வதுபோல இருந்தது என்கிறார். பள்ளிக்கூடம் செல்வதைவிட, கோவில் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு பொந்தில் வந்துவந்து உட்கார்ந்துவிட்டுப் பறந்துபோகும் அழகான பச்சைக்கிளியை வேடிக்கை பார்ப்பதில்தான் சுவாரசியம் அதிக அளவில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். பள்ளிக்கூடத்தில் இருக்கும்போதெல்லாம், அரைமணிக்கொரு முறை ஏதேனும் ஒரு காரணம் சொல்லிவிட்டு, அவர் உதிர்க்கும் வசைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் ஓடோடி வந்து பச்சைக்கிளியை வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிடுவேன் என்கிறார் ராஜன். பச்சைக்கிளியைக் காண்கிற ஆவல், அவரை பள்ளிக்கு வெளியே இழுத்துவந்துவிடுகிறது. பச்சைக்கிளி ஒரு புள்ளி. பாடம் இன்னொரு புள்ளி. இரண்டு புள்ளிகளையும் அவர் மனம் கடிகாரப் பெண்டுலம்போல தொட்டுத்தொட்டு இயங்கியபடி உள்ளது. விளையாட்டுதான் என்றாலும், அவருடைய ஆளுமையை ஏதோ ஒருவகையில் அடையாளப்படுத்தும் தன்மையை இது வெளிப்படுத்துகிறது என்று தோன்றுகிறது. அதை இப்படிச் சொல்லிப் பார்க்கலாம். வாழ்க்கைச்சூழல் நெருக்கடிகள் அவரை ஒரு இடத்தை நோக்கித் தள்ளிச் செல்கின்றன. அங்கே செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவருக்கு. ஆனால், அந்தப் புள்ளியில் நீண்ட காலம் அவரால் நீடித்திருக்க முடியவில்லை. அங்கே சென்ற பிறகு, அது அலுப்பைத் தருகின்றது. வெளியேறி வந்து தன் மனத்துக்குப் பிடித்த வேறொன்றோடு இணைந்துகொள்கிறார். இந்தப் புள்ளியிலும் அவரால் தொடர்ந்து நிற்க இயலவில்லை. மீண்டும் அவரை உள்ளே தள்ளுகிறது காலம். இந்த ’உள்ளே-வெளியே’ அலைபாய்தல் அவருடைய வாழ்க்கையில் இறுதிக்கணம்வரை நீடித்திருக்கிறது. மருத்துவப்பணியை விடக்கூடாது என ஒவ்வொரு முறையும் அவர் நினைக்கிறார். ஆனால், சேவைநாட்டம் கொண்ட மனமோ அதில் ஒட்டவிடாமல் அவரை வெளியே இழுத்துவந்து போட்டுவிடுகிறது.

(நினைவு அலைகள். தன் வரலாறு- தி.சே.செள.ராஜன். சந்தியா பதிப்பகம், சென்னை – 63. விலை.ரூ.225)

Series Navigationபரிணாமம் (சிறுகதை)வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 23
author

பாவண்ணன்

Similar Posts

7 Comments

  1. Avatar
    Kavya says:

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    ராஜனை நம்பள்ளிப்பாடநூலில் வழியாக தமிழ்ச்சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்த அரசு ஆவண செய்ய வேண்டும்.

    திண்ணையோ வேறு ஆரோ இக்கட்டுரையை வெட்டியெடுத்து அரசு கல்வித்துறைச்செயலருக்கும், அமைச்சருக்கும், அம்மா அவர்களுக்கும் அனுப்பி, ராஜனைப்பற்றிய பாடம் தமிழ்ப்பாட நூல், அல்லது வரலாறு பாடநூலில் வரும்படி கேட்டுக்கொள்ளலாம். அல்லது பாவண்ணனில் கட்டுரையை அப்படியே தமிழ்ப்பாட நூலில் வைக்கலாம். (கொஞசம் சுருக்கி)

    ராஜனைப்போன்ற பிறரும் இருக்கலாம். அவர்களைப்பற்றி தமிழ்க்குழந்தைகள் தெரிந்து கொள்ளவேண்டும்

    தமிழக விடுதலைப்போராட்டமெனபது, வஉசி, பாரதியார்,வாஞ்சிநாதன், என்று மட்டுமே முடியவில்லை. அவர்களுக்கும் அப்பால் தெரியா பலருண்டு என்ற உண்மை வெளியில் கொண்டுவரப்படவேண்டும்.

    நன்றி பாவண்ணன்.

  2. Avatar
    K.Muthuramakrishnan says:

    என் தந்தையார் மறைந்த காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் பற்றி இங்கே படியுங்கள்.

    http://gandhiashramkrishnan.blogspot.in/

    என் தந்தையாரும் ராஜாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.
    டாக்டர் திருநெய்த்தானம் செள‌ரிராஜன் (தி சே செள ராஜன்) பெரிய தலைவராக விளங்கியவர். என் தந்தையார் தொண்டராக விளங்கியவரே.தொண்டரின் முழுமைபெறாத நாட்குறிப்பை(தன் வரலாறு)யும் படித்துப் பாருங்கள்.

    ராஜாஜியின் மெசென்ஜ‌ராக பலமுறை என் தந்தையார் டாக்டர் டி எஸ் எஸ் ராஜனைச் சந்தித்துள்ளார்.

  3. Avatar
    punaipeyaril says:

    மு.கிருஷ்ணன் படித்தேன். இதில் வேதனை என்னவென்றால் காந்தி எடுத்துச் சென்ற விடயம் இன்று இப்படியாயிற்றே என்ற வேதனை தான். இன்று எங்கு பார்ப்பினும் தரமற்றவர்கள் முக்கியஸ்தர்களாக…? ஏன்..?

  4. Avatar
    radhakrishnan says:

    பாவண்ணன் சார்,
    உங்கள் பதிவு வழியாக நானும் ஒரு புதையலைக் கண்டுவிட்டேன்.
    எனது 21ம் வயதில் நான் பணிபுரிந்த கோவைக்கருகில் உள்ள
    பொங்கலூர் என்ற சிற்றூர் நூலகத்தில் பலமுறை படித்துச் சுவைத்த நினைவு அலைகள் புத்தகத்தை தற்போது எனது 69
    வயதுவரை தேடித்தேடி அலுத்துப் போய் நம்பிக்கையிழந்த நிலையில்இன்று உங்கள் பதிவு மூலம் கண்டுபிடித்தேன்.என்ன அருமையான புத்தகம்.படித்துப் பார்க்காமலே நீங்கள் தேடியிருக்கிறீர்கள். படித்துச் சுவைத்தபின் மீண்டும் சுவைக்க நான் தேடியிருக்கிறைன்.என்ன அற்புதம்?மிக்க நன்றி.சந்தியா
    பதிப்பகத்திற்கும் நன்றி.உடனே வாங்கிச் சுவைக்கிறன், மீண்டும் நன்றி

  5. Avatar
    vetrimagal says:

    அருமை! இந்த படிக்க வேண்டிய புத்தகத்தை எப்படி பெறுவது?
    அதுவும் வெளி மாநிலத்தவர்கள்?

    குழம்புகிறேன்.

  6. Avatar
    punai peyaril says:

    சந்தியா பதிப்பகம், சரியான பின்கோடு 600083 , டோர் 73, 53வது தெரு, 9வது அவின்யூ, அசோக் நகர், சென்னை 83. ஃபோன்:24896979 http://www.sandhyapublications.com ஆனால் அவர்கள் தளத்தில் ஏதோ பிரச்சனை… எல்லா புத்தகங்களும் சௌ ராஜன் என்றும் விலை 70 என்றும் இருக்கும். வெளிநாடு எனில் இந்த தவறுக்கு ஃபிரியாகவே புத்தகம் பெறலாம்… :)

  7. Avatar
    punai peyaril says:

    படிக்க படிக்க கண்ணில் வழிவது நீரா… ? நினைவுகளா…?

Leave a Reply to Kavya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *