ஓயாத உழைப்பும், மனிதநேயப் பண்பும்! கேப்டன் லட்சுமி சேகல் (1914 – 2012)

This entry is part 15 of 37 in the series 2 செப்டம்பர் 2012

கேப்டன் லட்சுமி சேகல் (1914 – 2012

 

 

 

கேப்டன் லட்சுமி சேகல் சென்னையில் பிறந்து, மருத்துவராகப் பணியாற்றியவர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை. இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். 1914ம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 24ம் நாள் சென்னையில் (அன்றைய மதராஸ் பட்டிணம்) பிறந்தவர், இவருடைய தந்தை டாக்டர் எஸ். சுவாமிநாதன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், அமெரிக்காவில் வானியல் துறையில் முனைவர் பட்டமும், கணிதவியலில் பட்டமும் பெற்றவர். சிறந்த குற்றவியல் வழக்கறிஞர் என்ற தகுதியும் பெற்றவர். தாய் ஏ.வி.அம்முகுட்டி, ஒரு சமூக சேவகி. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராகவும், மிகுந்த சமுதாய நலம் மிக்கவராகவும், சுதந்திரப் போராட்டத்தில் செயல் வீராங்கனையாகவும் இருந்தவர். கேரள மாநிலத்தின் பாலக்காடு நகரின்,  பிரபலமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இலட்சுமி சேகல் லேடி லிவிங்ஸ்டன் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியின் பள்ளியில் தம் பள்ளிக் கல்வியைப் பயின்றார். 1930ல் இராணிமேரிக் கல்லூரியில் பட்டப்படிப்பை தொடர்ந்தார். 1938ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் முடித்து, பின்பு பெண்ணியல் மற்றும் மகப்பேறு மருத்துவ பட்டச்சான்றிதழ் (diploma) பயின்றார். மருத்துவக் கல்வியுடன், அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியிலும், அகில இந்திய பெண்கள் மகாநாட்டிலும் பங்கு கொண்டிருந்தார். ஆனால் லஷ்மியோ, சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் அதிரடி அரசியலில் ஈர்க்கப்பட்டார்.

 

1942ல் பிரித்தானியா மற்றும் ஜப்பான் இடையிலான போரில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவச்சேவை செய்தார். 1943ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் பிரிவான “ஜான்சி இராணி” படையைத் துவங்கினார். ஆசியாவிலேயே முதன்முதலில் துவங்கப்பட்ட பெண்கள் படையாக இது கருதப்படுகிறது. 1930களிலேயே சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கு பெற்று ஒரு நாள் முழுவதும் சிறையில் இருந்தார்.

 

கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரி, சுகாசினி நம்பியார் என்பவர் கம்யூனிசத்தில் ஈடுபாடு கொண்டு, மீரட் சதி வழக்கில் தொடர்பு கொண்டவராக, குற்றம் சாட்டப்பட்டதால், இலட்சுமியின் வீட்டில் சிலகாலம் தலைமறைவாக அடைக்கலம் புகுந்தார். பொதுவுடமைவாதியான சுகாசினியிடமிருந்துதான், இவர் மார்க்சிய தத்துவம் மற்றும் இரஷ்யப் புரட்சி பற்றிய பல நூல்களையும் வாங்கி வாசித்திருக்கிறார். ஆயுதப் புரட்சியே விடுதலைக்கு வழிவகுக்க உகந்தது என்ற நம்பிக்கை கொண்டதும் அப்போதுதான். புரட்சியால் மட்டுமே, சமுதாயத்தில் மாற்றங்கள் கொண்டுவர முடியும் என்று நம்பினார்.

 

லட்சுமியின் சகோதரர் கோவிந்த சுவாமிநாதன் சிறந்த வழக்கறிஞராகவும், சகோதரி மிருணாளினி சாராபாய் பிரபலமான நாட்டியக் கலைஞராகவும் இருந்தனர். இவர் தம் இல்லத்திலிருந்து, அரசாங்க மருத்துவமனையில் மிகவும் ஏழ்மையான சூழலில் அவதியுறும் நோயளிகளுக்காக உணவு, உடை என எதையும் எடுத்துச்சென்று கொடுத்து விடுவார். ஒரு முறை லட்சுமியின் தாய் அம்மு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நினைவில்லாமல் இருந்தபோது லட்சுமிதான் அருகிருந்து கவனித்துக் கொண்டார். அப்போது அவருடைய தாய் அணிந்திருந்த நகைகளைக் கழட்டி மருத்துவர்கள் இவரிடம் கொடுத்துள்ளனர். அவருடைய தாய் கண் விழித்தவுடன் நகையைப் பற்றி விசாரிக்க, செவிலியர்கள் மகளிடம் கொடுத்த விசயத்தைச் சொன்னதுதான் தாமதம், உடனே சென்று அவரிடமிருந்து அந்த நகையை வாங்கிவர வேண்டுமென்றும், இல்லாவிட்டால் கம்யூனிசவாதிகளிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்றும் பதறியிருக்கிறார் அந்த தாய்.

 

1939- 40களில், இரண்டாம் உலகப்போர் நடந்த நேரத்தில், சுதந்திரப்போராட்டத் தியாகிகளின் பல வாரிசுகளும் இதில் பங்கு கொண்டனர். பிரித்தானிய அரசின் இராணுவத்தில் பணிபுரிய இலட்சுமியின் மனம் இடம் கொடுக்கவில்லை. தம் தாயும், சகோதரியும் அமெரிக்காவில் வசிக்க, தந்தையையும் இழந்த சூழலில், தம் உறவினர் ஒருவருக்கு, உதவி செய்யும் பொருட்டு மருத்துவர் என்ற முறையில் சிங்கப்பூர் சென்றார். பைலட் பி.கே.என் ராவ் என்பவருடனான அவருடைய திருமண உறவும் முறிந்து போன ஒரு சூழலில் அங்கு சென்றபோதுதான் தென்னிந்தியாவிலிருந்து சென்ற பல தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் மருத்துவச் சேவை கிடைக்காமல் தவிப்பதை உணர்ந்து அங்கேயே தங்கி சேவை செய்ய முற்பட்டார். ஏழை, எளியோருக்கான மருத்துவ்மனை ஒன்றை துவங்கி, தம்சிறந்த சேவை மூலமாக வெகு விரைவிலேயே நற்பெயரும் பெற்றார். சிங்கப்பூரில், நேதாஜியின்  இந்திய தேசியப் படை (INA) குழுவினருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பின்னாளில் பெண்கள் பிரிவாக ஜான்சி இராணி படை உருவானது,

 

1941ல் சிங்கப்பூரில் ஜப்பானியர்களின் தாக்குதல் நடந்தது. இந்திய இராணுவத்தின் மிகப் பெரிய தளமான பஞ்சாப் தளம் ஜப்பானிய இராணுவத்திடம் சரணடைந்தது. இந்த நேரத்தில்தான், அந்த போர்த்தளவாடங்கள் மற்றும் படை வீரர்கள், தளபதிகள் ஆகியோரைக் கொண்டு உருவானதுதான் இந்திய தேசிய இராணுவம். 1943ல் பிரித்தானிய மற்றும் ஜப்பானிய போர் வீரர்களுக்கு மருத்துவ சேவை செய்தார். ஜூலை 2, 1943ல், சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர் வந்தார். இந்திய சுதந்திரப்படையின் கிளைக்குத் தலைவராக இருந்தவர் எல்லப்பா என்பவர். இலட்சுமி அவரிடம் தாமும் பொறுப்பேற்கும் ஆவலை வெளிப்படுத்திய அதே நேரம் நேதாஜியும் ஜான்சி இராணி படை பற்றி பேச்செழுப்ப, மறுநாளே லட்சுமி நேதாஜி அவர்களுடன் இரவு உணவிற்கு அழைக்கப்பட்டார். அங்கு படைக்குத் தலைமை ஏற்க் சம்மதம் தெரிவித்ததால் அடுத்த ஏற்பாடுகள் மளமளவென நடந்தேறின.  பெண்களுக்கே உரிய அழகான நீண்ட கூந்தலையும், சேலை கட்டும் வழமையையும் மற்றும் நட்பு, பாசம் என அனைத்தையும் நாட்டு நலனை மட்டுமே கருத்தில் கொண்டு துறக்க உறுதி மேற்கொண்டார். 1943ல் இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் பிரிவாக, ஜான்சி இராணி படை முழுமை பெற்றது. ஆசியாவிலேயே முதன் முதலில் பெண்களுக்காகவே துவங்கப்பட்டது என்ற பெரும் பேரும் பெற்றது. மகளிர் நல அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். ஆனாலும் ஜப்பானியர்கள் இதனை விரும்பவில்லை. இதற்கான அதிகப்படியான செலவுகள் தேவையற்றது என்று கருதினர். இலட்சுமி  படைத்தளபதியாக செயல்பட, ஆரம்பித்தபோது, சிங்கப்பூரிலிருந்து ஐநூறு பெண்கள் தேர்ந்தெடுக்கப்படனர். மலேசியா, கோலாலம்பூர் பகுதிகளிலிருந்தும் மகளிர் பலர் விருப்பத்துடன் பங்கு கொண்டனர். இதில் எம்.எஸ் தேவர், பாப்பாத்தி, ஆர். இலட்சுமி தேவி, தேவயானி, ஜானகி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

ஜான்சி இராணி படை சிங்கப்பூரிலிருந்து பர்மாவை நோக்கி பயணம் செய்து, தில்லியின் போர்முனைக்குத் தயாரானது. ஆனால் ஜான்சி இராணி படை இந்திய – பர்மிய எல்லையிலேயே கொரில்லாப் படையுடன் மோத வேண்டிவந்தது. அங்கேயே அவர்கள் நிறுத்தியும் வைக்கப்பட்டனர். போர்ச்சாதனங்களும், உணவுப் பண்டங்களும் வருகின்ற பாதை முடக்கப்பட்டதால் பெரும் அவதிக்குள்ளாயினர். காட்டிலேயே தங்கிக் கொண்டு அங்கு கிடைக்கும் பழ வகைகளை மட்டுமே உண்டு உயிர் வாழ வேண்டியதாயிற்று. ஒரு சில பழங்களில் இருந்த நச்சுத் தன்மை காரணமாக வாந்தி, பேதி ஏற்பட்டது. போரில் எதிரிகளை சமாளிக்க இயலாத நேதாஜி ஜான்சி இராணி படை பிடிபட்டு விடக்கூடாதே என்ற கவலையில், அதனை ம்லேசியாவிற்கு திரும்பிச் செல்ல ஆணை பிற்ப்பித்தபோதும், இலட்சுமி அதை ஏற்க மறுத்துவிட்டார். படையிலிருந்த பெண்களின் நோயை குணப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஷா எஸ்டேட் என்ற இடத்தில், இந்திய இராணுவம் இணைந்து நடத்தும் ஓர் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளித்தார். இந்த நேரத்தில் நேதாஜி திரும்ப வந்து இலட்சுமியை உடன் வருமாறு அழைக்க, அவர் மறுத்து விட்டார்.

 

அன்று இரவு நடந்த அசம்பாவிதத்தில் பலர் கொல்லப்பட்டனர். ஆம், மருத்துவமனையின் மீது செஞ்சிலுவை குறியீடு வைக்கப்பட்டிருந்தும், அந்த மருத்துவமனை மனிதாபிமானமற்ற முறையில் வான் குண்டு வீசி  தகர்க்கப்பட்டது. மருத்துவமனை தரை மட்டமாக ஆனாலும், சமயோசிதமாக விமானத்தைக் கண்டவுடன், பதுங்கு குழியில் மறைந்து கொண்டதால் உயிர் தப்பினார் இலட்சுமி. தளபதி எல்லபபா அதிகபட்சமான பாதிப்புக்குள்ளானார். தப்பிக்க முயன்று வெளியே வந்ததில் கொரில்லாப் படையினரால் தாக்கப்பட்டு மேலும் சிலர் கொல்லப்பட்டனர். இலட்சுமி போர்க் கைதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இந்திய இராணுவத்தினராகவோ, பர்மியராகவோ இல்லாததனால் அவரை எந்த பிரிவில் குற்றம் சுமத்துவது என்று தெரியாமல் விழித்தனர். சிறிது காலம் ஆங்கிலோ – பர்மியர் வசிக்கும் பகுதியில் அவரை வசிக்க வைத்தனர். இவருடைய நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய தோழி, கியான்புரி என்ற மருத்துவ்ருடன் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

 

இந்தியாவிலிருந்து மூன்று இதழியலாளர்கள் வந்து சேர, மே மாதம், 1945ல் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் அனைவரும் ஓரிட்த்தில் ஒன்றுகூடி, விடுதலை முழக்கம் எழுப்பியபோது அது பிரித்தானிய இராணுவத் தலைமையின் காதுகளை எட்டியது. இலட்சுமி உடனே கைது செய்யப்பட்டு கலாப் என்னும் இடத்தில் சிறை வைக்கப்பட்டு, பின்னர் எந்த விசாரணையும் இல்லாமல் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். கல்கத்தாவிற்கு வந்து சேர்ந்தவ்ர், நேதாஜியின் சகோதரியின் மகள் வீட்டில் கொண்டு சேர்க்கப்பட்டார்.

 

மார்ச் மாதம் 1947ல் லட்சுமி உடன் பணியாற்றிய பிரேம்குமார் சேகல் என்ற இந்திய தேசியப் படையின் முன்னனி தளபதியை மணந்தார். இருவரும் லாகூரிலிருந்து கான்பூருக்கு குடி பெயர்ந்தார்கள். அங்கு அவர் தம் மருத்துவப் பணியைத் தொடர்ந்தார். பாகிஸ்தானிலிருந்து வெள்ளமாக திரண்டு வந்த அகதிகளுக்காக தம் இடைவிடாத மருத்துவ சேவைகள் மூலம், இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினரின் நல்லிணக்கத்தை சம்பாதித்து வைத்திருந்தார். உலகிலேயே பெண்க்ள் படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பேற்றவர் என்ற பெருமை பெற்ற இலட்சுமி சேகல், ஜான்சி படைப்பிரிவின் இராணி என்றழைக்கப்பட்ட கர்ணலாக பணியாற்றிய வீராங்கனை.

 

1971ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, இராஜ்ய சபை உறுப்பினராக செயல்பட்டார். 1998ல் பதம விபூஷண் விருதும் வழங்கப் பெற்றார். 2002ம் ஆண்டில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், இடதுசாரி கட்சிகளின் சார்பில் வேட்பாளராக திரு ஏ.பி,ஜெ. அப்துல்கலாம் அவர்களை எதிர்த்து நின்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இவருடைய மகள் சுபாஷிணி அலி என்பவரும் கம்யூனிஸ்ட் தலைவராக இருப்பவர். கண்முன் நடக்கக்கூடிய அக்கிரமங்கள் எதுவாயினும் தயங்காமல் தட்டிக்கேட்கக் கூடிய வல்லமை நிறைந்தவர் இவர். தம்முடைய 92வது வயதிலும், சோர்ந்து உட்காராமல், கூட்டம் நிறைந்த தன்னுடைய மருத்துவமனைக்கு தினமும் காலையில் சென்று ஆலோசனை வழங்குவதை வழமையாகக் கொண்டிருந்தார்.

 

இவருடைய மொத்த வாழ்க்கையும் பல்வேறு சாதனைகளையும், மனிதநேய சேவைகளையும் தன்னகத்தேக் கொண்டது. தம் இறுதிக்காலம் வரை ஓயாத உழைப்பை அயராது வழங்கியவர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிசக் கட்சியில் வாழ்நாள் உறுப்பினராகவும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் உறுப்பினராகவும் வாழ்நாள் முழுவதும் சமுதாய நியாய தர்மங்கள் குறித்த கவனமும் கொண்டிருந்தார்.

 

லட்சுமி தம்முடைய இளமைக் காலங்களை நினைவுகூறும் போது, தீண்டாமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை தம் பாட்டிக்கு ஊட்டிய விதத்தை அழகாக்ச் சொல்கிறார். கேரள மாநிலத்தில் தம்முடைய பாட்டியின் இல்லத்தில் இருக்கும்போது சுற்று வட்டாரத்தில் காடுகளில் வசிக்கும், அவர்களின் நிழல் பட்டால்கூட அது தீட்டு என்ற அளவிற்கு தாழ்ந்த சாதி என்று குறிப்பிட்டு ஒதுக்கி வைப்பார்களாம். ஒரு முறை சின்னப் பெண்ணான லட்சுமி அந்த மலைசாதி இனத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் கையைப் பிடித்து கூட்டிவந்து விளையாடியிருக்கிறார். பாட்டிக்கோ கோபம் உச்சத்தில் ஏற, லட்சுமி அதை சற்றும் சட்டை செய்யாமல் உறுதியாக இருந்தாராம்.

 

லட்சுமி தென் பகுதிகளில் மக்கள், அரசியல் சுதந்திரம் மட்டுமல்லாமல், தீண்டாமை ஒழிப்பு, பால்ய விவாகம் மற்றும் வரதட்சணை கொடுமை போன்ற அனைத்தையும் இணைத்து எப்படி போராடுகிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்து  வ்ருவதில் ஆர்வம் கொண்டிருந்தார். தன்னைச் சந்திப்பவர்கள் அனைவரையும் இயன்றவரை மகிழ்ச்சியடையச் செய்வதும், அவர்களை உற்சாகமடையச் செய்வதும் அவருடைய பிறவிக் குணமாக இருந்துள்ளது. உடன் பணியாற்றுபவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. உலக மகளிர் அனைவரும் பெருமைபடும் வகையில் வாழ்ந்து ஏனையோருக்கும் வழிகாட்டியாக இருந்தவர், ஜூலை 19, 2012ம் ஆண்டு, தம்முடைய 97வது வயதில் இப்பூவுலகை நீத்தார். தாம் இறந்த பின்பும் தம்முடைய உடலும் மக்களுக்கான சேவையைச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்குடன் தம் உடலை மருத்துவக் கல்லூரிக்கும், கண்களை பார்வையற்றவருக்கு வழங்குமாறும் தம்முடைய உயிலில் எழுதி வைத்துவிட்டுச் சென்ற உத்தமி இலட்சுமி சேகல் அம்மையாரை பெண் இனம் உள்ளவரை இந்த உலகம் மறவாது என்பது திண்ணம். .

 

 

Series Navigation2014 ஆண்டில் ஏவப்படும் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 வக்கிரக்கோள் மண்ணெடுத்துப் பூமிக்கு மீளும்காலம்….!
author

பவள சங்கரி

Similar Posts

8 Comments

  1. Avatar
    punaipeyaril says:

    இலட்சுமி சேகல் அம்மையாரை பெண் இனம் உள்ளவரை இந்த உலகம் மறவாது என்பது திண்ணம்— அப்படியில்லீங்க… பெண்ணினம் அழிந்தாலும் ஆணினம் அழிந்தாலும் – கூகுள் உள்ளவரை… உலகம் இவரை மறவாது. எப்படியோ, இந்திரா விஷயத்தில் செய்த பாவத்திற்கு இது சரியான பிராயசித்தம். நன்கு இருந்தது இந்த பதிவு…

  2. Avatar
    Dr.G.Johnson says:

    A very informative, inspiring and motivating aricle on Capt. Laxmi who has servad in Singapore and Malaya as a doctor and also as captain of the Jansi Rani Regiment of the INA in Singapore. She has been well appreciated by Netaji during the struggle for India’s indxependence. She has been legend in her days.Thanks to Pavala for reminding us about this extrsaordinary lady…Dr.G.Johnson.

  3. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் திரு பன்னீர்செல்வம்,

    தங்களுடைய வாசிப்பிற்கு நன்றி. அம்மையாருக்கு என்னுடைய வணக்கங்களும் உரித்தாகுக.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply to ANURADHA S Cancel reply

Your email address will not be published. Required fields are marked *