ஓய்வு தந்த ஆய்வு

This entry is part 31 of 37 in the series 27 நவம்பர் 2011

தனது பணி ஓய்வை இந்த ஊருக்கும் உலகத்திற்கும் யார் டமாரம் போட்டுச் சொன்னார்கள் என்று சபேசனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
எப்படி இது எல்லாருக்கும் தெரிந்தது? அப்படி அப்படியே பேச்சோடு பேச்சாகப் பரவி விடுமோ? யாரேனும் ஒருவர் சொல்ல, அவர் இன்னொருத்தருக்குச் சொல்ல…அவர் வேறொருவருக்கு என்று பரவியிருக்குமோ? ஒரு மனிதன் ஓய்வு பெறுவதில்தான் இந்த மக்களுக்கு எத்தனை மகிழ்ச்சி?
நானே தேவையில்லாமல் மற்றவர்களிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றி அடக்கி வாசிக்கிறேன். ஆனாலும் ஏனோ அது வெளிவந்து விடுகிறதே!
“என்ன ஸார், எப்டியிருக்கீங்க? இன்னிக்கென்ன லீவா?”
“இன்னிக்கென்ன லீவு? தெனமும் லீவுதான்…”
“என்ன சொல்றீங்க? லாங் லீவு போட்டுட்டீங்களா? அல்லது மெடிக்கல் லீவா?”
“அட, அதெல்லாம் இல்ல ஸார், ரிடையர்ட் ஆயாச்சுன்னு சொல்ல வந்தேன்…”
“ஓ! அப்டியா கதை…!! அதான் இப்டி ஃப்ரீயா கிளம்பி வந்திட்டீங்களா? என்னடா, ஸாரு பன்னெண்டு மணி வாக்குல இங்க இருக்காரேன்னு பார்த்தேன்…எப்போ? இந்த மார்ச்சோடயா?”
“மார்ச்சாவது ஒண்ணாவது? டிசம்பர்லயே எல்லாம் ஆயாச்சு….கழட்டி விட்டு நாலஞ்சு மாசம் முடியப் போகுது…”
எப்படியாவது இந்தப் பேச்சு வந்து விடுகிறது. எப்டியிருக்கீங்க? நல்லாயிருக்கீங்களா? என்பதுதானே கேட்கப்படும் கேள்விகள். அதற்கு மட்டும் பதில் சொன்னால் போதாதா? வலிய இது வந்து ஏன் விழுகிறது? இவரையே இன்னொரு முறை எங்காவது சந்திக்க நேர்ந்தால், ‘அன்னைக்கு உங்களைப் பார்த்த போது சொல்லலையே’ என்று விட்டால்? பிறகு அதற்கு ஒரு அசட்டுச் சிரிப்பு சிரிக்க வேண்டும். ஆனது ஆயாயிற்று. தெரிந்தால் என்ன? கௌரவக் குறைச்சலா? அப்படியொன்றுமில்லை. ஆனால்…
ஓய்வு பெற்றவன் என்றாலே அடுத்தாற்போல் சாகக் கிடப்பவன், கிழவன், வயசாகிப் போனவன், இனி உபயோகப்படாதவன், இவனோடு என்ன பேச்சு? என்பதாக ஒரு நிச்சயமற்ற சற்றே அலட்சியம் பொருந்திய நிலை நிலவுவதை யாரேனும் மறுக்க முடியுமா? நாம் சர்வீஸில் இருக்கும் போதே பார்த்ததுதானே!
ஆனால், தான் யாரையும் அவ்வாறு நடத்தியதில்லை என்றுதான் தோன்றியது. வேண்டும் அளவுக்குப் பேசி, வந்தவருக்குக் காபி, டீ வாங்கிக் கொடுத்து உபசரித்துத்தான் அனுப்பியிருக்கிறோம். என்ன ஒரு இது என்றால் அம்மாதிரி ஓய்வு பெற்றவர்களிடம் உள்ள ஒரு குறைபாடு வந்த இடத்தில் வந்தமா, பார்த்தமா, போனமா என்று இல்லாமல் பழியாய் அமர்ந்து கிடப்பது! ரொம்பவும் பொறுப்பாக இருந்து வேலை பார்த்தவர்கள் கூட, ஓய்வு பெற்ற நிலையில், இன்று அடுத்தவர்கள் வேலையை, அதன் அழுத்தத்தை உணர வேண்டாமா? பிடித்து வைத்த மண்ணாக இப்படியா உட்கார்ந்து கொண்டிருப்பது? அல்லது சூழலை உணராமல் இப்படியா சள சளவென்று பேசிக் கொண்டிருப்பது? யாரும் தன் பேச்சைக் காதில் வாங்கவில்லை என்று உறுதியாய்த் தெரியும் வரையா பேசித் தீர்ப்பது?
ஒரு வழியாப் போய்ச் சேர்ந்தான்யா இந்த ஆளு! இனி இவன் தொல்லை இல்ல பாருங்க…என்பதாகவும், அப்பாடா ஒரு பெரிய அரிப்பு விட்டுச்சு…என்பதாகவும் கூட நினைக்கக் கூடும். எல்லோரும் அவரவர் மனதில் இருப்பதைச் சொல்லிக் கொண்டா திரிவார்கள்? இம்மாதிரி வேறு வேறு சந்தோஷங்;களின் மூலமாகத்தாதான் வெளிப்படுத்துவார்கள்.
ஒருவன் பணியிலிருந்து ஓய்வு பெறுவது என்பது அவன் கடைசியாக வேலை பார்த்த அலுவலகத்தில் இருந்தவர்க்கும், அது நாள்வரை அவன் அலுவலக ரீதியாகப் பழகியவர்களுக்கும் ஒரு வகையில் திருப்தியானதாகவும், ஒரு வகையில் சற்று நஷ்டமானதாகவும், வௌ;வேறு விதமாகப் பலரும் உணரக்கூடும்.
யார் இருந்தால் என்ன போனால் என்ன, நடக்கிற வேலை யாரேனும் ஒருவரை வைத்து நடந்துகொண்டேதான் இருக்கும். அதில் எந்தத் தடையும் வந்து விடப்போவதில்லைதான். நாம்தான் இத்தனை நாள் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தோம் என்று நினைப்பதெல்லாம் சுத்தக் கத்துக்குட்டித்தனம். எதுவும் யாருக்காகவும் நின்று விடப்போவதில்லை. ஒருத்தன் போனால் இன்னொருத்தன். அவ்வளவே!
ஒரு குடு;ம்பத்திலேயே ஒருவன் மண்டையைப் போட்டால் அந்தக் குடும்பம் அத்தோடு ஸ்தம்பித்தா போகிறது? ஏதேனும் ஒரு வழியில் தென்னித் தெறித்து வெளி வருவதில்லையா? ஒருவனின் சாவே சமாளிக்கக் கூடியதாக இருக்குமென்றால், ஒரு ஆள் ஓய்வு பெறுவதும், அந்த இடத்தில் வேறொருவன் வந்து உட்காருவதும் என்ன பெரிய தடுமாற்றமா? எல்லாம் நாமாக நினைத்துக் கொள்வதுதான். என்ன செய்வார்களோ ஏது செய்வார்களோ என்று?
“உங்களமாதிரியெல்லாம் இனிமே யார் ஸார் இருக்கப் போறாங்க? இனிமேல்லாம் தெனமும் கஷ்டம்தான் ஸார்…”
எல்லோரும் சொல்லும் சம்பிரதாயமான வார்த்தைகள். ஒருவனை, அவன் பணிகளைப் பெருமைப் படுத்துவதற்கான பாராட்டுச் சொற்கள். மெப்பனையான, மேல் போக்கான வார்த்தைகள் என்றும் சொல்லலாம். அப்படி ரெண்டு பேர் இருக்கத்தானே செய்வார்கள்!
ஆனாலும் ஓய்வு பெற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் இத்தனை பேருக்குத் தெரிந்து விட்டதே! அதற்கு முன்பெல்லாம் கூடத் தான் வெளியில் செல்கையில் இவ்வளவு பேர்கள் கண்ணி;ல் பட்டதேயில்லை. இப்பொழுதென்னடாவென்றால் ஆட்கள் சகட்டு மேனிக்குப் பார்வையில் பட்டுக்கொண்டே அல்லவா இருக்கிறார்கள்?
“என்ன ஸார் ரிடையர்ட் ஆயாச்சு போலிருக்கு? பெனிஃபிட்ஸ் எல்லாம் வாங்கியாச்சா? ஆளப் பார்த்தா அப்படி மதிக்கவே முடியலையே ஸார்?”
‘எந்த மதிப்பு என்று சொல்கிறார்? மதிச்சு மரியாதை பண்ற ஆளாத் தெரியலைங்கிறாரா? வயசு மதிக்க முடிலைங்கிறாரா?’ (எல்லாவற்றிலும் இப்படி விபரீதமான ரெண்டு எண்ணங்கள் வந்து தொலைக்கின்றன, நான் என்ன செய்வது – மனது நினைத்து வைக்கிறதே?)
“என்ன சொல்றீங்க…?”
“அம்பத்தெட்டான ஆள் மாதிரியே தெரிலயே?” நாற்பத்தேழு, நாற்பத்தெட்டுதான் மதிக்கலாம். அம்பது கூட நினைக்க முடியாது ஸார்…”
அது என்னவோ தெரியவில்லை. பார்ப்பவர்களில் பாதிப் பேர் இப்படிச் சொல்லி விட்டார்கள். கண்ணாடிக்கு முன் வந்து வந்து தன்னைப் பார்த்துக் கொண்டார் சபேசன். என்னதான் முடிக்குக் கறுப்பு அடித்தாலும், முகம் காட்டிக் கொடுத்து விடாதா? தலைக்குப் போட்ட கறுப்பாவது ஒரு மாதம் கூடி நிற்கிறது. ஆனால் பாழாய்ப் போன இந்த மீசையைத் தினசரியல்லவா கவனிக்க வேண்டியிருக்கிறது? அதென்னய்யா…தூங்கி எழுந்தால் இப்படியா வெள்ளை தட்டும்? முடியின் வேர்ப் பகுதியில் வெண்மை துல்லியமாக நீட்டி உறி…உறி…உறி… என்று பார்த்து இளிக்கிறதே!.
சரி, அது கிடக்கட்டும், போதுமான அறிவு முதிர்ச்சி வந்திருக்கிறதா நமக்கு? அதை நாமே எப்படிச் சொல்வது? மற்றவனல்லவா சொல்ல வேண்டும்? அறிவு முதிர்ச்சி என்றால் பரந்த உலகாயத அறிவு என்று பொருளா அல்லது போதிய மனிதப் பக்குவத்தை அப்படிச் சொல்கிறார்களா?
எது எப்படியிருந்தால் எவனுக்கென்னய்யா? எந்தளவுக்கு அது எனக்குப் பயன்படுகிறது என்பதை வைத்துத்தானே எல்லாமும்? நான் அறிவாளியா, மடையனா அல்லது மூடனா என்பதெல்லாம் யாருக்குத் தெரிந்தாக வேண்டும்? யாருக்கு நான் நிரூபிக்க வேண்டும்? என்னளவில் என்னை நான் உணர்ந்தேனென்றால் அதுவே போதுமானது. அவ்வளவுதானே? மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் என் வாழ்க்கையை நான் ஓட்டுகிறேனா? போதும். அதுவே பெரியதாயிற்றே!!
ஓய்வு பெற்றாலும் பெற்றோம்…என்னென்னவோ நினைப்பெல்லாம் வந்து விட்டது.
“இந்தாங்கோ…இந்தக் காயைக் கொஞ்சம் நறுக்கிக் கொடுங்கோ…”
“என்னடீ இது…எப்பயும் இல்லாத வழக்கமா காயை நறுக்கச் சொல்ற?”
“சும்மாத்தான இருக்கேள்…நறுக்கித் தரப்படாதா?”
“ஏய், இந்த பாரு…முழுசா ஐம்பத்தெட்டு முடியறவரைக்கும்; வேலை பார்த்திட்டு, வீட்டுக்குப் போடான்னு சொன்ன பிறகு வந்திருக்கேனாக்கும்…நானா வி.ஆர்..எஸ் கொடுத்திட்டு வந்து வீட்டுல தண்டத்துக்கு உட்கார்ந்திருக்கேன்னு நினைக்காதே…”
“ஒங்களை யார் அதெல்லாம் சொன்னா? கொஞ்சம் காய்கறி நறுக்கித் தாங்கன்னு சொன்னா…நீங்களா எதை எதையெல்லாமோ பேசிக்கிறீங்க…வேண்டாம்…இப்டிக் கொடுங்க…நானே நறுக்கிக்கிறேன்…”
“நறுக்கித் தர்றேண்டி…அதுக்குள்ளேன் முறுக்கிக்காதே….நீள நீளமா நறுக்கணுமா…பொடிப் பொடியா நறுக்கணுமா?”
“சாம்பாருக்குப் போடறதானாத்தான் நீள நீளமா நறுக்குவா…கறிக்கு, பொடிப் பொடியாத்தான் நறுக்கணும்…”
“அப்டிச் சொல்லு…சொன்னாத்தான புரியும்…எனக்கென்ன ஜோஸ்யமா தெரியும்…?”
“வருஷம் ப+ராவும் சாப்டேளே…இது கூடவா தெரியாது…”
தான் ஓய்வு பெற்று விட்டதாலேயே இப்படி ஒன்றிரண்டு வார்த்தைகள் கூட வருகிறதோ என்றே தோன்றியது சபேசனுக்கு. அது தன் மனைவி தன்னிடம் எடுத்துக் கொள்ளும் உரிமை என்று ஏன் தோன்ற மாட்டேனென்கிறது?
தான் ஓய்வு பெற்று விட்டதை மற்றவர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ, தான் சதா நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது என்னவோ மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கிறது. கடைசி நாள் வரை கூட அந்த எண்ணம் உறுதிப்படவில்லை சபேசனுக்கு. அதுதான் உண்மை. நாலரை மணிக்கு ஆர்டரைப் பார்த்ததும்தான் இனி இந்த ஆபீஸ் நமக்கில்லை என்று மனதில் ஒரு விலகல் தோன்றியது. விலகல் என்பதை விட வெறுமை என்றுதான் சொல்ல வேண்டும். பற்றற்ற வெறுமை. எவனால் முற்றிலுமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியுமோ, அவனால்தான் முழுமையாக விலகவும் முடியும். தாமரை இலைத் தண்ணீர் போல!
“நீங்க பாருங்களேன்…அறுபதுன்னு வருதா இல்லையா பாருங்க…அடிச்சுச் சொல்றேன்…கண்டிப்பா வருது. எழுதி வச்சிக்குங்க…”
“தெரியாதா உங்களுக்கு…நம்ம அசோசியேஷன்ல கேட்டிருக்கோம்ல…கிடைச்சிடும்…இந்த வருஷமும், அடுத்த ரெண்டு வருஷங்களும் ஏகப்பட்ட பேர் பணி ஓய்வு பெறுறாங்களாம்…பெனிஃபிட்ஸ் அத்தனையும் கொடுக்கிறதுக்கு பணம் பத்தாதாம்…அதனால ரிடையர்ட்மென்ட் ஏஜ்ஜை அறுபதாக்குறாங்க….”
“நீங்கள்லாம் இன்னும் ரெண்டு வருஷம் வேலை பார்க்கலாம் ஸார்…நல்லாத்தான இருக்கீங்க…உங்களை மாதிரி அனுபவப்பட்டவங்களெல்லாம் போயிட்டீங்கன்னா, நாங்கள்லாம் எங்க போறது?”
(அது சரி! என்னை மாதிரிக் கேனக் கிறுக்கன் இருந்தாத்தானே நல்லா வேலை வாங்க முடியும்! பேசாம பைலைக் கொண்டு என் டேபிள்ல வச்சா ஆச்சு…மத்ததெல்லாம்தான் நான் பார்த்துக்குவேனே! இப்டி பார்த்துப் பார்த்துத்தானே முப்பத்து மூணு வருஷ சர்வீஸையும் ஓட்டியிருக்கேன்…ஆபீசு, வீடு! ஆபீசு, வீடு…!ஆபீசு, வீடு…! வேறென்ன தெரியும் எனக்கு?)
“எந்த விசேஷத்துக்காவது வந்திருக்கியாடா நீ? எப்போ பத்;திரிகை அனுப்பிச்சாலும் ஆடிட், இல்லாட்டா இன்ஸ்பெக்ஷன்னு சொல்லுவே…வரமாட்டே…ஊர் ஒலகத்துல வேறே எவனும் வேலை பார்க்கல பாரு…நீ ஒருத்தன்தான் ஆபீஸ்ல வேலை பார்க்கிறியா? போடீ…போ! ஒன் வீட்டுலயும் நாளைக்கு ஏதாச்சும் ஃபங்ஷன், அது இதுன்னு நடக்குமில்ல…அப்ப வருவேல்ல பத்திரிகையத் தூக்கிட்டு, பாரு அன்னைக்கு வச்சிக்கிறோம்…நாங்களும் வரமாட்டோம்டீ….பழிக்குப் பழி வாங்குறோமா இல்லையா பாரு…”
“இத்தனை வருஷம் சர்வீஸ் போட்டு என்ன புண்ணியம். ஒரு தடவையாச்சும் எல்.டி.சி போட்டுண்டு என்னை டூர் கூட்டிட்டுப் போயிருக்கீங்களா? அத்தனையும் வீண். சரி லீவு போட்டுட்டாச்சும் எனக்கு உதவியா இருந்திருக்கீங்களா? உங்களுக்குன்னு அனுமதிச்சிருக்கிற லீவைக் கூட நீங்க எடுக்கலை. இதனால யாருக்கு என்ன பலன்?”
“எனக்குத்தாண்டீ பலன்…எனக்குத்தான்….”
“என்ன பலன்? இல்ல என்ன பலன்னு கேட்கிறேன்?;….விடுப்பே எடுக்காத கடமையாளர்னு சொல்லி மாலையைப் போட்டு, ஏற்கனவே இருக்கிற பலன்களோட அந்த நாட்களையும் சேர்த்துண்டு காசாக்கித் தந்தாளா? போனது போனதுதானே? ஒரு தடவை உடம்புக்கு முடியாமே பத்துப் பன்னெண்டு நாள் காய்ச்சல்ல கிடந்தேனே நான்…ஞாபகமாவது இருக்கா? இல்ல அதுவும் மறந்து போச்சா? அப்பவாவது லீவு போட்டேளா? அப்பவும் நாந்தானே சமைச்சு வச்சேன்! ஒரே ஒரு நாளைக்கு Nஉறாட்டல்ல சாப்டேள்…மறு நாளைக்கு வயித்தப் பிடிச்சிண்டு உட்கார்ந்தாச்சு…வெறுமே வேட்டியக் கட்டிண்டு, சதா கக்கூசுக்குப் போயிட்டு வந்திண்டிருந்தேள்…அதுதானே கண்ட பலன்….”
“என்ன சொல்கிறாள் இவள்? அப்படியானால் நான் சம்பாதித்த நல்ல பெயரெல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா? எதுவானாலும் நான் ஒருத்தன் இருக்கிறேன் என்று ஓடி வந்தார்களே, அது பொய்யாகுமா?”
“ஓடி வந்தாங்களா? எங்கே, இப்ப வரச் சொல்லு பார்ப்போம்….போய்யா…நீ ஒரு விகல்பமில்லாத ஆளு…ஒருத்தன் போனா ஒம்பது பேர் இருக்கான்யா…நாம இருந்தாத்தான் நடக்கும்னு நினைச்சுக்கிறதெல்லாம் சுத்த அபத்தம்…யார் இருந்தாலும் இல்லாட்டியும் எப்படியாச்சும் நடக்குமாக்கும்…நீதான் நினைச்சுக்கிடணும்…நாமதான் தூக்கி நட்டமா நிப்பாட்டினோம்னு….இம்புட்டுப் பேசறேல்ல…இப்ப வேண்ணாப் போய்ப் பாரேன்…பழைய மரியாதை இருக்கான்னு…ஒரு நாளைக்குப் போயிட்டு மறுநாளைக்கும் போயி நில்லு…வண்டவாளம் தெரியும்…உனக்கு மட்டுமில்லய்யா…அங்க இருக்கிற ஒவ்வொருத்தனும் ஒரு நாளைக்கு ஓய்வு பெறத்தான் போறான்…எல்லாருக்கும் நிலைமை அதுதான்…அதப் புரிஞ்சிக்க…”
சபேசனுக்குப் பெருமையாகத்தான் இருந்தது. இன்றுவரை அவர் ஆபீஸ் பக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை. ஒன்றிரண்டு பணியாளர்களை வெளியிலே பார்க்கத்தான் செய்தார். எல்லாரும் நல்லாயிருக்காங்களா? என்று கேட்டதோடு சரி.
“ஆபீசுக்கு வாங்க ஸார்…என்ன ஸார் வரவே மாட்டேங்கிறீங்க…? வந்து எல்லாரையும் பாருங்க….வாங்க ஸார்….டயம்தான் இருக்கும்ல…வாங்க…அந்தப் பக்கம் வரச்சேயெல்லாம் அப்டியே தலைய நீட்டுங்க…”
அந்த வாங்க, வாங்க என்ற சொல்லிலே அதீதக் குளிர்ச்சியை உணர்ந்தார் சபேசன்.
ஒரு முறை போய்விட்டு வந்தால், அடுத்தாற்போல் போகத் தோன்றுமோ? என்ன இருந்தாலும் தான் ரொம்பவும் N;நசித்த ஒரு அலுவலகம். அன்பு கொண்ட அற்புதமான பணியாளர்கள்.
அந்த ஒரு முறை, முதல் முறை என்று போய் வருவதிலேயே ஏதேனும் கசந்து போனால்? என்ன இது விபரீதமான எண்ணம்? இந்தப் பணிஓய்வுதான் என்னவெல்லாம் சிந்தனைகளைக் கிளறி விட்டு விட்டது?
“வர்ற வழிக்கு சந்தைல ஃப்ரெஷ்ஷா கீரை வாங்கிட்டு வரச் சொன்னனே, மறந்திட்டீங்களா?”
அப்பொழுதுதான் கையில் கைக்குட்டை போல் மடித்து வைத்திருந்த அந்த மஞ்சள் பையையே பார்த்தார் சபேசன். நல்லவேளை. சந்தை அருகில் வரும்போது ஞாபகம் வந்து விட்டது. இல்லையென்றால் திரும்பவும் புறப்பட்டு வர வேண்டும்.
இன்றுவரை ஓய்வு பெற்ற பின்னால் இந்த நடைப் பயிற்சி ஒன்றுதான் ஒழுங்காக நடந்தேறுகிறது.
“ஸார்..சபேசன் ஸார் வாங்க…வாங்க…என்ன வாக்கிங் போயிட்டு வர்றீங்களா?” – ஓடி வந்து கையை வளைத்துக் கட்டிக் கொண்டார் முருகானந்தம். அந்தச் சந்தைக்குப் பின்னாலேயே குடியிருக்கிறவர். என் பையனை அருகிலுள்ள பள்ளியில் முதன் முதலாகச் சேர்க்க வந்தபோது பழக்கமானவர். அப்பொழுதிலிருந்து பழக்கம் இருவருக்கும்.
“நாளைலேர்ந்து நாம ரெண்டு பேரும் சேர்ந்து போறோம் வாக்கிங். கரெக்டா அஞ்சரைக்கு இந்தச் சந்தை வாசல்ல நிக்கறேன்….நீங்க வர்ற டயமும் என் டயமும் ஒத்து வரும்னு தோணுது. சரிதானா? என்னடா ஓய்வு பெற்றுட்டமே, வயசாயிடுச்சே, உடம்பு முடியல்லியேன்னெல்லாம் கன்னா பின்னான்னு கண்டதையும் நினைக்காதீங்க….இனிமேத்தான் சுதந்திரமா, சுறு சுறுப்பா, சந்தோஷமா இருக்கணும்…” – கையைக் கெட்டியாகப் பிடித்துக் குலுக்கிக் கொண்டே “வாங்க…அதோ அங்க ஒரு அம்மா கீரை வச்சிருக்கில்ல…அங்க போய் வாங்குவோம்…நல்லா இளஸ்ஸா இருக்கும் அவுங்ககிட்ட…பாலாக் கீரைன்னு ஒண்ணு வச்சிருப்பாங்க…வாங்கிட்டுப் போங்க…அந்தக் கடையைப் பார்த்து வச்சிக்குங்க…பி உறாப்பி…நடங்க” – உற்சாகமாகச் சொல்லியவாறே அவரை விறு விறு வென்று இழுத்துக் கொண்டு முன்னேறினார் முருகானந்தம்.
அவர் இழுத்த இழுப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் தொடர்ந்தார் சிற்சபேசன் என்கிற நம் சபேசன். அது வரை அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்த சோர்வும், ஆய்வும் கலந்த எண்ணங்களையெல்லாம் துடைத்தெறிந்தது போலிருந்தது அந்தச் சில நிமிடங்களில். நண்பர்; சொன்னதுபோல் ஓய்வு பெற்றதைப் பற்றியெல்லாம் இஷ்டத்துக்கு நினைத்து நினைத்துக் குழம்பிப் போகாமல், நாளையிலிருந்து அவருக்குச் சமமாக ஈடு கொடுத்து முன்னேறி நானும் உங்களைப் போலத்தான் என்று முனைப்பாக வேண்டும் என்கிற துடிப்பான எண்ணம் அப்போதே அவர் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது.
————————————

Series Navigationமனக் குப்பைபாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா..!
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    லறீனா அப்துல் ஹக் says:

    வித்தியாசமான நல்லதொரு கதையைப் படித்த நிறைவு. நன்றி.

Leave a Reply to உஷாதீபன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *