ஓரிடம்நோக்கி…

This entry is part 29 of 38 in the series 10 ஜூலை 2011

 நுழைவதற்குமுன்
ஒரு சிறு குறிப்பு:

            உங்களுக்கிருக்கும் அனேக முக்கிய வேலைகளை ஒத்திவைத்து விட்டு இந்தக் கதையை வாசிக்க புகுந்ததற்கு அனேக வணக்கங்கள்; இன்று அதிகாலை ஏறக்குறைய ஒரே நேரத்தில் உலகத்தின் பல பகுதிகளிலும் நிகழும் சம்பவங்கள் கீழே விவரிக்கப்பற்றிருக்கின்றன. கதை மாந்தர்கள் யாவரும் அவரவரின் தாய் மொழிகளில் தான் உரையாடிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தக் கதையை எழுதுகிறவனுக்கு அவனுடைய தாய் மொழியே தடுமாற்றமென்பதால் அவனுக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் விவரித்துக் கொண்டு போகிறான் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டு தொடர்ந்து வாசியுங்கள்.நன்றி!

 

இந்தியா: லக்னோவிற்குஅருகில்உள்ளஒருகிராமத்தில்……

ரபீந்தர் சிங்கின் கண்களிலிருந்து தூக்கம் ஒரு பட்டாம்பூச்சியாய் பறந்து போனது. கொஞ்ச நேரம் அப்படியே அசைவில்லாமல் படுத்துக் கிடந்தான். அப்புறம் இமைகளைத் திறக்காமலேயே எழும்பி, கைகளால் தடவித் தடவி நடந்து, அறையின் ஒரு மூலைக்குப் போய் கை குவித்து மனசுக்குள் ஏதோ முனங்கியபடி வணங்கி  விட்டு மெல்ல கண்களைத் திறந்தான்.

அங்கு பதினேழு வயது மதிக்கத் தகுந்த ஒரு சிறுவன் போட்டோவில் மாலை அணிவிக்கப் பட்டு எப்போதும் எரியும் சிறிய மின்விளக்கு வெளிச்சத்தில் சிரித்துக்கொண்டிருந்தான். அந்தச் சிரிப்பிலேயே உலகம் முழுமைக்குமான சினேகமும் கருணையும் நிரம்பி வழிவதாய் இருந்தது. ரபீந்தருக்கும் அந்த போட்டோவில் இருக்கும் சிறுவனின் வயது தானிருக்கும். அவனின்  உலகம் கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை கூட வண்ணங்களற்று ஒரே இருட்டாய்த் தானிருந்தது. அவன் விழிகள் ஒளி பெற்றது அந்த போட்டாவிலிருக்கும் சிறுவனால் தான்.

அவசரமாய் அந்த அறைக்குள் நுழைந்த ரபீந்தரின் அம்மா , “இன்னும் நீ இங்கு தான் இருக்கிறாயா? அங்கு அப்பா சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்; நாம் இன்றைக்கு திருக்கழுக்குன்றம் போக வேண்டுமில்லையா? நேரமாகிறது மகனே……” என்றபடி அவனை விரட்டினாள். அவள் அப்போதே குளித்து தலை உலர்த்தி வெளியில் கிளம்புவதற்கான ஆடைகள் உடுத்தித் தயாராக இருந்தாள்.

“நன்றாக ஞாபகம் இருக்கிறது அம்மா; மறக்க முடியுமா இதையெல்லாம்? இதோ பதினைந்து நிமிடங்களில் தயாராகிக் கிளம்பி விடுவேன்! கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்….” என்றபடி அவசரமாய் வெளியேறினான் ரபீந்தர் சிங்.

 

ஐக்கியஅரபுநாடுகளின்கூட்டமைப்பிலுள்ளஅபுதாபியில்……

“வாப்பா, நேரமாகிக்கிட்டே இருக்கு; இன்னும் டாக்ஸி வரலியே! சாலையில பாருங்க எவ்வளவு டாக்ஸிகள் ஓடுது…. இதுகள்ல ஒண்ண கை காட்டி ஏறிப் போய்க்கிட்டே இருக்கலாம்; நாம  எதுக்காக உங்க நண்பரோட டாக்ஸிக்காக அனாவசியமா காத்திருக்கனும்…..” படபடத்தாள் ஸைராபானு. கான்ஷாகிப் கொஞ்சமும் பதட்டப்படாமல் சொன்னார்.

“அவசரப்படாத பானு…நமக்கு  விமானத்துக்கு இன்னும் நெறைய நேரமிருக்கு; நண்பர்  கண்டிப்பா சரியான நேரத்துக்கு வந்துடுவார்…..”

“நாம இந்தியாவுக்குப் போறோம் வாப்பா; இமிக்ரேஷன் கிளியரன்ஸ் அது இதுன்னுநெறைய பார்மாலிட்டிஸ் இருக்கும்…நீங்கன்னா  இவ்வளவு சாவகாசமா இருக்கீங்க…. டிராபிக்ஜாம் தொடங்கிருச்சுன்னா அப்புறம் நாம ஏரோடிராம் போய்ச் சேர்ந்த மாதிரி தான்…”

கான்ஷாகிப் சிரித்துக் கொண்டார். பானுவிற்கு பதினைந்து வயது தான் ஆகிறது.அதற்குள் இத்தனை சூட்டிகை. எதிலும் அவசரம் தான். பொறுமை என்பதே மருந்துக்கும் இருப்பதில்லை. திடீரென்று ஜவஹர்நிஸா பீவியின் ஞாபகம் வந்தது அவருக்கு. பானுவின் அம்மா; இரண்டு வருஷங்களுக்கு முன்பு ஏதோ பெயர் தெரியாத பெரிய வியாதியில் விழுந்து இந்தியாவிற்குக் கொண்டு போய், டெல்லியின் பெரிய மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்த்தும், காப்பாற்ற முடியாமல் செத்துப் போனாள்.

நோய் மட்டும் அவளைக் கொல்லவில்லை; அவருடைய இரண்டு கிட்னிகளும் பழுதாகி, டயாலிசஸில் மட்டுமே அவர் உயிர்த்திருந்த நாட்களில், எங்கே அவர் தன்னை விட்டு சீக்கிரம் போய் விடுவாரோ என்ற மனக்கவலையிலேயே மறுகி, தன்னைக் கொஞ்சமும் பராமரித்துக் கொள்ளாமல் அதனாலேயே நோய் முற்றி அவள் முந்திக் கொண்டாள். ஆனால் அவருக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப் பட்டு இப்போது நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். அவள் உயிரோடிருந்திருந்தால் எத்தனை சந்தோஷப் பட்டிருப்பாள்! அல்லா தான் கொஞ்சமும் கருணை இல்லாமல்  அதற்குள் அவசர அவசரமாய் அவளைத் தன்னிடம் அழைத்துக் கொண்டாரே!

பானு அவரின் நினைவைக் கலைத்தாள். “வாப்பா என்ன யோசனை…..எதுக்கும் இன்னொரு தடவை உங்க நண்பருக்கு போன் பண்ணி எங்க இருக்காருன்னு விசாரிங்க …அவரு இன்னும் வீட்டுல தூங்கிக் கிட்டு இருக்கப் போறார்…” மகளின் நச்சரிப்பிற்கு ஆற்ற மாட்டாமல் கான்ஷாகிப் தன்னுடைய  கைத் தொலைபேசியில் நண்பரைத் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்த போது, முத்துராமனின்  டாக்ஸி அவர்களுக்கருகில்  வந்து நின்றது.

“என்ன அங்கிள், இவ்வளவு லேட் பண்ணீட்டீங்க…..” என்று சலித்துக் கொண்டபடி டாக்ஸிக்குள் ஏறினாள் பானு. கான்ஷாகிப் எதுவும் சொல்லவில்லை. உரிய நேரத்திற்குள் விமான நிலையத்திற்குப் போய் விட முடியும் என்பது அவருக்குத் தெரியும். அவர் இந்த டாக்ஸியை ஏற்பாடு செய்ததற்கு டாக்ஸி ஓட்டுநர் தன்னுடைய நண்பர் என்பது மட்டுமல்ல காரணம்; முத்துராமன்  தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் அவன் மூலம் சென்னையில் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருந்தது.

“ஸாப். உங்கள் விமானம் சென்னையில் இறங்கியதுமே என்னோட மாமா உங்கள வந்து சந்திப்பார்; அவர் உங்கள திருக்கழுக்குன்றம் கூட்டிட்டுப் போயி, அங்க உங்க வேலை முடிஞ்சதும், மறுபடியும் உங்கள சென்னைக்குக் கூட்டிட்டு வந்து விமானம் ஏத்தி விடுவார்; டீ .கே…” என்றான்

 

இந்தியா: பெங்களூர்இரயில்நிலையத்தில்……

லால்பாக் எக்ஸ்பிரஸ் இருபது நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படுமென்று மும்மொழிகளில்  இரயில் நிலைய அறிவிப்பாளினி திரும்பத் திரும்ப அலறிக் கொண்டிருந்தாள்.கல்யாணிக்கு கவலையாக இருந்தது. தொடக்கமே தாமத மென்றால் போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு எவ்வளவு தாமதமாகுமோ?

“என்ன கல்யாணி மதினி, இவ்வளவு காலையில எங்க பயணம்…?” என்றபடி அவளுக்கருகில்வந்து நின்றான் போர்ட்டர் குமரப்பன். அவனே தொடர்ந்து “தனியாவா போறீங்க ?” என்றும் சேர்த்துக் கொண்டான்.

“இல்ல; இல்ல…. அவுகளும் கூட வர்றாக; சாப்புடுறதுக்கு ஏதாச்சும் வாங்கியாரன்னு போயிருக்காக….சென்னைக்குப் போறோம்….” என்றாள் உற்சாகமாக. “ஆபரேஷன் பண்ணுன உடம்பு, அண்ணன எதுக்கு அங்கிட்டும் இங்குட்டுமா இழுத்தடிக்கிறீங்க… வீட்டுல பேசாம இருக்கச் சொல்லக் கூடாதா?” குமரேசன் கரிசனமாய்ச் சொன்னான்.

“அதெல்லாம் அலைய விடுறதில்ல… வீட்டுலயே தான் இருக்காக…. இது ரொம்ப முக்கியமான ஜோலி; அதான் கூட்டிக்கிட்டுப் போறேன்…ஆபரேஷன் முடிஞ்சும் ஏழெட்டு மாசம் ஓடிப்  போயிருச்சே! டாக்டர்ட்டக் கேட்டோம்…அதெல்லாம் தாராளமா போயிட்டு வரலாம்னுட்டார்….”

“உங்கள சும்மா சொல்லக் கூடாது மதினி….எமன் வாய்க்குள்ள போய்ட்ட அண்ணன் உயிர சத்தியவான் சாவித்திரியாட்டம் போராடில்ல மீட்டுக்கிட்டு வந்துருக்கீங்க…..இப்பவாச்சும் ஒழுக்கமா இருக்காரா , இல்ல பழைய மாதிரி நாக்கச் சப்புக் கட்டிக் கிட்டுத்தான் அலையுறாரா? ஏன்னா ருசி கண்ட பூனையில்லையா அதான் கேட்குறேன்….”

“இல்ல… சுத்தமா இல்ல….இப்ப எல்லாம் ரொம்பவும் மாறீட்டார்; சாராயக் கடைப் பக்கம் தலை வச்சுக் கூடப் படுக்குறதில்ல; ஆமா, குடிச்சுக் குடிச்சு ஈரல் மொத்தமும் வெந்து போய் இப்ப புது ஈரல்ல பொருத்திருக்கு! டாக்டர் கண்டிஷனா சொல்லீட்டார்…. இனிமே ஒருதுளி சாராயம் குடிச்சாலும் கடவுள் கூட காப்பாத்த மாட்டார்ன்னுட்டு… அவருக்கும் பொறுப்பும் உயிர் வாழணும்னு ஆசையும் வந்துருச்சுல்ல….இனிமே தப்புப் பண்ணாதுன்னு நம்பலாம்….”என்றாள் தீர்மானமாக.

அப்போது கேசவன் உணவுப் பொட்டலங்களோடு வந்தான். “என்ன அண்ணே! புது மனுஷனா ஆயிட்டீங்க போலருக்கு…..” என்றான் குமரப்பன். “ஆமாம்ப்பா, ஏதோ கடவுள் அனுக்கிரகம்” என்றபடி வானத்தைப் பார்த்து வணங்கினான் கேசவன். “சென்னைக்குப் போறீங்கன்னு மதினி சொன்னாங்க… சென்னையில என்ன ஜோலியோ?” என்றான் குமரப்பன்.

“சென்னைக்குப் போயி அங்கருந்து, திருக்கழுக்குன்றம்ங்குற ஊருக்குப் போறோம்ப்பா….”

“கோயிலுக்குப் போறீகளாக்கும்; அந்த ஊர் கோயிலு தான் உலகப் பிரசித்தி பெற்றதாச்சே…!” என்று குமரப்பன் சொல்லவும், ‘கோயிலுக்கெல்லாம் போகலப்பா….’என்று மறுத்துச் சொல்லப் போன கேசவன் ஏதோ நினைத்துக் கொண்டவனாய்,”ஆமாமா, நாங்க போற எடமும் கோயில் தான்; அங்கயும் புதுசா ஒரு கடவுள் உருவாகியிருக்கு…” என்றான்.

 

மலேசியாவின்தலைநகர்கோலாலம்பூர்விமானநிலையத்தில்.

ஸ்டீபன் தன்னுடைய கைத்தொலைபேசியில் ரொம்பநேரமாகப் பேசிக் கொண்டிருப்பதை மிகவும் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்தாள் ஸ்டெல்லா மேரி. பேசிமுடித்து அவர் அவளுக்கு அருகில் உள்ள இருக்கையில் வந்து உட்காரவும் அதற்காகவே காத்திருந்தது போல், செல்போனைக் காட்டி சிடுசிடுத்தாள். “இந்த சனியன வீட்டுலயே விட்டுட்டு வந்துருக்கலாம்; எப்பப் பார்த்தாலும் இதுலயே பேசிப் பேசி பாழாப்போறீங்க….ஆபீஸுலயும் வீட்டுலயும் தான் இருபத்தி நாலு மணி நேரமும் பேசி மறுகுறீங்கன்னா ஊருக்குப் போகும் போதும் கொஞ்சம் கூட ஓய்வா இருக்க மாட்டீங்களா?”

“செல்போன வீட்டுல வுட்டுட்டு வர்றதாவது….அவ்வளவுதான்; சமீபத்துல ஒரு இணைய  தளத்துல கவிதை ஒண்ணு வாசிச்சேன்; சொல்றேன் கேளு…..’என் கைத் தொலைபேசி ஒலிக்காத நேரங்களில் நான் இறந்து போனதாய் உணர்கிறேன்’னு தொடங்குது அந்தக் கவிதை. அது நிஜம்; கைத்தொலைபேசி மட்டும் இல்லைன்னா நான் செத்தே போயிடுவேன்….. “

“ஆமா சாகுறீங்க; அதான் சாவோட விளிம்பு வரைக்கும் போயிட்டு வந்துட்டீங்கள்ள… இனியும் என்ன! வாய மூடிக்கிட்டு பேசாம இருங்க…. டாக்டர் உங்கள அதிகம் ஸ்ட்ரெய்ன் பண்ணக் கூடாதுன்னு சொல்லீருக்கார்; அது ஞாபகம் இருக்கட்டும்….”

“அடி அசடே! டாக்டருங்க எப்பவுமே அப்படித்தான் ; வாங்குன காசுக்கு வஞ்சனை இல்லாம சும்மா எதுனாச்சும் அட்வைஸ்கள வாரி விடுவாங்க….. நவீன மருத்துவத்துல கிட்னி மாற்று ஆபரேசன்லாம் ஒண்ணுமே இல்லம்மா; சும்மா எறும்பு கடிச்ச மாதிரி…. எனக்குத் தான் ஆபரேசன் முடிஞ்சும் அஞ்சு மாசத்துக்கு மேல ஆயிடுச்சே… அதனால வீணாப் பயப்படாத….ஓ.கே…”

“சரி இப்ப இவ்வளவு நேரமா யாரு கூடப் பேசுனீங்க….”

“எங்க அக்கா கூடம்மா….. கன்னியாகுமரியிலருந்து அக்காவும் மாமாவும் நேத்தே சென்னைக்கு வந்துட்டாங்களாம்; நாம  சென்னை போயி இறங்குனதும், அவங்களும் நம்ம கூடவே திருக்கழுக்குன்றம் வர்றாங்க….அங்க போயி நம்ம காரியம் முடிஞ்சதும் அப்படியே நம்மள கன்னியாகுமரிக்கு கடத்திட்டுப் போகப் போறாங்களாம்…..” ஸ்டீபன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருடைய கைத் தொலைபேசி சிணுங்கவும் அதை எடுத்துப் பேசத் தொடங்கினார்…..

 

பாகிஸ்தானின்கராச்சிநகரில்

அதிகாலைத் தொழுகை முடிந்ததும் மசூதியிலிருந்து அவசரமாய்க் கிளம்பப் போன இஸ்மாயிலைத் தடுத்தார் ஹுசேன்.”என்ன அவசரம்? கொஞ்சம் பொறும்; நானும் வர்றேன், சேர்ந்தே போயிடலாம்…..” பேசிக் கொண்டே நடந்தார்கள்.

“இந்த வருஷம் ஹஜ் புனிதப் பயணம் போறதுக்கு வாய்ப்பு வந்தும் வேணாம்னுட்டீகளாமே! ஆண்டவன் அவதரிச்ச பூமிய தரிசிக்கிறத விட அப்படி என்ன முக்கிய வேலை உங்களுக்கு…..”

“முக்கிய ஜோலி தான்; இன்னைக்கு இந்தியாவுக்குக் கிளம்புறோம்…..”

“இந்தியாவுக்கா? இப்ப இருக்குற கெடுபிடியில விசா எப்படிக் கிடைக்கும்…!”

“அதெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு வாங்கிட்டோம்; இமிக்ரேஷன்ல இருக்கிறவங்களும் நம்மள மாதிரி மனுஷங்க தான! விஷயத்தச் சொன்னதும் மறுக்காம விசா குடுத்துட்டாங்க…..”

“அப்படி என்ன விஷயமா இந்தியாவுக்குப் போறீங்க?”

“உம்ம கிட்ட ஏற்கெனவே சொல்லி இருந்தேன்! நீர் தான் மறந்துட்டீர்…என் பேத்தி ஃபாத்திமாவுக்கு மாற்று இதயம் பொறுத்துனமே….!”

“ஆமா, ஆமா…. இப்ப ஞாபகம் வந்துருச்ச…..இன்னைக்கு சரியா ஒரு வருஷம் ஆகுதுல்ல, அவள் புது மனுஷியா பொறந்து வந்து…..!”

“அன்னைக்கு மட்டும் அந்த இதயம் கிடைக்கலைன்னா, இன்னைக்கு எங்க ஃபாத்திமா எங்களுக்கு உயிரோட இருந்திருக்க மாட்டாள்; அவளுக்கு இப்ப ஆறு வயசாகுது….ஆனா எங்களப் பொறுத்த வரைக்கும் அவளுக்கு புது இதயம் பொறுத்துனதுலருந்து தான் கணக்கு: அதன் படி அவளுக்கு இன்னைக்குத் தான் ஒரு வயசாகுது….அதுக்குக் காரண மானவங்கள சந்திக்குறதுக்குத் தான் இந்தியாவுக்குப்போறோம்….” கண் கலங்கினார்.       “சரி, சரி அழாம சந்தோஷமாப் போயிட்டு வாரும்…. யாரெல்லாம் போறீர்?“ இஸ்மாயிலின் வீடு வரவே விடை பெற்றுக் கொண்டபடி கேட்டார் .

“குடும்பத்தோட போக ஆசை தான்; ஆனா மூனு பேருக்குத் தான் விசா கெடைச்சது; அதால நானு, என் பையன், பேத்தி மூனு பேரும் போறோம்….சென்னை வரைக்கும் விமானத்துல போயி அங்கருந்து வாடகைக் கார் அமர்த்தி திருக்கழுக்குன்றம் போறதா பிளான்….”

“அல்லாவின் கருணையால் எல்லாம் நல்லபடியா நடக்கும்; போயிட்டு வாருங்கோ….”

 

இன்றைக்குமிகச்சரியாகஒருவருஷத்திற்குமுன்புசென்னைக்கருகில்உள்ளதிருக்கழுக்குன்றத்தில்.

“யுகேந்திரன எங்கம்மா, இன்னும் தூங்குறான் போலருக்கு; ஸ்கூலுக்குக் கிளம்ப நேரமாகலையா அவனுக்கு…?” அலுவலகத்திற்குக் கிளம்புகிற அவசரத்திலும் அக்கறையாக விசாரித்தார்

மணிகண்டன்.  “நேத்து இராத்திரி இவனும் இவனோட நண்பர்களும் சேர்ந்து நடத்திக்கிட்டு இருக்கிற நற்பணி மன்றத்துக்கு ஆண்டு விழாவாம்; அது முடிஞ்சு ரொம்ப லேட்டாத் தான் படுக்குறதுக்குப் போனான்; அதான் இன்னும் அசந்து தூங்குறான்; நான்  இப்பப் போயி எழுப்பி விடுறேன்….நீங்க கிளம்புங்க….” என்று மரகதவல்லி சொல்லிக் கொண்டிருக்கும் போதே யுகேந்திரன் எழும்பி வந்து அவர்களுக்கு முன் நின்றான்.

“அப்பா, இப்பவே லேட்டாயிருச்சு; இன்னைக்கு நான் பஸ்ஸ விட்டுருவேன்னு தோணுது; கிளாஸ்ல பரீட்சை வேற இருக்கு…. அதால  பைக் எனக்கு வேணும்; நீ  பஸ்ஸுல வேலைக்குப் போ…..”

“நீ  ரொம்ப அசதியா இருப்ப கண்ணு…பைக் வேணாம்; வேணுமின்னா ஆட்டோல போ….”

“இல்லப்பா, அது சரியா வராது…. எனக்கு சாயங்காலமும் கொஞ்சம் வேலை இருக்கு; சேரிக் குழந்தைங்களுக்கு டியூசன் எடுக்கனும்….சேரிக்குள்ள எல்லாம் ஒரே சேறும் சகதியுமா இருக்கு… ஆட்டோ போகாது; அதுக்கும் பைக் தான் வசதி…..”

“அப்ப சரி; மறந்துறாம ஹெல்மட் போட்டுட்டுப் போ….” என்று சொல்லியபடி, இப்பவே நேரமாகி விட்டதே என்று துரிதமாக நடக்கத் தொடங்கினார் மணிகண்டன்.

எவ்வளவு வேகமாகக் கிளம்பியும் தாமதத்தைத் தவிர்க்க முடியவில்லை யுகேந்திரனால். அவசரமாய்க் கிளம்பியதில் ஹெல்மட்டை எல்லாம் அவன் பொருட் படுத்தவே இல்லை. பிரேயர் தொடங்கி விட்டது.டாப் கியருக்கு மாறி ஆக்ஸிலேட்டரை முடுக்கியதில் பைக் விமானமாய்ச் சீறிப் பறந்தது. இவனுக்கு முன்னால் போன ஏதோ வண்டியிலிருந்து ஆயில் கொட்டி சாலையில் சிதறிக் கிடந்தது. அதன் மீது இவனுடைய பைக் சக்கரம் ஏறியதும் சரட்டென்று வழுக்கி விட, வண்டி நிலை தடுமாறி, அவனுக்குப் பின்னால் வந்த லாரியில் மோத, வேகமாகத் தூக்கி வீசப்பட்டான்.

யுகேந்திரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, அவனைச் சுற்றிலும் வியாபித்துக் கிடந்த அழுகுரல்களும் விசும்பல்களும் கல் மனதையும் கரைப்பதாய் இருந்தது. ஆனால் கடவுளின் மனம் தான் கரைவதாய் இல்லை

“ஸாரி மிஸ்டர் மணிகண்டன்; எங்களால முடிஞ்சதெல்லாம் பண்ணிப் பார்த்துட்டோம்… இருந்தும் உங்க மகனைக் காப்பாத்த முடியல….” கண் கலங்கினார் தலைமை மருத்துவர்.

“அய்யய்யோ அப்படியெல்லாம் சொல்லாதீங்க டாக்டர்; எங்களுக்கிருக்கிறது கறிவேப்பிலைக் கன்னு மாதிரி ஒரே பையன்.. இன்னும் உயிர் இருக்குறாப்புல தான் இருக்கு; ஏதாவது பண்ணி என் பையன  பொழைக்க வையுங்க….” என்றபடி அவரின் கால்களில் விழுந்து கதறினாள் மரகதவல்லி.

“அய்யோ என்னம்மா நீங்க; முதல்ல எழும்புங்க…. நீங்க மனச திடப்படுத்திக்கிட்டு நடந்தத ஜீரணிச்சுத் தான் ஆகணும்…ஒரு வகையில நீங்க சொல்றது நிஜம் தான்; உங்க பையனுக்கு ஏற்பட்டுருக்குறது மூளைச்சாவுங்குறதால மத்த முக்கியமான அவயங்கள்ல இன்னும் கொஞ்ச நேரத்துக்கு உயிர் இருக்கும்; ஆனாலும் உங்க பையன உயிர் பிழைக்க வைக்கிறதெல்லாம் சாத்தியமில்ல…. ஆனா நீங்க உங்க பையனோட உறுப்புகள தானம் பண்ண சம்மதிச்சா, அதுகளை எடுத்து மத்தவங்களுக்குப் பொருத்தி அவங்கள்ல உங்க பையனோட உயிர துடிக்க வைக்கலாம்; யோசிச்சு முடிவு சொல்லுங்க….”

சொந்தங்களும் சுற்றமும் நட்பும் கூடிக்கூடிப் பேசி இந்த ஏற்பாட்டை முற்றிலுமாய் நிராகரித்தார்கள். தங்கள் குழந்தையின் உடம்பைக் கூறு போட அனுமதிக்க மாட்டோம் என்று கூச்சல் போட்டார்கள். ஆனால் மணிகண்டனும் மரகதவல்லியும் கொஞ்ச நேரத் தயக்கத்திற்குப் பின் தீர்மானமாய்ச் சொன்னார்கள். “மண்ணோ தீயோ தின்னு செரிக்கப் போற எங்க பையன் உடம்பால சில உயிர்கள காப்பாத்த முடியுமின்னா தாராளமா உறுப்பு தானம் தர்றோம் டாக்டர்….” மருத்துவர் குழு உடனே செயல்பட்டது.

 

மீண்டும்இன்றையதினம்அந்திமாலையில்; திருக்கழுக்குன்றத்தில்.

யுகேந்திரனின் வீடு. அவனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவனுக்கு  அஞ்சலி செலுத்துவதற்காக ஊரே திரண்டிருந்தது. அதுபோக செய்தியை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் மற்றும் உலகத்தின் பல பகுதியிலிருந்தும் அவனின் உறுப்புக்களைத் தானமாய் பெற்று அதன் மூலம் இப்போது வாழ்கிறவர்கள் என்று…. கூட்டம் திருவிழா மாதிரி திமிலோகப் பட்டது.

மணிகண்டனின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண் கலங்கியபடி “இந்த மனித சமூகம் உங்களுக்கும் உங்க பையனுக்கும் ரொம்பக் கடமைப் பட்டுருக்குங்குங்க ஸார்….. அவனோட உறுப்புகள் தானம் பண்ணப்பட்ட செய்தியால தான் இன்னைக்கு பரவலா பல இடங்கள்ல மூளைச் சாவு ஏற்படும் போதெல்லாம் உறுப்பு தானம் பண்ணலாங்குற உத்வேகம் பலருக்கும் ஏற்பட்டுருக்கு….” என்றார் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்.

“யுகேந்திரனுக்கு அழிவே இல்லீங்க….அவன் எங்க மூலாமா என்னைக்கும் வாழ்ந்துக்கிட்டு ருப்பான்…உங்களுக்கு எப்பல்லாம் அவன பார்க்கணுமின்னு தோணுதோ அப்பல்லாம் எங்களுக்கு தகவல் மட்டும் சொல்லுங்க; உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் ஓடோடி வர்றோம்…” என்றார் ஸ்டீபன். மரகதவல்லி பாகிஸ்தான் சிறுமி ஃபாத்திமாவைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அவளின் நெஞ்சில் காதை வைத்து தன் மகனின் இதயம் துடிப்பதைக் கேட்டு கண் கலங்கினாள்.அப்புறம் ரபீந்திர் சிங்கின் கண்களுக்குள் உற்றுப் பார்த்து தன் மகனின் ஆன்மா உயித்திருப்பதை அறிந்து சந்தோஷப் பட்டாள்.

சோ.சுப்புராஜ்

Series Navigation“தமிழ்ச் சிறுகதையின் தந்தை “சோ.சுப்புராஜ் கவிதைகள்
author

சோ சுப்புராஜ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *