கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்

author
2
0 minutes, 41 seconds Read
This entry is part 1 of 21 in the series 16 அக்டோபர் 2016

 shapiro-god-and-science1

செந்தில்

இந்த கட்டுரையின் நோக்கம், தெய்வம் (அ) கடவுள் என்ற – மனிதனுக்கும்,இயற்க்கைக்கும் மேலான –  கருத்தாக்கம் தேவையா? பயன் உள்ளதா? பயனற்றதா?,  கடவுள் என்ற புனிதம் மிக்க (நிலையோ/பொருளோ/சக்தியோ) உண்டா? இல்லையா? என்றெல்லாம் விவாதம் செய்வதை தவிர்த்து, மனிதன், ஜடப்பொருள், உயிர்கள், மற்றும் பேரியற்க்கைக்கும் ஆன தொடர்பினை அறிவியல் பாதையில் விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் மனிதனுக்கும், மற்ற உயிர்களுக்கும் மேலாக தெய்வம்/கடவுள் என்ற சக்தியோ, இயக்கமோ, பொருளோ இருப்பதற்க்கான  விசாரணையை  தொடர சில  பிரமாணங்களையும் (Premises), கோட்பாட்டு தளங்களையும் (Principles) வரிசைபடுத்தும் முயற்சியாக இந்த கட்டுரை.

இந்திய இறையியல் வரலாற்றில் கபிலர் முதல், புத்தர், சார்வாகர், ஜைன சிந்தனையாளர்கள் தொடர்ந்து வள்ளுவர், ஆதிசங்கரர், இராமானுஜர், அருணகிரி நாதர் வரை இத்தகைய தத்துவ அறிவியல் ரீதியிலான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.  எனினும், மேற்சொன்ன ஞானிகளின் நூல்களில் சிலவற்றை தவிர, பெரும்பாலானவை மதம் சார்ந்து, பக்தி சார்ந்து புனித்தன்மை ஏற்றபட்ட கடவுள்/தெய்வம்/ஆத்மா/பரப்பிரமம் போன்ற நிலைகளை தேடும் முயற்சியாக இருப்பதால், அவர்களின் நிலைகளில் இருந்து வேறுபட்டு, புனிதத்தன்மை ஏற்றபடாத ஒரு “தொடக்கத்தை /இயற்க்கை சக்தியை” விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தும் பிரமாணங்களை, கோட்பாடுகளை வரிசைபடுத்த முயல்கிறது இக்கட்டுரை. மதங்களை தாண்டி, இறைசக்திகளை பற்றி சிந்திப்பதற்க்கும், சமரச சன்மார்க்கம் போன்ற  மத நல்லிணக்கத்துக்காகவும் இத்தகைய முயற்சிகள் தேவை.  மேலும், ஒரு அறிவியல் இதழுக்கு எழுதப்படும் ஆராய்வு கட்டுரைகள் போல  மேற்கோள்கள்,  ஆதாரங்கள் காட்டி எழுதுவதற்க்கு பதிலாக, ஒரு சாதாரண மனிதனின் அனுபவத்தினை, வாழ்வியல் சார்பாக எழும் கேள்விகளை, இயற்பியல், பரிணாமம், தத்துவ புரிதல்களின் அடிப்படையில் ஒரு முயற்சியாகவும் இக்கட்டுரையினை கருதலாம்.

1)  இருப்பு (existence) நிச்சயமான ஒன்று.

சிந்தனா சக்தியுடன், முழு பிரக்ஞ்ஞையுடன் செயல்படும் மனிதனுக்கும் (மற்ற உயிரினங்களுக்கும் இது பொருந்தும்), இயற்க்கைக்குமான தொடர்ந்து நிகழும்  உறவில், பரிமாற்றத்தில் உடல் சார்ந்த தேவைகள், வலி, நோய்கள், முதுமை, சுக-துக்கங்கள்  குறித்து எழும் கேள்விகள், தேடல்கள், மனிதன் கண்டு கொண்ட விடைகள், வரலாற்று ஞாபகங்கள், சுவடுகள் ஒன்றை நமக்கு உறுதி செய்கின்றன. மனிதன், ஜடப்பொருள், மற்றும்உயிர்களின் தொடர் பிறப்பு, இறப்பு, வாழ்வு போன்றவை – (புவி சார்ந்த கால அளவீட்டு நிலையில்- on a relative time scale at least)  நமக்கு உறுதி செய்வது: இருப்பு உண்மையானதும், நிலைத்த  தன்மையுடையதும்.  (மாயாவாத தத்துவமும், சூன்யவாதமும் இவையனைத்தும் நிலையற்றது என பகரினும்;  நவீன விஞ்ஞானம் போல பொருள் யாவையும் உரிக்க உரிக்க வெங்காயம் (அ) ஒரு மாயை என பகரினும்).

2)   பரிணாம வளர்ச்சி (evolution) மனிதனின் முழுக்கட்டுப்பாட்டில் இல்லை.

இயற்க்கையோடு இயங்கும் அனிச்சை செயலினாலோ, இயற்க்கை மாற்றங்களினாலோ, பரிணாம வளர்ச்சி இன்றும் ஒரு தானியங்கி. (auto-poesies).ஒரு செல் உயிரினம் முதல் சிந்தனையுடன் செயல்படும் நவீன மனிதன் வரை,பரிணாம வளர்ச்சி மனிதனின்  முழு கட்டுப்பாட்டில் இல்லை. மனிதன் இயற்க்கையோடு போராடியும், சோதனை செய்வதன் (planting, breeding, cloning)மூலமும் சில மாற்றங்களை பரிணாம  வளர்ச்சியிலும்  இயற்க்கையின் மேலும் தனது கட்டுபாட்டின் கீழ் நிகழ்த்தினாலும், பிரபஞ்ச இயக்கமோ, அதீத இயற்க்கை சக்திகளோ (natural forces), அவை உயிர்களின் மீது ஏற்படுத்தும் நிகழ்வுகளோ மனிதனது கட்டுபாட்டில் இல்லை.

3)   பேரியற்க்கையும்பிரபஞ்சங்களும்கால மாற்றங்களும்மனித கட்டுப்பாட்டில் இல்லை.

பிரபஞ்ச விதிகள், இயக்கங்கள் மற்றும் கால, வெளியிடைலான உறவுகளை ஒன்று அல்லது பல ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சக்திகள் இயக்குகின்றன. உதாரணமாக, பிரபஞ்ச புவியீர்ப்பு விசை (universal Gravity – G), ஓளி வேகம் முதலியன. இச்சக்திகள் மனித கட்டுபாட்டில் இல்லை. பேரியற்க்கை சக்திகளின் ஒரு சில துளிகளை மனிதன் உபயோகிக்கும் வழி அறிந்தும், இந்த சக்திகள் மனிதன் கட்டுப்பாட்டில் இல்லை..

4)  பேரியற்க்கைக்கு பிரபஞ்ச ஞானம்-அறிவு (there is cosmic intelligence) உண்டு.

பேரியற்க்கையும், நுண்-அணு உலகமும் (microcosm and macrocosm) நிலையற்றது என அறிவியல் பகரினும், மனித புலன்கள் புவி சார்ந்த அளவைகளின் அடிப்படையில் நிலையுள்ளதாகவும், ஒழுங்கமைப்பாகவும், ஒத்திசைவு கொண்டும் உள்ளது (there is relative stability, order, synchronized spatial and time movement). கோள்களின் இயக்கமும், பிரபஞ்ச புவியீர்ப்பு சக்தியும், கால இயக்கமும், ஒளி, ஒலி அலைகளின் செயல்பாடும், இச்சக்திகளுக்கிடையான உறவுகளும் சீரான முறையில் நிலையுள்ள தன்மையுடன் செயல்படுவதோடு, அவற்றின் இயக்கங்களில், நிகழ்-மறுநிகழ்வுகளில் தொடர்ச்சியும் இருப்பதால், நாம் ஒரு முக்கியமான பிரமாணத்தை எடுத்தாக வேண்டும். பிரபஞ்சத்தில் (பேரியற்க்கையில்) ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பிரபஞ்ச ஞானம்-அறிவு (cosmic intelligence)இயற்க்கையாகவே உள்ளது.

இந்த பிரபஞ்ச-அறிவு, பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில் புவி சார்ந்துள்ள  நம்மையும் உள்ளடக்கிதான் செயல்படுகிறது. ஒரு  ஜீவராசிக்கு அறிவும் ஞானமும் இருக்கிறது என்று நாம் சொன்னால், அதன் பொருள் என்ன. 1) அந்த உயிர் அனுபவத்தில்  கற்று தேர்கிறது (there is learning). 2) அதற்க்கு ஒரு ஞாபக திறன் உள்ளது (there is memory). 3)அந்த உயிரின் வளர்ச்சியில், இயக்கத்தில் அனுபவத்தின் /ஞாபகத்தின் விளைவாக தொடர் நிகழ்வு அல்லது மாற்றம் நிகழ்கிறது (repetition of patterns, change in behavior/movements due to learning).  உதாரணமாக, நமது ஞாயிற்றையும், கோள்களையும் (Sun & planets) எடுத்து கொள்வோம். மேற்சொன்ன அனைத்தும், இவைகளின் இயக்கத்தில் காணமுடிகிறது. நட்சத்திரங்களின் பிறப்பும், இறப்பும் கூட, அறிவியலின் கணிப்பின் படி, ஒரு வித அமைப்பியல் அறிவுடன் (systemic knowledge) இயங்குவதாக உள்ளது.  புவியில் உள்ள ஜீவராசிகளை உயிர் வேதியல்(bio-chemistry), கரிம வேதியல் (organic-chemistry) என பிரித்து ஆய்வு செய்வது போல, பிரபஞ்ச வெளியின் இயக்கத்தையும் அறிவு உள்ள பொருள் (அ) வெளி (அ) காலம் என்ற முறையில்தான் மனிதன் சிந்திக்க வேண்டும்.

மேற்கண்டவிதமாக வரிசைபடுத்தபட்டுள்ள பிரமாணங்களின் அடிப்படையில்,கடவுள் குறித்த அறிவியல் (Science of God) குறித்த சொல்லாடலை தொடர்கிறேன்.  மனிதனுக்கும் இயற்க்கைக்குமான (பேரியற்க்கைக்குமான) தொடர்பு பல பரிமாணங்களில் நிகழ்வதை நாம் அறிவோம். (அ)அனிச்சையான இயக்கம் உள்ள உறவு (instinctual relations) தேவைகளின் நிமித்தம் ஒளி, காற்று, ஈர்ப்பு சக்தி போன்றவற்றுடன் நிகழும் உறவு; (ஆ) மனித முயற்சி, மனித சிந்தனையின் அடிப்படையிலான சோதனைகள்; நாம் இயற்க்கை சக்திகளை மாற்றியமைத்து உபயோகத்திற்குள்ளாக்குதல். (இ) பரிணாம வளர்சிதை மாற்றங்கள்  (evolution due to natural selection).

மேற்சொன்ன உறவுகளை தவிர, மனித சிந்தனைக்கும், இயற்க்கை சக்திகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் என்ன? இயற்க்கை நம் மீது ஆதிக்கம் செலுத்துவது போன்று, மனிதனின் சிந்தனையோ, மூளையோ, நரம்பியல் மண்டலமோ சிறிதளவாயினும் இயற்க்கையின் மீது  வினையோ, தொடர்வினையோ  ஆற்ற இயலாதா என்ன? பொருள்முதல்வாத கோட்பாட்டினை அடிபடையாக கொண்ட அறிவியல் தத்துவங்களே பிரபஞ்சத்தையும் அதன் சக்திகளையும், அலை வடிவங்களாக  ( as electromagnetic / radiation/ subatomic wave form or function) காணும் பொழுது, உயிரினங்களின் மூளையும், அவற்றின் உடல் வேதியல் இயக்கங்களும் ஒரு வித அலை வடிவங்களாக இயற்க்கையுடன் உறவு கொள்ள முடியாதா என்ன? அலை வடிவ பிரபஞ்ச சக்திகளை நாம் கடவுள் என ஏற்று கொள்ள தேவையில்லை; எனினும்,  இந்த உறவு சாத்தியமானதுதான்.

உயிர் வாழ்க்கையின்  நோக்கம் தான் என்ன?  ஒரு செல் உயிரினத்தின் நோற்றம் ஒரு விபத்து எனவும், தற்செயல் நிகழ்வு எனவும் பொருள்முதல்வாத அறிவியல் கோட்பாடுகள்  மற்றும் பொருளாதார கோட்பாடுகள் உரைப்பினும், சிந்தித்து செயல் ஆற்றும் அறிவியல் பூர்வமான மனிதனின் வளர்ச்சி உயிர் பிழைத்தலுக்காகவும், தேவைகள்  நிமித்தம் குறித்தும் நிகழ்ந்த ஒன்று என அவை உறுதியுடன் பகரினும், சிந்திக்கும் மனிதன் முன், ஏன் எல்லா உயிரினங்களின் இருத்தலிலும் தொக்கி நிற்க்கும் கேள்விகள்; ஏன் இந்த வாழ்க்கை? இதன் பொருள் என்ன, பலன் என்ன?  இதைப்பற்றி சிந்திக்கும் ஆற்றலை கொடுத்த பரிணாம வளர்ச்சி இதற்க்கான பதில் தர இயலாதது ஏன்?  மனிதன் தன் வாழ்வின் முடிவினை, அதன் பின் தொடரும் பயணத்தை தானே நிர்ணயித்துக் கொள்ள முடியுமா?  (Can humans have control over their destiny?)

மரணம் ஏன், மறுபிறப்பு, நரகம், சொர்க்கம் என்ற தேடல்கள்களை கொண்ட விவாதங்களை இந்த சொல்லாடலில் தவிர்ப்போமாக. வாழ்விற்க்கே பொருள் இன்னும் விளங்காத நிலையில், இல்லாமல் போனபிறகு உள்ள நிலைகள் குறித்த விவாதம் அறிவியல் நோக்கில் முக்கியமின்று. மத நோக்கில் பிறப்புக்கும், இறப்புக்கும், நரகம், சொர்க்கம், மறுபிறப்புக்கும் உள்ள புராண புரிதல்கள் நம் எல்லோர்க்கும் தெரிந்ததே. பிறப்பை தவிர்க்க பரமாத்மாவுடன் (பேரியற்க்கையுடன்)   சேரும் சைவ சித்தாந்த உயர் நோக்கும், தியானத்தில், பக்தி சரணாகதியில் அல்லல்கள் தவிர்ந்து, ஆத்மா, பரமாத்மா, புனித அல்லது  நிர்வாணா  போன்ற நிலைகளை  அடையும்  வழிகளும் நன்கு தெரிந்ததே. ஆனால், அறிவியல் நோக்கில், உயிர் வாழ்க்கை ஏன்?  சிந்திக்கும் மனிதனும், மற்ற உயிரினங்களும் தோன்றாமல் போயிருந்தால்கூட, இப்பேரியற்க்கையும், பிரபஞ்சமும் எதற்க்காக?

பிரபஞ்சம் குறித்து  அறிந்து, சோதனை செய்து, வெற்றி காண மனிதன் முயற்சி செய்தாலும்  கூட ஏன் இந்த வாழ்க்கை? உயிர் வாழ்க்கைக்கு உயிர் பிழைத்தல் தவிர எந்த ஒரு  நோக்கமும்,  பயனும்  இல்லை என்ற பதில்தான் எனில், ஐநூறு கோடி ஆண்டுகளாக   (500 million years) தோன்றி,  மரித்த, மறைந்த, அல்லது பரிமாண வளர்ச்சி அடைந்து சிந்தனை ஆற்றல் பெறும் வரை வளர்ந்துள்ள  ஜீவராசிகளின் வாழ்க்கையின் பொருள்தான்  என்ன?  இந்த நோக்கில்,15 பில்லியன் ஆண்டுகள் வயதான பிரபஞ்சத்தில்,  4 பில்லியன் ஆண்டுகள் வயதான புவியில், 500 மில்லியன் ஆண்டுகளாக நடந்தேரும் உயிர்களின் தோற்றம்/மாற்றம் வளர்ச்சி விபத்து, தற்செயல் நிகழ்வு, வெறும்தேவையின் பார்பட்டது… என்ற வாதம் வெற்றுவாதமாகவே உள்ளது. மனிதனுக்கு பலன் உண்டோ, இல்லையோ? இயற்க்கைக்கு ஒரு நோக்கம் இருந்திருக்க வேண்டும்…இருக்க வேண்டும் எனதான் தோன்றுகிறது.

இந்த அடிப்படையில் கடவுள் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஒரு அமைப்பு நிலை (ஒரு ஒழுங்கு நிலை, (relative stability, order) என்ற பிரமாணத்தின் தளத்தில் விவாதிக்க எண்ணுகிறேன். இந்த தளத்தில்உயிர்கள் (நாம்) இயற்க்கைக்கு உட்பட்டு இயங்கி இயற்க்கையின் நோக்கத்தை அறிந்து அதனுடன் சேர்ந்து செயல் ஆற்ற முயல்வதை கடவுள்-மனிதனுக்குமான உறவு என நினைக்கிறேன். இதிலும் சிக்கல் இருக்கிறது. மனிதனும் மற்ற உயிரினங்களும் இயற்க்கையின் அடிமைகளாக கைப்பாவைகளாக இருப்பின் என்ன செய்ய இயலும்? மனிதன் இயற்க்கையின் காலடியில் அன்பு, பக்தி, பயம் கொண்டு/கண்டு வீழ்ந்த போதிலும் அவன் முன்னால் தொக்கி நிற்க்கும் கேள்வி இயற்கையின் பிடியில் இருந்து விடுதலை அடைவது எப்படி?

நான் சொல்ல விழைவது; நமது மூளை, நரம்பு மண்டலம், மற்றூம் உடல் பாகங்கள் இயற்க்கையுடன், பேரியற்க்கையுடன் – அலை வடிவங்கள் மூலமாக – ஒருவித வினை, தொடர்வினை ஆற்ற வல்லது என நினைக்கிறேன். பக்தி, தியானம்,அறிவியல் சோதனைகள் மூலம், நாம் இயற்க்கையின் அமானுஷ்ய சக்திகளை உணர்வதோடு, ஓரு சிறிதளவேனும் அதனுடன் உறவாட முடியும், மாற்றங்களை நிகழ்த்த முடியும் என தோன்றுகிறது. உயிர்கள் மரணத்தின் பின்பு, அல்லது பிறப்பிற்க்கு முன்பு ஒருவித அலை வடிவமாக (information quanta  or frequencies) பிரபஞ்ச சக்திகளுடன் சேர்ந்து/ஒத்திசைவுடன் இயங்ககூடிய வாய்ப்பு உள்ளது. இந்த அடிப்படையில், உயிர்களின் நினை, நனவு, ஆத்மா, பரமாத்மா போன்றவற்றை அறிவியல் சார்ந்து கதிரியக்க, மின் காந்த அலைகளாக, பேறியற்க்கைகளின் மைய ஆதார புள்ளிகளுடன் உறவு கொள்ளும் சக்திகளாக (வடிவங்களாக) ஒப்பிட முடியும்.

பேரியற்க்கை அதீத அளவுடையதால் (infinite), அது பல நடு சக்தி மையங்கள் (multiple centralities) கொண்டிருக்க வேண்டும் (like centers of gravity). உதாரணமாக, ஒரு மலையின்  புவி ஈர்ப்பு சக்தி (gravity) இருந்து மனித நினவுகளுடன், உணர்வுகளுடன் தாக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் சாத்தியமான ஒன்று. இந்த சக்தி மையங்கள் உயிர், உயிரற்ற பொருள்களுடன் ஒத்திசைந்திடலாம் என நினைக்கிறேன்.  பேரண்டங்களும், பேரியற்க்கை சக்திகளும் சூன்யத்திலிருந்தோ,  ஒற்றை பருப்பொருளிலோ (like big bang theory) தோன்றி பல வித மையங்களை / சக்தி நிலைகளை அலை வடிவங்களையும் கொண்டிருக்கலாம். தோற்ற காரணம் எது, முடிவுநிலை எது இதுவரை நாம் அறிய இயலாவிடினும் பிரபஞ்ச இயக்கம் ஒரு வித அமைப்பு நிலை (it is a system with multi-level centers and cosmic intelligence).

நாம, ரூபங்களை கடந்து ஒன்று அல்லது பல வித மைய நிலைகள்/தளங்கள் (energy centers, centralities) பிரபஞ்சத்திற்க்கும் அதனுள் இயங்கும் பேரியக்க சக்திகளுக்கும்  இருந்தே ஆக வேண்டும். உதாரணமாக, Higgs field. தமிழில் இதை பரசிவ வெள்ளம் என பாரதியார் கவித்துமாக சொல்வது போல. இவற்றை ஆத்மா, பரமாத்மா, பிரம்மம், சிவன், திருமால், முருகன், காளி, புனித ஆவி என எப்படி அழைத்தாலும் சரி.  உதாரணமாக, பரமாத்மா என்பதை ஒருவித கூட்டு-பிரபஞ்ச-ஞானம் (collective-cosmic-intelligence) எனலாம். மனிதன் தியானத்தின் மூலமும் விஞ்ஞான கருவிகளோடும் இந்த மைய சக்திகளுடன் உறவு கொண்டு வாழ்கையின் பொருளை தேர்ந்து  பிறப்பு, இறப்பு ஆகிய இயக்கத்தை மனித சிந்தனையின், பிரஞ்ஞையின் கட்டுக்குள் கொண்டு வர முயல்வதே உயர் மெய்ஞானம் ஆகும். இதில், மதம் சார்ந்த கோவில் அமைப்புகள், வழிபாட்டு முறைகள், மொழி, இசை சார்ந்த கருவிகளுக்கு பங்கு உள்ளதா என்பதை சோதனைக்கு உள்ளாகினால்தான் வாழ்வின் பொருள் நமக்கு வசப்படும்.

*******

Series Navigationஈர்மிப் பெருந்திணை
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ஊழிற் பெருவலி யாதுள ?

    சி. ஜெயபாரதன், கனடா.

    இக்கட்டுரை [காலஞ் சென்ற] எனது மதிப்புக்குரிய நண்பர் மலர்மன்னன் (மார்ச் 6, 2011) திண்ணையில் எழுதிய “விதியை அறிதல்” என்னும் கட்டுரைக்கு மறுப்புரை இல்லை. ஊழ் விதியைப் பற்றி நான் விஞ்ஞான ரீதியாக அறிந்துள்ள சிந்தனையின் பிரதிபலிப்பே இக்கட்டுரையின் சாரம் ! இங்கு நான் ஊழ் என்று குறிப்பிடுவது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஓர் இயற்கைச் சக்தியைக் குறிப்பிடுகிறேன். பிரபஞ்சத்தைப் படைத்துக் கட்டுப்படுத்தும் படைப்பாளியே மனித இயக்கத்தையும், போக்கையும் வழி நடத்தி வருகிறது என்பதுதான் என் கோட்பாடு. அதைக் கடவுள் என்றாலும் ஒன்றுதான். இயற்கை என்றாலும் ஒன்றுதான். பிரபஞ்சப் படைப்பாளி என்றாலும் ஒன்றுதான். ஊழ் விதி என்பது விளைவை மட்டும் காட்டி மனிதர் காணாமல் மறைந்திருக்கும் ஓர் இயற்கை நியதி.

    ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் பட வேண்டும் என்று விண்வெளி உயிரியல் விஞ்ஞானி கார்ல் சேகன் கூறுகிறார். அதாவது பிரபஞ்சம் உருவானதும், காலக்ஸி, பரிதி மண்டலங்கள், மற்றும் உயிரின, தாவர உட்பிறப்புப் தோற்றங்களும் ஒரு காரண-விளைவு நியதியைப் பின்பற்றிச், சுழலும் ஓர் தொடரியக் கத்தை முன்னிட்டு உண்டானவையே. இந்தப் பிரபஞ்சமும், பேரண்டங்களும், அவற்றில் உதித்த பயிரினமும், உயிரினமும் மந்திர சக்தியால் ஒரு சில நாட்களில் தோன்றியவை அல்ல. பிரபஞ்சப் படைப்பாளி பல யுகங்களாய்த் திட்டமிட்டுச் செய்து தோற்றங்களை மாற்றி மாற்றிச் செம்மைப் படுத்தி உருவாக்கியதுதான் நாம் வாழும் உலகம். பிரபஞ்சம் தோன்றி சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன வென்று கணிக்கப் பட்டுள்ளது. பூர்வீகத் தாதுக்களின் கதிரியக்க தேய்வின் அரை ஆயுளை வைத்துத்தான் அந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டி ருக்கிறார். மெய்யாக அது விஞ்ஞானிகளின் துல்லிய காலக் கணிப்பாகப் பலர் ஏற்றுக் கொண்டாலும், அந்தக் கணக்குக்கு மூல காரணமான தாது உண்டானது எந்த யுகத்தில் ? எவற்றிலிருந்து எப்படிச் சேர்ந்து அந்தத் தாது விளைந்தது ? அதன் மூலப் பொருட்கள் தோன்ற எத்தனை யுகங்கள் ஆயின போன்ற கேள்விகள் மேலும் எழுகின்றன. நமது கருத்தாடலுக்குப் பிரபஞ்சத்தின் வயது 13.7 பில்லியன் ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது படிப்படியாக, ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்து, சிறிது சிறிதாய்ச் செம்மையாக்கிக் கடவுளே நமது காலவெளிப் பிரபஞ்சத்தைப் படைக்க 13.7 பில்லிய ஆண்டுகள் எடுத்திருக்கிறது. ஆயினும் பூரணம் அடையாத பூமியும் அதில் பூரணம் அடையாத மனிதப் பிறவிகள்தான் இதுவரைத் தோன்றியுள்ளன.

    பிரபஞ்சத்தை ஒரு பிரம்மாண்டமான நூலகமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வியந்து நோக்குகிறார். அதன் விண்வெளியில் உள்ள கரும்பிண்டம், கருஞ்சக்தி, கருந்துளைகள், கோடான கோடி காலக்ஸி ஒளி மந்தைகள், பில்லியன் கணக்கான பரிதி மண்டலங்கள், அண்டக் கோள்கள், துணைக் கோள்கள், அவற்றைப் பிணைத்துள்ள ஈர்ப்பு விசைகள், விலக்கு விசைகள் அத்தனையும் நூலகத்தில் முன்னமே எழுதப் பட்டு சீராக, வகையாக அடுக்கப்பட்டுள்ளன ! அந்த நூல்களை யார் எழுதி வைத்தார், எப்போது எழுதி வைத்தார், ஏன் எழுதி வைத்தார், எப்படி எழுதி வைத்தார் எந்த விதிகளைக் கையாண்டார் என்பதை அறிந்து கொள்ளவே நான் முனைகிறேன் என்று மொழிகிறார் ஐன்ஸ்டைன்.

    பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவது முதலில் ஒரு விஞ்ஞான ஆய்வு விளக்கமும் இல்லை; முடிவுமில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது. பிரபஞ்சம் தானாய்த் தோன்றி மாறி வருகிறது என்றாலும், கடவுள் படைத்தது என்றாலும் ஒன்றுதான்.

    பிரபஞ்சப் படைப்பாளி ஒரு மந்திரவாதியோ, மாஜிஸியனோ இல்லை. இரசாயனக் கதிர் ஏகமூலங்களின் (Radio Isotopes) அரை ஆயுள் தேய்வு நியதிப்படிப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும் என்று பல்வேறு விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார். அதாவது படைப்பாளியே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை உண்டாக்க 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்கிறது. இதுவரை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ள பெரு வெடிப்பு நியதியின் (The Big Bang Theory) ஆரம்பமே ஓர் அனுமான ஊகிப்புதான். மெய்யாக இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இதுவரை எந்த விஞ்ஞானியாலும் தர்க்கரீதியாக விளக்க முடியவில்லை. எல்லாம் மாறி, மாறிப்போகும் விஞ்ஞானத்தின் வெறும் அனுமான ஊகிப்புகள்தான். விஞ்ஞானம் பிரபஞ்ச ஆதி அந்தங்களை ஆராய முடியாது இடைப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டும் விளக்கம் அளிக்கிறது.

    காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

    விஞ்ஞானிகள் இதுவரை உயிர் என்றால் என்ன என்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ உயிரை உண்டாக்குவதில்லை. ஆங்கிலத்தில் உயிர் என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள இணைப்பைக் காட்டுபவை.

    இந்தப் பிரபஞ்சத்தின் உள்ளே இயங்கிவரும் காலக்ஸி ஒளிமந்தைகள், அவற்றில் உள்ள விண்மீண்கள், அண்டக் கோள்கள், கருந்துளைகள், கருஞ்சக்தி, கரும் பிண்டம், பூமியில் உள்ள பயிரினங்கள், உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாய், அடுத்தடுத்துச் சங்கிலித் தொடர்பில் பிறந்தவை. அதாவது அவை யாவும் இயற்கை விதியான “காரண-விளைவு நியதியைப்” (Cause & Effect Theory) பின்பற்றித் தோன்றியவை. தற்போதைய நவீனக் கணினி மேற் பார்க்கும் மோட்டார் வாகனம் விருத்தியாகச் சுமார் 100 ஆண்டுகள் எடுத்துள்ளன. எலும்புக் கூடு போன்று ஹென்றி ஃபோர்டு செய்த முதல் கார் எத்தனை முறை மாற்றம் அடைந்து செம்மையாகி மாறி யுள்ளது ? ரைட் சகோதரர் முதன்முதல் செய்த சைக்கிள் உறுப்புகளில் உருவான வான ஊர்தி 100 ஆண்டுகளில் சந்திரனுக்குச் செல்லும் ராக்கெட்டாய், சூரிய மண்டலத்தைத் தாண்டிய முதல் வாயேஜர் விண்கப்பலாய் முன்னேறியுள்ளது. கணினி மின்கருவி எத்தனை ஆண்டுகள், எத்தனை முறைகள் சீராகி நவீன வல்லமை மிக்க கணினியாக உருவாகி உள்ளது ? சார்லஸ் டார்வின் அறிவித்த மனித உயிரின விருத்திக் கோட்பாடு இயற்கை முறையில் எத்தனை தரம் உருமாறிச் செயல் மாறிச் சீராகித் தற்போதைய ஆறறிவு படைத்த மனிதனாய் உலவி வருகிறது ?

    உலகில் நிகழும் வினைகள் அனைத்தும் இரண்டு முறைப்பாட்டில் நேர்கின்றன. ஒன்று இயற்கை நிகழ்ச்சி : இரவு பகல் சுழற்சி. பருவக் காலச் சுழற்சி, இடி மழை வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம், எரிமலை போன்றவை யுகயுகமாய் நேரும் இயற்கையின் திருவிளை யாடல்கள் ! அதே சமயம் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ஜப்பான் அணுகுண்டு வீச்சுகள், ஆறு மில்லியன் யூதரைக் கொன்ற கோலோஹாஸ்ட் கொடூரம், ஈராக் படை யெடுப்பு, சமீபத்தில் நிகழ்ந்த ஈழப் போர் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்பு மனிதரால் உண்டாக்கப் பட்டவை. அதாவது இயற்கை செய்வதை மனிதர் செய்ய முடியாது. மனிதர் செய்வதில் இயற்கை ஈடுபடாது, தலையிடாது, தடுக்கவும் செய்யாது ! ஒரு சிலர் ஹிட்லராய் உருவா கிறார். ஒரு சிலர் அன்னை தெரேஸாவாகவும், ஆல்பர்ட் சுவைட்ஸராகவும் உருவாகிறார். அவற்றுக்குக் காரணம் என்ன ? சில மோட்டர் வாகனங்கள் மெதுவாகத்தான் ஓடுகின்றன ! சில வாகனஙள் வேகமாகச் செல்கின்றன. சில வாகனங்கள் அதி வேகத்தில் பந்தயக் கார்களாய்ப் போட்டி இடுகின்றன ! காரணம் அந்த மாதிரி வாகனங்கள் அத்தகைய பணிக்காகத் தயாரிக்கப் படுகின்றன. அதே காரணம் தான் பல்வேறு மனிதப் படைப்புக்கும் ஒத்து வருகிறது.

    படைப்புக்கு ஓர் உதாரண மாடல் : கருப்பையில் உருவாகும் சிசுவுக்குத் தாய் காரணமாகிறாள். பிறந்த பிறகே சிசு தானாக விருத்தி அடைகிறது. அதுபோல் தானாக உருவாகும் பிரபஞ்சம் முதலில் ஒரு படைப்பாளியின் கைத்திறனால் தோன்றி உதயமானது.

    மனித இயக்கத்தை ஓரளவு Y = MX + C (M என்பது மனிதனின் தனித்துவம்) (C என்பது மனிதனின் நிலைத்துவம்) (Y & X கால/வயது மாறுபாடுகள்) என்னும் ஓர் எளியச் சமன்பாட்டில் காட்டலாம். ஒரு சந்தர்ப்பத்தில் மனிதனின் இயக்கம் அவனது அப்போதுள்ள தனித்துவ & மனித நிலைப் பாடுகளால் நிர்ணயம் ஆகிறது. ஒரு மனிதன் 707 ஜெட் விமானத்தில் பயணம் செய்யும் போது அவன் விதி விமானியின் கையிலும், விமானத்தின் இயக்கத்திலும் சார்ந்துள்ளது. விமானத்தில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விமானி தவறு செய்தாலோ விமானப் போக்கு மாறிப் பயணிகள் பூமியின் ஈர்ப்பாற்றலுக்குப் பலியாவார். கடலருகில் மனிதன் உலாவச் செல்லும் போது அவன் விதி சுனாமி போன்ற எதிர்பாராத இயற்கைத் தாக்குதலில் சிக்கிக் கொள்ள ஏதுவாகிறது, இடி மின்னலில் நடக்கும் போது மின்னலின் தாக்குதலில் மனிதன் அடிபட்டு விதி மாறி உடனே உயிர் போகலாம். அதாவது பூமியில் வாழும் மனிதன் சதா காலமும் பூகோள விதியின் கைப் பொம்மையே தவிர பூரண விடுதலைப் பிறவி இல்லை.

    மனிதன் குறிப்பிட்ட ஊழ்விதி வேலிக்குள் தனித்தியங்கும் ஓர் உயிரியல் சுய யந்திரம் ! ஒவ்வொரு மனிதனுக்கும் இடப்பட்டுள்ள தனித்துவத்துக்கு அவனது ஊழ்விதியே காரணம் ! தாய் தந்தையரின் வெறும் டியென்ஏ (DNA) மட்டும் சேயின் தனித்துவத்துக்குக் காரணம் கூற இயலாது. ஒரு தாயிக்குப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் டியென்ஏ 100% ஒருமையில் இருப்பதில்லை. அவையும் ஓரளவு வெவ்வேறாகத் தனித்துவம் கொண்டுள்ளன. ஒரு சில கணினிகளை இன்னும் இயக்கி வருவது விண்டோஸ் 98 இயக்க ஏற்பாடு (Operating System), அல்லது விண்டோஸ் 2000, அல்லது விண்டோஸ் NT, தற்போது விண்டோஸ் XP, விண்டோஸ் Vista, விண்டோஸ் 7 இயக்கு ஏற்பாடுகளாகக் கணினியில் இடப்பட்டுள்ளன. மனிதனின் அனுதினப் பழக்கமும், தனித்துவ இயக்கமும் அவனது மூளை நினைவுக் களஞ்சியத்தில் (Brain Memory Units) ஆரம்பத்திலோ அல்லது அதற்குப் பிறகோ நிரப்பப்பட்டுள்ள நிகழ்ச்சிகளைப் பொருத்தவை. கணினி தினம் எழுப்பப் படுவது போல் காலையில் மனிதன் விழிக்கும் போது அவனை மீண்டும் சுய இயக்க மனிதனாய் ஆக்குவது அவனது நினைவுக் களஞ்சிய நிரப்புகளே ! நினைவுக் களஞ்சியத்தில் நினைவுகள் அழிந்து போனால் மனிதன் தான் யார் என்பதே மறந்து போய் மயக்க நிலைக்கு (Coma) வந்து விடுகிறது.

    மனிதன் பிறக்கும் போதே அவனது தலையில் “கணினித் தாய்மைப் பீடம் (Computer Mother Board), மூளை இயக்கி (CPU -Central Processing Unit) நினைவுத் தகுதி (Memory Capacity), இயக்க ஏற்பாடு (Operating System Like Windows XP, Vista or Window : 7) என்ன வென்று இயற்கை அல்லது ஊழ் விதி தேர்ந்தெடுத்துப் பதிவாக்கி விடுகிறது என்பது என் கருத்து. பிறந்த பிறகு மனிதன் அவற்றை ஓரளவு மேம்பாடு (Upgrade) செய்து கொள்ள அவனுக்குத் திறமை அளிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் மனிதனால் தனக்குப் பிறவியிலேயே இடப்பட்டுள்ள தாய்மைப் பீடம், மூளை இயக்கி, நினைவுக் களஞ்சியத்தைப் (Mother Board, CPU, Memory Units) பின்னால் அவனாலோ அல்லது எவனாலோ மாற்ற இயலாது ! இயக்க ஏற்பாடு (Operating System) மாறலாம் ! ஆதலால் மனிதன் ஊழ் விதியின் கைப்பிள்ளைதான் ! ஊழ்விதியின் தீராத ஒரு விளையாட்டுப் பிள்ளைதான். கடவுளை அதன் படைப்புகளில் ஒன்றான புவி மனிதன் கண்ணால் காண முடியாது.

    எப்படி அதை விளக்குவது ?

    வயிற்றில் தொப்புள் கொடியுடன் பின்னி வளரும் குட்டி யானை தன் தாயைக் காண முடியாது. வயிற்றிலிருந்து வெளிவந்த பின்னே குட்டி தாய் யானையைக் காண்கிறது. ஆதலால் பிரபஞ்சத்தில் அடைபட்டுப் போன மனிதன் இயற்கையின் தொப்புள் கொடி இணைப்பில் வாழ்கிறான்; மாள்கிறான்.

    அதுபோல் மனிதன் பிரபஞ்சப் படைப்பாளியைக் காண வேண்டு மென்றால் இயற்கையின் தொப்புள் கொடி அறுத்து பிரபஞ்சத்தை விட்டு வெளியேற வேண்டும்.

    கடவுளைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் அதன் படைப்புகள் மூலந்தான் நாம் விளக்க முடியும்.

    1. தெரிந்தவற்றை வைத்து தெரியாதவற்றை விளக்குவோம்.

    2. தெரியாவற்றை யூகித்து தெரிந்தவற்றை மேம்படுத்து வோம்.

    இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
    தெள்ளியர் ஆதலும் வேறு.

    இருவேறு உலகம் என்பவை ஆன்மீக உலகம், உலோகாயுத உலகம். சித்தாந்த ஞான உலகத்தின் இயற்கை விதிகள் வேறு. பௌதீக-ரசாயன உலகத்தின் இயற்கை நியதிகள் வேறு. திரு என்பது உலோகாயுதச் சொத்துக்கள். தெள்ளியர் என்பது ஆன்மீக ஞானிகள்.

    உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன வென்று விஞ்ஞானம் இதுவரை விளக்க முடிய வில்லை. உயிர் என்பது எவ்வித இரசாயன மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்ட தில்லை என்பது என் கருத்து. ஆத்மா ஓர் இயக்க சக்தி. ஆத்மா எந்த வாகனத்தில் (Car, Rail, Ship, Plane, Rocket or Man, Woman or Animals) நுழைகிறதோ அந்த வாகனத்தின் சாதனங்கள் ஆத்மாவின் இயக்க முறைக்கு வரையறையும், எல்லையும் வகுக்கிறது. ஊர்ந்து செல்லும் இலைப்புழு எப்படிப் பறந்து செல்லும் பட்டாம்பூச்சியாய் மாறிச் செல்கிறது ? வகுத்தான் வகுத்த விதி முறைப்படி நிகழும் ஒரு காட்சி இது. இப்படி செய்வது எது ? இது ஏன் நேர்கிறது ? இதுபோல் முட்டைக்குள் உருவாகும் குஞ்சுக்கு உயிர் எப்படி நுழைகிறது ? சிசு பிறக்கும் போது தாய்க் கருவில் உயிர் அதற்கு எப்படி நுழைகிறது ? மனிதன் இறந்த பிறகு போது உயிர் எங்கே போகிறது ?

    300 பேர் அமர்ந்து பறக்கும் ஆயிரக் கணக்கான ஜெட் விமானங்களைப் படைத்த மனிதனால் ஒரு பட்டுப் பூச்சியை, மினிமினியை உண்டாக்க முடியுமா ?

    மனிதனால் பூமியின் ஈர்ப்புச் சக்தியைக் காணமுடியுமா ? வகுத்தான் வகுத்த வகையில்தான் கோடான கோடி அகிலத்தில் வடிக்கப் பட்டுள்ளன.

    Monkey to Man

    குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது மெய்யானால், ஏனிப்போது அப்படிப் பிறப்ப தில்லை ? நிகழ்வதில்லை ? ஏன் இன்னும் குரங்குகள் வசிக்கின்றன ? ஏன் இப்போது குரங்குகளும், மானிடமும் தனித்தனியே பிறக்கின்றன ? ஐந்தறிவு மனிதக் குரங்கு எப்படி, எப்போது ஆறறிவு, ஏழறிவு படைத்த மனிதப் பிறவியாய் மாறியது ?

    100 ஆண்டுகட்கு முன்பு முதன்முதல் அமெரிக்க ஃபோர்டு அதிபர் ஆக்கிய பெட்டி மோட்டார் கார் எப்படிக் கூடாக இருந்தது ? இப்போது அது படிப்படியாக மேம்பட்டு 2015 இல் ஏரோ டைனாமிக் வடிவில், கணினி கண்காணித்து இயக்கும் நவீன மோட்டார் கார் எப்படி மாறி விட்டது !

    100 ஆண்டுக்கு முன்பு முதன்முதல் ரைட் சகோதரர் செய்த சைக்கிள் சக்கிர வானவூர்தி எப்படிப் படிப்படியாக மாறி ஜம்போ ஜெட் விமான மாகப் பறக்கிறது !

    குரங்கை முன்மாதிரியாக வைத்துக் கடவுள் படிப்படியாக மேம்படுத்தி, ஜிம்பான்சி மனிதக் குரங்கைப் படைத்தது. பிறகு மனிதக் குரங்கை மாதிரியாய் வைத்து, ஐந்தறிவுடன் ஆறாம் அறிவு, ஏழாம் அறிவும் சேர்த்து, கடவுள் மனிதப் பிறவியை உருவாக்கியது. தாய்மைப் பெண்ணே கடவுள் படைத்த இறுதி மனிதப் பிறவி.

    அதற்குப் பிறகு கடவுள் படைப்புத் தொழிலையே நிறுத்திக் கொண்டது !
    நம் கண்முன் ஊர்ந்திடும் இலைப்புழு பறந்திடும் பட்டாம் பூச்சியாய் ஏன், எப்படி மாறுகிறது ?

    உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன ?

    இந்த வினாக்களுக்கு விடை எவருக்கும் தெரியாமல் இவை இன்னும் மர்மமாகவும் புதிராகவும் இருந்து வருகின்றன.

    +++++++++++++

    இக்கட்டுரையில் “இயற்க்கை, பேரியற்க்கை, தொக்கி நிற்க்கும், பிரபஞ்சத்திற்க்கும், எதற்க்காக, எழுதுவதற்க்கு, இருப்பதற்க்கு என வருகின்றன. மன்னிக்கவும் நண்பர் செந்தில். இரண்டு வல்லின ஒற்றுகள் [ற்க்] [ற்ச்] [ட்ச்] இணைந்து வாரா. இயற்கை, பேரியற்கை, எதற்கு, காட்சி, இவையே ஏற்புடையன.

    சிறந்த ஆய்வுக் கட்டுரை. பாராட்டுகள்.

    சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *