கடிதம் கிழிந்தது

This entry is part 6 of 21 in the series 8 ஆகஸ்ட் 2021

 

 

ஜோதிர்லதா கிரிஜா

(1.7.1971 கல்கியில் வந்தது. “ஜோதிர்லதா கிரிஜா கதைகள்” எனும் கலைஞன் பதிப்பகத்தின் சிறுகதைத் தொகுதியில் உள்ளது.)

      காயத்திரி   அந்த அறையின் கதவைச் சாத்திவிட்டுப் பெரிய நிலைக் கண்ணாடியின் முன் நின்று  தன்னைத்தானே நன்றாகப் பார்த்துக்கொண்டாள். தனக்கு முன்பின் தெரியாத ஒருத்தியின் அழகை ஆராய்வது போன்ற தன் செய்கையில் ததும்பிய கிறுக்குத்தனத்தை நினைத்து அவள் உள்ளுக்குள் நகைத்துக்கொள்ளவும் செய்தாள்.

        ‘என் அழகுக்கு என்ன குறைச்சலாம்? கருகருவென்று அடர்த்தியாக இருக்கும் சுருண்ட கூந்தல் பின்னும் போது கைக்கு அடங்காததால் கை   வலிக்கிறதென்று அம்மா எத்தனை தடவை அலுத்துக் கொண்டிருக்கிறாள்!’ – தலைப் பின்னலை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டு அவள் பெருமையோடு நின்றாள். ‘என் கூந்தலழகு ஒன்றே போதுமே!’

      அடுத்தபடி அவள் தன் கண்களை நோக்கினாள்: ‘அடேயப்பா! என் கண்களுக்கு இருக்கிற அழகு வேறு யாருடைய கண்களுக்கு வரும்? கருமையான என் விழிகளின் அழகை அடர்த்தியான புருவங்கள் என்னமாய் எடுத்துக் காட்டுகின்றன! இருட்டிலே மின்மினிப் பூச்சியின் வெளிச்சம் பளிச்சென்று தெரிகிற மாதிரி!  … ரொம்ப உயரமாய் இருக்கிற பெண்களிடம் காணப்படுகிற ‘ஆண்பிள்ளைத்தனம்’ என்னிடம் இல்லை. ஏனென்றால், நான் நடுத்தர உயரம்தான். ஊளைச் சதை போடாத என் உடம்பு அளவான வாளிப்போடு எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது! ‘மூக்கும் முழியுமாய்’ நான் தான் எவ்வளவு அழகாய் இருக்கிறேன்! மொத்தத்தில் எனக்கென்ன குறைச்சல்?’ – சட்டென்று அவள் முகம் வாடி, கண்களில் கண்ணீர் ததும்பிற்று.

       ‘எல்லாமிருந்து என்ன பயன்? நான் கறுப்பு… அட்டைக்கரி… தொட்டால் ஒட்டிக்கொள்ளுகிற கறுப்பு…’

      தன்னை இதற்கு முன்னால் ‘பெண் பார்க்க’ வந்தவர்களை யெல்லாம் அவள் வரிசையாக நினைவுபடுத்திப் பார்த்தாள்.

      முதன் முதலாய் அவளைப் பார்க்க வந்தவன் நல்ல சிவப்பு. அவனையும் அவன் பார்த்த பார்வையையும் கவனித்ததுமே அவளுக்குப் புரிந்துவிட்டது அவன் தன்னை ஏற்க மாட்டான் என்பது. கூட வந்திருந்த பெரியவர் பையனின் காதைக் கடித்துவிட்டு, காயத்திரி நல்ல அழகுதான் என்றும், ஆனாலும் மிகவும் கறுப்பாய் இருப்பதால் பையனுக்குப் பிடிக்கவில்லை என்பதையும் ஒளிவுமறைவு இல்லாமல் தெரிவித்துவிட்டார். காயத்திரிக்கு வருத்தமாக இருந்தாலும் அதிர்ச்சியாக இல்லை. உண்மையைச் சொல்லப் போனால், அவன் சம்மதித்திருந்தால்தான் அவள் அதிர்ந்து போயிருந்திருப்பாள். ‘ஊருக்குப் போய்க் கடிதம் எழுதுவதாக’க் கதைக்காமல் உண்மையைச் சொல்லிவிட்டு அவர்கள் போனதால், கடிதம் வரும் வரையில் தன்னைப் பாதித்திருந்திருக்கக் கூடிய பரபரப்பிலிருந்து தான் காப்பாற்றப்பட்டதில் அவளுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சிதான். செக்கச் செவேரென்றிருக்கிற ஒரு மனிதன் தன் மனைவியும் தன்னைப் போல் சிவப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பியதில் இருந்த நியாயம் அவளுக்குப் புரிந்தது.

      ஆனால், ‘நியாயம்’ என்கிற சொல்லுக்குரிய பொருள் தனிப்பட்ட மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்றவாறு வேறுபடும் என்பதை உணர்ந்துகொண்டு ஆத்திரமும் எரிச்சலும் அடைகிற நிலைக்கு, அடுத்து  ஒருவன்  அவளைப்  ‘பெண்பார்க்க’ வந்த போது அவள் ஆளானாள்.  இரண்டாவாதாக அவளைப் பெண்பார்க்க வந்த இளைஞனின் நிறம் அவள் அதிகக் கறுப்பா, அல்லது அவண் அதிகக் கறுப்பா என்று கண்டுபிடிக்க முடியாதபடி கிட்டத்தட்ட அவளது கறுப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருந்ததைப் பார்த்த போது, அவன் தன்னை நிராகரிக்க மாட்டான் என்று எண்ணியவளாய் அவள் ஆறுதலுற்றாள். பையனுடன் வந்திருந்த அவன் தகப்பனார் ‘ஊருக்குப் போய் எழுதுவதாக’ச் சொன்னார்.

      அவர்கள் புறப்பட்டுப் போய் இரண்டு நாள்களுக்கெல்லாம் அந்தப் பையனின் தகப்பனாரிடமிருந்து கடிதம் வந்துவிட்டது. ‘பெண் கறுப்பாக இருப்பதால் பையனுக்குப் பிடிக்கவில்லை என்று, துளியும் நியாய உணர்ச்சியின்றி, அவர் எழுதி இருந்ததைப் படித்த போது காயத்திரிக்குச் சீற்றத்தோடு சிரிப்பும் வந்தது. தானும் நல்ல கறுப்புத்தான் என்பதைப் பற்றிய நினைப்பே இல்லாமல், தான் பார்த்துவிட்டு வந்த ஒரு பெண்ணை, ‘கறுப்பு, அதனால் பிடிக்கவில்லை’ என்று என்று சொல்லுகிற அளவுக்கு, குறைந்த பட்ச நேர்மை உணர்வு கூட இல்லாத அவனது போக்கை நினைத்து அவள் குமைந்தாள். ‘அடேயப்பா! இவன் இருக்கிற கறுப்புக்கு, என்னைப் பார்த்துக் கறுப்பு என்று சொல்லுவதற்கு வாய் கூசவில்லையோ! தானும் அட்டைக்கரிதான் என்பதை மறந்து, ‘பெண் கறுப்பு. அதனால் பிடிக்கவில்லை’ என்று சொல்லுவதற்கு ஓர் ஆண்பிள்ளைக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்?’ – நினைக்க, நினைக்க காயத்திரிக்கு ஆத்திரம் எல்லை கடந்து பொங்கிற்று.

      தன் பைனின் நிராகரிப்பைத் தெரிவித்து அந்தப் பெரியவரிடமிருந்து கடிதம் வந்ததற்கு மறு நாள் காயத்திரியின் மனத்தில் திடீரென்று குறும்புத்தனம் மிக்க ஓர் எண்ணம் முளைத்தது. அப்பா இல்லாத நேரம் பார்த்து அவரது அலமாரியைக் குடைந்து, அதிலிருந்து அந்தக் கறுப்புப் பையனின் முகவரியைக் கண்டுபிடித்து எடுத்து, தான் செய்வது சரிதான் என்கிற துணிச்சலோடு அவள் சுடச்சுட அவனுக்கு ஒரு கடிதம் எழுதினாள்.                                                                   ‘அன்புமிக்க நண்பரே!                                                           ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்பது போல் கன்னங்கரேரென்றிருக்கும் தங்களுக்கு என்னைப் போய்க் கறுப்பு என்று விமரிசனம் செய்வதற்கு வெட்கமாயில்லையோ!    நீங்கள் ஒரு செக்கச் சிவந்த பெண்ணையே தேர்ந்தெடுத்து மணந்துகொண்டாலும் கூட, உங்களுக்குப் பிறக்கப் போகிற பெண் குழந்தைகள் உங்களைக் கொண்டு கறுப்பாகப் பிறந்துவிட்டால், இன்று என்னைத் தாங்கள் மறுதலித்தது போல், அவர்களும் மறுதலிக்கப்படுவார்கள் என்பதை மறவாதிருபீர்களாக!  ஆண்டவன் தங்களுக்கு நியாய உணர்ச்சியை நல்கட்டும்…’ – இப்படி ஒரு கடிதத்தை எழுதிப் போட்டுவிட்டு, மகத்தான காரியமொன்றைச் சாதித்துவிட்டவளைப் போல், பழி வாங்கிவிட்ட பேருவகையோடு அவள் குமுறிக்கொண்டிருந்த தன் மனத்தின் எரிச்சலைத் தணித்துக் கொண்டாள்.

                     அன்று மாலை,  ‘இவன் இருக்கிற கறுப்புக்கு வாய் வேறேயா?’ என்று தன் தாயிடம் அவள் முறையிட்ட போது, ‘நாம்தான் கறுப்பாய் இருக்கிறோம். நமக்கு வருகிற பெண்டாட்டியாவது சிவப்பாய் இருக்கட்டுமே என்று அவனுக்குப் பேராசை!’ என்று அவள் மகளுக்குச் சமாதானம் கூறிவிட்டு எரிச்சலோடு சிரித்தாள். அதற்குப் பின்னர் அவளைப் பார்க்க வந்த இருவரும் ‘கறுப்பு’ என்பதாலேயே அவளை ஏற்க மறுத்துச் சென்றார்கள். இதற்கிடையில், கறுப்புப் பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லிக் காஞ்சிப் பெரியவர் சங்கராசாரிய சுவாமிகள் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்து காய்த்திரிக்குச் சிரிப்பு வந்தது.  ‘வரதட்சிணை விஷயத்தில் கூட அவரது கோரிக்கைக்குச் செவி சாய்க்காத இளைஞர்கள் கறுப்புப் பெண்களையாவது, கல்யாணம் செய்துகொள்ளுவதாவது!’

               நாள்கள் செல்லச் செல்ல, பெற்றோர்க்குத் தான் ஒரு சுமையாகி விட்டதை மேலும் மேலும் உணரத் தலைப்பட்டு அவள் உள்ளூற வருந்தலானாள். படித்த படிப்பு வீண் போகாமல் ஏதாவது வேலையில் அமர்ந்து தன்னாலான உதவியைப் பெற்றோருக்குச் செய்யலாமென்றால், அதற்கும் அந்தக் கிராமத்தில் வழி இல்லாதிருந்த நிலையை நொந்தபடி அவள் நாள்களை எண்ணிக் கொண்டிருந்தாள். தன்னை விட அதிக மனமுறிவுக்கு ஆளாகிக் கவலையே உருவாக வளைய வந்துகொண்டிருந்த பெற்றோரைப் பற்றி நினைக்க, நினைக்க, பெண்ணாய்ப் பிறக்கக் காரணமாயிருந்த தன் தலையெழுத்தை அவள் பழிக்கலானாள். 

      இவ்வாறாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அவளைப் பெண்பார்த்துச் சென்ற ஆறு இளைஞர்களாலும் ‘கறுப்பு’ என்கிற காரணத்தால் நிராகரிக்கப்பட்டதன் பிறகு, அந்த நிராகரிப்பு விளைவித்த கசப்புக்குப் பழக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படாதிருக்கும் அளவுக்கு மனம் தேறிப் பக்குவப்பட்டும் விட்ட காயத்திரி, தன்னைப் படைத்த கடவுளின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு,  ‘ஒரு பெண்ணைப்  படைத்த அந்த ஆண்டவன் அவளுக்கென்று ஓர் ஆணையும் படைத்தே இருப்பான்; ஆயினும் அவனைச் சந்திக்கும் வேளைதான் இன்னும் வரவில்லை’ என்று முடிவு கட்டி, அந்த முடிவால் கிடைத்த போலியான ஆறுதலில் தன் மனக்குமுறலைச் சமன்படுத்திக் கொள்ளவும், தன் திருமணம் பற்றிய பிரச்சினை குறித்து யோசித்து மண்டையைக் குழப்பி மனத்தை அலட்டிக் கொள்ளாதிருக்கவும் கற்றுக்கொண்டு அமைதியாக இருக்கலானாள்.

      … இன்று ஏழாவது நபராக அவள ஒருவன் ‘பார்க்க’ வருவதற்கிருந்தான். இன்றைப் பெண் பார்க்கும் படலத்தின் விளைவு  சாதகமானதாகத்தான் இருக்கும் என்று தெரிந்த காரணம் எதுவுமின்றி அவள் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது. நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருந்த தன் மனத்தின் காரணமற்ற பரபரப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள அவள் பெருமுயற்சி செய்த வண்ணமாயிருந்தாள்.

      கடைசியில் அந்த நேரமும் வந்தது. இந்த முறை அவளைப் பார்க்க வந்திருந்த பையன் தன் அண்ணனையும் உடனழைத்து வந்திருந்தான். பொது நிறமாக அந்தப் பையன் துருதுருவென்று களையாக இருந்ததைக் காயத்திரி கவனித்தாள். ‘பிடிக்கவில்லை’. ‘பிடிக்கிறது’ என்றெல்லாம் அபிப்பிராயம் கொள்ளும் மனநிலையை அவளை இதற்கு முன் பார்த்துச் சென்றவர்கள் அறவே பறித்துவிட்டமையால், காயத்திரி எந்த விதமான எண்ணமும் கொள்ளுவதை விடுத்து அமைதியாக எழுந்து உள்ளே போனாள். அவர்களும் ஏனையோரைப் போலவே ‘போய் எழுதுவதாக’ச் சொல்லிச் சென்றார்கள்.

      … ‘பணமே! உன்னாலென்ன குணமே?’ எனும் வேதநாயகம் பிள்ளையின் பாட்டைப் பாடியவண்ணம் சமையலறையில் தயிர் கடைந்துகொண்டிருந்த மனைவியின் முன் கையில் பிடித்த கடிதமும், வாயில் வழிந்த சிரிப்புமாக வந்து நின்ற ராமநாதன், “விசாலம்! ‘பணமே, உன்னாலென்ன குணமே’ன்னா பாடிண்டிருக்கே? அடி, பயித்தியக்காரி! பணம்தாண்டி இந்தக் காலத்துலே பிரதானம். அது இருந்தா எதை வேணும்னாலும் சாதிக்கலாம்கிறதுக்கு இதோ பாருடி பிரத்தியட்ச உதாரணம்!” என்றவாறு அவள் முகத்துக்கு நேரே ஒரு கடிதத்தை விரித்துக் காட்டினார்.

      தொட்டி முற்றத்தில் கவிந்திருந்த பாசியைப் போக்கும் முயற்சியில் ‘வறட் வறட்’ என்று விளக்குமாற்றால் அதைத் தேய்த்துக் கொண்டிருந்த காயத்திரி, தேய்ப்பதை நிறுத்திவிட்டுத் தந்தையை நிமிர்ந்து பார்த்தாள். முகமெல்லாம் சிரிப்பாக அவர் தன்னைத் திரும்பிப் பார்த்ததைக் கண்டதும்,  பாதிக்கு மேல் விளங்கிவிட்ட வெட்கத்தோடு அவள் அங்கிருந்து எழுந்து சென்றாள். ஆயினும், ‘பணமே, உன்னாலென்ன குணமேன்னா பாடிண்டிருக்கே? அடி, பயித்தியக்காரி என்ற அவர் சொற்களின் உள்ளடக்கம் புரியாத குழப்பத்தோடும், அதைத் தெரிந்துகொள்ளும் ஆவலோடும், அவள் சமையலறைக் கதவுக்கு அப்பால் தன் காதுகளைத் தீட்டிக்கொண்டு நின்றாள்.

       “கடுதாசி யாரு போட்டிருக்கா? என் கையெல்லாம் மோர்ப் பிசுக்கு. நீங்கதான் படிச்சுக் காட்டுங்களேன்.”

       “காயத்திரியைப் பார்த்துட்டுப் போன பையன் தான் போட்டிருக்கான்.”

       “என்னவாம்?”

       “காயத்திரி கறுப்பா யிருக்கிறதுனால …”

       “பழைய பல்லவிதானாக்கும்! அதுக்கு ஏன் உங்களுக்கு இவ்வளவு கும்மாளம்?”

       “முழுக்கக் கேளுடி. காயத்திரி கறுப்பா யிருக்கிறதுனால, நாம கொடுக்கிறதாச் சொன்ன மூவாயிரத்தோட, இன்னொரு ஆயிரம் சேர்த்துக் குடுத்தா அவளைப் பண்ணிக்கத் தயார்னு எழுதி யிருக்கான். நல்ல வேளை! கூட ஆயிரம் ரூபாதானே செலவு? போனாப் போறது. எப்படியாவது காயத்திரிக்குக் கல்யாணம் நடந்தா சரி.”

       அந்த இளைஞன் தன் பெண்மையையே காலடியில் போட்டு நசுக்குவதாய்த் தோன்றிய மனக்குமுறலில் காயத்திரிக்குப் படபட வென்று வந்தது. ‘ஆயிரம் ரூபாய் அதிகப்படியாய் வரதட்சிணை கொடுத்தால், கறுப்பு சிவப்பாகி விடும் போலும்! என்ன கேவலம்! இந்த ஆண்பிள்ளைகள்தான் பெண்களை எப்படியெல்லாம் இழிவு படுத்துகிறார்கள்!’ – சட்டென்று அவள் பார்வை சுவரில் தொங்கிக்கொண்டிருந்த சுப்பிரமணிய பாரதியாரின் படத்தின் மீது விழுந்தது. ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று அந்தப் பெருங் கவிஞர் பாடிச்சென்றதை நினைவு கூர்ந்த அவளுக்கு ‘ஓ’வென்று ஒரு குரல் வாய்விட்டு அழ வேண்டும் போல் இருந்தது.

      அவள் தன்னுள் பீரிட்டெழுந்த உணர்ச்சிகளை உள்ளடக்கிய வண்ணம் தன் பெற்றோர் முன் போய் நின்றாள்:  “நான் ஒண்ணும் அவனைப் பண்ணிக்கத் தயாராயில்லை.  கூட ஆயிரம் ரூபாய் கொடுத்தாப்ல என் கறுப்பு செவப்பாயிடுமாக்கும்!”

       உதடுகள் துடிக்க மகள் கேட்ட ரோசம் நிறைந்த நியாயமான கேள்விக்கு என்ன பதிலைச் சொல்லுவது என்று  தோன்றாதவரய் அவர் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு விழிகள் விரிய அவளைப் பார்த்தபடி திகைத்து நின்றார்.

       “வெண்ணெய் திரண்டு வர்ற சமயத்துலே தாழி உடைகிற மாதிரி இத்தனை பிள்ளைகள் பார்த்துட்டுப் போனப்புறம் தெகைஞ்சிருக்கிற கல்யாணத்தை நீயே கெடுத்துக்காதேடி, காயத்திரி! நம்ம பொண்ணுக்கும் கல்யாணம்னு ஒண்ணு ஆகப்போறதான்னு கவலைப்பட்டு ராப்பகலாய் நாங்க தூங்காம இருக்கிறது எனக்குத்தானே தெரியும்! உனக்கென்னடி?  இள ரத்தம்! சட்டம் பேசுவே…” என்றாள் விசாலம்.

      ராமநாதன் பேசாமல் நின்றார். காயத்திரி மேற்கொண்டு வாதாடாமல் தன்னறைக்குச் சென்று கடிதெமெழுதலானாள்.

       ‘அய்யா, ராமதுரை அவர்களே! கூட ஓராயிரம் கொடுத்தால், என் கறுப்பு உம் கண்களுக்குச் சிவப்பாகத் தெரியும் போலும்! உம்மைப் போன்ற பணப் பிசாசுக்கு வாழ்க்கைப்படுவதை விட நிஜப் பிசாசுக்கு வாழ்க்கைப் படுவதே மேலென்று நான் நினைக்கிறேன். உம்மை மணக்க நான் தயாராக இல்லை என்பதை அறிவீராக. உம்மை மணக்கப் போகும் பெண்ணை ஆண்டவன் காப்பாராக! – இப்படிக்கு காயத்திரி.’

      கடிதத்தை எழுதி முடித்து அதை ஒரு புத்தகத்துள் வைத்துவிட்டுத் தலை நிமிர்ந்த காயத்திரி தந்தை தன்னை நோக்கி வருவதைக் கண்டு எழுந்து நின்றாள்.

       “அம்மா, காயத்த்ரி! உலகம்கிறது நீயும் நானும் விரும்புற மாதிரியோ எதிர்பார்க்கிற மாதிரியோ இருக்காதம்மா. கூட ஆயிரம் ரூபாய் கொடுத்தா, உன் கறுப்புக்கு அது நஷ்ட ஈடுன்னு அவன் நினைக்கிறான். அப்படி நினைக்கிறது எவ்வளவு கேவலம்கிறது எனக்குத் தெரியாதாம்மா? … அதனாலே உன் மனசு எவ்வளவு புண்படும்னு எனக்கு நன்னாப் புரியறது, காயத்திரி! என்னம்மா செய்யறது? முள்ளை முள்ளாலதானே எடுக்கணும்? உன் தோற்றத்துலே இருக்கிற குறையைப் பணத்தாலே அழிக்க முடியறப்போ அப்படிச் செய்ய மாட்டேன்னு நீ  பிடிவாதம் பிடிச்சா, அதனாலே யாருக்கென்ன லாபம்?… எனக்கும் வரவர உடம்பு தள்ளல்லே. வயசாயிண்டிருக்கு, பாரு! காலா காலத்தில என் கடமைகளை முடிச்சுட்டேன்னா, நிம்மதியாக் கண்ணை மூடுவேன்!” என்று தழுதழுத்த குரலில் கூறி முடித்த அவர் கண்கள் கலங்க நின்ற போது, காயத்திரியின் மன்ம் நெகிழ்ந்து போயிற்று.

      தன்மானம் மிகுந்த ஒரு படித்த பெண்ணின் நியாயமான அருவருப்பையும் ஆத்திரத்தையும் புரிந்துகொண்டு பேசிய அவர் சொற்கள் அவள் மனத்தைத் தொட்டு வேதனை செய்தன.

       “சரிப்பா! உங்க இஷ்டப்படியே செய்யுங்கோ.  … என்னப்பா பார்க்கறேள்? மனப் பூர்வமாத்தாம்ப்பா சொல்றேன் …”

       ராமநாதன் அவ்விடம் விட்டகன்றதும், காயத்திரி ராமதுரைக்குத் தான் எழுதி வைத்திருந்த கடிதத்தைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்தாள்.

*******

Series Navigationஎனக்குப் புரியவில்லைகுரு அரவிந்தனின் ஆறாம் நிலத்திணை
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *