கடைசிப் பக்கம்

This entry is part 25 of 29 in the series 3 நவம்பர் 2013

 

சென்னை சென்ட்ரல். வெள்ளிக் கிழமை இரவு. திருவனந்தபுரம் மெயில் கிளம்ப இன்னும் நேரம் இருந்தது. முதல் வகுப்புப் பெட்டி. உள்ளே சிகரெட் பிடிக்க முடியாது. இறங்கும் வழியில் நின்று கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தார் இயக்குனர் மாலன். .

 

“எதற்கு இப்படி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடவேண்டும் ? நண்பனின் மரணச் செய்தி கேட்டதிலிருந்து சொல்லில் விவரிக்க முடியாத துக்கமும், பயமும் தொற்றிக்கொண்டது. அந்தப் பயம்தான் என்னை இப்படித் துரத்துகிறதா ? எத்தனயோ வெற்றிப் படங்களைக் கொடுத்தவன் நான். என்றாலும் சொந்தமாக எடுத்த முந்தைய இரண்டு படங்களும் படுத்துவிட்டனவே, அந்த தோல்வி துரத்துகிறதா ?”

 

நினைத்துக்கொண்டிருக்கும்போதே சிகரெட் சுருங்கிக் கையைச் சுட்டது. அதைச் சொடுக்கி எறிந்து இன்னொன்றைப் பற்றவைத்தார். வண்டி கிளம்பி மெதுவாக நகரத் தொடங்கியது. ஒரு இளைஞன் ஓடிவந்து ஏற முயற்சித்தான். கைகொடுத்துத் தூக்கி உள்ளே இழுத்து, “இது ஃபர்ஸ்ட் கிளாஸ் கம்பார்ட்மென்ட்” என்றார். “தேங்க்ஸ்! ஐ நோ! ” என்று சுருக்கமாக நன்றி சொல்லி அவரை ஒதுக்கி விட்டு உள்ளே சென்று விட்டான். மாலன் மறுபடி எண்ணங்களில் ஆழ்ந்தார். அந்த சிகரெட்டும் முடிந்தது. புகைத்தது போதும் என்று தோன்றவே அவருடைய இடத்துக்குச் சென்றார். அந்த இளைஞன் அவருடைய இருக்கையில் உட்கார்ந்திருந்தான்.

 

“இது என்னுடைய சீட். நீங்க பெட்டி மாறி வந்திட்டீங்க போலிருக்கு”

 

“ஸாரி! இங்க யாரும் இல்லைன்னு நெனெச்சு உட்கார்ந்திட்டேன்”

 

அந்த இளைஞன் எழுந்து நேர் எதிர் இருக்கையில் அமர்ந்தான்.

 

பார்வையில் இருக்கட்டும் என்று அவர் பெட்டியை எதிர் இருக்கையின் கீழே வைத்தது தப்பாய்ப் போயிற்று.

 

“பரவாயில்ல; என் பெட்டியை இங்கேயே கீழே வச்சிருந்தா உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்”

 

அவனைப் பார்த்தால் முதல் வகுப்பில் பயணம் செய்யுமளவுக்கு வசதி படைத்தவனாகத் தோன்றவில்லை. பழுப்பு நிறத்தில் பைஜாமா, ஜிப்பா. ட்ரிம் செய்யாத மீசை, தாடி. கலைந்த தலை. சாதாரண ஷெல் ஃப்ரேமில் மூக்குக் கண்ணாடி. அதிலும் ஒருபுறம் திருகாணிக்குப் பதில் குண்டூசி குத்தி மடித்து விட்டிருந்தது. முதுகில் மாட்டிக் கொண்டு ஒரு கறுப்புப்பை; தோளில் தொங்கும் ஒரு ஜோல்னா பை.

இவன் யாராயிருந்தால் என்ன, இவனோடு பேச ஏதும் இல்லை. தெரியாதவனாய் இருக்கும் வரை நல்லது. மேற்கொண்டு அவனைப் பார்க்காமல், பேசாமல், சமீபத்தில் வாங்கிய ஆங்கில நாவலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.

 

ஒரு மணி நேரமாவது ஆகியிருக்கும். வண்டியின் வேகம் குறைந்துகொண்டே வந்து வண்டி நிற்கும் போலிருந்தது. படிப்பதைச் சற்று நிறுத்திவிட்டுப் புத்தகத்தை மூடாமல் நிமிர்ந்து பார்த்தார் மாலன். எதிரில் அமர்ந்திருந்தவன் அவரைப் பார்த்துச் சிரித்து “அரக்கோணம்! ஆனால் வண்டி இங்கே நிற்காது; காட்பாடிதான். எதிர்ல ஏதாவது வண்டி க்ராஸ் ஆகுது போல” என்றான். கறுப்புத் தாடிக்கு நடுவே அவனுடைய பற்கள் பற்பசை விளம்பரம் போல வெளீரென்று பளிச்சிட்டன.

 

இவன் போன்ற ஆட்களுக்கு என்ன பதில் சொன்னாலும் அதைச் சாக்கிட்டு ஒரு ஆரம்பமாக்கிப் பேச ஆரம்பித்து விடுவார்கள் என்று அவருக்குத் தெரியும். தன்னுடைய தகுதிக்கும் அந்தஸ்துக்கும் பேசத் தகுந்தவன் அவன் அல்ல என்றும் தோன்றியது. அதனால் அவனுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் மெலிதாகப் புன்னகைத்தார். ஆனால் அவரின் புன்னகையையே உரையாடலைத் தொடர்வதற்கு அங்கீகாரமாக எடுத்துக் கொண்டு அவன் பேச ஆரம்பித்தான்.

 

“ஸார், நீங்க டைரக்டர் மாலன்தானே? எவ்ளோ பெரிய ஆளு! உங்களை இவ்வளவு கிட்டத்தில பார்ப்பேன்னு நெனைச்சுக்கூட பார்த்ததில்ல! ரொம்ப சந்தோஷமா இருக்குங்க ஸார் ! என் பேரு பாண்டியன். சொந்த ஊரு சேலம் பக்கத்தில கிராமம். பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி படிச்சிருக்கேன். உங்க படம்னா உசிரு. ஒரு படம் கூட மிஸ் பண்ணினதில்லை. முதல் நாள், முதல் ஷோ போயிடுவேன். காலேஜ் டேய்ஸிலையே கதை நெறையா எழுதியிருக்கேன். நாடகம் கூட போட்டுருக்கேன். நெறைய சொத்திருக்கு. அதனால வேற வேலை எதுக்கும் போகாம சினிமாவில பேர் வாங்கணும்னு ஒரே லட்சியத்தோட சென்னையில அலைஞ்சிகிட்டிருக்கேன். ஆனா இதுவரைக்கும் சான்ஸ் எதுவும்  கெடைக்கல. எங்க அப்பாருக்கு ஒடம்பு சரியில்லேன்னு போன்ல சொன்னாங்க. அதான் ஓபன் டிக்கெட் வாங்கிட்டு ஒடனே ஓடியாந்திட்டேன்”

 

கிராமத்துத் தமிழைக் கலந்து அவன் பேசியது வித்தியாசமாக இருந்தது. அவரைப்பற்றிச் சொன்னது பெருமையாக இருந்தது. இதற்கு மேலும் எதுவும் பேசாமல் இருந்தால் நாகரிகமாக இருக்காது என்று பேசத் தொடங்கினார்.

 

“நான் ஒண்ணும் பெரிய ஆளு இல்ல பாண்டியன்; உங்க மாதிரி சாதாரண ஆள்தான். நீங்களும் முயற்சி செஞ்சா என் மாதிரி வரலாம். சாதிக்க முடியாத விஷயம் எதுவும் இல்ல. உழைக்கணும் ! நான் அதத்தான் செஞ்சேன். நீங்க கொஞ்சம் வித்தியாசமான ஆளா தெரியறீங்க. நெறையா சொத்திருக்குன்னீங்க; வசதியான ஆள்தான். ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் எடுத்திருப்பீங்க. ஆனா உங்க தோற்றமும், உடையும் அதுக்கேத்த மாதிரி இல்லையே ! கண்ணாடி கூட ஒடஞ்ச கண்ணாடி போட்டிருக்கீங்க. நெறையா ஒதைக்குது” என்று சொல்லி அவனைக் கேலியாகப் பார்த்தார்.

 

“ஒடஞ்ச கண்ணாடி இல்ல ஸார், ஒடஞ்ச ஃபிரேம் ! கெளம்பும் போது ஸ்க்ரூ கழண்டிடுச்சி. அவசர நேரத்தில கடைக்கா போய்ட்டிருப்பாங்க? குண்டூசி கெடைச்சுது. எடுத்து முடிக்கிட்டேன். வல்லவனுக்குக் குண்டூசியும் ஆயுதம்!”

 

பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மறுபடியும் அதே வெளீர்ச் சிரிப்பு! சிறிது இடைவெளி விட்டு பேச்சைத் தொடர்ந்தான்.

 

“வசதியானவன்னு தெரிஞ்சா சிங்காரச் சென்னையில சும்மா விட்டிருவாங்களா, ஸார் ? லட்ச லட்சமா கொண்டா, சினிமா சான்ஸ் வாங்கித் தரேன்னு ஒட்டிக்கிடுவானுங்க, இல்லையா ? அதான் இந்த வேஷம். இதப் பாருங்க” என்று மாட்டியிருந்த கறுப்புப் பையிலிருந்து ஒரு சின்ன கைப்பை எடுத்து ஜிப்பைக் கொஞ்சமாகத் திறந்து காண்பித்தான். உள்ளே ஐநூறு ரூபாய் கட்டு முழுதாக இரண்டும், உதிரியாகக் கொஞ்சம் ரூபாய் நோட்டுகளும் இருந்தன.

 

“ஒரு லக்ஷத்து சொச்சம் ரூபாய் ! பணமாக இதில் கால்வாசி கூட என் கையில் இல்லை;  ‘கவலைப் படாதே, நான் உனக்குப் பணம் தருகிறேன், உடனே வா’ என்று சொன்ன நண்பனும், நான் போய்ப் பார்ப்பதற்குள் மேலுலகம் போய்விட்டான்” என்று நினைத்து வருத்தப்பட்டார் மாலன்.

 

“என்ன ஸார் திடீர்னு டவுனாயிட்டீங்க ? ஆனா மொதல்லிருந்தே இப்படித்தான் இருக்கீங்க. அப்ப நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதானா ஸார் ? “ என்று அவர் வாயைக் கிண்டினான் பாண்டியன். அவன் குரலில் எத்தனைதான் பவ்யமும், குழைவும் இருந்தாலும் இந்தக் கேள்வியைக் கேட்டதும் மாலனுக்குக் கோபம்தான் வந்தது.

 

“கொஞ்சம் சிரிச்சிப் பேசினாப் போதும், ரொம்ப அக்கறையா பர்சனல் கேள்வி எல்லாம் கேக்க ஆரம்பிசிருவீங்களே! நீ என்ன பத்திரிக்கை ரிப்போர்ட்டரா ? என்ன கேள்விப்பட்டே நீ? “ என்று ஏகவசனத்தில் வெகுண்டார்.

 

“ஸார், கோவிக்காதீங்க. உங்களோட பரம ரசிகன் ஸார், என்னைப் போயி சந்தேகப்படுறீங்களே ! சொந்தமா எடுத்த உங்க படம் ரெண்டும் ஓடாததினால ரொம்ப லாஸ்னு படிச்சேன். வேற படம் யாரும் புக் பண்ணலேன்னும் படிச்சேன். எனக்கும் ரொம்ப வருத்தம்தான் ஸார். அதான் கேட்டேன். மன்னிச்சிருங்க ஸார்” என்று அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டான் பாண்டியன்.

 

அவன் செய்கை மாலனுக்குச் சங்கடத்தைக் கொடுத்தது; தன்னுடைய கோபத்தை நினைத்து வெட்கப்பட்டார். அவனை ‘நீ’ என்பதா, ‘நீங்க’ என்பதா என்று குழம்பினார். அன்யோன்யமே சமாதானம் என்று முடிவு செய்தார்.

 

“பரவாயில்லப்பா, என் நண்பன் ஞாபகம் வந்திரிச்சு; நானும் அவனும் ரொம்ப க்ளோஸ். போன வாரம் இறந்திட்டான். அவனோட இழப்பை என்னால தாங்கிக்க முடியல. அந்த துக்கத்தை மறக்கத்தான் இப்போ என்னை யாருக்கும் தெரியாத எடமா போயிட்டிருக்கேன். பத்து நாள் இருந்திட்டு சென்னைக்குத் திரும்பிடுவேன். வரும்போது நல்ல கதையோட வரணும்னு இருக்கேன். திருவனந்தபுரத்தில என்னோட நண்பர் ஒருத்தர் இருக்கார். நல்ல எழுத்தாளர், வசனகர்த்தா. தமிழும் தெரியும் அவருக்கு. கண்டிப்பா என்னோட அடுத்த படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்தான்” என்று, அவனுக்குச் சமாதானம் சொல்ல நினைத்து, ஒரு வேகத்தில் தன்னுடைய அந்தரங்கங்களை எல்லாம் முன்பின் தெரியாத அவனிடம் தேவையில்லாமல் பகிர்ந்துகொண்டார்.

 

“அடடா! போன வாரம் ஒரு செய்தியப் படிச்சேன். ‘பிரபல திரையுலக வசனகர்த்தா, கவிஞர் காளிதாசன் மர்ம நபரால் குத்திக் கொலை’னு. அவரா ஸார் உங்க நண்பர்? அடடா ! பாவம் ஸார் ! நீங்க இப்படி வருத்தமா இருக்கறது நியாயம்தான். கவிஞர் கண்ணதாசன் காலமானபோது எம்.எஸ்.வி. சாரும் இப்படித்தான் இருந்தாருன்னு படிச்சிருக்கேன்”

 

ஒரு இடைவெளி விட்டு, “ஸார், ஜில்லுனு ஏதாவது குடிங்க ஸார்; உங்க சோகம் கொஞ்சம் குறையும்“ என்று சொல்லித் தன் ஜோல்னா பையிலிருந்து ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்தான். அதனுள் ஒரு ஃபேன்டா பாட்டிலும், நான்கு காகிதக் கோப்பைகளும் இருந்தன.

 

“தேங்க்ஸ்பா! ஆனா நான் வெளியில எதுவும் சாப்பிடறது இல்ல” என்று மறுத்தாலும், அவர் கண்கள் ஃபேன்டா பாட்டிலிலேயே நிலைத்திருந்தன. அது அவருக்கு மிகவும் பிடித்த பானம். ஆனால், அவசரமாகக் கிளம்பியதில் ‘ரயிலில் வாங்கிக்கொள்ளலாம்’ என்று வந்துவிட்டார்.

 

“என்ன ஸார், வெளியில எதுவும் சாப்பிடறது இல்லைன்னு கப்ஸா விடுறீங்க? இதுல ஏதாவது மயக்க மருந்து கலந்திருக்குமோன்னு பாக்கிறீங்களா? இல்லை, விஷம் கலந்து வச்சு உங்களைச் சாகடிச்சிருவேன்னு பயப்படுறீங்களா? இதை இன்னும் தெறக்கவே இல்ல ஸார்! நீங்களே தெறந்து, எனக்கு மொதல்ல ஒரு க்ளாஸ் ஊத்துங்க; நான் குடிச்சப்பறம் நீங்க குடிங்க” என்று கோப்பைகளிலிருந்து மேலாக இருந்த ஒன்றை எடுத்துக் கையில் பிடித்துக் கொண்டு அவர்முன் நீட்டினான்.

 

“பயங்கரமான ஆளா இருக்கப்பா நீ! எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சிருக்கியே!” என்று அவனை மெச்சியபடியே பாட்டிலைத் திறந்து அவன் நீட்டிய கோப்பையில் பானத்தை ஊற்றினார். அடுத்த கோப்பையை எடுத்து பாதி நிரப்பினார். சட்டையின் உள்பாக்கட்டிலிருந்து சிறிய பாட்டில் ஒன்றை எடுத்தார்; விலை உயர்ந்த மது பாட்டில் அது. அதைத் திறந்து சிறிதளவு குளிர்பானத்தோடு கலந்து ஒரே மூச்சில் குடித்தார். மறுபடி பாண்டியனுடைய கோப்பையை நிறைத்துவிட்டு, தனக்குக் குளிர்பானமும் மதுவும் கலந்து குடித்தார்.

 

அதுவரை அமைதியாக இருந்த பாண்டியன், “என்னங்க ஸார், ஃபேன்டாவை அப்படியே குடிக்காம, என்னமோ கலந்து குடிக்கிறீங்களே? ஏதாவது மருந்தா ஸார்?” என்றான்.

 

“அது மருந்து மாதிரிதான் தம்பி. கவலையை மறக்கர மருந்து. எப்பவுமே நான் ஃபேன்டாவை இப்படித்தான் குடிப்பேன். வரும்போது வாங்காம வந்திட்டேன். உனக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் !” பேசும்போதே அவருடைய குரலில் ஒரு உற்சாகம் வழிந்தது. தன்னுடைய வாழ்நாள் லட்சியத்தைப் பூர்த்தி செய்து கொள்ள இதுவே சரியான நேரம் என்று பாண்டியன் நினைத்தான்.

 

“ஸார், நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே? உங்க பரம ரசிகன் என்கிற முறையில ஒரு விண்ணப்பம் உங்ககிட்ட வைக்கிறேன். எனக்கு ஒரு சான்ஸ் தந்து பாருங்களேன். என்னுடைய கதையில எது உங்களுக்குப் பிடிக்குதோ சொல்லுங்க; அதுக்கு நானே திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதித் தரேன். எதுவும் பிடிக்கலைனாலும் பரவாயில்லை. இன்னும் முயற்சி செய்வேன்” என்று சொல்லிக்கொண்டே ஜோல்னா பையிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து அவர் கையில் கொடுத்தான். அட்டையில் ‘பாண்டியனின் ராஜ்ஜியம்’ என்று கொட்டை எழுத்துக்களில் எழுதியிருந்தது.

 

அவர் அதைப் படிக்க நினைக்குமுன் வண்டியின் வேகம் குறைந்து, வண்டி நின்றது. “காட்பாடி!” என்றான் பாண்டியன். டிக்கட் பரிசோதகர் உள்ளே நுழைந்தார். மாலனின் டிக்கட்டையும் அடையாள அட்டையையும் பார்த்தபிறகு, பாண்டியனின் டிக்கட்டைப் பார்த்தார். முன்பதிவு செய்யாத பயணச்சீட்டு. அபராதக் கட்டணம் வசூலித்தார். அடையாள அட்டை கேட்டார். பாண்டியனும் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்தான்.

 

“என்ன ஸார், ஃபோட்டோல தாடி, மீசை எதுவும் இல்லாம இருக்கீங்க. எப்படி இதை அடையாளம்னு ஒத்துக்கறது?” என்று சந்தேகப் பார்வை பார்த்தார் பரிசோதகர்.

 

“ஸார், அது நான் காலேஜ் படிக்கும்போது எடுத்தது. நீங்க கேக்குறீங்கன்னு நான் இப்ப சலூனுக்கா ஓடிப் போயிட்டு வரமுடியும்?” என்று குதர்க்கமாகப் பாண்டியன் பதில் சொல்ல, “ஸார், இந்தப் பேச்செல்லாம் வேண்டாம்; வேற ஏதாவது ஐ.டி. இருந்தாக் குடுங்க; இல்லைனா அடுத்த ஸ்டேஷன்ல எறங்கிக்கிங்க!” என்று உறுமினார் பரிசோதகர்.

 

குறுக்கிட்ட மாலன், “ஸார், கோவிச்சிக்காதீங்க! இவர் எனக்கு வேண்டியவர்தான். நான் டைரக்டர் மாலன். உங்களுக்கு ஒண்ணும் பிரச்னை வராது. நான் கியேரண்டி” என்று உறுதிமொழி கொடுத்தார்.

 

பரிசோதகர் முணுமுணுத்துக்கொண்டே சென்றதும், சிரித்துக் கொண்டே ‘பாண்டியனின் ராஜ்ஜியத்தை’ப் பிரித்துப் பார்த்தார்; தனித்தனியாக ஒற்றைப் பக்கங்களில் எழுதிப் பின் ஒன்றாகச் சேர்த்து பைண்ட் செய்யப்பட்ட நோட்டுப் புத்தகம். ஒவ்வொரு தாளுக்கும் எண் கொடுக்கப்பட்டு, கதைகளின் பட்டியலும், அதன் பக்கங்களும் அழகாக முன் தாளில் எழுதப்பட்டிருந்தன. அதற்குமேல் புரட்டிப் பார்ப்பதற்குள் குறுக்கிட்ட பாண்டியன், “ஸார்……………. அந்த ஆறாவது கதை ‘கடைசி பக்கம்’; அதை மொதல்ல படிச்சுப் பாருங்க ஸார்” என்றான்.

சுட்டு விரலை மெதுவாக நகர்த்தி ஆறாவது கதை எந்தப் பக்கத்தில் என்று பார்த்தார்; 16-வது பக்கம். மெதுவாகப் புரட்டி 16-வது பக்கத்துக்கு வந்து நிறுத்தி, படிக்கத் தொடங்கினார்.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

6கடைசிப் பக்கம்                                  16

 

 

“ஸ்டோரி டிஸ்கஷனுக்கு ரூம் போட்டு உக்காந்திருக்கேன்; இன்னும் இந்த காளிங்கராயன் வரக்காணோம்; யாராவது போன் போட்டுதான் கேளுங்களேய்யா” என்று பக்கத்திலிருந்த உதவியாளரை டைரக்டர் மூர்த்தி விரட்டிக் கொண்டிருக்கும்போதே வேகவேகமாக அறையுள் நுழைந்தான் காளிங்கராயனின் உதவியாளன் முருகன்.

 

“அண்ணனால வரமுடியல. அதான் நான் கதையை எடுத்துகிட்டு ஓடிவந்தேன்; இந்தாங்க” என்று ஒரு பெரிய எக்சிகியூட்டிவ் டயரியை அவரிடம் கொடுத்தான். கதையாசிரியர் சொல்லச் சொல்ல அதை டயரியில் எழுதுவது முருகனின் வழக்கம். “எல்லாரும் வெளியில இருங்கப்பா” என்று மற்றவரை எல்லாம் வெளியில் அனுப்பிவிட்டு, அடையாளம் வைத்திருந்த பக்கத்தில் திறந்து கதையைப் படிக்க ஆரம்பித்தார்.

 

அது வழக்கமான பழிவாங்கல் கதை என்பது படிக்க ஆரம்பித்த உடனேயே தெரிந்துவிட்டது. கிராமத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு சினிமா ஆசை காட்டி, அவள் ஊரைச் சேர்ந்த இரண்டு பேர் அவளை நகரத்துக்குக் கூட்டிப் போய் நாசம் செய்துவிடுகிறார்கள். அந்த நேரத்தில் தலையில் அடிபட்டு அவள் இறந்துபோகிறாள். அதைத் தற்கொலை என்று ஜோடித்து இருவரும் சட்டத்திலிருந்து தப்பி விடுகிறார்கள். ஒருவன் கதாசிரியனாகவும், மற்றவன் டைரக்டராகவும் ஆகிவிடுகிறார்கள். பத்து வருடங்களுக்குப் பிறகு அவளுடைய தம்பி அவர்களைப் பழிவாங்க நகரத்துக்கு வருகிறான். கதாசிரியரிடம் உதவியாளனாகச் சேர்கிறான். இன்னும் ஒருபக்கத்தில் கதை முடிந்துவிடும் என்றிருக்கும்போது, அடுத்த பக்கம் காலியாக இருந்தது.

 

“என்ன முருகன், கடைசிப் பக்கத்தைக் காணல, ‘முடிவை வெள்ளித் திரையில் காண்க’ அப்டிங்கற மாதிரி? “ என்றார் மூர்த்தி.

 

“அதுக்குள்ளே அண்ணன் செத்துப் போயிட்டாரு” – அலட்டிகொள்ளாமல் பதில் சொன்னான் முருகன்.

 

“என்ன, செத்துப்போயிட்டானா? “ – அதிர்ச்சியில் உறைந்தார் மூர்த்தி.

 

“ஆமாம் ஸார்; என்னோட கதை மாதிரியே இருக்கே அப்டின்னு அண்ணனைக் கேட்டேன். ‘ஏண்டா, உங்க அக்காவும் இப்படித்தான் தேவடியாத்தனம் செஞ்சி செத்தாளா’ன்னு சிரிச்சார். எனக்குக் கோவம் வந்து பக்கத்திலிருந்த கத்தியை எடுத்துக் குத்திடிவேன்னு கத்தினேன். அதுக்குள்ளே என் மேல பாய்ஞ்சிட்டாரு; கத்தி அவர் மார்ல ஆழமா சொருகிடிச்சி” என்று ஏதோ கதை சொல்வது போல பதில் சொன்னான் முருகன்.

 

“அடப்பாவி ! கொலை செஞ்சிட்டுவந்து கதையா சொல்றே?” என்று முருகன் மேல் பாய்ந்த மூர்த்தியின் நெஞ்சில், மறுபடியும் அந்தக் கத்தி செருகியது. ( நிறைவு )

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

கதையைப் படித்து முடிக்குமுன்பே மாலனின் முகம் வேர்வையால் நனையத் தொடங்கியது. முடித்ததும் அந்த நோட்டுப் புத்தகம் கைநழுவிக் கீழே விழுந்தது. “நீ… நீ… யாரு?” என்று பயம் கலந்த குரலில் உளறினார். கைகளும், கால்களும் உறைந்து மரத்துப் போனது போல் உணர்ந்தார். எழுந்திருக்க முயன்ற மாலனின் தோள்களைப் பற்றி அப்படியே படுக்கவைத்தான் பாண்டியன்.

 

“பரவாயில்ல, உடனேயே புரிஞ்சிகிட்டியே! ஆமாம், நான்தான் நீங்க ரெண்டுபேரும் என் அக்காவுக்குச் செஞ்ச அக்கிரமத்துக்குப் பழிவாங்க வந்தவன். உன் ஃபிரண்டைக் கொன்னவன். உனக்குக் குடுக்கறதுக்காக அவன் வச்சிருந்த பணம்தான் என் பையில இருக்கு. இப்போ நான் சொல்றதை மட்டும் கேட்டுக்க. இன்னும் ஒரு மணி நேரம்தான் உன் காது கேட்கும். வாய் பேச முடியாது. கண்ணு தெறந்தே இருக்கும். வேற ஒண்ணும் உன்னால செய்யமுடியாது. நான் குடுத்த மருந்து அப்படி. நானே கண்டுபிடிச்ச மயக்க மருந்து. பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்யும். ரெண்டாவது கோப்பையின் உள்ளே அதைத் தடவி வச்சிருந்தேன். உன் பழக்க வழக்கம் எல்லாம் எனக்கு அத்துப்படி. நான் எதிர்பார்த்தா மாதிரியே மதுவில கலந்து அதைக் குடிச்சே. இந்த மயக்க மருந்தில ஆல்கஹால் கலந்து குடுத்தா நரம்பு மண்டலம் மொத்தத்தையும் பாதிச்சிடும். யாராலையும் என்னன்னு கூட கண்டுபிடிக்க முடியாது. உனக்கு இதுதான் சரியான தண்டனை!”

 

“நான் சேலத்தில எறங்கி மறுபடி சென்னைக்கே போயிடுவேன். இந்தப் பணம் எல்லாம் உன் மனைவிகிட்ட நீ கொடுக்கச் சொன்னதா சொல்லிக் குடுத்துட்டு, ‘இங்க இருக்க வேணாம், சொந்த ஊருக்குப் போயிடு; ஆறு மாசம் வரை என்னைத் தேடாதே. நானே அங்க வந்து உங்களையெல்லாம் பார்க்கிறேன்’னு சொன்னாருன்னு சொல்லிடுவேன். அதனால ஆறு மாசத்துக்கு யாரும் உன்னைத் தேட மாட்டாங்க” என்று சொல்லச் சொல்ல எந்தச் சலனமும் இல்லாமல் வெறித்த பார்வையோடு படுத்திருந்த மாலன் மேல் ஒரு போர்வையை எடுத்துப் போர்த்திவிட்டுக் கழிவறைக்குச் சென்றான் பாண்டியன்.

 

ஃபேன்டா பாட்டில், காகிதக் கோப்பைகளைக் குழிக்குள் போட்டான். கறுப்புப் பையிலிருந்து ரேசரை எடுத்துத் தாடி, மீசையை வழித்தான். தலையில் ஜெல் தடவி முடியை அழுத்தி வாரினான். பைஜாமா, ஜிப்பாவைக் கழற்றிவிட்டு, ஜீன்ஸ் பேன்டும், டீ-சட்டையும் அணிந்து கொண்டான். களைந்த உடைகளையும், ஜோல்னா பையையும் கறுப்புப் பைக்குள் திணித்தான். கண்ணாடியைக் கழற்றிக் குழிக்குள் எறிந்தான். திரும்பவும் தன்னுடைய இடத்தில் வந்து அமர்ந்து, சேலம் சந்திப்புக்காகக் காத்திருந்தான்.

 

Series Navigationஆற்று நீரின் ருசி – “நண்டு புடிக்கப் போய்” – ராஜ்ஜாவின் சிறுகதைகள்கனவு நனவென்று வாழ்பவன்
author

எஸ். சிவகுமார்

Similar Posts

2 Comments

    1. Avatar
      எஸ். சிவகுமார் says:

      நன்றி திரு. நடேசன் ! ‘திட்டமிட்டு ஒரு கொலை’க்குப் பிறகு மர்மக் கதை எனக்குச் சரிப்பட்டு வருமா என்று ஒரு சந்தேகம் இருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு நான் எழுதிய கதை ‘கடைசிப் பக்கம்’. இனி பத்தில் ஒரு கதையாவது மர்மக் கதை எழுத முயற்சிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

Leave a Reply to nadesan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *