தி.தா.நாராயணனின் “அம்மணம்“ சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்

This entry is part 4 of 4 in the series 18 நவம்பர் 2018

 

சமகாலக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சத்தியாவேசக் கதைகள்

வீனத் தமிழ் இலக்கிய உலகில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட படைப்பாளிகளை விட,  கண்டு கொள்ளப்படாத தரமான படைப்பாளிகள் பலர் உண்டு. கண்டு கொள்ளப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்துள்ள அமைப்பின் சார்பாக அடிக்கடி பேசப்படுபவர்களாக ஆகிறார்கள்..

காலத்திற்கேற்றமாதிரி மாறிக் கொள்ளத்தான் வேண்டும் என்று கொள்பவர்கள் இருந்தாலும், அதெல்லாம் நம்மளால முடியாதுங்க….என்று ஓரமாய் ஓதுங்கி தங்கள் இலக்கிய வாசிப்பு ரசனைக்குத் தாங்களே தீனி போட்டுக் கொள்பவர்களாய் எழுத்துப் பணியில் தீவிரமாய் ஈடுபட்டிருப்பவர்கள், மிகத் தரமான படைப்புக்களைத் தருபவர்களாகத் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு, தாங்கள் மதிக்கும் ஒரு சிலரிடமிருந்து வரும் பாராட்டுரைகளை மனமுவந்து ஏற்று, உற்சாகமடைந்து மேலும் மேலும் நல்ல படைப்புக்களைத் தர முயன்று கொண்டிருக்கிறார்கள்.

அப்படித் தன்னைத் தரமான இலக்கிய பீடத்தில் நிலை நிறுத்திக் கொண்டவர்தான் எழுத்தாளர் செய்யாறு தி.தா.நாராயணன். உலகம் எவ்வளவுதான் வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தாலும், என் எழுத்து வகை இது….இதில்  எத்தனை அழுத்தம் செய்ய முடியுமோ, எந்தவகையான உள்ளடக்கத்தோடு காத்திரமாய்த் தர முடியுமோ அப்படித் தொடர்ந்து தருவேன், தர முயல்வேன்  என்று அமைதியாய்த் தன் இலக்கியப் பணியை, பாணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் அவர்.

அவர் எழுத்தில் இப்போது புதிதாய் வந்திருக்கும் சிறுகதைத் தொகுதிதான்  சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “அம்மணம்” என்ற தலைப்பிலான புத்தகம்.

“வலி” என்ற தலைப்பிலான முதல் கதையைப் படித்ததுமே நம் மனதில் ஆழமாய், அசாத்தியமாய்  ஒரு வலி வந்து சம்மணமிட்டு  உட்கார்ந்து கொள்கிறது. அந்த ஊர்த் திருவிழாவை நடத்துபவர்களின் வலியாய், அங்கே பலி கொள்ளப்படும் ஆடு, கோழி, பன்றி ஆகிய இனங்களின் வலியாய், அதைப் பார்த்து சகிக்கவொண்ணா மனதுடையவர்களான தாய்மார்களின் வலியாய், எந்தச் சாமிய்யா இப்டி பலி கேட்டுச்சி என்று முற்போக்கு மனம் கொண்டவர்களின் வேதனை வலியாய் கதை முழுக்கப் பயணிக்கிறது. கடவுளுக்கு நேர்ந்து விட்டு அக்கறையாய் வளர்க்கப்படும் பன்றி கூட சாமீ….சாமி….என்று பக்தியோடும் மரியாதையோடும், மதிப்போடும் அழைக்கப்படும் மனநிலையில் கடைசியில் அதே சாமி பெயரைச் சொல்லி அதனைப் பலி கொள்ளும் பொழுது, ஒரே பாய்ச்சலில் அதன் உயிர் போகாமல அலமந்து குற்றுயிரும் குலையுயிருமாய் அது சித்ரவதையோடு ஓடிப் புகுந்து வளர்த்தவன் காலடியிலேயே போய் அடைக்கலம் கேட்பதுபோல்  தன்னை இறுத்திக் கொள்ளும் அந்தக் காட்சி பார்ப்போர் மனதைக் கலங்கடிப்பதைவிட படிக்கும் நம்மை பெரும் வதைக்குள்ளாக்குகிறது.

இம்மாதிரிக் கோயில் பலித் திருவிழாக் காட்சிகளை விவரித்து எத்தனையோ கதைகள் வந்திருக்கின்றனவென்றாலும், அந்தந்தப் பகுதி மக்களின் வழக்கு மொழிகளில், வாழ்க்கை இயல்புகளில் அந்த நிகழ்வுகள் நுணுக்கமாய்ச் சித்தரிக்கப்படும்பொழுது, அந்தப் படைப்பு மேன்மையுறுவதும், படைப்பாளியின் தன்னம்பிக்கையான எழுத்துக்கு அடையாளமாய் நின்று அவரை உயர்த்திப் பிடிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. எனக்குத் தெரிய வருடத்திற்கொருமுறையாவது இம்மாதிரிக் கதைகள் விடாது வந்து கொண்டேதான் இருக்கின்றன என்று உணரப்படும் நிலையில், ஒவ்வொன்றும் அந்தந்தப் பிராந்தியத்தின் மக்களின் பேச்சு மொழியை, வாழ்வியலை, நம்பிக்கைகளை வளம் சேர்க்கும் விதமாய்த்தான் அமைந்து சிறந்து நிற்கின்றன.

படைப்பாளி இதற்காகப் படும் சிரமம் நினைவு கூறத் தக்கது என்றுதான் தோன்றுகிறது எனக்கு. பெர்தனம், வென்னிச்சி, சூராண்டி வகையறா, வென்னிக்க, மெரளு, ஏற்வையா. ஒம்பாதுய்யா….போன்ற வார்த்தைகளின் பிரயோகம்…அந்தத் திருவிழாவிலேயே நாள் முழுக்க இருந்து அறிந்திருந்தாலொழிய  அல்லது அந்த மக்களோடு கொஞ்ச நாளேனும் வாழ்ந்து கழித்திருந்தாலொழிய, அல்லது சொல்லாராய்ச்சி பண்ணியிருந்தாலொழிய  படைப்பில் கொண்டு வர சாத்தியமேயில்லை என்கிற யதார்த்தத்தில் படைப்பாளியின் உண்மையான முயற்சிகள் நிச்சயம் பாராட்டத்தக்கவையாய் அமைகின்றன.

புத்தகத்தின் தலைப்பாக அமைந்துள்ள இரண்டாவது கதை ”அம்மணம்”. இச்சிறுகதையும் கடுமையான வட்டார வழக்கினை உள்ளடக்கியது. பொதுவாக வட்டார வழக்குகளை விவரித்துக் கொடுக்கப்படும் படைப்புக்கள் அவை புரிபடாத நிலையிலும், படிப்பதற்குக் கஷ்டமாக உணரப்படும் தன்மையிலும் விறு விறுப்பான வாசிப்பனுபவத்திற்குத் தடையாக இருப்பதாலும் ஒரு சாதாரண வாசகனை என்றில்லாமல், தீவிர வாசிப்பாளனைக் கூடக் கடந்து செல்ல வைத்துவிடும் அபாயம் உண்டு. ஆனாலும் எப்படித்தான் சொல்லப்படுகிறது என்று அறியும் ஆவலில் அந்தந்த வட்டார வழக்குகள் என்னென்ன பொருளில் உச்சரிக்கப்படுகின்றன என ஆழமாகத் தேடிச் செல்லும், வாசிப்பை உழைப்பாய்க் கருதிப் படிக்கும் வாசக அன்பர்களும் உண்டுதான். அப்படியான வாசகர்களுக்கு இந்தக் கதை செம தீனியாக இருக்கும் என்று சொல்லலாம்.

கதை என்று பார்த்தால், பெண்ணடிமைத் தனத்தில் இருக்கும் சமுதாயம் விடாமல் பெண்களுக்கான அநீதிகளை இழைத்துக் கொண்டே அது கூடாது என்று சொல்லிக் கொண்டும், தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று முழக்கமிட்டுக் கொண்டும் அதிகாரத் தடத்தில் நின்று  வீர்யமிடுகையில், ஊர்ல எல்லாப் பயலுவளும் அம்மணந்தான்…எவனுக்கு நீதி சொல்ல வக்கிருக்கு என்று ஊர்ப்பொதுப் பஞ்சாயத்தையே புறந்தள்ளிவிட்டு ஒரு பெண்ணுக்கு  இழைக்கப்படும் அநீதி அத்தனை பேருக்கும்தான் என்று நீதி சொல்லும் கருத்தை உள்ளடக்கியது இந்தப் படைப்பு.

ச்சீய்…வாங்கடீ…போக்கத்தவங்களே….இந்தக் கல்லெடுப்பு ஊர்ல ஓட்றவனும் அம்மணம், தொறத்துறவனும் அம்மணந்தாண்டீ…. என்று ஊர்ப் பொதுச் சபையில் துச்சாதனன் துகிலுரித்த மாதிரி கேலிகளாலும், கேள்விகளாலும் துளைக்கப்படும் பெண்ணை அழைத்துக் கொண்டு வெளியேறும் பெண்கள் கூட்டம் கதைக்கருவின் சிகரமாய் நின்று ஒளிர்கிறது.

எந்தத் தொழில் செய்தாலும் அந்தத் தொழிலார்ந்த அறிவும், விஷய ஞானமும், கடுமையான உழைப்பும்தான் ஒருவனைப் பெருமைப் படுத்தும். கிராமங்களில், பட்டி தொட்டிகளில் அவரவர்க்கு அமைந்ததான வாழ்வியல் முறையில்  இருக்கும் அர்ப்பணிப்பும் அதீதப் பிரயாசையும் அவரவர் தொழிலை, செயலை உயரத்தில் கொண்டு நிறுத்துகிறது. எந்தத் தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதில்  எந்தளவுக்குக் கருத்தும் கரிசனமுமாக விளங்குகிறோம்,அர்ப்பணிப்போடு திகழ்கிறோம் என்பதைப் பொறுத்தே எதுவும் சிறப்புப் பெறுகிறது. பாமரனுக்கும் இது உகந்ததுதான் என்பதை யாரும். எவரும் எங்கும் மறுத்து நிற்க முடியாது.

ஆட்டுக்காரன் என்ற தலைப்பிட்ட மூன்றாவது சிறுகதை அந்தத் தலைப்பிற்கேற்றாற்போல் சார்ந்த பணியின்பாலான விஷய ஞானத்தை உள்ளடக்கி தன்னைத் தானே பாதுகாத்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் காலங் காலமாய் நம் கலாச்சாரத்தின் ஆழமாய் வேரூன்றிப் போய்க் கிடக்கும் நன்னம்பிக்கைகள், ஒழுக்கம், பண்பாடு இவற்றின் மொத்த அடையாளமாய்த் திகழும் இறையுணர்வு மக்கள் சமூகத்தின் மெய்ப்பாடாகத் திகழ்ந்து அவர்களை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது.

குத்தனூரான் ராகவன் மந்தையில் புகுந்துள்ளது தனது கெரிச்சல் கெடாக் குட்டி என்பதை அறிந்த வரதனை…அப்படியெல்லாம் இல்லை என்று பெருசு உருப்படி 101, குட்டிங்க 11 என்று பொய் சொல்லி மறுக்கிறான். நேற்று 10 என்று சொன்ன வாய் இன்று 11 என்று பொய்யுரைக்கிறதே என்று வரதன் மறுதலிக்க, வேணும்னா அதுங்க ஆத்தா கிட்ட ஓட்டிப் பாரு , குட்டிய அண்ட விட்டதுன்னா  ஒத்துக்கிறேன் என்று ராகவன் வம்புக்கிழுக்க, பெரும்பாலும் குட்டி எந்த ஆத்தா கிட்டயும் ஒட்டிக்கும். ஆனா ஆத்தா ஆடு அம்மாம் கலுவுல ஆனாலும் வேத்துக் குட்டிய அண்ட விடாது என்ற உண்மை மேய்ச்சல் முடிந்தபோது திடீரென்று வெளிப்படுகிறது. தன் கெரிச்சல் குட்டியைக் கண்ட தாய் ஆடு ஓங்கிக் குரல் கொடுக்க, தாயைக் கண்டு ஓட்டமெடுத்து  வந்து ஒட்டிக் கொள்கிறது கெரிச்சல் குட்டி.. ராகவன் மறுப்பேதுமின்றி தன் இடம் சேர்ந்த குட்டியை விட்டு விட்டு வெளியேறுகிறான்.

ராகவா…இதுங்களுக்கு நம்மள மாரி பொய், புரட்டு தெரியாதுடா… என்று கிளம்பிப் போய்க் கொண்டிருப்பவனிடம் சொல்லி விட்டு குட்டியை அலேக்காகத் தூக்கிக் கொஞ்சுகிறான்.வரதன். அடீ…ராசாத்தி….பிரிஞ்சி ஒரு மாசமானாலும் ஒன் ஆத்தாவ தெரிஞ்சிப் போச்சாடீ  ஒனுக்கு? ன்னு அணைத்துக் கொள்கிறான். இதே வரதன் இடம் மாறிப் போய்விட்ட தன் வேறொரு மூன்று ஆடுகளை அவைகளுக்குப் பழக்கப்படுத்திய தன் குரல்  ஒலியினை எழுப்பி அடையாளம் கண்டு வரவழைத்து விடுகிறான். ஆடு மேய்ப்பவர்களிடையே இப்படியாக மந்தை ஆடுகள் இடம் விட்டு இன்னொன்றில்  கலந்து போவதும் இதைப் பயன்படுத்தி ஆடுகளைத் திருடுவதும், தங்களுடையதுதான் என்று வாதிடுவதும், அது பிரச்னையாவதும்,  பஞ்சாயத்து போவதும், பொதுச் சபையில் பேசப்பட்டு வெற்றி கொள்வதும், தங்கள் மந்தையை இனம் வாரியான எண்ணிக்கை குறையாமல், அடையாளம் மாறாமல் தக்க வைத்துக் கொள்வதும் அந்தப் பிரிவினரிடையேயான கௌரவமாகக் கருதப்படும் நடைமுறை படிக்கும் நம்மை உற்சாகம் கொள்ள வைக்கிறது.

ஒரு படைப்பினைப் படிப்பதன் நிமித்தம் புதிய விஷயங்கள் நம் அறிவுக்குச் செல்லுமானால், தகவல் தளம் விரிவடையும் சந்தோஷத்தில் படைப்பாளியை நாம் வாய்விட்டு, மனம் விட்டுப் பாராட்டுகிறோம். எந்த மெனக்கெடலும் இல்லாமல் புனைவில் ஒரு படைப்பை எழுதுவது என்பது படைப்பாளியின் எழுத்துத் திறனுக்கான அடையாளமாய் இருக்கும்தான். ஆனால், அதனை வலுமிக்கதாக ஆக்குவதற்கும், ஆழமான, அழுத்தமான இலக்கியப் படைப்பின்பாற்பட்ட தனது அக்கறையை, உழைப்பினை ஒரு படைப்பாளி வெகு சூட்சுமத்தோடு வெளிப்படுத்தும்போது, வெறும் புனைவு மட்டுமல்ல இலக்கியம்…இம்மாதிரியான அர்ப்பணிப்பும் கலந்து வெளிப்படுவதுதான் அதன் வெற்றி என்பதை நமக்குத் துல்லியமாய் உணர்த்துகிறது.

மேற்கண்ட இருகதைகளிலும் ஆசிரியர் பயன்படுத்தும் வட்டார வழக்குகள் ரொம்பவும் கருத்தூன்றி எழுதப்பட்டிருப்பதாலும், முழுக்க முழுக்க அவர்களின் வாழ்வியல் மொழியிலேயே சொல்லப்பட்டிருப்பதாலும், அவை இத்தனை அக்கறையெடுத்து எழுதப்பட்டிருந்தாலும், படிப்பதற்கும் வரிகளைக் கடந்து செல்வதற்கும் ரொம்பவுமே சிரமப்படத்தான் வேண்டியிருக்கிறது. அதுவே இம்மாதிரியான படைப்பினைக் கொடுத்த படைப்பாளிக்கான வெற்றி என்றும் சொல்லலாம்.

அறிவியல் புனை கதைகள் எழுதுவதில் எப்போதுமே இந்தப் படைப்பாளிக்கு விருப்பம் அதிகம். அதில் ஒரு நாவலே எழுதிப் பரிசு பெற்றிருக்கிறார். பூமி நெருப்புக் கோளமாகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளை இன்னும் மேற்கொள்ள வேண்டிய அவசியங்களை வலியுறுத்தி, விவாதித்து அம்முயற்சிகளில் வெற்றி அடையவில்லையானால் அழிவைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற கருத்தை வலியுறுத்தி ”ஊழ்” என்ற தலைப்பிலான சிறுகதை ஒன்றையும் இத்தொகுதியில் அழகாகத் தந்திருக்கிறார்.

“சங்கமம் என்ற தலைப்பில் உறவுகளின் சங்கமம் திருமணம் போன்ற வைபவங்களின் போது பற்பல நன்மைகளுக்கு வழி வகுக்கின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு. கல்யாணத்தில் நடக்கிற ஒவ்வொரு சடங்குகளும், நிகழ்ச்சிகளும் வெறும் பெருமைக்காக நடைபெறுவதல்ல…உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளுதலும், புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுதலும், ஏற்கனவே உறவுகளுக்கிடையே இருந்த கோப தாபங்களை மறந்து ஒன்று சேர்தலும் ஆகிய பல நன்மைகளையும் உள்ளடக்கியது என்கிற கருத்தை வலியுறுத்தி நிற்கிறது.

காசு உள்ளவன் எல்லோருக்கும் ஒரே புத்தி இருக்குமா? ஏதேனும்  ஒரு சிலர் பணம் படைத்த  தங்கள்  கௌரவத்தினை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும் தன்மை படைத்தவர்களாக இருப்பதில்லையா? அந்தத் தன்மை சின்னச் சின்ன விஷயங்களில் கூட  தீவிரமாய் முன்னிறுத்தப் படுவதில்லையா? அப்படியான ஒரு கனவான் செய்யும் பொது இடத்திலான ஒரு சில்லரை விஷயம் மூலம் இந்த சமூகத்தின் எளிய மக்களின் பாடுகள் முன் வைக்கப்பட்டு, எல்லோரும் கலந்ததுதான், எல்லாவிதமான வகைகளிலும் சிறு சிறு உழைப்பின் வழி பிழைப்பைக் கொண்டதுதான் இந்த உலகம் என்பதை வலியுறுத்திக் கூறும் படைப்பு இது. தேனாம்பேட்டை சிக்னலில் நடப்பதாகக் காட்சிப்படுத்தப்படும் இச்சிறுகதை  அந்த எளிய மக்களின் பாடுகள் என்பது அவர்களின் ரோசத்திற்கும், அவர்களுக்கென்று உள்ள ஒருவகைக் கௌரவத்தின்பாற்பட்டதுமாகும் என்பதைக் கடைசியாக வலியுறுத்தி முடிகிறது. பணம் படைத்தவனின் கௌரவத்தை விட, உழைத்துப் பிழைக்கும் எளிய மக்களின் கௌரவம் என்பது ரொம்பவும் மதிக்கத் தக்கது என்ற உள்ளடங்கிய கருத்து இச்சிறுகதையை உயர்த்திப் பிடிக்கிறது.

“பட்டாசுக் கூளங்கள்”- என்ற தலைப்பிலான இக்கதையில், முடிவில் அந்த இரண்டு சிறுவர்களும் செய்யும் செயலை என்னவோ மனசு ஏற்க மறுக்கிறது. இந்தக் காலத்துக்கு குழந்தைகள் புத்திசாலிகள்தான் என்பதை ஏற்றுக் கொண்டாலும், அதீதமான இந்தச் செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாய் தந்தையரின் அறிவுரைக்கேற்றபடி தீபாவளி நாளன்று பட்டாசு வெடிப்பதற்குப் பதிலாக, காசைக் கரியாக்கும் அந்தச் செயலைத் தவிர்த்து, அந்தப் பணத்தை ஏழைப் பசங்களின் சாப்பாட்டுச் செலவுக்குப் பயன்படுத்தலாம் என்பதாய் பேரக் குழந்தைகளே சொல்வதைக் கேட்டு தாத்தா வாயடைத்துப் போகிறார். நல்ல பழக்கங்களை ஏற்படுத்துவது அவசியம்தான் எனினும், வருடத்திற்கொரு முறை வரும் ஒரு நாள் பண்டிகையான தீபாவளியன்று அந்தச் சின்னஞ் சிறிசுகள் பட்டாசு வெடிக்கத் தேவையில்லை என்கிற அளவுக்கு எந்தப் பெற்றோர்களும் பழக்கியிருப்பார்களா என்பதைச்  சற்றே ஜீரணிக்க முடியவில்லைதான். அப்டித்தான் தாத்தா…எங்களுக்குப் பட்டாசு வேண்டாம் என்று சொன்ன அந்தச் சிறிசுகள், பதிலாக தீபாவளியைச் சந்தோஷமாய் வெடி வெடித்து, பட்டாசு கொளுத்திக் கொண்டாடியாயிற்று என்பதற்கடையாளமாய்ப் பக்கத்து வீட்டு வாசலில் சிதறிக் கிடக்கும் வெடித்த பட்டாசுக் குப்பைகளை அள்ளிக் கொண்டு வந்து தங்கள் வீட்டு வாசலில் போடுவதாய் வரும் முடிவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லைதான்.  அப்படிச் செய்வதன் மூலமே அந்த ஒரு நாளில் பட்டாசு கொளுத்துவதுதான் மகிழ்ச்சி என்பதை அந்தப் பிள்ளைகள் சொல்லாமல் சொல்லுவதும், அந்த ஒரு சந்தோஷத்தை எந்தப் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு இல்லாமல் பண்ணி விட மாட்டார்கள் என்கிற யதார்த்தமும் நம்மை இந்தக் கதையின் செயற்கையான முடிவை மறுத்தொதுக்கச் சொல்கிறது. அதை பேரப் பிள்ளைகளின் தாத்தா இப்படிச் சொல்கிறார். இதுதான் உன் பிள்ளைகளோட அசலான மனசும்மா….. – குழந்தைப் பருவத்திலேயே படிப்பு என்கிற சுமையை மிக அதிகமாய்ச் சிறிசுகளின் முதுகில் ஏற்றியுள்ள நாம், அவைகளின் சந்தோஷங்களைத் தொலைத்து விட்டோம்….என்கிற கருத்தை அழுத்தமாய்ச் சொல்லும் இச்சிறுகதை பாராட்டத்தக்கது.

போண்டா மணி என்கிற உள்ளூர் ரவுடியிடம் அடங்கிக் கிடக்கும் நல்ல தன்மையைத் தூண்டி விடும் செயலை வலியுறுத்தும் கதை அங்குசம். ஒரு கிழவியிடம் இரக்கமில்லாமல் நடந்து கொண்டான் என்று டிரைவரை இழுத்துப் போட்டு அடித்தலும், பணம் வசூலித்து மோசடி செய்தார் என்று வி.ஏ.ஓ.வைப் புரட்டி எடுத்தலும் பொது விஷயம்தான் என்றாலும், நியாயத்தைக் கண்டித்துக்  கேட்பதில் வன்முறையைக் கைக்கொள்வது என்பது எப்படிச் சரியாகும்? அது எப்படிப் போராளி என்று அடையாளப்படுத்தப்படும்?. எடுத்த எடுப்பிலேயே அடிதடியை மேற்கொள்தலும், கையில் ஆயுதங்களை எடுத்தலும் பயங்கரவாதிகளாய்த்தான் சித்தரிக்கும். போராளிகள் நியாயங்களுக்காய்ப் போராடுகையில் அப்படியான வன்முறையைக் எடுத்த எடுப்பில் கைக்கொள்வதில்லை என்பதே சரியான கருத்தாக இருக்க முடியும். ஆனாலும் பெண்ணைப் பொது வெளியில் கேவலப்படுத்துதல் என்கிற அநியாயத்தைத் தடுக்க  தைரியமாய் முன்னிற்கும் கருணாவின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று கொள்ளலாம். அந்த வகையில் அங்குசம் என்ற இச்சிறுகதை பாராட்டத்தக்கதுதான்.

எந்தவொரு பிரச்னையையும் தீர்க்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஜாதிப் பிரச்னையை லேசாகத் தூண்டி விட்டால் போதும் அது தானாகவே பற்றிக் கொண்டு வெவ்வேறு வடிவங்களில் கிளம்பி நியாயத்தின் பக்கமாகவோ அல்லது அநியாயத்தின் பக்கமாகவோ பரவித் தன் திசையைத் தானே தேடிக் கொள்ளும் என்கிற சூட்சுமத்தைக் கதையின் முடிவாகக் கொண்டு வளர்ந்து நிற்கிறது இந்த “வக்காலத்து” என்கிற சிறுகதை.  “கடைசியாக வக்காலத்தாக நிற்கும் விஷயமே அதுதான் என்பதை உணர முடிகிறது. நியாயத்தை அநியாயக்காரர்களிடமிருந்து பிடுங்கி ஜெயிக்க வேண்டுமானால் அவர்களை எதில் சாய்த்தால் வெற்றி கிட்டும் என்பதைப் படு நுணுக்கமாகச் சிந்தித்த படைப்பு.

அரசியல்வாதியின் அராஜகங்கள் போலீசுக்குப் போனாலும் ஆகாது, ஆட்சியாளர்களிடம் போய் நின்றாலும் எடுபடாது, பயந்த ஜனங்கள் மத்தியில் அது விலையற்றுப் போகும்…. இப்படியானா சூழ்நிலையில் ஒரு சராசரி மனிதன் எப்படித்தான் தன்பாலான நியாயத்துக்காகப் போராடி ஜெயிப்பது? என்று சோர்வடைந்து நிற்கையில், ஊடகங்கள் இம்மாதிரி விஷயங்களில் ஏதோவொரு வழியில் உதவியாய்த்தான் இருக்கின்றன சமயங்களில் என்பதை எடுத்தியம்பும் இச்சிறுகதை இன்றைய அரசியல் உலகின் அராஜகங்களை வெட்ட வெளிச்சமாக்கி வெற்றி கொள்கிறது. அதனால்தான் இக்கதை கல்கி சிறுகதைப்போட்டியில் தேர்வு பெற்றிருக்கிறது என்று பெருமிதம் கொள்ளலாம்.

அதிகாரிகள் அதிகாரம் படைத்தவர்கள். காரணம் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட  அதிகாரிகள் அவர்கள். விதிமுறைப்படி எல்லாவற்றையும் செய்ய முயலுபவர்கள். மக்களின் குறைகளைத் தீர்க்கத்தான் நாம் என்று உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க சீராகத் திட்டமிடுபவர்கள். ஆனால் அந்தத் திட்டங்களை நிறைவேற்ற பொது மக்களின் ஒத்துழைப்பும் வேண்டுமல்லவா? தண்ணீர் வேண்டும்…தண்ணீர் வேண்டும் என்று கோஷமிட்டு சாலை மறியலில் அமரும் மக்கள் கூட்டம் அவர்கள் அறிய சில சமூக முரணாளர்களால் நடத்தப்படும் அராஜகத்தையும் எதிர்த்து நிற்கும் தைரியம் கொண்டவர்களாய் இருக்க வேண்டுமில்லையா? பெரிய இடத்து விஷயம்…எதற்கு பொல்லாப்பு? என்று ஒதுங்குபவர்களாய் இருந்தால்?

நகராட்சியின் குடிநீர் குழாய் இணைப்பில் மோட்டார் பொருத்தி உறிஞ்சிடும் சுயநலமிக்க அரசியல்வாதிகளுக்கு பொது நலத்தை உணர்த்தி நன்மை உண்டாக்கிட எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது? அதற்குத் துணை போகும் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களை எப்படித் தடை செய்வது? பொதுவான பயன்பாட்டிற்குத் தயாரிக்கும் கருவிகளை அவர்கள் திருட்டுத் தனத்திற்குப் பயன்படுத்தினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? என்று வியாபார நிறுவனங்கள் தன் பகுதி நியாயம் பேசி நிற்பதில்லையா? அப்படியானால் என்னதான் செய்வது? இந்த ஜனநாயக நாட்டில் நடக்கும் தவறுகளுக்குத் தீர்வுதான் என்ன? திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று காலம் பூராவும் சொல்லிக்கொண்டே திரிய வேண்டியதுதானா? அதுதான் இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் நன்மை செய்யத் தீவிரக் கடமையாற்றும் சப்-கலெக்டருக்கு மாறுதல் வருமா? வாய் பொத்தி மௌனியாய் எதையும் கண்டு கொள்ளாமல் நாளை ஓய்வு பெறப்போகும் ஒருவரை அங்கு கொண்டுவந்து பணியமர்த்த முடியுமா? அதுதான் இந்தக் கதையில் நடக்கிறது. தண்ணீர் விட்டோம்….என்ற பொருத்தமான தலைப்பிலான இக்கதை தண்ணீர் விட்டோம்… வளர்த்தோம்….சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம்…கருகத் திருவுளமோ….என்று நம்மை வேதனை கொள்ள வைக்கிறது. இந்த தேசத்தின் மீது பக்தியுள்ள ஒவ்வொரு சாமான்யனும் இந்த நாட்டில் நடக்கும் எல்லா அநீதிகளுக்காகவும் அமைதியாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறான்…..வாழ்க ஜனநாயகம்…..!!

ஏழைக் குடும்பத்தில், பற்றாக் குறையுள்ள இடங்களில் கோபம், தாபம், குரோதம், எரிச்சல், அடி…தடி….என்று எல்லாமும் இருக்கத்தான் செய்யும்…ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலே அங்கே விஞ்சி நிற்பது அன்பும், பாசமும் என்பதை அழகாய் வடித்துக் காட்டும் படைப்பு இந்த மீன் குழம்பு சிறுகதை. குடித்து விட்டு வந்து அடித்து உதைக்கும் தாயார்க் கிழவி படும் கொடுமையைப் பார்த்துவிட்டுத் தாங்காமல்  அவளை அழைத்துக் கொண்டு போய் வெளியூரில் உறவினர் வீட்டில் வேலைக்குச் சேர்த்து,  வசதியான சாப்பாட்டுக்கும் சம்பளத்துக்கும் ஏற்பாடு செய்து விட்டு வரும் எதிர்வீட்டுப் பெண்மணியும், அவள் கணவனும் அவர்கள் கண்காண அந்தக் கிழவி அங்கிருந்து திரும்பித் தன் வீட்டுக்கே மீண்டும் வந்து விடுவதையும், இப்டிப் புத்தி கெட்டுப் போயி போயிட்டனே என்று அடித்து உதைக்கும் மகனிடமும், மருமகளிடமும் வந்து நின்று அழுவதும்…..மனதை உருக வைக்கும் இடமாகி நமக்கு ஒரு உண்மையை உணர்த்துகிறது.

அன்னைக்கு சொத்தை எங்க மூணு பேருக்கும் சரி சமமாப் பிரிக்கலைன்னு கோர்ட்டுக்குப் போனனே….நான் தாசில்தாரா வசதி வாய்ப்போட இருக்கக் கண்டுதானே ரெண்டு அண்ணன்மார்கள்டேருந்து சித்த கொறச்சலா எங்கம்மா எனக்குப் பிரிச்சாங்க…நோஞ்சான் பிள்ளைகளுக்கு அக்கறையா சோத்த ஊட்டி விடுறது ஒரு தாயோட இயல்புதானே..இது புரியாம நடந்துக்கிட்டேன் நானு…இப்போ இவுங்க வாழ்க்கைங்கிற பரிமாணத்தோட சரியான கோணத்தை எனக்குக் காண்பிச்சிட்டாங்கதானே….எந்தக் குரோதமும் நிரந்தரம் இல்லே…பாசத்துக்கு முன்னாலேன்னு அடியோ…மிதியோ….என்புள்ளட்ட இருக்கிறதுதான் சொர்க்கம்னு ஓடியாந்துட்டாளே…இந்தக் கிழவி….இந்தக் கூட்டைப் பிரிக்க இருந்தமே…!!

வேலு என்னவோ சொல்ல ….கிழவியும் மருமகளும் குபீரென்று சிரிக்க…சந்தோஷம் பொங்கி வழிகிறது அந்தக் குடிசை வீட்டில். மீன் குழம்பின் ருசி அந்த வீட்டின் மகிழ்ச்சிக்கு ஆதாரமாய் நிற்கிறது. உப்போ…உறைப்போ…எல்லாமும் அந்த எளிய குடிசைகளில் எப்போதும் சற்றுத் தூக்கலாய்த்தான் இருக்கின்றன…உணர்ந்த இவர்கள்…பகையை மறந்து அண்ணன் வீட்டிற்குச் செல்லவும், அத்தையை இங்கு அழைத்து வரவும் முடிவு செய்து கொள்கிறார்கள். வறுமை இருக்கும் இடத்தில்தான் பாசமும், நேசமும்,  விஞ்சி நிற்கும் என்கின்ற யதார்த்தத்தை அழுத்தமாய் உணர்த்தும் அற்புதப் படைப்பு இந்த மீன் குழம்பு.

இராஜ இராஜ சோழன் கல்லறை இருக்கும் இடம் தேடி இரு நண்பர்கள் புறப்படுகிறார்கள். கும்பகோணம் போய் உடையாளூரில் இறங்கி விசாரித்துக் கொண்டே நடக்க ஒரு  நடுத்தர வயதுக்காரர் அந்த இடத்தைக் காண்பிக்கிறார். ஒரு ஓலைக் குடிசை. உள்ளே சிவலிங்கம் ஒன்று பாதி புதைந்த நிலையில் கழி ஒன்று நடப்பட்டு அதில் போர்டு ஒன்று தொங்குகிறது. அதில் இராஜ இராஜ சோழனின் உருவம் பெயின்டால் வரையப்பட்டு கல்லறை என்று எழுதப்பட்டிருக்கிறது. கீழே விளக்கேற்ற ஒரு மாடம். இவர்களுக்கு நம்பவே முடியவில்லை என்றும் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் எழுப்பியுள்ள சந்தேகம் பற்றியும் பேச, இது பற்றி ஆராய்ச்சி பண்ற விஷயத்தை தயவுசெய்து விட்ருங்க…என்று கூறும் அந்தப் பெரியவர் அதற்கு ஒரு கதை சொல்கிறார். இராஜ இராஜன் சபையில் ராஜகுருவாயிருந்த கருவூர்த்தேவர் இட்ட சாபம்தான் அது என்றும், பெரியகோயிலுக்கு வந்த இரண்டு அரசியல்தலைவர்கள் இறந்து போன தகவலையும் அவர் சொல்ல…இதை ஆராய்ச்சி பண்ண வர்றவங்க அல்பாயுசுல போயிடுறாங்க…என்று எச்சரிக்கிறார். ஆனாலும் உடையாளூரில் கண்டது பள்ளிப்படைக் கோயில் அல்ல என்றே நினைக்கிறார்கள்.

நண்பர்களுக்கிடையேயான இந்த உரையாடல் அடுத்தடுத்து நடக்கும் ஓரிரு சம்பவங்களில் அவர்களுக்கு மேலும் பயமேற்படுத்துகிறது. ஆனாலும் அவர்களுக்கிடையே வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இருவரில் ஒருவன் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக் காலம் பொற்காலம் என்று சும்மாவா சொல்கிறார்கள் என்க, உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த ஒருத்தனுடைய ஆட்சிக் காலத்தைப் பொற்காலம் என்று எப்படிச் சொல்லலாம் என்று முற்போக்குச் சிந்தனையுள்ள இன்னொரு நண்பன் சொல்ல, வாதம் தொடர்ந்து அவர்களுக்கிடையே சண்டையாய்ப் புரண்டு போகிறது. கண்ணை மூடிக்கிட்டுத் தூக்கிப் பிடிக்கிறது சரியில்லை, எது நியாயம் அநியாயம்னு தீர்மானிக்கிறது மனசாட்சி இல்லையே…சாதிதானே…என்று தொடர்கிறது வாதம். நீயும்தான் உழைக்கும் வர்க்கத்துக்காகப் பேசல…அதுக்குள்ள அடங்கியிருக்கும் உன் சாதிக்காகப் பேசறே..என்று இன்னொருவன் வாதிட….ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் வாழ்ந்த அரசனால் கூட இன்றைய நம்மிடையே சாதிய உணர்வுகளை, கலவரங்களைத் தூண்ட முடிகிறதே என்பதுதான் இன்றைய நம் கவலை….என்ற கருத்தோடு முடிகிறது இக்கதை.  இக்கதையும், மேலே சொல்லப்பட்ட அறிவியல் புனைகதை ஆகிய இரண்டு திண்ணை.காம் இணைய இதழ்களில் வந்த முக்கியமான படைப்புக்களாகும்.

 

உறவுப்படிகளுக்குள் என்றும் விரிசல்கள் கூடாது என்பதை வலியுறுத்தும் கதை இது. உன் தங்கைக்குக்  கொடுத்துவிடு என்று வாய்வழி சொல்லிவிட்டு இறந்து போன தந்தையின் வாக்கைக் காப்பாற்ற மறுக்கிறான் அண்ணன் குமார். எழுபது சென்ட் நிலம் போச்சே என்று  தங்கை கஸ்தூரிக்கும் அவனுக்குமிடையில் பிரிவு வந்து விடுகிறது. முருகனின் அத்தை இறந்து போக அந்த சாவுக்குக் கிளம்புகிறார்கள். போன இடத்தில் அண்ணன் குமார் வீட்டின் நேர் எதிர்புறம் வண்டியை நிறுத்துகிறான் முருகன். எதுக்கு இங்க நிறுத்தித் தொலையுற, அவுக மூஞ்சில கூட முழிக்க விரும்பல என்று கஸ்தூரி சொல்ல, இதுதாண்டி கரெக்ட்….சாவுக்கு வந்து அண்ணன்காரன் வீட்டண்ட வண்டியை நிறுத்தி இறங்கி, திரும்பிக் கூடப் பார்க்காம போயிட்டாகளே  என்று அப்பத்தான் ஊர் பேசும் என்று சொல்ல, சாவுச் சோலியை முடித்துவிட்டு மாலை வீடு திரும்புகையில் வந்து வண்டியைக் கிளப்புகிறான் முருகன். வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்கிறது.  இங்க இப்டிப் பேச்சில்லாத ஆள் வீட்டு முன்னாடி நிப்பாட்டிட்டு மானத்தை வாங்குறானே என் புருஷன் என்று நான் தெருக்கோடியில் நிற்கிறேன் நீ வந்து சேரு என்று கிளம்புகிறாள் கஸ்தூரி. அந்நேரம் ஒரு கை முருகனை வந்து பற்றுகிறது. அண்ணன்காரன் குமாரு, தன் செய்கைக்காக மன்னிப்புக் கோருகிறான் இருவரிடமும். எழுபது சென்ட் நிலத்தை எழுதித் தந்துவிடுவதாக வாக்களிக்கிறான். இதற்குள் சாவு வீட்டில் குளிக்கையில் பையை விட்டு வந்து விட்டதாக எடுக்க ஓடுகிறாள் கஸ்தூரி. பங்காளிகள் இருக்கிற திமிர்ல உன்னை அடிச்சதுக்கு மன்னித்துக் கொள் என்று குமார் மன்னிப்புக் கோரி, ஸ்பார்க் பிளக்கைப் பிடுங்கி விட்டு, வண்டி ஸ்டார்ட் ஆகலன்னு நீ தங்கச்சிய நம்ப வச்சி லேட் பண்ணினியே…அத நான் கவனிச்சிட்டேன் மச்சான்…உன் நல்ல மனசு எனக்கு இப்பத்தான் புரியுதுன்னு தன் தவறுக்கு வருந்துகிறான் குமார்.

 

உறவுகளில் தொடர்ந்து பகையை மனதில் கொள்ளாமல் யாரேனும் ஒரு படி விட்டுக் கொடுத்தால், எதிராளி இரண்டு படிகள் இறங்கி வர வாய்ப்பு ஏற்படும்…அதனால் உறவுகள் மீண்டும் துளிர்க்கும், பலப்படும் என்கிற கருத்தை வலியுறுத்தும் ஜனரஞ்சகமான படைப்பான இச்சிறுகதை ஸ்வாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தைத் தந்து உயர்ந்து நிற்கிறது.

இத்தொகுப்பின் கடைசிக் கதை “ஊரு ஒப்பு”.  ஊரோடு ஒக்க…நாட்டோடு நடுவே… என்று பெரியவர்களால் சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது. கிராம சபை நடைமுறைகளை எல்லாம் கட்டைப் பஞ்சாயத்துகள், மனித சுதந்திரங்கள் பறி போகின்றன என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்து விட்டோம். ஆனாலும் இன்னும் நியாயத்துக்குக் கட்டுப்பட்டு, இம்மியும் வழுவாமல் நீதியோடு நடத்தப்பெறும் கிராம சபைகள் நம் கிராமங்களில் சில இருக்கத்தான் செய்கின்றன என்கின்ற விழுமியங்கள் அடங்கிய நியாயத்தை வலியுறுத்தும் இச்சிறுகதை பாராட்டத்தக்கது. இப்டி ஆளாளுக்குச் சட்டத்தைக் கையில் எடுத்துக்கிறதுன்னா அப்புறம் கோர்ட், போலீஸ்லாம் எதுக்கு என்கிற கேள்வி கேட்கப்படும்போது ஊழல் பண்ணிப் பொழைக்கிறதுக்குத்தான்  என்ற சாட்டையடியோடு இக்கதை முடிவுகிறது.

இத்தொகுதியில் உள்ள அனைத்துக் கதைகளுமே சமூகப் பார்வையோடு, காத்திரமான படைப்புக்களாகத் தலை சிறந்து விளங்குகின்றன. துணிச்சல் மிக்க சமூகப் போராளி, காலடியில் நிகழ்கிற சமகாலக் கொடுமைகளை எதிர்த்துப் போராடுதல் என்கிற சத்திய  ஆவேசத்தோடு இப்படைப்புக்கள் இத்தொகுதி முழுவதும் உயிர்ப்புடன் சுடர் விடுகின்றன என்ற அமரர் மேலாண்மை பொன்னுச்சாமியின் உண்மையான கருத்துக்கள் சாலப் பொருத்தமாகி, இவையே பல பரிசுகளுக்குரிய புத்தகமாக இச்சிறுகதைத் தொகுதியை உச்சத்தில் கொண்டு நிறுத்துகிறது என்று மனப்பூர்வமாக வாழ்த்தி மகிழ்கிறேன்.

————————————————————-

 

உஷாதீபன்,                                                               எஸ்.2 – இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171, 172)                                       மேத்தா’ஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்),                                     ராம் நகர் (தெற்கு)12-வது தெரு, ஸ்ருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில்,                      மடிப்பாக்கம்,   சென்னை – 600 091. (செல்-94426 84188) .

 

Series Navigationகுரக்குப் பத்து
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *