கதையும் கற்பனையும்

0 minutes, 8 seconds Read
This entry is part 4 of 33 in the series 3 மார்ச் 2013

 

 

 _கோமதி

 

gomathyநல்ல கோடை காலத்தின் ஒரு மாலை நேரம். ஆற்றங்கரையில் கையில் ஒரு கத்தைபேப்பருடன் தனியாக உட்கார்ந்திருந்தேன். பளபளவென்று தேய்த்த தங்கக்குடம் போல மின்னும் குடங்களில் பெண்கள் தண்ணீர் நிரப்பிக்கொண்டு படிக்கட்டுகளில் ஏறி பேசியபடி போய்க்கொண்டிருந்தனர். சில பெண்கள் காலிக் குடங்களுடன் படி இறங்கியபடி  பேசிக் கொண்டுமிருந்தார்கள். அவர்களில் சில சிறுமியரும் சில கிழவிகளும் கூட இருந்தனர்.

 

பெண்கள் கூடுமிடங்களில் பேச்சும் சிரிப்பும் கட்டாயமிருக்கும். ஸரஸா, புஷ்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். “பாவம்டி, அந்த விசாலம்! எத்தனை பூவை தலையில் வைத்து தைத்திருந்தார்கள். ஆடாமல் அசையாமல் மணிக் கணக்காக உட்கார்ந்து பூத் தைத்துக்கொள்வது ஒரு தண்டனை போல தோன்று கிறது. ஐயோ! என்னாலெ முடியவே முடியாதம்மா. ஸரஸா பம்பாயிலிருந்து வந்தவள். ஸம்மர் லீவுக்காக தன் மாமன் வீட்டுக்கு கிராமம் பார்க்க வந்தவள்.

அவர்கஷீமீ சுட்டிக்காட்டி பேசிய அந்தப் பெண்ணை கவனித்தேன். ஆமாம். பத்து

வயது சிறுமி தலை கொள்ளாத பூவுடன் நகைகளும் சுமந்த தலையுடனிருப்பது தலை சாமான் அந்த காலத்தின் அடையாளம். “ராக்கடி, பட்டம் சுட்டி, சந்திரப்பை, சூரியப்பை, நாகர், ஜடைபில்லை, திருகுப்பூ மற்றும் பூக்களுடன் சேர்ந்து ஜன்டநாகம் என்று குறைந்தது பத்து சவரனில் பாம்பு போல பின்னலில் தைப்பார்கள். வெள்ளியில் தங்கப் பூச்சு செய்ததும் வைத்திருப்பதுண்டு. அந்தக் காலத்தில் தங்கத்திற்கு அதிக விலை இல்லாததால் சவரனில் செய்வது வழக்கம். துணியில் குஞ்சலம் தங்கக்கட்டு கட்டி முத்துக்கள் கோர்த்து தொங்க

விடுவார்கள். அதுவும் வெள்ளியில் முலாமிட்டுப் பின்னுவதும் உண்டு.

 

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்தச் சிறு பெண் எப்படி பொறுமையுடன் இப்படி தலையை சிங்காரித்துக்கொண்டாள்?

 

பாவம்டா அந்தப் பெண். கஷ்டப்பட்டு அலங்கரித்து வந்திருக்கு. ஒனக்கு

சிரிப்பாயிருக்கா? நான் வந்ததால் உன் கற்பனை கலைந்து போனதா?” என்று கிண்டலாகக் கேட்டான். அவன் என் உயிர்த்தோழன் சுந்தர்.

 

என்னைக் கேலி செய்யாவிட்டால் உனக்கு சாப்பாடு இறங்காது. கற்பனை யெல்லாம் அப்படி எல்லாம் வந்துவிடாது. வரும்போது ‘டக்’கென்று பிடித்துக் கொள்ளாவிட்டால் மறுபடி கிடைக்கவும் கிடைக்காது. ஏதோ பொழுதுபோக்க வந்தேன்” என்றேன் நான்.

 

அடப் போடா! நன்றாக படித்துவிட்டு வந்திருக்கிறாய். நல்ல வேலையும் கிடைக்கும். அதை விட்டுவிட்டு கதை, கட்டுரைன்னு இப்படி நேரத்தை வீணடிக் கிறாய். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. ஒரு வேலையை பார்த்துக்கொண்டு இடையில் இதை ஒரு பொழுதுபோக்காக செய்யமுடிμம். இதில் நீ என்ன லக்ஷ லக்ஷமாய் சம்பாதித்து விடுவாயா?”.

 

எனக்கு உன்னோடு பேச நேரமில்லையப்பா. என் வேலை தலைக்கு மேலே கிடக்கிறது” என்று அவன் போய்விட்டான்.

 

எனக்கு வேலை செய்து சம்பாதித்தே ஆகவெண்டுமென்ற எந்த அவசியமு மில்லை. அப்பா பரம்பரை சொத்தும் என் அம்மா மஞ்சக்காணி சொத்தும் ஒரே மகன் என்று என்பெயரில்தானிருந்தது. சென்னையில் பி.ஏ. படித்து முடித்த எனக்கு வயது 25 ஆகிறது. திருமணத்திற்கு ஜாதகங்கள் இரண்டு வருடமாகவே வர ஆரம்பித்துவிட்டன. அம்மாவுக்கு உடனே திருமணம் செய்துவிட ஆசை. சொந்தத்தில் பார்க்கப் போட்டா போட்டியாகப் பெண்கள் இருக்கிறார்கள். அம்மா பேச ஆரம்பித்தால் என் கல்யாணத்தில்தான் நிறுத்துவாள்.

 

நல்ல வேளை என் அம்மா என் பக்கம். “அவனை ஏன் தொந்தரவு செய்யறே?

தானே ரெண்டு வருடமானால் செய்துப்பான் பார்” என்பார். நிம்மதி ஆகும்.

 

என்னதான் சொத்துகள் இருந்தாலும் உத்யோகம் புருஷ லக்ஷணம் என்று ஒரு

உத்யோகத்திற்கு போகவேண்டுமென்பதே என் ஆசை. அப்படி ஒரு வேலை கிடைத்தபிறகு நானும் திருமணம் செய்து கொள்வேன் என்று அம்மாவிடமும் சொன்னேன்.

 

சிறு வயது முதலே எழுதவேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. என் எழுத்துக்கு சற்று மதிப்பும் ஏற்பட்டதால் ஆர்வமும் அதிகரித்தது. ஆற்று மணலில் உட்கார்ந்து எழுதுவது எனக்குப் பிடித்த விஷயம். அங்கு என் பேனாவுக்கு தானாகவே பல உணர்வுகள் பீறிட்டு எழுந்து நான் மகிழ்ச்சி, சோகம், நகைச்சுவை என்று பலவிதமான படைப்புகளை உருவாக்கியதுண்டு.

 

ஆனால், என் கற்பனையை கலைப்பதற்கென்று அவ்வப்போது ஆஜராகும் என் நண்பன் ஸுந்தர் இன்று வரவில்லை. எனவே, இன்று என் கற்பனை கலைய வில்லை. எனக்கு பழைய கால நகைகளைப் பெண்கள் அணிவது அழகுக்கா? ஆஸ்திக்கா? என்ற எண்ணம் மனதில் பதிந்தது.

 

இதென்ன? இந்தப் பெண்கள் எதைத் தேடுகிறார்கள்? மணலில் விழுந்துவிட்ட எந்தப்பொருளைத் தேடுகிறார்கள்?

 

சற்று நேரம் அவர்கள் பேச்சை கவனித்தேன். அந்த அலங்காரச் சிறுமியின்

தலையிலிருந்து திருகு பில்லை விழுந்துவிட்டதாம். பாவம். ’கல் இழைத்தது,  விலை உயர்ந்தது என்று பேசிக்கொண்டார்கள். அகப்படவேயில்லை.

நகை அணிய ஆசையென்றால் ஆற்றங்கரைக்கு ஏன் வரவேண்டும்? நாலு பேர் பார்க்க வேண்டுமானால் வாசல் திண்ணையில் உட்காரலாமே! இதென்ன பெண்களோ? இதென்ன ஆசையோ?

 

மறுபடியும் நகைகளைப் பற்றியே யோசித்தேன். என் பேனாவும் கிறுக்க ஆரம்பித்தது.

 

பெண்களின் மோகம்” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை தயாராகிறது.

 

ராதை அம்மாளுக்கு தன் மகன் படிக்காததில் குறையே இல்லை. மருமகள் படித்தது தான் குறையாகத் தோன்றியது. இதற்கு என்ன செய்யமுடியும்? இந்த விஷயத்திற்குசுந்தரேசனை குறை கூற வழியில்லை. அவரும் பணத்தை தண்ணீராகத்தான் செலவுசெய்தார். டியூஷன் வைத்தார். நல்ல பெயர் பெற்ற பள்ளியில்தான் சேர்த்தார். எத்தனைமுயற்சி செய்தும் மூர்த்தியின் மூளையில் படிப்பு ஏறவே மறுத்தது. மொத்தத்தில் அடாவடி இல்லை. கெட்ட சகவாசம் ஏதுமில்லை. நல்லவன், படிக்கத்தான் செய்கிறான். தேர்வு எழுதி தேர்ச்சி பெற ஏனோ முடியவில்லை. தந்தையின் மரக்கடையில் வியாபாரம் பழக ஆரம்பித்தான்.

 

அவன் தந்தைக்கு ஒரு நண்பர் சிறு வயது முதலே சினேகம். தன் மகளை மூர்த்திக்கு கொடுக்க விரும்பினார். மூர்த்தியின் படிப்பைப் பற்றி அவர் கவலையேபடவில்லை. ஏழு தலைமுறை எடுத்துச் சாப்பிட்டாலும் குறையாது சொத்து. பிறகு படிப்பும் சம்பாத்தியமும் எதற்கு? என்றே நினைத்தார்.

 

மத்திய தரக் குடும்பத்துப் பெண் வத்ஸலாவும் மூர்த்தி பணக்காரன். பார்க்க அழகா இருக்கிறான் என்றே சம்மதித்தாள். மூர்த்தியின் அப்பாவோ தன் முயற்சி யால் முன்னுக்கு வந்தவர் பெரியவர்கள் ஆஸ்தியைப் பெருக்கியவர் என்றாலும் எண்ணி எண்ணித்தான் செலவு செய்வார். வாரி இறைப்பதற்கெல்லாம் மனம் வராது.

 

ராதை அம்மாள் நல்ல கனம் கனமான நகைகளைச் சேர்த்து வைத்திருந்தாள். பெண்குழந்தை இல்லாததால் எல்லாமே வத்ஸலாவுக்குத்தான். வீடு பூராவும் பாத்திரங்களும் விலை உயர்ந்த மரச்சாமான்களுமாய் செல்வச்செழிப்புடன் காட்சி அளித்தது. சாதாரணக்குடும்பத்துப் பெண்ணான வத்ஸலாவுக்கு நகை என்றால் ஆசைதான். என்றாலும், ஒரு நாலு வடம் செயின் கல் வைத்த முகப் புடன் 50 சவரன் என்றால் அதை அணிந்தால் கழுத்தே உள்ளே அமுங்கி விடும் என எண்ணினாள்.

 

தலை முதல் கால் வரை அணிந்துகொள்ள விதவிதமான பல நகைகள் இருந் தன. அந்தப் பட்டியல் ராக்கடி, நெற்றிச்சரம், பட்டம், சுட்டி, ஜடைபில்லை, திருகுப்பூ நாகர், ஜடைநாகம், குஞ்சலம், வாளி, மாட்டல், பச்சைக்கல் முத்து புல்லாக்கு, கெம்புச் சிவப்புத் தோடு, விதவிதமான டிசைனில் மூக்குத்தி, விதவித மான காதுத்தோடுகள், தொங்கட்டான் ஜுமுக்கிகள். காசுமாலை, கல் அட்டிகை, பதக்கங்கள், பலவித கற்கள் பதித்த ஹாரங்கள், வங்கி, நாக ஒத்து அளவுகளில் பல டிசைன்களில் இடுப்பு ஓட்டியானம். கைக்காப்புகள், பல டிசைன் வளையங் கள்,  பல வண்ணக்கற்கள் பதித்த வளைகள் மோதிரம் பல தினுசுகள், பல வர்ணக் கற்கள் பதித்த மோதிரங்கள், வெள்ளியில் கால் காப்பு சலங்கை கொலுசு கெட்டி கொலுசு பட்டை கொலுசு, உருட்டு, சித்து சலங்கை மெட்டி என்று அவற்றை பார்க்கவே பிடிக்கவில்லை வத்ஸலாவுக்கு. அணிந்தால் கண்ட்ராவியாய், விகாரமாயிருக்கும் என்று தோன்றியது.

 

சிறிய ஒரு வைரத் தோடு, ஜிமிக்கி.  ஒற்றை வைர மூக்குத்தியும் இரண்டு கம்பிவளையலும் மூர்த்தியின் மைனர் செயினையும் சிறிய ஒரு மோதிரமும் தான் அணிந்தாள்

.

அந்த மைனர் செயினே ஐந்து சவரன். புலி நகம் ஒரு சவரன்; கம்பி வளையல் 4ம், 6 சவரன்கள்.  தோடுகள், மோதிரம் மூக்குத்தி இரண்டு சவரனுக்கு மேலி ருக்கும். திருமாங்கல்யமே இரண்டு சவரன் ஒன்றை கயிற்றிலும் மற்றொன்றை செயினிலும் கோர்த்துக்கொண்டாள்.

 

இவைகளே வத்ஸலாவுக்கு கனமாய் இருந்தது.

 

ஒரு நாள் பேசும்போது, “ஏம்மா! ஏதாவது ஒரு பழைய நகையை அழித்து

மெல்லிசா மாத்தி பண்ணிண்டா போட்டுக்க சுலபா இருக்குமே” என்று ராதை அம்மாளிடம் கேட்டாள் வத்ஸலா.

 

ஏண்டீம்மா, இப்படி புதுக்கருக்கு அழியாம புத்தம்புதுசா ஒனக்குன்னு தானே

வச்சிருக்கோம். யாராவது நல்லா இருக்கிறதை அழிப்பாளா? ஏதாவது அறுந்து போனால், உடைந்துபோனால் அழிச்சுப் பண்ணலாம்’. நான் மூர்த்திக்கு குழந்தை நகை பண்ணினதைக் கூட நல்ல கனமா அழுத்தமாதான் பண்ணவச்சேன். எல்லாமே பத்து சவரன், பதினைந்து சவரன்னுதான் செய்வேன். மெல்லிசா பண்ணின்டா தினம் ஒரு ரிப்பேர்னு தட்டான் கடைவாசலைத்தான் குத்தகைக்கு எடுக்கணும். எனக்கு அதெல்லாம் புடிக்கவே புடிக்காது.

 

மாமியாரின் திட்டவட்டமான பேச்சுக்கு வத்ஸாவால் பதில் சொல்ல முடிய வில்லை. அவளுக்குத் தன் நகை ஆசை நிறைவேற வழியில்லை என்றே தோன்றியது.தன் மனக்குறையை சொல்லி ஆற்றிக்கொள்ளக்கூட யாரு மில்லை. தனி பங்களா.  அக்கம் பக்கம்கூட இல்லை. ஜன்னலில் பார்த்தால் பச்சைப்பசேல் என்ற வயல்களும் மரம், செடி, கொடிகளும் பக்ஷிகளும்தான். ஏதாவது வேலை செய்யவோ ஆள்படைகள் வீட்டோடு இருந்து கையசைக்கவும் விடுவதில்லை. படிக்க ஏதும் புத்தகமோ பேப்பரோ மாகசைன் என்று ஏதுமில்லை. ஒரு ரேடியோகூட இல்லை அவர்களிடம். சிறைக்கைதி போல உணர்ந்தாள் வத்ஸலா. பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி வந்து மாட்டிக்கொண் டோமே என்று மனதிற்குள் புழுங்கிப்போனாள்.

 

எதையும் கேட்காமலே புரிந்துகொண்ட மூர்த்தி ஒரு நாள் தாய்-தந்தையிடம் சண்டை போட்டான். தன் மனைவி இஷ்டப்படி நகை செய்து போட மனமில்லை. படித்த பெண்ணுக்கு ஒரு பேப்பர் வாங்கக்கூட மனமில்லை. பொழுதுபோக்க ஒரு ரேடியோப்பெட்டிகூட இல்லை. இங்கு பட்டணத்தில் வாழ்ந்த பெண் எப்படி வாழமுடியும்? நாங்கள் தனியாகப் போகிறோம் என்று கோபித்துக்கொண்டு புறப்பட்டான்.

 

யார் தயவுமில்லாமல் வைரத்தோட்டை விற்று ஒரு மளிகைக்கடை திறந்து வியாபாரம்தொடங்கினான். ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடித்தனம் நடத்தத் தொடங்கினார்கள்.  சந்தோஷமாய், நிம்மதியாய் சினிமா, டிராமா, ஸர்க்கஸ், கோவில், ஷாப்பிங் என்று தினமும் சுற்றிவந்தார்கள்.  கச்சேரி,  பொருட்காட்சி போன்றவைகளைக் கூட அவர்கள் விடுவதில்லை.

 

காந்தி என்ற பெண் வத்ஸலாவுடன் குடி இருந்தாள். சினேகமாகவும் உதவியாயுமிருந்தாள். வத்ஸலா மசக்கையால் வாந்தி எடுத்து சாப்பிடப் பிடிக் காமல் கஷ்டப்படும் போது காந்தி அவளுடைய வாய்க்குப் பிடித்தாற்போல சமையல் செய்து சாப்பிட வைத்து உதவிகள் செய்தாள். வத்தல், வடாம், பக்ஷணம், பலகாரம் செய்து அவள் உதவியது மூர்த்திக்கும் திருப்தியாயிருந்தது.

 

இன்று அதிகம் வாந்தி எடுத்து துவண்டுபோய் தூங்கிவிட்டாள் வத்ஸலா. மூர்த்தி கடைக்குப் போயிருந்தான். காந்தி முறுக்கு பிழிந்துகொண்டிருந்தாள். வத்ஸலா எழுந்தபோது கழுத்துச் செயின் இல்லை. ஐந்து சவரன் செயின் புலிநகத்துடன் 7 சவரன் இருக்கும்.

 

வாசல் கதவு தாளிட்டபடி இருக்கும்போது யாரும் வரவில்லை. காந்தி தான் எடுத்திருப்பாள் என்பது நிதர்சனமாகத் தெரிந்தாலும் கேட்கமுடியவில்லை.

 

வத்ஸலாவுக்கு நகர வாழ்வு கசந்து போனது. வீடும் வாசலும் ஆளும் படையு மாக எல்லாவற்றையும் துறந்து இப்படி அனாதைபோல் ஏன் வாழவேண்டும்? கஷ்டப்பட்டு சம்பாதித்து எண்ணி எண்ணி செலவு செய்து உதவி செய்யத் துணை இன்றி ஏன் திண்டாட வேண்டும்-? புருஷனிடம் கேட்கவும் பயம். ஊருக்குப் போவோம் என்று எப்படிச் சொல்வது?

 

தனக்காகவே பெற்றோரிடம் சண்டையிட்டு வந்தவரை எப்படி திரும்பப் போவோம் என்று கேட்பது? அவள் தயங்கினாள்.

 

மூர்த்திக்கு போட்டிக் கடைகளால் வியாபாரம் சரியத் தொடங்கியது மனம் வலித்தது. கஷ்டமே படாத உடலும் சோர்ந்து அலுத்தது. நாமே கஷ்டங்களை விலைகொடுத்து வாங்கி ஏன் அனுபவிக்கிறோம்? நம் பிள்ளை ராஜா போல தங்கத் தொட்டிலில் தூங்குபவன். அவனையும் துன்புறுத்துவது சரியல்ல. ஊர் திரும்புவோம் என்று தீர்மானித்தான்.

 

வீட்டுக்கு வந்தவுடன், வத்ஸீ, நீ வேண்டாமென்றாலும் நான் கிளம்பிவிட்டேன். நாம் ஊருக்குப் போகலாம் என்று கடையை விற்க ஏற்பாடு செய்துவிட்டேன்”, என்றான்.

 

அட நாமே எப்படிச் சொல்வது?’ என்றுதான் தயங்கினேன். நம்ப குழந்தையைத்

தாங்க நம்ப பெற்றோர் காத்திருக்கும்போது இங்கே அனாதை போல ஏன் திண்டாடவேண்டும்? என்ற மனைவியை ஆச்சர்யமாக பார்த்தான் மூர்த்தி.

 

அவர்கள் புறப்படுவதற்கு முன் ராதையம்மா நம் சுந்தரேசனும் அவர்களை அழைத்துப்போக கார் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். பேரன் பிறக்கப் போவது தெரிந்து உடனே வந்துவிட்டனராம். வீட்டுக்கே தட்டானை வரவ   ழைத்து கட்டித் தங்கத்தை உருக்கி வத்ஸலாவுக்குப் பிடித்த டிசைனில் நகைகள் செய்துகொள்ளவும், பிறக்கும் குழந்தைக்கும் வேண்டியது செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்தனர். ஆல் இண்டியா ரேடியோ வாங்கி அதில் ஸிலோன் பாட்டு

போட்டுக்கொடுத்தார்.

 

வத்ஸலாவுக்கும் பிடித்த மாகசீன்களும் பத்திரிகைகளும் வீட்டுக்கு வரவழைக் கப்பட்டன. பிடித்த எழுத்தாளர்களின் நாவல்களும் வந்து குவிந்தன. மூர்த்தி – வத்ஸலாவுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதை விட ராதை – சுந்தரேசனுக்கு ஏகப்பட்ட குஷி.

 

இப்போது பிள்ளையுடன் ஓடித் திரியும் வத்ஸலாவுக்கு படிக்கவோ பாட்டு கேட்கவோ நேரமே இல்லை. மாமியாரிடம் பேரனைப் பற்றி குறை கூறவே சரியாகிவிடுகிறது. ஏனென்றால், அவளுடைய பிள்ளை பாட்டி தாத்தா செல்லம்.

 

 

இருட்டிவிட்டதே என்று எழுந்தேன். காலில் என்னவோ குத்தியது. கையில் எடுத்துப்பார்த்தால் உயர்ந்த கற்கள் பதித்த திருகு வில்லை!

 

விலை உயர்ந்த அதை விசாலத்தின் வீட்டில் சேர்ப்பித்துவிட்டு என் கதையை தபாலில் அனுப்பி சேர்ப்பித்துவிட்டு வீடு திரும்பியபோது எனக்கு வயிறு பசித்தது. ’ஓ சாப்பிட வேண்டுமே!…’

 

வீடு திரும்பினேன்.

0

Series Navigationரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்ற ((TAFAREG) விழா!நானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்
author

கோமதி

Similar Posts

0 Comments

Leave a Reply to mythili Cancel reply

Your email address will not be published. Required fields are marked *