கம்பனின்[ல்] மயில்கள் -3

author
0 minutes, 6 seconds Read
This entry is part 3 of 9 in the series 27 ஆகஸ்ட் 2017

எஸ் ஜயலட்சுமி

வசிஷ்டர் வருகை

மன்னன் கிடக்கும் அலங்கோல நிலை கண்டு கோசலை, “மன்னன் தகைமை காண வாராய் மகனே! என்று கதறி அழுது புலம்புகிறாள்.

மங்களகரமான காலை நேரத்தில் இப்படி ஒரு அழுகுரலைக் கேட்டதும் வந்திருந்த மன்னர்கள் பதற்றமடைய வசிஷ்டர் கைகேயி அரண்மனைக்கு ஓடோடி வருகிறார். கோசலை கதறி அழுவதையும் கைகேயி சற்றும் சலனமில்லாமல் இருப்பதையும் கண்டு இந்த நிலைமைக்கு அவளே காரணம் என்று புரிந்து கொள்கிறார். கைகேயி தயக்கமில்லாமல் நடந்தவற்றை விவரிக்கிறாள்.

சிறிது மயக்கம் தெளிந்த தயரதனிடம், ‘வருந்த வேண்டாம். கைகேயியே அரசு ரிமையைத் தந்து விடுவாள் எல்லாம் நல்லபடி நடக் கும் என்று ஆறுதல் கூறுகிறார். தயரதனோ, “என் உயிர் போகுமுன் இராமனுக்கு முடி சூட்டி அவன் வனம் போவதைத் தடுத்து என் வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகிறான். முனிவர், கைகேயி யிடம், ”இனி உன் புதல்வற்கு அரசும் ஏனையோர் உயிர்க்கு உயிரும் உன் கணவர்க்கு உயிரும் உதவி புகழ் பெறுவாய்” என்று அறிவுரை கூறுகிறார். ஆனால் கைகேயியோ குலகுரு என்றும் பாராமல் “அரசன் மெய்யில் திரிவான் என்றால் உயிரோடு இனி வாழ்வு உகவேன்” என்று ஒரே போடாகப் போடு கிறாள்.

பெண்ணா பேயா?

இதைக் கேட்ட வசிஷ்டர் அதிர்ந்து போகிறார். “நீ ஒரு பெண்ணா? தீயோய்! மாயாப் பேயோ? கொடியாய் என்று ஆத்திரத்தைக்

கொட்டித் தீர்க்கிறார். இதற்குள் சற்றே மயக்கம்

தெளிந்த மன்னன், நாவில் நஞ்சை உடைய கைகே யியை நோக்கி,

‘பண்டே எரி முன் உன்னை பாவி!

தேவியாகக் கொண்டேன் அல்லேன்

வேறு ஓர் கூற்றம் தேடிக் கொண்டேன்

என்று தன் வெறுப்பையும் சீற்றத்தையும் உமிழ்கி றான். இதற்கும் அசரவில்லை கைகேயி! வெறுப்பின் உச்சிக்கே சென்ற தயரதன்

 

சொன்னேன் இன்றே, இவள் என்

தாரம் அல்லள், துறந்தேன்

மன்னே ஆவான் வரும் அப்

பரதன் தன்னையும் மகன் என்று

உன்னேன்; முனிவன், அவனும்

ஆகான் உரிமைக்கு

 

என்று குலகுரு வசிஷ்டர் சாக்ஷியாகச் சொல்லி இருவரையும் துறக்கிறான்.

 

தயரதன் சாபம்

மன்னன் நிலை கண்டு, தளர்ந்து போகும் மன்னனுக்கு ஆறுதல் சொல்லித் தேற்று

கிறாள் கோசலை. நடந்த அனைத்தையும் உணர்ந்து கொள்கிறாள். மகனைத் தடுத்தால் மன்னனுக்கு இழிவு, அவன் புகழுக்கு அழிவு. தடுக்காவிட்டாலோ கணவன் உயிருக்கு அழிவு. என்ன செய்வாள் கோசலை? இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவிக்கிறாள். மன்னனோ புலம்பிக் கொண்டே யிருக்கிறான். இராமன் வருவானா? வருவானா என்று கேட்டுக் கொண்டே யிருக்கிறான்.

அதே சமயம் அவன் வர மாட்டான் என்பதும் புரிகிறது. தனக்கு முனிவரால்ஏற்பட்ட சாபம் இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

இது ராமன் பிறக்கு முன்னரே ஏற்பட்டது. புத்திர சோகத்தால் தயரதன் இறப்பான் என்பதே அது. புத் திரனே பிறக்காத காலத்தில் அது பெரிதாகத் தெரிய வில்லை. முனிவரால் தனக்கு ஏற்பட்ட சாபத்தை கோசலையிடம் விரிவாகச் சொல்கிறான். கைகேயி யிடம் எவ்விதச் சலனமும் இல்லை.வசிட்டன் அரசவை சென்று நடந்தவற்றை விவரிக்கிறான்.

கோசலையிடம் விடை பெற்ற இராமன் நேராக சுமித்திரை அரண்மனைக்கு  வரு கிறான்.  தயரதனையும் கோசலையையும் விட்டு விட்டுக் கைகேயி  ஏவல் மகளிரிடம் சீரை கொடுத்த னுப்புகிறாள். அவர்கள் சுமித்திரை இருப்பிடம் சென்று சீரை கொணர்ந்த செய்தியைச் சொல்கிறார்கள். அதி லிருந்து ஒரு சீரையை எடுத்துக் கொண்டு, தாயிடம் சென்று இராமனோடு வனம் செல்ல அனுமதி வேண்டு கிறான் இலக்குவன். தாய் அனுமதி தர இராமனோடு வனம் செல்லத் தயாராகிறான்.

இராமன் வனவாசம் செய்யப் போகும் செய்தியறிந்த சீதை சீரை உடுத்தித் தயாராக இருக்கிறாள். முதலில் அவளை அழைத்துச் செல்ல இராமன் மறுத்த போதிலும் “நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு? என்று, சீதை தன் பேச்சு சாதுரியத்தால் இராமனோடு வனம் செல்லத் தயாராகி விடுகிறாள்.

 

அயோத்தி நீங்குதல்.

தயரதன் இருந்த அரண்மனை வாயிலுக்கு இராமன் சீதை இலக்குவன் மூவரும் வரு கிறார்கள். இவர்கள் சீரை உடுத்தி வருவதைக் கண்ட அயோத்தி மக்கள் கதறுகிறார்கள். அங்கு வந்த கோசலை, சுமித்திரையை வணங்கி, “சக்கரவர்த்திக்கு ஆறுதல் கூறித் தேற்றுங்கள்” என்கிறான் ராமன். அவர்கள், தெய்வங்காள்! இவர்களுக்கு உறு துணை யாக இருந்து காப்பாற்றுங்கள் என்று வேண்டிக் கொள்கிறார்கள். இந்த இடத்திலும் கைகேயி காணப் படவில்லை. மூவரும் சேர்ந்து வனம் போகும் காட்சி யைக் காண மனசாட்சி இடம் தர வில்லையோ? அல் லது அவள் நினைத்த காரியத்தை சாதித்து விட்டதைச் சொல்ல கூனியைத் தேடிப் போய் விட்டாளோ?

 

தயரதன் மறைவு

இராம , சீதா இலக்குவர்களைக்

காட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்த சுமந் திரன் இராமன் வனம் சென்றான் என்று சொன்னவுடன் தயரதன் உயிர் பிரிகிறது. நண்டு கருவுயிர்க்கும் போது இறந்து விடும். நாகம் தன் முட்டையாலே இறந்து விடும். வாழை குலை ஈனும் போது வீழும். மூங்கில் தன் பக்கக் கிளைகள் தோன்றும் போது உராய்வினால் பற்றி அழியும். இவையெல்லாம் தன் வம்சத்தாலேயே அழிவதைப்போல் தயரதனும் இராம னால் இறக்க நேரிட்டதே என்று அரற்றுகிறாள் கோசலை. அந்த வேதனையில்

வடித்தாழ் கூந்தல் கேகயன்

மாதே! மதியாலே

பிடித்தாய் வையம்; பெற்றனை

பேரா வரம் இன்னே

முடித்தாய் அன்றே மந்திரம்

 

[வடித்தாழ் கூந்தல்—-அழகுற்றுத் தொங்கி நீண்ட கூந்தலை உடைய.   மந்திரம் முடித்தாய் அன்றே—உன் ஆலோசனையை நிறைவேற்றிக் கொண்டாய் அல்லவா]                          ]

 

என்று கதறுகிறாள். கோசலையின் கதறலைக் கேட்டு சுமித்திரையும் மற்றுள்ள தேவிமார்களும் மயில் கூட்டம் போல் வந்து கூச்சலிட்டு அழுது புலம்புகிறார்

கள். நாடக மயில் எங்கே? இங்கும் கைகேயியைப் பற்றிய தகவல் இல்லை.

 

கைகேயி பரதன் சந்திப்பு.

பரதன் வந்து சந்திக்கும் வரை நாம் இந்த நாடக மயிலைப் பார்க்க இயலவில்லை. கேகய நாட்டிலிருந்து பரதன் வந்து விட்டான் என் பதை அறிந்த கைகேயி, தயரதனைத் தேடிச் செல்லும் பரதனை அழைத்து வரச் சொல்கிறாள். பரதன் கேகய நாட்டிலிருந்து வரும் வழியில் அயோத்தியின் நிலை குலைந்த நிலையைப் பார்த்து கலங்கிப் போயிருக்கி றான். அதனால் தந்தையைக் காண விரைகிறான். தாய் அழைத்ததும் வணங்கிய பரதனிடம், “என் அன்னை தந்தை, தங்கைமார்கள் நலமாக இருக்கி றார்களா?” என்று விசாரிக்கிறாள்.

பொதுவாகக் கணவன் இறந்த பின் முதன் முதலாக மகனைப் பார்க்கும் எந்தத் தாயும் பொங்கி அழுது புலம்பித் தீர்த்து விடுவார்கள். நெருங்கிய உறவினர்களைக் கண்டதுமே தன்னை யறியாமலே துக்கம் பீறிட்டு விடும். ஆனால் கைகே யியோ சாவகாசமாகத் தன் பிறந்த வீட்டுக்காரர் களைப் பற்றி குசலம் விசாரிக்கிறாள்! மன்னன் எங்கே என்று கேட்ட பரதனிடம்

தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அத்

தேன் அமர் தெரியலான் தேவர் கைதொழ

வானகம் எய்தினான் வருந்தல் நீ

[தானவர் வலி தவ நிமிர்ந்த தானை—அசுரர்களுடையவலிமை கெடும் படி அவர் மேல் சென்று பொருத சேனை.    தேன் அமர் தெரியலான் —–தேன்  பொருந்திய மலர் மாலை அணிந்த தயாரதன்.]

என்கிறாள். தன் கணவன் இறந்த செய்தியைத் தன் வாயாலேயே மகனிடம் சொல்லும் நிலைக்குத் தள்ளப் பட்ட போதிலும் துணிந்து சொல்வதற்கு எத்தகைய

மனோதிடம் வேண்டும். மேலும் நீ வருந்தாதே என்று இயல்பாகச் சொல்லும் நெஞ்சுரமும் கொண்டவளாக விளங்குகிறாள் கைகேயி! ”கல் நெஞ்சக்காரியான உன்னைத் தவிர வேறு யாராவது இப்படிச் சொல்வார் களா? என்று பரதன்

 

எழுந்தனன், ஏங்கினன், இரங்கிப் பின்னரும்

விழுந்தனன், விம்மினன், வெய்து உயிர்த்தனன்

 

அழுது அரற்றுகிறான் பல சொல்லிப் புலம்புகிறான்.

தந்தையை இழந்த துயரத்தைத் தமையனிடம் பகிர்ந்து கொண்டால் தான் தீரும் என்று எண்ணுகிறான். ஆனால், இராமன், ”தேவி தம்பி இவ் இருவரொடும் கானகத்தான் என்று கைகேயி சொன்ன சொல் இடி போல் தாக்குகிறது. என்ன காரணம்? கைகேயி சொல்கிறாள்.

 

வாக்கினால் வரம் தரக் கொண்டு

போக்கினேன் வனத்திடை, போக்கி பார் உனக்கு

ஆக்கினேன்; அவன் அது பொறுக்கலாமையால்

நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து

எவ்வளவு எளிதாகச் சொல்லி விடுகிறாள்? என்மேல் குற்றம் எதுவும் இல்லை. முன்பு வரம் தந்தவன் உன்தந் தை. இப்போது அவ்வரங்களைக் கேட்டுப் பெற் றேன். ஒரு வரத்தால் அவன் காடு சென்றான். மற்றொன்றால் உனக்கு அரசுரிமை பெற்றிருக்கிறேன். இது பொறுக்காத மன்னன் உயிரைப் போக்கிக் கொண்டால் இதில் என் குற்றம் என்ன? என்பது போலப் பேசுகிறாள்.

கேட்ட பரதன் துடி துடித்துப் போய் செவிகளைப் பொத்திக் கொள்கிறான். அவனுக்குள் ஒரு புயல் ஒரு சூறாவளி உருவாகிறது. வெறி கொண்டவன் போல் பலப்பல சொல்லிப் புலம்பு கிறான். ”நீ தாயில்லை பேய்! இன்னும் என்னென்ன பழியெல்லாம் தரப் போகிறாயோ?” என்று துடிக் கிறான்.

பாரோர் கொள்ளார்; யான் உயிர்

பேணிப் பழி பேணேன்;

தீராது ஒன்றால் நின் பழி;

ஊரில் திரு நில்லாள்

ஆரோடு எண்ணிற்று? ஆர்

உரை தந்தார்? அறம் எல்லாம்

வேரோடும் கேடு ஆக முடித்து

என் விளைவித்தாய்?

 

என்கிறான். தயரதன் முன்னர் சொன்னபடி ஊரும் உலகமும் இதற்கு ஒப்பாது என்கிறான். தான் கேகய நாடு செல்லும் வரை மாசு மறுவில்லாமல் இருந்த கைகேயி உள்ளம் இப்படி மாற வேண்டுமென்றால்

அதற்கு வேறு யாரேனும் காரணமாக இருந்தார்களா

என்று வினாவுகிறான். நிச்சயம் இதற்கு வேறு யாரோ உடந்தையாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்

கிறான். இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று தவிக்கிறான்.

 

ஏன்று உன் பாவிக் கும்பி வயிற்றினிடை வைகித்

தோன்றும் தீராப் பாதகம் அற்று, என் துயர் தீர

சான்றும் தானே நல் அறம் ஆக தகை ஞாலம்

மூன்றும் காண, மாதவம் யானே முயல்கின்றேன்

என்று சூளுரைக்கிறான்

 

கைகேயியின் பரிதாப நிலை

கரம் பிடித்த கணவன் தயரதன் நீ என் மனைவி இல்லை என்று ஒதுக்கி விடுகிறான். பெற்ற மகனோ அவளுக்கு மகனாகப் பிறந்ததே தீராப் பழி என்கிறான். கைகேயியின் நிலை பரிதாபத்திற்கு உரியதானது. செய்த பாவத்திற்கு ஒரு வழி சொல்கிறான்.

 

சிறந்தார் சொல்லும் நல் உரை

சொன்னேன்; செயல் எல்லாம்

மறந்தாய் செய்தால் ஆகுதி

மாயா உயிர் தன்னைத்

துறந்தாய் ஆகின் தூயையும்

ஆதி; உலகத்தே

பிறந்தாய் ஆதி, ஈது அலது இல்லைப்

பிறிது என்றான்

 

“நான் தெரியாமல், அறிவில்லாமல் தவறு செய்து விட் டேன் என்று ஒப்புக் கொள். இனிமேலாவது இந்த எண் ணத்தை விட்டு விட வேண்டும் எண்ணங்கள் நல்ல வையாக மாற வேண்டும். அதை விட உயிரை விட்டு விடுவதே மேலானது. இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்” என்று கடுமையாகச் சாடுகிறான்.

எந்த மகனுக்காக இவ்வளவும் செய்தாளோ, நாடகமாடினாளோ அந்த மகன் தன் னைப்  பாராட்டா விட்டாலும் பழி தூற்றித் தன்னைப் புறக் கணிப்பான் என்று எதிர் பார்த்திருக்க மாட் டாளோ? கணவன்,  குலகுரு, கோசலையோடு பெற்ற மகனும் அல்லவா நிந்திக்கிறான்! பரதனை கைகேயி சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ? தம்பியர் அலாது வேறறியாத அண்ணனைப் போலவே பரத னும் அண்ணனை அன்றி வேறு அறியாதவன் என் பதை அவள் உணரவில்லை என்றே தோன்றுகிறது.

இது அவளுக்கு ஒரு சறுக்கல்!

அருமை மகனே, தன்னை இறந்து போவதே மேல் என்று சொன்னது அதிர்ச்சியை அளித் திருக்கும்! ஆசைக் கணவன் இறக்க அன்பு மகனும் துறக்க இந்த நாடக மயில் அதன் பிறகு ஆடவும் இல்லை நாடகமாடவும் இல்லை.

தாயைப் பழித்த பரதன் தன் துயரை ஆற்றிக் கொள்ள கோசலையை நாடிச் செல் கிறான். அவள் காலடியில் விழுந்து கதறுகிறான். :உலகத்து இருளைப் போக்கும் சூரிய குலம் பரதன் என்பவனால் பழி படைத்ததே! நாடு, ஒரு தலைமகன் காடு சென்றதால் கண் இழந்ததே! என்று பல சொல் லிப் புலம்புகிறான்.

பரதனின் புலம்பலைக் கேட்ட கோசலை பரதனின் தூய உள்ளத்தைப் புரிந்து கொள் கிறாள். என்றாலும்,”ஐய! கைகேயியின் திட்டம் பற்றி உனக்கு முன்பே தெரியாதா? என்று கேட்கிறாள். கைகேயியின் நாடகத்தால் அனைவருமே பரதனை சந்தேகப் படும் படி ஆகிறது. இதைக் கேட்ட பரதன் பவிதமாகச் சூளுரைக்கிறான். பரதனின் தூய உள்ளத் தைப் புரிந்து கொண்ட கோசலை ‘நின்னை யாவரே நிகர்க்கும் மன்னர் மன்னவா?” என்று வாழ்த்துகிறாள்

 

உரிமை இழந்த பரதன்

மறு இல் மைந்தனே! உன் தந்தைக்குச் செய்ய வேண் டிய இறுதிக் கடன்களைச் செய்வாய்” என்று கோசலை சொல்ல விரைந்த பரதனை வசிஷ்டர்,  தடுத்து நிறுத்துகிறார்

 

“அன்னை தீமையால் அரசன் நின்னையும்

துன்னு துன்பத்தால் துறந்து போயினான்

முன்னரே

என்று கைகேயியோடு பரதனையும், தயரதன் துறந்த

தையும். அவனும் உரிமைக்கு ஆகான் என்ற விஷயத் தையும் சொல்கிறார். பரதன் தன் பரிதாப நிலை உணர்ந்து

இரவிதன் குலத்து எந்தை முந்தையோர்

பிரத பூசனைக்கு உரிய பேறு இலேன்

அரசு செய்யவோ ஆவது ஆயினேன்

என்று துடி துடித்துப் போகிறான். “நான் பிறந்து அவத் தன் ஆனேனே! என் அன்னையார் எனக்கு நன்மை செய்தவிதம் தான் என்னையே” என்று கதறுகிறான். இங்கும் கைகேயி பற்றிய குறிப்பு இல்லை.

 

குகனுக்கு அறிமுகம்

ராமனை அழைத்து வந்து அவனை மன்னனாக்குவேன் என்று ராமனைஅழைத்து வர நாட்டு மக்களோடு செல்கிறான் பரதன். தாயர் மூவரும் உடன் செல்கிறார்கள். கங்கை நதியைக் கடக்க குகன் படகோட்டுகிறான். படல்கில் மூவரும் வீற்றி ருக்கிறார்கள். அவர்கள் யார் என்று கேட்ட குகனுக்கு   ”சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற கோசலை” என்கிறான், சுமித்திரையை  “அறந்தானே என்கின்ற அயல் நின்றாள் என்று அறிமுகம் செய்கி றான். கைகேயியை எப்படி அறிமுகம் செய்கிறான்? கவிஞன் என்ன சொல்கிறான்? பார்ப்போம்.

“சுடு மயானத்திடை தன் துணை ஏக,

தோன்றல் துயர்க்கடலின் ஏக

கடுமை ஆர் கானகத்துக் கருணை ஆர்கலி

,ஏக, கழல்கால் மாயன்

நெடுமையால் அன்று அளந்த உலகெலாம்

தன் மனத்தே நினைந்து செய்யும்

கொடுமையால் அளந்தாளை ஆர் இவர்

என்று உரை

என்று பரதனிடம் குகன் கேக்கிறான். கவிஞனின் அளவு கடந்த சீற்றத்தை இப்பாடலில் பார்க்கிறோம்.

பரதனும் தன் பங்குக்கு

படர் எல்லாம் படைத்தாளை, பழி

வளர்க்கும் செவிலியை

இடரில்லா முகத்தாளை அறிந்திலையேல்

இந்நின்றாள் எனை ஈன்றாள்

என்கிறான்.என்ன ஒரு கசப்பு இருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும்? ஆனால், அவ்விரக்கம் இல்லாதவளையும்

 

தாய் உதவிய தாரணியைத் தீவினை

என்ன நீத்த பரதனைப் பெற்ற தாய் என்று அவளையும் வணங்குகிறான். இங்கும் கைகேயி எதுவும் பேசவில்லை.

 

(தொடரும்)

Series Navigationதொடுவானம் 184. உரிமைக் குரல்” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *