கருப்பன்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 16 of 18 in the series 11 ஜூலை 2021

 

                       

 
 

    

வேல்விழி மோகன்

“அந்த நாய்க்குட்டிய காணலைன்னு நேத்திலிருந்து சொல்லிட்டிருக்கேன்.. நீங்க யாருமே கண்டுக்கமாட்டெங்கறீங்க.. “ கண்ணாடியை பார்த்துக்கொண்டே  மெதுவாக சொன்னான் கோபி

      “எல்லாம் வரும்..”என்றது பாட்டி.. அக்கா சிரித்தாள்.. மறுபடியும் புத்தகத்தில் ஆழ்ந்தாள்.. அண்ணி புடவையை இழுத்து விட்டுக்கொண்டு “வரும்.. வரும்..” என்று பாட்டியை பார்க்க “என்னா.. கிண்டலா..?” என்ற பாட்டி மூக்கை உறிஞ்சினாள்..

      அம்மா நெற்றியை தேய்த்து..”அவன் கவலை அவனுக்கு.. என்ன சிரிப்பு வேண்டிக்கெடக்கு.. தம்பி.. கொஞ்சம் ரேஷன்ல சீமெண்ண வாங்கிட்டு வந்துர்றீயா..?”

      கோபி சீப்பை பட்டென்று வைத்துவிட்டு “இது மட்டும் கிண்டல் இல்லையா..?”

      “சீமெண்ண இருந்தா நைட்டுக்கு சிக்கன் போண்டா போடலாமுன்னு பாத்தேன்..வேல சொன்னா எப்படி கிண்டலாகும்..? வீட்டுக்குதானே செய்யற..?”

      “அதுக்கு.. ?.. அதெல்லாம் முடியாது.. எப்ப பாரு கத புக்கு படிச்சிட்டிருக்கா பாரு உம் மக.. அவள அனுப்பு.. பாட்டிய அனுப்பு.. ஏன்.. அண்ணிய கூட அனுப்பு.. பொம்பளைங்க ரேஷனுக்கு போகக்கூடாதுன்னு ஏதாவது இருக்கா.?. எப்ப பாத்தாலும் நானே.. போய் நின்னு பாருங்க.. வெயிலு,, கூட்டம்.. தள்ளு முள்ளு.. ரண்டு மணி நேரமாயிடுது.. அங்க வேலை செய்யறவ வாடா.. போடா..ங்கிறா.. அப்படி சொல்லாதேன்னு சொன்னா சிரிக்கிறா.. டேய்.. நீ எனக்கு தம்பி மாதிரிடா அப்படீங்கிறா.. நான் இனிமே போகமாட்டேன்.. அந்த கருப்பன கண்டுபுடிக்காம விடமாட்டேன்.. “

      அண்ணி..”கருப்பனா.?. யாறது..?”

      “அண்ணி அது அந்த நாய சொல்றான்..” என்றாள் அக்கா.. “அது கெடக்குது.. நானே போறேன்டா ரேஷனுக்கு.. என்னால முடியாதா என்ன.. நான் உன்ன மாதிரி ஊரு சுத்திட்டா வர்றேன்.. கத புக்குதான் படிக்கறேன்.. படிச்சுட்டு போறேன்.. அப்பா படிச்சது போதும்னு சொல்லிட்டாரு.. அம்மா வேலைக்கு போகாதேன்னு சொல்லிட்டாங்க.. வீட்ல போரடிக்குது.. அதான் இப்படி பழக்கமாயிடுச்சு.. மொபைலு வேணாம்.. டிவி வேணாம்.. புத்தகம் இருந்தா போதும்.. எனக்கு புத்தகம் புடிக்கும்.. சின்ன வயசுல இருந்தே கலர் கலரா புத்தகத்துல படங்களை பாத்து ரசிச்சவ நானு.. அப்படித்தான் இந்த உலகமும் இருக்குதுன்னு நம்பினவ.. நீ எதுக்கு சொல்ற நான் படிக்கறத பத்தி.?. “ அம்மாவிடம் திரும்பி..”காச கொடும்மா .. போறேன் ரேஷனுக்கு..”

      “என்னையும்தான் சொன்னான்.. நீ எம்மாத்திரம்..?” என்ற அண்ணி அவனிடம் திரும்பி “அந்த கருப்பன கெணத்துப் பக்கம் நேத்து மதியம் பாத்தேன்.. அதுக்கப்புறம் எனக்கு தெரியாது..”

      அம்மா பாட்டியிடம்..”ஏம்மா.. நீ எதுக்கும்மா அவன கிண்டலடிக்கற.?. கோவிச்சுக்கறான் பாரு..”

      பாட்டி கோபியை நிமிர்ந்து பார்த்து “வரும்.. வரும்.” என்று சிரித்தாள்..கோபி வெளியே வந்து ஏதோ முனகிக்கொண்டே வீட்டுப் பின்னாடி போனான்.. பாழடைந்த கிணறு.. முருங்கை மரம்.. செதுக்கிவிட்ட மண் தரை.. பூச்செடிகள்.. முருங்கை மரத்தடியில் சுவரோரம் அந்த கருப்பன் இருந்த இடத்தில் காலடித் தடம்.. காய்ந்த மலம்.. விளையாடி கடித்துப்போட்ட ஒரு பழைய செருப்பு.. கருப்பன் படுத்துக்கொள்ள வைத்திருந்த கிழிந்த ஒரு கோணி.. எல்லாமே சரி.. கருப்பன்..?..

      கோபிக்கு தொண்டை அடைத்தது.. சராசரி உயரம்.. படுக்கை வாக்கில் தலைமுடி.. எப்போதும் அணியும் அந்த சிவப்பு நிற பேண்ட்..  சட்டையில் இரண்டு குருவிகளின் படம்.. எட்டிப்பார்க்கும் மீசை.. கால்களில் பெரு விரலில் குட்டையான நகம்.. சற்று ஒல்லியாக நடக்கும்போது நிதானமாக.. பிளஸ்டூ முடித்து ஒரு மாதத்தில் அவனுடைய கவனம் தென்னந்தோப்பு.. மண்ணுக்கோழி.. சுட்ட கெளுத்தி.. சக்கரக்குட்டி.. என்று திரும்பி..கடைசியாக கருப்பன் மீது இருபது நாட்களாக படிந்திருந்தது..

      அதனுடைய மென்மை.. விளையாட்டுத்தனம்.. அழகு.. தூக்கம்.. எல்லாமே அவனை கவர்ந்தது.. நாய்கள் மீது அவனுக்கு கவனம் வந்ததில்லை..  கல்லால் அடிபடும்போது வேடிக்கை பார்ப்பவர்களில் அவனும் ஒருவன்.. கருப்பன் என்று பத்து நாளைக்கு முன்னாடிதான் பெயர் வைத்திருந்தான்.. “கருப்பா..” என்றால் திரும்பி பார்ப்பதற்கு மெனக்கெட்டான்.. அங்கேயே அந்த துணி துவைக்கும் கல் மீது உட்கார்ந்து “கருப்பா.. கருப்பா..” என கூப்பிடுவான்.. அது அதுவாக விளையாடிக் கொண்டிருக்கும்.. முயற்சியை விடவில்லை.. காணாமல் போன அன்று காலையில் தென்னந்தோப்புக்கு கிளம்புவதற்கு முன்பு “கருப்பா..” என்றான்..

      சட்டென்று இவனை கவனித்தது.. இவனுக்கு வந்த சந்தோழத்தில் அதை தூக்கி கொஞ்ச நேரம் அணைத்துக்கொண்டான்..அதன் கதகதப்பு இவனுக்கு பிடித்திருந்த்த.. சந்தோழத்தில் தோப்பில் கோபாலுடன் சேர்ந்து சுட்ட தேங்காயை வெல்லம் கலந்து சாப்பிட்டான்..

      “என்னடா இன்னிக்கு விசேழம்.. பொறந்த நாளா.?.” என்று கோபால் கேட்டபோது இவனுக்கு புரியவில்லை.. “ஏன் அப்படி கேக்கற..?”

      “முகத்துல ஏதோ ஒரு ஜொலிப்பு..”

      “அதுக்கு காரணம் கருப்பன்..”

      “கருப்பனா..?”

      “ஆமா.. அன்னிக்கு ஒரு நாய்க்குட்டிய புடுச்சு குடுத்தியே.. எங்கேயாவது போயி விட்டுர்றான்னு..”

      “ஆமா..டீக்கடை பக்கம்.. அந்த குட்டியோட அம்மா செத்துப்போச்சுன்னு..”

      “அதேதான்.. அதனோட பேருதான் கருப்பன்..”

      “அதை வளக்கறியா நீ..? சொல்லவே இல்ல..?  கெடக்குது.. அதுக்கென்ன இவ்வளவு சந்தோழம்..?”

      “எனக்கு அதைய புடிச்சிருக்குது..இன்னிக்குதான் கருப்பன்னு பேரு வச்சேன்..” என்று வெட்கப்பட்டபோது கோபால் சொன்னது “அப்படின்னா இன்னிக்கு இனிப்புதான்..” கொப்பரை தேங்காயில் வெல்லத்தை வைத்து மூடி வழக்கம் போல அந்த பாறைக்கடியில்  தென்னை மட்டையை போட்டு எரித்து “எப்படியிருக்குது..?” என்றான் சாப்பிடும்போது ..

      “ருசி..”

      “எல்லாம் உன் கருப்பனுக்காக..”

      “அது கொழந்த மாதிரி.. ஒரு கொழந்தைய தூக்கற மாதிரிதான் இருக்கு அதை தூக்கும்போது..”

      “எல்லாருக்கும்தான்..”

      “ஆனா..?”

      “ஆனா..?”

      “அதுக்கு ஒரு எடம் பாக்கனும்.. பின்னாடிதான் துணி துவைக்கிறாங்க.. பூ பறிக்கறாங்க.. செடிக்கு தண்ணி ஊத்தறாங்க.. முருங்க மரத்துல வந்து காய பறிக்கறாங்க.. அப்பெல்லாம் நாய்க்குட்டிய வெறுப்பா பாத்துட்டு போறாங்க..”

      “யாரு..?”

      “எல்லாருமே.. எங்கண்ணன்.. மொத நாளே திட்டிட்டான்.. போய் வெளியே விடுன்னான்.. அவனுக்கு அது ஆய் போறது புடிக்காது.. மூத்தரம் போறது கூட.. ஒரு முறை மூத்தரத்தை மெதிச்சிட்டு தாம்.. தூம்னு குதிச்சான்.. அம்மாதான் சமாதானப்படுத்தினாங்க.. “

      “உங்கண்ணன் மட்டும்தானே..?”

      “இல்ல.. மத்தவங்க எதுவும் வெளிய சொல்லலை..ஆனா அப்பா..?”

      “என்ன சொல்றாரு..?”

      “நாய்க்குட்டிய பாக்கும்போதெல்லாம் வேலைய பத்தி பேசறாரு.. நான் வேலைக்கு போகனுமாம்.. காலேஜூக்கு போறேன்னு சொன்னா அது வரைக்கும் போ.. காலேஜ் சேந்த பெறகு பார்ட் டைமா போன்னு சொல்றாரு.. எம் பாட்டிக்கு நாய் வாசனையே புடிக்காதாம்.. ஒரு முறை நாயோட ஆய பாத்துட்டு வாந்தி எடுத்துட்டாங்களாம்.. எங்கக்கா என்னோட பேசறதே இல்லை.. எங்கண்ணி நாய பாக்கும்போதெல்லாம் என்னைய பாத்து சிரிக்குது.. அப்பலிருந்து நாய்க்கு ஒரு கயிற கட்டிட்டேன்..”

      “அவங்க கெடக்கறாங்க.. நீ அதுக்கு பால் ஊத்து அப்பப்போ.. குட்டி நாய்.. சக்தி வேணுமில்ல.. யாரும் கவனிக்கலைன்னு நீயும் கவனிக்காம விட்டுடாத..”

      “இல்ல.. அம்மா பால் ஊத்தறாங்க..”

                                    0000

      அம்மா பால் ஊற்றுவதை ஒரு முறை கவனித்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.. இது நடந்தது குட்டி வந்து ஐந்து நாள் கழிந்த பிறகு.. அவனுக்கும் நாய் குட்டிக்கும் இடையில் வேறு யாருமில்லாத வெறுமையை உணர்ந்தபோது அந்த மைனாதான் ஞாபகத்துக்கு வந்தாள்.. அவள் பெயர் என்னவென்று இவனுக்கு தெரியாது. இவனாக வைத்துக்கொண்டது.. முச்சந்தி தாண்டி அந்த பலகார கடைக்கு பக்கத்தில் மூன்றடுக்கு வீட்டில் இரண்டாவது மாடியில் அடுத்த மாடிக்கு போகும் படிக்கட்டில் அவள் உட்கார்ந்திருப்பாள்.. எதிரே தள்ளு வண்டி கடைகளை கவனித்தபடி.. அந்த படிக்கட்டு காலியாக இருக்கும்போதெல்லாம் இப்போது போலவே வெறுமையை உணர்வான்.. கடந்த சில நாட்களாக அந்த இடம் காலியாகத்தான் இருக்கிறது..

      “அவளுக்கும் நாய்க்குட்டிக்கும் என்னா தொடர்பு..?” என்றான் கோபால்.. அவனுக்கு இதெல்லாம் அந்நியமாக தெரிந்தது.. பதிலை எதிர்பார்க்காமல் “ரொம்ப யோசிக்காத..” என்றான்..

      “இல்ல.. உண்மை.. எங்கம்மா நாய்க்குட்டிக்கு பால் ஊத்தறாங்கன்னு தெரிஞ்சப்போ நான் அவளத்தான் நினைச்சுக்கிட்டேன்.. “

      “நினைச்சுக்கோ..”

      “நான் சொல்றது உனக்கு புரியல.. அம்மா என்கிட்ட பால் ஊத்தறத பத்தி ஒரு வார்த்த கூட சொல்லல.. நானும் கேட்டுக்கல.. ஆனா எல்லாரும் மாதிரி அவங்களும் குட்டிய வெறுக்கறாங்கன்னுதான் தோணுது.. அப்ப எதுக்கு பால் ஊத்தனும்.. அதுவும் அதுக்குன்னு ஒரு டப்பாவ கெணத்துப்பக்கமா மறைச்சு வச்சு.?”

      “உங்கம்மாக்கிட்டதான் கேக்கனும்..”

      “கேட்டுர்றேன்..”

                        00000000

      அவன் வீட்டுக்கு போகும்போது மணி இரவு எட்டு.. இரண்டு..மூன்று தெருக்களை சுற்றி விட்டான்.. நாய்கள் இருக்கும் இடத்திலெல்லாம் நோட்டம் பார்த்தான்.. மஸ்தான் தெரு.. புளிமண்டி தெரு.. மாரியம்மன் தெரு.. இன்னும் சந்து பொந்துகளில்.. அந்தப்பக்கம் பெட்டிக்கடை வைத்திருந்த தாடிக்காரர் அவனை கூப்பிட்டு..”யாருப்பா வேணும்..?”

      “இல்லீங்க.. ஒரு குட்டிய காணோம்..”

      “குட்டி பேரு..?”

      “கருப்பன்..”

      “கருப்பனா.?. நான் பொண்ணு குட்டின்னுதானே நெனைச்சேன்..”

      “இல்லீங்க.. நாய்க்குட்டி..”

      “எப்பலிருந்து..?”

      “நேத்தையிலிருந்து..”

      “எத்தன நாளா வளக்கற..?”

      “இருபது நாளா..?”

      “எங்கிருந்து எடுத்தாந்த..?”

      “இதையெல்லாம் எதுக்கு கேக்கறீங்க.?”

      “உதவலாமுன்னுதான்..”

      “உங்க உதவி வேணாம்.. வியாபாரத்த கவனிங்க.. தொணதொணன்னு கேட்டுக்கிட்டு..”

      “இல்லப்பா.. கோவப்படாத.. எம் பையனும் இப்படித்தான்.. கருப்பன்னா கருப்பா இருப்பானா..?”

      “ஆமா..”

      “தெரு நாயா..?

      “ஆமா..”

      “அப்படின்னா அங்க குப்பத்தொட்டிக்கிட்ட ரண்டு சின்னப் பசங்க இருப்பாங்க பாருங்க.. நேத்தெல்லாம் ஒரு குட்டிய கைல வச்சுக்கிட்டு விளையாடிட்டு இருந்தாங்க..பர்ப்பி சாப்புட்றியா..?”

      “இல்லீங்க.. வேணாம்..” ஒரு மலர்ச்சியுடன் அந்தப்பக்கம் போய் அந்த சின்ன தெருவில் ஒரு திண்ணையில் மல்லாந்திருந்த கிழவியிடம்..”ஏம்மா.. இங்க ரண்டு பசங்க நாய்க்குட்டியோட இருந்தாங்களாமே.. அவங்கள பாக்கனுமே..”

      “ஆங்..”

      “சத்தம் போட்டு சொல்லு தம்பி.. காது கேக்காது..” எங்கிருந்தோ ஒரு குரல்.. அந்தக் குரலுக்கே மறுபடியும் சொன்னான்..

      “ஓ.. அதுங்களா.. மூணாவது வீடு.. வெளிய மல்லி செடி இருக்கும் பாருங்க..”

      இருந்தது..வேகவேகமாக போனான்.. உள்ளே நுழைய முயன்றபோது உட்கார்ந்து அரைத்தூக்கத்தில் இருந்த அந்த பெரிய நாய் “லொள்…உர்…ர்ர்..” என்று ஓடிவந்தது..  தலைதெறிக்க திரும்பி ஓடினான்.. பாட்டி.. சந்து முனை.. குப்பைத்தொட்டி.. அந்த பெட்டிக்கடை.. ஓடு.. ஓடு.. இரண்டு பேர் என்னவோ.. ஏதோ..வென்று இவன் ஓடுவதை கடைசி வரைக்கும் நின்று பார்த்தார்கள்.. பிள்ளையார் கோவில் வந்த பிறகுதான் திரும்பிப்பார்த்தான்..

      அப்படியே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோவிலருகே உட்கார்ந்தான்.. கோவில் திண்ணையில் இரண்டு பேர் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.. ஒரு பெரியவர் கண்ணாடிக்குள் உற்றுப்பார்த்து ஏதோ படித்துக்கொண்டிருந்தார்..

      “கண்ணபி…ரா…ன்… எழு…ந்து…” இவனிடம் திரும்பி..”என்னா தம்பி.. மூச்சு வாங்குது..”

      “நாயி..” மறுபடி மூச்சு வாங்கினான்..

      அவர் தொடர்ந்தார்.. “துரியோ..தனை பா..ர்..த்து..”

      அவனுக்கு அந்த மைனா ஞாபகம் வந்தது.. நாய்க்குட்டிக்கு வைத்த பால் டப்பா ஞாபகம்.. “வரும்.. வரும்..” பாட்டி ஞாபகம்..

      பக்கத்திலிருந்தவர்..”தம்பி.. நீ என்னா சொல்லு.. கர்ணன் மாதிரி வராது தம்பி.. அவன் இல்லன்னா மகாபாரதமே இல்லை.. எங்கப்பா சொல்லுவாரு அப்பப்போ…?” நிறுத்திவிட்டு “எங்க போற தம்பி..?”

      “சும்மா..” கிளம்பிவிட்டான்.. கொஞ்சம் முன்னாடி போய் திரும்ப வந்து அங்கேயே உட்கார்ந்து “இந்தப்பக்கம் ஒரு கருப்பு நாய்க்குட்டிய பாத்தீங்களா..?” என்றான்..

      தூங்கிக்கொண்டிருந்தவர்களில் ஒருத்தர் திரும்பாமல் “இந்தப் பக்கம் போச்சுப்பா..” என்றார் தூக்கம் கலைந்த எரிச்சலில்..

      “போச்சா.?. சின்ன குட்டிங்க.. கருப்ப கலரு..”

      “ஆமாப்பா.. போச்சு..”

      “யாறாவது தூக்கிட்டு போனாங்களா..?”

      “ஆமா… அந்த முக்கு வீடு.. வெளிய சுண்ணாம்பு பான வச்சிருக்காங்க பாரு.. அந்தம்மாதான்.. அது கத்திக்கிட்டே போனது..”

      “தா.. போயிப்பாக்கறேன்..” விருட்டென்று கிளம்பி சாணியும் மாடுகளுமாக இருந்த இரண்டு வீடுகளை தாண்டி அந்த சுண்ணாம்பு பானை வீட்டை நெருங்கியபோது நாய்க்குட்டிகளின் சத்தம் கேட்டது..

      இப்போது நிதானித்தான்.. வீட்டை நெருங்கியபோது வெளியே வந்த அந்த அம்மாள் இவன் கவனிப்பதை பார்த்து “சுண்ணாம்பு வேணுமாப்பா..?”

      “இல்லீங்க.. குட்டி..”

      “குட்டியா..?”

      “நாய்க்குட்டி..”

      “அதையெல்லாம் விக்கறதுல”

      “இல்லீங்க. சும்மா பாத்துட்டு போறேன்.. “

      “எதுக்கு..?” என்றபோது அந்த கருப்பன் அவள் காலடியில் நுழைந்நு இவனைப் பார்த்து ஓடிவந்தது.. “லொள்.. லொள்…உர்ர்..ர்ஃ” 

      “ஏய்.. நில்லு.. நில்லு… எங்க வூட்டு குட்டிப்பா இது..”

      அவன் குட்டியை வாரி அணைத்துக்கொண்டான்.. அந்தம்மாள் சிரித்துக்கொண்டே “ஒ.. அந்த கருப்பன் நீதானா..?”

      “நானில்லைங்க.. குட்டிக்கு பேரு..”

      “உங்க வீட்ல சொன்னாங்க..”

      “சொன்னாங்களா..?”

      “என்னா தம்பி இப்படி கேக்கற.. அவங்க ஏதும் சொல்லலையா..?”

      “இல்லீங்க..”

      “தாய் செத்துப்போச்சு தம்பி.. எங்க வூட்டு நாய்தான்.. குட்டிங்க பொறந்து எட்டு நாள்ள.. ஏதோ வியாதி.. காப்பாத்த முடியல.. எம்பையனுக்கு அந்த நாயின்னா ரொம்ப உயிரு.. நாயி செத்துப்போச்சுன்னா என்னா பண்ணுவாங்க,, இழுத்து குப்ப மேட்ல போட்டுட்டு வந்திருவாங்க.. இவன் அப்படி செய்யலை தம்பி.. பின்னாடியே பொதச்சிட்டான்.. ரண்டு நாளு சரியா சாப்புடல.. சரியா அந்த வியாதிக்கு மருந்து தரலைன்னு பொலம்பிட்டு இருந்தான்.. குட்டிங்களுக்கு சுண்ணாம்பு மண்ணு வச்சு வீடு மாதிரி குட்டியா கட்டியிருக்கான்.. ஒரு நா வெளிய வெளையாடிட்டிருந்த குட்டிங்கள்ள ஒன்ன காணோம்..”

      “அதான் இதுவா.. ?.. இதுதான்னு எப்படி சொல்லறீங்க..?”

“நான் பாத்தவுடனே கண்டுபுடுச்சுட்டேன் தம்பி..” என்றபோது வாசலில் ஒருத்தன் வந்து நின்றான்.. வெற்றுடம்பு.. பெரிய வயிறு.. தலைமுடி கழுத்தில் புரண்டது.. “என்னம்மா அந்த தம்பி கைல..?”

“நம்ம குட்டிதான் தம்பி..”

“காணாம போனதா..?”

“ஆமா..”

“எதுக்கு..?”

“இந்த தம்பிதான் எடுத்துட்டு போயிருக்குது..” என்றபோது அவன் லுங்கியை கட்டிக்கொண்டு தெருவில் இறங்கி..”என்னடா உம்பேரு..?”

“நானில்லைங்க.. எம் பிரெண்டுதான் குடுத்தான் இதை.. திடீர்னு காணாம போயிடுச்சு.. நானும் ரண்டு நாளா தேடிட்டுதான் இருந்தேன்..”

“நானு இருபது நாளா தேடிட்டு இருக்கேன்.. எம் பையனுக்காக.. உங்க வீட்டுப்பக்கம் வந்தப்போ குட்டி கத்தற சத்தம் கேட்டு.. விசாரிச்சு போய்ப்பாத்தா எங்க குட்டியேதான்.. அவங்க தாராளமா எடுத்துட்டு போயிடுங்கன்னு கொடுத்தனுப்பிச்சாங்க.. “ என்றபோது அந்தாள் அருகில் வந்து குட்டியை பிடுங்கிக்கொண்டு..”தாயி போயிடுச்சு… குட்டிங்கள அனாதைய வுட்டுட முடியுமா..?”

“நான் பால் ஊத்திதாங்க வளத்தேன்..”

“உங்கம்மா சொல்லுச்சு தம்பி..”

“நல்லாதாங்க பாத்துக்கிட்டேன்.. அது கத்துது பாருங்க.. கொடுத்துடுங்க.. “

“அதெல்லாம் முடியாது.. போ..போ..” அந்தாள் கால்களை சுற்றி மற்ற குட்டிகள் அலைந்தது.. எல்லாம் ஒரே நிறம்.. கருப்பனை மற்ற குட்டிகளோடு சேர்க்கும்போது அது திரும்ப இந்தப்பக்கம் ஓடிவந்தது.  . 

      “ஏங்க .. கொடுத்துடுங்க..”

      “போயிடு தம்பி.. வேற குட்டிய தேடி எடுத்துக்கோ..”

      அந்தாள் மற்று குட்டிகளோடு அதையும் வாரிக்கொண்டு உள்ளே போனான்.. அந்தம்மாள்..”போயிடு தம்பி..”

      அந்த கருப்பன் கத்திக்கொண்டேயிருந்தது தனியாக கேட்டது.. இப்போதும்..

      “சாப்பிடலையா..?” என்றாள் அம்மா… சிக்கன் வாசனை வந்தது.. டிவியில் பாட்டி சத்தம் வைத்திருந்தாள்.. அண்ணி “இந்தாப்பா போண்டா..” என்று ஒரு தட்டை வைத்தாள்.. அக்கா படித்த புத்தகத்தை திருப்பி வைத்து “சூடா இருக்குது..” என்றாள் போண்டாவை உரித்து.. அண்ணன் “அந்த டிவி சத்தத்த கொறைச்சு தொலை பாட்டி..” என்றான்.. அப்பா “மசாலா பத்தலை போண்டாவுக்கு.. வெங்காயம் எங்க..?” என்றார்.. 

      அவன் அன்று சாப்பிடவில்லை..

                                    0000

      “காலைல கூட சாப்பிடலையா.?. என்ன வீட்ல சண்டையா..? என்றான் கோபால்.. வெறும் ஜட்டியுடன் தொட்டி தண்ணீரில் இறங்க தயாராக இருந்தான்.. தென்னந்தோப்பில் நிறைய குருவிகள் பறந்தபடி இருந்தது.. பாதி பாதியாக நிழல் தரையில் விழுந்திருந்தது..  வெயில் தென்னை ஓலைகளுக்குள் ஊடுருவி நிழலில் படிந்திருந்தது..

      “சண்ட இல்ல.. அந்த கருப்பன் இல்லை..”

      “எந்த கருப்பன்..?”

      “நாய்க்குட்டி..”

      “செத்துருச்சா..?”

      “இல்ல.. போயிடுச்சு.”

      “அதெப்படி போகும்.. யாறாவது புடுச்சுட்டு போனாத்தான் உண்டு.. அத விடு..” தொட்டியில் குதித்து..” இதுக்கெல்லாம் யாறாவது சாப்புடாம இருப்பாங்களா..?”

      “எனக்கு சாப்பிட தோணலை..”

      “ஒரு மண்ணுக்கோழி போட்டுடலாமா..?” என்று கேட்டுவிட்டு சிரித்தான் கோபால்.. கோழியை மண்ணில் உருட்டி சுடுவது.. அதில் அவன் கில்லாடி.. கோபிக்கு அவன் சொன்னது உரைக்கவில்லை.. “நான் வர்றேன்..” என்று கிளம்பினான்..

      ““எங்க..?”

      “மைனாவ பாக்க.. “

      “அவ இல்ல..”

      “இல்லீயா..?”

      “நானு விசாரிச்சேன்.. வீட்ட காலி பண்ணிட்டு போயிட்டாங்களாம்..”

      “அப்படியா..?” திரும்ப வந்து தொட்டியருகே உட்கார்ந்தான்.. கோபால் மறுபடியும் குதித்தான்.. சோப்பு போடமாட்டான்.. தலையை துவட்டமாட்டான்.. ஜட்டி தானாக காயும்.. தொப்புளில் விரலை விட்டு அவ்வபோது நோண்டிக்கொண்டே இருப்பான்.. வெயில் அதிகமாக தெரிந்தால் இளநீர் தள்ளுவான்.. எலுமிச்சை கலந்து உப்பு போட்டு குடிப்பான்.. கெளுத்தியை பிடித்தால் சுட்டு அப்படியே கடித்து மெல்லுவான்.. கெளுத்தி பைத்தம்.. மக்காசோளத்தையும் சுட்டுதான் சாப்பிடுவான்.. “கரி வாசனை வரனும்.. அப்பதான் டேஸ்ட்டு..” என்பான்..

      “ஏன் திரும்ப வந்துட்ட..?”

      “ஏதோ தோணுச்சு..”

      “என்னது..?”

      “அந்த  கருப்பன் அங்க இருக்கறதுதான் நல்லது..இங்க பால் மட்டும்தானே கெடைக்கும்.. அதுவும் திருட்டுப்பால்..” என்றான்..

                              0000

Series Navigationதழுவுதல்கேட்பாரற்றக் கடவுள்!
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *