கறிவேப்பிலைகள்

This entry is part 12 of 13 in the series 10 அக்டோபர் 2021

              ஜோதிர்லதா கிரிஜா

(சினி மிக்ஸ் 1.1.1984 இதழில் வந்தது. மனசு எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)

      ராணி கண்ணாடிக்கு முன் நின்று தன்னை மறுபடியும் சரிபார்த்துக்கொண்டாள். அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருந்தது. எத்தனை ஆண்டுகளாகக் கண்டு வந்த கனவு இன்று நினைவாகப் போகிறது! அதிலும் அவள் இதற்கு முன்னால் பார்த்து வந்த தொழிலுக்கு ஏற்ப – அவளது தொழில் சாமர்த்தியம் முழுவதையும் வெளிக்கொணரும் அளவிலான வாய்ப்பை அளிக்குமுகமாக – ஒரு காட்சியில் அவள் நடிக்கப் போகிறாள்.

      இது அவளது வாழ்க்கையின் முதல் வாய்ப்பு. இந்த வாய்ப்பை அவள் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் – அவ்வாறு பயன்படுத்திக் கொள்ளுவதற்கான சூழ்நிலையில் அவள் நடிக்கப் போகும் காட்சி படமாக்கப்பட்டால் – மேற்கொண்டு வாய்ப்புகள் தாமாக அவளைத் தேடி வருமளவுக்கு அவள் நிலை உயரலாம். அல்லது அவள் தானாகவே தேடிப்போகிற வாய்ப்புகள் மறுதலிக்கப்படாது படாதிபதிகளால் அவளுக்கு வழங்கப்படலாம்.  எது எப்படியானாலும், இன்று தன்னால் இயன்ற அளவுக்கு மிகவும் சிறப்பாகச் செய்துவிட வேண்டுமென்று அவள் பரபரப்புக் கொண்டாள்.

      கதாநாயகி ஜெயமாலிகாவுக்கு அவள் டூப்பாக நடிக்க வேண்டும். கதாநாயகி தன்னைப் பெற்றவர்களிடமிருந்து விதி வசத்தால் பிரிந்து ஒரு சர்க்கஸ் கம்பெனியில் போய்ச் சேரும் திருப்பம் கதையின் மிக முக்கியமான திருப்பமாம். அந்த சர்க்கஸில் பார் விளையாடும் காட்சி வருகிறதாம். அந்தக் காட்சியில் ராணி ஜெயமாலிகாவுக்கு டூப்பாக நடிக்க வேண்டும். ‘லாங் ஷாட்’ படப்பிடிப்பில்  அவளது முகம் ரசிகர்களுக்குத் தெரியப் போவதில்லை என்பது உண்மைதான். ஆனாலும் அந்த சர்க்கஸ் திரைப்படத்தின் ஒரு சிறப்பான பகுதியாக இருக்க வேண்டும் என்கிற நோக்கம் படாதிபதிக்கும் இயக்குநருக்கும் இருப்பதாக அவளை அந்தப் படத்துக்கு நியமனம் செய்த பரப்பிரும்மம் அவளிடம் சொல்லியிருந்தார். ஜெயமாலிகாவின் உருவ அமைப்போடு மட்டுமல்லாமல், அவளது முகச்சாயல் கூட ஓரளவுக்குத் தனக்கு இருப்பதாகவும் அதற்க்காகவே அவளைப் பற்றி இயக்குநரிடம் தாம் பரிந்துரை செய்துள்ளதாகவும் பரப்பிரும்மம் கூறியதை நினைவுகூர்ந்த ராணி,  ‘கடவுளே! இந்தக் காட்சியில் நான் நன்றாகச் செய்து மேலும் வாய்ப்புகளைப் பெற வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டாள். முகச்சாயல் கூடக் கொஞ்சம் ஒத்திருப்பதால், முகத்தைக் கூடக் கணம் போல் காட்டிவிட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள். சர்க்கஸ் பெண்ணுக்குரிய வித்தியாசமான ஒப்பனையில் முகச்சாயலில் இருக்கும் சிறிதளவு வேறுபாடு அவ்வளவாக வெளியே தெரிய வாய்ப்பில்லை என்றும் நினைத்தாள். தான் இப்படி நினைப்பதைப் பரப்பிரும்மத்திடம் சொல்லி எப்படியாவது தன் முகத்தை ஒரு நொடியேனும் பெரிய அளவில் காட்டக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அவாவினாள்.

       “அடியே, ராணி! தம்பியைக் கூடக் கூட்டிக்கிட்டுப் போவியாம். சினிமா உலகம் மோசம்னு சொல்றாங்க. … டேல ராசு. அக்காவை விட்டு அங்ஙன இங்ஙன நகரக் கூடாது. ஆம்…மா! தெரிஞ்சிச்சா?” என்று அவள் அம்மா எச்சரித்தாள். இன்று அவளுக்கு நல்ல காய்ச்சல்;  இல்லாவிட்டால் அவளே உடன்வருவாள்.

      ராணி முருகன் படத்துக்கு முன்னால் கண் மூடி நின்றுவிட்டுத் தம்பியுடன் படி இறங்கினாள். …

      …ஸ்டூடியோவுக்குள் நுழைந்த போது அவள் இதயம் படபடவென்றது. ஒப்பனை அறைக்குள் தம்பியுடனேயே நுழைந்தாள். அம்மா கூறி வைத்திருந்தபடி கவனமாக இருந்தாள். முகத்தைப் புன்னகை, கண்டிப்பு இரண்டுடனும் வைத்துக்கொண்டாள். ஒரு வழியாக ஒப்பனை முடிந்து வெளியே வந்த போது எதிரே வைத்திருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்து வியப்படைந்து போனாள். ஜெயமாலிகாவின் சாயல் தனக்கு நிறையவே இருப்பதாக அவளுக்குப் பட்டது. ஒரே ஒரு வினாடி நேரமேனும் தன்னை ‘க்ளோஸ்-அப்’-இல் காட்டினால், ‘ஜெயமாலிகாவின் டூப்பாக சர்க்கஸ் பார் விளையாட்டுக் காட்சியில் நடித்த புது முகம் ராணி இவர்தான்’ என்று சினிமா விமரிசனங்களிலோ அல்லது சினிமாப் பத்திரிகைகளிலோ வரக்கூடிய தன் புகைப்படத்தால் தனது வருங்காலம் சிறப்பாக அமைவதற்கான சாத்தியக்கூறு ஏற்படும் என்று ஏங்கினாள். பரப்பிரும்மம் படப்பிடிப்புக்கு வர[ப் போவதாகச் சொல்லி யிருந்ததால் அறையை விட்டு வெளியே வந்த அவள் கண்கள் பரபரவென்று அவரைத் தேடின. மேல் துண்டால் கழுத்தைத் துடைத்தவாறு அவசர நடையில் படப்பிடிப்புப் பந்தலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அவரைப் பார்த்ததும் அவளது இதயத் துடிப்பு அதிகரிக்கலாயிற்று.

      ஒரு சின்னக் குழந்தையைப் போல் ஓடிப்போய் அவரை எதிர்கொண்டு, கைகளைக் கூப்பிய பின், “சார்! ஒரு ரிக்வெஸ்ட் …” என்று மெல்லிய குரலில குழைந்தாள். பக்கத்தில் இருந்தவர்களில் யாரேனும் கேட்டுவிடப் போகிறார்களே என்கிற கவனத்தில் கிசுகிசுப்பாய்ப் பேசினாள்.

        “என்னம்மா? அடடே! அசப்பில ஜெயமாலிகா மாதிரியே தெரியறேம்மா நீ! … உன்னய மாதிரிப் பொருத்தமான டூப் வேற கிடைக்க முடியாது,” என்று பரப்பிரும்மம் உண்மையாகவே வியந்தார். பார்வை அகன்றிருந்தது.

       “எனக்கே கண்ணாடியில் பார்த்தப்ப தோணிச்சு, சார். … ஒரு ரிக்வ்எஸ்ட்…என் முகத்தை ஒரு செகண்டுக்காவது க்ளோசப்ல காட்டச் சொல்லுங்க, சார்!”

       “அது கஷ்டம்மா, ராணி. என்னதான் அசப்பில கொஞ்சம் அவங்க மாதிரி தெரிஞ்சாலும் க்ளோசப்ல காட்டினா சாயம் வெளுத்துப் போகும். அதனால காட்ட மாட்டாங்க.”

       “சார், சார் … கேமராமேன் கிட்ட சொல்லி வையுங்கய்யா. ஒரே ஒரு செகண்ட் காட்டினாப் போதும்.”

       “அது மட்டும் முடியாதும்மா. நான் சொன்னாலும் அவங்க கேக்க மாட்டாங்க. வித்தியாசம் பளிச்னு தெரியுமேம்மா? அப்புறம் தியேட்டர்ல விசில்ல அடிப்பாங்க?

      ராணியை ஏமாற்றம் பற்றிக்கொண்டது. ஆனாலும் என்ன? உண்மை வெளிவரத்தானே செய்யும்? ஜெயமாலிகாவின் டூப் யாரென்பது தெரியாமலேயா இருந்துவிடும்? …

      பார் விளையாட்டு அபாரமாக இருந்ததாகப் படப்பிடிப்பு முடிந்ததும் எல்லாருமே சொன்னார்கள். ஜெயமாலிகாவுக்கு மேலும் ஒரு ஸ்டன்ட் காட்சி இருந்ததால் மறு வாரம் இன்னுமொரு படப்பிடிப்பு இருக்குமென்று இயக்குநர் தெரிவித்தார். பரப்பிரும்மத்திடம் தேதியும் நேரமும் சொல்லியனுப்புவதாகத் தெரிவித்தார். தன் முகத்தைப் பெரிதாகக் காட்டாவிட்டாலும் மற்றுமொரு தரம் வரச் சொல்லுகிறார்களே என்கிற மகிழ்ச்சியில் ராணி தனது ஏமாற்றத்தைத் தாங்கிக்கொண்டாள்.  …

      அடுத்த படப்பிடிப்பிலும் அவளுக்கு ஏமாற்றமே விளைந்தது. படம் அமோகமாக ஓடியது. ஜெயமாலிகாவுக்கு அது ஐம்பதாம் படம். அவளை டி.வி. அழைத்தது. பேட்டிக்கு ஏற்பாடு செய்தது. ராணி ஆவலுடன் எதிர் வீட்டுக்குப் போனாள். தன் பழைய படங்கள் பற்றிச் சிறிது நேரம் பேசிய பிறகு ஜெயமாலிகா தன் அண்மைப் படம் பற்றிக் கூறலானாள்.

       “அந்த சர்க்கஸ் பார் விளையாட்டுக் காட்சி பிரமாதம்ங்க!” என்றார் பேட்டியாளர். ஜெயமாலிகா வரிசைப் பற்களைக் காட்டிச் சிரித்தாள்.

 “ஆமாங்க. எல்லாருமே அப்படித்தான் சொல்றாங்க. அந்தப் படத்துல அது சிகரம் மாதிரி இருந்திச்சுன்னும் சொல்றாங்க. கதையில முக்கியமான திருப்பம் கூட அந்த பார் விளையாட்டுனாலதானேங்க வருது?”

 “ஆமாமா. … பார் விளையாட்டு விளையாடின அந்தப் பொண்ணு ரொம்ப நல்லாப் பண்ணிச்சு. யாருங்க அது? சர்க்கஸ் கம்பெனியில வேலை செய்யிற 

பொண்ணேயா?”

      ராணி நிமிர்ந்து    உட்கார்ந்துகொண்டாள். நெஞ்சு அடித்துக்கொண்டது. ஜெயமாலிகா என்ன சொல்லப் போகிறாள்? நேரில் தன்னைப் பெயர் சொல்லி அழைத்துப் பாராட்டவும் செய்த அவள் இப்போது தன் பெயரைச் சொல்லப் போகிறாளா?

எதிர் வீட்டுப் பெண்கள் ராணியைப் பார்த்துப் புன்னகை செய்தார்கள். அங்கே எதிர்பார்த்தலுடன் கூடிய ஓர் இறுக்கமும் பரபரப்பும் கலந்த மௌனம் நிலவியது. ஜெயமாலிகா பெரிதாய்ச் சிரித்தாள். அந்தச் சிரிப்பின் உட்பொருள் பாதி புரிந்துவிட்ட அதிர்ச்சியில் ராணியின் தொண்டை உலர்ந்து போயிற்று.

       “அட, என்னங்க நீங்க? அதுக்குன்னு நானே சர்க்கஸ் கம்பெனியில பார் விளையாட்டுக் கத்துக்கிட்டேங்க. ராணின்னு ஒரு பொண்ணு. அதுதான் சொல்லிக் குடுத்திச்சு.”

       ராணியின் முகம் வெளிறிப் போய்விட்டது. உதடுகள் துடித்தன. உடன் இருந்தவர்கள், “என்ன ராணி இது? ஜெயமாலிகா இப்படிச் சொல்லுது? நீதானே அதுக்கு டூப்பா நடிச்சு   பார் விளையாடினே? அப்படிதானே நீ சொன்னே?”

        “சொன்னது மட்டுமில்லீங்க. நானே தான் பார் விளையாட்டை விளையாடினேன். அதெல்லாம் ஒரு நாள் ரெண்டு நாள்ல கத்துக்கிற வெவகாரமா? கூசாம புளுகுது!” என்ற ராணிக்குத் துயரம் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டது.

 “இதைச் சும்மா விடக் கூடாது நீ. பத்திரிகையில எளுதணும். அவ மானத்தை வாங்கிறணும்!” என்று அவள் தோழி பாமா கையைச் சொடுக்கினாள்.

 “அதெல்லாம் ஒண்ணும் நடக்காதும்மா! அது மினிஸ்டர் மகனைக் கட்டிக்கப் போகுது. பெரிய எடத்து வம்பு நமக்கெதுக்குன்னு ஒருத்தனும் போட மாட்டான்!” என்று இன்னொரு குரல் இரைந்து சிரித்தது.

ராணியின் முகம் மேலும் வெளிறியது. டி.வியில் நடந்த உரையாடல் அவள் மனத்தில் பதியவே இல்லை. அடுத்து அந்த பார் விளையாட்டுக் காட்சியையே காட்டினார்கள். காட்சி முடிந்ததும் சர்க்கஸ் பார்வையாளர்களிடமிருந்து பெரிய கைதட்டல் கிளம்பிற்று. அந்தக் கைதட்டல் உண்மையில் தனக்குத்தான் என்கிற மகிழ்ச்சியில் கணம் போல் தனது ஏமாற்றத்தை மறந்து போய் ராணி புன்னகை செய்தாள். …

…….

Series Navigationகடலும் கரையும்ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *