கலையாத தூக்கம் வேண்டும்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 12 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020


க. அசோகன்
“டேய் உங்க தாத்தா செத்துட்டாரு!” என்றான் மணி. நம்ப முடியவில்லை. நான் வீட்டை விட்டு வரும் போது படுத்திருந்தார். உயிர் இருந்தது. எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவரிடம் இருந்து எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படவில்லை. அப்படியே மேலே மாட்டியிருந்த அப்பாயி படத்த பார்த்த மாதிரியே கிடந்தாரு. நான் வெளியே வந்து இன்னும் தெருவைத் தாண்டக்கூட இல்லே. அதுக்குள்ள அவர் உசிரை விட்டிருப்பாருங்கிறத நம்ப முடியல.
வீட்டுக்கு ஓடிப் போய் பார்த்தா அவர் படுத்திருந்த மெத்தையை மடித்துக் கொண்டிருந்தார்கள். அவர அப்படியே தூக்கி கீழ வச்சிருந்தாங்க. மாமா மாடியிலேயிருந்து சேரைத் தூக்கிட்டு வந்தார். அந்தச் சேரு நல்ல ஞாபகமிருக்கு. அதை ஊரிலே யாராவது ஆம்பளைங்க செத்தா வீட்டுக்கு வந்து சேரை வாங்கிட்டு போவங்க. ஊர்ல பொம்பளைங்க செத்தா படுக்கவைப்பாங்க, ஆம்பிளைங்க செத்தா சேர்ல உட்காரவைப்பாங்க. தாத்தா அந்தச் சேரை அதற்காகத்தான் வாங்கினார். அதுக்கு முன்னாடியெல்லாம் யாராவது செத்தா வாடகைக்கு சேர் எடுத்துட்டு வந்து போடுவாங்க. தாத்தா தான் முதல்ல அந்தச் சேரை சொந்தமா வாங்கினாரு. அதை யார் கேட்டாலும் கொடுப்பாரு. அப்பாயிக்கும், தாத்தாவுக்கும் இதுல சண்டை வந்திடும். வழக்கம்போல அப்பாயி, “சரி போய்த்தொலை”-ன்னு விட்டுக்குடுத்துடும். அந்த ஊருல உள்ள எல்லாருக்கும் எங்க தாத்தான்னா அம்புட்டு பிரியம். யார் எதை கேட்டாலும் செய்வாரு. “அவரை மாதிரி ஒரு பெரிய மனுசனை பாக்க முடியுங்களா!” என்பார்கள். அப்படிப்பட்டவர் செத்துப் போய்ட்டார்ன்னா, யாரும் முதல்ல நம்பலை. அப்படியே செய்தி பரவினதுக்கு அப்புறத்தான் எல்லாரும் நம்பினாங்க.
சேரைப் போட்டு தாத்தாவை உட்கார வைச்சு அவர் வைச்சிருந்த வாட்ச், மோதிரம், செயின்னு எல்லாம் போட்டாங்க. அவரு தலையை சுத்தி இறுக்கி கட்டிவிட்டாங்க. வழக்கம்போல விளக்கு, ஊதுபத்தி-ன்னு எல்லாத்தையும் அவரு தலைமாட்டல வைச்சாங்க. விஷயம் தெரியத் தெரிய ஊர்க்காரங்க ஒவ்வொருத்தரா வீட்டக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க. அப்பா ரோட்டக்குப் போய் எல்லோருக்கும் போன் போட்டுச் சொல்லிக்கொண்டிருந்தாரு. சித்தப்பா பந்தல்காரர்கிட்ட பேசிக்கிட்டு இருந்தாரு.
நான் மட்டும் திண்ணைல உட்காந்து பார்த்திட்டிருந்தேன். அம்மா அழ ஆரம்பித்திருந்தாள். கூடவே ஆத்தா, அக்கா, வள்ளி அத்தை, ராஜம் பாட்டி எல்லாரும் இருக்கிறாங்க. விஷயத்தைக் கேட்டதும் கடைசித் தெருவிலேர்ந்து ஓடி வந்தாள் வடிவு அத்தை. அவளுக்கு தன் சித்தப்பா மீது அப்படி ஒரு பாசம் இருந்தது. விஷயம் எப்படி செல்லா கிழவிக்குப் போனதோ தெரியவில்லை. அங்கிருந்து வந்துகொண்டே முந்தானைல தலையை மூடிக்கிட்டு புலம்பிகிட்டே வந்துச்சு. “எங்க குல விளக்கு அணைஞ்சிடுச்சே”-ன்னு பாடிக்கிட்டே வீட்டிற்குள் நுழைந்தாள் செல்லாத்தா! “கடைசியா பெரிய வீட்டு இரண்டாவது விளக்கும் அணைஞ்சிடுச்சே”. எங்க பெரிய தாத்தா (எங்க தாத்தாவோட அண்ணன்) அவருத்தான் பெரிய வீட்டுக்காரர்னு கூப்பிடுவாங்க. பள்ளிக்கூடத்துக்கு என்னைக் கூட்டிப்போகும் போது என்னைப்பத்தி வேற யாரும் கேட்டா “இவந்தான் பெரிய வீட்டுக்காரரு பேரன்” அப்படின்னு சொல்லுவாங்க. அப்படி சொன்னாத்தான் எல்லோருக்கும் தெரியும்.
போன வருஷம் பெரிய தாத்தா செத்தாரு. அவரு செத்தப்ப அவ்வளவு கூட்டம் வந்தாங்க. நகரக்கூட முடியாத அளவு கூட்டம். ஆறு மாசத்துக்கு முந்தி செத்துப்போன அப்பாயிக்கும் அப்படியொரு கூட்டம் கூடியிருந்துச்சு. என்னதான் இருந்தாலும் பெரிய வீட்டு இழவு இல்லையா? அப்படித்தான் இருக்கும்.
பெரிய வீட்டுக்காரருங்கறதுக்கு காரணம் என்னன்னா அந்த ஊருலேயே முதன் முதலா மச்சு வீடு கட்டினதே எங்க தாத்தாதான். அதான் அவருக்கு அப்படி ஒரு பேருவந்திச்சு. செய்தி எல்லா வீட்டிற்கும் போனதின் அறிகுறியா ஒவ்வொரு வீட்டுலேருந்தும் ஒவ்வொருத்தரா வந்து அழ ஆரம்பிச்சுட்டடாங்க. நான் எங்கேயும் போகலை. அப்படியே திண்ணைல உட்கார்ந்து தாத்தாவை பாத்துக்கிட்டிருந்தேன். மனசு பூரா அவரைப் பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்துச்சு. அப்படியே கண்ணு சொக்கி பழசெல்லாம் ஞாபகம் வந்திடுச்சி. தாத்தாக்கு நான் பெரிய சவாலாத்தான் இருந்தேன். ஏன்னா எனக்கு முந்தி பொறந்த பொம்பளை பிள்ளைகளெல்லாம் இவரு சொல்படி கேட்டு நடக்கும். ஆனா, நான் அப்படி இல்லை. எப்பப்பார்த்தாலும் ஏதாச்சும் சேட்டை செஞ்சுகிட்டேயிருப்பேன். அவரு என்னை எதுக்காச்சும் துரத்திக்கிட்டேயிருப்பார். நான் அவரு கையில அகப்படாம தப்பிச்சிடுவேன். அவரு என்னை விடமாட்டார். நானும் அவரை விட மாட்டேன். என்னதான் நான் சேட்டை செஞ்சாலும் அவரு என்னை அடிக்கமாட்டார். நான் அவர்கிட்டே அகப்பட்டா காதைப் பிடிச்சிக் கிள்ளி “இனிமேல் அப்படி செய்வியாடா?” என அதட்டுவார். அவ்வளவுதான். நான் வானத்தை முட்டுற அளவுக்கு அழுகையை எடுத்துவிடுவேன். தாத்தா என்னை நெஞ்சோட தூக்கி, “அப்படியெல்லாம் செய்க்கூடாதுய்யா” என்பார். நான் அழுகையை நிறுத்த மாட்டேன். ஆனால் கத்தும் அளவு மட்டும் குறைந்து போகும். என்னைத் தூக்கிட்டு போய் அந்த கீழக்கடையில் மைசூர்பாகு வாங்கித் தரும்வரைக்கும் என் அழுகை நிக்காது.
தூக்கத்திலிருந்து விழிக்கிறேன். கும்பலாக ஒரு கூட்டம் உள்ளே நுழைகிறது. அவர்கள் எல்லாம் ஒண்ணா கூடி ஒருவர் மேல் ஒருவர் கையெ போட்டுகிட்டு ஏதோ பாடிக்கிட்டே அழறாங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை. அத்தை வரும் நேரம் ஆகிவிட்டது. அத்தையை பக்கத்து ஊரில்தான் கட்டி கொடுத்திருக்காங்க. அவள் வர்ற நேரம் ஆகிவிட்டது. அவள் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவா. அவள் பின்னால என அத்தையோட பெண்கள், மகன்கள், என ஒரு பட்டாளமே வரும். எல்லாம் என்னைவிட ஓரிரண்டு வயது மூத்தவங்க. நாங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்துதான் விளையாடுவோம். எல்லாரும் வரப்போகிறார்கள் எனத் தெரிந்ததும் கொஞ்சம் உற்சாகம் கூடியது. ஆனால் இம்முறை நான் விளையாடப் போகக்கூடாதென தோன்றியது. தாத்தாவை நான் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்.
அத்தை வருகிறாள்;. பின்னே மாமா கையைப் பிடித்துக்;;; கொண்டு என்னுடய சகாக்கள் உற்சாகமாய் வந்துகொண்டிருந்தார்கள். அத்தையும் செல்லாத்தா மாதிரியே முக்காடு போட்டுகிட்டே வந்தாள். அவள் அழுகை பெரிதாகி கொண்டே போனது. அவள் வீட்டில் நுழைந்தாள். மீண்டும் கூட்டம் கூடி ஒப்பாரி பாடியது. எனக்கு இப்பவும் எதுவும் புரியவில்லை. நான் நினைத்த மாதிரியே என் தோழிகள் மற்றும் தோழர்களும் உற்சாகத்தோடு என்னை நெருங்கினார்கள். ஆனால் நான் அவர்களிடத்தில் முகம் கொடுத்து பேசவில்லை. அவர்கள் என் அக்காவுடன் சேர்ந்து கொண்டு மாடிக்கு போய்விட்டார்கள். நான் மட்டும் போகவில்லை. மாமா கையில் பீடியை பற்ற வைத்தக்கொண்டே என்கிட்ட கேட்டாரு. “ஏம்ப்பா நீ மேலே போயி பாடுத்து தூங்கலாம்ல” என்றார். எனக்கு தூக்கம் வர்ல மாமா என சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த படிக்கட்டில் போய் உட்கார்ந்துகிட்டேன். வீட்டினுள் எட்டிப்பாhத்த்தேன். அழுகையெல்லாம் நின்னுபோச்சி, எல்லாரும் கதை பேச ஆரம்பிச்சிட்டாங்க. போன தலைமுறை சாவுல இருந்து தாத்தா சாவு வரைக்கும் எல்லாத்த பத்தியும் பேசினாங்க.
அப்போது சின்னம்மா கிழவி சொன்னா, “என்ன இருந்தாலம் எங்க மாமா மாதிரி யாரு வருவாங்க! அவரு கைலியைக்கட்டிக்கிட்டு அந்தச் செயினை போட்டக்கிட்டு பொம்பளைகளை பாத்தார்னா அப்படியே சொக்கிப் போய்டுவோம்” என்றாள். “அப்படி ஒரு கலரு”, எனச் சொன்னாள் ராஜம் பாட்டி. “அது என்னமோ நெசந்தான். அவர் கலரு யாருக்கு வரும் என நினைச்சிக்கிட்டேன்.” “அவரு போட்டிருக்க செயினைப் பார்த்தே எல்லாரும் மயங்கிடுவாளுக” என்றாள் செல்லாத்தா. நானும் பார்த்திருக்கேன். தாத்தாவோட நெஞ்சு முழுசும் நெறைஞ்சிருக்கும் அந்தச் செயினு. அவர் சட்டை போடமாட்டார் எப்பவாச்சும் அவருக்கு தோனிச்சின்னா அந்தப் பச்சைக் கலர் சட்டையை போட்டுக்கிடுவாரு. மத்தப்படி அவருக்கு எல்லாமே அந்தச் செயின்தான். நான் தாத்தா கிட்டே ஒரு தரம் கேட்டேன், ‘தாத்தா எனக்கு இதை தர்றியா?” ன்னு ‘நான் செத்ததுக்கு அப்புறம் எல்லாமே உனக்குத்தான்யா” என்றார் சிரித்துக்கொண்டே. அப்படியே தூங்கிப்போய்ட்டேன்.
தீடீர்னு’டம் டும்’னு சத்தம். அப்படியே திடுக்-னு எந்திரிச்சுப்பாத்தேன். மேலே மொட்டைமாடில படுத்திருக்கிறதே அப்பதான் எனக்கு தெரிஞ்சுது. கண்ணை தேச்சுகிட்டே கீழே எட்டிப்பார்த்தேன். வீட்டு முன்னாடி நின்னு தப்பு அடிச்சிகிட்டிருந்தாங்க. சுத்திலும் பாhத்தேன். கிட்டத்தட்ட எல்லாருமே வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். எல்லா வீட்டு புள்ளைகளும் வந்துட்டாங்க. எல்லாமே நேத்தே நான் தூங்கினதுக்கு அப்புறம் வந்திருப்பாங்க போல. பயணக் களைப்பு யாரும் எந்திரிக்கவேயில்லை. நான் மட்டும் கீழே போனேன். படிக்கட்டு வரைக்கும் கூட்டம் அலைமோதியது. படிக்கட்டை அடைத்துக் கொண்டே உட்கார்ந்திருந்தவுங்க என்னைப் பார்த்ததும் விலகி கால் வைக்க இடம் கொடுத்தாங்க. அப்படியே கீழே இறங்கிப்போனேன். தாத்தா பக்கத்தில் இப்ப ரொம்ப கூட்டம் இருந்தது. ஊரில் இருந்து அத்தை, சித்தி என எல்லாருமே இருந்தாங்க. ஆயா அம்மாவைக் கட்டி பிடித்துக்கொண்டு அழுதாள்.
அம்மாதான் ரொம்ப உருகி உருகி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு தாத்தாவின் இழப்பு தாங்கமுடியாததுதான். அவளுக்கு அப்பா கிடையாது. அம்மாதான் கடைக்குட்டி. ஆயா தனி பொம்பளையாத்தான் வளர்த்திருக்கா. சொத்துக்கும் சோத்துக்கும் தாத்தா பஞ்சம் வைக்கலை. இருந்தாலும் வீட்டில் ஆம்பளை இருந்து வளர்க்கிற மாதிரி வருமா? அம்மாவுக்கு ஆயா ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்தாள். அம்மா அடிக்கடி சொல்லுவாள். அவளுக்கு கல்யாணமான புதுசுல சரியா சமைக்க வராதாம். தாத்தா தான் அவளுக்கு சமைக்க கத்துக்கொடுத்தாராம். அப்பாயி கூட அம்மாவை எதாச்சும் சொல்லி திட்டிக்கிட்டே இருக்கும். ஆனா தாத்தா அப்படி இல்லை. அவரு எப்பவும் அம்மாவுக்குத் துணையா இருப்பார். அதனாலதான் அம்மாவால தாத்தா செத்ததைத் தாங்கமுடியலை.
ஆயாவும் தன் பங்குக்கு வரிந்து கட்டிக்கொண்டு அழுதாள். அவளைப் பற்றி சொல்ல பெரிதாக ஒண்ணுமில்லை. அந்தக் காலத்து பொம்பளை. சரியான உடம்பு. ரெண்டு காதுலையும் தோடுகள் தோள் வரைக்கும் தொங்கும். அவள் என்னை ஆசையுடன் ராசா ராசான்னு கூப்பிடுவா. நான் அவளைப் பார்க்கக் கூட மாட்டேன். அவ எம்பக்கத்திலே வந்தா கூட ஓடிப்போய் அம்மாகிட்ட ஒளிஞ்சுக்குவேன். அவ என்கிட்ட வந்த “வா ராசா”-ன்னு கூப்பிடுவா நான் உடனே, “நான் வந்தா என்ன தருவே”-ன்னு கேட்டேன். எனக்கு இருக்கிற ஒரே பேரன் நீதான் சாமி. எனக்கு பெறகு பூவை தூவிட்டு எல்லாத்தையும் நீயே எடுத்துக்க” என்றாள். ஆனாலும் நான் அவள் பக்கம் போக மாட்டேன்.
நான் கீழே போய் மறுபடியும் திண்ணையிலேயே உட்கார்ந்துகிட்டேன். எல்லா பிள்ளைகளும் கீழே வந்துட்டாங்க. நான் அவங்களோட பேசலை. தப்புக்காரன் அடி பின்னிக்கொண்டிருந்தான். அவன் யாராவது புதிதாக வருவது தெரிந்தால் வேகமாக அடிப்பான். பின் அவர்களிடம் போய் தலையைச் சொறிவான். அவர்கள் கவனிக்கவில்லையெனில் அவர்கள் முன்னின்று வணங்கிக் கும்பிடு போட்ட வண்ணம் இருப்பான். அவர்;கள் அவன் கையில் பணம் காசு தரும் வரை அதை நிறுத்தமாட்டான்.
பந்தல் வாசல் முழுவதுமாக போடப்பட்டிருந்தது. எல்லோரும் சேர்களில் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். வந்தவர்கள் எல்லாம் அப்பாவிடம் கை தொட்டுவிட்டு உள்ளே சென்று தாத்தாவைப் பார்த்து கும்பிட்டு வந்தார்கள். நேரம் அப்படியே ஓடிக்கொண்டிருந்தது. மத்தியானம் ஆகிவிட்டது.
நான் தாத்தாவைப் பார்த்தேன். இப்படியேதான் போன தடவை இழவு விழுந்தப்ப வீடு இருந்திச்சு. என்ன வித்தியாசம்னா? அப்ப தாத்தா இருந்தாரு. போயி பக்கத்து வீட்டு படிக்கட்டில உட்காந்துகிட்டாரு. அவர் யார்க்கிட்டயும் பேசவேயில்லை. அப்பாயி செத்ததை அவரால தாங்க முடியல. இனி அவர் யார்கிட்டே சண்டை போடுவார்? அமைதியா உட்கார்ந்தே இருந்தார். நான் தான் போய் அவரைப் பார்த்தேன். அவர் முகம் அப்படியே வாடிப்போயிருந்தது. நானாக எதையும் பேசவில்லை. தாத்தாதான் “நீ சாப்பிட்டியா”-ன்னு என்னைக் கேட்டார் எதுவும் சொல்லாம அப்டியே அவரைப் பார்த்தேன். “சரி வா, சாப்பிட போலாம்”-னு என்னைக் கூட்டிட்டு போனாரு. ரோட்டுக்கு எதிரில் இருந்த ஒரு கடை தாத்தாவுக்குப் பிடித்தமானது. அங்க இருந்த முதலாளி தாத்தாவைப் பார்த்த உடனே கடைக்கு வெளியே வந்து அவரைக்கூட்டிப் போனாரு. அங்க எல்லாருக்கும் மரக்கட்டை சேர்தான் போடுவாங்க. ஆனா தாத்தா போன உடனே உள்ளே இருந்த இரும்பு சேர் கொண்டு வந்து போட்டாங்க. அந்த முதலாளி என்னை “குட்டி மாப்பிள்ளை”-ன்னு தான் கூப்பிடுவாரு. இப்ப தாத்தா என்னை அந்த கடைக்குத்தான் கூட்டிட்டு போனாரு. இப்ப அந்த முதலாளி கொஞ்சம் கவலையோடு வரவேற்றார். அவரு தாத்தாவைப் பாத்ததும் அழற மாதிரி வந்து மாமானு கூப்பிட்டார். “டேய்! புள்ளை சாப்பிடலை, அவனுக்கு ஏதாச்சும் சாப்பிடக்குடு”-ன்னு சொல்லிட்டு போய் தனியா உட்கார்ந்துகிட்டார். தாத்தா சாப்பிடவேயில்லை. நான் மட்டும் சீக்கிரம் சாப்பிட்டு எந்திரிச்சிட்டேன். அவரு யார்கிட்டயும் ஒரு வார்த்தைக் கூடப்பேசலை.
சுடுகாட்டுக்கு தூக்கிக்கிட்டுப் போகும் போது நான் அவர்கூடவே போனேன். அப்பப்ப அவர் மூஞ்சியைப் பார்ப்பேன். அவரு எதுவும் பேசாமலேயே வந்தார். சுடுகாட்டுல கட்டைல அப்பாயியைப் படுக்க வைச்சிருந்தாங்க. வெட்டியான்; “மூஞ்சியை பாக்குறவங்க சீக்கிரம் பாருங்க”-னு கத்தினான். எல்லாருமே அங்கதான் இருந்தோம்.
ஆனா தாத்தா மட்டும் தனியா உட்கார்ந்திருந்hர். அவரு சுடுகாட்டுக்கு எதிர்த் திசையிலே உட்கார்ந்திருந்தார். நான் அவரிடம் ஓடிப்போய் சொன்னேன். “தாத்தா வா! அப்பாயியை போய் பார்க்கலாம்”-னேன். அவரு என்னைப்பாத்து “நீ போ! கண்ணு அவள் தெய்வமாயிட்டா. நீ அவகிட்டே நல்லா வேண்டிக்க” என்றார். ஆனா நான் போகலை அவர் கூடவே இருந்துகிட்டேன்.
மூணு மாசம் நல்லா இருந்தாரு. அப்புறம் படுத்த படுக்கையா ஆயிட்டாரு. எல்லாரும் பேசிக்கிட்டாங்க. “தாத்தா அப்பாயியை சரியா வைச்சுக்கலெ. அதான் உசுரபோட்டு இந்த வாட்டு வாட்டுது”-ன்னு ஆனா எனக்கு அப்படித் தோனலை. அப்பாயியை எரிச்ச அன்னிக்கி சாயங்காலம் தாத்தாவோடத்தான் நான் வந்தேன். எல்லாரும் முன்னாடி வேகமா போனாங்க.
நான் தாத்தா கையை பிடிச்சிகிட்டு பொறுமையா வந்தேன். அப்ப அவரு மூஞ்சிய பார்த்தேன். அவரு கண்ணுல இருந்த தண்ணியா வந்துச்சு. அவரு சின்னப் புள்ள மாதிரி அழுதுகிட்டே வந்தார். நான் ஒண்ணும் கேட்கலை. அவரு கூடவே நானும் வந்தேன்.
எல்லா சடங்குகளும் முடிஞ்சு தாத்தாவை சுடுகாட்டுக்கு தூக்கிட்டு போனாங்க. நான் இப்ப மாமா கையை புடிச்சிகிட்டே போனேன். எல்லாம் முடிஞ்சிடுச்சு. இனி அந்த திண்ணையில யாரும் இருக்கமாட்டாங்க. யாரு இனி என்னை தோள்ல தூக்கிட்டு போவாங்க? எல்லாமே கனவு மாதிரி ஆயிடுச்சசு. தாத்தாவை எரிக்கிறதுக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு. அதனால அப்பா என்னை சித்தப்பாவோடு முன்னாடியே அனுப்பிவைச்சுட்டாரு. நாங்க சைக்கிள்ல வீட்டுக்கு வந்துட்டோம்.
வீடு பழைய நிலையை அடைந்திருந்தது. எல்லா சொந்தங்களும் ஊருக்குப் போயிட்டாங்க. நெருங்கின சொந்தங்கள் மட்டும் தான் விட்டில் இருந்தனர். அவங்க எல்லாம் இப்ப அவங்களோட அடுத்து என்ன செய்யனும்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. என்ன துணி போடுறது? என்ன சாப்பாடு ஆக்குறது?-ன்னு. அவங்க கவலை எல்லாம் மாறிடுச்சு. எல்லாப்; பிள்ளைகளும் சந்தோசமாய் விளையாடிக் கொண்டிருந்தனர்.
எல்லாம் என்னை பார்த்த உடனேயே எங்கிட்ட சுடுகாட்டு அனுபவம் பற்றி கேட்க வந்துட்டாங்க ஏன்னா? என்னதான் எனக்கு மூத்த பயலுகளாக இருந்தாலும் அவங்க சுடுகாட்டுக்கு வரவில்லை. அதனால நான் என்னதான் சின்னவனா இருந்தாலும் நான் சொல்றதை எல்லாரும் கேட்டாங்க. குறிப்பா பெண் பிள்ளைகள் அதைப்பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப ஆசைப்பட்டாங்க.
இந்தத்தடவை நான் யாருகிட்டேயும் பேசவில்லை. நான் நேரா மொட்டை மாடிக்குப் போயிட்டேன். இப்ப அது இழவு வீடு மாதிரி தெரியலை. எல்லா சொந்தங்களும் சேர்ந்து சந்தோஷமா இருந்தாங்க. அம்மா கூட அடுப்படியில் வேலை செய்வதில் மும்முரமாகிவிட்டாள். இனி யாரும் அந்த இழவைப் பத்தி நினைக்கப் போறதில்லை. நான் மொட்டை மாடிக்குப் போய்ப் பார்த்தேன்.

தாத்தா என்னைத் ஒரு நாள் அங்க கூட்டிட்டுப் போய் காட்டினார். “அங்கபாருய்யா அதான் வானவில் அப்படின்னு காண்பிச்சார்” நான் பாத்தேன் அப்படியே ஏழு கலர்ல சூப்பரா இருந்துச்சு. நான் இப்ப பாக்குறப்ப, வானவில்லை காணோம். தாத்தாவையும் காணோம். எனக்கு என்னவோ தொண்டையை அடைத்தது. அந்த வீடு சூனியமாகிவிட்டது எனத் தோன்றியது. இப்பத்தான் எனக்கு அது இழவு வீடாகத் தெரிந்தது. நான் பக்கத்திலிருந்து தலையணையில் முகம் புதைச்சு அழுதேன். எனக்குத் தெரியும் நான் என்ன அழுதாலும் எனக்கு மைசூர்பாகு வாங்கித் தந்து என்னை சமாதானப்படுத்த தாத்தா வரப்போவதில்லை. இப்படியே தூங்கவேண்டும் போல் இருந்தது. தூக்கத்தில் தாத்தாவின் நினைவுகள் வரும். பின் தூக்கத்திலிருந்து மீண்டதும் எல்லாம் கரைந்துவிடும். நானும் தாத்தாவை மறந்துவிடுவேன் எனத் தோன்றியது. எனக்கு “கலையாத தூக்கம் வேண்டும்,” என்று நான் வேண்டிக்கொள்கிறேன்.

Series Navigationஸ்ரீமான் பூபதிதொலைந்து போனாரோ சா.கந்தசாமி?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *