கவிஞன்

This entry is part 24 of 25 in the series 7 ஜூலை 2013

மூலம்: கலீல் ஜிப்ரான்

தமிழாக்கம் ;புதுவை ஞானம்

இந்த உலகிற்கும் எதிர் வரும் உலகிற்கும்

இணைப்புப் பாலம் அவன்.

தாகத்தால் தவிக்கும் எல்லா ஆன்மாக்களுக்கும்

அருந்த நீர் வழங்கும் தடாகம் அவன்.

பசியால் வாடும் பறவை இனத்துக்குப் பழம் தரும் மரத்தின்

பாசனக் கால்வாயாய் அழகுற அமைந்த ஊற்று அவன்.

குமுறும் ஆன்மாக்களின் குழப்பம் தணிக்கும் அழகிய கீதமாய்

மென்மையாய் இசைக்கும் வானம் பாடியாய்

வெண்ணிற மேகங்களின் மேலாக

தொடுவானில் தோன்றி ஏறி உயர்ந்து

வானம் முழுதும் பரந்து  வாழ்வெனும் வயலின்

பூக்கள் மீதிறங்கி இதழ்களை விரித்து ஒளிபாய்ச்சும்

வானவில்லாய் இலங்குகிறான் அவன்.

தெய்வத்தின் நற்செய்தியை போதிக்க வந்த

பொன்னிறத் தேவதை  அவன்.

இருளினால் கவ்வ முடியாத

காற்றினால் அணைக்க முடியாத

ஒளிர் பெரும் சோதி அவன்.

காதல் தேவதையாம் இஷ்தாரினால்

நெய்யூற்றப்பட்டு இசையெனும் சூரியனால்

ஏற்றி வைக்கப்பட்ட அகல் விளக்கு அவன்.

எளிமையெனும் அன்பான ஆடை போர்த்தி

இயற்கையின் மடியில் அமர்ந்து தனது

உளத்தூண்டலை  உள்வாங்கு முகத்தான்

இரவு முழுக்க அமைதியாய்க் காத்திருப்பான்

ஆன்மா இறங்கி வருவதற்காய்.

மனித நேயமெனும் புல்வெளியில் தனது

இதயத்தை விதைத்து அதன் வளமான

அறுவடைக்காய்க்  காத்திருப்பவன் அவன்.

இந்த வாழ்வில்

மக்களால் அலட்சியப்படுத்தப்படும்

மகத்தான கவிஞன் அவன்.

மண்ணில் இருந்து விடை பெற்று

விண்ணில் கலந்த பின் போற்றப்படுபவன்.

இவன் தான் கவிஞன் இகலோக வாழ்வில்

எதிர் பார்ப்பது மனித குலத்தின்

ஆழமான அன்பு அல்ல ஆனால் ஒரு

நேயமான பார்வை.

இவனது ஆன்மா _ விண்ணுக்கு உயர்ந்து

அழகான வார்த்தைகளால்

உறுதியாய் நிரப்பும் _ இருந்த போதிலும் மக்கள்

உள்வாங்குவது இல்லை இவனது பிரகாசத்தை.

எவ்வலவு காலம் மக்கள் இருப்பார்கள் உறக்கத்தில் ?

எவ்வளவு காலம் சந்தர்ப்ப சூழ்நிலையால்

வெளிச்சத்துக்கு வந்தவர்களை உயர்த்திப் பிடிப்பார்கள்

எவ்வளவு காலம் தங்களது ஆன்மாவின் அழகை

அன்பை அமைதியின் அடையாளத்தை எடுத்துக்

காட்டிய கவிஞனை அலட்சியம் செய்வார்கள் ?

எவ்வளவு காலம்  இறந்தோரைப் போற்றி

இருப்போரைத் தாழ்த்தும் இவ்வுலகம் ?

வறுமையால் பீடிக்கப்பட்டு வாடிய போதிலும்

அறியாமை இருளகற்ற எரிந்து கரையும்

மெழுகு வத்தியாய் இலங்கி மக்களை

வெளிச்சத்துக்கு இட்டுச் செல்லும்

கவிஞனை அலட்சியம் செய்வார்கள் ?

கவிஞனே !

நீ இந்த வாழ்க்கையின் உயிர் மூச்சு

காலங்களைக் கடந்து வென்றவன்

எத்தனை இடர்பாட்டிலும்.

கவிஞனே !

ஒரு நாள் ஆட்சி செய்வாய் இதயங்களை எனவே

இறுதியே இல்லை உனது ஆட்சிக்கு.

கவிஞனே !

சோதித்துக் கொள் உனது முள் கிரீடத்தை

அதனுள் ஒளிந்திருக்கிறது புகழ்ச்சி மலர்மாலை.

25.6.2013.

.

Series Navigationமழையின் பாடல்.அலையின் பாடல்
author

புதுவை ஞானம்

Similar Posts

4 Comments

  1. Avatar
    தேமொழி says:

    “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. நான் மூலக் கவிதை படித்ததில்லை. உங்கள் கவிதை படிக்க சிறப்பாக இருக்கிறது. வரிகள் அருமை, அதிலும் குறிப்பாக…

    தெய்வத்தின் நற்செய்தியை போதிக்க வந்த
    பொன்னிறத் தேவதை அவன்…

    வாழும் பொழுதே புகழப்படுபவர்கள் சிலர்தான். நல்ல கவிதைக்கு நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    திண்ணையில் முன் வந்த என் மொழிபெயர்ப்பு

    இருவரும் ஒரே மாதிரிதான் தமிழாக்கம் செய்துள்ளோம்.

    பாராட்டுகள் நண்பர் புதுவை ஞானம் அவர்களே.

    சி. ஜெயபாரதன்
    +++++++++++++++

    <>

    கலில் கிப்ரான்.
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்

    இந்த உலகிற்கும் எதிர்கால உலகிற்கும்
    இணைப்புப் பாலம் அவன்.
    தாகமுற்ற ஆத்மாக்கள்
    தண்ணீர் குடிக்க வந்திடும்
    தடாகத் தூய நீர் ஊற்று அவன்.
    எழில் நதி நீர் பாய்ச்சிப்
    பசித்தோர் பசி அடக்கும்
    பழங்கனி காய்க்கும் மரம் அவன்.

    இன்னிசைக் கானம் பாடி
    மனத்தாழ்வை ஒழிக்கும் வானம் பாடி !
    விண்வெளி முகம்
    முழுதும் நிரம்பும் வரை
    அடிவான் மீது
    மேலும் கீழும்
    தோன்றும் வெண்முகில் அவன்.
    பின்பு ஒளியை அனுமதிக்க
    வாழ்வுத் தள மலர்கள் மேல் படிந்து
    இதழ்களை விரிப்பான் !

    தெய்வம் அனுப்பிய தேவன் அவன்
    மெய்யான உபதேசம்
    செய்திட வந்தவன்.
    இருள் வெல்லாத
    ஒளிச்சுடர் விளக்கு !
    புயல் அணைக்காத ஒளி விளக்கு.
    காதல் தேவதை
    எண்ணை ஊற்றி
    இசைக் கீதம் ஏற்றிய தீபம் !

    ஏகாந்த வாதி அவன் !
    பரிவோடு
    எளிய உடை
    உடுப்பவன் அவன் !
    உள்ளெழுச்சி தனைத்
    தூண்டி விட
    இயற்கை மடி மீது
    அமர்பவன் அவன் !
    ஆத்மீகம் வரவேற்கக்
    காத்திருந்து
    இரவு மௌனத்தில்
    தியானிப் பவன் !

    தனது இதயத்தில்
    விதைகளை நட்டு வைத்து
    வன வயல்களில் பரிவு விதை
    விதைப்பவன்.
    மனித இனம் அவற்றை
    அறுவடை செய்யும்
    தமக்குணவாய் ஊட்டித்
    தான் வளர்வதற்கு !

    ++++++++++++

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *