கவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்

This entry is part 9 of 41 in the series 8 ஏப்ரல் 2012

’நிலம் புகும் சொற்கள்’ கவிஞர் சக்தி ஜோதியின் முதல் படைப்பு.
ஒரு பயணத்தை இவ்வளவு அழகாக எல்லோராலும் சொல்லிவிட முடியாது. அய்நிலங்களிலிருந்து எழுந்து வரும் சொற்கள் என்பதாய் எழுத்தாளர் பிரபஞ்சன் கூறினாலும்,அகநிலத்துள் புகுந்த சொற்கள் தான் கவிநிலத்தின் வரிகளாய் வெளி வந்திருக்கின்றன.வாசிப்பிற்குள் இயல்பாய் நுழைந்துவிடுபவர்களின் கடைசி இலக்கு படைப்பு என்பதாயும் கூறுகிறார்.படைப்புக்கனல் கனன்று கொண்டேயிருக்க வேண்டும்.இல்லையேல் சாம்பலாய் இயலாமையின் பரிதவிப்பு பட்டவர்த்தனமாய் வெளி வரத் துவங்கிவிடும்.
அடுத்து, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும் போது அன்பு ஒன்றே தீர்வாய் அமைய முடியுமென்று தன் எண்ணத்தை ஆணித்தரமாய் பதிக்கிறார்.பரஸ்பரம் அன்பின் பரிமாற்றம் மற்றும் புரிதல் இரண்டுமே சம விகிதத்தில் கலவையாக தொடுக்கப்பட்டால் மட்டுமே வாழ்க்கை இனிது கழியும்.
முத்தத்தின் முகவரி தொலைத்து முத்தத்தை அடையாளப் படுத்திக்கொண்டிருக்கும் நம்மை பார்த்து முத்தத்தில் துவங்கும் காதல் முயங்குதலில் முடிவுறுவது கண்டு வெதும்பி அதற்கான தீர்வை தேடுமாறு சொல்கிறார்.படைப்பாளி ஒரு பெண் என்பதால் ஆண்களுக்கான கேள்வி இது.முத்தங்களின் முடிவு முயங்குதலில் முடிவுறுகிறது என்ற குற்றச்சாட்டு நமது புரிதலின்மையை புரிபட வைக்கிறது.நாம் எடுத்த முயற்சி, நாம் புரிந்து கொள்ள எத்தனிக்க விழைந்த விழைவு,இவைகளையும் பதிவு செய்திருக்கலாம்.கவிதையின் நீட்சி இதற்கான பதிலாய் அமைய வாய்ப்பை பெருக்குகிறது.
‘காமமின்றி காதலில்லை’ என்பது எதுவரை உண்மையென்பது விளங்கவில்லை.எங்கு காமம் தலை தூக்குகிறதோ அங்கு தான் காதல் கலைந்து போவது சாத்தியப்படுகிறது. கழிவிரக்கம் கொள்ளும் வகையில் புனைவுகள் பிறக்க வழி வகுக்கப்படும் நிலையும் உருவாகி வருகிற சூழலில் காமமற்ற காதலையே முன்னிறுத்த வேண்டும்.விரகம் தாபம் பசலை என்பன சங்க கவிதைகளில் – கவிகளில் -காணக்கிடைக்கும் உண்மை நிலை. காமமற்ற காதல் பேசப்படும்.பேசப்படுகிறது.’மனம்’ஒன்றை அறியும் போது அதை விஷய ஞானம் என்றும் ’இதயம்’ ஒன்றை அறியும் போது அதை அன்பு காதல் என்பதாயும் நம் ’உயிர்த்தன்மை’ ஒன்றை அறியும் போது அது தியானமாயும் உரு பெறுகிறது.இம்மூன்றிலும் தேர்ச்சியுற்றவரின் படைப்புக்கள் பேசப்படும்.
காமநோக்கோடு இரவு புகும் நமக்கு காதல்நோக்கு கண் தவறிப் போவது இயற்கை. வேட்கை தணிந்த பின் நீர் தேடுவது எவ்வளவு அறிவுசாரா செயலோ அதன் போல் காம விழைவிற்கு பிறகு நாம் எதை தேட வேண்டும்.ஓஷோ துணைக்கு வருவாரா?எல்லாம் இழந்த நிலையில் (துறந்த என்றும்கொள்ளலாம்)மனம் நிச்சாந்தியாய் இருக்கும் போது அமைதியாய் உருவாகும் எண்ணங்களில் காதலை விதைத்துவிட்டால் எப்பொழுதும் அதே அதாகவே முளைத்துக்கொண்டேயிருக்கும்.உண்மைக்கு எந்த பாதுகாப்பும் உதவியும் தேவையில்லை. நாம் உண்மையை முழுமையாக ஆணித்தரமாக பேசினால் அதுவே போதுமானதாகும். அதனுடைய அத்தாட்சி அதனுள்ளேயே புதைந்து கிடக்கிறது.அதை தேடுங்கள் என்கிறது இவரது படைப்பு.
”கடல் நிலம் காடு மலை பாலை
என எங்கும் காணோம்
நமதன்பின் வெளியை
ஒரேஒருமுறை என்னைப்பார்
நமக்கான நட்சத்திரத்தை
உன் விழிகளில் இருந்து உருவாக்குகிறேன்” – என்பதாய் ’அன்பின் நிலம்’ எனும் கவிதையில் ஆணித்தரமாய் கூறியிருக்கிறார்.காதல் நம்பிக்கையை பற்றி தெளிவுபடுத்துகிறார்.
சமீபத்தில் கவிஞர் தமிழச்சியின் கவிதை ஒன்று படிக்கக்கிடைத்தது.அது,
“ஒரு கர்ப்பிணியின் வாந்தியினை
எடுத்து உண்ட எத்தியோப்பியக்
குழந்தைகளின் பட்டினியைத்
தொலைக்காட்சியில் பார்த்தபின்பும்
கலவி இன்பம் துய்த்த
அந்த இரவுக்குப் பின் தான்
முற்றிலும் கடைந்தெடுத்த
நகரவாசியானேன் நான்!” என்பதாய் விரிகிறது.இக்கவிதையில் கலவி இன்பமென்பது மறுக்கப்பட முடியாத ஒன்றாகவும் ஆணாதிக்கத்துக்கு இயைந்து போகிற பெண்ணியம் பற்றியும் மறைமுகமாய் பேசுவதாய் தான் எடுத்துக்கொள்ள தோன்றுகிறது.இதைப்போன்ற வடிவமைப்பு கொண்ட கவிதைகளும் சக்திஜோதியின் படைப்பில் விரவிக்கிடக்கின்றன.
”வெக்கையாய் பொழுதுகள் புலரும் போது
வானம் கூட
உடையிழந்த வெற்றுடலாய் விரிவடையும்”.
ஆனால் ‘நிலம் புகும் சொற்கள்’தொகுப்பு நம் மனம் புகும் சொற்களாய் மாறி நம்மை காதல் பரவசத்தில் மூழ்கடிக்கச் செய்கிறது.
‘நிலம் புகும் சொற்கள்’ எனும் கவிதையில் படைப்பாளி,
“நம்
சந்திப்பு நிகழும் போது
உரையாடவென
ஒத்திகை பார்த்துப் பார்த்து
சேமித்து வைத்திருந்த வார்த்தைகள்
விரல் வழி வழிந்து
நிலம் புகுந்து மறைகின்றன
ஒவ்வொன்றாய்” என்கிறார்.
கூடவே,
’காற்றின் துணையோடு
உதவ வந்த
ஒலிப்பெருக்கி
காற்றிலேயே கரைய’ என்றும்,
‘என் விழிகளில்
சுடர்ந்து கொண்டிருக்கின்றன
உனக்கான செய்திகள்’ என்பதாயும், தெளிவாய் தான் கூற வந்ததை கூறிச்சென்றுவிடுகிறார்.
சக்திஜோதி ’நிலம் புகும் சொற்களை’ நம் மனதிலும் புகச் செய்து நம்மை காதல் சுவையில் பரவசமடைய வைத்திருக்கிறார்.இந்த வகையில் ஒரு படைப்பாளியின் வெற்றி இங்கு நிகழ்ந்தேறுகிறது.பரவசமூட்டும் படைப்பாளியாய் அவர் வெற்றி பெற்று திகழ்வதாய் தான் படுகிறது.மேலும் கனல் போல் கனன்று படைப்புக்களை உமிழ்ந்தவாறு இருப்பாரென்றே நம்புவோம்.

(நான்காண்டுகளுக்கு முன்பு கவிதை தொகுப்பு வெளியான போது அதை அறிமுகப்படுத்தி என்னால் எழுதப்பட்டது)
(நன்றி : ’இமைகள் இலக்கிய மற்றும் திரைப்பட இயக்கம்’ ஆம்பூர்.)
-சு.மு.அகமது.

Series Navigationகொசுக்கள் மழையில் நனைவதில்லை.சுணக்கம்
author

சு.மு.அகமது

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *