கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து……

This entry is part 8 of 15 in the series 17 அக்டோபர் 2021

 

                               லதா ராமகிருஷ்ணன்

 

1935 ஆம் ஆண்டு செப்டம்பர் 22இல் பிறந்தவரான, இன்றளவும் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் வைதீஸ்வரனின் பிறந்த நாளையொட்டி குவிகம் பதிப்பகத்தார் அவருடைய சமீபத்திய கதைகள், கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் சில இடம்பெறும் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார்கள். தலைப்பு: சொல்ல நினைத்தேன்.

கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய கச்சிதமான அறிமுகம் நூலில் இடம் பெற்றிருக்கிறது. அச்சுப்பிழைகளைத் தேடவேண்டிய நேர்த்தியான நூலாக்கம். புத்தகத்தினை திறமையாக மெய்ப்பு பார்த்துக் கொடுத்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ராஜேஷ் சுப்பிரமணீயனுக்குத் தனது ‘என்னுரை’ யில் மறவாமல் நன்றி கூறியிருக்கிறார் கவிஞர் வைதீஸ்வரன்.

 

கவிஞர் வைதீஸ்வரனுடைய ஓவியமே முகப்பட்டையில் இடம்பெற்றிருக்கிறது.

 

நூலில். கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய பதிப்பகத்தாரின் முன்னுரையும் இடம் பெற்றிருந்திருக்கலாம். குவிகம் ஆசிரியர் தன் மேல் காட்டும் அன்பை யும் அக்கறையையும், தனக்கும் மனைவிக்கும் உடல்நிலை சரியில்லாது போனபோது அவர் செய்த உதவிகளையும் குறித்து கவிஞர் வைதீஸ்வரன் நெகிழ்வோடு கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது.

 

தொகுப்பின் என்னுரையில் பின்வரும் வரிகள் இடம்பெற்றுள்ளன. தனிக் கவிதை யாகுமளவு கவித்துவம் வாய்ந்தவை:

 

//இந்த எளிமையான தொகுப்பு இன்றைய அந்திமக் காலத்தின் எண்ணச்செதில்கள் தான்….//

 

(அதைப் படித்து காலத்தின் முன்னிலையில் நாம் கையறுநிலையில் நின்று கொண்டிருப்பதை எண்ணி வருத்தமும் ஏற்பட்டது.)

 

 

கவிஞர் வைதீஸ்வரனின் சமீபத்திய கவிதைகள் 25க்கு மேல், கட்டுரைகள் 20க்கு மேல், கதைகள்15 போல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கவிஞருடைய கோட்டோவியங்கள் சிலவும் இடம்பெற்றுள்ளன.

 

கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என எல்லாமே இலக்கியத்தின் சாரமாய் விளங்கும் big picture of life ஐக் காட்டுவதாய் உள்ளன.

 

கவிதைகள் பற்றிய சிந்தனை என்ற தலைப்பில் தனது கவிதைகள் சில உருவான விதத்தை சுவாரசியமாகக் கூறுகிறார் கவிஞர் வைதீஸ்வரன்.

 

தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் ஒன்று மொழிப்பற்றுக்கும் மொழி வெறிக்கும் உள்ள வித்தியாசத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மொழி

 

சாகப்போகிறவன்

தண்ணீர் கேட்டுக் கதறினான்

அவன் தன் மொழியில் புலம்பவில்லை

என்பதினால் அவனை சாக விட்டார்கள் சிலர்.

“சபாஷ்” என்றார்கள் அவன்

சக மனிதர்கள்.

ஊமை ஒருத்தன்

உள்ளூரப் புலம்பிக்கொண்டிருந்தான்

தன் புலம்பலை மொழிபெயர்க்க

ஒரு மொழியும் இல்லாமல்!

 

 

கவிஞர் வைதீஸ்வரன் நான் சார்ந்திருக்கும் வெல்ஃபேர் ப்ஃவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் முதல் நூலுக்கு முகப்பு அட்டைப்படம் வரைந்து தந்தவர். அது முதல் தொடர்ந்து எங்கள் அமைப்புக்கு நன்கொடை அளித்து வருபவர். சமீபத்தில் ஒரு மாண்டிசோரி ஆசிரியை அக்கம்பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக மாண்டிசோரி கல்வி முறையின் பயன்கள் கிடைக்க எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் அவருக்கு உதவி செய்யும் படியும் நான் எழுதியிருந்த கட்டுரையையும் அது சார்ந்த வேண்டுகோளையும் படித்து உடனே தன்னாலான நன்கொடையை அனுப்பி உதவினார்.

தனது இந்த நூல் குறித்து என்னுரை பகுதியில் கவிஞர் வைதீஸ்வரன் பின்வருமாறு கூறியிருக்கிறார்:

“இதில் கவிதைகள்; கட்டுரைகள்… வகைப்படுத்த முடியாத ஆழ்ந்த மனவோட்டங்கள் வெளிச்சங்கள் சின்ன சின்ன ஸ்வாரஸ் யங்கள்…. மற்றும் எனக்கு மிகவும் அன்னியோன்யமான சில சில சிறுகதைகள் என் ஓவியங்களின் இடைச்செருகலோடு ஆசையு டன் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இவை உங்கள் பார்வையில் பட நேரமும் காலமும் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

 

[சொல்ல நினைத்தேன்’. குவிகம் பதிப்பக வெளியீடு. விலாசம்: ப்ளாட் எண் 1, மூன்றாவது மாடி, ஜே.கே.அத்வைதா, 99, சௌபாக்கியா காலனி, அண்ணா மெயின் ரோடு, கே.கே. நகர், சென்னை -600 078. தொலைபேசி எண்கள்: 8939604745 / 9442525191 மின்னஞ்சல் முகவரி ilakkiyavaasal@gmail.com) ]

 

  •  

 

Series Navigationதீக்காய்வார்  போல …      எஸ். சாமிநாதன் விருது
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Comments

Leave a Reply to Siragu ravichandran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *