கவிநுகர் பொழுது-13 (இல்லோடு சிவாவின்,’மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன்’, கவிதை நூலினை முன் வைத்து)

This entry is part 13 of 19 in the series 20 நவம்பர் 2016

தமிழ்மணவாளன்

authorஇலக்கிய வகைமைகளில் கவிதை தனித்துவமானது; முதன்மையானதும் கூட.ஏனெனில் கவிதையில் தான் மொழிக்குள் மொழி இயங்குகிறது. சொற்களுக்குள் சொற்கள் பிரத்யேகமான அர்த்தத்தைப் பெறுகின்றன. தனக்கு முன்னும் பின்னுமான சொல்லோடு இணைந்தோ அல்லது விலகியோ முற்றிலும் புதிதான பொருளடர்த்தியைக் கொள்கின்றன.வாசிப்பு மனத்தின் அனுபவ வெளியில் பெரும்பயணத்தை நிகழ்த்துகின்றன. நுட்பமான பகுதிகளில் மெல்ல சென்றடைந்து ரசவாதம் செய்கின்றன.நல்ல இசையைக் கேட்கும் போது எவ்விதம் மனசு பித்து நிலையினை அடைகிறதோ அது போலவே நல்ல கவிதையை வாசிக்கிற போதும் நிகழ்கிறதெனலாம்.இன்னும் சொல்லப்போனால், வாசிக்கும் போது மட்டுமன்றி மேலும் சிறிது காலத்திற்குக் கூடத் தாக்கத்தை கவிதை உண்டு பண்ணுகிறது.
சமகால வாழ்வின் பிரச்சனைகளையும் சிக்கலையும், தன் பாடு பொருளாகக் கொண்டு சம காலத்திற்கான மொழியில் படைக்கப்படுகிற கவிதைகள், நவீனத்துவம் மிக்கதாக அமைகின்றன. அத்தகைய கவிதைகளை வாசிப்பதென்பது பேரனுபவம்.
இல்லோடு சிவா எழுதிய கவிதைகளின் தொகுப்புக்கு, முன்னுரை வழங்குவதற்காக இவரின் கவிதைகளை வாசித்தேன்.இவர், எழுதி வெளிவரும் முதல் தொகுப்பு இது.
எதிர்மறைகளால் ஆன உலகம்.
wrapperமனங்களில் குரூரம் பொங்கி வழிகிற , கரங்களில் ஆயுதம் கொண்டிருக்கிற , உத்தமமற்ற வார்த்தைகளைப் பேசியபடி முகத்தில் நடிப்பையே பாவனையாகக் கொண்டிருக்கிற மனிதர்கள். எத்தனைக் கடுமையான சூழலை உருவாக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இப்படியானவர்களின், அத்தனையும் பிடிக்கிறதெனில், ஆச்சர்யமிகும் நம் வினாவுக்கு பதிலாக
உங்களின் அத்தனையும் பிடிக்கும்
உங்களை எளிதில் அம்பலப்படுத்த
உதவுவதால்…
என்கிற பார்வையிலிருந்து இவரின் கவிதைகளை வாசிக்கத்தொடர வேண்டும் என நினைக்கிறேன்.அம்பலப்படுத்த வேண்டும் என்னும் கவிமனத்தின் அவா, சில பிற குணாம்சங்களை அடையாளப்படுத்துகின்றன. முதலில், இது மாதிரியான இயல்பிற்கு எதிரான கவிமனம்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால்
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா
மோதிமிதித்துவிடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்று பாப்பாவுக்குச் சொல்வான் பாரதி.அதற்கேற்றார் போல, அம்பலப்படுத்தப்பட வேண்டிய விஷயங்களை அம்பலப்படுத்த முடிவதில் எத்தனை உவப்பும் உறுதிப்பாடும் இருக்குமெனில் , எதிர்மறையான விஷயங்கள் எல்லாவற்றையும் பிடிக்கும் என்று கூறத்தோன்றும்.
சமூகத்தின் பால் கொண்டுள்ள தீவிர அக்கறையால் பிரச்சனைகளை நேரடியாகக் கவிதையாக்குவதென்பதும் அந்நிகழ்வுகளின் அகத்தோற்றத்தை கவிதையின் வாயிலாக கண்டடைவதும் இரு வேறுபட்ட கவிதை முறைமைகள்.
உன்கவலைகளைத் தீர்க்க வேண்டிய
கவலை எனக்கும்
என்கவலைகளைத் தீர்க்க வேண்டிய
கவலை உனக்குமாக
இருப்பதைத் தவிர
வேறென்ன இருக்க முடியும்
இந்த வாழ்ந்து சாகுற காலத்தில்
நமக்கு?
என்று வெளிப்படையாகவே பிறர் கவலை தீர்க்கவேண்டும் என்கிற கவலையே மானுட மனத்தின் வாழ்ந்து சாகிற காலத்தின் முக்கியமான கவலையாக இருக்கும் என்று நேர்ப்படப் பேசும் கவிஞர் பல கவிதைகளை மறைபொருள் உணர்த்தும் தத்துவார்த்தமிக்கதாகப் படைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இயல்பு வாழ்நிலைக்கான
தடைகள் பலவற்றை
சிந்தித்தபடியே கழிகிறது
இந்த வாழ்வு-
என்று சிந்திக்கிற கவிமனம் அதற்கான இடத்தைக் கண்டடைவதில் முனைப்பு கொள்கிறது.

மனம், ‘உணர்வு சார் நிலை’, ‘அறிவுசார் நிலை’, என்னும் இரண்டு கூறுகளைக் கொண்டிருப்பதாக அறிவியல் சொல்கிறது. அறிவுசார் மனநிலை சிந்தனை வயப்பட்டதாகவும் நிதானமானதாகவும் செயலாற்றவல்லது. அதே சமயம் உணர்வு சார் மனநிலை திடீர் மாற்றங்களுக்கும் கணப்பொழுதின் உணர்வெழுச்சிக்கும் ஆட்படக்கூடியது. பதற்றத்தை உருவாக்கக் கூடியது. இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கக்கூடியது. ஆகவேதான் உணர்வெழுச்சியின் விளைவுகளை உருவாக்கும் மனம், இதயம் என்பதாக பாவிக்கப்படுகிறது..இதே மனத்தினை, சித்தர்கள் வேறுவிதமாக முன்வைக்கிறார்கள்.புத்தி நிலை,சித்தி நிலை, முக்தி நிலை என்பதாக.
ஒரு மனிதன் தன்னின் செயல் பாட்டை,புறச்சூழலுக்கு ஏற்றவண்ணம் மாற்றிக்கொண்டு அவ்வாழ்க்கையை தனதானதாகப் பாவித்து புறக்கூறுகளில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் மன நிலை புத்தி நிலை. ஒரு மனிதன் தன்னை வெளியே தேடாமல் தனக்குள்ளே தேடுவது சித்தி நிலை. மேற்கண்ட இரண்டையும் கடந்த முதிர்ந்த நிலை முக்தி நிலை. அது முற்றிலுமாக தன்னை உணர்ந்த பேரானந்தமான மனநிலை. அன்பாலும் கருணையாலும் நிறைந்திருக்கும் மனநிலை. ‘தான்’, ஒழிந்த நிலை.

விடுதலையை விரும்புகிறேன்
என்னிலிருந்து எனக்கான
விடுதலையை
தன்னிலிருந்து, ’தான்’, விடுதலை பெறுவது உயர்வான நிலை. ’தான்’,என்னும் தன்மையழிக்கிற நிலை. அதைத்தான், ’என்னிலிருந்து எனக்கான விடுதலையை’,என்கிறார்.அதற்கு முன்னான நிலை புறச்சூழலுக்கு ஒப்புக்கொடுக்கும் நிலை.
சித்தர்கள் கூறும் முதல் நிலை
அதற்குமுன்
உங்களிடமிருந்து
“உங்களிடமிருந்து,’என்பது புறச்சூழலைக்குறிக்கிற அடையாளம்.அப்புறச்சூழலிருந்து விடுபட்டு தனக்குள் பயணித்து தன்னையுணர்ந்து தன்னிலிருந்து ,
விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே
என்பதாக, விடுதலையாகிற மனம் இதுவே.
மானுடத்தின் மீதான வன்முறையை தொடர்ந்து இச்சமூகம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சமூகம் என்பது யாது? நானும் நீயும் அவனும் அவளும் சேர்ந்தது தான். ஒருவரிடமிருந்து ஒருவர் பெறுவதும் தருவதும் தான் சமூகம் கட்டமைக்கப்பட்டதன் முதன்மைக் கூறு. ஆனால் இற்றைச் சுமூகம், வாழ்தல் நிமித்தம் அல்லது பிழைத்தல் நிமித்தம் சக மனிதன் மீதான தாக்குதலைத் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. தப்பித்தலுக்கான பேருபாயத்தைத் தேடிக் கண்டடைவதற்கான வெளிச்சப் புள்ளிகளே தப்பித்துக்கொள்ள முயற்சிப்பது குறித்த
அறையப்பட்ட யேசுவின் உடலும்
காணாமல் போய்விட்டது
கைகள் மூடிய படி புத்தனும்
மௌனமாகி விட்டான்
குகைகளில் ஒளிந்த படி சித்தனும்
ஒதுங்கிக் கொண்டான்
சோதியில் கல்க்கப் போவதாக இராமலிங்கம்
மறைந்து கொண்டார்
என்னும் வரிகள், ஞானிகளின் செயல் பாட்டின் மீதான எதிர்மறைக் கருத்தன்று; இவ்வாறு அவர்களின் செயல்கள் யாவும் நம்மிடமிருந்து , சமூகத்திடமிருந்து தப்பித்தல் பொருட்டென்கிறார். காணாமல் போனபின் உயிர்த்தெழுதல் எங்ஙனம்? எல்லாவற்றையும் துறந்த புத்தனும் மௌனமாகிப் போவதும், வாழ்வைப் பற்றற்றுக் கடந்து பெருவாழ்வினைக் கண்ட சித்தர்களும் குகைகளில் ஒளிந்து கொள்வதெனில் தப்பித்தலின் தேவையை, அதன் தீவிரத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
நுட்பமான புனைவு வெளியில் இயங்கும் ஒரு கவிதையில்,
நிசப்தத்தை அகற்றிக் கொண்டிருக்க
உதவிக்கு மின்விசிறியை அழைத்துக் கொண்டேன்
இப்போது எங்கும் ஓலம்
என்கிறார்.
சப்தம் எழுப்புவதும் நிசப்தத்தை அகற்றுவதும் ஒன்று தானா? விளைவு கூட ஒருவேளை ஒன்றாக இருக்கலாம். ஆனால் வினை ஒன்றில்லை. கவிவினையாற்றல் அதனின் வேறாகிறது.
துணி துவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்
என்னும் தேவதச்சனின் கவிதை இக்கவிதையோடு உணர்வொப்பீட்டைக் கோருவதாக இருக்கிறது.
அது போலவே, பிரமிளின்,’காவ்யம்’ கவிதையின் நினைவு கூரலை ஏற்படுத்தக்கூடிய ’சிறகு முளைத்த கவிதை’,யும் ‘பறக்கும் பாறைகள்’ கவிதையும் வாசிப்பனுபவத்தில் புதிய வெளிகளை உருவாக்கக் கூடியவை.

வார்த்தைகளில்
அர்த்தமில்லை-அவை
வெறும் எழுத்துக்கூட்டங்கள் தானே
என்று ஆரம்பிக்கும் ஒருகவிதை. வார்த்தைகள் மிகவும் வலிமை மிக்கவை. வார்த்தைகள், கருத்துப் பகிர்வுக்கானவை.உணர்வை வெளிப்படுத்துபவை.வார்த்தைகள் என்பவை அடையாளம்.வார்த்தைகள், அழைப்பை முன்வைப்பவை. வார்த்தைகள், அறைகூவல் விடுப்பவை. வார்த்தைகள், வழிநடத்தவல்லவை.வார்த்தைகள், பெரும் கூட்டத்தையும் தன் வயப்படுத்தும் சக்தி மிக்கவை. இவ்விதம், எல்லாமுமாய் இருக்கும் வார்த்தைகள்.

வார்த்தைகளில்
அர்த்தமில்லை-அவை
வெறும் எழுத்துக்கூட்டங்கள் தானே
என்றால்…?,
என்னும் போதில், அடுத்த வரிகளின் வார்த்தைகள் இப்படித் தொடர்கின்றன.

புரட்சியாளன் எதையாவது
பேசிவிட்டுப் போகட்டுமே!
எழுத்தாளன் எதையாவது
கிறுக்கிவிட்டுப் போகட்டுமே!
சண்டைக்காரி எதையாவது
திட்டிவிட்டுப் போகட்டுமே!
ஏன் கைது செய்கிறாய்?
ஏன் கோபப்படுகிறாய்?
வார்த்தைகள் ஒன்றும் அர்த்தமற்றவையெனில் ஏன் இவையெல்லாம். வார்த்தை ஒருவரை உயிர்ப்பிக்கும். ஒருவரின் உயிர் பறிக்கும். வார்த்தை மிக மிக சக்தி மிக்கது. ஒருவனைக் கொலையாளியாக மாற்றிவிடக்கூடியது. பிறிதொருவனைக் கருணையுள்ளவனாக மாற்றுகிறது. யாவுமாய் இருக்கிற வார்த்தை குறித்த இக்கவிதை எள்ளல் நடை கடந்து இறுதியில்
வார்த்தைகளில் அர்த்தமில்லை
ஆயுதமிருக்கிறது
என்று காத்திரமாக நிறைவடைந்து, வார்த்தையின் வலிமையைப் புலப்படுத்துகிறது.

புலம் பெயர்தல் மானுடம் எதிர்கொள்ளும் பெரிய வலி. பிறந்த இடத்தில் வாழவியலாமல் பிறந்த மண்ணைத் துறந்து பிற ஊர்களுக்கு பெயர்ந்து போக வேண்டிய நிர்பந்தம், மானுடத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. எனினும், அரசியல், பொருளாதாரம்,பணிச்சூழல் எனப் பல்வேறு காரணங்களால் அது நேர்வதைத் தவிர்க்க முடிவதில்லை.
சொந்த மண்ணை
அந்நியமாக்கிக் கொண்டோம்
பெயர்ந்த மண்ணில்
நிலைக்கப் பார்க்கிறோம்
எந்த மண்ணிலும்
நிலைக்கமுடியாத தவிப்பில்
நம் பாட்டன்
சொல்லிவிட்டுப் போனான்
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்று எழுதுகிறார்.இன்று சொந்த ஊரையும் அந்நியமாக்கிக் கொண்ட நம்மால் வாழ வந்த மண்ணிலும் நிலைக்க முடியாமல் தவிக்கிறோம். தகவல் தொழில் நுட்பத்தாலும் இணையத்தாலும் விரைவுப் பயணங்களாலும் இந்த உலகமே சிறு கிராமமாக மாறிவிட்டதை உணர்கிறோம்.ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னான்,
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.
மானுடத்தின் மீது தீராத காதலும் உலக மக்கள் யாவரையும் உறவாய் நினைக்கிற நனி நாகரிகத்தின் வெளிப்பாடுமாகவே கலியன் பூங்குன்றனின் இந்த வரிகள். எந்த மண்ணிலும் நிலைக்க முடியாத தவிப்பில் பாடியதாகச் சொல்வதை ஏற்பதற்கில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒன்றொன்று பிடிக்கிறது. இசை,ஓவியம்,நடனம்,டீக்கடை பெஞ்ச்,செஸ்,வெத்தலபாக்கு,மார்க்ஸியம் என.

இப்படி வேறுபாடான பல செய்திகளை அடுக்கி, ஒரு குறிப்பிட்ட முதன்மைச் செய்தியை எதிர் கொள்ள வாசகனைத் தயார் செய்வது நவீன கவிதையின், ஓர் எளிய யுத்தி. அப்படிச் சொல்லிக்கொண்டே வந்து
எனக்கு கவிதையோடு
உன்னையும்,
உனக்கு என்னைத் தவிர்த்த
எல்லாவற்றையும்,
என்பது செய்தி. அப்புறம் அவளுக்கு யாரைப் பிடிக்கிறது? யாரோ வேறு ஒருத்தனைப் பிடிக்கிறது. சோகம். அவளின்,அந்தப் பிடித்தலின் மீது, கவித்துவமான, கோபமான, அங்கதமான, கேலியான, வெறுப்பான, விரக்தியான, தோல்வியான, இயலாமையான, நெருக்கமான, விலகலான விமர்சனத்தை
நீ அறிமுகப்படுத்திய
உன் காதலனுக்கு
குழந்தை பலூனில் குண்டூசி குத்த
என்னும் குண்டூசியின் கூர்மையோடு வெளிப்படுத்த முடிகிறது. கவிதையின் சாத்தியம் இது தான்.
ஏழை விவசாயியாய்-நான்
ஏமாற்றிப் போகும்
கார் மேகமாய்-நீ
போன்ற இயல்பான உவமைகளை எழுதும் இவரால்
மீன்களின் நிர்வாணத்தை
இடைவிடாது காட்டும்
தொட்டிக் கண்ணாடிகள்
போன்ற நுட்பமான படிமங்களையும் உருவாக்க முடிகிறது.

முதல் தொகுதி என்பதைக்கணக்கில் கொண்டு பார்க்கிற போது, அவ்விடத்தைக் கடந்து அடுத்த தொகுப்புக்கான முதிர்ச்சியை இத்தொகுப்பிலேயே அடைந்திருக்கிறாரென்றே சொல்ல வேண்டும்.

இவரின், கவிப் பயணம் மிகச் சிறந்த இலக்குகளை அடையும் என்கிற நம்பிக்கையை தொகுப்பில் உள்ள சில கவிதைகள் வழங்குகின்றன.அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அன்புடன்
தமிழ்மணவாளன்

Series Navigationமிருகக்காட்சி சாலைக்குப் போவதுதொடுவானம் 145. அண்ணாவின் வண்டிக்காரன் மகன்
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *