கவி நுகர் பொழுது-12 பொம்பூர் குமரேசன் ( பொம்பூர் குமரேசனின்,’அப்பாவின் வேட்டி’, கவிதை நூலினை முன்வைத்து)

This entry is part 18 of 19 in the series 30 அக்டோபர் 2016

 

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பொம்பூர் குமரேசனின்,’ அப்பாவின் வேட்டி’, கவிதைத் தொகுப்பு குறித்து உரையாற்றினேன். அப்பேச்சின் கட்டுரை வடிவமாக இதனைக் கொள்ளலாம்.

‘நறுமுகை’, சார்பாக ஜெ. ராதாகிருஷ்ணன் நூலினைப் பதிப்பித்திருக்கிறார்.

 

’அப்பாவின் வேட்டி’, என்கிற தலைப்பே ஒரு அணுக்கத்தை உண்டு பண்ணுகிறது. ஒப்பீட்டளவில் அம்மாவின் அன்பைப் போல, பொதுவாக அப்பாவின் அன்பு சிலாகித்துப் பேசப்படுவதில்லை. அது ஒரு மழை மறைவுப் பிரதேசம் போல. அம்மாவின் அன்பெனும் பெருமலையின் மறைவில் இருப்பது. அந்த அன்பு பெரும்பாலும் வெளிப்படையாகாதது. வெளிப்படையாகும் பல தருணங்களிலும் கண்டிப்பு என்னும் முள்தாங்கி நிற்பது. அம்மாவின் அன்பு பற்றிப் பேசுவதற்கு இயற்கையும் வாழ்க்கையும் ஊடாடித் தருகின்றன. சற்றும் குறையாத இணையன்பு அப்பாவின் அன்பு. அதற்கான பதிவுகள் குறைவெனினும் வாசிக்கக் கிடைக்கையில் பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது.அப்படியான பதிவுகளில் முக்கியான பதிவு,’பொம்பூர் குமரேசனின் அப்பாவின் வேட்டி’.

 

இவரின் அப்பா கிராமம் வாழ்கிற அப்பா. கவிதைகளும் அதற்கான காட்சிச் சித்திரங்களை உருவாக்குகின்றன.

” நானும் தான் எழுதினேன். அதுஎன் வரலாறு. இவரும் எழுதியிருக்கிறார். அவை இவர் கதை.  கவிதைகள் காலத்தின் கண்ணாடிகள்-என்பதை புரிந்து கொண்டு இவற்றை இயற்றியிருக்கிறார்.அப்படியே காட்டுகின்றன.

குமரேசனின் கைவண்ணம் செய் நேர்த்தி நிறைவளிப்பது காட்சிப்படுத்துகிறார்.ஓர் கலைப்படமே செய்து விடுகிறார்’, என்று பழமலய் தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஆம். குமரேசன் வாழ்வின், அதுவும் கிராமத்து வாழ்வின் இயல்புக் காட்சிகளை கண்முன் கொண்டு வருகிறார். அந்தக் காட்சிகளில் எல்லாம் அவர் அப்பா வருகிறார். அதற்குத் தானே காட்சிகள்.

அப்பாவைப் பற்றி நான் எழுதிய கவிதையில்,வேட்டி குறித்து,

மங்கிய வேட்டியில்

மங்காத வாழ்க்கை’,

என்று குறிப்பிட்டிருப்பேன்.இவர் தன் கவிதையில்,

அன்றாடம் கசக்கிக் கட்டும்

விவசாயி

என்கிறார்.

அவரின் கிரிஸ் படிந்த

வேட்டியைத் துவைக்கும்

அம்மாவின் வேதனை

அப்பாவின் முகைக் கல்லாக

அடித்துத் துவைக்கும்

தைத்து தைத்தே

நூலாய்ப் போகும்

அம்மாவின் மனசும்

என்னும் போது அப்பாவின் உழைப்பின் வாயிலாக கிரிஸ் படிவதைத் துவைக்கும் அம்மாவின் மனத்தில் அவர் முதுகு ஏன் கல்லய் மாற்கிறது என்னும் ஐயம் எழுவது இயல்புதான். அப்பாவைப் பற்றி எழுதும் பொம்பூர் குமரேசன் அவரை உச்சம் வைத்துப் பேசும் முயற்சி ஏதுமில்லாது இயல்பின் உணர்வைப் பாசாங்கற்றுப் பதிவு செய்வதை அறிய முடியும்.காரணத்தை தொகுப்பின் பிற கவிதைகளைப் பேசும்போது கூறுகிறேன்.இதற்கான காரணத்தை அங்கே காணமுடியும்.

 

அப்பாவின் வேட்டியென்பது ஒரு கவிதைதான்.

அப்பாவின் பிறவற்றை அடையாளமாக்கி, அப்பாவின் செருப்பு, அப்பாவின் சைக்கிள், அப்பாவின் அன்பு, அப்பாவின் மாடு, அப்பாவின் நிழல் இப்படி.

அப்பாவின் செருப்பு குறித்த கவிதையில்,

ஒரு நாள்

காதறுந்த செருப்பைக்

கோணி ஊசியால்

கதறக்கதறத் தைக்கிறார்

அது கண்ணீர் வடிக்கிறது

அப்பாவின் வறுமை நினைத்து

என்னும் வரிகள் அவ்ரின் வறுமையைப் படம் பிடித்துக்கட்டுகிறது. ஒருவரின் வறுமையை அடையாளப்படுத்த செருப்பின் மோசமான நிலையைச் சொல்வது சாதாரணம்.ஆனால் அந்த பிய்ந்து போன செருப்பே இவரின் வறுமை நினைத்து கண்ணீர் வடிக்குமெனில் அவரின் வறுமை எத்தகையதாய் இருக்கும்.அடுத்த காட்சியைப் பாருங்கள்.

இருவேறு செருப்புகள்

ஒரு ஜோடியாக

வயலிலிருந்து வருகிறார்

“என்னப்பா இது?’

 

‘ரோட்டுல கிடந்தது

சுத்தமா இத்துப்போன

வலக்கால் செருப்பை விட்டு

இதப் போட்டுகினு வந்துட்டேன்

வறுமையின் உச்சம் காலுக்கொரு விதமான செருப்பு அணிவதைச் சொல்லி, அதை அத்தனை எளிதாக ஏற்கும் மனம் காட்டப்படுவது வெறும் வறுமை மட்டுமன்று, அதனை எத்தனை இலகுவாய் எதிர்கொள்கிற மனமும் வாய்த்திருக்கிறது என்பதையும் தான்.

 

அப்பாவின் சைக்கிளில் பேசப்படுகிற சைக்கிள் செருப்பைப் போலவே காலாவதியானதுதான்.என்ன? சைக்கிள் என்பதால் செருப்பைப் போல் தூக்கியெறியவோ சாலையில் மாற்றுக் கிடைக்கும் சாத்தியமோ இல்லை.

எல்லாம் இற்றுப்போன ஓட்டவே லாயக்கற்ற சைக்கிள்.இரும்பின் இதயத்தோடு மிதிப்பதனால் ஓடுகிறது.சரி. மீண்டும் ஏழ்மையைச் சித்தரிக்க ஒரு பொருள். புரிகிறது;புரிந்து கொள்ளப்படுகிறது.இப்போது அந்த ஏழ்மையின் இன்னோர் அடையாளமான சைக்கிள் குறித்த சித்தரிப்பை கவனிக்க வேண்டும்.

அந்த ஏழ்மையின் எலும்புக்கூடான சைக்கிள் குறித்த மெல்லிய நையாண்டியும் அங்கதமும் உற்றுநோக்கத்தக்கது.

பிரேக் போடும் போது சப்தம் எழுப்புகிறதாம். டயர் தேய்ந்து வழுக்கையாகி விட்டதாம்.

’பெல்லின்’வேலையை

பிரேக் செய்யும்

’டயர்’தேய்ந்து ‘டீப்’ஆகும்

என்கிரார்.தொடர்ந்து,

’ஸ்டாண்ட்’போட்டால்

களைத்துப் படுத்திருக்கும்

வண்டி மாடுபோல

என்னும் போது சைக்கிளை உயிர் ஜீவன் அடையும் உபாதையென உணரத் தூண்டுகிறது.ஆயினும் ஆயினும்

பின்பக்க மட்காடில்

சாயம்போன ஹெர்குலஸ்

உலகத்தையே தூக்கித்

தோளில் வைத்து நிற்பார்

வெற்றிப் பெருமிதத்தோடு

என்னும் போது அங்கத தொனி உச்சமாகிறது. அதற்காக அவர் வெளியே செல்லவில்லை. எந்த சைக்கிள் சோர்ந்து சுமையிழுத்து ஓய்ந்து கிடக்கும் வண்டிமாடெனக் கிடக்கிறதோ அதே சைக்கிளில் இருக்கும் உலகம் தூக்கும் ஹெர்குலிஸ்ஸை கண்டுபிடிக்கிறார்.

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்

நிபந்தனையில்லாமல் நம்மை ஒப்படைத்துக் கொள்வது தானே அன்பு. அந்த அன்புக்கு உதாரணமாய் உறவு நட்பு என எத்தனையோ காணமுடியும். எல்லாவற்றுக்கும் மேலான அன்பாக அம்மாவின் அன்பு எந்நாளும் போற்றப்படுகிறது. அம்மாவின் அன்புக்கு சற்றுக்கும் குறையாத அன்பு அப்பாவின் அன்பு. ஆனால் அம்மாவைப் போல நெகிழ்ந்து வெளிப்படுத்தப்படாத அன்பு.கண்டிப்பு என்னும் கசப்பை பிள்ளைகள் ஒவ்வாமையுடன் உணரும் அன்பு. உரிய காலத்தினின்று வெகு காலம் கழித்து புரியவைக்கிற அன்பு. அப்பாவின் அன்பு என்றொரு கவிதையைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி. அழகான கவிதை.

ஒருமுறை

அப்பா முத்தம் கேட்டாராம்

தாளாத வெட்கத்தில்

அம்மாவின்

காம்பு கழுத்து சாய

முகமெல்லாம் வெட்கங்கள் பூக்க

முடியாது…முடியாது…என்று

முகத்திற்கு

முன்னே வந்தாராம்

ஆண்டாள் என்று

ஆயா கூப்பிட

அடுத்த நொடியே காணோமாம்

அப்பா சொல்லும்பொழுது

அறுபது தாண்டிய அவர்கண்களில்

அந்த நிகழ்வைக்கண்டேன்

இன்றைக்கு அறுபது வயதான அப்பாவின் இளமைக்கால நினைவு. அன்றைக்கு கணவன் மனைவிக்குள் நிகழ்ந்த காதல். இது இன்றைய சூழலை, கவிதையில் பேசா விட்டாலும் ஒரு தலைமுறை இடைவெளியின் தன்மையோடு அணுகி ரசிக்க முடியும்.ஆயினும் ஒரு அப்பாவின் அன்பைப் பேசப்போகிறார் என்ற ஆர்வம் ஒரு கணவனின் அன்பாகக் காட்சிப்படுத்தப்பட்ட கவிதையில் ஆதங்கத்தை உருவாக்குகிறது. அப்பாவைப் பற்றி நிறைய பேசுகிற கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன. அப்பாவின் அன்பு என்னும் போது அப்பா பிள்ளை மீது காட்டும் அன்பைப் பேசக்கூடாதா என்னும் ஆதங்கம். அம்மாவிடம் அப்பா காட்டிய அன்பு அதற்கான அந்நாளைய காட்சிச் சித்திரம் அதை இன்றைக்கும் தேக்கி வைத்திருக்கும் அப்பாவின் கண்கள்,என..

அப்பாவின் எல்லாவிதமான பிம்பங்களையும் பதிவு செய்வதில் தயக்கம் கொள்ளவில்லை.பெரும் வெற்றியாளராக கட்டமைக்கும் முயற்சிகள் ஏதுமில்லை.

எல்லா கணக்குகளையும்

சரியாகப் போடும் அப்பா

வீட்டுக்கணக்கை மட்டும்

தப்புத் தப்பாய் போடுகிறார்

என்கிறார். தப்பாகக்கூட அல்ல. தப்புத் தப்பாகப் போடுகிறார். அதனால் இன்னலுறும் , அம்மாவின் முந்தானை  கண்ணீர் சொட்ட.

அப்பாவின் நிழல், அப்பாவின் மாடு, அப்பா நிலம் என்று மேலும் பல அப்பா பற்றிய கவிதைகள்.

 

அவற்றைக் கடந்து வேறு சில முக்கியமான கவிதைகளும் தொகுப்பில் உள்ளன.

நதிக்கரையோரத்து நாகரிகம் என்னும் வரலாற்றின் முக்கிய அம்சமாகும். தனிமனிதன் ஒன்றிணைந்து ஒரு சமூகக் கூட்டமாக மாறி வாழ்வதற்கு, தன் வாழ்விடமாக தேர்ந்தெடுத்தது நதிக்கரையோரம்.தான்.தமக்குத் இன்றியமையாத அனைத்தையும் தர இயற்கைவளம் அங்கே உண்டு. நீர் வளம் உண்டு. வேளாண்மைக்கான சத்தான மண் உண்டு. கால்நடைகளைப் பராமரிக்க பசுமை வெளிகள் உண்டு. அதானாலே தான் நதிகள் சமூகத்தின் ஓர் இனத்தின் நாகரிகத்தை உருவாக்குகிற குருதிநாளமாய் விளங்குகிறது.ஒவ்வொரு பகுதியிலும் ஓடும் நதி அப்பகுதி மக்களின் உயிரோட்டம்.இவருக்கு சங்கராபரணி.

தேசிங்குராஜன்

குடித்த தாய்ப்பால்

எனக்கும் கொஞ்சம்

கிடைத்தது

நான் மூன்றாவதாகப்

பால் குடித்தமுலை

நான் இரண்டாவதாகப்

பார்த்த தெய்வம்

என்று தாயைத் தொடர்ந்த மறு தாயாக சங்கராபரணி ஆற்றைப் பார்க்கிறார். அதனாலே தான் அதை ஊனப்படுத்தும் விதமாக மணள்ளுவோர் மீது கடுமையாக கோபம் எழுகிறது. அந்தக் கோபம், ’புதைத்தல்’ என்னும் கவிதையாக மாறுகிறது.

மாண்டு போன மனிதனை

ஆற்றங்கரையில்

புதைக்கிறார்கள்

மணல் அள்ளி வீட்டில்

புதைக்கிறார்கள்

என்று பதைக்கிறார். தீட்டு என்னும் கவிதை சாதிமத கொடுமைகளுக்கெதிரான கவிதை.அறிவியல் முன்னேற்றத்தில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவற்றுள் ஒன்று அவற்றின் பயன் பாட்டின் வாயிலாக அந்தச் சூழ்லிலேனும் பாகுபாடு அற்று விளங்குவது.

 

விஸ்வநாத தாஸ் விடுதலைக்கான முழக்கங்களை நாடகத்தின் வாயிலாக முன் வைத்த கலைஞன். ரயில் குறித்த அவரின் பாடலொன்றில், சாத்மத பேதமற்று அனவரையும் சமமாய்ச் சுமக்கும்ரயிலே என பாடுவார்.

பொம்பூர் குமரேசனின் தீட்டு என்னும் கவிதையில் , பேருந்தில் இருக்கும் நெருக்கடியைப் பேசுகிறார்.நெரிசலில் இரண்டு பேர் உட்காரும் சீட்டில் மூன்று பேர் அமர்வதைச் சொல்கிறார்.சீட்டுக்கு இடையில் இடித்துப் பிடித்து நிற்பதைச் சொல்கிறார்.அப்போதெல்லாம் யார் எந்த சாதி என்று தெரியாத மனத்திற்கு, பேருந்திலிருந்து கீழே இறங்கியவுடன் திரும்பவும் சாதியின் கொடிய கொம்புகள் முளத்து விடுவதைச் சுட்டுகிறார்.அவரின் ஊரான பொம்பூர் என்னும் தலைப்பில் ஒருகவிதை.

பிறந்தது பொம்பூர்

வளர்ந்தது பொம்பூர்

வயதுக்கு வந்ததும் பொம்பூர்

வாழப்போனது வேலூர்

ஆனால் குழந்தை பிறந்தது, இர்ண்டாம் குழந்தை பிறந்தது, வாழாவெட்டியாய் வந்தது எல்லாமே பொம்பூர். ஆனாலும் அவளை எல்லோரும் வேலூர்க்காரியெறே சொல்கிறார்களாம். பெண்களின் குறிப்பாக கிராமப் புறப் பெண்களின் வாழ்வில் திருமணம் என்பது எத்தகைய அடையாளச் சிக்கலை உருவாக்குகிறது என்பதைப் பேசும் கவிதை.வாழ் நாளின் கணிசமான பகுதியை பொம்பூரில் கழித்தாலும் இறப்பது பொம்பூரில் தான் என்று தீர்மானமே ஆகியிர்ந்தாலும் அவள் வேலூர்க் காரியென் ஆழைக்கப்படுவது ஏன்?இந்தச் சமூகம் திருமணத்திற்குப் பின் புகுந்த வீட்டின் அடையாளமாகவே பார்க்கிறது.அதுமட்டுமல்ல பெண்களை நாற்றங்காலில் இருந்து இப்படி பிடுங்கி நடுவதான சூழலைப்பார்க்கிறோம்.அதுமட்டுல்ல பெண்களி எப்போதும் ஆணோடு சேர்ந்த அடையாளமாகவே பார்க்கிற வழக்கமும் உண்டு. பெண் என்பவள் தனித்த அடையாளமாய் அறியப்படுவதில்லை என்பதை சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கவிதை ஒன்று,பரமேஸ்வரியின் வாழ்க்கைக் குறிப்புகள்

 

குருமூர்த்தியின் மகளாய்ப் பிறந்தாள்

பரமேஸ்வரி

செல்ல மகளாய் வளர்ந்தாள்.

தந்தை மறைந்ததும்

பதினெட்டு வயதான போதவள்

தனபாலனின் தங்கை

புகுந்த வீட்டில் எப்போதுமே

மணிகண்டனின் மனைவிதான்.

பிள்ளைப்பேறு அவளைக் குமாரின் அம்மாவாக்கியது.

கடந்த வாரம் பின்னரவொன்றில்

தன் எண்பத்து மூன்றாம் வயதில்

மரித்துப் போனாள் சதீஷின் பாட்டியாக

பரமேஸ்வரி ஒருபோதும் பரமேஸ்வரியாய்

அறியப் பட்டதாக

அவளின் வாழ்க்கைக் குறிப்புகளில்

தடயங்களேதுமில்லை

என்னும் கவிதையில் ஆண் சார்ந்த அடையாளங்களே பெண்ணின் அடையாளங்களாக இருப்பதைஅறிய முடியும்.

 

இன்றைக்குத் தமிழ்ச்சமூகத்திற்கு இருக்கும் பெரிய சவால் மதுவும் மதுப்பழக்கமும். சமூக அரசியல் நாகரிக பொருளாதார கல்வி சார் சுகாதார ஆரோக்கிய நிலைகளில் தன் ஆக்ரமிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. பல குடும்பங்கள் இன்னலுறுகின்றன. இரண்டு தலைமுறை பாழாகிவிட்டது. அடுத்ததலைமுறை பாழாய்ப் போவத்ற்கு தயாராகிவிட்டது.தற்கொலைகளும் கொலைகளும் பாலியல் வன்முறைகளும் இதன் ஊடாக நிகழும் சாத்தியங்கள் அதிகமாகிவிட்டன.’சாராயம்’ என்னும் இவரின் கவிதை அப்பாகுடித்தமதுபாட்டிலில் மண்ணெண்ணை ஊற்றி விளக்கேற்றுவதைப் பேசும்போது அந்த விளக்கு எரிவது வீட்டை இருட்டாக்கியபடி என்னும் சோகத்தை பதிவு செய்கிறது.

 

கிராமப் புர தந்தையை முன் வைத்து எழுதப்பட்ட பல கவிதைகளைக் கொண்டிருக்கும் இத்தொகுதி அதற்கான மொழிதலையும் ,நிகழ்வு நுட்பங்களையும் கொண்டிருப்பதை அறிய முடிகிறது.தந்தையின் பால் கொண்ட அன்பு தன் அப்பா குறித்தெழுதத் தூண்டுகோலாக இருந்த போதிலும் நேர்மறையான விஷயங்களை மட்டுமல்லாது எடிர்மறையான விஷயங்களையும் பேசிச் செல்வது சிறப்பு..அது தவிர்த்த பல கவிதைகளும் வாசிப்புக்கு நிறைவைத்தருவதாய் அமைந்திருக்கின்றன.

பொம்பூர் குமரேசனுக்கு பாராட்டுகள்..

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! செங்குள்ளி விண்மீனை அண்டக்கோள் உருவாக்கும் பண்டைத் தட்டு சுற்றுவதைக் கண்டுபிடித்தார்நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75 — புத்தக வெளியீடு
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *