கானல் தேசம் – வாசிப்பு அனுபவம்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 9 of 14 in the series 28 நவம்பர் 2021

 

 

தாமரைச்செல்வி.. – அரிசோனா

Dr. நடேசன் அவர்களுடைய கானல் தேசம் என்ற புதினம் 1980 களின் இறுதியில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்ற காலத்தில் ஆரம்பமாகி 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்திற்கு பிறகு  முடிவடைகிறது.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கைப் பிரச்சனையை பல ஆண்டுகளாக ஒரே நோக்கில் பார்த்திருந்தோம்.  இலங்கையின் முப்பதாண்டு கால ஆயுத போராட்டம் தனது மறுபக்கத்தை சில சூழ்நிலைகளில் காட்டியிருந்தாலும் அதைப் பற்றிய பெரும் மீளாய்வுகள் 2009 க்கு பின்னரே நடக்கின்றன.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘கானல் தேசம்’ அசோகன் என்ற கதாபாத்திரத்தின் பார்வையில் தமிழர்களின் விடுதலைப்  போர் என்ற பெயரால் இலங்கையில் புலிகள் இயக்கம் தமிழர்களின் மீதே எத்தகைய வன்முறையை நிகழ்த்தியது என்பதை விவரிக்கிறது.

  ராஜிவ் படுகொலை, இலங்கை ராணுவத் தளபதியின் மீதான கொலை முயற்சி, ஆஸ்திரேலியா வழியாக புலிகளின் பணப்பரிமாற்றங்கள், வெளிநாடுகளில் இலங்கைப் போரை காட்டி நிதி வசூலித்தவர்களின் மோசடிகள், போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு நாடுகளின் உளவுத் துறைகள் எவ்வாறு ஒன்றிணைந்து இலங்கை அரசுக்கு உதவின….இவ்வாறு பரந்துபட்ட பல முக்கியமான உண்மை நிகழ்வுகளை புனைப் பாத்திரங்களின் வழியாக எழுத்தாளர் வெளிப்படுத்துகிறார்.

 இலங்கைச் சமூகம் உண்மையில் சிங்களவர்/தமிழர்/முஸ்லிம் என தனித்தனியாக பிரிந்து கிடக்கவில்லை, பல இடங்களில் இணைந்தே வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பதை இந்நூல் நன்றாக உணர்த்துகிறது. ஏன்? புலிகள் இயக்கத்திற்கு உதவிய சிங்களர்களும், சிங்களர்களுக்கு உதவிய தமிழரும் இருந்திருக்கின்றனர்.

   பால்/வயது பாரபட்சமின்றி மனித உயிர்கள் ஆயுதமாக பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.  பெண்களின் மீதான  உச்ச பட்ச மனித உரிமை மீறல்கள்….முக்கியமாக பெண் கரும்புலியை கர்ப்பமாகி, ராணுவ மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு போக வைத்து அதன்மூலம் ராணுவத் தளபதி மீது தற்கொலை தாக்குதல் நடத்திய கொடூரம் !!!  உண்மையில் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் மனித உயிர்கள் மலிவாக பலியிடப் பட்டிருக்கின்றன ☹

 

 

    புலிகளின்   துணுக்காய் வதை முகாமில் சக தமிழர்களை ஆயிரக்கணக்கில் அடைத்து வைத்து கொடூர சித்ரவதைகளுக்கு உள்ளாக்கியதை இந்தப் புதினம் பதிவு செய்திருக்கிறது !

     ‘கானல் தேசம்’ நூலை படிப்பதற்கு முன்பே முன்னாள் புலி உறுப்பினர்கள் எழுதிய சில நூல்களின் மூலம் பல உண்மைகளை அறிந்திருந்தேன். இருப்பினும் “கானல் தேசம்’ ஏனைய விடுதலை இயக்கங்களை அழித்துவிட்டு  புலிகள் மட்டுமே ஏகபோகமாக உரிமைக் கொண்டாடிய இருபதாண்டு  கால போராட்டக் களத்தின் வேறு சில பரிமாணங்களை காட்டியுள்ளது.

முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்த ஆயுதப் போராட்டம் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தை எத்தகைய நிலையில் கொண்டு நிறுத்தியது? “மனித உயிர்களை துரோகி என்ற ஒரு வார்த்தையால் ஆவியாக அலையவிடும் அதிகாரத்தை இளைஞர்கள் எடுத்துக்கொண்டார்கள். இவர்கள் குறுகிய காலத்தில் ஒரு புதிய அதிகார வர்க்கமாக உருவாகினார்கள். இவர்களுக்கும் மக்கள் பயந்தார்கள். இந்த அதிகார வர்க்கத்துடன் சந்தர்ப்பவாதிகளாக இருந்தவர்களும் சேர்ந்துகொண்டார்கள். முழுச் சமூகமும் ஒரு திசையில் தமிழ்த்தேசியம் என்ற புயலால் இழுத்துச் செல்லப்பட்டது எவரும் எதிர்க்கவில்லை. சமூகத்தில் முக்கியமானவர்கள், கல்விமான்கள், மற்றும் பெரியவர்கள் எல்லோரும் கைகளைத் தூக்கியபடி வெற்றி கொண்ட இராணுவத்திடம் சரணடைவதுபோல் புதிய கதாநாயகர்களிடம் சென்றனர் ” என்ற Dr.நடேசனின் வார்த்தைகள் துல்லியமாக எடுத்துரைக்கின்றன.

இந்நூலை எழுதி வெளியிட்டமைக்கு நன்றிகள் பலப் பல !!

Series Navigationகுருட்ஷேத்திரம் 30(திருதராஷ்டிரனுக்கு விதுரர் சொன்ன சத்திரிய தர்மம்)ஐந்து கவிதைகள் 
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *