காப்பியக் காட்சிகள் 10.​பொழுது​போக்குகள், பழக்க வழக்கங்கள்

This entry is part 13 of 21 in the series 27 ஜூன் 2016

 

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com

மக்கள் தங்கள் வேலைகளைச் செய்த பின்னர் எஞ்சிய நேரத்தை இனிமையான பொழுதுகளாக்கப் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டனர். பொழுபோக்கு நிகழ்ச்சிகள் மனதிற்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு வலிமையையும் சேர்க்க வல்லவையாகும். சீவகசிந்தாமணியில் நீர்விளையாட்டு, பந்தடித்தல், ஆழி இழைத்தல், கழங்காடல், கூடல் இழைத்தல் ஆகிய பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் இடம்பெற்றுள்ளன.

நீர் விளையாட்டு

கோடைக்காலத்தில் வெயிலின் வெம்மையைத் தணித்துக் கொள்வதற்கு நீர்நிலைகளுக்குச் சென்று நீரைத் துருத்திகளில்பீய்ச்சியடித்து விளையாடும் விளையாட்டாகும். இந்நீர் விளையாட்டில் மக்கள் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தனர். நீர் விளையாட்டு எந்தத் துன்பமும் இன்றி மன மகிழ்ச்சியாக நடைபெறுவதற்கு அருகக் கடவுளுக்கு நீராடும்க பெரும் பொருள் வழங்கப்பட்டது(912). நீர் விழாவிற்குச் செல்பவர்கள் புதிய உடைகளையும் அணிகலன்களையும் பல பெட்டிகளில் எடுத்துச் சென்றனர்(863).

நீரில் சந்தனத்தையும் குங்குமத்தையும் கலந்து நீர் விளையாட்டை நிகழூத்தினர்(2655). பெண்கள் நீர் விளையாட்டின்போது ஆடவர்களின் பகைவர்களைப் போன்று ஒப்பனை செய்து கொண்டு நீர் விளையாட்டில் ஈடுபட்டனர்(265). அதனால் ஆடவர்கள் தங்கள் பகைவர்கள் தங்களோடு போரிடுகிறார்கள் என்ற உணர்வோடு முழு ஈடுபாட்டோடு விளையாட்டிடில் ஈபட்டனர்(2655). இக்காட்சிகள் பரிபாடலில் பெண்கள் வையையாற்றில் நீராடும் நிகழ்ச்சிகளோடு ஒத்திருப்பது நோக்கத்தக்கதாகும்.

துறவு முதலிய எண்ணங்களை மாற்றும் ஆற்றல் மிகுந்த கருவியாக நீர் விளையாட்டு கருதப்பட்டது(2663). நீராடியவர்கள் புத்துணர்ச்சி பெற்று மனமகிழ்ச்சியோடு தங்கள் இல்லம் சென்றனர். ஆடவர் பெண்டிர் இருவரும் இந்நீர் விளையாட்டில் கலந்து கொண்டமையால் மிகச்சிறந்த விளையாட்டாக இவ்விளையாட்டுக் கருதப்பட்டது. பெண்கள் தங்கள் தோழிகளோடு பந்தடித்தல், ஆழி இழைத்தல், கழங்காடல் ஆகிய விளையாட்டுக்களை விளையாடினர். ஐந்து பந்துகளைத் தங்கள் உள்ளங்கைகளில் அடக்கிப் பந்தடிப்பதில் வல்லவர்களாக விளங்கினர்(125,195,1026,1953).

ஆழி இழைத்தல்

ஆழி என்பது வட்டத்தைக் குறிக்கும். தங்களின் கண்களை மூடிக்கொண்டு இரு ஆட்காட்டி விரல்களையும் கொண்டு ஒரு வட்டம் வரைவர். வட்டம் சரியாக முடியுமேயானால் நினைத்த காரியம் சரியாக நடக்கும் என்பதை பெண்கள் உணர்ந்தனர். இவ்விளையாட்டிற்கே ஆழி இழைத்தல் என் பெயர். பெண்கள் தாங்கள் நினைத்த எண்ணம் நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பதை ஆழி இழைத்துக் கண்டறிந்தனர்(1037).

கழங்காடல்

கழங்காடல் என்ற விளையாட்டும் கல்லாங்காய்களை மேலே தூக்கிப் போட்டு விளையாடுவதாகும். பெண்கள் இவ்விளையாட்டை விரும்பி விளையாடினர்(1026). இவ்விளையாட்டுக்களை விளையாடுபவர்களிடம் எவ்வித இன வேறுபாடுகளும் கருதாமல் பெண்கள் விளையாடினர். இவ்விளையாட்டுக்கள் உள்ளத்திற்கும் உடலுக்கும் வலிமை சேர்த்ததுடன் தீய எண்ணங்கள் மனதில் ஏற்படாதவாறும் அமைந்திருந்தன.

பழக்க வழக்கங்கள்

வாழ்க்கைக்குத் தேவையான செயல்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதைப் பழக்க வழக்கங்கள் என்பர். இப்பழக்க வழக்கங்கள் ஒரு சமுதாயத்தின் தன்மையை ஆராய்வதற்குப் பயனுள்ளவைகளாக விளங்குகின்றன.சீவகசிந்தாமணியில் இடம்பெறும் பழக்க வழக்கங்களை நல்ல பழக்க வழக்கங்கள், தீய பழக்க வழக்கங்கள் என்று இரு வகையாகப் பகுக்கலாம்.

நல்ல பழக்க வழக்கங்கள்

வீட்டிற்கு வந்த விருந்தினர்களை வரவேற்று அவர்களுக்கு விருந்தளித்த பின்னர் மக்கள் பேச்சைத் தொடங்கினர்(401). உணவில் நல்ல நெய்யைப் பெய்து, சர்க்கரைப்பாகினைப் போதும் என்ற அளவிற்கு விருந்தினர்களுக்குக் கொடுத்து உபசரித்தனர்(400). வந்த விருந்தினர்களுக்குத் தன் மனைவியை அறிமுகப்படுத்தினர்(1730). ஒழுக்கம், வாழ்வில் நீக்கமற நிறைந்திருந்தது. வாக்குத் தவறாமையை மக்கள் கடைபிடித்தனர்(393,1340). முன்னனுமதி பெற்று மன்னனைச் சந்திக்கும் வழக்கம் இருந்தது. பசு, துறவு, பெண், குழந்தை, பார்ப்பான் துன்பங்களைக் களைவது சிறப்பாகக் கருதப்பட்டது(443). கடற்பயணம் மேற்கொள்ளும்போது தானம் வழங்கப்பட்டது(500). உணவு உண்ட பின்னர் வாசனைப் பொடியை உடலெங்கும் பூசி, உள்ளங்கையில் நீரை ஏந்தி மூன்று முறை, குடித்து வாயினைத் துடைத்தனர்(2026). வெற்றிலை பாக்கை உண்டனர்(2474,2473). இவ்வெற்றிலை பாக்கு ஐந்துவிதமான பொருள்களால் செய்த முகவாசமாக இருந்தது. பச்சைக் கற்பூரம் கலந்து முகவாசத்தை ஆண்கள் உண்டனர். அண்ணனின் மனைவியை ஐந்து வில் தொலைவில் நின்று வணங்கினர்(1704). பேசும்போது அவளின் பாதங்களைப் பார்த்துப் பேசினர்1704,1705).

பெண்கள் தாங்கள் விரும்பாத குணங்கள் கொண்ட கணவன் கிடைத்தால் கணவனைப் பணிந்து வாழ்வர்(1997). உணவு உண்டதும் நூறடி தூரம் வரை உலாவி வரவேண்டும் என்ற வழக்கமும் அக்காலத்தில் இருந்ததை(2374) சிந்தாமணி குறிப்பிடுகின்றது.

தீய பழக்க வழக்கங்கள்

பெண்களை அவரவர் விரப்பமின்றித் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்ததை சிந்தாமணி ஓரிடத்தில் குறிப்பிடுகின்றது(685). பொய் பேசுதல், நம்பிக்கைத் துரோகம் செய்தல், பழி வாங்குதல் ஆகிய செயல்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது(240,241,741). வணிகர்களிடம் பெரும் பொருளைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்குச் சாதகமாக ஆணையிடுதல், தண்டிக்காமல் விடுதல் ஆகியனவும் சமுதாயத்தில் நடைபெற்றன(907). அரண்மனை இரகசியம் வெளிப்படுத்தப்பட்டது(668). மன்னனின் நன்மதிப்பைப் பெற பகைவனைக் கொன்றதாகத் தெருவில் செல்லும் அப்பாவி ஒருவனைக் கொன்று அதன் மூலம் பயனடைய நினைக்கும் கயமைத் தன்மையும் அக்காலத்தில் சமுதாயத்தில் நிலவியது(1163).

தேன் சிந்தும் மலர்மாலையை அணிந்த ஆயிரத்தெட்டுப் பெண்கள் கூடிநின்று எட்டுவிதமான மங்கலப் பொருள்களைக் காட்டி மணமகளையும் மன்னனையும் வரவேற்றனர்2428). பெவற்றி நிலைபெறுக என்று மதுவை வார்த்தனர்(471). பெண்குழந்தைகள் பிறந்த அன்று அதை மணக்க விரும்புவர்கள் அணிகலன்களையும் செல்வத்தையும் அளித்தனர்(538).

மடல் அனுப்பும் பழக்கம்

குவளை மலரைச் செய்திகளை அனுப்பும் கடிதமாகப் பயன்படுத்தினர். குவளை மலரின் இதழ்களில் சிறிய எழுத்துக்களைக்  கொண்டு செய்திகளை எழுதி அனுப்பினர்(669). அச்செய்திகளைப் படிக்க விரும்புகிறவர்கள் இரும்புக் கம்பியில் சரியாகச் சுற்றிக் கொண்டு பின்னர் படித்தனர்(669). பூக்களைத் தொடுத்துக் கொடுப்பதன் மூலமாகவும் செய்தி அனுப்பும் முறை இருந்தது(1657). இவ்விரண்டு முறையும் காதலர்கள் பிறர் அறியாத வண்ணம் தங்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்வதற்காகப் பயன்படுத்தினர்.

அரசர்கள் தங்கள் அரசியல் செய்திகளை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு அனுப்ப ஓலைகளைப் பயன்படுத்தினர்(2143).அவ்வோலைகளில் முத்திரை இடப்பட்டிருந்தது(2143). மன்னர்கள் ஓலையில் இருக்கும் முத்திரையை அகற்றிய பின்னர் ஓலையின் செய்தியைப் படித்தனர்(2143). பொதுமக்களுக்குச் செய்தியை அறிவிக்க முரசறைந்து தெரிவித்தனர்(2388). காதலர்கள் மலர்களின் வாயிலாகவும் மன்னர்கள் ஓலைகளின் வாயிலாகவும் மக்கள் முரசறைவோன் வாயிலாகவும் செய்திகளை அறிந்து கொண்டனர்.

போர் குறித்த பழக்க வழக்கங்கள்

போர் செய்ய விரும்பும் மன்னர்கள் முதலில் ஆநிரைப் போரையே விரும்பினர்(1825). வீரர்கள் தங்களைவிட வீரமானவர்களைக் கண்டு வருந்தினர்(443). கண் இமைத்தல் செய்யும் வீர்களையும் தன்னைவிட வயதில் முதிர்ந்த வீரர்களையும் வயதில் குறைந்த வீரர்களையும் தங்களுடைய பகையாகக் கருதாமல் வலகிச் செவர்(2261).

போர் முரசு முழங்கிய பின்னரே போரிடத் தொடங்குவர்(1847). வாளை உறையில் இடுவர்(810). யானையைப் போர்க்களத்தில் இருந்து திருப்புவர்(810). வாளை விட்டெறிதல் தோல்வியாகக் கருதப்பட்டது(810). பெண்களைப் போரில் கைப்பற்றக் கூடாது என்ற வழக்கம் நடைமுறையில் இருந்தது(749). போரில் விழுப்புண் அடைந்தவர்களுக்கு அணிகலனும் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு மானியமும் வழங்கப்பட்டன(818). யானைப்பாகர்களுக்கு வாழ்வூதியமாக ஒரு கோடிப்பொன் வழங்கப்பட்டது(2156).

போர்க்களத்தில் வெற்றியைத் தேடித்தந்த நண்பர்களுக்கு ஏனாதி என்ற பட்டமும் பெருஞ்செல்வமும் வழங்கப்பட்டன(2569). வெற்றி பெற்ற மன்னர்கள் தன்னை வளர்த்த செவிலித்தாய்க்கு ஆயிரம் பொன் வழங்கினர்(2570).இருப்புத் தண்டலாக ஐந்து ஊர்களை வழங்கினர்(2570). தான் விளையாடிய ஆலமரத்திற்கு மாலை சூட்டி பொற்பீடம் அமைத்து, பசுக்கள் நிரம்பிய ஐந்து ஊர்களைத் தானமாக வழங்கினர்(2574). மனைவிக்குச் சாந்துக்கும் உணவுக்கும் பெரும்நிதி வழங்கினர்(690).

ஆடவர்கள் தங்கள் வலிமையைக் கல் உருண்டையைத் தூக்கியும் கல்லை வீசியும் வெளிப்படுத்தினர்(690). மன்னன் விருப்பத்திற்கு மாறாகப் பேசினால் அவர்களது நாவானது துண்டிக்கப்பட்டது(2150). திருமணத்தில் நகைமுக விருந்திடுதல் என்ற ஒரு வழக்கம் இருந்தது(1046). மன்னன் பகை என்றால் பகை நாட்டினரோடு இருந்த வாணிபம் துண்டிக்கப்பட்டது(2150). குழந்தைகள் கற்கும் கல்வியில் துறவைத் தவிர அனைத்துக் கலைகளும் கற்பிக்கப்பட்டன(2746). போரில் உயிர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க பொன்னால் அருகனின் உருவம் செய்து அதற்கு விழாவெடுத்துத் தானம் செய்தனர்(820,821).

சிந்தாமணிக் காப்பியம் காட்டும் மக்களின் பழக்க வழக்கங்கள் அக்கால மக்களின் பண்பாட்டுக் கூறுகளை விளக்கிக் காட்டுவனவாக அமைந்துள்ளன. அக்கால மக்களின் உயர்ந்த குறிக்கோள், நெறியான வாழ்க்கை முறை ஆகியவற்றைப் புலப்படுத்தி இனிய வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு உதவும் வகையில் அமைந்துள்ளன என்பது நோக்கத்தக்கது.(தொடரும்—-11)

 

 

Series Navigationகவியரசு கண்ணதாசன் பிறந்த நாளுக்குமஹாத்மா (அல்ல) காந்திஜி
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *