கிழவியும், டெலிபோனும்

This entry is part 18 of 20 in the series 23 பெப்ருவரி 2014

காலையில சூரியன் உதயமாவறதுக்குள்ள போன்கெழவி செத்து போயிடுச்சு. செல்போன் வழியா தகவல் அங்கங்க பறந்துச்சு.
“அலோ.. முருகேசு அண்ணே.. அம்மா காலையில திடீர்ன்னு செத்து போயிடுச்சு..”
“அலோ.. கலாத்தே.. அப்பாயி காலைல செத்துடுச்சு…” பட்டணத்துல இருக்குற மூத்தவளுக்கும் பக்கத்து டவுன்ல இருக்குற பெரியவனுக்கும் சின்னவன் அழகேசு வீட்லேர்ந்து தகவல் சொல்லியாச்சு. சின்னவ தனம் இந்தூருலயே வாக்கப்பட்டுருக்கா.. அவ தான் அம்மா செத்ததுலேர்ந்து ஒப்பாரி வச்சுக்கிட்டு கெடக்கிறவ..
“நாலு புள்ள பெத்து போட்டு… நல்லா தான் வாழ்ந்தீயே..                                            நேத்து வந்து பாத்தப்ப… சொகமா தான் பேசுனீயே..                                    எங்கிட்டு தான் எமன் வந்தான்.. எப்புடீன்னு தெரியலையே..                                என்னை இங்க வுட்டுப்புட்டு… எங்க போனே என் ஆத்தாவே…
செல்போன் மணி அடிச்சுக்கிட்டே இருந்துச்சு. ஓடி போயி செல்ல எடுத்தான் அழகேசோட மவன். “அத்தை… ஒனக்கு தான் போன் வந்துருக்கு… பெரியத்தை பேசுது..”
கண்ணையும், மூக்கையும் முந்தானையில தொடச்சுக்கிட்டு போனை கையில வாங்குனா தனம் “முச்சந்தியில தேங்கா ஒடைச்சு வழி வுட்டாச்சுக்கா… தம்பி அழகேசு வெளியூரு சனத்துக்கு போனுல சேதி சொல்லிக்கிட்டு இருக்குhன்… நீ சீக்கரமா வந்து சேரு..” அக்காகிட்ட பேசிட்டு போனை தம்பி மவன்கிட்ட கொடுத்தா தனம். திண்ணையில மர நாற்காலிய போட்டு அதுல அம்மாவ உட்கார வச்;சு கால் கட்டை விரல் ரெண்டையும் கட்டுனா. மொகத்துல தாடையோட சேர்த்து ஒரு கட்டு போட்டா. மாட்டுக்கொட்டாயில போயி ஒரு கை சாணிய எடுத்துக்கிட்டு வந்து பொணத்தோட தலைமாட்டுக்கு பின்னாடி செவத்துல வட்டமா அடிச்சு ஒட்ட வச்சா.
அங்கேயிருந்து உள்ள எட்டிப்பார்த்தா. அங்க பழைய டிரங்கு பெட்டி மேல முக்காலிய நிக்க வச்சு அது மேல ஒரு துணிய விரிச்சு வைச்சு, அதுக்கு மேல  போன் இருந்துச்சு.. இப்ப அம்மாவை உக்காத்தி வச்சுருக்க நாற்காலி அந்த போன் பக்கத்துல தான் எப்பவும் இருக்கும் அதுல தான் போன்கெழவி எப்பவும் உட்கார்ந்தே இருக்கும். இனிமே எங்க அம்மாவ பாக்கறது…? துக்கம் குமுறிக்கிட்டு வந்துச்சு தனத்துக்கு.
பத்து வருசத்துக்கு முந்தி அண்ணன் தம்பிங்க பங்குபாவனை பிரிச்சிக்கிட்ட பொறவு போன்கெழவியோட புருசன் தான் எப்டியோ யாரையே புடுச்சி இந்த ஊருக்கு ஒரு போன் கனெக்சன் வாங்கிட்டாரு…
போன்கெழவி பேரு ராசாத்தி. புருசன் வரதராசுக்கு சொந்த அத்தை மக. நாலு ஆம்பள பயலுங்களுக்கு பொறவு கடைசியில பொறந்த ஒத்த பொட்டப்புள்ள.. நெலம், நீச்சுன்னு பெரிய பண்ணைக்குடும்பம் ராசாத்தியோட பொறந்த குடும்பம். ஆயி அப்பனுக்கு மட்டுமில்ல, அண்ணன்களுக்கும் ராசாத்தி ரொம்ப செல்லம். வெதை நெல்லு தெளிக்கறதுலேர்ந்து, வெள்ளாமை பண்டம் வீட்டுக்கு வந்து சேர்ற வரைக்கும் இவ கையால குடுத்தா தான் செல்லுப்படியாவும். அப்டி ஒரு நெனைப்பு அவ வீட்டு சனங்களுக்கு. எல்லாத்துலயும் அவளுக்கு தான் மொதமரியாதை.
ராசாத்திக்கு பதினாலு வயசாயிடுச்சு.. பளபளன்னு சந்தனகாப்பு அம்மன் மாதிரி களையா இருந்தா ராசாத்தி. மாமன் வூட்லேர்ந்து பொண்ணு கேட்டு வந்தாங்க.. பட்டணம் போயி பட்டு சேலை வாங்கியாந்து, காலுல சலங்கை கொலுசும், காதுக்கு தோடு சிமிக்கியும், ரெட்ட வட சங்கிலியும் போட்டு நெறக்க நெறக்க கல்pயாணம் பண்ணி வச்சாங்க பெத்தவங்க..
மாமன் வீட்டுக்கு ஆசையா தான் வந்தா ராசாத்தி. பொல்லாத மழை அந்த வருசம் போக்குக் காட்டிப்புடுச்சு. வெள்ளாமை ஒண்ணும் சொல்லும்படியா இல்ல.. ராசாத்தி காதுல ஆடிக்கிட்டு கெடந்த தோடு சிமிக்கியும், கழுத்து சங்கிலியும், காலு கொலுசும் அடகு கடைக்கு போயிடுச்சு.
“இந்தா புள்ள.. நெல்ல வித்தப் பணம்.. உங்கையில குடுத்து வாங்கிட்டு போவலாமேன்னு வந்தேன்..”
“மாடு கன்னு போட போவுது.. நீ ஒரு எட்டு வந்துட்டு போ புள்ள..”
“மொத நாத்து நட்டு வச்சுட்டு போ புள்ள..” பெத்தவரும், பொறந்தவனுங்களும் அப்பப்ப ராசாத்திய வந்து கூட்டிக்கிட்டு போவாங்க.. ஒவ்வொரு தடவை போயிட்டு வரும்போது கைநெறையா, மடிநெறையா மகளுக்கு கொடுத்தனுப்புவா அவ ஆத்தா. பொறந்த வீட்ல குடுக்கிற மொத மரியாதைய நினைச்சு ரொம்பவும் கவுரதையாவும், பெருமையாவும் இருக்கும் அவளுக்கு.
வாக்கப்பட்டு வந்த இடத்துல வத வதன்னு ஏழு புள்ளங்க. இவ அந்த வீட்டுக்கு நாலாவது மருமவ. மீதி மூணும் பொட்டப்புள்ளங்க. ஏழெட்டு மைல் நடந்து போயி ரெட்டைக் குடம் போட்டு தண்ணியெடுத்துட்டு வருவா பெரிய மருமவ. சமையல் வேலை ஒருத்திக்கு. கழனி வேலைக்கு ஒருத்தி. வீடு வாசல்ல சாணி போட்டு மொழுவீட்டு, பண்டபாத்திரம் வெளக்கி வைக்கற வேலை ராசாத்திக்கு.
மாமன் வீட்ல சமைக்கறதுலேர்ந்து, வெதைக்கறது வரைக்கும் பாத்துக்க பத்து பேரு இருக்கிறதால ராசாத்தி அடிக்கடி பொறந்த வீட்டுக்கு போக வர இருக்கறதுல பிரச்சனைன்னு ஒண்ணும் பெரிசா இருக்கறதில்லை.. ஆனாலும் ராசாத்தி முகம் லட்சணமாவே இல்ல…  ஆணுல ரெண்டும், பொண்ணுல ரெண்டுமா நாலு மக்கள பெத்துப் போட்டா..
நாள் ஓடிக்கிட்டே இருக்கு… ஆத்தா, அப்பனும் ஒவ்வொருத்தரா போயி சேந்துட்டாங்க. அடிக்கடி பொறந்த வூட்டுக்கு போயிக்கிட்டு இருந்த ராசாத்தி இப்ப அங்க போறதையும் நிறுத்துக்கிட்டா. அக்கம்பக்கத்து பொண்டுக கேப்பாளுங்க “ஏன்த்தா… நீ இப்பல்லாம் ஒங்கூரூக்கு போறதில்ல… பொசுக்கு பொசுக்குன்னு வந்துக்கிட்டு கெடப்பானுங்க உன் பொறந்தவனுங்க.. அவனுங்களையும் காணாம்.. நீதான்  போயி ரெண்டு நாளு இருந்துப்புட்டு வர்லாமுல்ல…”
“அப்பன், ஆத்தா இருக்குறவரைக்கும்தான் பொட்டப்புள்ளங்களுங்க மவுசு.. பொறந்தவனுங்களுக்கு தான் ஒவ்வொருத்தி வந்துடுறாளுங்களே சொல்லிக்குடுக்கறதுக்குன்னே…” பட்டுன்னு சொல்லிட்டா.
செல்ஃபோன் அடிச்சுது. “ஏ.. தனம்.. அம்மாளுக்கு பட்டுச்சீல தானே கட்டி வுட்டுருக்க…? பொறந்த வூட்ல ரொம்ப மவுசுல இருந்த பொம்பள அது..” அழுவையும், கண்ணீருமா பேசுனா கலா.
“எல்லாம் கட்டியாச்சு.. நீ பேசிக்கிட்டே கெடக்காம சட்டுபுட்டுன்னு வந்து சேரு… நாங்களே வாவு வழி தெரியாம ஒக்காந்திருக்கோம்…” கண்ணு தண்ணியோட போனை வெச்சா தனம்.
அத்தை, மாமன் செத்தப்பொறவு குடும்பம் கூறு போட்டாப்பல ஆயிடுச்சு.. புள்ளங்களும் வளர்ந்துடுச்சுங்க… ராசாத்தி புருசனுக்கு தனி வீடும், ரெண்டு காணி நெலமுமா பிரிஞ்சுச்சு. அந்த நேரத்துல தான் ராசாத்தி வீட்டுக்கு போன் வந்துச்சு.
சுத்துபத்துல இருக்குற நாலைஞ்சு கிராமத்துக்கும் இந்த போன் தான் சேதி சொல்லிக்கிட்டு  இருந்துச்சு.  எல்லா வீட்டு நல்லது, கெட்டதும் தன்னைக் கேட்டுக்கிட்டு தான் நடக்கிற மாதிரி இருந்துச்சு ராசாத்திக்கு.. கண்ணாலத்துக்கு முன்னாடி இருந்த ராசாத்தி திரும்பி வந்துட்டாப்பல இருந்துச்சு.. முகத்தில களை வந்துடுச்சு.
திடீர்னு ஒரு நாளு நெஞ்ச புடிச்சிக்கிட்டு வுழுந்த ராசாத்தி புருசன் பிற்பாடு எழுந்திரிக்கவேயில்ல. புருசனும் போன பொறவு ராசாத்தி போன் பக்கத்துலயே உட்கார்ந்துக்கிட்டா. அதுனாலயே அவளை போன்கெழவின்னு சில்லுண்டிபசங்க கூப்புட ஆரம்பிச்சுடுச்சுங்க… ராசாத்திங்கிற அவளோட பேரு இப்ப அவளுக்கே மறந்து போயிடுச்சு.. போன்கெழவிங்கிறதே பேர் ஆகிப்போச்சு. ஃபோன் வரும்போது ராசாத்தி கொல்லப்பக்கம் போயிருந்தா கூட, யாரும் போனை எடுக்கறதில்ல. பேரப்புள்ளங்க கூட ‘அப்பாயி.. போன் வந்துருக்கு’ன்னு ஒத்தை குரலோடு வெளிய ஓடிடுங்க..
“யாரு காத்தாயி மக பேசுறியா… செத்த நேரம் கழிச்சு பேசுடீ.. உங்காயி கிட்ட தகவல் சொல்லியனுப்பறேன்..”
பேரனையோ, பேத்தியையோ போன் வந்த சேதி சொல்லி வர அனுப்பி வுடுவா. கொடுக்கிற காசுல நாலணா அதுங்களுக்கு கமிசனும்; கொடுத்துடுவா.
மறுபடி போன் அடிச்சுது.. காத்தாயி பேசுனா… “ஆனைய கட்டி அனுப்புனாலும், உன் வீட்டு சனத்துக்கு ஆசை அடங்காதுடீ.. சரி நீ மூக்க சிந்தாதே… உங்கப்பன்கிட்ட சொல்றேன்…” போனை வச்சுப்புட்டு அங்கயே உட்கார்ந்தா காத்தாயி..
“பாரு அத்தாச்சி அநியாயத்தை… போன வாரம் தான் நடவுக்கு காசு பத்தல.. போய் வாங்கீட்டு வாடீன்னு எம்மவளை அனுப்பி வுட்டா அவ அத்தைக்காரி… இப்ப என்னடான்னா அந்த காசு தோதுப்படாது.. மேக்கொண்டு நகைய வாங்கிட்டு வா.. அடகு வச்சுட்டு, நெல்லு வித்தப்பொறவு மீட்டு குடுத்துடலாம்னு இவக்கிட்ட சொல்லி வுடறா..”
“பொண்ண பெத்தவங்க நாயம் பேச முடியுமாடீ..? நம்ப புள்ள அடுத்தவன் வீட்ல பேச்சுக் கேட்டுக்கிட்டு கெடந்தா நல்லவாயிருக்கு..? கொடுத்துனுப்பு.. வேறென்ன செய்றது…?”
“ஆமா… அத்தாச்சி.. அதான் அவ அப்பன்கிட்ட சொல்லிட்டு, இந்த ரெட்டைவடச் செயினை அவுத்துக்குடுக்கலாம்னு பாக்றேன்…”
அதுக்குள்ள அடுத்த .ஃபோன். “செலம்பாயி வீட்டுக்கு போயி அவ அம்மாவ கூட்டிக்கிட்டு வாடா…” பேரனை அனுப்பினாள்.
“செலம்பாயி வீட்டு செனை மாடு, ரொம்ப செரமப்படுதாம்.. நம்ம கோவாலு வைத்தியரை கையோடு கூட்டிக்கிட்டு வரச் சொல்லி ஒன் மவ சொல்ல சொன்னாடீ…” வந்தவக்கிட்ட சேதி சொன்னா கெழவி.
“அய்யய்யோ.. இந்த மாடு நல்லபடியா பெத்து பொளைக்கணுமே… மகமாயி. இல்லாட்டீ எம்மவ பொழப்பே அளிஞ்சு போயிடுமே…” செலம்பத்தோட அம்மா புலம்புச்சு.
“அழுவாதடீ… எல்லாம் நல்லபடியா நடக்கும்.. நீ போனு காசு எட்டணாவ குடுத்துப்புட்டு சீக்கிரம் வைத்தியர கூட்டிக்கிட்டு ஊருக்கு கௌம்பற வளிய பாரு..”
திடீர்னு கும்பல்ல அழுகை சத்தம் பெரிசாச்சு.. முருகேசு குடும்பத்தோட வந்துட்டான்.. அம்மாவுக்கு சீல வாங்கியாந்திருந்தான். அம்மா பொணத்துக்கு மாலை போட்டுட்டு அப்டியே வுளுந்து கும்புட்டான். பழைய நெனைப்பெல்லாம் வந்துடுச்சு அவனுக்கு.
கொஞ்சவருசத்துக்கு முந்தி இந்த ஊர்லேர்ந்து ராணுவத்துக்கு போன எளவட்ட பையன்  ஒருத்தன் எல்லையில நடந்த சண்டையில செத்துட்டான்.. ராணுவத்துக்காரங்க அந்த பையனோட உடம்பை ஒரு ஜீப்ல வைச்சு கொண்டு வந்தாங்க.. பையன் செத்து போன தகவல் சொல்றதுலேர்ந்து, ஊருக்கு வர்றதுக்கு பாதை கேக்கறது வரைக்கும் போனுகெழவி போனுலதான் ராணுவத்துக்காரங்க பேசுனாங்க.. ஊருசனமே போன்கெழவி வீட்டு வாசல்ல கூடிக் கெடந்துச்சுங்க.. அன்னைக்கு வந்த அத்தனை போனுக்கும் கெழவி காசே வாங்கிக்கல…
அந்த பையனோட உடம்பை எடுத்துக்கிட்டு சுடுகாடு போனாங்க. சுடுகாட்ல எல்லா சனமும் கூடிடுச்சுங்க. போனுகெழவிய ஒரு ராணுவக்காரரு கூப்புட்டாரு. அவ செஞ்ச உதவிக்கு நன்றின்னு சொல்லி அவளுக்கு ஒரு சல்யூட் அடிச்சாரு.. போன்கெழவிக்கு உடனே பொறந்த வீட்டு நெனைப்பு வந்துடுச்சு. பிற்பாடு ராணுவத்துக்காரங்க வானத்தை பார்த்து சுட்டாங்க.. ஊரே அந்த பையனை கையெடுத்துக் கும்புட்டுட்டு வழியனுப்பி வச்சாங்க..
“அண்ணி.. சனக்கட்டு வந்து கூடுறதுக்குள்ள, தெருவுல பந்த(ல்) போடணும்.. நான் ஆளு வந்துடுச்சான்னு பாக்றேன்.. செத்த பாத்துக்கங்க…” தனத்துக்கிட்ட சொல்லிட்டு அழகேசு பொண்டாட்டி கண்ணுல வராத தண்ணிய தொடச்சுக்கிட்டு கௌம்புனா.
இப்ப போன்கெழவி உட்கார வச்சுருக்க இடத்துலதான் காமாட்சி வீட்டுக் கண்ணாலம்;;, தங்கம்மா வீட்டு புள்ள பேறு, நாகு வீட்டு சண்டைன்னு எல்லாமே தீர்ப்பாகும். அப்பல்லாம் கெழவி மொகம்; பூரிச்சு போயிருக்கும்
ஒரு கட்டு ஊதுவத்திய ஒண்ணா ஏத்தி பொணத்துக்கிட்ட வச்சா ஒருத்தி. “பெரிய மரக்காவுக்கு மூணு மரக்கா அரிசி போட்டு சோறாக்கிடுக்கா… வயக்காட்லேர்ந்து செல்விய கத்திரிக்காய் எடுத்தாற சொல்லிருக்கேன்… கொழம்பு வச்சி எறக்கிட்டோம்னா, வர்ற சனம் உங்க வீட்டு திண்ணையில குந்திக்கிட்டு திங்கும்ல.. பொணத்த வச்சிக்கிட்டு சோறாக்க முடியாதுன்னாலும், வந்த சனத்தை சும்மாவே குந்த வைக்க முடியுமாக்கும்..?.” தம்பி பொண்டாட்டி பக்கத்து வீட்டுக்காரிக்கிட்ட சொல்லிக்கிட்டுருந்தா.
தாரை தப்பட்டை சத்தத்தோட பெரிய மாலைய எடுத்துக்கிட்டு இருவது முப்பது பேரு லாரில வந்து இறங்குனாங்க. நெல்லு மூட்டை, எண்ணெ சீயக்காய், சீலத்துணி எடுத்துக்கிட்ட வந்த அந்த கும்பல்ல முன்ன ஓடியாந்தா கலா “அய்யோ… என்ன பெத்த தாயி… சொல்லாம கொள்ளாம நின்னது நிக்க போயிட்டீயே… என்னை பெத்த தாயீ… இனிமே யாரை அம்மான்னு கூப்புடுவேன்…?
‘அஞ்சு ஊரு சீரெடுத்து வாக்கப்பட்டு வந்தவளே…                                          அண்ணாந்து பார்க்கும்படி வாழ சொல்லி தந்தவளே..                                        எட்டு ஊரு சனத்துக்கும் சேதி சொல்லி வந்தவளே…                                                   சேதி ஒண்ணும் சொல்லாம காடு போயி சேர்ந்துட்டீயே… ஊம்ம்;ம்..ஹம்ம்.’… நீட்டி முழங்கியது பெரிய மக கலாவோட ஒப்பாரி..
அவளோட தனமும் சேர்ந்துக்கிட்டா..
‘போனு பெல்லு சத்தம் கேட்டா ஓடி வந்து நிப்பீயே…                                     போன வந்த சேதியெல்லாம் அலுக்காம கேப்பீயே…                                       மக்க மனசு நோவாம பக்குவமா சொல்லுவீயே…                                             மாலை போட்டு நீ கெடக்க.. தாங்கலையே எம்மனசு… ஊம்ம்;ம்..ஹம்ம்..”
இப்டி தான் ரெண்டு வருசத்துக்கு முந்தி பக்கத்து ஊரு பஞ்சாயத்து திடீர்னு செத்து போனாரு… ஊரு சனமே கௌம்பிக்கிட்டு கெடந்தாங்க.. போன்கெழவி அந்த மரநாற்காலில உக்காந்துக்கிட்ட அடுப்படிய பாத்து கேட்டா… “என்னாடீ பூங்கோதை… ஊரு சனமெல்லாம் எங்கயோ பொறப்புட்டு போவுதுங்க…”
“உனக்கு தெரியாதாத்தே…? பக்கத்தூரு பெரிய பஞ்சாயத்து மண்டைய போட்டுட்டாராம்… அதான் சனங்க எளவு தண்ட போவுதுங்க..”
“போன் ஒண்ணும் வரலையேடீ… நானும் இங்ஙன தானே உக்காந்திருக்கேன்… சாவு சேதிய ஆளுங்க கைல சொல்லி வுட்டாங்களாக்கும்…”
“நீ என்ன வௌரம் கெட்டத்தனமா பேசுற… இப்பல்லாம் எளவு சேதி சொல்ல ஆள எங்க அனுப்புறாக..? அதான் ஆளாளுக்கு ஒரு செல்போனு வச்சுருக்காங்கள்ல்ல… அதுல பேசியிருப்பானுங்க… சரி… சோறாக்கி வச்சுருக்கேன்.. நீ போட்டு தின்னு… நானும் ஒரு எட்டு போயிட்டு வந்துடறேன்…” மருமவ கௌம்பி போனா.
போன்கெழவி ரொம்ப நேரம் போனையே பாத்துக்கிட்டு உக்காந்திருந்தா…
இப்பவும் அதே மாதிரி தான் உட்கார வச்சுருக்காங்க… அப்பதான் பட்டணத்துக்கு கண்ணாலம் கட்டிக்கிட்டு போனா செண்பகம் ஓடியாந்தா.. போன வருசம் தான் கல்யாணம் ஆச்சு அவளுக்கு.. பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு வந்துருக்கா…
“அய்யோ.. பாட்டீ… ஆம்பளை புள்ளய பெத்துக்குடுடீன்னு கேட்டீயே… கடசீல எம்புள்ளய கையில வாங்காமயே போயி சேந்துட்டீயே….” செண்பகம் பெரியகுரல்ல அழுதா.
போன வருசம் இந்த செண்பகத்தை பொண்ணு பாக்க மாப்ளை வீட்டு சனங்க வந்துருந்தாங்க.. போன்கெழவி பாத்துக்கிட்டே உட்கார்ந்திருந்தா. “ஏன்டா அழகேசு.. பாத்தா பட்டணத்துகாரங்களாட்டம் இருக்குதுங்க… யாரு வூட்டுக்கு போவுதுங்க இந்த சனங்க..?”
“நம்ப ராணி மக செம்பவத்தை பொண்ணு கேட்டு வந்துருக்காங்க…”
“இப்டி சொல்லாம கொள்ளாம போனா அதுங்க என்னா பண்ணுங்க…? கலரு கிலரு வாங்கி வைக்க வேணாமா..?.”
“எம்மா… அதுங்கள்ளாம் போன் பண்ணி சொல்லிட்டு தான் வந்துருக்காங்க… நேத்து அவங்கப்பன் மருதை மாப்ளை வீட்டு சனங்க வர்றதா எங்கிட்ட சொன்னானே..”
“போன் தகவல் ஒண்ணும் வரலயேடா…”
“உன் போனு மட்டும் தான் உலகத்துலயே ஃபோனாக்கும்.. அவவன் கையில செல்போன் வச்சிக்கிட்டு திரியிறான்.. நீ வேறம்மா…”
வர வர ஊருக்குள்ள போக்குவரத்தை குறைச்சுக்கிட்டா போன்கெழவி. உடம்பும் சரியா இருக்கறதுல்ல.. மொகத்துல சாவு களை வந்தது மாதிரி இருந்துச்சு.
“அம்மா நல்லா தானே இருந்துச்சு.. எப்படி திடுப்புனு செத்துப் போச்சு…?” தனத்துக்கிட்ட கலா கேட்டா.
“முந்தாநாளு காலையில கோளிகொழம்ப ஊத்தி எடுத்துக்கிட்டு அம்மாவ பார்த்துட்டு போனேன்.. நல்லா தான் இருந்துச்சு.. திடீர்ன்னு என்னாச்சுன்னு தெரியலக்கா.. ஆனா ரெண்டு வருசமாவே அம்மா சொணக்கமா தானே இருந்துச்சு… நான் கூட அப்பப்ப உடம்புக்கு ஏதாவது பண்ணுதாம்மான்னு கேப்பேன்.. எனக்கென்னடீ கேடு..? நல்லாத்தேன் இருக்கேன் கல்லுக்குண்டாட்டம் பூமிக்கு பாரமான்;;னு சொல்லும்…”
நேத்திக்கு இந்நேரமா வீட்டுக்குள்ள சமையல் வேலை ஜரூரா நடந்துக்கிட்டு இருந்துச்சு. “போன வாரம் தானே அமாவாசை வந்துச்சு.. இன்னிக்கு என்ன விருந்து சோறாக்குறப்புறாப்புல இருக்கு…?” கண்ணை இடுக்கிகிட்டு மருமவக்;கிட்ட கேட்டா போன்கெழவி.
“நெலத்தை அளக்கறதுக்கு சர்வேயரு வர்றாராம்.. மதியானம் நம்ம வீட்ல தான் அவருக்கு சாப்பாடு…”
“எந்த நெலத்த அளக்க போறாங்களாம்…?”
“அதான் அப்பாயி… போன வாரம் அப்பா புதுசா வாங்குச்சுல்ல வெள்ளாமை காடு.. அதைதான் அளக்க வர்றாங்களாம்…” சின்ன பேரன் சொன்னான்.
“எப்ப வாங்குனான்…?” ஆத்தாமையா கேட்டுச்சு கெழவி.
“அப்பாவ பத்திரம் பதிய வரச்சொல்லி புரோக்கர் போன வாரம் பொதன்கெழமை போன் பண்ணினாருல்ல…”
“நான் தான் போன் பக்கத்துலயே குந்திக்கிட்டு கெடக்கேன்… எப்ப தகவல் சொன்னாங்க..?”
“மவன் புதுசா நெலம் வாங்கியிருக்கானேன்னு உனக்கு சந்தோசம் இல்ல… உன் போனுக்கு கூப்பிடலேங்கறதுதான் வெசனமாக்கும்…” மருமக நொடிச்சுக்கிட்டா.
மறுநாளு காலைல தான் போன்கெழவி செத்துப்போச்சு.
——————-

Series Navigation
author

கலைச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *