குப்பு

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

 

காசுக்கடை மீன்மார்க்கெட்டுக்குப் பக்கத்தில் குப்பு காத்துக் கொண்டிருப்பதாக ஏழுமலைக்கு தகவல் வந்தது.   ரொட்டிக்கடைக்கு தேவையான மாவு மூட்டையை சைக்கிள் கேரியரில் வைத்துத் தள்ளiக்கொண்டு வந்தபோது சிக்னலுக்குப் பக்கத்தில் குப்புவே பார்த்து கைதட்டி கூப்பிட்டு நிறுத்தி விஷயத்தைச் சொல்லியனுப்பியதாக தெரிவித்துவிட்டுப் போனான் முத்துராஜா. அன்று இரவு கோயம்பத்தூருக்கு லோடு ஏற்றிக்கொண்டு கிளம்பவேண்டிய லாரிக்கு கிரீஸ் போட்டு ப்ரேக் சரிபார்த்துக்கொள்வதற்காக பட்டறையில் நின்றிருந்தவன் “இது ஒரு எழவு நேரம் கெட்ட நேரத்துல..” என்று சலித்துக்கொண்டான். இரும்புச்சட்டியில் ஸ்பேர் பார்ட்ஸ்களை கழுவிக்கொண்டிருந்த நாகராஜன் அடங்கிய குரலில் “ஊரூரா சேந்துசேந்து சுத்தும்போதும் ரூம் போட்டு தங்கும்போதும் எழவுன்னு தெரியல போல. வயித்துல தங்கிட்டதும்தான் புரிஞ்சிகிட்டாரு போல பொறுக்கி தொர..” என்று முணுமுணுத்தான்.  “நமக்கென்ன உட்டுத்தள்ளு மச்சான். தகிரியமும் ரத்தத்துல சூடும் இருக்கறவன் எங்க வேணுமினாலும் ஏறி எங்க வேணுமினாலும் எறங்கிட்டு வருவான். நம்மமாரி தொட நடுங்கறவனுங்க பெராக்கு பாத்துனு நிக்கவேண்டிதுதான்…” என்று தலையை சிலுப்பிக்கொண்டே சிரித்தார் தொப்பை சிதம்பரம் மாமா. “ஆள உட்டு அனுப்பனதுமே போயி நிக்க என்ன அவுங்கூட்டு வேலக்காரன்னு நெனச்சிட்டாளா, இருக்கட்டும் வச்சிக்கறேன் இன்னிக்கு..” என்று சிடுசிடுத்துக்கொண்டே பட்டறையைவிட்டு சைக்கிளiல் கிளம்பினான் மாதவன்.

நெல்லித்தோப்பு தெருமுனையிலிருந்து பத்து நிமிஷ தூரத்தில்தான் இருந்தது மீன்மார்க்கெட்.  சைக்கிளை ஓரமாக நிறுத்தி பூட்டிவிட்டு மார்க்கெட்டை சுற்றிக்கொண்டு வந்தான் ஏழுமலை.  மூங்கில் கூடைகளில் புத்தம்புதுசாக வந்து இறங்கிய கடல்மீன்களோடு வியாபாரப் பெண்கள் அப்போதுதான் ரிக்ஷாவிலிருந்து இறங்கி மார்க்கெட்டுக்குள் போய்க்கொண்டிருந்தார்கள். பெரிய மண்டபம்போன்ற கூடத்துக்குள் சின்னச்சின்ன சிமெண்ட் மேடைகளில் மீன்கள் குவியலாகக் கிடந்தன.  ஈரச்சாக்குகளின்மீதும் மரத்தடுப்புகள்மீதும் வேகவேகமாக கூறு பிரித்துப் பரப்பப்பட்ட மீன்களை வாங்குவதில் போட்டி இருந்தது. மண்டபத்துக்கு வெளியே சின்னச்சின்ன கூடைகளின்மீது குறுக்குவாட்டத்தில் செவ்வகமான பலகையை வைத்து, அதன்மீது மீன்களை பரப்பிவைத்து விலைசொல்லிக் கொண்டிருந்தார்கள் சில பெண்கள். சின்ன மிளகுபோன்ற விழிகள் நிலைகுத்தியிருக்க உயிரிழந்த மீன்களின் செதில்கள் வெயிலில்பட்டு மின்னலடித்தது. அந்தக் கடைக்கு அருகே ஒரு விளக்குத் தூணுக்குப் பக்கத்தில் நின்றிருந்தாள் குப்பு.

“என்ன குப்பு, ஏதோ அவசரம்னு சொன்னியாமே? ஆளு வந்து சொன்னதுமே ஒன்னுமே புரியலை. எல்லா வேலயயும் போட்டது போட்டபடி ஓடியாந்தன்…” என்று குழைந்தபடி குப்புவை நெருங்கினான் ஏழுமலை. அவனைப் பார்த்ததும் அவள் நெஞ்சில் ஒருகணம் தன்னை மீறி மகிழ்ச்சி பொங்கினாலும் அதை காட்டிக்கொள்ளாமல் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டாள்.

“நான் சொல்லியனுப்பனாதான் இப்பல்லாம் வந்து பாக்கற. இல்லன்னா இருக்காளா செத்தாளான்னுகூட வந்து பாக்கறதில்ல. உண்மயிலயே என் மேல ஆச உள்ள ஆளா நீ? ஒன் நெஞ்சில கைய வச்சி சொல்லு ..”

அவன் சிரித்துக்கொண்டே கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தபடி குப்பு.. நான் நெனைச்சா நீ வந்து நிக்கற. நீ நெனச்சா நான் வந்து நிக்கறன். அவ்வளோ ஒத்தும நமக்குள்ள. நம்ம ஆசமேல நமக்கே சந்தேகம் வரலாமா? என்றான். நெஞ்சில் கைவைத்துக்கொண்டு அவளைப் பார்த்து சிரித்தான்.  அவளுடைய பொன்னிறமான கன்னத்தின் பக்கம் காற்றில் பறந்து படிந்த முடிக்கற்றைகளை காதுமடலின் பக்கமாக ஒதுக்கிவிட்டான். “புள்ளதாச்சி பொண்ணு இப்படி வெயில்ல நின்னா ஒடம்புக்கு என்ன ஆவும் சொல்லு. வா அந்தப் பக்கம்..”  என்றபடி எதிர்ப்பக்கமாக அழைத்துச் சென்றான்.

தெருவின் இரண்டு பக்கங்களையும் அணைத்தபடி உயரமாக வளர்ந்திருந்த ஒரு தூங்குமூஞ்சி மரத்திலிருந்து பிரிந்து நீண்ட தாழ்வான ஒரு கிளை வெட்டப்படுவதை ஒரு கூட்டமே கும்பலாக நின்று வேடிக்கை பார்த்தது. குப்பு ஒருநிமிடம் தயங்கி அந்த இடத்தில் நின்றாள். “தலமேல சாஞ்சிடப்போவுது குப்பு, இன்னும் தள்ளிப் போவலாம் என்றான் ஏழுமலை. உழுந்தா நல்லதுதான் உடு. பட்டுனு உயிரு பிரிஞ்சிட்டா எல்லாத்துக்கும் நிம்மதி..” என்று குமுறலோடு சொன்னாள் குப்பு. கட்டுப்பாட்டைமீறி அவள் கண்களில் கண்ணீர்த்துளிகள் திரண்டன.

“என்ன நடந்திருச்சின்னு இப்பிடி மனசு கசப்பா தளந்து பேசற? ..”

“இன்னும் என்ன நடக்கணும் சொல்லு. மூச்சுக்கு முன்னூறு தரம்  குப்புகுப்புன்னு கூட்டுகினு கெடந்த ஆளா நீ? இப்ப ஒன்ன புடிக்க ஆளுமேல ஆளு அனுப்பவேண்டிதா இருக்குது..”

குப்புவை ஒரு முறை அமைதியாகப் பார்த்தான் ஏழுமலை. “நாளைக்கி எந்த ஊருல இருப்பம்ன்னு தெரியாம லாரி லோடோட சுத்தினு இருக்கற ஆளு நானு. ஒடனே பாக்கணும்ன்னா முடியற வேலயா, நீயே யோசிச்சி சொல்லு. சரிசரி, அதெல்லாம் உடு. கல்லுமாரி உன்முன்னால இப்ப நிக்கறனே, போதுமா?” ச்¢ரித்துக்கொண்டே அவள் தோளைத் தொட்டான். அருகில் இருக்கிற கடைப்பக்கமாக நடந்து சர்பத் குடிக்கறியா குப்பு என்று ஆசையாக அவளைப் பார்த்துக் கேட்டான்

“அதெல்லாம் எதுவும் வேணாம்யா. பேசாம ஒரு பாட்டில் விஷத்த வாங்கி குடு. குடிச்சிட்டு ஒரேயடியா மேல போயி சேந்துடறேன். ஒனக்கும் நிம்மதி. எனக்கும் நிம்மதி..” அவள் வெடுக்கென்று சொன்னாள்.

“கர்ப்பமா இருக்கற நேரத்துல இப்படி கோவப்பட்டா ஒடம்புக்கு ஒத்துக்குமா, இந்தா பேசாம குடி.” அருகில் இருந்த கடையிலிருந்து சர்பத் வாங்கி அவளிடம் நீட்டினான். தம்ளரை வாங்கி கையில் வைத்துக்கொண்டாள் குப்பு. “குடி குப்பு..” கனிவுடன் புன்னகைத்தபடி அவளைப் பார்த்து மறுபடியும் சொன்னான்.

“குடிக்கலாம், குடிக்கலாம், அதுக்கென்ன இப்ப கேடு? குபுகுபுன்னு எரியற வயித்த எத்த ஊத்தி எப்பிடி அவிக்கறதுன்னு கெடந்து லோல்படறதபத்தி ரவயாச்சிம் ஒனக்கு அக்கற இருக்குதா சொல்லு.”

“மொதல்ல, இந்தமாரி வெடுக்குவெடுக்குனு பேசறத நிறுத்து. அதுக்கப்புறமா எல்லாம் தானா அடங்கும் பாரு..” என்றான் ஏழுமலை.

“எப்பிடிய்யா கவலப்படாம இருக்கமுடியும்? வயித்துல புள்ள நின்னுட்டதுமே சொன்னனா இல்லயா, எங்கயாவது கோயில்ல கீயில்ல வச்சி ஒரு தாலிய கட்டுன்னு. அந்த ரூமுக்கு வா இந்த ரூமுக்கு வான்னு அங்கங்க கூப்ட்டுகினு போனியே தவர ஒரு தடவயாச்சிம் நான் சொல்றத கேட்டியா? கண்ணு தெரியாத ஆத்தாகாரிய எத்தன நாளு ஏமாத்தமுடியும் சொல்லு. ஒரு மாசம், ரெண்டு மாசம்னு போயி இப்ப நாலு மாசாமாய்டுச்சி. சனியன இப்ப கலைக்ககூட முடியாது. ஊருக்கு போயி ஒன் அம்மாகிட்ட பேசிட்டு வரேன்னு சொன்னியே, என்ன சொன்னாங்க? அதப்பத்தி ஒருவார்த்தயாவது வந்து சொன்னியா?”

“என்னத்த சொல்றது குப்பு? நீ சொன்னா தாங்கமாட்டன்னுதான் ஒங்கிட்ட சொல்லலை. நீ என்னடான்னா அதயே நோண்டிநோண்டி கேக்கற? காலம் மாறிகிட்டே போவுதுங்கற விஷயமே இந்த வயசான ஆளுங்களுக்கு  புரியமாட்டுது குப்பு. நூறு வருஷத்துக்கு மின்னால நடந்தமாரியே இப்பவும் நடக்கணும்ன்னு நெனச்சிகினு கெடக்குது. நம்ம வகையறாவுலயே அத்த பொண்ணு மாமா பொண்ணுன்னுதான்டா கட்டற பழக்கம்னு ஒத்தக் கால்ல நிக்குது. கல்யாணப் பேச்சுன்னு சொன்னாவே  போதும், ஒடனே மாமன்காரன போயி பாக்கலாம்னு சொல்லுது. நாம என்ன சொல்றம், ஏது சொல்றம்னு கூட காது குடுத்து கேக்க மாட்டுது. நாப்பது பவுனு நகைங்க, வண்டி, அலமாரி, கட்டிலுன்னு மாமன்காரன்கிட்ட என்னென்ன கேக்கணும்னு பட்டியல் போட ஆரம்பிச்சிடுது..”

“அப்ப சொல்லவே இல்லயா?”

“சொல்லாம இருப்பனா? சொன்னன் சொன்னன். அதத்தொட்டு இதத்தொட்டு ஊருகத உலகத்து கதயெல்லாம் பேசிட்டு கடசியா சொன்னன். சொந்தத்துல பொண்ணு கட்டிகிறதுலாம் அந்த காலத்துப் பழக்கம். இப்பல்லாம் ஆம்பளைங்களும் பொம்பளைங்களும் ஒருத்தவங்கள ஒருத்தவங்க பாத்து பேசி இஷ்டப்பட்டுதான் கல்யாணம் பண்ணிக்கறாங்க. சினிமா, நாடகம்லாம் பாக்கறயே, இதயெல்லாம் பாத்து தெரிஞ்சிக்க மாட்டியா? சொந்தம்ங்கறதுக்காக இஷ்டமில்லாம கட்டிகினு வந்து காலம்பூரா கண்ண கசக்கினு நிக்கறமாரி ஆயிட்டா, ரெண்டு பேருக்குமே அந்த வாழ்க்க தீராத இம்ச. எனக்கும்fகூட யாராவது ஒரு பொண்ண பாத்து பேசி இஷ்டப்பட்டுதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுதுன்னு பேச்சோட பேச்சா அப்படியே சுத்திவளச்சி சொன்னன்..”

“அதுக்கு என்ன சொன்னாங்க?”

“சொல்லிமுடிக்கறதுக்குள்ள பத்ரகாளியாயி மொளிமொளினு புடிச்சிக்கிச்சி. வண்டி ஓட்டக் கத்துகினு ஊரு ஒலகத்த சுத்தறம்ங்கற தகிரியத்துல எவள வேணுமினா இஷ்டப்பட்டு இட்டாந்து குடும்பம் நடத்திரலாம்னு நெனச்சினுருந்தா, அந்த நெனப்பயே அறுத்துரு தம்பி. நாறடிச்சி, காரி முய்ய வச்சிருவன்னு லபோலபோன்னு ஒரே சத்தம். அப்பிடி பூடுவ, இப்பிடி பூடுவன்னு எனக்கே சாவன குடுக்குது. அப்பறம் ஒரு பேச்சுக்கு சொன்னம்மா, அப்படிம்மா, இப்பிடிம்மான்னு அதயும் இதயும் சொல்லித்தான் அடங்கவச்சன்..”

“அப்படின்னா கல்யாண விஷயத்த பத்தி பேசவே இல்லயா? ”

“பேசிட்டுதாம்மா இருக்கறன். அவுங்கள்ளாம் கிராமத்துலயே பொறந்து வளந்த ஜனங்க பாத்துக்கோ, டவுனு பழக்கமே சுத்தமா கெடையாது. இருவது நுப்பது மைலு தூரத்துலதான இருக்கறாங்க, இன்னும் அவுங்க பாண்டிச்சேரியயே பாத்ததில்ல தெரிமா ஒனக்கு? ஆதிகாலத்து ஜென்மமாவே இன்னும் இருக்காங்க. திடுதிப்புனு ஒரு விஷயத்த சொல்லி ஏத்துக்க வைக்க முடியுமா, யோசிச்சி பாரு. என்னடா செய்யலாம்னு யோசிச்சிதான் நேரா மாமன்காரன்கிட்டயே போயி விஷயத்த பட்டும்படாம சொன்னன். கேட்டதுமே கொஞ்சம் ஏமாந்துட்டாரு. ஆனாலும் சுதாரிச்சிகினு பரவாயில்ல மாப்பள, நான் ஒங்களுக்கு ஒத்தாச செய்யறேன்னு சொன்னாரு. நேரம் காலம் பாத்து பக்குவமா அம்மாகாரிகிட்ட பேசறன்னு சொல்லிருக்காரு. என்ன இருந்தாலும் அவருக்கு தங்கச்சிதான? கண்டிப்பா சொல்லிடுவாரு..”

“அவரு என்னைக்கி சொல்லி, என்னைக்கிய்யா கல்யாணம் நடக்கறது. அதுக்குள்ள வயித்துப் புள்ள பூமிய பாத்துரும்போல. கழுத்துல தாலி இல்லாம புள்ளய பெத்துகினா பாக்கறவங்க கேவலமா பேசமாட்டாங்களா? அதப்பத்தி என்னைக்காவது யோசன பண்ணிருக்கியா நீ? பேசாம, நீ ஒரு மஞ்சக்கயற வாங்கி    கோயில்ல வச்சி மொதல்ல கழுத்துல கட்டு. ஊருஉலகம் பாக்கற கல்யாணம்லாம் அப்பறமா வச்சிக்கலாம்.”

“கண்ணக் கசக்காத குப்பு.  வெண்ண தெரளும்போது பான ஒடஞ்ச கதயாய்டக்கூடாது. நல்ல கல்யாணமே சீக்கரம் நடந்துரும்னு சொல்லும்போது திருட்டுக்கல்யாணம் எதுக்கு குப்பு? அத கொஞ்சம் யோசிக்கமாட்டியா?”

“அத யோசி, இத யோசின்னு எனக்கு சொல்லிக்குடுக்கறியே தவர என் வயித்துல ஒரு புள்ளய குடுத்திருக்கியே, என்னைக்காவது அதப்பத்தி யோசிச்சி பாத்திருக்கியா? ”

“யோசிக்காம எப்படி குப்பு இருக்கமுடியும்? ஆத்தரத்துல எதஎதயோ பேசற? போனதரம் இதே எடத்துல, இதே மார்க்கட்டுல பாக்கும்போது இதப்பத்திதான பேசிட்டிருந்தம்? சாப்பாடே புடிக்கலை, வாந்திவாந்தியா வருதுன்னு சொன்ன சமயத்துல, தெனம் ரெண்டு ஆட்டுக்காலோ, கால் கிலோ ஈரலோ வாங்கி சூப் வச்சி குடின்னு சொன்னனா, இல்லயா? ஒன்மேலயோ புள்ளமேலயோ அக்கற இல்லன்னா சொல்வனா? கொஞ்சம் நெனச்சிப் பாரு..”

“அதெல்லாம் வக்கணயா பேசுவயே.  பேசிபேசியே ஆள கவுக்கறதுல ஒன்ன மிஞ்ச யாருமே கெடையாது. ”

“எதுக்கு குப்பு சிடுசிடுன்னு பேசற? மிந்திலாம் சிரிச்சிசிரிச்சி பேசுவியே. இப்ப ஏன் திடீர்னு மாறிபோயிட்ட? உஷ்டேரியில ஒரு தரம் போட்டிங் போனமே நெனப்பிருக்குதா? அன்னிக்கு பூரா சிரிச்சிகிட்டே இருந்த. பெரிய போட்டுல, கும்பலோட கும்பலா உக்காந்து சுத்திவந்தம். காலாலயே பெடல மிதிச்சிகினு போவற போட்டுல ரெண்டு பேரும் தனியா போவணும்ன்னு ஒனக்கு ஆச. ஒன் ஆசைக்காக ஒரு போட்ட எடுத்துகினு நாம மட்டும் போனம். அரமணிநேரம் ஒரு மணிநேரம் திரிஞ்சிங்கூட ஒனக்கு ஆச அடங்கல. ரெண்டுமணி நேரம் சுத்திட்டுதான் கரைக்கு வந்தம். கரையில சுடச்சுட மீன்பஜ்ஜி வித்திட்டிருந்தாங்க. ஆளுக்கு ஒரு தட்டுல வாங்கினு ஒரு தென்ன மரத்தடியில நின்னு பேசிகினே தின்னமே, ஒனக்கு நெனப்பிருக்குதா? அன்னிக்கு ராத்திரி கே.பி.என். ஆபீஸ் பக்கத்துல ரூம் போட்டு தங்கனம்..”

“பரவாயில்ல, பழசயெல்லாம் மறக்காம ஞாபகத்துல வச்சிருக்கயே?”

“அதயெல்லாம் எப்பிடி  குப்பு மறக்கமுடியும்? ஒன்னொன்னும் கல்வெட்டு கணக்கா நெஞ்சில பதிஞ்சி கெடக்குது. ஒன்கூட சிரிச்சி பழகி சந்தோஷமா இருந்ததுக்கு அப்பறமாதான் குடும்பத்து வாழ்க்கைமேலயே ஒரு புடிப்பு வந்திச்சி. அதுக்கு முன்னாலலாம் யாரயும் பெரிசா மதிக்கமாட்டன். யாரயும் மனசுக்குள்ள நெனச்சிக்கவும் மாட்டன். நீ வந்துதான் என மனச மாத்திட்ட.  வாழ்க்கைன்னு ஒன்னு எனக்கு இருந்தா அது ஒன்கூடத்தான் தெரிஞ்சிக்கோ. ஒன்ன இழுத்து படுக்கவச்சிகிட்ட இந்த நெஞ்சிமேல இன்னொருத்திக்கு எடமே கெடயாது. ஒனக்காக நான். எனக்காக நீ. சொல்லிவச்சி செஞ்சமாரியான ஜோடி நாம. எந்தக் கழுத கண்ணு பட்டுதோ, நல்ல நேரத்துல ஒரு கெட்ட நேரம், இப்பிடி ஒரு கர்ப்பத்துல வந்து முடிஞ்சிட்டுது. இல்லன்னா இப்பிடி தெகச்சி நின்னுருப்பமா? மதுர, ஊட்டி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், பெங்களூருன்னு இந்நேரத்துக்கு நூறு ஊருங்க பாத்திருப்பம். நெனைக்கும்போதுலாம் மனசு சங்கடப்படும்.  கல்யாணத்தயாவது சீக்கிரம் பண்ணிடுவம்ன்னு பாத்தா, அதுக்கும் ஆயிரெத்தெட்டு தடங்கல். என் மாமன்காரனத்தான் மலமாரி நம்பியிருக்கேன்…”

“எப்படியாவது சீக்கரமா பேசி முடிச்சிட்டு தாலிய கட்டுய்யா? ஒரு தாலி இல்லாம புள்ளதாச்சியா நிக்கறமாரியான கேவலம் ஒலகத்துலயே கெடையாது புரிஞ்சிக்கோ. எங்க ஆத்தாக்காரி ஒருத்தியே போதும், ஊரு உலகத்துக்கு காட்டிக்குடுத்துருவா. கண்ணுதான் தெரியாதே தவிர, கெழவிக்கு நல்ல அறிவு. இன்னாடி, இன்னும் இந்த மாசக்கணக்கு வரலையான்னு நோண்டி நோண்டி கேட்டுகினே இருக்கும். பதில் சொல்லி மாளாது அதுங்கிட்ட. வயிறு அடங்கி இருக்கறவரைக்கும் தெருக்காரங்க கண்ல மண்ண தூவலாம். எத மறச்சாலும் வயித்த மறைக்கமுடியுமா, சொல்லு. ஒரொருத்தியும் கண்ணாலயே துருவி துருவி பாக்கறதும், தொழவிதொழவி கேழ்வி கேக்கறதும் தாங்க முடியலை. அப்படியே ரயில் முன்னால உழுந்து செத்துரலாம்ன்னு தோணும்..”

“என்னால ரொம்ப கஷ்டம் ஒனக்கு குப்பு..”

“அப்பிடித்தான் ஒரு நாளு ரயிலுக்கு முன்னால உழுந்துருவம்ன்னு மொதலியார்பேட்ட பக்கமா போனன். இந்த ஜென்மமே வேணாம்டி மாரியாத்தான்னு கௌம்பிட்டன். ரயில்வே கேட் ஓரமா ஒரு கல்லுல உக்காந்துகினு ரயில் எப்ப வரும்னு பாத்துகினிருந்தன்…”

“ஐயையோ குப்பு, உண்மையாவா சொல்லற? என்கிட்ட இதுவரிக்கும் சொல்லவே இல்லயே?”

“சாவக் கௌம்பனதே, சொல்றதுக்கு நீ கெடைக்காததாலதான. மனசுல அந்த அளவுக்கு துக்கம். எப்பிடிலாம் வாழணும்னு நெனச்சம், நம்ம கதி இப்பிடியாயிருச்சேன்னு அவமானத்துல ஒடம்பே குன்னிப்போச்சி.  யோசனையில எவ்ளோ நேரம் போச்சின்னே தெரல.  சிக்குபுக்குன்னு ரயில் வர சத்தம் கேட்டு திடுக்குன்னு எழுந்துட்டன். நெஞ்சு வேகவேகமா துடிச்சிது. கிட்ட வந்ததும் உழுந்துரணும்ன்னு கண்ண மூடிக்கினு ரயில் சத்fதத்தயே கவனிச்சிட்டிருந்தன். தண்டவாளாத்துங் குறுக்குல உழப்போற நேரத்துல சுதேசி மில்லுக்காரரு ஒருத்தரு கையபுடிச்சி இழுத்துட்டாரு. திமிறினாகூட உடாம கெட்டியா புடிச்சி வச்சிகிட்டாரு. ..”

“கடவுள்தான் சமயத்துக்கு அந்தப் பக்கமா அவர அனுப்பி வச்சிருக்கணும்..”

“காப்பாத்தன பாவத்துக்கு ஒரு டீ செலவு வேற அவருக்கு. எதுக்காவம்மா எதுக்காவம்மான்னு கேட்டவருகிட்ட மனசு கேக்காம எல்லாத்தயும் சொல்லி அழுதன். தைரியமா இருக்கணும்னு எதஎதயோ சொல்லிட்டு, இந்த வெயில்ல எதுக்கும்மா நடந்து போற, ரிக்ஷாவுல போன்னு கையில ஒரு இருபது ரூவா குடுத்துட்டு போனாரு…”

“நாட்டுல இன்னும் நல்லவங்க இருக்காங்கன்னு சொல்றதுக்கு இதெல்லாம் ஒரு சாட்சி, நீ இல்லாம நான்மட்டும்  உயிரோட இருப்பேன்னு நெனச்சிட்டியா குப்பு அதுக்கு அடுத்த நிமிஷமே தூக்குல தொங்கியிருப்பேன் தெரிஞ்சிக்கோ. நீ இல்லைன்னா எனக்கு வாழ்க்கயே கெடையாது குப்பு. இது கடவுள்மேல சத்தியம். கொஞ்ச நாளு ஊருல இல்லாத சமயத்துல என்னென்னமோ நடந்திடுச்சே.

அதுக்கப்புறம்கூட செத்துரணும்ங்கற நெனப்பு மனசுல ஓடிகினுதான் இருந்திச்சி.  ராத்திரி ஊட்டுல படுத்தா தூக்கமே வராது. மேல உத்தரத்த பாத்தா போதும், இங்கயே தூக்குல தொங்கிட்டா என்னன்னு யோசன வந்துரும். கடல்ல உழுந்து செத்துரணும்ன்னு கௌம்பி கரயோரமா வீராம்பட்டணம்வரிக்கும் ஒருநாளு போயிட்டேன். கரயில நின்னு கடலயே வெறிச்சிவெறிச்சி பாக்கறனே தவுர உள்ள எறங்க பயமா இருந்திச்சி. எந்த அலையாவது இழுத்துகினு போவட்டும்னு மெதுவா உள்ள போயி நின்னு கண்ண மூடிகிட்டன். ஒரு அல வேகமா வந்து இழுத்தும்போச்சி. என் கெட்ட நேரம் இன்னோ அல வந்து கரைக்கே இழுத்தாந்து உட்டுருச்சி…”

“கேக்கவே ஒடம்பு நடுங்குது எனக்கு. சாவறதுக்கு இருக்கற வீரம் வாழறதுல இருக்கக்கூடாதா?.. சரிசரி அதயெல்லாம் உடு. எங்க மாமாமூலமா சீக்கரமாவே ஒரு நல்ல பதில் கெடைக்கும். அதுக்கப்பறம் ஒனக்கும் எனக்கும் நல்ல நேரம்தான்…”

“நானும் வந்து ஒன் மாமாவ பாக்கட்டுமா?”

“பாக்கலாம் பாக்கலாம். நீயும் பாத்து நாலு வார்த்த சொன்னாதான அவருக்கும் நம்பிக்க வரும்?..”.                                                         “நான் பாத்து சொக்கி உழுந்த ரதி எப்பேர்ப்பட்டவன்னு அவருக்கும் தெரியவேணாமா?”

“சொக்கி உழுந்தவர அப்படியே முந்தானையில முடிஞ்சி வச்சிகினு இருக்கறதாலதான் ஆள எங்கனா பாத்தா அனுப்பு அனுப்புன்னு பாக்கறவங்க கிட்டல்லாம் ஒரு மாசமா சொல்லி அனுப்பறனா? என்ன பாத்தா பைத்தியக்காரியாட்டம் தெரியுதில்ல ஒனக்கு?”

“சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா, எதுக்கு இப்பிடி நொந்துக்கற குப்பு? அவருக்கு இன்னும் இந்த புள்ள விஷயம் தெரியாது. அதான் யோசிக்கறன்…”

“தெரியலைன்னா இப்ப தெரிஞ்சிக்கட்டுமே.”

“தெரிஞ்சிக்கறதபத்தி ஒன்னுமில்ல. கொஞ்சம் முன்கோபக்காரரு அவரு. வெடுக்குன்னு ஏதாச்சிம் சொல்லிட்டாருன்னா கஷ்டம்.  அதுக்கப்பறமா நாம நெனச்சது நடக்காமபூடுமோன்னு பயமா இருக்குது.

அதுக்காக என்ன செய்யமுடியும்? புள்ளதாச்சி வயித்த மறைக்கவா முடியும்?..”

“புள்ளய கலச்சிட்டு போயி நின்னாலாவது கன்னிப்பொண்ணுன்னு நெனச்சிக்குவாரு..”

“இனிமேல கன்னிப்பொண்ணா மாறணும்ன்னா நான் இன்னோரு ஜென்மம்தான் எடுக்கணும். வயித்த கழுவி சொமய கொறைச்சிக்க முடியும்ன்னா மொதல்லயே செஞ்சிருக்கமாட்டனா? புதுசா சொல்றமாரி சொல்றியே இன்னிக்கு? தாலிய இன்னிக்கே கட்டிடறவனாட்டம் அன்னைக்கெல்லாம் இதோ இதோன்னு நீதான் நாள இழுத்த. நானும் கணக்கு தெரியாம உட்டதுல நாலு மாசமாய்டுச்சி. சனியன், தானாவும் கலையல. ஆஸ்பத்திரியிலயும் கலைக்கமாட்டன்னுட்டாளுங்க…”

“செரி உடு, ஒரு யோசனயாதான சொன்னன். அதுக்கு ஏன் ஆத்தரம்?” என்று யோசித்தான். பிறகு, “ஓணும்ன்னா இப்பிடி செஞ்சி பாக்கலாம். பொறுத்ததே பொறுத்த, இன்னும் ஒரு ஆறுமாசம் பொறுத்துக்கோ. புள்ளய பெத்துக்கோ. ஆனா, அந்த புள்ள நமக்கு வேணாம். எங்கயாவது தொலச்சிட்டு தனியா வா. மாமாவ பாத்து விஷயத்த சொல்லி கல்யாணத்த முடிச்சிக்கலாம்..”

“என்னய்யா புதுசுபுதுசா சொல்ற? நமக்கு பொறக்கற மொதல் கொழந்தைக்கு இப்படி செய்யலாமா? இதெல்லாம் பாவமில்லயா?..”

“பாவபுண்ணியம் பாத்தா நாம வாழ முடியுமா குப்பு. இந்த கொழந்த போனா என்ன, இன்னொரு கொழந்தய பெத்துக்க நம்மால முடியாதா?”

“அது சரி, பச்சகொழந்தய எங்கய்யா தொலைக்கறது?”

“குப்பத்தொட்டில போடு. ரோட்டோரத்துல துணியோட சுருட்டி வை. பார்க்குல எதாச்சிம் பெஞ்சில கெடத்து. எங்கனா மரத்தடியில போடு. மொத்தத்துல எங்கயாவது தொலச்சிட்டு வா. எல்லாத்தயும் நான் சொல்லிக்குடுக்கணுமா? ”

“இவ்ளோ காலம் அம்மாக்காரி அம்மாக்காரின்னு சொன்ன. இப்ப புதுசா மாமன்காரன்னு சொல்ற? எதுக்கு இப்படி கொழப்பற?”

“கொழப்பம்லாம் இல்ல குப்பு. தெளிவாதான் சொல்றேன். புள்ளய பெத்து எங்கனா போட்டுட்டு, தனியா வா, கல்யாணத்தபத்தி பேசலாம். புள்ளயா கல்யாணமான்னு நீயே முடிவு பண்ணிக்க.”

“ஏதோ காசிபணத்த தொலச்சிட்டுவான்னு சொல்றமாரி புள்ளய தொலைக்கச் சொல்றியே? நீ பேசறது ஒனக்கே அடுக்குமா? காது குடுத்து கேக்கறதுக்கே என் கொல நடுங்குதே, இந்த காரியத்த எப்படிய்யா செய்வன்?” நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பதற்றத்தோடு சொன்னாள்.

“செஞ்சாதான் குப்பு கல்யாணம், இல்லன்னா இல்ல”. அவன் குரல் தீர்மானமாக ஒலித்தது.

“அதுக்கப்பறம் வேற எதயாச்சிம் புதுசா சொல்லி, கதய மாத்திட மாட்டியே?” சந்தேகத்தோடு அவன் முகத்தைப் பார்த்தபடி கேட்டாள்.

“என்மேல ஒனக்கு நம்பிக்க இல்லயா குப்பு? இந்த திட்டம்கூட எனக்காக கெடையாது. யார் முன்னாலயும் ஒன் கௌரவம் கெட்டுடக்கூடாதுன்னுதான் ..”

“செரி..” என்று அரைமனசோடு தலையசைத்தாள் குப்பு. கையிலிருந்த சர்பத்தை மெதுவாக உறிஞ்சிக் குடித்துவிட்டு தம்ளரை வைத்தாள். முக்கால்பங்குக்கும் மேல் வெட்டிய தூங்குமுஞ்சி மரத்தின் கிளையில் கயிறுகட்டி மறுபக்கத்திலிருந்து ஆட்கள் இழுத்து கீழே விழவைத்தார்கள்.  பச்சைமரத்தின் மணம் குப்பென்று வீசியது. குப்புவும் ஏழுமலையும் சர்பத் கடையைவிட்டு விலகி மார்க்கெட் பக்கமாக மறுபடியும் நடந்தார்கள். சிறிது நேரம் கழித்து பையிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினான் ஏழுமலை.

“ரெண்டாயிரம் ரூபா இருக்குது வச்சிக்கோ, ஆஸ்பத்திரி செலவுக்கெல்லாம் தேவயா இருக்கும். கோயம்புத்தூரு பெங்களூருன்னு அலஞ்சிகினு கெடக்கறன். திரும்பி வர ஒரு மாசமாவுமோ ரெண்டு மாசமாவுமோ, எனக்கே தெரியாது. நடுவுல என்ன புடிக்கறது கஷ்டமா இருக்கும்…”

தயக்கத்தோடும் மனபாரத்தோடும் அதை வாங்கி முந்தானையில் முடிந்துகொண்டாள் குப்பு. குழப்பத்தோடு அவன் முகத்தைப் பார்த்தாள்.  “எல்லாம் முடிஞ்சப்பறமா கைஉட்டுடமாட்டியே..?” எதிர்பாராதபடி அவள் கண்கள் தளும்பின.

“எந்த கொழப்பமும் இல்லாம அமைதியா இரு குப்பு. நடக்க வேண்டிய நேரத்துல நடக்கவேண்டிய கல்யாணம் கண்டிப்பா நடக்கும்..”  அவள் தோளில் கைவைத்து தட்டிக்கொடுத்தான். பிறகு சைக்கிள் நிறுத்திவிட்டு வந்த இடத்துக்கு மார்க்கெட்டைச் சுற்றிக்கொண்டு சென்றான். பெருமூச்சோடு வெகுநேரம் மார்க்கெட் பக்கமாகவே நின்றிருந்த குப்பு உள்ளே சென்று ஐம்பது ரூபாய்க்கு மீன் வாங்கிக்கொண்டு நடந்தாள்.

கண்ணில்லாத அவள் அம்மாவுக்கு விஷயம் எப்படியோ அந்த வாரத்திலேயே தெரிந்துவிட்டது. நாக்கைப் பிடுங்கிக்கொள்கிறமாதிரி அசிங்கம்அசிங்கமாக அன்று முழுக்க ஏசிக்கொண்டிருந்தாள். அவள் அடங்கிய பிறகு ஏழுமலையின் திட்டத்தைச் சொன்னாள். அவளுக்கு நம்பிக்கையே இல்லை. திரும்பத்திரும்பச் சொல்லி நம்பவைத்தாள். அவளையே துணைக்கு அழைத்துக்கொண்டு ஒருமுறை பெரிய ஆஸ்பத்திரிக்கு போய்விட்டு வந்தாள்.  தடுப்பூசி போட்டு மருந்து மாத்திரையையெல்லாம் கொடுத்தார்கள். வெறும் கழுத்தைப் பார்த்து கேள்விகேட்ட சிஸ்டர்களிடம் சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி வாய்க்கு வந்த பொய்களைச் சொல்லி சமாளித்தாள். குழந்தையின் இருப்பை வயிற்றுக்குள் திடமாக உணர்ந்த கணங்களில் கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தாள். நாலைந்து முறைகள் சொல்லியனுப்பியும் ஏழுமலையைச் சந்திக்கவே முடியவில்லை. ரொட்டிக்கடைக்குப் போய் நேராக முத்துராஜாவைப் பார்த்து எப்படியாவது தகவலைச் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டாள். ஆனால் அந்த முயற்சிக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. தற்செயலாக உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருக்கிற பெட்ரோல் பங்க்குக்கு அருகே சந்தித்த ஒரு சந்தர்ப்பத்தில் முனியாண்டி விலாஸ்க்கு அழைத்துச் சென்று ஆட்டுக்கால் சூப் வாங்கித்தந்தான்.  பிரியாணியையும் ஈரல் வறுவலையும் தனியாகப் பொட்டலம் கட்டித்தரச் சொல்லி பைக்குள் போட்டுக்கொடுத்தான். இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக உற்சாகத்தோடு பேசிக்கொண்டிருந்த பிறகு கையில் மூவாயிரம் ரூபாய் பணத்தைத் தந்துவிட்டுச் சென்றான். அவளுக்கும் வருத்தம் விலகி சந்தோஷம் வந்தது. வேகவேகமாக மாதங்கள் கடந்ததே தெரியவில்லை. ஆஸ்பத்திரிக்கு மாதாந்திர பரிசோதனைகளுக்கு அம்மாவைத் துணையாக அழைத்துக்கொண்டு ரிக்ஷாவில் போய்வந்தாள். அவள் மனம் முழுக்க நிகழ இருக்கிற தன் கல்யாணத்தைப்பற்றிய எண்ணங்கள்மட்டுமே நிறைந்திருந்தன. குழந்தையை எப்படி தொலைப்பது என்கிற சிந்தனை வரும்போதெல்லாம் அவள் மனம் குழம்பியது. அக்கம்பக்கத்தவர்களின் கிண்டல் பேச்சுகளை அவள் சிறிதுகூட பொருட்படுத்தவில்லை.

பிரசவத்துக்குப் பிறகு அவள் பதற்றம் அதிகமானது. குழந்தையை எப்படி தொலைப்பது என்கிற கேள்விக்கு வழிபுரியாமல் திண்டாடினாள். அவனை அச்சந்தர்ப்பத்தில் பார்ப்பது அவசியம் என்று தோன்றியது அவளுக்கு. யார்யாரிடமோ பல முறை சொல்லியனுப்பியும் அவன் ஆஸ்பத்திரிப்பக்கமாக வரவே இல்லை. அந்த மௌனம் அவள் பதற்றத்தை மேலும் கொஞ்சம் அதிகரிக்கவைத்தது. குழந்தையிடம் அன்பைக் காட்டவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் தடுமாறினாள்.

பதினைந்தாம் நாள் தடுப்பூசி போடுவதற்காக குழந்தையை  தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு தனியாகவே கிளம்பினாள்.  ஊசி போட்ட பிறகு அழுத குழந்தையை அமைதிப்படுத்திவிட்டு, ஓரமாக உட்கார்ந்து பாலருந்தச் செய்த பிறகு, ஒரு முடிவோடு பக்கத்தில் நின்றிருந்த ஒரு பெரியம்மாவிடம் “சித்த நேரம் கொழந்தய புடிச்சிக்குங்கம்மா. தோ ஒண்ணுக்கு போயிட்டு வந்துர்ரன்..” என்று கொடுத்துவிட்டு கழிப்பறையின் பக்கமாகச் சென்றாள். கழிப்பறையிலிருந்து வேறு வழியாக நடந்து சட்டென்று ஆஸ்பத்திரியைவிட்டு வெளியே வந்தாள். ஒரு ஆட்டோவில் உட்கார்ந்து நெல்லித்தோப்பில் இருக்கிற பட்டறைக்குச் சென்றாள். நாலைந்து லாரிகள் நின்றிருந்தன. ஒரு சக்கரம் கழற்றப்பட்ட இடத்தில் எண்ணெய்க்கறை படிந்த அழுக்கு உடைகளுடன் இரண்டுபேர் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள்தான் முதலில் அவளை அடையாளம் கண்டுகொண்டு வேறொரு லாரிக்குள் உட்கார்ந்திருந்த ஏழுமலையிடம் ஓடிப்போய் சொன்னார்கள். சட்டென்ற கீழே இறங்கி, அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தான் ஏழுமலை. அவளுக்குள் மகிழ்ச்சியும் ஆத்திரமும் ஒன்றாகப் பொங்கிவந்தன. கண்கள் கலங்குவதுபோல தளும்பின. “என்ன குப்பு, இவ்ளோ தூரம் வந்திருக்க..?” என்று சிரிப்பு மாறாமல் கேட்டான். கைநீட்டிப் பேசியபோது அவன் விரல்களில் புதிய மோதிரங்கள் மின்னுவதைப் பார்த்தாள். கழுத்தில்கூட பட்டையாக ஒரு தங்கச்சங்கிலி தொங்கிக்கொண்டிருந்தது. ஆள் ரொம்பவும் மினுமினுப்பாக இருந்தான்.

“எப்பிடி வான்னு சொன்னியோ அப்படியே வந்திருக்கேன்யா. ஒங்க மாமாவ பாத்து பேசலாம் வா..” அவனைப் பார்த்து வேகவேகமாக சொன்னாள் குப்பு.

எதுவுமே நினைவில் இல்லாதவனைப்போல அவளை புதுசாகப் பார்க்கிறமாதிரி பார்த்து “எங்க மாமாவயா? எதுக்கு?” என்று சிரிப்பு மாறாமல் கேட்டான்.

“கன்னிப்பொண்ணா வா, கல்யாண விஷயம் பேசலாம்ன்னு நீதான சொன்ன, மறந்துட்டியா?..” அவள் அவசரமாகக் கேட்டாள். ஏதோ நகைச்சுவையைக் கேட்டதுபோல “ஓ, அதுவா?” என்று சிரித்தபடி “சரி வா, அந்தப் பக்கமா போவலாம்..” என்று அருகில் இருந்த வேப்பமரத்தின் பக்கமாக அழைத்துச் சென்றான்.

 

“கன்னியா திரும்பனதுல ரொம்ப சந்தோஷம் குப்பு. இனிமேல ஒனக்கும் பிரச்சன இல்ல, எனக்கும் பிரச்சன இல்ல. நம்ப ரெண்டுபேருக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்ல. எங்க மாமா பொண்ணுக்கும் பாஞ்சிநாளுக்கு மின்னாலதான் கல்யாணம் முடிஞ்சிது. நாப்பது பவுன் நக. ஸ்ப்லென்டர் வண்டி. கட்டிலு, அலமாரி, முப்பதுக்கு நாப்பதுல ஒரு வீட்டுமன. இந்த காலத்துல யாருக்கு அப்பிடி கெடைக்கும் சொல்லு. ஒனக்குன்னு ஒரு மாப்பள எங்கயாவது கண்டிப்பா பொறந்திருப்பான் குப்பு. நீயும் ஒரு நல்ல வாழ்க்கய ஆரம்பிச்சி நல்லபடி நடத்து..” சிரித்துக்கொண்டே சொன்னான். இந்தா என்று அவள் கைக்குள் நாலைந்து ஐந்நூறு ரூபாய்த் தாள்களை மடித்துவைத்துவிட்டு நடந்தான்.

அதிர்ச்சியில் பேசாமல் நின்றாள் குப்பு. அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பக்கத்தில் இருந்த முருகன் துணை  லாரிக்குள் ஏறி ஸ்டார்ட் செய்து திருப்பினான். ஜன்னல் பக்கமாகத் திரும்பி அவளைப் பார்த்து புன்னகைத்து கையசைத்தபடி மறைந்துபோனான். எதையுமே நம்பமுடியாமல் கால்நடுக்கத்துடன் மரத்தோடு சாய்ந்தபடி வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அழுகை பீறிட்டு வெடித்தது.

paavannan@hotmail.com

(2009)

Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்
author

பாவண்ணன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    நண்பர் பாவண்ணனின் ” குப்பு ” மிகவும் பரிதாபத்திற்குரியவள். உடல் இன்பத்ிற்க்காக மட்டுமே ஆண்களால் ஏமாற்றப்படும் ஆயிரமாயிரம் இளம் அப்பாவிப் பெண்களின் ஒரு பிரதிபலிப்பே இக் கதையில் வரும் முக்கிய பாத்திரமான குப்பு.

    பாவம்! ஒவ்வொரு முறையும் அவனிடம் எப்படி ஏமாந்துபோகிறாள் அவள்! அவனும் அப்போதெல்லாம் அவளின் கையில் பணத்தைத் திணித்து அவளை வாயடைக்கச் செய்துவிடுகிறான்.

    அதிக வர்ணனைகள் இல்லாமல் நேரடியாக கதைக்குச் சென்று மிகவும் இயல்பான முறையில் உரையாடல்கள் மூலமாக கதையை நகர்த்திச் செல்கிறார் பாவண்ணன்.

    அவள் தன்னுடைய குழந்தைக்குத் தாய் என்ற நினைப்போ அந்தக் குழந்தைமேல் எந்தவிதமான இரக்கமோ இல்லாமல் அதை எங்காவது வீசிவிடச் சொல்லும் அவனைப்போன்ற கயவர்கள் இன்றும் சமுதாயத்தில் உலவிக்கொண்டுதான் உள்ளனர். பாவம் அந்தக் குழந்தை. இருவரின் காம விளையாட்டால் உருவான வேண்டாத ” பொருளாகிவிட்டது ” அது! அதிர்ச்சியான கதை முடிவு! வாழ்த்துகள்! அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *