குரக்குப் பத்து

This entry is part 3 of 4 in the series 18 நவம்பர் 2018

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குரங்கு பயின்று வருதலால் இப்பகுதி குரக்குப்பத்து என்னும் பெயர் பெற்றது. இப்பாடல்களில் ஆண்குரங்கைக் கடுவன் என்றும், பெண் குரங்கை மந்தி என்றுன் குரங்குக் குட்டியைப் பறழ் அல்லது குட்டி என்றும் கூறப்படிருப்பதைக் காண முடிகிறது.

=====================================================================================

குரக்குப் பத்து—1

அவரை அருந்த மந்தி பகர்வர்

பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்

பசுப்போல் பெண்டிரும் பருகுவன்

தொல்கேள் ஆகலின் நல்குமால் இவட்கே!

[அருந்த=தின்ற; பகர்வர்=வணிகர்; பங்கு=பை தொல்=பழமை; கேள்=நட்பு; தொல்கேள்=பல பிறவிகலிலும் தொடர்ந்த உறவு; நல்கு=அருளும்]

அவன் அவளப் பொண்ணு கேட்டு வந்த போது அவளோட அப்பாவும் அம்மாவும் மறுத்துடறாங்க. அப்ப அவங்க ஒருத்தர் ஒருத்தரை விரும்பிப் பழகுறதைத் தோழி இந்தப் பாட்டுல சொல்றா

”பெண் குரங்குங்க அவரக் காயை நெறயத் தின்னிடுச்சுங்க. அதால அதுங்களொட வயிறெல்லாம் உப்பிப் போயி வியாபாரிங்களோட பை போலப் பெருத்துக் கெடக்குது. அப்படிபட்ட எடத்துல இருக்கறவன் அவன். அவன் நெனச்சா பசுமாதிரி இருக்கற அழகான பொண்ணுங்களைப் பெறுவான். ஆனா அவன் இவளத்தான் பல பிறவியிலயும் விரும்பிப் பழகுற ஒறவை உடையவன். நீங்க கேக்கறதெல்லாம் அவனே தருவான். அதால இவளை அவனுக்குத் தர்றதே சரியாகும்.

அவரக்காய் நெறய வெளயும்ன்றது அவன் நாட்டோட வளத்தைக் குறிக்குது. பொண்ணுங்களைப் பசுப்போலன்னு சொல்றது பசு எப்படிப் புல்லைத் தின்னுட்டுத் தானு வாழ்ந்து தன்னைச் சேந்தவங்களுக்கும் பால் தந்து காப்பாத்துதோ அது போல அந்தப் பொண்ணுங்க இருப்பாங்கன்றது மறைபொருளாம்.

====================================================================================

குரக்குப் பத்து—2

கருவிரல் மந்திக் கல்லா வன்பறழ்

அருவரைத் தீந்தேன் எடுப்பி, அயலது

உருகெழு நெடுஞ்சினைப் பாயும் நாடன்

இரவின் வருதல் அறியான்;

‘வரும்வரும்’ என்ப தோழி! யாயே!

[கல்லா=தன் மரபைக் கற்காத; வன்பறழ்=வலியகுட்டி; வரை=மலை; தீம்=இனிமை; உரு=அச்சம்; நெடுஞ்சினை=நீண்ட கிளை; யாய்=தாய்]

அவள வந்து பாக்கறதுக்குன்னு வந்தவன்  எடம் தெரியாம அவன் போயிடறான். மறு நாளுப் பகல்ல  சரியான எடத்திற்கு வரான். அப்ப கூட இருக்கற தோழி போகணும்னு அவனும் கேக்கற மாதிரி அவ சொல்ற பாட்டு இது.

”தோழி! கருப்பா வெரல் இருக்கற ஆனா தன் இனத்தோட பழக்கமே தெரியாத குரங்குக் குட்டி ஏர்றதுக்கே ரொம்பக் கஷ்டமான மலை உச்சியில இருக்கற தேனைக் குடிக்க நெனச்சு அங்க ஏறித் தேன் கூட்டைக் கலச்சிடுது. அப்ப அந்தக் கூட்ல இருக்கற ஈயெல்லாம் கொட்டுதுங்க. அதுக்குப் பயந்துபோயி அந்தக் குட்டி ஒடனே மரத்தோட உச்சிக்குப் பாஞ்சு போகுது. அப்படிப்பட்ட மலை  இருக்கற நாட்டைச் சேந்தவன் அவன். அவன் ராத்திரியில வர மாட்டான். ஆனா அவன் வருவான் வருவான்னு நம்ம அம்மாதான் சொல்லிக்கிட்டிருக்கா”

குட்டிதான் அவனாகவும், தேன்தான் சந்திச்சுக் கூடற இன்பமாகவும், ஈயெல்லாம் ஒறவுக்காரங்களாகவும், தலைவன் மத்தவங்களுக்குப் பயந்து போயிட்டதாகவும் மறைவுப் பொருள் இருக்குது.

====================================================================================

குரக்குப் பத்து—3

அந்தச் செயலைத் துப்புறழ் ஒண்தளிர்

புந்தலை மந்தி வன்பறழ் ஆரும்

நல்மலை நாட! நீ செலின்

நின்நயந்து உறைவி என்னினும் கலிழ்மே!

[அத்தம்=வழி; செயலை=அசோக மரம்; துப்பு=பவளம்; ஒண்தளிர்=ஒளி பொருந்திய தளிர்; ஆரும்=உண்ணும்; உறைவி=வாழ்கின்ற; கலிழ்ம்=கலங்கும்]

கல்யாணத்துக்கு ஏற்பாடெல்லாம் செய்யறதுக்கு அவன் பிரிஞ்சி போக நெனக்கறான். அத அவன் அவளோடத் தோழிகிட்டச் சொல்லிட்டுப் போக வரான். அப்ப தோழி ஒத்துக்காம மறுக்கறா. ‘நீ ஏன் மறுக்கற’ன்னு அவன் கேக்கறான். அப்ப தோழி சொல்ற பாட்டு இது.

”நீ போற வழியில இருக்கற அசோக மரத்தோட பவளம் போல ஒளி வீசர்ற தளிர மென்மையான தலையை உடைய மந்தியோடக் குட்டி விரும்பித் தின்னும். அப்படிப்பட்ட மலை நாட்டை உடையவனே!  நீ பிரிஞ்சு போனா ஒன்னையே நெனச்சுக்கிட்டிருக்கற அவ என்னை விட ரொம்பவும் கண் கலங்கி அழுவாளே!”

==================================================================================

குரக்குப் பத்து—4

மந்திக் கணவன் கல்லாக் கடுவன்

ஒண்கேழ் வயப்புலி குழுமலின் விரைந்து உடன்

குன்றுஉயர் அடுக்கம் கொள்ளும் நாடன்

சென்றனன் வாழி, தோழி! என்

மெந்தோல் கவினும் பாயலும் கொண்டே!

[கடுவன்=ஆண்குரங்கு; வயப்புலி=வலிமையான புலி; குழுமல்=முழங்கல்;

பாயல்=தூக்கம்; அடுக்கம் மலைப்பக்கம்]

அவனோட பிரிவாலே வருந்திக்கிட்டிருக்கற அவளுக்குத் தோழி ஆறுதல் சொல்றா. அப்ப அவ சொல்ற பாட்டு இது.

”தோழி! மந்தியோட கணவனான ஒண்ணும் தெரியாத ஆண்குரங்கு வலிமையான புலி முழங்கற சத்தம் கேட்டுப் பயந்துடும்; அது மிக வேகமா மலைப்பக்கதின் உச்சிக்குத் தாவிப் போயிடும் அப்படிப்பட்ட மலைநாட்டைச் சேந்தவன் என்னை உட்டுட்டுப் பிரிஞ்சான். அவன் என் தோளோட அழகையும் என் தூக்கத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டான்.

====================================================================================

 

 

குரக்குப் பத்து—5

குரங்கின் தலைவன் குரூஉமயிர்க் கடுவன்

சூர்அலம் சிறுகோல் கொண்டு, வியல் அறை

மாரி மொக்குள் புடைக்கும் நாட!

யாம்நின் நயந்தனம் எனினும்,எம்

ஆய்குலம் வாடுமோ அருளுதி எனினே!

[குரூஉம்=நிறம்; சூரல்=பிரம்பு; வியல்=அகன்ற; அறை=பாறை; மாரி=மழை; மொக்குநீர்க்குமிழி; புடைக்கும்=அடித்து அழிக்கும்; அருளுதி=அருள் செய்தாய் எனின்]

கல்யாணம் செஞ்சுக்க ஏற்பாடு செய்யாம சந்திக்கறதுக்கு மட்டும் வரான். அப்ப அவன்கிட்ட தோழி சொல்ற பாட்டு இது.

”குரங்கு எல்லாத்துக்கும் தலைவனாய் இருக்கற நெறமான மயிர் அமைஞ்சிருக்கற ஆண்குரங்கு, அகலமான மலைப் பக்கத்துல நீரில வர்ற குமிழ்களை எல்லாத்தையும் அடித்து அழிக்கற வெளையாட்டைச் செய்யற மலைநாட்டைச் சேந்தவனே! நாங்க ஒன்னை விரும்பறோம். அப்படி நெனச்சதாலத்தான் அவ அழகும் வாடிப் போச்சு; நீ எங்ககிட்ட அன்பு காட்டினா இந்த அழகு வாடுமோ?

கொரங்கு அடிச்சு அழியச் செய்யற மாதிரி நீ இவ அன்பை அழிச்சுத் துன்புறுத்தறன்றது மறைபொருளாம்.

=====================================================================================

குரக்குப் பத்து—6

மந்திக் காதலன் முறிமேய்க் கடுவன்

தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியல்அறைப்

பொங்கல் இளமழை புடைக்கும் நாட!

நயவாய் ஆயினும், வரைந்தனை சென்மோ

கல்முகை வேங்கை மலரும்

நல்மலை நாடன் பெண்டுஎனப் படுத்தே!

[முறி=இளந்தளிர்; கடுவன்=ஆண்குரங்கு; நறைக்கொடி=ஒருவகைக் கொடி; வியல்=அகன்ற; அறை=பாறை; பொங்கல்=பொங்கி வருதல்; பெண்டு=மனைவி; கல்முகை=கல்குகை]

கல்யாணம் செஞ்சுக்கற எண்ணம் இல்லாம தெனம் வந்து போற அவன்கிட்ட சீக்கிரம் வந்து கல்யாணம் செஞ்சுக்கன்னு தோழி சொல்ற பாட்டு இது.

”மந்தியோட காதலனும் தளிரைத் தின்றதுமான ஆண்குரங்கு அகன்ற பாறைகளில் இருக்கற நறைக் கொடியை வச்சுக்கிட்டு அதால இள மேகத்தை அடிச்சு வெளயாடற மலைநாட்டைச் சேந்தவனே! நீ இவள ஒடனே கல்யாணம் செஞ்சுக்க மனம் இல்லாவிட்டாலும், கல்லுல இருக்கற வெடிப்புல பூக்கற வேங்கைகைப் பூ இருக்கற மலைநாட்டைச் சேந்தவனோட பொண்டாட்டி இவன்னு எல்லாரும்  சொல்றதுக்காக இவளைச் சீக்கிரம் வந்து கல்யாணம்ச் எஞ்சு கொண்டு போயிடு.

நீ இப்ப இவளை விருமாமப் போனாலும் ஒன்னோட மனைவின்ற பேரைத் தர்றதுக்காகவாவது கல்யாணக் செஞ்சுக் கொண்டு போன்னு சொல்றா.

குரக்குப் பத்து—7

குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்

கல்லா மந்தி கடுவனொடு உகளும்

குன்ற நாட! நின்மொழிவல்; என்றும்

பயப்ப நீத்தல் என் இவள்

கயத்துவளர் குவளையின் அமர்த்த கண்ணே!

[மா=விலங்கு; முன்றில்=முற்றம்; தீண்டல்=உராய்தல்; துறுகல்=குண்டுக்கல்; உகளும்=துள்ளித் திரியும்; மொழிவல்=கேட்பேன்; கயம்=-ஆழமான நீர் நிலை;குளம் அமர்த்த =போன்ற]

அவன்கிட்ட சீக்கிரம் வந்து கட்டிக்கன்னு தோழி சொல்ற பாட்டு இது.

”கொறவங்க ஊட்டு முற்றத்துல ஒரு குண்டுக்கல் இருக்கும். அதுல  வெலங்கெல்லாம் வந்து ஒராசிக்கிட்டுப் போகும். அக்கல்லு மேல பெண் கொரங்கு ஆண் கொரங்கோட துள்ளிக் குதிச்சு வெளயாடற மலை நாட்டைச் சேந்தவனே! ஒனக்கு ஒண்ணு சொல்றேன்; கொளத்துல பூத்திருக்கற அழகான குவளை பூப்போல இருக்கற அவளோட கண்ணெல்லாம் பசலை பூக்கற மாதிரி இப்படி உட்டுட்டுப் போலாமா? சொல்லு”

கொரங்குங்க யாருக்கும் பயப்படாம மகிழ்ச்சியா துள்ளி வெளயாடுதுங்க. ஆனா இவளப் பிரிஞ்சு போறயே சரியான்றது மறைபொருளாம்.

=====================================================================================குரக்குப் பத்து—8

சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்

குரங்கின் வன்பறழ் பாய்ந்தென, இலஞ்சி

மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன்

உற்றோர் மறவா நோய்தந்து

கண்டோர் தண்டா நலம்கொண் டனளே!

[சிலம்பு=மலை; வெதிரம்=மூங்கில்; கண்விடுகழைக்கோல்=கணு விட்டு வளர்ந்த மூங்கிற்கிளை; பறழ்=குரங்குகுட்டி; இலஞ்சி=நீர்நிலை; நிவக்கும்=உயரும்; தண்டா=அமையாத]

தெனம் அவன் வந்துட்டுப் போறான். ஆனா கல்யாணம் செஞ்சுக்கதைப் பத்திப் பேசவே மாட்டேன்றான். அவன்கிட்ட கேக்கவும் முடியல; அன்னிக்கும் வந்து மறைவா நிக்கறான். அப்ப  தோழிக்கிட்ட அவனும் கேக்கற மாதிரி அவ சொல்ற பாட்டு இது.

”மலையில கணுவெல்லாம் உள்ள மூங்கில் கிளை இருக்குது. அது மேல ஏறி ஒரு குரங்க்குக் குட்டிக் குதிக்குது. அப்ப அந்தக் கிளை கொளத்துல மீன் புடிக்கப் போட்ட தூண்டில் போல வளைஞ்சு அப்பறம் தலை நிமிருது. அப்படிப்பட்ட மலையை உடையவன் அவன். அவனைச் சேந்தவங்களுக்கு அவனை மறக்க முடியாத துன்பத்தைத் தந்துட்டான். பாக்கறவங்களாம் மறுபடியும் பாக்கத் தோணும் என் அழகையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டான்”

தூண்டில் கோல் போல வளைஞ்சு அவன் அன்பு காட்டுவான். ஆனா அது மறுபடியும் நிமிர்ற மாதிரி போயிடுவான்னு மறைவா சொல்றா

====================================================================================

 

குரக்குப் பத்து—9

கல்இவர் இற்றி புல்லுவன ஏறிக்

குளவி மேய்ந்த மந்தி துணையொடு

வரைமிசை உகளும் நாட! நீவரின்

கல்அகத் ததுஎம் ஊரே;

அம்பல் சேரி அலர்ஆங் கட்டே!

[இற்றி=இத்தி மரம்; புல்லுவன=படர்தல்; குளவி=மலை மல்லிகை; உகளும்=துள்ளிக் குதிக்கும்; அம்பல்=ஒரு சிலர் கூறும் பழிச்சொல்]

பகல்ல பாக்க முடியல; ராத்திரி வரலாமான்னு அவன் கேக்கறான். அப்ப தோழி சொல்ற பாட்டு இது.

”மலைப் பக்கத்துல இத்தி மர வேரு நல்லா படர்ந்திருக்கும். அதைப் புடிச்சுக்கிட்டு உச்சியில போயி அங்க இருக்கற மலை மல்லிகைத் தளிரை மந்தி மேஞ்சுட்டு அதோட கடுவனோட கூடி வெளையாடற நாட்டைச் சேந்தவனே! எங்க ஊரு மலைகளுக்கு உள்ள இருக்குது; அங்க ஒன்னைப் பொஅத்திப் பழிச்சொல் பேசறாங்க; அதால நீ வர்றது கொஞ்சம் கஷ்டம்தான்”

கொரங்கெல்லாம் பயமில்லாம மர வேரைப் புடிச்சுக்கிட்டு ஏர்ற மலைநாட்டைச் சேந்த்வனா இருந்தாலும் இப்படிப் பயப்படறானேன்னு அவ வருந்தறா.

====================================================================================குரக்குப் பத்து—10

கருவிரல் மந்திக் கல்லாப் வன்பார்ப்பு

இருவெதிர் ஈர்ங்கழை ஏறி, சிறுகோல்

மதிபுடைப் பதுபோல் தோன்றும் நாட!

வரைந்தனை நீஎனக் கேட்டு யான்

உரைத்தனென் அல்லனோ அஃதுஎன் யாய்க்கே!

[பார்ப்பு=குட்டி; வெதிர்=மூங்கில்; இரு=பெரிய; ஈர்=பசுமையான; மதி=சந்திரன்;வரைதல்=திருமணம் செய்து கொள்ளல்]

அவளக் கூட்டுக்கிட்டுப் போயி அவன் தன் ஊர்ல மொறையாக் கட்டிக்கிட்டான். அனுப்பி வச்ச அவளோட தோழிதான் ரொம்ப கவலைப்படறா. அப்ப ஒரு நாள் தோழி அவனைப் பாக்கறா. அவகிட்ட அவள நான் கட்டிக்கிட்டற ஒங்க ஒறவுக்காரங்களுக்குச் சொல்லணும்னு அவன் சொல்றான். அப்ப மகிழ்ச்சியா தோழி சொல்ற பாட்டு இது.

”கருப்பா வெரல் இருக்கற பெண் கொரங்கோட அறிவில்லாத குட்டி பச்சையான மூங்கில் கிளையில ஏறுது. அங்க அது அந்த மூங்கிலால சந்திரனையே அடிக்கறது மாதிரி இருக்கற மலைநாட்டைச் சேந்தவனே. நீ அவளக் கட்டிக்கிட்டன்னு நான் முன்னாடியே எங்க அம்மாகிட்டச் சொல்லிட்டேன்”

====================நிறைவு================================

Series Navigationகவிதைக்கு மரியாதை விவாத அரங்கிலிருந்து வெளியேறுவதுதி.தா.நாராயணனின் “அம்மணம்“ சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *