குருட்ஷேத்திரம் 3 (கிருஷ்ணர் மூலம் வியாசர் சொல்ல நினைப்பது என்ன)

This entry is part 21 of 21 in the series 8 ஆகஸ்ட் 2021

 

கிருஷ்ணர் ஒட்டுமொத்த உலகத்தையே புரட்டிப் போட்ட ஒருவனின் பெயர். ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்தவன். கிருஷ்ணனின் பேச்சு, தோற்றம், விளையாட்டு, எல்லோரையும் கவர்ந்திழுத்தது. அந்த நந்வனத்தில் எல்லோரும் கோபிகைகளாகி கிருஷ்ணனை தாலாட்டினார்கள். நித்யமான ஒன்றை அவன் கண்டடைந்து விட்டதினாலேயே முதலில் மனுவுக்கு இதனை நான் உரைத்தேன் என்று அர்ச்சுனனிடம் அவனால் சொல்ல முடிந்தது.

 

கிருஷ்ணனைப் பொறுத்தவரை வாழ்க்கையே திருவிழா தான். அவன் பரமாத்மா, கர்மவினையிலிருந்து தப்பித்துவிட்டவன் பிறப்புக்கு முன்னால் உள்ளதையும் இறப்புக்கு பின்னால் உள்ளதையும் அவன் அறிவான். சத்தியத்தை முற்றிலும் உணர்ந்தவன் பாண்டவர்கள் போரில் வெற்றி பெற நீதி, தர்மத்துக்கு எதிராக செயல்பட்டான். துரோணரிடம் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக தருமனை விட்டே பொய்யுரைக்க சொன்னதும், சகதியில் சிக்கிய தேர்ச்சக்கரத்தை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கர்ணன் மீது யுத்த தர்மத்தை மீறி அம்பு எய்ய தூண்டியதும், யாராலும் வெல்ல முடியாத பீஷ்மர் முன்பு சிகண்டியை நிறுத்தியதும் கண்ணன் ஏற்பாட்டின்படியே நடந்தது.

 

வியாசர் வெற்றியையே முதன்மைப்படுத்துகிறார். அவ்வாறெனில் யுத்த தர்மம் அவதாரத்தால் மீறப்படலாமா என்ற கேள்வி எழுகிறது. கீதை போர்க்களத்தில் உபதேசிக்கப்பட்டது. துவாரகை மன்னன் பாண்டுவின் புதல்வனுக்கு இதை உபதேசிக்கிறான். ராஜ்யரீதியிலானவர்களுக்கு அதாவது தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு கீதையின் பயன் மிகுதியானது. இந்தியாவில் கூலிக்கு வேலைப் பார்த்து வயிற்றைக் கழுவுபவர்களே அதிகம், கீதை அவர்களின் நிலைக்கு கர்மவினையைக் காரணம் காட்டுவதை யாரால் ஏற்றுக்கொள்ள முடியும். இந்தியாவில் அவதரித்த கிருஷ்ணனை தன்னிறைவு அடைந்துவிட்ட மேற்கு நாடுகள் தான் இன்று கொண்டாடுகின்றன.

 

கீதை வன்முறைக்கு வக்காலத்து வாங்குகிறது என்பது ஒருசாராரின் குற்றச்சாட்டு. கீதை போர்க்களத்தில் உபதேசிக்கப்பட்டது. சோர்வடையாதே உன்னிடமிருந்து அபகரித்துக் கொண்ட நாட்டை சண்டையிட்டுப் பெற்றுக் கொள்வதென்பது தர்மத்தை மீறுவதாகாது. எதிர்த்து நிற்பவர்கள் சகஉதிரங்கள் என்றாலும் உனது தரப்பு நியாயத்துக்காக அவர்களைக் கொன்றேயாக வேண்டும் என்கிறது கீதை. சத்ரியன் சத்தியத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது என்பதே கீதையின் வாதம். அர்ச்சுனா நீ கர்மயோகத்தின்படியே என்னை வந்தடைய வேண்டும் என்று பரமாத்மாவே விஸ்வரூபம் கொண்டு சொல்கிறார். போதித்துக் கொண்டிருப்பவன் நண்பன்தானே என அர்ச்சுனன் உதாசீனப்படுத்திவிடக் கூடாதென்று எண்ணித்தான் கிருஷ்ணன் விஸ்வரூபம் காட்டினான். பேசியது கடவுள் என்று உறுதிப்படுத்திக் கொண்டதும் தான் காண்டீபம் எடுக்கிறான் அர்ச்சுனன்.

 

பைபிள் புத்தகங்களின் புத்தகமாக மதிக்கப்படுவதற்குக் காரணம் அது இறைத்தூதரால் கடைநிலை மனிதன் கடைத்தேறுவதற்காக உபதேசிக்கப்பட்டது என்பதால் தான். குரான் வாழ்க்கையின் ஒழுங்கமைவு குறித்தும், எளிய மனிதர்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளைப் பற்றிக் கூறுகிறது. கீதையின் நோக்கம் எதுவாக இருக்கும் என்று நாம் சிந்திக்கின்ற போது அது மரணத்துக்கு அஞ்சாதே என்ற கருத்தைத் தான் முன் நிறுத்துகிறது.

 

உடலுக்குத்தான் அழிவே தவிர ஆன்மாவுக்கு அழிவே இல்லை என்கிறது. இங்கு முக்கியமான ஒன்றை நான் குறிப்பிட்டேயாக வேண்டும். கிருஷ்ணன் அர்ச்சுனனிடம் நீ என் கருவியே என்கிறான். நாமெல்லோரும் அவனுடைய கருவிதான் என்றால் நம்மிடம் சுயவிருப்பம் என்ற ஒன்றே இருப்பதற்கான வாய்பில்லை என்றாகிறது. விதியின் பேராற்றல் மறுபடியும் கிருஷ்ணனை பிறக்க வைக்குமா என்று தெரியவில்லை. கிருஷ்ணன் மாயாவியாக இருந்தபோதும் விதிக்கப்பட்டவைக்கு தன்னை ஒப்புக்கொடுத்து வேடனின் அம்புக்கு இரையாகி மாண்டபோதும் விதி அதனை செய்வித்தவனையே ஆட்டுவிக்கும் சக்தி படைத்ததாகத்தான் எனக்குப் படுகிறது.

Series Navigationஇறுதிப் படியிலிருந்து கர்ணன்
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *