குருட்ஷேத்திரம் 4 (அறத்தின் குரலை சூதன் என்று ஒதுக்கப் பார்த்தார்கள்)

This entry is part 14 of 17 in the series 22 ஆகஸ்ட் 2021

 

 

கர்ணன் தன்னை ஒரு சத்திரியன் என்று அறிந்து கொண்ட பின்பு தான் அவனுக்கு அழிவு வந்தது. பாண்டவர்களும், கெளரவர்களும் துரோணரிடம் தனுர் வேதம் பயிலுகிறார்கள். கர்ணனுக்கு ஆயுதக் கலை மீது அலாதிப் ப்ரியம் ஆனால் துரோணரோ தேரோட்டி அதிரதனின் மகன் தானே நீ சூதனுக்கு என்னால் சொல்லித்தர முடியாது என மறுத்துவிடுகிறார். கர்ணன் முன்பு இருக்கும் ஒரேயொரு வாய்ப்பு பரசுராமர் ஆனால் அவரோ சத்திரிய குல விரோதி எனவே கர்ணன் தன்னை பிராமணன் என்று பொய் சொல்லிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். கர்ணன் ஒரு சூதன் என்று அறிந்த பின் பரசுராமர் கொடுத்த சாபமும் பின்னாளில் கர்ணனின் முடிவுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

 

அரங்கில் துரோணரின் மாணவர்களை எல்லாம் தன் வில்வித்தையால் தோற்கடிக்கிறான் அர்ச்சுனன். உள்ளே பிரவேசிக்கும் கர்ணன் தன் வில்வித்தையைக் காட்டி துரோணரையே மலைக்கச் செய்கிறான். கர்ணன் அர்ச்சுனனை போட்டிக்கு அழைக்கிறான். துரோணர் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொள்கிறார். அந்த சமயத்தில் பீமன் அதிவிரதனின் மகன் தேருக்கு வார் பிடிக்கலாமேத் தவிர சத்திரியனிடம் மோத முடியாது என்கிறான் ஏளனமாக. நேருக்கு நேராக ஒருவனை வெல்ல முடியாதவர்கள்தான் சாதியின் பெயரைச் சொல்லி இழிவுபடுத்துவார்கள்.

 

இதையெல்லாம் பொறுத்துக் கொண்ட கர்ணனால் சுயம்வர மண்டபத்தில் இலக்கை வீழ்த்திக் காட்டியும் திரெளபதி சூதனை என்னால் கைப்பிடிக்க முடியாது என்று அவமதித்தது கர்ணனின் ஆண்மையை அசைத்துப் பார்த்தது. தான் கற்ற வில்வித்தையால் திரெளபதியை அடைந்துவிடலாம் என்று கர்ணன் போட்ட கணக்கு தப்பானது. மேலும் அர்ச்சுனனுக்கு அவள் மாலையிட்டது அவன் மனதில் கோப அலைகளை எழும்பச் செய்தது. இங்கு ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும் சுயம்வரத்தில் அரசர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும் என்பதால் துரியோதனன் தனது சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதியான அங்கதேசத்தைக் கர்ணனுக்கு தாரை வார்த்து அவனை சுயம்வரத்துக்கு அனுப்பி வைத்தான். திரெளபதி அவனை சூதன் என்று இழிவுபடுத்திவிட்டாள்.

 

நன்றி மிகுந்தவன் கர்ணன் அங்கதேசத்தை தமக்களித்து தன்னை அரசனாக்கி அழகு பார்த்த துரியோதனனுக்கு கடைசிவரை நிழலாக இருந்தான். கர்ணனை துரியோதனனின் மனசாட்சி என்றே சொல்லலாம். இருவரின் நட்பு வலுப்பெறுவதற்கு இருவரின் பொது எதிரி அர்ச்சுனன் என்பதே காரணம். சூதுக்கு அழைத்த சகுனியிடம் தருமன் தோற்றது மட்டுமில்லாமல் சகோதரர்களையும், திரெளபதியையும் பணயம் வைத்து இழக்கிறான். இப்போது துரியோதனனின் மனசாட்சியான கர்ணன் பேசுகிறான். சத்திரியனுக்கு சூதன் அடிமையாமா என்று தனக்கு மட்டும் கேட்கும்படி மெல்ல முணுமுணுத்துக் கொள்கிறான். அடிமையை அழைத்து வந்து துகிலுரியுங்கள் என்று கர்ஜிக்கிறான். சூதனிடம் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள மாட்டாயல்லவா இப்போது அவையே உன் அழகைப் பார்த்து ரசிக்கட்டும் என்பதாகத்தான் கர்ணனின் நோக்கம் இருந்தது.

 

வனவாசம் முடிந்து தனது பங்கைக் கேட்டு பாண்டவர்கள் கிருஷ்ணனை தூது அனுப்புகிறார்கள். கிருஷ்ணனின் தூது கைகொடுக்கவில்லை போர் மூளுகிறது. கர்ணனுக்காக பரிதாபப்பட்டு அல்ல அர்ச்சுனனை கர்ணனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கிருஷ்ணன் கர்ணனிடம் நீ ஒரு சத்திரியன், பாண்டவர்களில் மூத்தவன், உன் அன்னை குந்தி என்பதாகக் கூறுகிறான். பாண்டவர்களுக்காக கண்ணன் யுத்த தர்மத்தையும், நீதிதர்மத்தையும் பல முறை மீறுகிறான். அஸ்தினாபுரத்தின் அரசனாக்குகிறேன், திரெளபதியும் உனக்குக் கிடைப்பாள் என்று கர்ணனிடம் ஆசை காட்டுகிறான்.

 

தந்தை சூரியன் கர்ணனின் கனவில் தோன்றி உன் தரும குணம் உன் அழிவுக்குக் காரணமாக அமையப்போகிறது எச்சரிக்கையாக இரு என்கிறார். ஆனாலும் தன்னை வந்து சந்தித்த குந்தியிடம் அர்ச்சுனன் மீது நாக அஸ்திரத்தை இரண்டாம் தடவை ஏவ மாட்டேன் என்றும் தருமன் முதற்கொண்டு மற்ற நால்வரின் அழிவு தன்னால் ஏற்படாது என்றும் வாக்கு அளிக்கிறான் கர்ணன். போர்க்களத்தில் தேரின் சக்கரத்தை விடுவிக்கும் முயற்சியின் போது அர்ச்சுனனின் அம்பு கர்ணனின் நெஞ்சைத் தைக்கிறது. ஒரு சூதனாக அறியப்பட்ட கர்ணனிடம் அவதாரமே கையேந்த நேர்கிறது. கர்ணன் சாகும்போது மட்டுமே சத்ரியன் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறான். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது.

 

 

 

 

Series Navigationஇறுதிப் படியிலிருந்து –   சகுனிதூங்காமல் தூங்கி…
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *