குருவியின் குரலுக்கு மனத்தைப் பறிகொடுத்த கொலைகாரன் வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் – வாசிப்பனுபவம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 19 in the series 2 நவம்பர் 2014

veera
க.நாகராஜன்
பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள ’வீரப்பனின் பிடியில் பதினான்கு நாட்கள்’ என்னும் நூலை சமீபத்தில் நான் மிகவும் விரும்பிப் படித்தேன். கன்னடத்தில் எழுதியவர்கள் கிருபாகர் மற்றும் சேனானி. மீசை புகழ் சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு பதினான்கு நாட்கள் அவன் பாதுகாப்பில் இருந்த இரண்டு வனவியலாளர்கள் எழுதிய நூல் என்பதால் ஒரு துப்பறியும் நாவலைப் படிக்கும் முன்தயாரிப்போடு இறங்கினேன். ஆனால், சமூக நாவலைப்போல வாழ்க்கைச்சுமைகள், அலைச்சல், வேட்டை, காட்டைப்பற்றிய ஞானம், விலங்கினங்களைப்பற்றிய புரிதல், நம்பிக்கைகள், நகைச்சுவை என பலவிதமான களங்களுடன் விரிவான அனுபவத்தை வழங்கியது இந்த நூல். நாம் அறியாத வீரப்பனின் மற்றொரு முகத்தை மிக அழகாக சித்தரிப்பது நூலை முக்கியமாக்குகிறது. விறுவிறுப்பான நடை நூலின் மிகப்பெரிய வலிமை. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் காட்சியாகவே கற்பனையில் விரிவடையச் செய்வது வாசகரின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்கிறது. பாவண்ணனின் மொழிபெயர்ப்பு அதற்குத் துணையாக விளங்குகிறது.
நூலாசிரியர்களான இருவருமே நல்ல படிப்பாளிகள். கிருபாகர் வணிகவியல் துறையில் பட்டம் பெற்றவர். சேனானி கட்டிடவியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். தொண்ணூறுகளின் இறுதியில் இருவரும் புகைப்படத்துறையைத் தேர்ந்தெடுத்து இணைத்து இயங்கத் தொடங்குகிறார்கள். பறவைகளைப்பற்றி பல மொழிகளில் எழுதப்பட்ட பல நூல்களில் இவர்கள் எடுத்த ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆசியக் காட்டுநாய்களைப்பற்றி இவர்கள் எடுத்த இரண்டு ஆவணப்படங்கள் இந்தியாவில் மட்டுமன்றி ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது பெற்று, இவர்கள் உலகப்புகழ் பெற காரணமாக அமைந்தன. 2010 ஆம் ஆண்டில் செந்நாய்களைப்பற்றி இவர்கள் எடுத்த ஆவணப்படத்துக்கு ஆசியா கண்டத்திலேயே முதன்முறையாகப் பசுமை ஆஸ்கார் விருது அளிக்கப்பட்டது. இவர்கள் இணைந்து எழுதிய அறிவியல் கட்டுரைத் தொகுப்பான ‘ஜீவ ஜால’ கர்நாடக சாகித்திய அக்காதெமியின் விருதை 1999-ல் பெற்றது. புகைப்படத்துறையில் இவர்களுடைய பங்களிப்பைப் பாராட்டி கர்நாடக மாநில அரசு 2006- ல் ராஜ்யோத்ஸவ விருதை வழங்கிக் கெளரவித்தது.
நூலின் முதல் காட்சியே டாப்கியரில் தொடங்குகிறது. மின்னினைப்பு துண்டிக்கப்பட்ட, மழை கொட்டும் நள்ளிரவில், பந்திப்பூர் காட்டின் ஓரத்தில் அமைந்திருக்கும் கிருபாகர்- சேனானி வீட்டுக்குள் புகுந்த வீரப்பனின் கும்பல் இருவரையும் கடத்துகிறது. டார்ச் வெளிச்சத்தில் வீரப்பனைப் பார்த்த சேனானி ’ஆ, வீரப்பன்’ என்று சத்தமிட, உடனே வீரப்பன் ‘என்னை எப்படி உனக்குத் தெரியும்?’ என்று வியப்போடு கேட்கிறான். ’உங்களை ஊருக்குத் தெரியுமே’ என்று சேனானி பதிலளிக்கிறான். வீட்டில் துப்பாக்கி ஏதேனும் மறைத்துவைக்கப்பட்டுள்ளதா என வீரப்பன் கும்பல் விழுந்து விழுந்து தேடுகிறது. கோமட்டீஸ்வரனின் உடலில் துப்பாக்கியைத் தேடினார்கள் என்று கிருபாகரின் குறிப்பு சொல்கிறது.
கிருபாகரும் சேனானியும் மாறிமாறி நூலை எழுதுவது ஒரு புதிய உத்தி. கிருபாகருடைய சீரயஸ் எழுத்தும் சேனானியின் நகைச்சுவை கலந்த நடையும் தொடர்ச்சியாகப் படிக்கையில் உற்சாகமாக உள்ளது. இவ்விருவருடைய நுண்ணறிவு, காடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் தன்னை ஒப்பில்லா விற்பன்னன் என்று மார்தட்டிக்கொள்ளும் வீரப்பனையே அதிர்ச்சி அடைய வைக்கிறது. எடுத்துக்காட்டாக, யானையின் சத்தம் என்று வீரப்பன் குறிப்பிட்ட சத்தம் காட்டெருமையின் அசைவு என்று சேனானி மிகச் சரியாக கணிக்கும் இடத்தைச் சொல்லலாம். சேனானி, கிருபாகர் என்று அழைப்பதற்கு, பெயர் வாயில் வராமல் வீரப்பனும் அவன் கூட்டாளிகளான ரங்கசாமி, அன்புராஜ், மாதேஷ், சேத்துக்குளி கோவிந்தன் அனைவரும் யுத்தகளத்தில் கஷ்டப்படுவதைப்போல கஷ்டப்படுகின்றனர். மிகப்பெரிய அதிகாரிகள் என நினைத்து தங்களால் கடத்தப்பட்டவர்கள் சாதாரணமான வனவிலங்குகளைப் படமெடுப்பவர்கள் என்று அறியும்போது வருத்தப்படும் வீரப்பன் வண்டிவைத்து கடத்தல் செய்யும் கவுண்டமணி – செந்தில் திரைப்பட நகைச்சுவையை நினைவுபடுத்துகிறான். ’சாப்பாட்டுக்கு என்ன செய்றீங்க?’ என்று இரக்கத்தோடு கேட்கும் வீரப்பனிடம், கல்யாண வீட்டில் புகைப்படம் எடுத்து பிழைக்கிறோம் என சேனானி பதிலளிப்பது சுவாரஸ்யமானது.
’அறுபது வருஷங்களில் தங்கமாட்டம் இருந்த காடு சுடுகாடா மாறிப் போச்சு’ என்று வீரப்பனே காட்டைப்பற்றி வருத்தப்படுவதுதான் மிகப்பெரிய நகைமுரண். காலஞ்சென்ற என் தம்பி அருச்சுனனைப்போல இருக்கிறாய் என்று சேனானிமேல் பாசத்தைப் பொழியும் வீரப்பனோடு எங்கே தன்னுடைய நண்பன் போய்விடுவானோ என்று கிருபாகர் அஞ்சும் காட்சி ரசிக்கத்தக்கது. வீரப்பனின் கூட்டாளியான அன்பு, குரங்கு மாமிசம் சாப்பிட ஆசைப்படும் காட்சி சிரிக்கவைக்கிறது. லங்கூர் குரங்கு போலவே வீரப்பன் குரல் கொடுக்கிறான். உடனே குரங்கும் வருகிறது. லங்கூர் குரங்கும் அன்புவும் முகஜாடையில் அண்ணன் தம்பி போலவே இருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கும் சேனானிக்கு சிரிப்பு வருகிறது. இந்தக் காட்சியைப் படம் எடுக்க நினைக்கும் முயற்சி தடுக்கப்படுகிறது. கூட்டத்தில் யாரும் தப்பித்துப் போய்விடக்கூடாது என்பதில் வீரப்பனும் கூட்டாளிகளும் கண்ணும் கருத்துமாக இருந்ததுவே காரணம்.
நூலின் பக்கங்களுக்கிடையே வரையப்பட்டுள்ள பத்துக்கும் மேற்பட்ட சித்திரங்கள் கார்ட்டூன் போல வரையப்பட்டு கதையோட்டத்துக்குச் சுவையூட்டும் வகையில் மிகச்சிறப்பாக பிரசுரமாகியுள்ளன. செழுமையான காட்டை வர்ணிக்கும் இயற்கை வர்ணனைகள் மனம் கவரும் வகையில் உள்ளன. எடுத்துக்காட்டாக, 98 ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள கீழ்க்கண்ட வரிகளைச் சொல்லலாம். “அன்று காலை எனக்கு விழிப்பு வந்ததே தாமதமாகத்தான். பனிப்படலத்துக்கும் மல்லிகை மலருக்கும் முத்தமிட்ட சூரியன் அப்போதே மேலே ஏறி விட்டிருந்தான். இரவுக் காவலில் இருந்த தங்கராஜும் அப்புசாமியும் மட்டும் போர்வைக்குள் குருவிகளைப்போல சுருண்டு படுத்திருந்தார்கள். மரத்திலிருந்து சிலந்திவலையில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த பனித்துளிகள் மீது இயற்கை தன் கிரணங்களால் கோலம் எழுதிக்கொண்டிருந்தது. படுத்த இடத்திலிருந்து சற்றே புரண்டு புல்நுனியின்மீதிருந்த இந்த அமுதத்துளிகளை மென்மையாக வருடியபடி எழுந்தேன்.
முயலையும் காட்டுயானையையும் போல் குரல் எழுப்பும் வீரப்பன், பக்தியோடு மகாபாரத புத்தகத்தை படித்து பாஷாவுக்குச் சொல்லிக்கொடுக்கும் வீரப்பன் (படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள்கோயில்) ஊருக்குத் திரும்பி விவசாயம் செஞ்சி என் எஞ்சிய வாழ்க்கையை கழிச்சிடுவேன் என உருகும் வீரப்பன் என்று நாம் அறியாத வீரப்பனின் பல முகங்களைப் படமெடுக்கிறது நூல். ‘இந்த அநாகரிக, மோசமான கொலைகாரனின் அந்தரங்க உலகில் ஒரு மகா திறமைசாலியும் கலைஞனும் ஒடுங்கி உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வது யாருக்கும் பிடிக்காத விஷயமாக இருக்கலாம். ஆனால் அகழ்ந்தெடுக்கும்போது கிடைக்கின்ற தங்கத்தைக் கண்டு வியப்பிலாழும் மணத்தைப்போல அனுபவங்களின் அடிப்படையில் சிறுகச்சிறுக வளர்த்துக்கொண்ட ஒப்பற்ற இந்தத் திறமையைப் புரிந்துகொள்ளும் சக்தியுள்ள யாராலும் அந்தத் திறமையை நிராகரிப்பது மட்டும் சாத்தியமில்லை’ என்னும் கிருபாகரின் அவதானிப்பு மனமெங்கும் வியாபிக்கிறது.
’வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்’ மிகமுக்கியமான ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆண்டுக்கணக்கில் தமிழகத்தால் கவனிக்கப்பட்டு அலசி ஆராயப்பட்ட வீரப்பனின் வாழ்வில் நாம் அறியாத பல பக்கங்களை வாசிக்கத் தருவது நூலின் சிறப்பு என்றால், காவியநயத்தோடும் கொப்பளிக்கும் நகைச்சுவையோடும் வாழ்க்கையைக் கூர்ந்து கவ்னிக்கும் இரண்டு கலைஞர்களின் மன ஓட்டப் பதிவுகள் என்றும் நினைவுகூரத் தக்க தரத்தோடு வெளிப்பட்டிருப்பது நூலின் ஆகப் பெரிய பலமாகத் தோன்றுகிறது. தெளிந்த நீரோடையைப் போன்ற பாவண்ணனின் மொழிபெயர்ப்பு மயிலிறகாய் படிப்போரை வருடுகிறது. தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு மற்றுமொரு சிறப்பான மொழிபெயர்ப்பு நூலைத் தந்துள்ள பாவண்ணன் பாராட்டுக்குரியவர்.

(வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள். மொழிபெயர்ப்பு. கன்னடத்தில்: கிருபாகர், சேனானி. தமிழில்: பாவண்ணன். காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.)

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *