குறுக்குத்துறை

This entry is part 2 of 7 in the series 6 நவம்பர் 2022

 

ருத்ரா

தாமிரபரணி

கொஞ்ச நேரம் 

பளிங்குப்பாய் விரித்து

ஓடிக்கொண்டே இருக்கும்

அந்த வைரத்திவலைகளோடு

மனதோடு மனதாக 

பேசிக்கொள்வதற்கு

முருகன் கோவிலில்

நுழைந்து அளைந்து திளைத்து

அப்புறம் அது

வெளியேறும் அழகில்

நான் மனம் மூழ்கிக்கிடப்பதில்

நீருள் முக்குளி போடும்

நீர்க்காக்கை போல் 

தலை நீட்டுவேன்.

கோவிலைத்தழுவிக்கிடக்கும்

வெண்மணற்பரப்பு

ஒரு வெண்பட்டு போல்

பள பளக்கும்.

எதிர்க்கரையில்

கொக்கிரகுளத்து மருத மரக்கூட்டத்தில்

வெள்ளை நாரைகள்

நிறைய நிறைய 

நெற்றிச்சூடிகள் போல்

சுடர் தெறிக்கும்.

தூரத்தில்

சுலோசன முதலியார் பாலம்

பொருனையின் பொங்கும்

பூநுரைகளை

ஒவ்வொரு கண்ணிலும் 

கண் பொத்தி கண்பொத்தி

விளையாடும்.

அதற்கும் அப்பால்

ஒரு புதுமைப்பித்தனை

கவிதை போல்

படித்துக்காட்டும்

சிந்துபூந்துறை படிக்கட்டுகளில்

“கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்”

உரையாடல் செய்துகொண்டிருப்பது

எங்கோ

தப் தப் என்று துணி துவைக்கும்

ஒலிக்கலவையில்

வினோதமாய் பிசைந்து கொண்டிருக்கும்.

இலக்கியம்

கூழாங்கற்களாய்

காலப்படுகையை

நூற்றாண்டுகளில் உருட்டி விளையாடுவதை

புதுமைப்பித்தன்

தன் எதிரே இருக்கும் ஒரு சுட்டிப்பெண்ணுடன்

கற்பனையாய்

கழச்சி விளையாடுவதாய்

ஒரு பிம்பம் காட்டிநிற்கும்.

என் மனம் தோய்ந்த குறுக்குத்துறையே!

இந்த நெல்லைச்சீமையின்

பச்சைவண்ணத்து பவளச்சிலிர்ப்புகளோடு

ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம் 

காட்டுகிறாய்.

உடல் நீட்டி படுத்து படுத்து

மூழ்கினாலும்

தண்ணீரை பூக்கள்போல்

வருடி வருடி ஒத்தடம் கொடுக்கும்

தாமிரபரணியின்

சில்மிஷங்களில் சிலிர்த்துக்

கிடக்கின்றேன்.

________________________

Series Navigationஎனது மைல்கல்ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’
author

ருத்ரா

Similar Posts

Comments

  1. Avatar
    லதா ராமகிருஷ்ணன் says:

    மிக அழகான, மிகையற்ற, மனமார்ந்த வர்ணனை. இறுதி வரிகளில் இடம்பெறும் ‘சில்மிஷங்கள்’ என்ற வார்த்தைப்பிரயோகம் கவிதையின் முழுமையான கவித்துவத்தை சற்று குறைப்பதாய் என் வாசக மனதுக்குப் படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *