குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்

This entry is part 4 of 40 in the series 6 மே 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

சங்க கால மக்கள் பல்வேறு சடங்கு முறைகளைக் கொண்டிருந்தனர். அச்சடங்குகள் அவர்களது நம்பிக்கைகளின் வாயிலாகவே தோன்றியிருக்க வேண்டும்.  சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகை பழந்தமிழ் மக்களின் பல்வேறு விதமான நம்பிக்கைகளை எடுத்துரைக்கிறது.

குறிசொல்லல்

தெய்வத்தின் அருள் பெற்ற ஒருவர், மற்றொருவரின் சிக்கலுக்குத் தீர்வுகூறும் வகையில் அமைவதே குறிசொல்லலாகும்.

‘‘தெய்வத்தின் அருள்பெற்று தன்வயமிழந்த நிலையில், ஒருவர் மற்றொருவரின் சிக்கலுக்குத் தீர்வு கூறுவதே குறிசொல்லல் எனப்படும். இதனை ‘அருள்வாக்கு’ என்றும், ‘சாமி சொல்லுதல்’ என்றும் அழைப்பர்’’(கோ.ப. சுதந்திரம், பொதுச்சடங்குகளில் இலக்கியம், ப. 58)

இவ்வாறு குறிசொல்லும் குறமகள் ‘கட்டுவிச்சி’ அல்லது ‘அகவன் மகள்’ என அழைக்கப்பட்டாள். இதற்குச் சான்றாக,

‘‘அகவன் மகளே! பாடுக பாட்டே

இன்னும் பாடுக! பாட்டே!’’ (குறுந். பா.எ.,35)

என்ற வரிகளும் அகவன் மகள் கையில் சிறிய கோல் கொண்டிருப்பாள் என்பதை,

‘‘வெண்கடைச் சிறுகோல அகவன் மகளிர்’’((பொ.வெ.சோமசுந்தரனார் உரை)குறுந். ப.,445) என்ற வரியின் மூலமும் அறிய முடிகிறது.

மேலும் குறிசொல்லும் பெண்களின் முன்பு நெல் வைத்துக் குறிகேட்கும் பழக்கம் இருந்ததை,

‘செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்

கட்டிற் கேற்கும் ஆயன் வெற்பில்’’(பா.எ.288)

என்ற நற்றிணைப் பாடலும் இச்செய்தியைத் தெரிவிக்கின்றது.

வெறியாடல்

தமிழரின் வழிபாட்டு முறைகளில் மிகவும் பழமையானது வெறியாடலாகும். மனிதர்மேல் தெய்வம் ஏறி வருவதுண்டு என்ற நம்பிக்கையில் உருவானதே இது இதனை ஆவேசம் என்றும் கூறுவர். முருகப் பெருமானின் அருளைப் பெற்று வேலினைக் கையில் கொண்டு ஆடுபவன் வேலன் எனப்பட்டான்.

இவ்வெறியாடல் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருந்திருக்க வேண்டும் என்பதற்கு,

‘‘வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்

வெறியாட் டயர்ந்த காந்தளும்’’(தொல்.புறத்.நூற்பா, 63)

என்ற நூற்பாவே சான்றாகும்.

மகளின் உடல் மெலிவு கண்ட செவிலி, அதன் காரணத்தை அறிய வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்துவாள். வேலனும் சில சடங்குகளை செய்து, முருகனே அவளின் நிலைக்குக் காரணம் என்பான்.

வெறியாடல் பெண்களும் சூளுரைத்தனர் பொய் ஆளுரைத்தாரை வருத்தக்கூடிய தெய்வம் தண்டிக்கும் என்பதை,

‘மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்

கொடியார் தெரூஉம்’’(குறுந்., பா.எ.127)

எனும் இவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன.

மேலும் வெறியாட்டின் போது தெய்வத்திற்கு இட்ட படையலாகிய கதிரை அறியாது உண்ட மயில் நடுங்கியது. இதனை,

‘கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்

அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்

வெறியறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்’’(குறுந்., பா.எ.153)

என்ற குறுந்தொகைப் பாடல் வழி அறிய முடிகிறது. இவ்வாறு வெறியாடிய களத்தில் செந்நெல்லின் பொரிகள் சிதறிக் கிடந்ததை,

‘‘வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்

செந்நெல் வான்பொரி சிதறி யன்ன’’( குறுந்., பா.எ.78)

என்ற குறுந்தொகை வரிகள் வெளிப்படுத்துகின்றன.

வெறியாடலை வழிபட வந்த மகளிர் தம்முள் கைகோர்த்து குரவைக் கூத்தாடினர். இதனை,

‘சீர்மிகு நெடுவேள் பேணித் தரூஉம் பிணையூஉ

மன்று தொறும் நின்ற குரவை சேரிதொறும்

உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ

வேறு வேறு கம்பலை வெறிகொள்பு மயங்கி’’

(மதுரைக்காஞ்சி, 614-617வரிகள்)

மதுரைக் காஞ்சியின் வரிகள் வாயிலாகவும் அறிய முடிகின்றது.

சோற்றுப்படையலிடுதல்

மனிதன் தான் இறைவனிடம் வேண்டியது நிறைவேறியபின் இறைவனுக்குச் செய்யும் நேர்த்திக் கடனின் மூலமாக நிகழ்வதே படையலிடுதலாகும். இதனைப் பலியிடுதல் என்றும் கூறுவர்.

ஓராண்டின் புதிய விளைவினை நன்றி செலுத்தும் முகத்தான் முதலில் தெய்வத்திற்குப் படைத்துண்பது ‘புதிதுண்ணல்’ எனப்படும்.  இவ்வழக்கம் நம்முன்னோரிடையே இருந்ததை,

‘‘சிறுதினை முந்துவிளை யாணர்நாட் புதிதுண்மார்’’(புறநானூறு, பா.எ., 168)

என்ற புறநானூற்றுப்பாடல்  விளக்குகின்றது.

வெறியாட்டின் போது முருகப் பெருமானுக்குப் மறியறுத்துப் படையலிட்டு வழிபட்டனர். இச்செய்தியை,

‘‘முருகயர்ந் துவந்த முதுவாய் வேல

சினவ லோம்புமதி வினவுவ துடையேன்

பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு

சிறுமறி கொன்றிவன் நறுநுதல் நீவி’’

(பொ.வே. சோமசுந்தரனார் (உ.ஆ) குறுந்தொகை, பக். 541-542)

எனும் இப்பாட்டாலும்,

‘‘மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇ’’

(பொ.வே. சோமசுந்தரனார் (உ.ஆ) குறுந்தொகை, ப.,390)

என்ற பாடல் வாயிலாகவும் ஆட்டின் கழுத்தை அறுத்து தினைப்பிரப்பை வைத்து வழிபட்டனர் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. இதே செய்தியை,

‘‘சிறுதினை மலரொடு வீரைஇ மறிஅறுத்து’’

(திருமுருகாற்றுப்படை, 218 வரி)

என்று திருமுருகாற்றுப்படை வரியும் இயம்புகின்றது. இவ்வாறு, மறியறுத்ததினால் மண்ணில் வீழ்ந்த இரத்தத்தை எடுத்து பெண்கள் நெற்றியில் பூசிக்கொண்டனர்.

காக்கைக்குப் படையலிடல்

நள்ளி என்பான் தமிழ் வள்ளல் எழுவருள் ஒருவன். இவன் காக்கையைத் தெய்வமாக வழிபட்டு, அதற்குத் தொண்டி என்னும் பேரூரின் கண் விளைந்த செந்நெல் சோற்றையும் நெய்யையும் கலந்து ஏழு கலங்களில் இட்டுப் படைத்தான். இதனை,

‘‘திண்டேர் நள்ளி கானத் தண்டர்

பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி

முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ

றெழுகலத் தேந்தினும் சிறிதென் றோழி

விருந்துவரக் கரைத்த காக்கையது பலியே’’

(பொ.வே. சோமசுந்தரனார் (உ.ஆ)., குறுந்தொகை பக்., 305-306­)

என்ற இப்பாடலின் மூலம் வெளிப்படுகிறது.  இதில் காக்கைப் கரைவது நன்னிமித்தமாகக் கருதப்பட்டதே அதற்கு படையிலடக் காரணமாய் அமைந்தது. காக்கை இல்லத்திலிருந்து கரையின் விருந்தினர் வருவர் என்பதும் ஒரு நம்பிக்கையாகும்.

சகுனம் பார்த்தல்

அன்று முதல் இன்று வரை மக்கள் ஒரு செயலை செய்வதற்கு முன் சகுனம் பார்ப்பது மரபாக இருந்தது. இவை பெரும்பாலும் பிறர் கூறும் நற்சொல் கேட்டலாக அமையம். இதனை ‘விரிச்சி கேட்டல்’ என்றும் கூறலாம். போருக்குச் செல்லும்முன் வீரர்கள் நற்சொல் கேட்டதை,

‘‘படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சி’’

(தொல், புறத், நூ. எ., 61)

என்ற தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம்.  இதே போல், வீரர்கள் நற்சொல் கேட்குமுகத்தான் விரிச்சி கேட்ட நின்றதை,

‘‘…..     ……   …… தொழுவில்

குடக்கள்நீ கொண்டு வா என்றாள் குனிவில்

தடக்கையாய் வென்றி தரும்’’

(புறப்பொருள் வெண்பா மாலை, நூ.எ., 4)

என புறப்பொருள் வெண்பாமாலையும் உரைக்கின்றது.

வினைமேற் சென்ற தலைவன் தீதின்றி வருதல் வேண்டி, பிரிந்த மகளிர் கொற்றவை முதலிய தெய்வங்களுக்குப் படையலிட்டு வணங்குதல் மரபாய் இருந்தது.

‘‘விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்கு

கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்

புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்’’

(பொ.வே. சோமசுந்தரனார் (உ.ஆ)., குறுந்தொகை, ப., 318)

இவ்வரிகளில், மகளிர் நோன்பு மேற்கொண்டு கைந்நூல் கட்டிக் கொள்ளும் செய்தியும் விரிச்சி கேட்கும் பொருட்டாக, ஊர்ப்புறத்தே சென்று நெல்லும் மலரும் தூவி தெய்வத்தை வழிபட்டு வணங்கிய செய்தியும் கூறப் பெறுகிறது.

‘‘பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை

அருங்கடி மூதூர் மருங்கில் போகி

………. ………. ………. நெல்லோடு

நாழி கொண்ட நறுவீ முல்லை

அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழு

பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப’’

(முல்லைப்பாட்டு, 6-11 வரிகள்)

என இம்முல்லைப்பாட்டு வரிகளும் இக்கருத்தைத் தெளிவுறுத்துகின்றன. மேலும், அவ்வாறு வணங்கி நிற்கும்போது, அயலில் எழும்சொல் இயல்புடையதெனின் நன்மை என்றும் முரணியவழி தீமையென்றும் கருதப்படும்.

மாலையில் விளக்கேற்றல்

கற்புடைய பெண்டீர் மாலை வேளையில் தங்களது இல்லங்களில் விளக்கேற்றி வணங்குவது மரபாக இருந்தது.  இதனை,

‘‘கயலே ருட்கண் கனங்குழை மகளிர்

கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய

சுடர்துய ரெடுப்பும் புன்கண் மாலை’’

(பொ.வே. சோமசுந்தரனார், (உ.ஆ)., குறுந்தொகை, ப., 401)

என்ற பாட்டால் அறிய முடிகிறது. இதனையே,

‘‘மங்கையர் நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்

கையமை விளக்கம் நந்துதொரு மாட்ட’’      (48-49 வரிகள்)

என்ற முல்லைப்பாட்டு வரிகளும் உணர்த்துகின்றன.

மழையை வாழ்த்துதல்

இயற்கையைக் கண்டு பயந்த மக்கள், அதனை தெய்வமாக வணங்கின் தம்மைத் தாக்காது என நம்பினர். இவ்வாறு தாம் ஒன்றைப் பெற வேண்டி இயற்கையை வணங்குவது (அல்) வாழ்த்துவது ‘மந்திரம்’ எனப்படும்.

வானை வாழ்த்துதல் கடவுள் வாழ்த்துக்களுள் ஒன்றாவதை,

‘‘வாழ்த்தப்படும் பொருளாவன

கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும்

அரசரும் மழையும் நாடும் என்பன’’

(மே.கோ.வி.பொ.வே. சோமசுந்தரனார்,(உ.ஆ).,குறுந்தொகை, ப., 401)

என்று தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் செய்யுளியலில் பேராசிரியர் தமது உரையில் விளக்குகின்றார்.

இடி மின்னல் மழையைக் கண்டஞ்சிய மக்கள் அதனை வாழ்த்தி வணங்கியதை,

‘‘தாழிருள் துமிய மின்னித் தண்ணென

வீழுறை யினிய சிதறி ஊழிற்

கடிப்பிடு முரசின் முழங்கி இடித்திடுத்துப்

பெய்தினி வாழியோ!’’

(பொ.வே. சோமசுந்தரனார், (உ.ஆ)., குறுந்தொகை, ப., 401)

என்ற பாடல் தெளிவுறுத்துகிறது.

சந்திர கிரணத்தில் உறங்காமை

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும் போது, பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் சந்திரகிரகணம் தோன்றுகிறது.  இது குறித்த செய்தியானது குறுந்தொகையில் தொன்மமாக இடம் பெற்றுள்ளது.

அக்காலத்தில் சந்திரகிரகணம் முடியும்வரை மக்கள் உண்ணாமலும் உறங்காமலும் இருந்தனர்.  இன்றும் ஒரு சிலரிடையே இது வழக்கமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு சந்திரனைப் பாம்பு விழுங்குவதாக நம்பும் காலத்தில் அதனை நீக்கும் வல்லுநர்கள் மட்டுமின்றி பிறமக்களும் உறங்காமல் இருப்பதை,

‘‘வன்கண் கொண்டு வலித்துவல் லுநரே

அரவுநுங்கு மதியினும் சிவனோர் போலக்

களையார் ஆயினும் கண்ணினது படீஇயர்’’

(பொ.வே. சோமசுந்தரனார், (உ.ஆ)., குறுந்தொகை, ப., 587)

எனக் குறுந்தொகை மொழிகிறது.

உரிப்பொருள் சிறந்த குறுந்தொகையில் மக்களின் பழக்க வழக்கங்களுடன் இணைந்த நம்பிக்கை குறித்த தொன்மங்கள் சிறப்பாக இடம்பெற்று பழந்தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளைத் தெள்ளிதின் விளக்குகின்றன. இத்தொன்மங்கள் வழி பழந்தமிழ் மக்களின் வாழ்வியல் கூறுகளை எடுத்துரைப்பனவாகவும் அமைந்துள்ளன.

—————————

Series Navigationஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “தங்கம் 5- விநோதங்கள்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *