குறும்பட மேதேய் ! அங்காடி தெருவின் குறும்படபோட்டி

This entry is part 6 of 31 in the series 10 பெப்ருவரி 2013

சமீபகால உதயங்களை மனதில் கொண்டு, தினமலரின் அங்காடிதெரு குழு அமைத்துக் கொடுத்த மேடையே ‘குறும்பட மேதை ‘ பட்டத்திற்கான போட்டி.

விதையிலிருந்து தோன்றிய விருட்சங்கள் போல், குறும்பட இயக்குனர்களின், ‘பெரும்’ படங்கள் வெற்றி பெறுவதும், வரும்காலத்தில் புதிய சிந்தனைக் களங்களை கட்டி ஆளும் மன்னர்கள், இவர்களே என்பதையும் மனதில் இருத்தி, தினமலர் குழுமம் ஏற்பாடு செய்த விழாவுக்கு ஒரு சுயநலமும் உண்டு. நல்ல படங்கள் வெளிவந்தால், அதை பாராட்டும் பத்திரிக்கையும், ஏற்றம் பெறும் அல்லவா.

பத்துக்கு எட்டு பழுதில்லை என்பது போல், வந்த படங்களில் ஒன்பதைத் தேர்வு செய்திருந்தது குழு. எண்ணைப் போலவே, படங்களும் நவகிரகங்களாக அமைந்தது விசேசம். அதில் சூரியனாக ஒளிர்ந்த படத்திற்கு பரிசும் பட்டயமும் உண்டு என்பது அறிவிப்பு. இனி படங்களைப் பார்ப்போம்..

‘ 1 மார்க் ‘ என்கிற கே.ஆர்.சீனிவாசின் படம் கொஞ்சம்  சராசரி. ஐந்தாவது படிக்கும் கார்த்திக்கு படிப்பு ஏறவில்லை. அப்பாவுக்கு அதில் வருத்தம், கோபம். கார்த்தி அம்மா செல்லம். அதனாலேயே அவனுக்கு அப்பாவின் கோபம் உறைக்கவில்லை. ஆறாவது வகுப்பு போகும்போது, ஒரு பாடத்திலேயாவது தேற வேண்டும் என்பது பள்ளி விதி. அடுத்த வீட்டுக்காரியின் குத்தல் பேச்சு, பையனின் எதிர்காலம் குறித்த கவலை, அம்மாவின் செல்லத்தைத், தூரத் தள்ளுகிறது. அடிக்கடி அடிக்கும் அப்பாவின் செய்கைக்கு, ஆறுதலாக இருக்கும் அம்மாவும், மௌன விரதம் கடைபிடிக்கும்போது, கார்த்தி தவறை உணர்கிறான். உறுதியாகப் படித்து, தேறியும் விடுகிறான். வகுப்பே கைத்தட்ட, சந்தோஷத்தை, அணைத்துக் கொள்ளும் அம்மாவுடன் பகிர்ந்து கொள்கிறான். கரு பழசு.. குப்பையிலிருந்து கோபுரம்.. வெகுசன சினிமாவில் ஒரே பாட்டில் நாயகன் பிச்சையிலிருந்து பிர்லா ஆவதை, கல்வி கண் கொண்டு காட்டியிருக்கிறார் சீனிவாசன். பத்துக்கு ஏழுதான் தேறியது இதற்கு.

முக்தியார் இயக்கிய ‘ திரு. கதிர் ‘ வயலும் வாழ்வும் கதை. விவசாயம் நொடித்த கிராமத்து வயசாளி, கந்து வட்டி கட்டமுடியாமல் பட்டணம் வந்து,  பிழைக்க நினைப்பதும், வயசு காரணமாக எங்கும் வேலை கிடைக்காததும் சில நிமிடங்களில்.. பாட்டாளிக்கே உண்டான வாய்மை அவருக்கு எதிரியாக அமைவதும், கடைசியில் கர்சீப் விற்கும் வேலைக்குப் போய், அதிலும் தோற்று, மாண்டு போவதும் முடிவு. விவசாயி, மம்பட்டியை எறிந்து விட்டால், மனுசனை மனுசன் தின்ன வேண்டியது தான் என்கிற போதனையும் உண்டு. இயக்குனருக்கு சில்லறை வர்த்தகம், அன்னிய செலாவணி பற்றியெல்லாம்  ஐடியா இல்லை போலிருக்கு. வயல்கள் வானுயரக் கட்டிடங்கள் ஆகும்போது இருக்கவே இருக்கிறது அமெரிக்க கோதுமையும், சீன அரிசியும்.. அதைக் கொண்டு மன மோகன ராகம் இசைக்கலாம் என்பது அவருக்குத் தெரியாத சிதம்பர ரகசியம் போல ! பத்துக்கு ஐந்து- பாதி கிணறு..

பாரத்¢ராஜின் ‘ ஏன் இந்த மௌனம் ?’ யூகிக்கக் கூடிய காதல் கதை. கார்த்திக் – அஞ்சனா காதலர்கள். அஞ்சனா வெளிநாடு போக, கார்த்திக் அவளைத் தேடி அலைகிறான்.  நிகழ்காலத்தில் அஞ்சனா ஒரு காபி ஷாப்பில்.. நண்பனின் காதலியை சந்திக்க வரும் கார்த்திக், அஞ்சனாவை சந்திப்பதும், அவர்கள், திருமணத்திற்கு இசைவதுமான கீறல் ரெக்கார்ட். சராசரி குறும்படங்கள் ஏதாவது போதிப்பதை தவிர்த்திருப்பதாலேயே, பாரதிராஜ் கொஞ்சம் தேறுகிறார். ஆனாலும் விஷயம் ஏதுமில்லாமல், வெறுங்கிணற்றைச் சுற்றியதில் வடம் அறுந்து வாளியும் அம்பேல் ! பத்துக்கு அஞ்சு – ஜஸ்ட் பாஸ்.

விஜயவர்மனின் ‘பிரியாணி ‘ வீட்டு வேலை செய்யும் சிறுமி லட்சுமி, முதலாளியம்மா போடும் பழைய சோறில் அலுத்துப் போய், விருந்துக்கு செய்த பிரியாணிக்கு ஆசைப்படுவதும், மிச்சம் மீதியான அதுவும், வீட்டு நாய்க்குப் போடப்படுவதுமான முகாரி ராகம். இம்மாதிரி கதைகளை, ‘குட்டி’ போன்ற படங்களில் புரட்டி எடுத்து புரோட்டா போட்டு விட்டார்கள். பார்க்கும் பார்வையாளனுக்கு, ஆர்வம் போய், அலுப்பு தட்டி விடுகிறது. பெயரைப் பார்த்து, காமெடியை எதிர்பார்த்த ரசிகனுக்கு, மீண்டும் பழைய சோறு, சிறுமிக்குக் கிடைத்தது போலவே! இதில் மேட்டுக்குடி பார்வையாளனால் ஏற்க முடியாது என்கிற கம்யூனிச வாதம் வேறு. சுட சுட பிரியாணி, பொட்டலங்களை தெருவோர சிறுவர்களுக்கு கொடுக்கும், கார் கனவான்கள், இவர் கண்ணில் படவில்லை போலும்.. அவலை நினைத்து உரலை இடித்தால் கூட பரவாயில்லை.. இவரிடம் உரலும் அவலும் இல்லை.. இடிப்பு மட்டும்தான்.. பத்துக்கு அஞ்சு – பரிதாபத்தில்..

எஸ். ராஜாவின் “ பிப்ரவரி 4 “ உலக புகையிலை ஒழிப்பு தினத்தைப் பற்றி. டெங்கு விளம்பரத்திற்கு போட்டியாக இருக்கிறது படம். ஒரே வேற்றுமை, ‘ழ’ வை ‘ள’ என்று உச்சரிக்கும் கார்த்தி இல்லை. புகையிலை புற்று நோயால் இறக்கும் கணவனும், கைக்குழந்தையுடன் பிச்சையெடுக்கும் ஊமை தாயும் தான் பாத்திரங்கள். கிடைத்த ஐந்து ரூபாயில், டீக்கடை பால் வாங்கி, குழந்தையின் பசியாற்ற முற்படும் தாயும், காதலியால் ‘ கட் ‘ செய்யப்பட்ட காதலன், எறியும் சிகரெட் துண்டால் பாழாகும் அந்த உணவும், இன்னமும் கூட நறுக்கெனச் சொல்லப்பட்டிருக்கலாம். அல்லாடும் கேமரா கோணங்களும், சொல்லி வைத்தாற்போல், வரிசையாக பிச்சை போடும் பெண்களும், படு செயற்கை. இன்னமும் கற்க வேண்டியது இருக்கிறது ராஜா. அஞ்சு மைனஸ் ஒண்ணு.. புதுசா யோசி கண்ணு!

பாலாஜியின் ‘ 14 / 6’ ஒரே ஒரு டிவிஸ்டில், பச்சக்கென்று மனதில் பதிகிறது. சிலுவை சூசைராஜ், ரவுடிகளால் துரத்தப்படுவதும், தப்பித்த அவன், ஜூன் 14 ரத்த தான நாள் அன்று,  நடத்தப்படும் முகாமொன்றில், ஒளிவதும், அபூர்வ வகை பிரிவான ஏபி நெகட்டிவ் ரத்தம் அவனுக்கு இருப்பதும் ஒரு பாதி. தப்பித்த தைரியத்தில் அவன் வெளியே வர, மீண்டும் ரவுடிகளால் வெட்டி சாய்க்கப்படுவதும், ரத்தம் எடுத்த மருத்துவரின் பையனே, அவனை மருத்துவ மனையில் சேர்ப்பதும், காலையில் அவன் கொடுத்த ரத்தமே அவனைக் காப்பாற்றுவதும் கதை திருப்பம். நல்லவனாக மாறி 3 மாதங்களுக்கு ஒருமுறை  அவன் ரத்த தானம் செய்வது மெசேஜ். இனியாவது ரவுடிகளெல்லாம், காலையில் ரத்தம் கொடுத்து, மாலையில் வெட்டுப்படலாம் என்பது நாம் உணர்ந்து கொண்ட உண்மை. பல சின்னக்  கோடுகள் மத்தியில், இது கொஞ்சம் பெரிய கோடு, அவ்வளவே.. பத்துக்கு ஏழு. மீதியெல்லாம் பாழு.

வேளச்சேரி  பூக்காரியின் கதையைச் சொல்கிறது உ.பாஸ்கரின் ‘ மல்லிப்பூ ‘ பிறந்த நாளுக்குக் கடையில் பார்த்த, புது சிவப்பு உடைக்கு ஆசைப்படும் பையனும், அதை வாங்க ஏலாத பூக்காரி தாயும் தான் பிரதான பாத்திரங்கள். ஐநூறு ரூபாய், வியாபாரத்தில் சேரும் கட்டத்தில், படிப்புக்கு பணம் கொடுத்த வட்டிக்காரன், அதில் ஒரு பகுதியைப் பிடுங்கிக் கொள்வதும், போலீசுக்குப் பயந்து, கடையை செண்டு மல்லியுடன் மூடும் தாய்க்கு, கடைசி வியாபாரமாக அத்தனை பூவும் விற்று, ஐநூறு ரூபாய் சேர்வதும்   நெகிழ்ச்சியான முடிவு. மெய்ன் கதையை விட்டு, இடைச் செருகலாக ஆபிசில் ·பைல் தொலைந்து போவதும், பிறகு சூ மந்திரக்காளி மாதிரி கிடைப்பதுமான ஒரு பகுதி ஆறாவது விரலாக துருத்திக் கொண்டு நிற்கிறது. சொல்ல வந்த விசயத்தை, நீட்டி நீட்ட்டி, சோர்வடைய செய்யும் பாஸ்கர், எடிட்டிங்கில் கற்றுத் தேற வேண்டியது கடலளவு. அதனால் ஆறு வற்றிய வயல்கரை போல, படமும் ரேட்டிங்கில் 6 / 10.

நல்லா படிக்கிற பையன்கள் கடைசி பென்சில் உட்காருவது போல, கடைசிக்கு முன்னதாக காட்டப்பட்ட அருண் பிரசாத்தின் “ வேதம் “ பளிச் வசனங்களுடன் பிளாக் பெல்ட் வாங்குகிறது. அப்பனின் ‘கலாசி’ வேலையைப் பெறும் கோடீஸ்வரன், அழுக்கை துடைக்க அறுவெறுப்பு கொள்பவன். தன் கீழ் நிலையை மறக்க, தண்ணி அடிப்பவன். மனது ஒன்றாமல் வேலை செய்வதால், மேலதிகாரியால் வசவு வாங்கி, அதனால் மனம் புழுங்கி, மேலும் சாராயத்தின் பக்கம் சாய்கிறான். “ பிடிக்காத வேலையை விட்டுடுடா.. அதுக்காக தெனைக்கும் குடிக்காதே.. ஆனா ஒண்ணு.. படிச்சவனுக்கு பிடிச்ச வேலை கெடைக்கும், படிக்காதவனுக்கு கெடைக்கற வேலை பிடிக்கணும். நீயும் ராணுவ வீரன் மாதிரிதாண்டா.. அவங்க அயல்நாட்டு விஷக் கிருமிங்களை அழிக்கிறாங்க.. நீ நம்ம நாட்டிலே நச்சு கிருமிங்களை அழிக்கிறே “ என்கிற தாயின் வார்த்தைகளில் அவனுக்கு தெளிவு பிறக்கிறது. வேலையை நாட்டமுடன் செய்யும் அவனுக்கு கிடைப்பது மேலதிகாரியின் பாராட்டும், அணைப்பும். சாக்கடை அள்ளுவது கேவலமில்லை என்பது மெசேஜ். ஆனால் எங்கேயும் உபதேசங்கள் இல்லை இந்த வேதத்தில். சபாஷ். பத்துக்கு ஒன்பது.

கடோசியாக எல்.சேவியரின் “ தொலைந்தவன் “ வித்தியாசமான சிந்தனை. அசத்தலான கேமரா கோணங்கள். மெலிதான குறியீடுகள். வெகுசன சினிமாவின் ஆதர்சமாக மாற, எல்லாத் தகுதியும், இப்படைப்பாளிக்கு உண்டு. பத்து வயதில், தன்னிடம் பெண்மை குணங்கள் இருப்பதை உணரும், மாணிக்கம் வாத்தியாரின் ஒரே மகன் அரவிந்தன், ஊரை விட்டு ஓடிப்போய், அர்ச்சனாவாக மாறுகிறான். மகன் திரும்பி வருவான் என்கிற நம்பிக்கையில் இருக்கும் பெற்றோரைத் தேடி அர்ச்சனா வருவதும், தான் யார் என்று சொல்லாமலே, மகனுக்குரிய கடமையைச் செய்வதும், கடைசியில் “அப்பா போறேன்! அம்மா போறேன்!” என்று விட்டு விலகுவதுமான ‘நச்’ படம். ச்¢ல காட்சிகள் மெலோடிராமா வகையில் நீளம். அர்ச்சனாவைப் பின் தொடரும் கேமரா, மாணிக்கம் வாத்தியார் வீட்டை அடையும் வரை, நடையாய்  நடக்கிறது. நமக்கு கால் வலிக்கிறது. வழி சொன்ன சுமைதாங்கி கிராமத்தான், கூடவே ஒட்டிக் கொள்வதும், அவன் வழியாகவே மாணிக்கம் வாத்தியார் கதை விவரிக்கப்படுவதும், புது கற்பனை. மந்தையில் இருந்து பிரியும் ஒற்றை ஆடு, பெயரை அரவிந்தன் என ஆரம்பித்து அர்ச்சனா என மாற்றும் நாயகி, தன் மகன் என்று அறியாமலேயே, அர்ச்சனாவிற்கு குங்குமம் வைத்து, பூச்சூட்டும் அம்மா என ஏகத்துக்கு உணர்ச்சிப் பதிவுகள். ரேட்டிங் ஒன்பதுக்கு மேலே. ஆனால் வெகுசன வாக்கு வேறுவிதமாக அமைந்ததுதான் இந்த நிகழ்வின் சோகம். சூப்பர் சிங்கரில், தோற்றவர்களே அதிகம் ஜெயிக்கிறார்கள் சினிமாவில். சேவியரும் அப்படியே வெல்லட்டும். வாழ்த்துக்கள்.

ரத்த தானம் பற்றிய பிரக்ஞை இருக்கும் அளவிற்கு, திருநங்கைகள் பற்றி மக்களுக்கு இல்லாதது காரணமாக, பாலாஜியின் ‘14/6’ சிறந்த இயக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப் பட்டது. வந்திருந்தவர்களில், அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு வகையில், உறவினரோ, நண்பரோ, குடும்பத்தினரோ, ரத்தத் தேவைக்காக  அலைந்த அனுபவம் இருக்கும், கேள்வி ஞானமாகவேனும். அதனால், வெகுசன மனங்களை ஆக்கிரமித்த பாலாஜி குதிரை, லேசாக மூக்கை நீட்டி, வெற்றிக் கோட்டைக் கடந்து விட்டது. ஆனால் சேவியரும், அருண் பிரசாத்தும் பல காலம் நீடிக்க கூடிய போர் குதிரைகள் என்பதே எனக்கு ஏற்பட்ட எண்ணம்.

0

 

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..16 இந்திரா பார்த்தசாரதி – ‘வேதபுரத்து வியாபாரிகள்’.போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 7
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *