கேட்ட மற்ற கேள்விகள்

This entry is part 3 of 29 in the series 5 ஜனவரி 2014

 

 

இன்னும்

சூரியன் முகம் காட்டவில்லை.

 

கதவு

தட்டப்படும்.

 

கதவைத் திறக்க

கண்டு நாளும் பேசிக் கொள்ளும் ஒற்றைத் தென்னை

குனிந்து நிற்கும்.

 

நேற்றிரவு

நிலா இல்லாத வானம் கண்டு உறக்கமில்லையா?

 

அடையும் பறவைகளில் ஏதேனும் ஒன்று

வரவில்லையா?

 

எதிர் வீட்டு மாடியில்

தனித்து விடப்பட்ட தொண்டு கிழவர் ‘தொண தொண’வென்று

சதா இரவெல்லாம் பேசித் தொலைத்தாரா?

 

வாழ்வின் கவலைகள் இப்படித்

தேங்காய்க் குலையாய்க் கனக்குமென்று தெரியவில்லையென்றா?

 

ஒற்றைக் காலில் வானோக்கிக் காலமெல்லாம் தவமிருந்தும்

வெறும் வியர்த்தமென்றா?

 

எந்தக் கேள்விக்கும் எதுவும் சொல்லாமல்

எட்டிச் செல்லும் தென்னை.

 

அன்று

சாயும் சூரியன் மேல் இரத்தச்சேறு தெறித்திருக்கும்.

 

எதுவுமே நடக்காதது போல்

தென்னையிருந்த  இடத்தில் திகம்பர வெளி நிறைந்திருக்கும்.

 

அதை விட மோசமாயிருக்கும்

கொன்று விடப் போகிறேனென்று சொல்லாமல் தென்னையிடம் நான்

கேட்ட மற்ற கேள்விகள்.

 

 

கு.அழகர்சாமி

 

Series Navigationஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புகவிதை
author

கு.அழகர்சாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *