கையெழுத்து

author
0 minutes, 12 seconds Read
This entry is part 14 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020


கௌசல்யா ரங்கநாதன்
             —–
-1-
அன்புள்ள செவாமிக்கு(சிவகாமி),

உன் அண்ணன் மனைவி ஜானகி எழுதிக் கொள்ளும் ஒரு மனம் திறந்த மடல்.அது என்ன அண்ணனின் மனைவி என்று எழுதுகிறேன் என்று நீ நினைக்க மாட்டாய் என்று நம்புகிறேன்.. எப்போது அவர் உன்னை தன்
 பெற்ற மகளாகவே எண்ணி அதீத செல்லம் கொடுத்து உன்னை தன் மார்பு மீதும்,தோள்கள் மீதும்போட்டு   சீராட்டி,
தாலாட்டி, பாலூட்டி, உன் மீது ஒரு கொசு அமர்ந்தாலும் பதறி, துடித்துப் போன உன் அண்ணனிடமே சொல்லாமல், கொள்ளாமல் நீ காதலித்தவனுடன்….அப்படி போவது தவறென நான் மட்டுமில்லை, உன்
 அண்ணனாகட்டும், ஊராராகட்டும் சொல்வார்களே..ஏன் நம் உள்ளக்கிடக்கையை அண்ணனிடம் இல்லையெனில் உன் தாய் ஸ்தானத்தில் இருந்து உனக்கு எல்லாம், பார்த்து, பார்த்து செய்யும் என்னிடமாவது,
 சொல்லி உன் திருமணத்தை சீரும், சிறப்புமாய், செய்து கொண்டிருக்கலாமே! நாங்கள் காதலுக்கு விரோதி என்று யார்  சொன்னது?
நீ எப்போதோ உன் மனதுக்கு பிடித்த மணாளனுடன் போயிருக்கலாம்? நாங்கள் இதை எதிர்த்திருந்தால் மட்டுமே அல்லவா? எங்கள் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்று ஏன் நீ யோசிக்கவில்லை?
ஊரார் எவ்வளவெல்லாம் எங்களை…எங்களை பேசிவிட்டு போகட்டும்..பரவாயில்லை..ஆனால் நீ யாரையோ நம்பி கெ…….போனதாகவும், அதை மறைக்கத்தான் சொல்லாமல், கொள்ளாமல் ஓடிவிட்டதாகவும்,
கதை கட்டி விட்டு..நீ அப்படிப்பட்ட பெண் அல்ல என்று எத்தனை பேர்களுக்குத்தான் நாங்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியும்..இன்னம் சிலரோ “உங்கள் வீட்டு பெண் நல்லவள்தான்..
ஆனால் அந்த பையன்” எனும் போது கூட” எங்க வீட்டுப் பெண் தேர்வு சோடை போகாது “என்றெல்லாம் சொன்னோம்..நம்பினோம்..நம்பிக் கொண்டும் இருக்கிறோம் இன்றளவும்..படிப்படியாய்த்தான் நாங்கள் உணர்ந்தோம்..அதாவது,
 எங்கள் வீட்டு மாப்பிள்ளை நல்லவன்..எங்கள் சிவகாமியை உள்ளம்கையில் வைத்து தாங்குகிறான் என்று..இது போதும் அம்மா எங்களுக்கு!நம் தஞ்சை, மாவட்டத்தில், நஞ்சை சாகுபடி செய்வதை நீ பார்த்திருப்பாய்..வயல்களில் எரு இட்டு, மண்ணை கிளறிவிட்டு, தண்ணீர் போதிய அளவுக்கு பாய்ச்சி விதை நெல்லை தெளித்து, சில நாட்களில் அது ஒரு சாண்
அளவுக்கு மேல் வளர்ச்சி கண்டதும், விவசாயி மனம் பூ¡¢த்து, அவைகளை பறித்து, இன்னொரு பண்படுத்தப்பட்ட வயல்களில் நடுவார்கள்..அப்படி பறிக்கப்பட்ட நிலத்தை “நாற்றங்கால்” என்பார்கள்..
நம் தமிழ் இலக்கியத்தில் பெண்களையும் நாற்றம்கால்களுக்குத்தான் ஒப்பீடு செய்வார்கள். பெண் பருவம் அடைந்ததும் இன்னொரு வ்£ட்டுக்கு மருமகளாகப் போவதால், அந்த வீட்டு
சுக, துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்வதால்..இது மகிழ்ச்சிகரமானதொன்றுதானே.!.ஆனால் இப்படியொரு மகிழ்ச்சியை ஏனோ நீ எங்களுக்கு கொடுக்கவில்லை என்பது எங்களுக்கு வேதனையை
கொடுத்தது என்பதே உண்மை..தாய், தந்தை, உடன்பிறப்புக்கள் இல்லாமல் உன் அண்ணனுக்கு ஒரே தங்கையாய் செல்லமாய் வளர்க்கப்பட்டு உன்னை நல்ல இடமாய் பார்த்து, மணம் முடித்திட
நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கையில் ஏனம்மா எங்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியை நீ கொடுத்தாய்?
உனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கும்போதே சொல்லியிருக்கலாமே நீ  உன் உள்ளக் கிடக்கையை..
“அண்ணே..நான்..நான்..ஒருத்தரை” ..அப்படி உன் அண்ணனிடம் சொல்ல உனக்கு தயக்கமோ,அச்சமோ இருந்தால்கூட,
 உன்னை பெற்றவள் இடத்திலிருந்து அருமை பெருமையாய் (அப்படித்தான் நான் நினைக்கிறேன்)வளர்த்த என்னிடமாவது சொல்லியிருக்கலாமே..இப்படியொரு தயக்கம் காதலிக்கும் எல்லா பெண்களுக்கும் வருவது இயற்கைதானே என்று என்னையே நான் சமாதானப்படுத்தி கொள்கிறேன்..ஆனால், ஒன்று செவாமி..உன் விருப்பத்துக்கு எதிராய் உன் அண்ணனாகட்டும், நானாகட்டும் எப்படி செயல் படுவோம் என  நீ எதிர்பார்த்தாய்! நாங்கள் காதல் திருமணத்துக்கு விரோதி இல்லை..பழமை
வாதிகளுமில்லை..அது மட்டுமல்ல! அண்ணன் என்ன சிங்கமா, புலியா அவரைக் கண்டு நீ மிரள..விடு..பழைய கதைகள் வேண்டாமே இங்கு இனி..
அண்ணி ஏன் கடிததில் இப்படி வள, வளக்கிறாள் என்று கூட நீ எண்ணலாம்..
அந்த காலத்தில், அதாவது 1950 களில் ஈ மெயில், இன்டெர்னெட், வித விதமான செல்போன்கள், வாட்ஸப் போன்ற சாதனங்கள் வராத போது நம் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் செய்தியை கொண்டுபோய்
 சேர்பிப்பித்தது அன்றைய “முக்காலணா கார்டுதானே”..அதன் விலை இன்று 50 பைசா என்றாலும் விஷயத்தை பாரதம் முழுவதும் கொண்டு
செல்கிறதல்லவா? ஏழை, எளிய மக்களுக்கு  வரப்பிரசாதமல்லவா?ஆனால் செவாமி, அன்று இந்த போஸ்ட் கார்டுகளை சுமந்தவாறு காடுகளிலும், மலைப் பிரதேசமானாலும்,கல்லிலும்,முள்ளிலும், காற்றுகூட நுழைய முடியாத இடங்களுக்கும்,
 வியர்க்க, விருவிறுக்க தபால் காரர்கள் கொண்டு சேர்ப்பிப்பதோடு , படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கு கடிதத்தில் என்ன எழுதப் பட்டிருக்கிறதென வாசித்து
காட்டுவதுடன் உடனேயே அவர்கள் சொல்லும் பதிலையும் தங்கள் வசமிருக்கும் போஸ்ட்கார்டில் எழுதி, வாசித்து காட்டி அவர்களே அன்றைய தபாலிலும் கன சிரத்தையாய் சேர்த்து விடுவார்கள்..கிராமங்களில் தபால்காரருக்கென்று தனி மதிப்பு உண்டு..பரஸ்பர குசல விசா¡¢ப்புக்கள், “கொஞ்சம் மோர் சாப்பிட்டு போவியாம் தம்பி..எம்மாம் தொலவிலிருந்து வரே” என்பது போன்ற கனிவான வார்த்தைகள்,தவிர,விருந்தோம்பல், அவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராய் பாவித்து..அந்த அன்னியோன்னியம், வாஞ்சை இன்றைய ஈ மெயில், செல்போன்களில், எஸ்.எம்.எஸ். எனும் குறுஞ்செய்திகளில்
காண முடியுமா? அது ஒரு கனாக்காலம் என்றே நினைவு கூர முடிகிறது..அது மட்டுமா? அன்றைக்கு இப்படி வரும் தபால் கார்டுகளை படித்து முடித்த பிறகு நீண்டதொரு கம்பியில் குத்தி
வைத்திருப்பதும், ஆண்டுகள் பல கடந்த பிறகும் அந்த கடிதங்கள் புழுதி படிந்து கிடந்தாலும், தேவைப்படும் போது வீட்டில் உள்ள முதியவர்கள் அந்த பழைய கடிதங்களை எடுத்து படித்து, பார்த்து மலரும்
நினைவுகளில் மூழ்கி விடுவதும் உண்டு..பாரதத்தின் முதல் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேருஜி, சுதந்திர போராட்ட காலத்தில் சிறையிலிருந்து  தன் மகள் திருமதி இந்திராஜீக்கு எழுதிய,
அதாவது குடும்பம் பற்றி கவலை படாமல் அன்றைய ஆட்சியினர் போக்கு பற்றியும், சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றியெல்லாம் நிறைய, நிறைய கடிதங்கள் எழுதி, எழுதித்தான் அன்னை இந்திராஜி
மனதில் அரசியல் ஆசையை தூண்டினார் என்பது நாடறிந்த விஷயம்..கடித இலக்கியம் என்றும் ஒன்று உண்டு..மறைந்த பிரபல தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன் இப்படித்தான் கடித இலக்கியத்தை, தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாய் தொடங்கி வைத்தார்
 என்றும் சொல்லப்படுகிறது..ஊம்.. மறுபடி,  உணர்ச்சி வசப்பட்டு பழங்கதைகள் பேசிவிடுகிறேன்..”தேடிச்சோறு தினம் தின்று, பல வெட்டிக்கதைகள் பேசி
பொழுது கழித்திடுபவன் என்று என்னையும் நினைத்தாயோ”?” என்று அறைகூவல் விட நான் என்ன மகாகவியா? உன் அண்ணனுக்கும்—-  
– 2 –
உன் மீது கோபம் இருந்தது…(“இருந்தது” என்று பாஸ்ட் டென்ஸில் சொல்கிறேன்..) நாங்களும் சாதாரண  ரத்தமும், சதையும் கலந்த மானிடப் பிறவிகள்தானே!உணர்ச்சி வசப்படுவதும் இயற்கையானதொன்றுதானே!
ஆனால், சில மாதங்களில் எங்கள் கோபம் காற்றில் கரைந்த கர்பூரமாயிற்று என்பதே நிசம்.அண்ணன் பித்து பிடித்தாற்போல இருந்தார்..சமயங்களில் “என்னங்க? என்னாச்சு
உங்களுக்கு?” என்றால் “என் தங்கச்சி என்னை வந்து பார்த்தாளா பாரு” என்பார் கண்களில் வழியும் கண்ணீருடன்..அப்போதெல்லாம் நான் “விடுங்க..அனேகமாய் அவ உங்க முகத்தில் விழிக்க
வேதனைப் பட்டுக்கிட்டு இருக்கலாம்ல..” என்பேன்.. தொடர்ந்து “த பாருங்க..நாமாவது மூத்தவங்களா லட்சணமா ஏன் விட்டுக் கொடுத்து போய் பார்த்துட்டு அவளுக்கு செய்ய வேண்டிய சாங்கியங்களை
செஞ்சுட்டு வரலாம்ல..” என்பேன்..அவரும் மௌனமாய் எந்த பதிலும் சொல்லாமல் இருப்பார்..கொஞ்ச நாட்கள் கழித்து மறுபடி இதே கதையை சொல்வார்..நானும் சளைக்காமல் சொன்னதையே மறுபடி,மறுபடி,
சொல்வேன் என்றாவதொரு அவர் மனம் மாறாதா!.வா..போய் செவாமியை பார்த்துட்டு வரலாம் வா என்று சொல்ல மாட்டாரா என்ற நினைப்பில்..அவராக சொல்லட்டும் என்றிருந்தேன்..ஆனாலும் சில
சமயங்களில் நடு இரவில் திடீரென விழித்துக் கொண்டு “எங்கே என் செவாமி?” என்பார்..அவரை சகஜ நிலைக்கு கொண்டு வர அரும்பாடு பட வேண்டியிருக்கும்..அப்போதுதான் ஒரு நாள் இரவு
7 மணியிருக்கும்.அவசரமாய் வெளியிலிருந்து வீடு திரும்பியவர், “நாளை காலை நாம் செவாமியை பார்க்க போறோம்.. விடி காலை பஸ் பிடிச்சு..ஆங்..எல்லா சீர், செனத்திகளையும், பட்சணம்,
பலகாரம், துணிமணிகள், நகை நட்டுக்கள், பாத்திரம், பண்டங்கள்..இன்னம் என்ன, என்ன செய்முறையோ ஒண்ணுவிடாம தயார் பண்ணிக்கிட்டு கிளம்பிடணும்” என்ற போது நான் அன்றைய
ராத்தூக்கம் கூட தொலைத்து எல்லாம் செய்து முடித்த போது பொழுது பலபலவென விடியத் தொடங்கியிருந்தது..குளித்து, காபி கலந்துவிட்டு உன் அண்ணனை எழுப்ப போனால் அவர்!
-3-
இருந்த நிலைமை என்னை துயர் கொள்ள வைத்தது..தெய்வம் சதி செய்து விட்டது  எங்களை..உன் அண்ணனை முடக்குவாத நோய் தாக்கியிருந்தது..ஒரு கையும், காலும் விளங்காததுடன்,
வாயும் கோணிக்கொண்டு பேச முடியாமல் அழுதவாறிருந்தார்..டாக்டர்கள் உடனடியாய் வந்து பார்த்தார்கள் என்றாலும் இது சில நாட்களில் குணமாகக்கூடியதா என்ன?இன்னம் கொஞ்ச நாட்கள் போகட்டும்..எப்படியும் குணமாக்கிவிட முடியும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தொ¢வித்தார்கள்.அதுவரையில் ரெகுலராய் மருந்து மாத்திரைகள், எளிய பிஸியோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட
வேண்டும் என்றனர்..இன்றளவும் சிகிச்சை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது..நாங்களும் நம்பிக்கைதானே வாழ்க்கையென்று போராடிக் கொண்டிருக்கிறோம்..இறைவனை நம்பிக் கொண்டிருக்
கிறேன்..”இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென சொல்லுவதில்லை” என்ற பாடல்  எனக்கு பிடித்த ஒன்று..
“நம் தற்போதைய நிலைமையை ஏன் விபரமாய் உனக்கு எடுத்துரைக்கக் கூடாது ஒரு தபால் கார்டு மூலமாகவாவது என்று அண்ணனிடம் கேட்டதற்கு அவர் தன் சைகை மொழியில் இப்போது
வேண்டாம்..செவாமி தாங்க மாட்டாள்” என்றார்.
நம்பிக்கைதானே வாழ்க்கை..”நாளைய பொழுதுந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா”..என்ற திரைப்பட பாடல் வா¢களும் என் நினைவுக்கு வருகிறது இந்த தருணத்தில்..இந்த
 சமயத்தில்தான் மணம் முடித்துப் புக்ககம் போன பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாய் பொங்கல் சீர் வா¢சை கொடுப்பது ஞாபகம் வந்ததால், பொங்கல் பண்டிகையும் சமீபித்ததால்  உனக்கு போன வருடம் போலவே இந்த வருடமும் எம்.மோ. எனும் “பண விடைத்தாள்” மூலம் பணம் அனுப்பச்சொன்னார்  உன் அண்ணன்..அப்படி அனுப்புவதை நீ தவறாய் எடுத்துக் கொள்ள மாட்டாய் என்று எங்களுக்கு விளங்காதா என்ன!..ஆனாலும், பிறந்த
வீட்டிலிருந்து பொங்கல் சீர் வைப்பது என்பது ஒரு மரபு சார்ந்த விஷயம், தமிழ் பண்பாடு ..அந்த பண்டிகைக்கு முன்பாகவே உடன் பிறந்த  அக்கா,தங்கைகள்,அவர்கள் எங்கிருந்தாலும்,
 சீர்வா¢சைகளுடன் போய் வாழ்த்தி, சீர் வா¢சைகளை கொடுத்து வருவது வழக்கம்..எங்கோ தொலை தூரத்தில் மும்பை, கோல்கட்டா, டெல்லி போன்ற இடங்களில் உடன் பிறந்த
சகோதரர்கள் வேலையில் இருந்தால் மட்டுமே பணத்தை எம்.மோ. மூலம் அக்கா,தங்கைகளுக்கு அனுப்புவார்களேயொழிய, மற்ற இடங்களில் இருந்தால்  அவர்கள் ஊருக்குபோய் சீர் கொடுப்பதுதான் வழக்கம்..தமிழ் பண்பாடும் கூட..ஆனால் எங்கள் நிலையை விளக்கமாக உன்னிடம் எடுத்து
 சொல்ல  நாங்கள் விரும்பவில்லை.அண்ணன்–அண்ணி இன்னமும் என் மீது கோபமாய் இருக்கிறார்கள்..காதல் திருமணம் செய்து கொண்டதால்..
அதனால் தான் சம்பிரதாயத்தை மீறவும் முடியாமல், ஊர் வாய்க்கு பயந்து இப்படி பணமாய் அனுப்புகிறார்கள்  என்றே நீ நினைத்தாலும் பரவாயில்லை..இப்படி அனுப்பபடும் சீர் பணத்தை எந்தவொரு உடன் பிறப்புக்களும்
 திருப்பி அனுப்ப மாட்டார்கள் என்ற எண்ணத்திலும்தான் உனக்கு பணம் அனுப்பப் பட்டது முந்தைய வருடங்களில்..ஒவ்வொரு வருடமும் இப்படி அனுப்பப்படும்
பணத்தை நீ பெற்றுக் கொண்டதை பண விடைத்தாளில் இருக்கும் உன் கையெழுத்தை பார்த்து உன்னையே  பார்ப்பதுபோல் உணர்ந்து அண்ணன் மகிழ்ச்சி அடைவார்..அந்த கையெழுத்து
பகுதியை தன் படுக்கை கீழ் பொக்கிஷமாய் வைத்து அவ்வப்போது உன் நினவு வரும்போதெல்லாம் எடுத்துப்பார்த்து கண்களில் கண்ணீர் மல்க அந்த பணவிடைத்தாளுடன் பேசிக் கொண்டிருப்பார்,நீ அவர் அருகே அமர்ந்து
  பேசுவதாய் எண்ணி..”அவ பணத்தை, இந்த அண்ணன் வீட்டு சீரை வாங்கிக் கிட்டாள்ள, அது போதும்ம்மா எனக்கு..எங்கேயாவது அவ நல்லாயிருந்தா அதுவே போதும் எனக்கு..
ஒருகால் எனக்கு ஏதாச்சும் ஆயிட்டாக்கூட நீ அவளுக்கு அனுப்பற இந்த பொங்கல் சீரை எக்காரணம் கொண்டும் உன் உயிர் மூச்சுள்ளவரை நிறுத்தவே கூடாது..எனக்கு சத்தியம் பண்ணிக்
கொடுமா..” எனும்போதெல்லாம் என் நெஞ்சம் வலிக்கிறது.. என் இதயம் வெடித்து விடக்கூடாதா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது செவாமி..”உங்க இப்பத்திய நிலைமையை
அவளுக்கு எடுத்து சொன்னாத்தானே ..” எனும்போதெல்லாம் “வேணாம்..என் தற்போதைய நிலைமைபத்தி என் செவாமிக்கு இப்ப சொல்ல வேணாம்..அவ தாங்க மாட்டா …அழுதுடுவா..அவ
போன இடத்திலாச்சும் நல்லா சந்தோஷமாய் தீர்க்க சுமங்கலியாய் வாழட்டும்..கொஞ்ச காலம் போனா, அவளுக்குனு ஒரு குழந்தை பிறந்து அவ அந்த குடும்பத்தோட ஒன்றிப் போனா காலப் போக்கில்
அவ என்னை மறந்து போகலாம்..என்ன சொன்னேன், என்ன சொன்னேன்..அவ என்னை மறந்து போவான்னா ? மறக்கவே மாட்டா என் செவாமி என்னை, உன்னையெல்லாம்.. அவ மனசிலும்,
நம்மை பத்தி ஒரு நெனப்பு இருந்துக்கிட்டுதான் இருக்கும்..”மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்..அண்ணன் வாழ வைப்பான் என்றே”..ஆமாம் செவாமி..இப்படித்தான் உன் அண்ணன் உன்
நெனப்பு வரப்பல்லாம் சத்தமாய் பாடறார்..என் செவாமிக்கு குழந்தை பிறந்திருக்கும் இன்நேரம்..அது ஆணோ, பெண்ணோ என் மருமகன், அதுவே மருமகளாயிருந்தா நான் அந்த படத்தில் வராப்பல,
என்பவர் மறுபடி உரக்க அந்த பாடலை ஆமாம்மா “தங்க கடிகாரம், வைர மணியாரம் தந்து விலை பேசுவார்..மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்னு”..தன்னை மறந்து..
என்னால முடியலை செவாமி..”ஏங்க, ஏங்க..இவ்வளவு பாசத்தை மனசில் தேக்கி வச்சுக்கிட்டு இன்னமும் நாம் ஏன் வீம்பு பிடிக்கணும்” எனும் போதெல்லாம் “யார் வீம்பு பிடிக்கிறாங்க? என் உடன்பிறப்பு இல்லைடி அவ..
 நான்..நான் என்ன நான், நம்ம பெறாத குழந்தைடி அவ..இப்படி ஒருத்தரை விரும்பறேன் அண்ணேனு எங்கிட்ட, இல்லை உங்கிட்ட
சொல்லியிருந்தா, நாம என்ன வேணாம்னு சொல்லியிருப்போமா என்ன?ஏன் நம்ம மேல செவாமிக்கு நம்பிக்கை இல்லாமப் போச்சு..”
“.போனது போகட்டும்.இப்ப நம் நிலைமையை அவளுக்கு விபரமா ஒரு கடிதம் மூலமாவது …” எனும்போது இடைமறித்து அவர், ” அவ தாங்குவாளா?
இதையே நீ எத்தனை முறைகள் சொல்லிட்டே நீ! நானும் உனக்கு பதில் சொல்லி மாளலை..நான் என்ன இப்படியே பாயாய், படுக்கையாய் இருந்து போயிடுவேன்னு நீ நினைக்கிறியா என்ன?
நெவர்..என் செவாமியை பார்க்காம நான் போக மாட்டேன்..டாக்டர் சொல்றார்ல, தொடர்ந்து மாத்திரை மருந்துகளும், பிசியொதரபியும் எடுத்துக்கிட்டே வந்தா நாளடைவில் குணமாயிடும்னு..
முன்ன பேசக்கூட முடியாம வாய் கோணிக்கிட்டிருந்திச்சு..இப்ப குளறி, குளறியாச்சும் பேச முடியறதே ஒரு முன்னேற்றம்தானே !நம்பிக்கை வை அந்த ஸோ கால்ட் , கண்களுக்கே விளங்காத
இறை சக்தி மேலனுசொல்றவர் இன்னொரு சமயம் ராத்தூக்கதிலிருந்து எழுந்து “என் செவாமி குழந்தையை பார்த்தேன் இப்ப..அது தத்தி,தத்தி நடந்து வர அழகிருக்கே அதை காண கண்கள் கோடி
வேணும்..அந்த குழந்தை கைகளை பத்திக்கிட்டு” கை வீசம்மா, கை வீசு, கடைக்கு போகலாம் கை வீசுனு சுத்தினேனாக்கும்”..செவாமி இவருக்கு உடல்ல ஏற்பட்ட கோளாறு கொஞ்சம்,
கொஞ்சமாய் குணமாகிக் கிட்டு வருது..ஆனா, இவரை இப்படியே விட்டா மனத்தளவில்..எனக்கு அழுகை, அழுகையாய் வருது செவாமி..நான் என் துக்கத்தை யார்கிட்ட போய் சொல்லி
அழுவேன்..அதனால்தான் பல பகல்கள், இரவுகள் யோசிச்சு, யோசிச்சு  உனக்கு இந்த என் மனம் திறந்த மடல்..இது கூட உன் அண்ணனுக்கு கூட சொல்லாமத்தான் எழுதுகிறேன்..”நான் எழுதுவது
கடிதம் அல்ல..உள்ளம்னு “அ ந்த பாடல்  தான் என் நெஞ்சில் வந்து, வந்து போகுது செவாமி..இதையெல்லாம் பப்ளிக் டெலிபோன் பூத்திலிருந்து எப்படி பேசறதாம் நாலு பேர்கள் பார்க்கிறாப்பல..
அதான்..உனக்கு இந்த நீ………ண்ட மடல்..ஒரு முறை, ஒரு முறை உன் மனசில என்ன ஆதங்கம் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து உன் கணவனுக்கும் எடுத்து சொல்லி இங்கே வந்து
உன் அண்ணனை பார்த்து, இது கூட என்  சுயநலம்தான் செவாமி..எங்கே என் மாங்கல்யத்துக்கு குந்தகம் வந்துடுமோன்ற எண்ணத்தில் எழுதறேன்..கடிதம் நீண்டு விட்டது..மன்னிச்சுக்கம்மா என்னை.. நாங்க வேண்டுவதெல்லாம்,நீ,உன் புருஷன்,குழந்தை,உன் உறவுகளுடன்
சகல சௌபாக்கியங்களுடனும், பதினாறு வகைப் பேறுகளுடனும் வாழ்வாங்கு வாழ அந்த இறை சக்தியை இறைஞ்சி நிற்கிறேன் செவாமி..

இப்படிக்கு,
உன் அன்புள்ள,
ஜானகி அண்ணி..இல்லை..இல்லை உன்னை பெறாத தாய்

Series Navigationதொலைந்து போனாரோ சா.கந்தசாமி?தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -5
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *